l muruganபாஜக மாநில தலைவர் எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதை ஒட்டி சமூக வலைதளங்களில் ஒரு தலித்துக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கிய பாஜகவை பாராட்டியும், தலித்துக்களை ஓட்டு வங்கிகளாக மட்டுமே திமுக அதிமுக போன்ற கட்சிகள் கருதுவதாகவும் பெரிய விவாதம் நடந்து வருகின்றது.

இதற்கு எதிராக “இது எல்லாம் திராவிடம் போட்ட பிச்சை” வகையாறாக்கள் சமூக வலைதளங்களில் தலித்துகளுக்கு தாங்கள் போட்ட பிச்சைப் பற்றி வரலாற்று பாடம் எடுத்து வருகின்றார்கள்.

ஸ்டாலினும், உதயநிதியும் குசு விட்டால் கூட பிரமாதம் என்று சொல்லும் முற்போக்கு வியாதிகள் ஏன் திமுகவில் தலித் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் அளிக்கப் படவில்லை என்பதைப் பற்றியோ ஏன் அவர்களுக்கு அமைச்சரவையில் ஆதிதிராவிட நலத்துறையை தவிர பிற துறைகள் வழங்கப்படுவதில்லை என்பதைப் பற்றியோ வாயே திறப்பதில்லை.

முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டவுடன் சில சில்லு வண்டுகள் வேண்டுமென்றால் அவரை கோயில் பூசாரி ஆக்கிப்பார் என கொக்கரிக்கின்றார்கள்.

ஆனால் தமிழக பிஜேபியோ அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை தாங்கள் ஏற்பதாக அறிவித்து விட்டார்கள். பிஜேபி ஆட்சி செய்யும் மாநிலங்களில் அதை அமல்படுத்தி உள்ளதாகவும் ஆனால் திராவிட கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டுமே அது நிறைவேற்றப் படவில்லை என்றும் கூறுகின்றார்கள்.

அப்படி என்றால் சாதி ஒழிப்புக்கு திராவிட கட்சிகள் உண்மையில் என்ன செய்தது என்ற கேள்வி நாளை வரலாற்றில் எழுப்பப்பட்டால்?

இட ஒதுக்கீடு, பெரியார் சமத்துவபுரம், அனைத்து சாதிகளும் அர்ச்சகர் ஆகலாம். இதை தாண்டி, இதைத் தாண்டி எதுவுமே இல்லை என்று உறுதியாக சொல்லிவிடலாம்.

ஆனால் மேற்கூறிய அனைத்துமே சாதியை ஒழிக்கும் அதி தீவிர செயல்பாடுகள் என்று ‘திராவிடம் போட்ட பிச்சை’ வகையறாக்கள்’ சொல்வார்களேயானால் குழந்தைகள் கூட சிரிப்பார்கள்.

இத்தனை ஆண்டுகள் ஆட்சிக்கும் பின்பும் தமிழகத்தில் சேரிகள் ஒழிக்கப்படவில்லை. தலித் மக்கள் இழிவான வேலை செய்து வாழ்வது ஒழிக்கப்படவில்லை, சாதி ஆணவ படுகொலைகள் ஒழிக்கப்படவில்லை.

இதை ஏன் நாம் இப்போது சொல்கின்றோம் என்றால் ‘இத்தனை ஆண்டுகளாக திராவிட கட்சிகளின் ஆட்சியில் சாதி ஒழிப்புக்கு உருப்படியா என்ன செஞ்சிங்க’ என்று யாரும் நாளை கேள்வி கேட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான்.

இட ஒதுக்கீடோ இல்லை அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதோ உண்மையில் சாதி ஒழிப்பு திட்டங்கள் இல்லை. அவை பல நூறு ஆண்டுகளாக சாதியின் பெயரால் கல்வி மற்றும் சமூக அங்கீகாரம் மறுக்கப் பட்டவர்களுக்கும், சட்டத்தில் உத்திரவாதப் படுத்தப்பட்டுள்ள சமத்துவத்தை அனைவருக்கும் உறுதிப்படுத்த மட்டுமே கொண்டு வரப்பட்டவை ஆகும்.

எப்படி இட ஒதுக்கீட்டில் படித்த பலர் ஆண்ட சாதி பெருமை பேசுபவர்களாகவும், சுய சாதிக்குள் திருமணம் செய்து கொள்பவர்களாகவும் இருப்பதை மாற்றவில்லையோ அதே போலத்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதும் நிச்சயம் சாதியை ஒழிக்கக் போவதில்லை.

சட்டத்தில் உத்திரவாதப் படுத்தப்பட்டுள்ள அனைவரும் சமம் என்பதை மட்டுமே அவை நிலைநிறுத்தும். ஆனால் சூத்திரசாதி வெறியர்களால் தலித்துகள் வெட்டிக் கொல்லப் படுவதை அவை ஒருபோதும் தடுத்து நிறுத்தாது.

பார்ப்பனர்கள் பூசை செய்த கோயில்களில் சூத்திர சாதிகள் பூசை செய்வதை பார்த்து ஆஹா என ஆனந்த கண்ணீர் வடிக்கும் எந்த கண்களில் இருந்தும் கிராமப்புற சூத்திரசாதி கோயில்களில் தலித்துகள் உள்ளே கூட செல்ல முடியாது என்பதை நினைத்து மறந்தும் கூட ஒரு சொட்டு கண்ணீர் வராது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் முருகன் போன்றவர்கள் ஆர்எஸ்எஸ் கருத்தியலை ஏற்று அதன் அடியாளாக மாறி பதவிகளும் பட்டங்களும் பெறுவதை ஏன் நாம் விமர்சிக்க வேண்டும்?.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோனூர் கிராமத்தை சேர்ந்த எல்.முருகன் சட்ட படிப்பில் முதுகலை பட்டமும் பெற்றவர். மேலும் அறிவுசார் சொத்துரிமை குறித்து பட்டயப் பட்டமும் பெற்றிருக்கின்றார்.

ஆனால் இவ்வளவு படித்தும் தன் பிறந்த சமூகம் சமூகத்தில் இழிவாக நடத்தப்படுவதைப் பற்றியோ தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாக்கப்படுவதைப் பற்றியோ அதை ஒழிப்பதைப் பற்றியோ எந்தவித கண்ணோட்டத்தையும் அவர் பெற்றிருக்கவில்லை.

அதற்கு முக்கிய காரணம் அவர் தன்னுடைய இளமைக் காலத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ் மாணவர் பிரிவின் உறுப்பினராக இருந்ததுதான். அதற்கு பரிசாக தேசிய தாழ்த்தப்பட்டோர் எஸ்சி, எஸ்டி ஆணைய துணைத் தலைவராக பதவியை பெற்றுக் கொண்டார்.

2011 சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம் தனித்தொகுதியில் வேட்பாளராகக் பாஜக சார்பாகப் போட்டியிட்ட முருகன் வெறும் 1730 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார்.

2020 ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட முருகன் மீண்டும் கடந்த சட்டமன்ற தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோற்றார்.

இதிலே கவனிக்க வேண்டியது முருகனை தொடர்ந்த பிஜேபி பயன்படுத்திக் கொண்டதோடு முருகனும் பிஜேபியை பயன்படுத்தி பதவிகளை பெற்றுக் கொண்டார் என்பதுதான்.

நிச்சயம் முருகனால் எந்தக் காலத்திலும் ஆர்எஸ்எஸ்சில் தலைமை பதவிக்கு வர முடியாது என்பது தெரியும். ஆனால் ஆர்எஸ்எஸ்சின் சாதிய கருத்தியலை ஏற்றுக் கொண்டால் பிஜேபி ஆட்சியில் குடியரசு தலைவர் பதவியைக்கூட பெற முடியும்.

ஆனால் சாதி ஒழிப்பை பேசும் இயக்கங்களிலோ கட்சிகளிலோ தலித்துகள் இதுவரை அடைந்த உயரங்கள் என்ன? நமக்கு தெரிந்து சாதி ஒழிப்பை பேசும் இயக்கங்களில் கூட சூத்திர சாதிக்காரர்களே தலைமை பதவியை இதுவரை அலங்கரித்து இருக்கின்றார்கள்.

சாதி ஒழிப்பை கூட அவர்கள் பேசினால்தான் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கின்றார்கள் போலும். இன்று தமிழ்நாட்டில் பிஜேபியால் நான்கு இடங்களில் வெற்றி பெற முடிந்ததற்கு முக்கிய காரணம் இந்த ‘திராவிடம் போட்ட பிச்சை’ வகையறாக்கள்தான்.

பிஜேபி மிக தெளிவாக திட்டமிடுகின்றது. தலித்துகளை பிஜேபிக்கு வரவைக்க அது எல்.முருகனை தூண்டிலாக போட்டிருக்கின்றது. திமுக, அதிமுக போன்ற கட்சிகள் தங்களுக்கு பெரிதாக எதுவுமே செய்யவில்லை என்று அதிர்ப்தியில் இருக்கும் பலர் எல்.முருகனுக்கு பிஜேபியில் உள்ள செல்வாக்கை பார்த்து அங்கே ஓடிச்சென்று இனி ஒட்டிக்கொள்வர்கள்.

இருந்தாலும் நம்மால் எதுவுமே செய்ய முடியாது. தலித்துகளை தனித்தொகுதியில் மட்டுமே நிறுத்தி அழகு பார்க்கும் நம் கோண புத்தி எப்போதுமே மாறப்போவதில்லை. சேரிகளும் அழியப்போவதில்லை.

சூத்திரசாதி வெறியர்களால் தலித்துகள் கொல்லப்படுவதோ தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கப் படுவதோ மாறப் போவதில்லை. ஆனாலும் நாம் எதிர்ப்பார்க்கின்றோம் தலித்துகள் திமுக அதிமுகவை மட்டுமே ஆதரிக்க வேண்டும் என்று.

இந்து கோயில்களை புனரமைக்க 1000 கோடி ஒதுக்கிய கட்சியால், பூங்காக்கள் கட்ட 2500 கோடி ஒதுக்க முடிந்த கட்சியால் சேரிகளை ஒழிக்க முடியவில்லை என்பது அது ஒழிக்க முடியாத ஒன்றல்ல அது ஆண்டாண்டு காலத்திற்கு இருக்க வேண்டும் என்றே இந்த கட்சிகள் விரும்புவதைத்தான் காட்டுகின்றது.

எல்.முருகன் போன்றவர்கள் அடியாள் வேலை பார்த்தாவது வாழ்க்கையில் முன்னேறும் வழியை தெரிந்து வைத்திருக்கின்றார்கள். ஆனால் இன்னும் இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான தலித்துகள் எந்த வசதிகளும் அற்ற சேரிகளிலேயே தங்களின் வாழ்க்கையை கருக்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.

முற்போக்கு பேசும் கட்சிகள் கூட அவர்களுக்கு கொடுத்த அரசியல் பிரதிநிதித்துவம் வெட்ககேடான அளவிலேயே உள்ளது. அதனால் நம்மால் ஒருபோதும் முருகன் போன்றவார்கள் பிஜேபியை நோக்கி போவதை தடுக்க முடியாத நிலையில் இருக்கின்றோம்.

இருந்தாலும் மத்திய இணை அமைச்சராக பொறுபேற்றுள்ள எல்.முருகனை நாம் மனதார வாழ்த்துவோம். அதானிக்கும் அம்பானிக்கும் மாமா வேலை பார்க்கும் ஒரு கட்சியில் இப்படி ஒரு பதவி கிடைப்பது சாதாரணமானது கிடையாது. முருகன் இந்த வேலையைப் பார்ப்பதற்கு மிகவும் தகுதியான நபர் என்று சொன்னால் அது மிகையாகாது.

- செ.கார்கி

Pin It