“பயித்தியம் தெளிந்து போய்விட்டது உலக்கை எடு கோவணங் கட்ட”

5. 7. 26 - தேதி ‘மித்திரன்’ தன் தலையங்கத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு ஒரு புது வழி கண்டுபிடித்ததாக சாமர்த்தியம் காட்டி விஷச் சிரிப்பு சிரிக்கிறான். அதாவது, சட்டசபைகளிலோ மற்றும் பொது ஸ்தாபனங்களிலோ சமூக சம்பந்தமான பிரச்சினைகள் வரும்போது அந்தந்த சமூகத்தைச் சேர்ந்த அங்கத்தினர்களில் முக்கால் வாசிப்பேர் ஆக்ஷபித்தால் அந்த பிரச்சினைகள் கொண்டு வரக்கூடாதாம். இந்த மாதிரி ஒரு தீர்மானம் செய்து விட்டதால் முஸ்லீம்களுக்கு பத்திரம் ஏற்பட்டு போய்விட்டதாம். இனி முஸ்லீம்கள் சுயராஜ்யக் கட்சியாரோடு இரண்டறக் கலந்துபோக வேண்டியது தானாம்.

இது “பைத்தியம் தெளிந்து போய்விட்டது, உலக்கை கொண்டு வா கோவணம் கட்டிக் கொள்ள” என்று ஒருவன் தனது பைத்தியம் தெளிந்து போனதற்கு அடையாளமாகப் பேசினது போல் இருக்கிறது. மகமதிய மெம்பர்களில் முக்கால் வாசிப்பேர் ஆக்ஷபித்தால் இந்து முஸ்லீம் சம்பந்தமான பிரச்சினை சபைகளில் வரக்கூடாது என்பது சரிதான். உதாரணமாக, ஒரு முனிசிபாலிட்டியில் ஒரு பள்ளிவாசலை இடித்து ரோடு போடவேண்டும் என்பதாக ஒரு தீர்மானம் வருவதாக வைத்துக் கொள்வோம். அந்த முனிசிபாலிட்டியில் 30 மெம்பர்களில் மகமதியர்கள் 8 பேர் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம் . இந்த 8 பேரில் 6 பேர் ஆக்ஷபித்தால் அந்த தீர்மானம் நிறுத்தப்பட்டுப் போகவேண்டும். இந்த விதி நல்ல விதி தான். இது எப்படி இருந்தால் உண்மையான பலனைக் கொடுக்கும்? இந்த எட்டு மெம்பர்களும் மதப்பற்று உள்ளவர்களாகவும் முஸ்லீம் சமூகத்திற்கு பொறுப்புள்ளவர்களாகவும் இருந்தால் தானே இந்த எட்டு பேரில் ஆறு பேராவது ஆக்ஷபிப்பார்கள் என்று நம்பலாம். அப்படிக்கின்றி ‘ஸைபுல் இஸ்லாம்’ எழுதுவது போல் ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் பணத்தால், சீனிவாசய்யங்காருக்கு நல்ல பிள்ளைகளாய், சீனிவாசய்யங்கார் ஜாமீன் பேரில் சுயமரியாதையற்றவர்களாய் அந்த சபைக்குப் போகக்கூடியவர்களாயிருந்தால் முக்கால்வாசிப் பேரல்ல முழுவாசிப் பேரல்ல, கால்வாசிப் பேராவது ஆக்ஷபிக்கக் கூடியவர்கள் கிடைப்பார்களா?

அதே மாதிரி இந்துக்களுக்குள்ளாகவும் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கிற விஷயத்திலும் பார்ப்பனரல்லாதார் தயவில்லாமல் அய்யங்கார் அவர்கள் பணச் செலவில் ஸ்தானம் பெறுகிறவர்கள் நிறைந்த சட்டசபையில் பார்ப்பனரல்லாதாருக்கு எப்படி பந்தோபஸ்து ஏற்படும்? உதாரணமாக, பார்ப்பனரல்லாதார் பணத்திலும் பிரசாரத்திலும் சட்டசபைக்குப் போன ஸ்ரீமான் டி. ஆதிநாராயண செட்டியார் எந்த விதத்திலாவது பார்ப்பனரல்லாதாருக்குப் பொறுப்பாளியாய் இருக்கிறாரா?

குருகுல விவாதத்தில் பார்ப்பனர் சொல்லுவதெல்லாம் சரியென்றார். பார்ப்பனர்களுக்காக ஊர் ஊராய் பிரசாரமும் செய்தார். அதற்காகவே இப்போதும் நமது பார்ப்பனர்கள் அவரை ஆதரிக்கிறார்கள். அவரும் பார்ப்பனர் பணத்தையும் பார்ப்பனப் பத்திரிகைகளின் பிரசாரத்தையுமே நம்பி மறுபடியும் சட்டசபைக்கு அபேக்ஷகராய் நிற்கிறார். நமது ஜனங்கள் மறுபடியும் ஏமாந்து செட்டியாரை ஆதரித்துவிடுவார்கள் போலவே தோன்றுகிறது.

ஆதலால், தெரிந்தெடுக்கும் பொறுப்பு அந்தந்த சமூகத்தார்களுக்கென்று வரையறுத்து வைக்கப்படாத வரையில் வேறு எவ்வித விதி செய்தாலும் யோக்கியர்களும் சமூகப்பற்று மதப்பற்று உள்ளவர்களும் பதவி அடைய முடியவே முடியாது. பார்ப்பனர்களின் ‘கூலிகள்’ வந்து சேரத்தான் இடங்கொடுக்கும் என்பது திண்ணம். ‘மித்திரன்’ இந்த சூழ்ச்சித் தந்திரங்களால் முஸ்லீம்களை ஏமாற்ற முடியாது என்பதும் திண்ணம்.

(குடி அரசு - கட்டுரை - 11.07.1926)

Pin It