கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

“செத்த மாடுகளை புதைக்க மாட்டோம்; பிணங்களை எரிக்க மாட்டோம்; சாக்கடைக் குழிக்குள் இறங்க மாட்டோம்” என்று குஜராத்தில் தலித் மக்கள் கிராமம் கிராமமாக நடத்தும் பயணம் மிகப் பெரும் தாக்கத்தை உருவாக்கி வருகிறது. ஜிக்மேஷ் மேவானி, சுபோத் பார்மர் எனும் இரண்டு தலித் இளைஞர்கள் இந்த புரட்சிக்கு தலைமை தாங்கி வழி நடத்துகிறார்கள். பயணத்தின் அடுத்த கட்டமாக ‘மனு சாஸ்திரம்’ என்ற பார்ப்பனிய கொடூர சட்டத்தை வழங்கிய ‘மனு’வின் உருவ பொம்மைக்கு தீ வைத்து எரிக்கும் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.

புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6ஆம் தேதி ஜெய்ப்பூரில் பல்லாயிரம் தலித் மக்கள், இஸ்லாமியர்கள், விவசாயிகள் திரண்டு ‘மனு’வின் உருவத்தை தீயிட்டு எரிக்கிறார்கள். இராஜஸ்தான் உயர்நீதிமன்ற கட்டிட வாயிலில் பார்ப்பன ‘மனு’வின் சிலை நிறுவப்பட்டுள்ளது. எனவே உயர்நீதிமன்ற அலுவலகத்தில் ‘மனு’வின் சிலைக்கு எதிரே இந்தப் போராட்டம் நடைபெறு கிறது. இத்தகவலை தலித் புரட்சிக்கு  தலைமை யேற்று நடத்தி வரும் ஜிக்மேஷ் மேவானி, லக்னோவில் செய்தியாளர்களிடையே அறிவித்து, பார்ப்பனிய ஜாதிய வெறியர்களை அதிர்ச்சி யடையச் செய்துள்ளார்.

கடந்த 27ஆம் தேதி சனிக்கிழமை லக்னோவில் செய்தியாளர்களிடையே இதை அறிவித்ததோடு, தனது தலைமையில் நடைபயணமாக ஒடுக்கப்பட்ட மக்கள் ஜெய்ப்பூர் வந்து ‘மனு’வின் உருவத்தை எரிப்பார்கள் என்று கூறினார். குஜராத்தைத் தொடர்ந்து, இப்போது உ.பி. மாநிலத்தில் மக்களைத் திரட்டி பார்ப்பனியத்துக்கும் ஜாதி இழிவுக்கும் எதிராக ஊர் ஊராக நடைபயணம் நடத்தி வருகிறார் மேவானி. தலித் மக்கள் மட்டுமல்லாது, இஸ்லாமியர்கள், ஏழை விவசாயிகள், வெகு மக்களையும் இணைத்து இந்த இயக்கத்தை அவர் நடத்தி வருவது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

அடுத்தகட்டமாக உ.பி.யில் புண்டல்கான்ட் என்ற பகுதியிலிருந்து லக்னோ வரை விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைக் காப்பாற்றக் கோரியும் விவசாயிகள் தலித் மக்கள், இஸ்லாமியர்களை திரட்டி நடைப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். குஜராத் வளர்ச்சிக்கான முன் மாதிரியல்ல; தலித் மக்களும் இஸ்லாமியர்களும் விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் குஜராத்.

“எங்களின் நிலங்களை எங்களிடம் ஒப்படை யுங்கள்; பசு மாட்டின் வாலை நீங்கள் பிடித்துக் கொள்ளுங்கள்; சமூக நீதியை விட இப்போது வாழ்வுரிமை எங்களுக்கு முதன்மையான தேவை” என்று அவர் பேசி வரும் கருத்துகளுக்கு பேராதரவு திரண்டு வருகிறது. தலித்-முஸ்லீம்-விவசாயிகள்-ஆதிவாசிகளை இந்த இயக்கத்தில் அவர் இணைத்திருப்பது பார்ப்பன உயர்ஜாதி கும்பலுக்கு அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.

திராவிடர் விடுதலைக் கழகம் தமிழகம் முழுவதும் ‘மனு சாஸ்திரத்தை’ தீயிட்டு எரிக்கும் போராட்டத்தை தொடங்கி வைத்தது. அந்தத் தீ இப்போது வட மாநிலங்களிலும் எரியத் தொடங்கி விட்டது.