ஆண் நாவிதர்களின் எதிர்ப்புகளை மீறி, திருப்பதியில் பெண் பக்தர்களுக்கு மொட்டை போட, 20 பெண் நாவிதர்களை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் நியமித்துவிட்டது. சாரதாபீடத்தின் தலைவர் சுவருபானந்தா உட்பட பல பார்ப்பனர்கள் ஆகமத்துக்கு எதிரானது என்று எதிர்த்தார்கள். மடாதிபதிகளும், சுவாமிஜிகளும் விமானத்திலும், குளிரூட்டப்பட்ட பேருந்துகளிலும் பயணம் செய்கிறார்களே; இதை எந்த ஆகமம் அனுமதிக்கிறது என்று கேட்டார் நாவிதர் சங்கத் தலைவி ராதாரவி! தமிழ்நாட்டில் இதுவரை பெரியார் இயக்கங்கள் எழுப்பிய கேள்விகள் - இப்போது, பல்வேறு முகாம்களிலிருந்து ஒலிக்கத் துவங்கியுள்ளது.

பிரிட்டனில் - அயிஷா ஆஸ்மி என்ற முஸ்லீம் பள்ளி ஆசிரியை, வகுப்பில் முகத்தை ‘பர்தா’ போட்டு மூடிக் கொண்டு பாடம் நடத்தியிருக்கிறார். தனது பர்தாவை வகுப்பறையில் நீக்க மறுத்துவிட்டார். அதற்காக அவர், தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவது, அவரவர் விருப்பம். அதை மதத் தலைவர்கள் கட்டாயப்படுத்தக் கூடாது என்று அகில இந்திய முஸ்லீம் மதச் சட்டங்களுக்கான வாரியம் முடிவு செய்துள்ளது. இது பற்றி முஸ்லீம் மதகுருமார்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு என்று வாரியத்தின் அதிகாரபூர்வ பேச்சாளர் குயாசிம் ரசீல், ‘அவுட் லுக்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். வடமாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் கிராமப்புற முஸ்லிம் பெண்கள், தினக் கூலிகளாகவும், உழைப்பாளிகளாகவும் இருக்கிறார்கள். அவர்கள் பர்தாவை அணிந்து கொண்டு வேலை செய்ய வேண்டும் என்று எப்படிக் கட்டாயப்படுத்த முடியும்? என்பது நியாயமான கேள்வி.

இசுலாம் மார்க்கத்தின்படி, பர்தா அணிவது கட்டாயமில்லை என்று சமூக சீர்திருத்தவாதியும், சிறந்த நடிகையுமான சப்னா ஆஸ்மி கூறினார். இதற்கு அவர் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. சீக்கிய இளைஞர்களிடமும் தலைப்பாகை அணியும் மதப் பழக்கம் குறைந்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் கிராமப்புறங்களில் - 80 சதவீத இளைஞர்கள் முடிவெட்டி கிராப் வைத்துக் கொள்வதாக சீக்கியர்களின் மதத் தலைமை அமைப்பான சீரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டித் தலைவரே கூறுகிறார். இந்த மத அடையாளங்களில் பெண்ணடிமையும், மூட நம்பிக்கைகளும் - வசதிக் குறைவுகளும் அடங்கியுள்ளன. ஆனால், பார்ப்பனர்கள் இன்னமும் தங்களின் மத அடையாளம் என்று கூறிக் கொண்டு ‘பூணூல்’ போட்டுக் கொண்டு பார்ப்பனரல்லாத ‘இந்துக்களை’ இழிவுபடுத்துகின்றனர். அதாவது தன்னை ‘பிராமணன்’ என்று பிரித்துக் காட்டுகிறார்கள்.

பெரியார் கூறிய உதாரணத்தைக் கூற வேண்டுமானால், ஒரு வீதியில் - ஒரே ஒரு வீட்டில் மட்டும், ‘இது பத்தினியின் வீடு’ என்று பெயர்ப் பலகை எழுதி மாட்டுவது போல்தான், பார்ப்பனர்கள் பூணூல் போடுவதும். அப்படியானால், அதே வீதியில் உள்ள ஏனைய வீடுகள் ‘தாசிகள்’ வீடு என்று தானே பொருள்?

“பிராமணர்களின்” தாசி புத்திரர்கள்தான் சூத்திரர்கள் என்று தான் - மதுதர்மமும் கூறுகிறது! பர்தா, தலைப்பாகை பற்றி எல்லாம் விவாதித்து வரும் பார்ப்பனர்கள், பார்ப்பன எடுகள், அவர்களின் ஆசிரியருக்குக் கடிதப் பகுதிகளில் ‘பூணூல்’ போடுவதை மட்டும் விவாதத்துக்கே உட்படுத்த மறுப்பதை கவனிக்க வேண்டும்! பூணூல் அறுப்பு தொடங்கினால், தான் பிரச்சினை விவாதத்துக்கு வருமோ?

குஷ்புவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை

பெரியார் படத்தில் - அன்னை மணியம்மையார் வேடத்தில் நடித்து வரும் நடிகை குஷ்பு தனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது என்று கூறியிருக்கிறார். இதுபற்றி ‘ஆனந்த விகடன்’ ஏட்டுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. நான் மும்பையில், ஒரு இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவள். ஒரு பெண்ணா, நிறைய பிரச்சனைகளைச் சந்திச்சிருக்கேன். சில சம்பவங்களையும் கொடுமைகளையும் பார்த்த பிறகு, கடவுள் நம்பிக்கையைச் சுத்தமா விட்டுட்டேன். அது என்னோட புரிதல். ஆனால், சுந்தர் வாராவாரம் வியாழக்கிழமை விரதம் இருக்கும் முருக பக்தர். அது அவரின் நம்பிக்கை. இரண்டு பேரும் அவங்கவங்க நம்பிக்கைகளுடன் சந்தோஷமா இருக்கோம். அந்த ஸ்பேஸ் எல்லோருக்கும் வேணும்!” என்றார் குஷ்பு கம்பீரமாக!” - ‘ஆனந்தவிகடன்’ நவ. 8.

‘கற்பு’ பிரச்சினையில் அவர் தெரிவித்த சரியான கருத்துகளுக்காக எழுந்த கடும் எதிர்ப்புகளை உறுதியுடன் சந்தித்தவர் குஷ்பு. அந்த உறுதிக்கான காரணம், இப்போது தெரிகிறது.