சகோதரர்களே!

இன்று கூட்டப்பட்ட கூட்டமானது பிராமணரல்லாதார் என்கிற ஒரு வகுப்பு சம்பந்தமான கூட்டம். இக்கூட்டத்தில் நான் இன்று பிராமணரல்லாதார் வகுப்பு முன்னேற்றம் என்கிற விஷயத்தைப் பற்றி பேசப் போகிறேன்.

மாறுதல் வேண்டாதார் வகுப்பைப் பற்றி பேசலாமா?

மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை காங்கிரஸ்காரன், அதிலும் வைதீக ஒத்துழையாதாரரன், மாறுதல் வேண்டாதவன் என்று சொல்லப்பட்ட ஒருவன் வகுப்பைப் பற்றி பேசுவது பொருந்துமா என்று சிலருக்குத் தோன்றலாம். வைதீக ஒத்துழையாமைக்காரன் என்றால், ஒருவன் கழுத்தை ஒருவன் அறுக்கும்போது பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்பவனல்ல, ஒருவன் சொத்தை ஒருவன் கொள்ளை அடித்துக்கொண்டு போனால் வழியைத் திறந்துவிட்டு வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டுமென்பவனல்ல என்பதை முதலில் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அல்லாமலும் மகாத்மாவின் காங்கிரஸும் அவரது ஒத்துழையாமையும் நிர்மாணத் திட்டமும் காங்கிரசிலிருந்து வெளிப்பட்டு மறைந்து கொண்டும் வருகிறது. நிர்மாணத் திட்டங்கொண்ட ஒத்துழையாமைக் காங்கிரஸின் போது வகுப்பு விஷயத்தைப் பற்றி எவரும் யோசிக்கவேயில்லை. அதில் உயர்வு-தாழ்வு என்கிற வித்தியாசமேயல்லாமல் எல்லா வகுப்புக்கும் சமத்துவமும், சுயமரியாதையும், ஏழை - பணக்காரர் என்கிற வித்தியாசமேயில்லாமல் எல்லோருக்கும் nக்ஷமமும், ஆங்கிலம் படித்தவன்-படியாதவன் என்கிற வேறுபாடு இல்லாமல் எல்லோருக்கும் சம யோக்கியதையும் உண்டாக சௌகரியமிருந்ததால் என் போன்றவர்கள் வகுப்பு என்பதை மறந்து மகாத்மா காங்கிரசிலும் ஒத்துழையாமையிலும் நிர்மாணத் திட்டத்திலும் உழைத்து வந்தோம்.

ஒத்துழையாமைக்கு முன்னும் வகுப்பிற்கே உழைத்தேன்

மகாத்மா காங்கிரசுக்கு முன்பே நான், வகுப்பு முன்னேற்றத்தில் கவலை உள்ளவனாகத்தான் இருந்தேன். அதாவது பிராமணரல்லாதாருக்காக இப்பொழுது உள்ள தென் இந்திய நல உரிமைச் சங்கம் என்பது போன்ற ஏறக்குறைய இதே கொள்கை உடைய சென்னை மாகாணச் சங்கம் என்கிற ஒரு சங்கம் இருந்ததும், அதில் என் போன்றவர்கள் முக்கியப் பங்கெடுத்து உழைத்ததும் உங்களுக்குத் தெரியும். அது எதற்காகயிருந்தது? பிராமண ரல்லாதார் முன்னேற்றத்திற்கு காங்கிரஸ் போதாது என்றும், நமக்கென்று ஒரு தனியான இயக்கம் இருக்கவேண்டுமென்றும், இப்பொழுது காங்கிரசிலுள்ள பிராமணரல்லாதார் எல்லோரும் ஒன்று கூடித்தான் அச்சங்கத்தின் மூலம் பிராமணரல்லாதார் முன்னேற்றத்திற்குழைத்ததும், நமது முன்னேற்றத்திற்காக வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் முதலியவைகளை நாம் வலியுறுத்தி வந்ததும் உங்களுக்குத் தெரியும்.

காங்கிரஸினால் ஏற்பட்ட தீவினை

இன்னும் என்னுடைய அபிப்ராயம் என்னவென்றால் நமது நாட்டில் காங்கிரஸ் என்கிற ஒரு இயக்கம் இல்லாவிட்டால் நமக்கு வகுப்பு முன்னேற்ற இயக்கமே தேவையில்லை என்றே சொல்லுவேன். நமது நாட்டில் என்று காங்கிரஸ் ஏற்பட்டதோ அன்றே பிராமணரல்லாதாருக்கு சனியன் பிடித்தது. உதாரணமாக, தமிழ்நாட்டில் காங்கிரஸ் வருவதற்கு முன் பெரிய மனிதர்கள் என்போரும், படித்தவர்கள் என்போரும், தலைவர்கள் என்போரும், தேச பக்தர்கள் என்போரும், பிராமணரல்லாதவர்களாகவேயிருந்தார்கள். ஜில்லா முன்சீப்புகள், சிரஸ்தார்கள், தாசில்தார்கள், இன்ஸ்பெக்டர்கள் ஆகிய இவ் வுத்தியோகங்கள் தான் அக்காலத்தில் இந்தியர்களுக்கு அதிகமாய் வழங்கப் பட்டன.

காங்கிரஸுக்கு முன் உத்தியோக யோக்கியதை

இவைகளில் நூற்றுக்கு 99 பேர் நாயுடு, முதலியார், பிள்ளை, சாயபு ஆகிய இவர்கள்தான் இருப்பார்கள். இவர்கள் உத்தியோக கண்ணியமும் தர்பாரும் இக்காலத்திலுள்ள ஒரு கலெக்டருக்காவது, நிர்வாகசபை மெம்பருக்காவது கிடையாது. எனக்குத் தெரிய ஒரு நாயுடு இந்த ஜில்லா சிரஸ்தாரா யிருந்தார். அவரை ‘கலெக்டர் கூப்பிடுகிறார்’ என்று யாராவது கூப்பிட்டால் ‘பத்து நிமிஷத்தில் வருகிறேன்’ என்றுதான் சொல்லுவார். 15 நிமிஷம் கழித்து மெத்தைக்குப் போவார்; காலில் ஜோடும், ஒரு கையில் தடியும், மற்றொரு கையில் சுருட்டுமாய் மெத்தை ஏறுவார். கலெக்டர் முன்னால் மேஜையின் மேல் சுருட்டையும் தடியையும் வைத்து விட்டு “என்னைக் கூப்பிட்ட விஷயம் என்ன?” என்று கேட்பார். காரியம் முடிந்ததும் சுருட்டும் தடியும் எடுத்துக் கொண்டு வருவார். போலீஸ் ஹெட்குவார்ட்டர் இன்ஸ்பெக்டராக நாயுடு ஒருவர் இருந்தார். அவர் கலெக்டர், சூப்பிரன்டெண்ட் முதலிய வெள்ளைக்கார அதிகாரிகளுடன் சிநேகிதர்கள் போல பேசுவார், உறவாடுவார். நாயுடுவைத் திடீரென்று கூப்பிட முடியாது. நாயுடுவின் சந்தர்ப்பந் தெரிந்து தான் கூப்பிட வேண்டும். இதுபோலவே அக்காலத்தில் தக்க குடும்ப பரம்பரையும், யோக்கியமும், அந்தஸ்தும், கண்ணியமும் உள்ளவர்கள் பெரிய உத்தியோகம் வகிப்பார்கள். அப்போதைய உத்தியோகங்களுக்கு வேண்டிய யோக்கியதை இவைதான்.

காங்கிரஸுக்குப் பின் உத்தியோக யோக்கியதை

காங்கிரஸ் ஏற்பட்ட பிறகு உத்தியோகத்தின் யோக்கியதை அடியோடு மாறிவிட்டது. முனிசிபாலிட்டி விளக்கு வெளிச்சத்தில் படித்தவனானாலும் சரி, பஞ்சாங்கம் சொல்லி பிச்சை எடுத்தவன் மகனானாலும் சரி, தூது சென்று பிழைப்பவன் மகனானாலும் சரி, உருப் போடத் தெரிந்து கிராமபோன் மிஷின் போல பார்த்ததை உருப் போட்டு எழுதத் தெரிந்து, மற்ற விதத்தில் எப்படிப் பட்டவனானாலும் சரி, அவன்தான் உத்தியோகத்திற்கு லாயக்குள்ளவனாகப் போய்விட்டான். இதனால் தெருப்பிச்சை யெடுப்போரெல்லாம் உத்தி யோகத்திற்கு லாயக்குள்ளவர்களாகி விட்டார்கள். பரம்பரையாய் பெருங் குடும்பமாய், தேசத்தையே கோட்டைக் கொத்தளங்களோடு அரசாண்டவர்களாய், சுயமரியாதையோடு வாழ்ந்தவர்களாய் உள்ள பிராமணனல்லாத குடும்பங்கள் பின்னடைய ஏற்பட்டு விட்டன. இதன் பலனாய் உத்தியோகங்களுக்கும் மதிப்பு குறைந்துவிட்டன.

பிராமணர் உத்தியோகம் பெற்ற வழி

காங்கிரஸின் ஆதி சூழ்ச்சியே பிராமணர்கள் எப்படி உத்தியோகம் சம்பாதிப்பது என்கிற அஸ்திவாரத்தின் மேல் கட்டப்பட்டதாகும். அதற்கு ஏற்றாற்போல் அந்த ஜாதிக்கு சுபாவமாய் உள்ள உருப்போடும் வித்தை யையே உத்தியோகத்திற்கு யோக்கியதையாய் வைத்து, அதற்கேற்ற பள்ளிக் கூடங்களை விருத்தி செய்தார்கள். இதன் மூலம் உத்தியோகம் பெற்ற பிராமணர்களால் வெள்ளைக்காரர்களுக்குப் பல விதத்திலும் உபயோக மிருந்ததால் அவர்களும் இந்த பிராமணர்களுக்கு அநுகூலமான உத்தியோக யோக்கியதையையே பரப்பி விட்டார்கள். இப்போது வர வர மேற்படி உத்தியோகங்களின் யோக்கியதையும் குறைந்து விட்டது.

பிராமண - பிராமணரல்லாத உத்தியோகஸ்தர்களுக்குள்ள பேதம்

பெரும்பாலும் வெள்ளைக்கார அதிகாரிகளுக்குள்ள சகல தேவைகளையும் நிறைவேற்றி வைக்கக் கூடியவர்களும், சுயமரியாதை அற்றவர் களும், மனச்சாக்ஷியை இழந்தவர்களும்தான் நல்ல டிப்டி கலெக்டர், நல்ல முனிசீபு, நல்ல தாசில்தார் , நல்ல மேஜிஸ்ட்ரேட், நல்ல இன்ஸ்பெக்டர்களாய் விளங்குகிறார்கள். இந்த உத்தியோகத்திற்கே இவ்வளவு யோக்கியதை வேண்டுமானால் இன்னும் பெரிய உத்தியோகத்திற்கு எவ்வளவு யோக்கியதை வேண்டும்? இந்த முறையில் பிராமணரல்லாத வகுப்பார் உத்தியோகம் பெற அஞ்சுகிறார்கள். துணிந்து யாராவது ஒப்புக்கொண்டாலும் மேற்படி யோக்கியதையில்லாத காரணத்தால் நல்ல உத்தியோகஸ்தர்களாக ஆவதில்லை.

தமிழரின் தாழ்வுக்கு காங்கிரஸே காரணம்

இம்மாதிரி காங்கிரஸ் நமது நாட்டில் ஏற்படாமலிருந்தால் நமது ஜனங்களின் யோக்கியதை இவ்வளவு கேவலமாய்ப் போயிருக்காது; உத்தி யோகங்களின் யோக்கியதையும் இவ்வளவு இழிவான நிலைமைக்கு வந்தி ருக்காது; வெள்ளைக்காரரும் இவ்வளவு கொடுமையான முறையில் ஆளத் துணியமாட்டார்கள். ஆதலால் பிராமணரல்லாதார் நிலைமையை இவ்வளவு கேவலத்திற்குக் கொண்டுவந்து விட்டதற்கு முக்கியக் காரணங்களில் இந்த காங்கிரஸும் பிரதானமானது. காங்கிரஸ் என்பதே உத்தியோகம் பெற ஏற்பட்டதுதான். அது நமது நாட்டு பிராமணர்களால் வளர்க்கப்பட்டு வந்த தால் பிராமணர்கள் உத்தியோகம் பெறத்தக்க வழியில் நிலை நின்று விட்டது. எந்த அந்தஸ்தும், எந்த உத்தியோகமும், எந்தப் பதவியும், எந்தப் பெரிய உத்தியோகஸ்தனையும் நீங்கள் எடுத்துக் கொண்டீர்களானால் அப்பதவியும் உத்தியோகமும் காங்கிரஸின் பலனாக ஏற்பட்டதாகத் தானிருக்கும்.

தமிழர் முன்னேற தற்கால காங்கிரஸ் அழிய வேண்டும்

இனி பிராமணரல்லாதார் சமூகத்திற்கு ஏதாவது யோக்கியதை உண் டாக வேண்டுமானால் இந்த காங்கிரஸ் ஒழிய வேண்டும். இது உள்ள வரை பிராமணரல்லாதார் உருப்படியாக முடியாது. மகாத்மா காங்கிரஸ் ஏற்பட வேண்டும்.

ஆனால் சிலர் என்னை இப்படிப்பட்ட காங்கிரஸில் நீ ஏன் இன்னமும் இருக்கிறாய் என்று கேட்கலாம். இப்பொழுது பிராமண உத்தியோகத்திற்கு உழைத்து வரும் காங்கிரஸை மகாத்மா காங்கிரஸ் போல் அதாவது இரண் டொரு வருஷத்திற்கு முன் மூன்று நான்கு வருஷ காலம் இருந்து வந்த காங்கிரஸைப் போல் சகல வகுப்பாருக்கும் சமமான நன்மை வரும்படியாக உண்மையான ஒத்துழையாமைக் காங்கிரஸாக மறுபடியும் மாற்ற வேண்டும் என்கிற ஒரு ஆசையால்தானேயல்லாமல் வேறல்ல. அப்படி மாறும் பக்ஷத் தில் இப்போதுள்ள சுயநலத்தலைவர்கள் மறைந்து விடுவார்கள். சிற்சில சமயங்களில் மகாத்மா பேசுவதைப் பார்த்தால் ஒரு சமயம் மறுபடியும் அந்த நிலைமைக்குப் பாடுபடலாம் என்கிற நம்பிக்கை கொஞ்சங் கொஞ்சம் இருந்து வருகிறது.

அந்த நம்பிக்கை ஒழிந்துவிட்டால் காங்கிரஸில் நான் இருக்க மாட்டேன். ஆதலால் பிராமணரல்லாதார் வகுப்பு நன்மையைப் பற்றி பேசுவதும் காங்கிரசின் குற்றங்களை எடுத்துச் சொல்லுவதும் காங்கிரசிலிருப்பதற்கு யோக்கியதை குறைவாகமாட்டாது.

கூக்குரல் போடுவது யாருக்கு ஆபத்து ?

தவிர ஸ்ரீமான் ஆரியா பேசும்போது சில பிராமணர்கள் சொந்த விஷயங்களைப் பற்றி பேசக்கூடாது என்று கூச்சல் போட்டார்கள். அது ஒப்பத்தக்கதல்ல. பேசுவதைக் கேட்க வேண்டும்; பேசுவதில் குற்றமிருந்தால் அதற்கு சமாதானம் கேட்கலாம்; அப்படிக்கில்லாமல் கூச்சல்போட்டு கூட்டத் தைக் கலைக்கலாம் என்று எண்ணுவது பயித்தியக்காரத்தனமாகவே முடியும். நான்கு நாளைக்கு முன் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரும் அவரது கோஷ்டியும் இதே இடத்தில் அளந்து கொட்டின வசையும், திட்டும் கணக்கா? வழக்கா? பிராமணரல்லாதார்கள் பொறுமையுடன் அவ்வளவையும் சகித்துக் கொண்டிருக்கவில்லையா? அவர்களுக்கு இந்த சில பிராமணர்களைப் போல் கூச்சல் போடத் தெரியாமல் போய்விட்டது என்று நினைக்கிறீர்களா? எப்பொழுதும் பிரசங்க கூட்டத்தில் கூச்சல் போடுவது கெட்ட வழக்கம். நான் அடிக்கடி இதை கண்டித்தே வருகிறேன். இந்த வழக்கம் மிஞ்சி விட்டால் யாருக்கு ஆபத்து என்பதை நினைத்துப் பாருங்கள்.

ஐயங்காருக்கும் எனக்கும் வித்தியாசம்

நான் எவரைப் பற்றியும் குற்றஞ்சொல்ல வேண்டுமென்கிற ஆசையுடையவனல்ல. நேற்று இங்கு வந்த ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரும் என்னைப் போல் சமூக ஊழியர்தான். எனக்கு அவரிடத்தில் வெறுப்பில்லை. நான் ஏதாவது என் சொந்தத்திற்கு உயில் எழுதுவதாயிருந்தால் அவரைத்தான் யோசனை கேட்பேன் . அவரும் என்னைப் பற்றி தனியாய்ப் பேசினபோது தனது நண்பர்களிடம் என்னை மிகவும் நம்புவதாகவும், என்னிடம் சூது வாது இல்லையென்றும் பேசியிருக்கிறார். நான் எப்படி பிராமணரல்லாதார் சமூகம் முன்னேற்றமடைய வேண்டுமென்று பாடுபடுகிறேனோ, அதுபோலவே அவர் பிராமண சமூகம் முன்னேற வேண்டுமென்று பாடுபடுகிறார் . ஆகவே இரண்டு பேருடைய நோக்கத்திலும் உழைப்பிலும் வித்தியாசமில்லை. ஆனால் நான் உண்மையைச் சொல்லிக்கொண்டு எனது சமூகத்திற்குப் பாடு படுகிறேன். அவர் பொய்யைச் சொல்லிக்கொண்டு அவருடைய சமூகத்திற்குப் பாடுபடுகிறார். அதாவது, நான் பிராமணரல்லாதார் பெயரைச் சொல்லுகிறேன்; அவர் காங்கிரஸ், சுயராஜ்யக் கக்ஷி, மகாத்மா, ஜெயிலுக்குப் போன தேசபக்தர்கள் என்கிற பெயரைச் சொல்லிக்கொண்டு பிராமணருக்குப் பாடுபடுகிறார்.

கொஞ்ச நாளைக்கு முன் சென்னைக்கு முனிசிபல் தேர்தலின் போது ஓட்டர்கள் விருப்பத்தின் பேரில் போயிருந்தேன். அங்கு நான் பேசிய இரண்டொரு கூட்டத்தில் “தேர்தலில் ஒரு பிரயோஜனமும் இல்லை அதனால் ஒரு பலனும் செய்ய முடியாது. அது ஒரு பதவி. அதில் உங்களுக்கு மோகமிருந்தால் பிராமணரல்லாதாருக்குக் கொடுங்கள்” என்று தைரியமாய்ச் சொல்லி வந்தேன்.

ஆனால் ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் அப்படிச் செய்யவில்லை. ஒரு பிராமணரை நிறுத்தி, மறைமுகமாய் காங்கிரஸ், சுயராஜ்யக் கக்ஷி பெயரைச் சொல்லிக்கொண்டு முனிசிபாலிடியில் ஏழைகளுக்கு அப்படிச் செய்கிறோம்; இப்படிச் செய்கிறோம்; வரியைக் குறைக்கிறோம் என்று பொய் சொன்னதல் லாமல்; மகாத்மா ஜெயிலுக்குப் போனார், வரதராஜுலு நாயுடு இரண்டு முறை ஜெயிலுக்குப் போனார், இராமசாமி நாயக்கர் மூன்று முறை ஜெயிலுக்குப் போனார், ஆனதினால் ஸ்ரீமான் இ.எல். ஐயருக்கு ஓட்டுப் போடுங்கள் என்று விளம்பரம் போட்டு ஓட்டு வாங்கினார். அவர்கள் ஜெயிலுக்குப் போனதன் பலனை இவர்கள் அடைய என்ன வார்சு பாத்தியம்? இதுதான் எனக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம்.

சமூகம் அழிவதை பார்த்துக் கொண்டிருப்பதா?

அவரவர்கள் சமூகத்திற்கு அவரவர்கள் பாடுபடுவதை நான் ஆnக்ஷ பிக்கவில்லை. ஆனால் பொதுஜனங்களை - பாமர மக்களை ஏமாற்றிக் கொண்டும், சுயராஜ்யம், உரிமை என்று சொல்லிக் கொண்டும், பிராமணரல்லாத பிரமுகர்களை சர்க்கார் உத்தியோகம் பெறுகிறவர்கள் - தேசத் துரோகிகள் என்று திட்டிக்கொண்டு வைவதற்காக பிராமணரல்லாதாரிலேயே வேறு வழியில் பிழைக்க முடியாத சில ஆளுகளுக்குப் பணம்கொடுத்து உத்தியோக ஆசை பிடித்த சில ஆள்களை ஆசை வார்த்தைச் சொல்லி தங்கள் வசப்படுத்திக் கொண்டு ஜஸ்டிஸ் கக்ஷி என்கிற பெயரால் பிராமணரல்லாத சமூகத்தையே அடிமையாக்க- தீண்டாதவர்களாக்கப் பார்த்தால் அதை எப்படி சகிக்க முடியும்? எந்த சமூகத்திலும் இப்படிப்பட்ட சுயநலக்கார ஆள்கள் இரண்டொருவர் இருக்கத்தான் செய்வார்கள். அப்படிப்பட்ட ஆள்களை இவர்கள் உபயோகித்துக் கொண்டு ஒரு பெரிய சமூகத்தையே அழிக்கப் பார்க்கிறார்கள்.

காங்கிரஸ் பெயரால் உத்தியோகம்

பிராமணர்களுக்கோ அல்லது அவர்கள் கட்சியான காங்கிரஸ், சுய ராஜ்யக் கட்சிக்கோ, எதற்கு உத்தியோக ஆசையில்லை? பிராமண ஐகோர்ட் ஜட்ஜுகள் எல்லாம் காங்கிரசின் பெயரால் உத்தியோகம் சம்பாதித்தவர்கள் தான். நிர்வாகசபை மெம்பர்கள் ஸ்ரீமான்கள் கிருஷ்ணசாமி ஐயர், சர். சி.பி. ராமசாமி அய்யர் ஆகியவர்கள் காங்கிரஸின் பெயரால் உத்தியோகம் சம்பா தித்தவர்களேயாகும். பிராமணரல்லாதார் கட்சியாரை மாத்திரம் உத்தியோக வேட்டைக்காரர்கள் என்பதற்குப் பொருளென்ன? ஜஸ்டிஸ் கக்ஷிக்காரர்கள் உத்தியோகம் சம்பாதித்துக் கொண்டார்கள் என்று பொறாமைப் பிரசாரம் செய்வதில் ஏதாவது அவர்களுக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கிறதா?

கண்ணியமாய் சட்டசபை சென்ற ஜஸ்டிஸ் கக்ஷி

ஜஸ்டிஸ் கட்சிக்காரர் சுயராஜ்யக் கட்சியாரைப் போல் ஏதாவது பொய் சொல்லி ஓட்டர்களை ஏமாற்றி சட்டசபைக்குப் போனார்களா? ஒருக்காலும் இல்லை. ஜஸ்டிஸ் கட்சியார் கண்ணியமாய் ஓட்டர்களிடம் சென்று “நாங்கள் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் அல்ல; காங்கிரஸ் பிராமணர்களின் நன்மையின் பொருட்டு ஏற்படுத்தப்பட்டது; நாங்கள் பிராமணரல்லாதார் நன்மையின் பொருட்டு பாடுபடுகிறோம்; நாங்கள் பொய்யான ஒத்துழையாமைக்காரரல்ல; சீர்திருத்தத்தை ஏற்று சட்டசபைக்குச் சென்று சர்க்காரோடு ஒத்துழைத்து சர்க்கார் உத்தியோகங்களை ஏற்று, பிராமணரல்லாதாருக்கும் தேசத்துக்கும் எங்களால் கூடியதைச் செய்வோம்” என்று சொல்லி சட்டசபைக்குள் நுழைந்தார்கள். ஓட்டர்களும் அதை ஏற்றுக்கொண்டு அவர்களையே அனுப்பினார்கள். அப்படி இருக்க அவர்கள் உத்தியோகம் சம்பாதித்துக் கொண்டார் கள் என்று சொல்லிப் பொறாமைப்படுவதில் என்ன பிரயோஜனம். சுயராஜ்யக் கட்சியார் பிரயாணப் படி கூட வாங்குவதில்லை என்று சொல்லி சட்டசபைக்குப் போய் தினக்கூலி பெறக்கூடிய கமிட்டி பதவியும், மாதச் சம்பளம் பெறக் கூடிய உத்தியோகமும் பிரயாணப் படியும் பெற்று, சர்க்காருக்கும் அநுகூலமா யிருந்து சர்க்கார் எதிர்பார்த்ததற்கு மேல் ஒத்துழைப்பதைப் பற்றி கொஞ்சமும் வெட்கப்படாமல் மேடைக்கு வந்து பொது ஜனங்களை ஏமாற்றுவது எவ்வளவு பெரிய பித்தலாட்டமான காரியம்?

அதிகச் சம்பளம் சுயராஜ்யக் கட்சி உபதலைவர் ஸ்ரீமான் பட்டேல் மாதம் 4000 ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இது யாருடைய பணம்? இது பொது ஜனங்களின் பணமல்லவா? காங்கிரசையும் ஒத்துழையாமையையும் சுயராஜ்யக் கட்சியை யும் சேர்ந்த ‘தேசபக்தர்’ பட்டேலுக்கு மாதம் 4000 ரூபாய் எதற்காக வேண்டும்? அவர் உடுத்திக் கொள்ள 6 முழக் கதர் போதும், குடியிருக்க ஒரு குச்சு வீடு போதும். இப்படிப்பட்ட தேசத் தொண்டருக்கு மாதம் ரூ. 11-4-0 இருந்தால் போதும். இவருக்கு மாதம் 4000 ரூபாய் எதற்கு? இது உத்தியோகம் பெறுவதில்லை என்று போனவர் பெறும் சம்பளம். இவருக்கே மாதம் 4000 ரூபாய் வேண்டியதிருந்தால் உத்தியோகம் பெறப் போனவர், பெரிய ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாதம் 4000 ரூபாய் என்றால் எது அதிகம்? யாருக்கு உத்தியோக ஆசை? இதில் யார் யோக்கியர்கள்? என்பதை நீங்களே யோசியுங்கள்.

சம்பளம் குறைத்துக் கொண்டது யார்?

அல்லாமலும் நமது பிராமணரல்லாத மந்திரிகள் “பணத்தாசை பிடித்தவர்கள்” என்று சொல்லுபவர்கள், தாங்களாகவே மாதம் 5000 ரூபாய் சம்பளத்தை 4000 மாக ஆக்கிக் கொண்டார்கள். வருஷம் ஒன்றுக்கு ஒரு லக்ஷத்துப் பதினெட்டாயிரம் ரூபாய் வேண்டாமென்று சொல்லி விட்டார்கள். 6 வருஷத்திற்கு 7 லட்ச ரூபாய் அவர்களுக்கு வருவதை வேண்டாமென்று சொல்லி விட்டார்கள். காங்கிரஸ் காரியதரிசியாயிருந்தும் தேசத்தாருக்குப் பாடுபடுவதாய்ச் சொல்லியும், நமது ஓட்டுப் பெற்று சட்டசபைக்குப் போய் உத்தியோகம் பெற்ற பிராமணர் சர்.சி.பி.ராமசாமி அய்யர் எவ்வளவு ரூபாய் சம்பளத்தில் குறைத்துக்கொண்டார்? பொதுஜனங்களுக்கு - ஏழைகளுக்கு உழைப்பவர்கள் என்றும், தேச விடுதலைக்காக உழைப்பவர்கள் என்றும், பிரயாணப் படி வாங்குவதில்லை என்றும் சட்டசபைக்குப் போன ஸ்ரீமான் எ.ரெங்கசாமி அய்யங்கார், எம்.கே. ஆச்சாரியார் இவர்கள் எவ்வளவு படிப் பணமும் கமிட்டிப் பணமும் குறைத்துக் கொண்டார்கள்? பாமர ஜனங்கள் பயித்தியக்காரராய் இருப்பதால் இவர்கள் பிராமணரல்லாதாரை கங்கணம் கட்டிக் கொண்டு ஊர் ஊராய்த் திரிகிறார்கள்.

இவர்கள் யார்?

அல்லாமலும், ஜஸ்டிஸ் கட்சியார், தங்கள் இனத்தார்களுக்கு உத்தி யோகம் கொடுப்பதாகவும் நாமிநேஷன் செய்வதாகவும் மந்திரிகள் பேரில் குற்றம் சுமத்துகிறார்கள். மந்திரிகள் பிராமணர்களுக்குக் கொடுக்கும் உத்தி யோகத்தை இவர்கள் வெளியில் சொல்லுகிறார்களா? ஸ்ரீமான்கள் தணிகா சலம் செட்டியாருக்கும், சி.எஸ்.இரத்தினசபாபதி முதலியாருக்கும் நாமி நேஷன் செய்தால் அதிகாரத் துஷ்பிரயோகம் என்கிறார்கள். ஸ்ரீமான்கள் சி.வி. வெங்கிட்டரமணய்யங்காருக்கு கோயமுத்தூர் ஜில்லா போர்டு மெம்ப ரும், டி.எம். நரசிம்மாச்சாரியாருக்கு கடப்பை ஜில்லா போர்டு பிரசிடெண்ட் டும், சர்.டி.தேசிகாச்சாரியாருக்கு திருச்சி ஜில்லா போர்டு பிரசிடெண்டுமான பதவிகளுக்கு நாமிநேஷன் செய்தார்களே இவர்களெல்லாம் பிராமண ரல்லாதார்களா? அல்லது பிராமணரல்லாதார் கக்ஷியைச் சேர்ந்தவர்களா? இந்த பிராமணர்கள் மந்திரிகளிடம் உத்தியோகம் பெற்றுக் கொண்டதைப் பற்றி எந்த பிராமணர்களாவது, பிராமணப் பத்திரிகைகளாவது ஏதாவது ஒரு வார்த்தை சொல்லுகின்றதா?

எலெக்ஷன் நாணயம்

தவிர, இந்தக் காலத்து எலெக்ஷன்களாவது யோக்கியமாய் நடக்கின்றதா? எலெக்ஷன்களுக்கு நிற்கிற ஆள்கள் ஓட்டர்களுக்குப் பணங் கொடுத்துப் பழக்கி அவர்களின் நாணயத்தைக் கெடுத்து விட்டதால் யோக்கியர்கள் எலெக்ஷனில் வர யோக்கியமில்லாமல் போய்விட்டது. அப்படியில்லையானால் ஒவ்வொருவருக்கும் இருபது, முப்பதாயிரம் ரூபாய் செலவாகக் காரணமென்ன? அல்லாமலும் சட்டசபையில் நடக்கும் காரியந் தான் என்ன? எப்படியிருக்கிறது? எப்படியாவது பிராமணரல்லாதார் கெட்டவர்கள்-புத்தியில்லாதவர்கள் என்கிற பெயரை தேசத்தில் பரப்பி, பாமர ஜனங்களை வஞ்சிக்க வேண்டும்; பிராமணரல்லாத உத்தியோகஸ்தர் களையும் கெடுக்க வேண்டும். இதுதான் சுயராஜ்யக் கட்சி என்கிற பிராமணர் களின் கட்சிக்கொள்கை.

திரு. இராமசாமி முதலியார் இல்லாவிட்டால்

உதாரணமாக, ஒரு சமயம் சட்டசபையில் ஸ்ரீமான் எ.இராமசாமி முதலியார் இல்லாத சமயம் பார்த்து “சுத்தவீரரான”! ஸ்ரீமான் சத்தியமூர்த்தி “வட ஆர்க்காடு ஜில்லாவிலுள்ள ஒரு பிராமணரல்லாத உத்தியோகஸ்தர் எலெக்ஷனில் பிராமணரல்லாதாருக்காகப் பிரயத்தனப்படுகிறார். அவரைப் பற்றி விசாரித்து அவரைத் தூக்கில் போட வேண்டும். இது மகா முக்கியமான காரியம். ஆதலால் சட்ட சபையின் மற்ற காரியங்களை கட்டி வைத்துவிட்டு இதைக் கவனிக்க வேண்டும்” என்று ஒரு பெரிய தீர்மானம் கொண்டு வந்தார். தட்டிப் பேச அதுசமயம் அங்கு ஆளில்லை. பிரசிடெண்ட் இந்த தீர்மானம் ஒழுங்கானதா என்று கேட்டார். இருபதாவது நூற்றாண்டின் ‘மனு’ வான சர்.சி.பி. ராமசாமி ஐயர், “ஆஹா! மிகவும் ஒழுங்கானது” என்று சொல்லி விட்டார். சரியென்று சத்தியமூர்த்தி ஐயர் வாதம் தொடங்கிவிட்டார். பிராமண ரல்லாத உத்தியோகஸ்தருக்கு சுருக்கு மாட்டியாய் விட்டது; இழுப்பதுதான் தாமதம்.

இந்த சமயத்தில் ஸ்ரீமான் எ. இராமசாமி முதலியார் சட்டசபைக்குள் நுழைந்தார். என்ன நடக்கிறது என்று பார்த்தார். நடக்கிற விஷயத்தைத் தெரிந்து கொண்டார். உடனே ஸ்ரீமான் முதலியார் எழுந்து, “அது நிரம்பவும் முக்கியமான காரியம். இதைச் செய்து விட்டுத் தான் மற்ற காரியங்களைக் கவனிக்க வேண்டும். நானும் இந்தத் தீர்மானம் கொண்டுவர வேண்டுமென்று தான் இருந்தேன். எனது நண்பர் சத்தியமூர்த்தி கொண்டு வந்ததற்கு வந்தனம் செலுத்துகிறேன். சட்டமெம்பர் இதை அனுமதித்ததற்கும் வந்தனம் செலுத்துகிறேன்” என்று சொல்லிவிட்டு “இன்னும் இரண்டொரு நபர்கள் பெயரையும் அந்த ஜாப்தாவில் சேர்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லி, இரண்டொரு ஐயங்கார் ஜில்லா முனிசீப் பெயர்களையும், ஐயர் சப் ஜட்ஜு பெயர்களையும் சொன்னார். உடனே சட்ட மெம்பருக்கும் ‘வீரருக்கும்’ நாக்கு வறண்டு போய் பேச வாய் வராமல் திக்குமுக்காடி ‘வீரர்’ சத்தியமூர்த்தி ஐயரை ‘மனு’ ராமசாமி ஐயர் பிரேரேபனையை வாபீஸ் வாங்கிக் கொள்ளும் படி பல்லைக் காட்டி கெஞ்ச ஆரம்பித்து விட்டார். வீரரும் பின்வாங்கிக் கொண்டார். மற்ற பொம்மைகளெல்லாம் சிரித்தனர். ஸ்ரீமான் எ. இராமசாமி முதலியார் அன்றையக் கூட்டத்தில் இல்லாதிருந்தால் அந்தப் பிராமணரல்லாதார் ஓலை ‘மனு’ ஐயரால் கிழிக்கப்பட்டே இருக்கும். இதுதான் சட்டசபை வேலை.

மற்றொரு சமயம் அபிஷியல் ரெபரி என்கிற சுமார் மாதம் 1000 ரூபாய் சம்பளமுள்ள ஒரு உத்தியோகம் தற்கால சாந்தியாய் ஆக்கப்படும் போது, சுயராஜ்யக் கட்சி மெம்பர்கள் ஆக்ஷபித்தார்கள். அது சர்க்கார் மெம்பர்கள் தயவில் நிறைவேறி கடைசியாய் ஒரு பிராமணருக்கு அந்த உத்தியோகம் கொடுக்கப்பட்டு மறுபடியும் அது காயமாக்க சட்ட சபைக்கு வரும்போது சுயராஜ்யக் கட்சி மெம்பர்கள் தாராளமாய் நிறைவேறச் செய்தார்கள். ஏன்? அந்த உத்தியோகம் ஒரு பிராமணருக்குக் கிடைத்தது.

சத்தியம் தவறிய திரு. சத்தியமூர்த்தி

மற்றொரு சமயம் ஸ்ரீமான் சத்தியமூர்த்தியும் ஸ்ரீமான் எ.இராமசாமி முதலியாரும் சீமைக்குப் போயிருந்தபோது, ஸ்ரீமான் சத்தியமூர்த்தி, ஸ்ரீமான் இராமசாமி முதலியாரைப் பார்த்து “நம் நாட்டிலுள்ள பிராமணர் -பிராமண ரல்லாதார் விஷயம் வெள்ளைக்காரர்களிடம் பேசக் கூடாது; அதைப்பற்றி நமது நாட்டில் பேசிக் கொள்ளலாம்; இங்கு பேசினால் எதிரிக்கு இளப்பமாய்ப் போய்விடும். நானும் ஜஸ்டிஸ் கக்ஷியைப்பற்றி பேசுவதில்லை” என்று கேட்டுக் கொண்டாராம். ஸ்ரீமான் முதலியார் அதற்கிணங்கி அங்கு இருக்கும் வரை பிராமணரைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லையாம். ஸ்ரீமான் முதலியார் சீமையை விட்டுப் புறப்பட்டு கப்பல் ஏறியவுடன் சத்தியமூர்த்தி ஐயர் தாங்கள் செய்துகொண்ட சத்தியத்தை மீறி மூட்டையை அவிழ்த்து விட்டாராம். இவற்றைப் பத்திரிகைகளில் கூட நீங்கள் பார்த்திருக்கலாம். இம்மாதிரி கூட்டத்துடன் போராடுவதென்றால் லேசான காரியமல்ல. ஆதலால் பிராமணரல்லாதார் இதுசமயம் சுயராஜ்யம், உரிமை, விடுதலை, முட்டுக்கட்டை என்கிற போலி வார்த்தைகளைக் கண்டு ஏமாந்து விடக் கூடாது என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.

சட்டசபையோ, முனிசிபாலிட்டியோ , இவைகளில் ஏதாவது தேசத்திற்கோ, சுயராஜ்யத்திற்கோ, ஏழை மக்களுக்கோ ஒரு பிரயோஜனமும் தராது. அது ஒரு பதவி. அல்லாமலும், தாழ்ந்து கிடக்கும் பிற்போக்கடைந்திருக்கும் வகுப்பார் உயர்ந்த வகுப்பார் என்பவர்கள் காலில் சிக்கி மிதிபடாமல் இருப்பதற்கு ஏதாவது வேண்டுமானால் உபயோகப்படலாம். அம்மாதிரி அதை உபயோகப்படுத்திக் கொள்ள நம்பிக்கையும் ஆசையும் உள்ளவர்கள், அப் பதவிகளை தங்கள் சமூகத்தில் அக்கறை உள்ள சமூகத்தார்களுக்கு கொடுக்க வேண்டுமேயல்லாமல் மற்றபடி சுயராஜ்யம், தேசம், உரிமை என்று எண்ணி ஏமாந்து சமூகக் கவலையில்லாதவர்களுக்கோ பிராமணர்களுக்கோ கொடுக்கக் கூடாது என்பதுதான் நீங்கள் கடைசியாக உணர வேண்டியது.

சமூகமே பெரிது

மௌலானாக்கள் மகமதலி, ஷவுகத்தலி, கிச்சுலு போன்ற வீரர்களின் அபிப்பிராயமென்ன? அவர்களைப் பற்றி பிராமணப் பத்திரிகைகள் பலவாறு தூற்றினாலும் அவர்கள் பேரால் துவேஷம் உண்டாகும்படி எழுதினாலும் அவர்கள் தைரியமாய்ச் சொல்லுவது என்ன? நமது சுயராஜ்யத்தைவிட நமது சமூகத்தின் சுயமரியாதை தான் முக்கியமானது என்கிறார்கள். அதுபோலவே பிராமணரல்லாதாராகிய நமக்கு சுயராஜ்யத்தைவிட நமது சமூகத்தின் சுய மரியாதைதான் முக்கியமானது. உதாரணமாக, சட்டசபையில் கல்பாத்தித் தெருவில் எல்லோரும் நடக்கலாம்; அதாவது பொதுத் தெருவில் மகாராஜா சக்கரவர்த்தியின் பிரஜைகள் எல்லோருக்கும் சம உரிமை உண்டு என்று தீர்மானம் நிறைவேறிற்று. அடுத்த நாள் “வேலை இருந்தால்தான் போகலாம்” என்று பிராமண சட்டமெம்பர் அத் தீர்மானத்திற்கு வியாக்கியானம் எழுதி விட்டார். அந்த ஸ்தானத்தில் ஸ்ரீமான் ஆர். வீரய்யன் இருந்தால் இந்தப்படி வியாக்யானம் செய்திருப்பாரா என்று யோசித்துப் பாருங்கள். நமக்கு சுயராஜ்யம் வந்தாலும் இத்தகைய பிராமண சட்டமெம்பர்கள் இப்படித்தானே வியாக்கியானம் செய்வார்கள். ஆதலால் சுயராஜ்யம் இல்லா விட்டாலும் ஸ்ரீமான் வீரய்யன் போன்றவர்கள் அந்த உத்தியோகத்திற்கு வரும்படியான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இருந்தால் சுயமரியாதை ஏற்படுமா? இல்லையா? சுயமரியாதை ஏற்படாமல், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் நம்பிக்கையும் ஏற்படாமல் நாம் எப்படி சுயராஜ்யத்தைப் பற்றி பேசமுடியும்?

யார் சம்மதிப்பார்கள்?

நம்மிடமே சகல அதிகாரங்களையும் சகல ராஜீயபாரத்தையும் யாரா வது ஒப்புவித்து விடுவதாயிருந்தால் பெற்றுக்கொள்ள நாம் இப்போது தயாராயிருக்கிறோமா என்பதை யோசித்துப் பாருங்கள். உதாரணமாக, இந்த நாட்டிற்கே இப்பொழுது வைஸ்ராயாக இருக்கும் லார்டு இர்வின் துரை பட்டாள முத்திரையையும் , கஜானா சாவியையும் கொண்டுவந்து கொடுத்து நம்மை எடுத்துக் கொள்ளச் சொன்னால், நம்மில் எடுத்துக்கொள்ள யார் சம்மதிப்பார்கள்? முதலாவது பிராமணர்கள் வந்து எடுப்பார்கள். அதை பிராமணரல்லாத ஹிந்துக்கள் -ஆதிதிராவிடர்கள், மகமதியர்கள், கிறிஸ்தவர் கள் முதலான வகுப்பார் சம்மதிப்பார்களா? பிராமணரல்லாத ஹிந்துக்கள் எடுத்துக் கொள்ளுவதாயிருந்தால் பிராமணர்கள் சம்மதிப்பார்களா? பிராமண ரும் பிராமணரல்லாதவர்களுமாகிய ஹிந்துக்கள் ராஜியாய் எடுத்துக் கொள்ளுவதானால் மகமதியர் சம்மதிப்பார்களா? இந்த மூவரும் சம்மதித்து ஒப்புக்கொண்டால் கிறிஸ்தவர்கள் சம்மதிப்பார்களா? இந்த நால்வரும் ராஜியாய் விட்டாலும் தெருவில் நடக்கவும் குடிக்கத் தண்ணீர் மொள்ளவும் கூட பாத்தியமில்லாமல் வைத்திருக்கும் ஆதி திராவிடர் என்கிற கூட்டத்தார் சம்மதிப்பார்களா? ஒவ்வொரு கூட்டத்தாரும் இர்வின் பிரபுவின் காலைப் பிடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர், “ஐயா! இந்தப் பாவிகளிடம் ஒப்புவித்து விட்டுப் போனால் எங்கள் கதி என்னாவது என்றும் ஜாதி வித்தியாசமில்லாத ஜாதியாராகிய உங்கள் ராஜீய பாரத்திலே நாங்கள் ‘மிலேச்சர்’, நாங்கள் ‘தாசி மக்கள்’, நாங்கள் ‘அஞ்ஞானி’,நாங்கள் ‘முரடர்கள்’, நாங்கள் தெருவில் நடக்க - கண்ணில் பார்க்க - கிட்டவர - சுவாமியைக் கும்பிட முடியாத அவ்வளவு தாழ்ந்தவர்களாயிருக்கும் போது, ஜாதித் திமிர், கூட்டத் திமிர், ஒற்றுமைத்திமிர், அரசாங்கச்சலுகைத் திமிர் பிடித்த இவர்களிடத்தில் பட்டாளத்தையும், கஜானாச் சாவியையும் கொடுத்து விட்டுப்போனால் எங்களை நாய் பன்றிகளைவிட கேவலமாய் நடத்துவார்கள். கழுத்தில் கயிறு கட்டி சந்தையில் விற்பார்கள். ஆதலால், ஐயனே! நீங்கள் போய் விடாதீர்கள்” என்று ஒவ்வொருவரும் குறுக்கே படுத்துக் கொள்வார்களா இல்லையா? நீங்களே யோசித்துப் பாருங்கள். உங்களை ஏமாற்ற வாயில் சுயராஜ்யம், உரிமை, ஒற்றுமை என்று பேசுவதில் என்ன பிரயோஜனம்? மகாத்மா இதை அறியாமலா தன்னை ஒரு வைஸிராய் “சுயராஜ்யம் என்றால் என்ன? என்னதான் வேண்டும்?” என்று கேட்ட காலத்தில் “சுயராஜ்யம் அடைய என் ஜனங்கள் இன்னமும் தயாராக வேண்டும். அதற்குத்தான் நான் தயார் செய்து கொண்டு வருகிறேன். அந்தத் தயார்தான் எனது நிர்மாணத் திட்டம்” என்று சொன்னார்.

நிர்மாணத் திட்டம் நிறைவேறாமல் மகாத்மாவினாலேயே பெறுவ தற்குப் பாரமாயிருந்த சுயராஜ்யம், நிர்மாணத் திட்டத்தைப் புதைத்த நமது சீனிவாசய்யங்கார் கோஷ்டிக்கு மிக லேசாய்ப் போய் விட்டதென்றால் அதன் தத்துவத்தை நீங்களே யோசித்துப் பாருங்கள். சுயராஜ்யம் வந்தால் நமது நிலை என்ன? மகமதியர் நிலை என்ன? கிறிஸ்தவர் நிலை என்ன? என்பது தீர்மானமாகிவிட வேண்டும். இல்லாதவரை ஒருவரை ஒருவர் கொன்றுத் தின்பதுதான் நமது நாட்டில் நடைபெறும். உத்தியோகமும், அதிகாரமும், பதவியும் ஒருக்காலமும் சுயராஜ்யமாகாது. சுயமரியாதையுடன் ஒற்றுமை யால் தாங்கள் தங்கள் ஜீவனத்திற்காக தங்கள் தங்கள் மனசாக்ஷியையும் கற்பையும் விற்காமல் ஜீவனம் செய்வதுதான் சுயராஜ்யம்; இதற்கு நிர்மாணத் திட்டந்தான் முக்கியமானது. இவைகள் எல்லாவற்றிலும் கதரும், தீண்டாமை ஒழிப்பதும் மிகவும் முக்கியமானது. ஆதலால் நீங்கள் ஒவ்வொருவரும் கதர் உடுத்துங்கள்; தீண்டாமையை அறவே ஒழியுங்கள்; வகுப்புவாரி உரிமையை நிலைநாட்டி எல்லோருடைய நம்பிக்கையையும் பெறுங்கள். இல்லாதவரை துவேஷம் வளர்ந்து கொண்டுதான் வரும். இப்போது பாமர ஜனங்களை ஏமாற்றி சிலர் பதவிக்கு வந்துவிடுவதால் அதனால் ஏற்படும் பலன் பின்னால் அவர்கள் சந்ததியாருக்கு ஆபத்தாய் முடியும் என்பதை ஞாபகத்தில் வையுங் கள். ஆதலால் எல்லோரும் ஒன்று கூடி ஒரு திட்டம் போட்டு ஒருவருக்கொருவர் நம்பிக்கை உண்டாக்கி பிற்கால வாழ்வை பயமற்றதாக்கிக் கொள்ளுங்கள்.

(கோயமுத்தூர் டவுன்ஹால் மைதானத்தில் தென் இந்திய நலஉரிமைச் சங்கத்தின் சார்பில் 30.05.26 இல் நடத்தப்பட்ட மகாநாட்டில் சொற்பொழிவு. குடி அரசு - சொற்பொழிவு - 13.06.1926)
Pin It