சைமன் கமிஷன் பகிஷ்கார வேலை நிறுத்தத்தைப் பற்றி சென்ற வாரம் எழுதியிருந்தோம். இந்த ஒரு வாரமாய் அதைப் பற்றி தேசீயப் பத்திரிகைகள் என்று சொல்லப்படும் வயிறு வளர்ப்புப் பத்திரிகைகளும், பார்ப்பனப் பத்திரிகைகளும் சற்றும் மானம் ஈனம் என்பது இல்லாமல் சரமாரியாய் பொய்யையும் புளுகுகளையும் மனங் கொண்டவரையில் எழுதி பத்திரிகைகளை நிரப்பி வருகின்றன.
பொய் எழுதுபவைகளுக்கு எவ்வித தண்டனையும் இல்லை என்கிற காரணத்தாலும் பாமர ஜனங்களுக்கு உண்மையை எடுத்துக் கூறும் பத்திரிகைகள் அதிகமாக இல்லாததினாலும் தங்கள் அக்கிரமங்களை சுலபத்தில் யாரும் கண்டு பிடித்துக் கொள்ள முடியாது என்கின்ற எண்ணம் மேலும் மேலும் இவ்விழி தொழிலில் இறங்கி வாழத் தைரியம் கொடுத்து வருகின்றது.
ஆனபோதிலும் சென்னை அரசியல் பத்திரிகைகள் என்பவைகளிலேயே சில தம்மையும் அறியாமல் எழுதிவிட்ட சில குறிப்புகளை மாத்திரம் முதலில் இங்கு குறிப்பிடுகின்றோம். அதாவது, ‘சுதேசமித்திரனின்’ 4ம் தேதி தலையங்கத்தில் குறிப்பிடுவதாவது, “..............இதுவரையில் நமக்கெட்டியிருக்கும் செய்திகளில் சென்னை ஒன்றில்தான் துர் அதிர்ஷ்டவசத்தினால் அர்த்தாலின் மகிமையைக் குறைக்கக்கூடிய சம்பவங்கள் நடந்திருப்பதாகத் தெரிகிறது....... திறந்திருந்த கடைகளில் மறியல் செய்யவும் (அதாவது மூடும்படி. ப-ர் ) ஓடிக் கொண்டிருந்த போக்குவரத்து சாதனங்களைத் தடைப்படுத்தவும் எத்தனித்த பிறகே தொல்லை விளைய ஆரம்பித்தது யார்? காங்கிரஸ் தலைவர்கள் தொண்டர்கள் (ப-ர்)............. “அர்த்தாலின் கவுரவத்திற்கு குறைவு ஏற்பட்டு விட்டது. போலிஸ் கமிஷனரும் அவரது சகாக்களும் சீப் பிரசிடென்சி மேஜிஸ்ட்ரேட்டும் அடக்கத்துடனும் பொறுமையுடனும் நடந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அவர்கள் நிலைமை தவறி இருந்தால் அதிக மரணங்கள் ஏற்பட்டிருக்கும்” (அதாவது இதனால் சர்க்கார் யோக்கியமாகவே நடந்து கொண்டார்கள் என்று விளங்குகின்றது. (ப-ர்) மற்றொரு பார்ப்பன பத்திரிகையாகிய “இந்து” பத்திரிகையும் தலைவர்கள் தோற்றுவிட்டார்கள் என்றும் சரியானபடி ஏற்பாடு செய்ய வில்லையென்றும் தங்கள் யோக்கியத்துக்கு மீறின காரியத்தைச் செய்தார்கள் என்றும் இனி வேலை நிறுத்தம் செய்யக்கூடாது என்றும் பொருள்பட தைரியமாய் எழுதிவிட்டது. (அதாவது சர்க்கார் யோக்கியமாகவே நடந்து கொண்டார்கள் என்று விளங்குகின்றது. ப-ர்) மற்றபடி பொதுவான - பத்திரிகைகளாகிய நவசக்தி 8 தேதி பத்திரிகைகளில் குறிப்பிட்டிருக்கிறதாவது................ “வெள்ளிக்கிழமை காலையில் (அதாவது அர்ட்டால் தினத்தன்று. ப-ர்) வழக்கம் போல் டிராம் வண்டிகள் ஓடின. மற்ற வண்டிகள் அங்கும் இங்கும் ஓடின தொழில் சாலைகளில் வழக்கம் போல வேலை துவங்கப்பட்டது. பல பெரிய வாணிபக் கூடங்கள் (அதாவது வியாபாரக் கடைகள். ப-ர்) திறக்கப்பட்டன................... நீதிமன்றங்களில் வழக்கு வாதம் வழக்கம் போல் நடத்தப்பட்டன பச்சையப்பன் கல்லூரி தவிர மற்ற கல்லூரிகள் எல்லாம் திறக்கப்பட்டன....... அன்று பத்து மணிவரை சென்னையின் காட்சி இதுவாகும்” என்று எழுதியிருக்கின்றது.
மற்றபடி ‘சைபுல் இஸ்லாம்’ ‘தாருல் இஸ்லாம்’ என்கின்ற மகமதிய சமூக பத்திரிகைகள் அர்த்தால் பெரிதும் காலித்தனத்தின் உதவியைக் கொண்டே நடத்த முயற்சிக்கப்பட்டதென்றும் அப்படி இருந்தும் பெரிய தோல்வி அடைந்ததென்றும் காட்டியிருக்கின்றது. இவைகள் தவிர பல முக்கியஸ்தர்களும் காங்கிரசின் நடவடிக்கையை கண்டித்து எழுதி வருகிறார்கள். தவிர கல்கத்தாவில் நடந்த காலித்தனத்திற்கும் அளவில்லை என்பதும் பார்ப்பனப் பத்திரிகைகளிலேயே விளங்குகின்றது. வெளியூர்களில் நடந்ததாகச் சொல்வது அவ்வளவும் 100-க்கு 99 முழுப் பொய்யாகவே இருக்கின்றது.
உதாரணமாக கோயமுத்தூர் டவுனில் வேலை நிறுத்தம் நடந்ததாக சில அரசியல் பிழைப்பு பத்திரிகைகளில் காணப்படுகின்றன. ஆனால் அங்கு ஒரு சின்ன பார்ப்பனக் கடைகூட மூடப்படவில்லை என்றும் ஸ்ரீமான் ரத்ன சபாபதி முதலியாரை வைவதற்காக அன்று மாலையில் மாத்திரம் சில பார்ப்பனக் காலிகள் ஒரு இடத்தில் கூடி வெகு சீக்கிரத்தில் கலைந்து விட்டார்கள் என்றும் சரியான தகவல் கிடைத்திருக்கின்றது. மற்றும் பல இடங்களில் இது போலவே கூட்டங்கூடி கத்தினதல்லாமல் யாரும் லக்ஷியம் செய்யவில்லை என்றும் பல இடங்களில் காங்கிரஸ் என்ற பெயரைக்கூட வாயில் உச்சரிப்பதற்கு மனமில்லாமல் இருந்ததென்றும் சிலவிடங்களில் சில காங்கிரஸ் காலிகளுக்குத் தக்கபடி புத்தி கற்பிக்கப்பட்டதென்றும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. பம்பாயைப் பொறுத்தவரையில் விசேஷ கலவரம் இல்லை. ஆனாலும் பகிஷ்காரத்தைவிட வரவேற்பு ஆடம்பரமே பலமாய் இருந்ததாக பார்ப்பனப் பத்திரிகைகளிலேயே தெரிய வருகின்றது. ஆகவே இவைகளினால் எந்த விதத்தில் வேலை நிறுத்தம் வெற்றி என்று சொல்ல இடமிருக்கின்றதோ தெரியவில்லை. புதியதாக மதம் மாறியவர் களுக்கு மதவேஷம் அதிகம் என்பதுபோல் “தமிழ்நாடு” பத்திரிகையும் அதன் ஆசிரியர் ஸ்ரீவரதராஜுலுவும் மாத்திரம் இவ்வளவையும் லக்ஷியம் செய்யாமல் ஒரே அடியாய் புளுகுவதுடன் உண்மையை மறந்தாப் போல் வெளியிட்ட மித்திரன் மீதும் காய்ந்து விழுகின்றது.
ஸ்ரீ வரதராஜுலுவின் பத்திரிகைப் படிக்கும் அவரது பேச்சுப் படிக்கும் பார்த்தாலே காலிகள் என்பவர்கள் வேலை நிறுத்தத்திற்கு அனுகூலமாய் வேலை செய்தவர்களா பிரதிகூலமாய் வேலை செய்தவர்களா என்பது நன்றாய் விளங்கும். மோட்டார் பஸ்கள் மீதிலும் டிராம் வண்டிகள் மீதும் தெருவில் மோட்டார் வண்டியில் போனவர்கள் மீதும் கோர்ட்டுக்குப் போன வக்கீல்கள் மீதும் திறந்து வைக்கப்பட்டிருந்த கடைக்காரர்கள் மீதும் கல் எறியப்பட்டதாகவும் காரி உமிழ்ந்ததாகவும் வாயில் வந்தபடி இழிமொழிகளால் பேசியதாகவும் ஸ்ரீவரதராஜுலு பத்திரிகை உள்பட எல்லா பத்திரிகையிலும் காணப்படுகின்றது. குறிப்பாய் வேண்டுமானால் ஆரிசன் கம்பெனி கொள்ளையிடப்பட்டதும் சர்க்கார் வக்கீலின் மோட்டார் வண்டி கொளுத்தப்பட்டதுமே போதுமானதாகும். மற்றும் ஐகோர்ட்டில் கலகம் செய்ததும் கோர்ட்டுக்கு போன வக்கீல்களை துன்புறுத்தியதும் இன்னும் மேலான சாட்சியமாகும். இந்த நிலையில் காலிகள் காங்கிரஸ்காரர்களா அல்லது பகிஷ்காரத்திற்கு எதிரிடையானவர்களா என்பதை யோசித்தால் முழுமூடனுக்கும் விளங்காமல் போகாது. தவிர ஸ்ரீவரதராஜுலு மோட்டார் மூலம் வேலை நிறுத்தத்தை நடத்த சென்னை முழுதும் சுற்றினதாகவும் அடிக்கடி தன் வண்டியை பலர் வந்து மறித்ததாகவும் தான் வரதராஜுலு என்று தெரிவித்தவுடன் தன்னை காலிகள் விட்டு விட்டு போய் விட்டதாகவும் தானே பல இடங்களில் எழுதிக் கொண்டிருக்கின்றார். இதனால் ஸ்ரீ வரதராஜுலுக்கு ஒரு மோட்டார் இருப்பதாக பொது ஜனங்களுக்கு தெரியப்படுத்த இடமேற்பட்டாலும் இவரை வழிமறித்த காலிகள் வேலை நிறுத்தத்திற்கு எதிரிடையானவர்களாயிருந்திருந்தால் ஸ்ரீ வரதராஜுலுவை சும்மா விட்டிருப்பார்களா என்பது யாருக்கும் விளங்காமல் போகாது. ஆகவே வரதராஜுலு என்று தெரிந்த உடன் சும்மா விட்டு விட்டார்கள் என்பதாலேயே அக்காலிகள் காங்கிரசைச் சேர்ந்தவர்கள் என்பது விளங்கவில்லையா என்று கேட்கின்றோம்.
எந்த இடத்திலாவது மூடியிருந்த கடைக்காரனையாவது நிறுத்திவிட்ட எந்த வண்டிக்காரனையாவது திறக்கும்படியோ ஓட்டும்படியோ யாராவது தொந்திரவு செய்ததாக ஏற்பட்டால் அது மாத்திரம் வேலை நிறுத்தத்திற்கு விரோதமான கூட்டத்தாரின் செய்கை என்று சொல்லலாம். அப்படிக்கில்லாமல் தங்களை ‘தலைவர்கள்’ ‘தலைவர்கள்’ என்று தாங்களே ஒருவருக்கொருவர் மரியாதை செய்து கொண்டு பட்டம் சூட்டிக் கொண்டு காசு பணத்தை செலவு செய்து காலித்தனத்தை வளர்த்துவிட்டு அவமானமும் தோல்வியும் ஏற்பட்ட பிறகு மேலும் மேலும் அவமானம் அடையத்தக்க மாதிரி முட்டாள்தனமாக ஊர் அறிந்த உண்மையை மறைத்து மறைத்து கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது தலைமைத்தனத்துக்கு அழகா? அல்லது மனுஷத்தனத்திற்கு அழகா என்று கேட்கின்றோம். யோக்கியமானவர்களாயிருந்தால் ஆண்மையுள்ளவர்களாயிருந்தால் கடுகளவாவது சுயமரியாதையில் கவலை உடையவர்களாயிருந்தால் உண்மையை ஒப்புக் கொண்டு தவறிப் போனதற்கு உண்மையான காரணத்தைக் காட்டி விட்டு மேலால் நடக்க வேண்டியதற்கு முயற்சி செய்ய வேண்டும். அப்படிக்கில்லாமல் நடந்த தப்பிதங்களை மறைத்து விட்டு மேலால் நடக்க வேண்டிய காரியங்களையும் பயந்து கொண்டு நழுவ விட்டுவிட்டு ‘அது அவன் தப்பு இது இவன் தப்பு’ என்று ஜவாப் தாரித்தனத்தை எதிரிகளின் மீது போடுவது பேடித்தனமும் கடைந்தெடுத்த மானங்கெட்டதனமும் ஆகுமா அல்லவா? என்று கேட்கின்றோம்.
காங்கிரஸ்காரர்களோ வேலை நிறுத்தம் ஆரம்பித்த வீரப்புலிகளோ ஆண்பிள்ளைகளாய் இருந்தால் “போலீசார் வேலை நிறுத்தத்தை ஒழுங்காய் நடத்திக் கொடுக்கவில்லை” என்று சொல்வதற்கு கொஞ்சமாவது வெட்கப்பட்டிருக்கமாட்டார்களா என்று கேட்கின்றோம். “போலீசார் யோக்கியமாய் பொறுமையாய் புத்திசாலித்தனமாய் நடந்து கொண்டார்கள்” என்று சொல்லிவிட்டு மறுபடியும் போலீசார் தக்க பந்தோபஸ்து எடுத்துக் கொள்ள வில்லை என்று சொல்லுவது அறிவுடைமையாகுமா என்று யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது. தவிர ‘17-தேதி வேலைநிறுத்தத்திற்காக ஊர்வலத்தையும் மீட்டிங்குகளையும் விளம்பரங்களையும் நாங்களாகவே நிறுத்தி விட்டோம் என்று ஸ்ரீவரதராஜுலு சொல்லுகிறார், எழுதுகிறார். ஏன் நிறுத்திவிட்டார் என்று கேட்கின்றோம். ஒன்றா சர்க்கார் 144 போடப் போகும் விஷயம் தெரிந்து பயந்து கொண்டு பயங்காளித்தனமாய் நிறுத்தி இருக்க வேண்டும் அல்லது இவைகளால் தான் கலவரங்கள் ஏற்பட்டது என்று முடிவு செய்து நிறுத்தி இருக்க வேண்டும். அல்லது வெளியில் தலைகாட்டுவதற்கும் மீட்டிங்கு போடுவதற்கும் தங்களுக்கு யோக்கியதையும் செல்வாக்கும் அற்றுப் போய் விட்டது என்பதை நன்றாய் அறிந்து நிறுத்தி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வேறு காரணம் என்னவாயிருக்கக்கூடும்? என்று கேட்கின்றோம்.
ஒரு சமயம் ஜனங்களுக்கு போதுமான உணர்ச்சி வந்துவிட்டது. யாருடைய முயற்சியும் இல்லாமல் தாமாகவே கடை மூடிவிடுவார்கள் என்கின்ற நம்பிக்கை இருக்குமானால் “கடை அடைத்தவர்கள் மீதும், அடைக்கும்படி கட்டாயப்படுத்துகிறவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்படும்” என்று சென்னையில் தண்டூரா அடித்ததை பார்த்துக் கொண்டும் 144 உத்திரவு போட்டதை வாங்கிக் கொண்டும் ஜனங்களுக்கு தைரியம் சொல்லாமலும் உத்திரவுக்கு பயப்படாமலும் வெளியில் வந்து வேலை செய்யாமல் “நாங்கள் 144-க்கு விரோதமாய் யாதொரு வேலையும் செய்வதில்லை என்று முன்னமேயே தீர்மானித்து விட்டோம்” என்று சொல்லுவதில் எவ்வளவு நாணயப் பொறுப்பும் ஆண்மையும் இருக்கின்றது என்பதைப் பாருங்கள். இது எது போல் இருக்கின்றதென்றால் ஒரு திருடன் தென்னை மரத்தில் தேங்காய் திருட ஏறியபோது, மரக்காரன் பார்த்துக் கொண்டதை உணர்ந்து திருடன் கீழே இறங்கி வரும்போது, மரக்காரன் திருடனைப் பார்த்து எதற்காக மரத்தின் மீது ஏறினாய் என்று கேட்டதற்கு திருடன் கன்றுகுட்டிக்குப் புல்லுப் பிடுங்க ஏறியதாய்ச் சொல்ல மரக்காரன் தென்னை மரத்தில் புல் ஏதென்று கேட்க, திருடன் அதனால்தான் பார்த்து விட்டு சும்மா இறங்கி வந்துவிட்டேன் என்று சொல்லி தப்பித்துக் கொள்ள முயற்சித்தது போல் இருக்கின்றது.
எப்படி இருந்தாலும் சைமன் கமிஷன் பகிஷ்காரமும் வேலை நிறுத்தமும் பார்ப்பனர்களின் சூழ்ச்சி என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள் என்பது மாத்திரம் இந்த வேலை நிறுத்தத்தினால் வெளியாய் விட்டதற்கு நாம் மிகுதியும் சந்தோஷமடைகின்றோம். அதாவது (1) ஸ்ரீமான். சத்தியமூர்த்தியே இந்த விஷயமறிந்து அன்று பார்ப்பனர்கள் யாரும் வெளியில் போகக் கூடாது என்று உத்திரவு போட்டு விட்டு தான் மாத்திரம் செக்ரிடரியேட் ஆபிசீல் போய் ஒளிந்து கொண்டதும் (2) போலீஸ் உதவி கமிஷனராகிய ஒரு பார்ப்பனருடன் ஸ்ரீ சத்தியமூர்த்தி கலந்து பேசியதில் அவர் தன்னை வெளி யில் வரவேண்டியதில்லை என்று சொன்னதாக ஸ்ரீ சத்தியமூர்த்தி தன்னுடைய சமாதானத்தில் குறித்திருப்பதும் (3) இதற்கு விரோதமாய் ஸ்ரீ வரதராஜுலு தான் பார்ப்பனரல்லாதார் என்கின்ற காரணத்தால் வெளியில் தாராளமாய் உலவினதும் (4) தன்னை வழிமறித்தவர்களிடம் தான் வரதராஜுலு என்று சொல்லி தப்பித்துக் கொண்டதாக எழுதியிருப்பதும், (5) காங்கிரஸ் காலிகளே கோர்ட்டுக்குப் போய் பார்ப்பன வக்கீல்களைப் பார்த்து ‘பார்ப்பனரல்லாதார் களாகிய எங்களை மாத்திரம் வேலை நிறுத்தம் செய் யும்படி சொல்லி விட்டு பார்ப்பனர்கள் நீங்கள் மாத்திரம் கோர்ட்டுக்கு போக லாமா’ என்று கேட்டதாக பார்ப்பனப் பத்திரிகைகளில் காண்பதும் (6) சிற்சில இடங்களில் அதாவது திருவல்லிக்கேணி இரும்ப வாராவதி முதலிய இடங்களில் மீசை இல்லாதவர் களையும் பூணூல் போட்டவர்களையும் மறித்து உபத்திரவம் செய்ததாக பார்ப்பனப் பத்திரிகைகளிலேயே காண்பதாலும் (7) பார்ப்பன அட்வகேட் ஜனராலாகிய ஸ்ரீ டி.ஆர்.வெங்கிட்டராமய்யர் போன்றார்கள் ஸ்ரீ சத்திய மூர்த்தியின் அட்டகாசத்தில்தான் இம்மாதிரி கலகங்கள் நடந்தது என்று வருத்தப்பட்டுக் கொண்டதும் அவரும் தாக்கப்பட்டதாய் சொல்லப்படுவதும், மற்றும் பல காரியங்களும் வெளிப்பட்டு விட்டது. நிற்க (8) சர்.சி. பி. ராமசாமி ஐயரின் குமாரர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் அதிக முயற்சி எடுத்துக் கொண்டதும் (9) கதர் வேலையைத் தவிர வேறு வேலை பார்ப்பதில்லை என்று சொல்லி வடக்கத்திய பிரபுக்களிடம் லக்ஷக்கணக்காய் பணம் வாங்கி வந்து வைத்துக் கொண்டு ஆசிரமம் என்னும் பேரால் ஆதிக்கம் செலுத்தி வரும் சி.ராஜகோபாலாச்சாரியாரும் பத்திரிகைகளில் வேலை நிறுத்தம் செய்யும்படி கோடுகட்டிய குறள் எழுதிவந்ததும் (10) அவரே கதர் கடைகளை யெல்லாம் 3-ம் தேதி மூடும்படி கடிதம் எழுதச் செய்ததும் ஆகிய இவ்வளவு காரியங்கள் வெளிப்படையாய் நடந்ததோடு (11) பார்ப்பன அதிகாரிகள் அதாவது சட்டமெம்பர் ஐகோர்ட்டு ஜட்ஜி முதலானவர் களின் செல்வாக் குகள் வேலை நிறுத்தத்திற்கு உபயோகப்பட்டது என்று சொல்லத்தக்க பல ரகசிய காரியங்களும் போதுமானதாகும்.
தவிர இவ்வேலை நிறுத்தத்திற்கு விரோதமாய் வேலை செய்தவர்கள் இன்னார் என்று ஒரு வார்த்தையாவது இது வரை எந்த பத்திரிகையும் சொல்லவே இல்லை. கலகங்கள் நடந்ததாகவும் சொல்லத்தக்க ஆதரவுகளும் இல்லை. மாலை 5 மணி வரை வேலை நிறுத்தத்திற்கு அனுகூலமாய் கலவரங்கள் நடந்திருப்பது மாத்திரம் விளங்குகின்றதேயல்லாமல் விரோத மாய் இன்ன காரியம் நடந்தது என்று ஒரு பத்திரிகையும் எழுதவில்லை. ஆனால் மாலையில் கூட்டத்திலும் பார்ப்பனத் தெருக்களிலும் பார்ப்பனரைக் கண்ட விடங்களிலும் கலகமானதாக எல்லாப் பத்திரிகைகளிலும் காணப்படுகின்றது. இது வாஸ்தவமாக இருக்க அநேக காரணங்கள் உண்டு. என்ன வென்றால் பார்ப்பனரல்லாதார்களை மாத்திரம் வேலை நிறுத்தம் செய்யச் செய்து நஷ்டமடையும்படியும் கஷ்டமடையும்படியும் செய்து விட்டு பார்ப்பனர்கள் ஒரு நஷ்டமும் அடையாமல் ஒரு குஞ்சுகூட வெளியில் வராமல் தங்கள் அலுவல்களைச் செய்து கொண்டிருப்பதை பார்த்த வேலை நிறுத்தத்திற்கு அனுகூலமாய் இருந்த பார்ப்பனரல்லாத மக்கள் சாதாரணமாய் பார்ப்பனர்கள் மீது ஆத்திரப்படுவதில் ஆச்சரியமொன்றுமில்லை, அவர் களுக்கு புத்தி கற்பிக்க வேண்டுமென்று நினைப்பதிலும் ஆச்சரியமில்லை. தேசத்தில் தேசீய விஷயத்தில் அஹிம்சையை முக்கியமாக வைத்து ஸ்ரீமான் காந்தி 5, 6 வருஷம் எவ்வளவோ வேலை செய்து வந்தும் ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, குப்புசாமி முதலியார், அண்ணாமலை முதலியார், வரதராஜுலு, ஷாபி மகம்மது, அமீத்கான் இவர்களால் ஹிம்சையே தாண்டவ மாடும் படியான நிலைமை ஏற்பட்டு வருகின்றது. இதற்கு உதாரணமாக ஸ்ரீமான். சத்தியமூர்த்தி அய்யர் போன்றார் ‘கிளப்பி விடத்தான் முடியும். சர்க் காரர்தான் அதை அடக்க வேண்டும்’ என்று பொருள்படச் சொல்லுவது ஒன்றே போதுமானதாகும். நாம் கடைசியாக பார்ப்பனர்களுக்குச் சொல்லுவ தென்னவென்றால் சென்னைக் காலித்தனம் மற்ற இடங்களில் பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் அந்தபடி லக்ஷியம் செய்யாமல் தங்கள் தந்திரங்களினாலும் பணத்திமிரினாலும் பார்ப்பனரல்லாதாரை சரிப்படுத்திக் கொண்டு பார்ப்பனரல்லாதார் மீது ஏவிவிடுவதன் மூலம் தங்கள் காரியங் களைச் செய்து கொள்ளலாம் என்று இன்னும் நினைப்பார்களானால் மாலை 5 மணி வரையில்தான் பார்ப்பன ரல்லாதார் மீது பாய்ந்து சிலருக்கு கெடுதி விளைவிக்கக்கூடுமே யொழிய உண்மை விளங்கியவுடன் இருட்டில் அவர்கள் மீதே திரும்பிப்பாயும் என்கிற எண்ணத்தை இனியாவது கருத்தில் கொண்டு ஜாக்கிரதையாய் இருக்கும்படி எச்சரிக்கை செய்வதோடு, முடத் தெங்குகளை நம்பி மோசம் போய் விடாதீர்கள் என்று சினேக முறையில் தெரிவித்துக் கொள்கிறோம்.
(குடி அரசு - தலையங்கம் - 12.02.1928)