பிரிட்டிஷ் இந்தியாவில் ‘இந்தியா’ கட்டமைக்கப்பட்ட வரலாறு; பிரிட்டிஷ் அரசு மாகாணங்களுக்கு வழங்கிய உரிமைகள்; கொண்டு வரப்பட்ட சீர்திருத் தங்கள்; பா.ஜ.க.வின் முன்னோடியான இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ். பிரிட்டிஷ் ஆட்சியிடம் காட்டிய நெருக்கம் போன்ற வரலாற்றுச் செய்திகளை இதுவரை சுருக்கமாகப் பார்த்தோம். ‘சுதந்திர’ இந்தியா, மாநிலங்களின் உரிமைகளை பறிக்கத் தொடங்கிய வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.

மாநிலங்கள் நிதி திரட்டித் தருபவைகளாகவும், ஒன்றிய ஆட்சியோ மாநில அரசுகள் அதைப் பயன்படுத்த விடாமல் தடுப்பதுமான நிலை நீடித்து. மாநிலங்கள் திரட்டித் தரும் நிதி, ஒன்றிய அரசு வெளிநாடுகளிலிருந்து வாங்கும் கடன் அனைத்தும் ஒன்றிய அரசுக்குப் போகின்றன. அந்த நிதியை திட்டக் குழு, நிதிக் குழு, ஒன்றிய அமைச்சகம் வழியாக மாநில அரசுகளுக்கு வழங்குகிறது. நிதிகளைத் திரட்டித் தரும் மாநில அரசுகள் அதைப் பயன்படுத்தும் அதிகாரங்களற்றவைகளாயின. ஒன்றிய அரசு வசூலிக்கும் வரிகள், கூடுதல் வருவாய் தருவதாகவும், மாநில அரசின் வரிகள் குறைந்த வருவாய் வருவதாக வும் இருந்தன. (இப்போது ஒட்டு மொத்தமாக ஜி.எஸ்.டி. வழியாக மாநிலங்களின் வரி விதிப்பு உரிமைகளையே ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி மாற்றி அமைத்துவிட்டது. இது குறித்து அடுத்த பகுதியில் விளக்குவோம்)

இது மட்டுமின்றி மாநில அரசின் அதிகாரங்களும் பறிக்கப்பட்டன. பிரிட்டிஷ் ஆட்சியில் மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தங்களின்படி மாநில உரிமைகளாக இருந்த அறநிலையங்கள், அறக்கட்டளைகள், சமய கட்டளைகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் சுதந்திரத்துக்குப் பிறகு ஒன்றிய அரசு வசம் போய்விட்டது. தேசிய நெடுஞ் சாலைகள் ஒன்றிய அரசிடம் போய்விட்டன. தேசிய நீர் வழி என்று நாடாளுமன்றம் அறிவிக்கும் நீர் வழிகள் மீதும் அதில் செலுத்தப்படும் கலன்களான படகு, கப்பல்கள் மீதும் மாநில அரசுகளுக்கு அதிகாரமில்லை. இந்திரா பிரதமராக இருந்த போது 1974 ஜூன் 28, இந்தியாவுக்கு சொந்தமான கச்சத் தீவை, மாநில அரசின் கடும் எதிர்ப்புகளை மதிக்காமல் மாநில அரசுகளிடம் கலந்தாலோசிக்காமலேயே இலங்கைக்கு ‘தாரை’ வார்த்தார். இதைக் கண்டித்து 1976 ஆகஸ்டில் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. மாநிலங்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி வந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, மாநில சுயாட்சி பற்றி ஆராய்ந்து அறிக்கை தர நீதிபதி ராஜமன்னார் தலைமை யில் ஒரு குழுவை நியமித்தார்.

மாநில சுயாட்சியை வலியுறுத்தும் அந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக சட்ட மன்றத்தில் 1974 ஏப்.16 அன்று மாநில சுயாட்சி தீர்மானம் தமிழக சட்டசபையில் நிறை வேற்றப்பட்டு நடுவண் ஆட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. “உண்மையான கூட்டாட்சி முறையை உருவாக்கும் அடிப்படையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உடனடி யாகத் திருத்தப்பட வேண்டும்” என்று அத் தீர்மானம் வலியுறுத்தியது. (சட்டசபையில் அ.தி.மு.க. இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வில்லை. குப்பைக் கூடையில் தூக்கி எறிய வேண்டிய அறிக்கை என்று சட்டசபையில் பேசியது மிகப் பெரும் சோகம்)

மாநில சுயாட்சி தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய முதல்வர் கலைஞர் கருணாநிதி, சட்ட மன்றத்தில், மத்திய அரசு மாநில கோரிக்கை களைப் புறக்கணிப்பதைப் பட்டியலிட்டார். 1973-74இல் மால்கோ நிறுவனத்தை தேசிய மயமாக்க வேண்டும் என்ற மாநில அரசின் கோரிக்கை, தொழிலாளிகளுக்கு நிர்வாகத்தில் பொறுப்பு, முதலீட்டில் பங்கு கோரி தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் தராததையும் சோளம், கம்பு போன்ற சிறு தானியங்களை ஒரு மாநிலத்தி லிருந்து வேறு மாநிலத்துக்குக் கொண்டு செல்ல இருந்த தடையை மாநில அரசை கலந்து ஆலோசிக்காமலே நீக்கியதையும், எண்ணெய் டெப்போக்களுக்கு மண்ணெண் ணெய் விநியோகம் செய்யும் மாநில உரிமையை திடீரென்று பறித்ததையும் சுட்டிக் காட்டினார். குறிப்பாக தமிழ்நாட்டு உரிமைகள் பறிக்கப்பட்டதை நீண்ட பட்டியலிடலாம் என்றாலும் அது மிக நீண்ட விரிவாகிவிடும் என்று உதாரணத்துக்கு மட்டும் சிலவற்றை சுட்டிக் காட்டினோம். பொதுவான உரிமை பறிப்புகளை கீழ்க் கண்டவாறு பட்டியலிடுகிறோம்.

• மாநில அரசு சட்டம் இயற்றினாலும் ஆளுநர் கையெழுத்திட்டு ஏற்பு வழங்க வேண்டும்.

• ஆளுநர், மாநில அரசும் இயற்றும் எந்த சட்டத்துக்கும் ஒப்புதல் தராமல் கால வரம்பின்றி கிடப்பில் போட்டு வைக்கலாம்.

• மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி அறிவிக்கப்பட்டு மாநில அதிகாரங்களை நாடாளுமன்றம் எடுத்துக் கொள்ளலாம்.

• வெளிநாடுகளுடன் ஒன்றிய அரசு செய்து கொள்ளும் உடன்பாட்டில் மாநிலம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் உடனே அது ஒன்றிய அரசின் கட்டுப் பாட்டின் கீழ் மாறிவிடுகிறது.

• அரசியல் சட்டம் 249ஆவது பிரிவின்படி நாட்டு நலன் கருதி மாநில உரிமைப் பட்டியலில் உள்ள கூறுகளை ஒன்றிய அரசு அபகரித்துக் கொள்ளலாம்.

• சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று கூறி மாநில அரசைக் கலைத்து ஒன்றிய அரசு கட்டுப்பாட்டின் கீழ் மாநிலங்களைக் கொண்டு வர முடியும்.

• காவல்துறை மாநிலங்களின் உரிமையில் வருகிறது. அதையும் மீறி ஒன்றிய அரசு ‘ஒன்றிய ரிசர்வ் போலீஸ்’ படையை வைத்திருக்கிறது. மாநிலங்கள் அனுமதி பெறமலேயே அப் படையை மாநிலங் களுக்குள் அனுப்பலாம்.

• நாடாளுமன்றம் இயற்றுகிற சட்டங் களுக்கு மாநிலங்கள் கட்டுப்பட வேண்டும். அதற்கான கட்டளைகளை ஒன்றிய அரசு அவ்வப்போது பிறப்பிக்கும் (பிரிவு 256).

• இந்தி ஆட்சி மொழியாவது குறித்து, நாடாளுமன்றத்தின் ஆட்சி மொழிக் குழு அளிக்கும் பரிந்துரைகளை செயல்படுத்த குடியரசுத் தலைவர் கட்டளைகளைப் பிறப்பிக்கலாம் (பிரிவு 344 கீழ்).

• அரசியல் சட்டத்தின் 18ஆவது பிரிவு நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்து அடிப்படை உரிமைகளையே நிறுத்தி வைக்கலாம் என்று கூறியது. இந்திரா பிரதமராக இருந்தபோது நெருக்கடி நிலையை அறிவித்து சர்வாதிகார ஆட்சியை நடத்தினார். தொடர்ந்து வந்த மொரார்ஜி தலைமையிலான ஜனதா கட்சி ஆட்சி, இந்தக் கொடூரமான சட்டப் பிரிவை எதிர்காலத்தில் செயல்படுத்தாமல் முடக்கி, சட்டத் திருத்தம் செய்தது என்பது வரலாறு.

• அந்த நெருக்கடி நிலை காலத்தில் தான் மாநில உரிமைப் பட்டியலில் இருந்த கல்வி, பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, ஒன்றிய அதிகாரக் குவிப்பில் சேர்க்கப் பட்டது. அதன் பாதிப்புகளைத்தான் இப்போது பார்க்கிறோம். மோடி ஆட்சியின் மக்கள் விரோதக் கல்வித் திட்டங்கள் வழியாக தமிழ்நாடு அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

• 356ஆவது சட்டப் பிரிவு தேர்ந்தெடுக் கப்பட்ட மாநில ஆட்சியைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை நடத்த வழி வகுக்கிறது. ஆட்சிக் கவிழ்ப்பு உத்தரவுக்கு ஆளுநர் கையெழுத்திட வேண்டும். அபூர்வமாக சில நேர்மையான ஆளுநர்கள் கையெழுத்திட மறுத்தால் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டு மாநில அரசை முடக்கி விடலாம். அதற்கு ‘otherwise’ என்ற சொல் சட்டத்தில் சேர்க்கப்பட் டிருக்கிறது. தமிழ்நாட்டில் 1991ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய ஆளுநராக இருந்த சுர்ஜித் சிங் பர்னாலா மறுத்தபோது குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்ராமன் கையெழுத் திட்டு தி.மு.க. ஆட்சியைக் கலைத்தார் என்பது வரலாறு.

• அரசியல் நிர்ணய சபையில் மாநில ஆளுநரை மக்களே வாக்களித்துத் தேர்ந்தெடுக்கலாம் என்ற முடிவு தான் அரசியல் நிர்ணய சபையில் மேலோங்கியிருந்தது. பிறகு இப்படி ஒரு நிலை வந்து விட்டால் மாநிலங்கள் தனியே பிரிந்து போய்விடும் ஆபத்துகள் உருவாகலாம். மத்திய அரசின் பிடி தளர்ந்து விடும் என்று நேரு, ராஜேந்திர பிரசாத், டி.டி. கிருஷ்ண மாச்சாரி போன்ற செல்வாக்குள்ள தலைவர்கள் அஞ்சியதால் நியமன முறைக்கு மாற்றி விட்டார்கள்.

• திட்டக் குழு, நிதிக் குழு, வரி வருவாய் போன்றவற்றில் ஏற்கனவே அமுலில் இருந்த சட்டங்கள் மாநிலங்கள் மத்திய அரசிடம் கையேந்தும் நிலையை உருவாக்கி வைத்திருந்தன. இப்போது மோடி ஆட்சியில் நிலைமை இன்னும் மோசமாகி (bad to worse) மாநிலங்களிலும் அடை யாளங்களையே முற்றாக அழிக்கப்படும் ஆபத்துகள் தலைதூக்கி நிற்கின்றன.

(தொடரும்)

- விடுதலை இராசேந்திரன்