அக்கிராசனாதிபதி அவர்களே! கனவான்களே!

நான் எந்தக் கட்சியின் சார்பாகவும் பேச வரவில்லை. தற்காலம் இந்த தேர்தலில் பெருத்த கலவரமாயிருந்து வருகையில் ஓட்டர்களுடைய கடமை என்ன என்பதை எடுத்துக் கூறவே நான் வந்திருக்கிறேன். அக்கிராசனாதிபதி அவர்கள் என்னைப் பற்றியும் என்னுடைய வேலையைப் பற்றியும் கூறினார். எத்தனையோ தேசபக்தர்கள் நாட்டிற்காக தியாகம் செய்த காலையில் நான் அவர்களுக்குத் தொண்டு புரிந்து என்னால் கூடிய அளவு ஊழியம் செய்திருக்கிறேனே ஒழிய வேறில்லை. ஒத்துழையாமைக் காங்கிரசில் கலந்துள்ள நான் இக்கூட்டத்தில் பேசலாமாவென்ற சந்தேகம் சிலருக்கிருக்கலாம். காங்கிரஸ் எப்படியிருந்தது? இப்போது என்ன ஸ்திதிக்கு வந்தது? என்ற விஷயங்கள் தெரிந்து விட்டால் அந்தக் கவலை உங்களுக்கு இருக்காது. அந்த விஷயங்களை எடுத்துக் கூறவே நான் இங்கு வந்துள்ளேனேயொழிய, தனிப்பட்டவர்களைப் பற்றியாவது கட்சியைப் பற்றியாவது பேச நான் வரவில்லை. நாம் தனிப்பட்டவர்களைப் பற்றி பேசினால் கலகம்தான் நடக்கும். சென்ற வருடத்தில் நான் இங்கு வந்திருந்த போது திரு.வாசு நாயுடு டிவிஷனில் பல பிரசங்கம் செய்திருக்கின்றேன். எலக்ஷன் காலத்தில் அங்கு கலகம் நடந்ததும் நாலைந்து வழக்குகள் பிரசிடென்சி மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் இருந்து ஒருவாறாக முடிவடைந்ததும் உங்களுக்குத் தெரியும். அந்த சமயத்தில் ஏதோ ஓட்டர்களை ஏமாற்றி ஓட்டுப் பெற்று சென்றிருந்த போதிலும் அதன் பலன் அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் தெரிந்து விடும்.

periyar with cadres 640இப்போது நடக்கிற தேர்தலில் அனுஷ்டிக்கப்படுகின்ற காரியங்களைப் பார்க்கையில் விரோதமும் குரோதமுமே அதிகரித்து வருகிறதென்று ஒரு பத்திரிகை குறிப்பிட்டிருக்கின்றது. அவ்வாறு விரோத உணர்ச்சி ஏற்படாமல் நாம் நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். இப்போது பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கிற கட்சியின் பெயரை வைத்துக்கொண்டு தேர்தல் சண்டை நடந்து வருகின்றது. நம்மில் சிலரை ஒரு சாரார் தூண்டி விட்டு தூரத்திலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு வருகிறார்கள். ஒரு சாராரின் தூண்டுதலின்படி செய்யும் பார்ப்பனரல்லாதாருக்குக் கூலியோ அல்லது வேறு வித உபசாரமோ கிடைக்கிறது. ஆகவே அவர்கள் நம்மையே திட்டும்படியாக ஏற்பட்டு விடுகிறது. எதிரிகள் கலகப் பிரசாரம் செய்யும்படி சில ஆட்களை ஏவிவிட்டு கலகம் செய்யும்படியும் தூண்டி விடுகிறார்கள்.

சென்ற வருஷத்தில் கலகம் நடந்ததன் பயனாகப் பிராதுகள் கொடுக்கப்பட்டன. சிலர் தண்டிக்கப்பட்டார்கள். ஆனால் அவர்களை அவ்வித காரியங்கள் செய்யும்படி தூண்டி விட்டவர்கள் யார் என்று கண்டுபிடித்து அவர்களை அடக்க நாம் முயற்சி செய்யவில்லை. சென்னை மாகாணம் பூராவும் கட்சி வித்தியாசத்தில் மனக்கசப்பு ஏற்பட்டு வருகிறது. அது பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கிற இரண்டையே பொறுத்திருக்கின்றது. பிராமணர்களுடைய ஆதிக்கத்தைப் போக்க பல ஆயிரம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே பல மகான்கள் பாடுபட்டிருக்கின்றனர். கபிலர், புத்தர் முதலியவர்களெல்லாம் பாடுபட்டனர். புத்தரும், சமணர்களும் அதற்காகவே பாடுபட்டார்கள். இராமாயணம், பாரதம், அரிச்சந்திர புராணம், இரண்ய புராணம் முதலியவைகளெல்லாம் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்டத்தையே விளக்குகின்றன. ஆகவே சர்.தியாகராயரும் டாக்டர் நாயரும் தோற்றுவித்த இந்த இயக்கமானது அநேக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் நாட்டில் இருக்கிற தென்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளல் வேண்டும்.

காங்கிரஸ் என்றால் என்ன?

நாம் எவ்வளவு படித்தவர்களாக இருந்த போதிலும் நமது திரு. தணிகாசலம் செட்டியாரைப் போன்ற திவான் பகதூரும், அதற்கு மேற்பட்ட பட்டதாரிகளாயிருந்தபோதிலும் ஒரு பார்ப்பனர் தர்ப்பப் புல்லை எடுத்துக் கொண்டு வருவாரேயாகில் ‘சாமி’, ‘சாமி’ என்று அவர் காலில் விழக்கூடியவர்களாகவே இருக்கின்றோம். நம் பார்ப்பனரல்லாதார் கட்சி சுயராஜ்யத்தைப் பெறுவதற்காக ஏற்பட்டதேயொழிய உத்தியோகத்துக்காக ஏற்பட்டதல்ல. நாம் தேவடியாள் மகன், அடிமை, சண்டையில் பிடிபட்டவன் என்று பொருள்படக் கூடிய ‘சூத்திரன்’ என்ற பதத்தால் அழைக்கப்படாமல் இருப்பதற்கும் நாம் மனிதர்கள் என்று காண்பிக்கவுமே இவ்வியக்கம் தோன்றியிருக்கிறது. இப்போது நம் எதிரிகள் காங்கிரசின் பெயரால் கூறுவதெல்லாம் சுயநலத்தைக் கருதியேதான். மகாத்மா காந்தி அவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தோற்றுவித்தபோது நானும் ஸ்ரீமான்கள் கலியாணசுந்தர முதலியார், டாக்டர் வரதராஜுலு நாயுடு, எஸ்.இராமநாதன், தண்டபாணி பிள்ளை முதலியவர்களும் அதில் ஈடுபட்டோம். நம்முடைய குறைகளை நிவர்த்தி செய்வதே அந்த இயக்கத்தின் தத்துவமாக இருந்தது. கிராமங்களிலுள்ள ஏழை மக்கள் ஒரு வேளை சாப்பாட்டுக்குக் கூட வகையின்றி கஷ்டப்படுவதைக் கண்ட மகாத்மா கைராட்டையில் நூல் நூற்க வேண்டுமென்று போதனை செய்தார். தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென்ற தத்துவத்தில் மனிதனுக்கு மனிதன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வித்தியாசம் அடிப்பட்டுப் போகின்றது. நாங்கள் இன்னும் ஒத்துழையாமையிலேயே இருக்கின்றோம்.

நம் நாட்டுப் பார்ப்பனர்கள் ஒத்துழையாமை இயக்கம் மனிதனுக்கு மனிதன் சமத்துவத்திற்காகப் போராடுவதை உணர்ந்ததும் அதை நிறுத்தப் பாடுபட்டார்கள். அதற்காக இங்கும் அங்கும் பல ஆட்களைப் பிடித்து சூழ்ச்சியான வேலைகள் செய்து மகாத்மாவை காங்கிரசிலிருந்து பிரிந்து போகும்படி செய்து விட்டனர். காங்கிரசானது மனிதனுக்கு மனிதன் சமம் என்பதையும் தீண்டாமை விலக்கையும் கதர் உற்பத்தி செய்வதையும் முற்றும் விட்டுவிட்டு, இப்போது சட்டசபைக்குச் செல்ல ஆட்களை நிறுத்தி வேலை செய்கின்றது. யார் யார் பார்ப்பனரல்லாதார்களின் நன்மைக்காகப் பாடுபடுகின்றார்களோ அவர்களையெல்லாம் கார்பொரேஷனை விட்டும் சட்டசபையை விட்டும் விரட்டியடித்து விட்டு அந்த ஸ்தானங்களில் பார்ப்பனர்களை நுழைய வைக்கப் பகீரதப் பிரயத்தனம் செய்கின்றனர். அல்லாமலும் காங்கிரஸ்காரர் கார்ப்பொரேஷனுக்குச் சென்றால் வரி குறையுமென்றும் சுயராஜ்யம் வருமென்று சொல்லுகிறார்கள். யாருக்கு வரும் என்று நினைக்கிறீர்கள். பார்ப்பனர்களுக்கே. பார்ப்பனரல்லாதார்களுக்கோ தீங்கே விளையும்.

இப்போதைய காங்கிரஸ் இறப்பதே மேல்

காங்கிரஸ் முன்னிருந்த நிலைமையையும் இப்போதுள்ள நிலைமையையும் நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும். காங்கிரஸ் ஏற்பட்டு 40 வருஷமாகிறது. அதனால் என்ன பலன் கிடைத்தது? அது ஏற்படாததற்கு முன்பு என்ன பலன் கிடைத்தது? காங்கிரஸ் இருப்பதா மடிவதா? என்று இன்று துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டிருக்கிறதாக அறிகிறேன். என்னைக் கேட்டால் தற்போதுள்ள காங்கிரஸ் மடிவதே நன்று என்று சொல்லுவேன். இப்போதுள்ள காங்கிரசைக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும். காங்கிரஸ் ஏற்படாததற்கு முன்பு பிராமணரல்லாதார்கள் செல்வாக்கும் யோக்கியதையும் அடைந்திருந்தார்கள். அன்றியும் சகல உத்தியோகங்களையும் நம்மவர்களே வகித்து ஒற்றுமையாக நடத்தி வைத்திருக்கிறார்கள். நீதி நிர்வாகங்கள் ஒழுங்காக நடந்து வந்தன. முன்பு கேசவலு நாயுடு என்று ஒரு சிரஸ்தார் இருந்தார். கலெக்டர் கூப்பிட்டாலும் கையில் தடியும் வாயில் சுருட்டும் பிடித்துக் கொண்டே போய் என்னவென்று கேட்பார். கலெக்டரும் அவருக்கு மரியாதை கொடுத்து வந்திருக்கின்றார். முனிசீப் ஒருவர் இருந்தார். அவரும் அவ்வித உத்தியோகத்தைத் திறமையாக நடத்தியிருக்கின்றார். திரு.பெத்தண்ணா என்ற ஒரு தாசில்தார் இருந்தார். அவருக்கு இங்கிலீஷில் கையெழுத்துப் போடத்தான் தெரியும். ஆனால், வேலையில் திறமைசாலி. அவரை வேறு இடங்களுக்கு மாற்றினதற்காக பல தடவை இராஜினாமா கொடுத்தார்.

அப்போது உத்தியோகங்களுக்கு கௌரவமும், யோக்கியதையும், மரியாதையும் ஏற்பட்டிருந்தது. காங்கிரசுக்குப் பின் தெருப் பிச்சை எடுக்கிற வகுப்பினர்களெல்லாம் உத்தியோகங்களுக்கு வந்துவிட்டதால் மரியாதையைக் கெடுத்துவிட்டார்கள். இவர்களை வேலையிலிருந்து விலக்கிவிட்டாலோ, அதிகாரிக்கு கும்பிடு போட்டோ அல்லது அந்த அதிகாரிக்கு வேண்டிய சகல சௌகரியங்களையும் செய்து கொடுத்தோ அந்த வேலையை சம்பாதித்துக் கொள்ளுவார்கள். காங்கிரஸ் ஏற்பட்டதன் பயனாக பார்ப்பனரல்லாதார்களுக்குப் பெருத்த கஷ்டமும், நீதி நிர்வாகங்களுக்கு அநீதியும் ஏற்பட்டு விட்டதென்றே சொல்லுகின்றேன். காங்கிரஸ் போர்வையைப் போர்த்திக் கொண்டே நிர்வாக சபை அங்கத்தினர் பதவி முதற்கொண்டு கீழ்த்தர உத்தியோகம் வரையிலும் பார்ப்பனர்களே புகுந்து விட்டார்கள். காங்கிரஸ் ஏற்பட்டு முப்பது முப்பந்தைந்து வருடங்கள் வரையிலும் இவ்விதமாகவே நடந்து வந்திருக்கின்றது.

காங்கிரசின் பெயரைச் சொல்லிக் கொண்டு ஒரு வகுப்பார் எல்லா உத்தியோகங்களையும் அனுபவித்து வருவதைக் கண்ட மகாத்மா காந்தி அவர்கள் எல்லோரையும் சமம் செய்யும் உத்தேசத்தோடு ஒத்துழையாமை ஆரம்பித்து, ஒருவரும் அரசாங்க உத்தியோகங்களுக்குப் போகக்கூடாதென்று உபதேசம் செய்தார். அப்பொழுது இந்தப் பார்ப்பனர்களெல்லாம் ஏன் அரசாங்க உத்தியோகங்களை விட்டு வெளியே வரவில்லை? இப்போது இந்த டிவிஷனுக்கு அபேட்சகராக நிற்கும் திரு.பி.டி. குமாரசாமி செட்டியாருக்கு எதிராக ஒரு பிள்ளையை நிறுத்தி வைத்திருக்கும் சுயராஜ்யக் கட்சியார், ஈ.வெ.இராமசாமி நாயக்கர் ஜெயிலுக்குப் போனார்; டாக்டர் வரதராஜுலு நாயுடு ஜெயிலுக்குப் போனார்; என்.தண்டபாணி பிள்ளை, ஆரியா முதலியோர் ஜெயிலுக்குப் போனார்கள் ஆகவே சுயராஜ்யக் கட்சி அபேட்சகருக்கு ஓட்டுக் கொடுங்கள் என்று கேட்கின்றார்கள். (நகைப்பு)

காங்கிரசின் பெயரைக் கேட்டு நீங்கள் ஏமாந்து போகக்கூடாது. ஓட்டர்கள் தங்களுக்குள்ள பகுத்தறிவைக் கொண்டு சீர் தூக்கிப் பார்த்து எது நியாயமோ அதன்படி தங்கள் வாக்குகளைக் கொடுக்க வேண்டும். கார்ப்பொரேஷனில் யார் கவுன்சிலராகப் போனாலும் வரியைக் குறைக்க முடியாது. நான் முனிசிபல் சேர்மெனாயிருந்து நிருவாகம் உணர்ந்தவனாகையால் இவ்விதமாக உறுதியுடன் கூறுகின்றேன். வீட்டு வரியைக் குறைத்தால் முனிசிபல் நிருவாகம் சரியாக நடைபெறுவதற்காக வேறுவிதமான வரிபோடத்தான் வேண்டும். முனிசிபாலிட்டி நடைபெறுவதற்கு இத்தனை லட்சம் ரூபாய் வேண்டுமென்று ஏற்பட்டுவிட்டது. முனிசிபாலிட்டியின் நிருவாகம் இன்னின்னவாறு நடைபெற வேண்டுமென்று சட்டங்களும், விதிகளும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் தெரிந்தெடுக்கப்பட்டபோதிலும் அங்கு சென்றதும் முனிசிபல் சட்ட திட்டங்களுக்கு அடங்கி நடப்பதாக வாக்குறுதி செய்ய வேண்டியதாகயிருக்கிறது. வாக்குத் தத்தம் செய்து கொடுத்துவிட்டு ஒருவரும் மீறி நடக்க முடியாது. மீறி நடப்பவர்கள் அயோக்கியர்களேயாவார்கள். பத்துப் பதினைந்து வருடங்களாக சென்னைக் குழாய்களில் பூச்சியும் புழுக்களும் வந்து கொண்டிருக்கின்றன. அதை நிவர்த்தி செய்வதாகயிருந்தால் 30 அல்லது 40 இலட்ச ரூபாய் செல்லும். அதற்கு உங்கள் மீதுதான் வரி போட வேண்டி வரும். ஆதலால் இப்போது நீங்கள் போன போதிலும் சரி அல்லது ஒரு பூனைக் குட்டியை கவுன்சிலராக அனுப்பியபோதிலும் ஒரே வேலைதான் செய்யமுடியும். கையெழுத்துப் போடுவதற்கு ஒரு இயந்திரம் இருக்கும் பட்சத்தில் முனிசிபல் நிருவாகம் செவ்வனே நடைபெற்று விடும்.

முனிசிபாலிட்டிக்கு தங்கள் நலனைக் கருதியே செல்லுகிறார்கள்

முனிசிபாலிட்டிக்குச் செல்லுபவர்கள் தங்களுடைய நன்மையைக் கருதியே போகின்றார்கள். முனிசிபாலிட்டியில் பலவித உத்தியோகங்கள் இருக்கின்றன. பார்ப்பனர்களை அங்கு போகும்படி விட்டுவிட்டால் மேல் உத்தியோகம் முதற்கொண்டு பங்கா இழுக்கும் வேலை வரையிலும் பார்ப்பனர்களையே போட்டு விடுவார்கள். பார்ப்பனரல்லாதார்களை அனுப்பினால் உங்களுக்கு நன்மை உண்டு. பார்ப்பனரல்லாதார்களுக்குள்ளே போட்டி ஏற்படுமேயானால் உங்கள் வகுப்பின் நன்மைக்காக யார் பாடுபடுவார் களென்று தெரிகின்றதோ அவர்களையே ஆதரிக்கவேண்டும்.

காங்கிரஸ்காரர்களுக்கு முனிசிபாலிட்டியில் வேலை கிடையாது

காங்கிரஸ்காரர்கள் சர்க்காரோடுதான் முட்டுக்கட்டை போடுவதாகச் சொன்னார்கள். அப்படியிருக்க இவர்கள் முனிசிபாலிட்டியில் எவ்விதமான முட்டுக் கட்டையும் போடமுடியாது. எல்லா விஷயங்களையும் சரிவர நடத்துவதாக வாக்குறுதி செய்து பிறகே ஸ்தானம் ஏற்றுக் கொள்பவரால் அதற்கு மீற முடியாது. அன்றியும் முனிசிபாலிட்டிற்கு வருபவர்கள் சுயராஜ்யத்துக்காக எந்த மனுவும் அரசாங்கத்தாருக்கு அங்கிருந்து போட முடியாது.

சுயராஜ்யக் கட்சியார் மூன்றாவது வருடம் நடைபெற்ற தேர்தலில் பார்ப்பனர்களில் 3 பேரையும் சென்ற வருடம் 5 பேரையும் அபேட்சகராகப் போட்டார்கள். இந்த வருடத்தில் 10 ஸ்தானத்துக்கும் பார்ப்பனர்களைப் போட்டுவிடலாமென்று கருதியிருந்தார்கள். இப்போது அவர்களுடைய நிலைமை ஜனங்களுக்குத் தெரிந்து விட்டது. ஓட்டர்களாகிய நீங்களும் விழித்துக் கொண்டீர்கள். ஸ்ரீமான் வி. சக்கரை செட்டியார் சிறிது காலம் அவர்களுடன் சேர்ந்து கொண்டிருந்தார். அவரது உடம்பில் பார்ப்பனரல்லாதார் இரத்தம் ஓடுகின்றபடியால், ஒவ்வொரு சமயத்திலும் பார்ப்பனரல்லாதார்கள் நன்மைக்காகப் போராடினார். இதைக் கண்ட பார்ப்பனர் இவரைத் தள்ளி விட்டு வேறு ஒருவரை கார்ப்பொரேஷன் பிரசிடெண்டாக்கி விட்டார்கள். திரு. புர்ரா முனிசிபல் கவுன்சிலராக வருவதற்கு திரு. சக்கரை எவ்வளவோ பிரயாசைப்பட்டார். இப்படியிருக்க ஒரு விஷயத்தில் திரு.சக்கரை பேசிக் கொண்டிருக்கையில் அவரை திரு.புர்ரா தன்னுடைய நண்பரல்லவென்று சொன்னார். (வெட்கம்) சுயராஜ்யக் கட்சியார் பார்ப்பனரல்லாதார்களுக்கு என்னென்ன கெடுதல் செய்ய வேண்டுமோ அவ்வளவும் செய்திருக்கின்றனர். திவான் பஹதூர் ஜே.வெங்கட்ட நாராயணா கார்ப்பொரேஷன் கமிஷனராக வந்தது முதல் அவரை ஒழிக்க சுயராஜ்யக் கட்சியார் பாடுபடுவானேன்? அவரிடத்தில் பூநூல் இல்லை. இவர் பார்ப்பனரல்லாத பிள்ளைகளுக்கு வேலை முதலியவை கொடுத்து ஆதரிக்கிறாராம். அதற்காக அவரைத் தள்ளிவிடப் பாடுபடுகின்றார்கள்.

நேற்று முன் தினம் நடைபெற்ற கூட்டத் தில் ஒரு விஷயம் வாதிக்கப்பட்டது. ஒரு உத்தியோகஸ்தரை நாலைந்து வருடங்களுக்கு மேல் ஒரு ஊரில் வைக்கக்கூடாதென்று அடிக்கடி மாற்றுவது அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கிறது. அதுபோலவே சென்னைக் கார்ப்பொரேஷன் சுகாதார உத்தியோகஸ்தரை வேறு உத்தியோகத்துக்கு மாற்றிவிட்டார்கள். அந்த உத்தியோகஸ்தரே 10 வருடம் கார்ப்பொரேஷனில் வேலை பார்த்திருக்கின்றார். அப்படியிருக்க அந்த உத்தியோகஸ்தரே வேண்டுமென்று சுயராஜ்யக் கட்சியார் சொல்லுவதன் காரணம் யாதெனில் அவர் ஒரு பார்ப்பனராகயிருப்பதேயாகும். இதற்காக அவர்கள் அரசாங்கத்தாரை ஏன் கண்டிக்க வேண்டும்?

‘ஜஸ்டிஸ்’, ‘திராவிடன்’ ஆகிய இரு பத்திரிகைகளுக்கும் இந்த வருடத்தில் கார்ப்பொரேஷன் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பாக பல வருடமாக ‘இந்து’, ‘சுதேசமித்திரன்’ பத்திரிகைகளுக்கே விளம்பரம் கொடுக்கப்பட்டு வந்திருக்கின்றது. பார்ப்பனரல்லாதாரால் நடத்தப்படும் பத்திரிகைகளுக்கு இந்த வருடம் விளம்பரம் கொடுப்பதைக் கண்டதும் அப்பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுப்பானேன் என்று கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள் . கார்ப்பொரேஷன் விளம்பரம் கொடுத்து ஆதரித்தால் அப்பத்திரிகைகள் அதிகமாக நாட்டிற்கு உழைக்க முற்பட்டுவிடுமென்றே அவர்கள் விளம்பரம் கொடுக்கக் கூடாதென்கிறார்கள். முனிசிபாலிட்டிக்குக் கட்டப்படும் வரிகளில் 100-க்கு 97 பாகம் பார்ப்பனரல்லாதார்களாகிய நீங்களே கொடுக்கின்றீர்கள். ஆகவே பார்ப்பனரல்லாதார்களாலேயே அதன் நிருவாகம் நடைபெற வேண்டும். இப்போது நடைபெறப் போகும் முனிசிபல் தேர்தலில் காங்கிரஸ் கட்சியார் என்றாவது சுயராஜ்யக் கட்சியார் என்றாவது அவர்கள் சொல்லுவதைக் கேட்டு ஏமாந்து போகக் கூடாது. உண்மையாக உங்களுக்கு உழைப்பவர்களை ஆதரிக்க வேண்டும். இன்னும் இரண்டு மூன்று தடவை நான் பேச எண்ணியிருக்கிறபடியால் அவ்வப்போது மற்றும் சில விஷயங்களை எடுத்துக் கூறுவேன்.

குறிப்பு: 29.07.1926 ஆம் நாள் சென்னை வண்ணாரப்பேட்டையில் அகில இந்திய பார்ப்பனரல்லாதார் காங்கிரஸ் சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சொற்பொழிவு.

குடி அரசு - சொற்பொழிவு - 08.08.1926

Pin It