சென்ற வாரம் தலையங்கத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு விரோதமாய் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி லால்குடியில் செய்த பிரசங்கத்தை 37 பிரிவுகளாய்ப் பிரித்து அவற்றில் 12 பிரிவுகள் வரைக்கும் பதில் எழுதிவிட்டு மீதி 25 பிரிவுகளுக்கும் ‘நவசக்தி’க்கும் இவ்வாரம் பதிலெழுதுவதாயிருந் தோம். அல்லாமலும் ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் கம்பெனியார் கோபிச் செட்டிபாளையத்தில் நடத்திய ஓட்டு வேட்டை நாடகத்தைப் பற்றியும் இவ்வாரம் எழுத நினைத்திருந்தோம். நாம் கொஞ்சமும் எதிர்பாராத விதமாய் ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் அவர்கள் தனது ‘நவசக்தி’ தலையங்கத்தில் “பட்டம் கூடாது” என்கிற தலைப்பில் தனது கையொப்பத் துடன் எழுதியுள்ள விஷயமும், அதை அநுசரித்து ஸ்ரீமான் டாக்டர் வரத ராஜுலு நாயுடு அவர்கள் பத்திரிகையாகிய ‘தமிழ்நாடு’ பத்திரிகையின் தலையங்கத்தில் ‘பட்ட வேட்டை’ என்ற தலைப்பின் கீழ் எழுதியுள்ள விஷயமும் இவ் வாரத்திய முக்கிய சம்பவமாகக் கருதி ‘நவசக்தி’க்கு பதில் எழுத வேண்டிய அவசியமில்லை என்று நினைத்து முன் குறிப்பிட்ட விஷயங்களை ஒத்தி வைத்துவிட்டு இவற்றைப்பற்றி எழுதவேண்டிய அவசரமும் அவசியமும் வந்து விட்டது. ஸ்ரீமான் முதலியார் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக் கூட்டத்திலோ நிர்வாகக் கூட்டத்திலோ அடியிற் கண்ட தீர்மானத்தைக் கொண்டுவர உறுதி கொண்டிருப்பதாய் அவரது பத்திரி கையில் காணக்கிடக்கின்றது.

அதாவது:-

1. காங்கிரஸில் சேரும் ஒவ்வொருவரும் என்றும் எவ்வேளையிலும் கதர் தரித்தே தீர வேண்டும். குறிப்பிட்ட சிலபோழ்து கதர் தரித்தல் என்னும் விதி நீக்கப்படல் வேண்டும்.

2. சட்டசபைத் தலைவர் பதவி வகித்தல், அரசாங்க தொடர்புடைய கூட்டங்களில் கலத்தல், பட்டமேற்றல் இன்னோரன்ன பிற விலக்கப் படல் வேண்டும். இப்பதவிகளேற்றுள்ள அன்பர்கள் உடனே அவைகளில் இருந்து விலகிவிடல் வேண்டும். இன்னோரன்ன பிற என்பது “அரசாங்கத்தார் தயவால் பெறும் நியமனம்” ஆகிய இவைகள்.

3. தேர்தல் காலங்களில் நாட்டுக்குரிய அறநெறியை கடைப்பிடித்து ஒழுகுதல் வேண்டும்.

இவற்றை ஸ்ரீமான் முதலியார் அவர்களால் ஸ்ரீமான் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் அக்கிராசனம் வகித்த திருவண்ணாமலை மாகாண மகாநாட்டிலும், ஸ்ரீமான் முதலியார் அவர்களே அக்கிராசனம் வகித்த காஞ்சீபுரம் மாகாண மகாநாட்டிலும் வலியுறுத்தப் பட்டதை பொது ஜனங்கள் அறிவார்கள். ஆனால் இந்நிபந்தனைகள் இம்மாகாண மகாநாடுகளுக்கு அடுத்தடுத்து கூடிய காங்கிரஸ்களினால் நிராகரிக்கப்பட்டும் போயிற்று. ஆயினும் தமிழ் நாட்டு பிராமணர்கள் தங்கள் கட்சிக்கு ஆள் சேர்ப்பதற்காக மாகாண மகா நாடுகளில் ஒப்புக் கொள்ளுவதும், எல்லா இந்திய காங்கிரசில் தங்கள் செல் வாக்கைக் கொண்டு இவற்றை உதறித் தள்ளிவிடுவதுமாகவே நடந்து வந்திருக்கிறது. ஆன போதிலும் இந்தக் கூட்டத்தார், ஸ்ரீமான் முதலியார் போன்றவர்களை தாங்கள் உபயோகித்துக் கொள்ளுவதற்காகவே “உங்கள் இஷ்டப்படியே செய்யலாம்”, “ உங்கள் இஷ்டப்படியே செய்யலாம்” என்று ஆசை வார்த்தை சொல்லி அவர்களை ஏமாற்றி தங்கள் சுவாதீனப்படுத்தி வந்திருக்கிறார்கள்.

பல நாளைய திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான் என்பது போல் தமிழ்நாட்டின் சார்பாய் ஐயங்கார் கூட்டத்தாரால் ஸ்ரீமான்கள் நாயுடுகார், முதலியார் ஆகியவர்கள் பெயரால் சட்டசபைக்குப் பொறுக்கி எடுத்த ஆள்களின் யோக்கியதையைப் பார்த்தவுடன் ஐயங்கார் கோஷ்டியின் தந்திரம் ஸ்ரீமான்கள் முதலியாரவர்களுக்கும், நாயுடுகாருக்கும் ஞானோதய மாகி விட்டதென்றே சொல்லுவோம். இவர்கள் எவ்வளவுதான் சகித்துக் கொண்டு இன்னமும் பார்க்கலாம், இன்னமும் பார்க்கலாம் என்று பொறுமை காட்டி வந்தாலும் பிராமணர்களின் அளவுக்கு மீறிய சூழ்ச்சியானது ஸ்ரீமான் முதலியாரின் மனசாக்ஷியை வெல்ல முடியவில்லை. ஆதலால் இனி பொறுமை காட்டுவது தமிழ் மக்களுக்கு ஆபத்தாய் முடியும் என்பதை உணர்ந்து, இப்போது ஸ்ரீமான்கள் முதலியாரவர்களுக்கும் நாயுடுகாருக்கும் ஐயங்கார் கூட்டத்தை இரண்டிலொன்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அதாவது, “சட்டசபையில் ஒத்துழையாமையா? சட்டசபையில் உத்தி யோகமா?” என்பதுதான்.இதன் பலனாய் நாயக்கரை காங்கிரஸ் நிர்வாக சபையை விட்டு வெளி யேற்று முன்னமே ஸ்ரீமான்கள் முதலியாரும் நாயுடுகாருமே வெளியேற ஏற்படுமென்றே நினைக்கிறோம். அவ்வாறு நேரும் போது, நாம் நமது முழு ஆதரவுடன் அவர்களைப் பின்பற்றத் தயாராயிருக்கிறோம். ஏனெனில் ஐயங் கார் கோஷ்டியானது ஒருக்காலும் சட்டசபையில் முதலியார் கோரும் ஒத்துழையாமைக்குச் சம்மதிக்காது.

ஐயங்கார் கோஷ்டி அகராதியில் ஒத்துழையாமைக்குப் பொருள் சட்டசபையில் பிராமணரல்லாத மந்திரிகளை விரட்டி விட்டு, பிராமண மந்திரிகளோ அல்லது ஐயங்கார் சொல்லுகிறபடி ஆடுகிற மந்திரிகளோ அமர்ந்து பிராமணாதிக்கத்தை நிலைநிறுத்துவதுதான் என்பது உலகமறிந்ததாகும். இப்போது ஸ்ரீமான்கள் முதலியார் அவர்கள் கோருவது போலும், நாயுடுகார் கோருவது போலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியோ, நிர்வாக சபையோ தீர்மானிக்குமானால் முதலாவதாக ஸ்ரீமான் கள் ராவ்பஹதூர் டி.எ. இராமலிங்கம் செட்டியார் அவர்களும், சி.வி.வெங் கிட்டரமணய்யங்கார் அவர்களும் காங்கிரசின் சார்பாய் நிற்க முடியாது. இருவரும் பட்டத்தையும், நியமனத்தையும் முறையே விட வேண்டியதுதான். ஒருசமயம் விட்டாலும் விடுவார்கள்; அல்லது பணம் சிலவு செய்யலாம் என்கிற தைரியத்தால் காங்கிரஸையே விட்டுவிட்டு தனியாய் நின்றாலும் நிற்பார்கள் என்றே வைத்துக் கொண்டாலும், இவைகளாலேயே ஐயங்கார் கோஷ்டிக்கு ஸ்ரீமான்கள் முதலியார் நாயுடுகார் உபத்திரவம் தீர்ந்து போகாது என்றே தோன்றுகிறது. ஏனெனில் மாதம் 4000 ரூபாய் வரும்படி உள்ள சட்ட சபைத் தலைவர் உத்தியோகத்தையும் விட்டுவிடும்படி வேண்டுகிறார்கள். இது முடியவே முடியாது என்றுதான் நினைக்கிறோம்.ஆதலால் இவ்வாரம் மிகுதி போற்றற்குரிய வாரமேயாகும்.

மற்றபடி ‘குடி அரசு’ பத்திரிகை, ஸ்ரீமான்கள் முதலியார், நாயுடுகார் ஆகியவர்களைப் பற்றி கொஞ்சமும் தயவு தாக்ஷணியம், பழய விஸ்வாசம் என்பவைகளைக் கவனியாமல் தாக்கி எழுதி வந்ததை வாசகர்கள் அறிந்திருப்பார்கள். அவை எதுவும் ஸ்ரீமான்கள் கலியாணசுந்தர முதலியார் அவர்களையும், டாக்டர் நாயுடுகாரையும் சொந்தத்தில் உத்தேசித்தல்லவென்பதும், பட்டம் உத்தி யோகம் பெறும் பிராமணர்களுக்கு அநுகூலமாய் இருக்கிறார்களேயென்று நினைத்தேயல்லாமல் வேறல்ல என்பதையும் எல்லோரும் அறிந்திருப்பார் கள். முதலியாருக்கும், நாயுடுகாருக்கும், நாயக்கருக்கும் சொந்தத்தில் எவ்வித அபிப்பிராய பேதமோ, சந்தேகமோ, குரோதமோ, விரோதமோ உண்மையாய் இல்லை யென்றே சொல்லுவோம். ஆனால் பிராமணர்கள் போல் தங்கள் தங்கள் கொள்கையை கட்டி வைத்து தங்கள் சுயநலத்திற்கு ஒன்று கூடி ஒற்றுமையாய் வேலை செய்வதென்ற குணம் பிராமணரல்லா தாருக்குள் இல்லவே இல்லை.

உதாரணமாக, ஸ்ரீமான்கள் சி.ராஜகோபாலாச்சாரியார், எஸ்.சீனிவாசய் யங்கார். சர். சி.பி. ராமசாமி அய்யர் ஆகிய மூவரும் ராஜீய விஷயத்தில் ஒரே கொள்கையிலில்லை. ஆனால் தங்கள் சமூக சுயநல விஷயத்தில் மூவரும் ஒன்று சேர்ந்து உழைக்கிறார்கள். ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியார் வைதீக ஒத்துழையாதார் என்று சொல்லிக் கொண்டு தன்னாலேயே, ‘அயோக்கியன்’ ‘துரோகி’ என்று சொல்லப்பட்ட பிராமணர்களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்க எவ்வளவு குரல், எவ்வளவு நாடகம், எவ்வளவு சம்பாஷணை, எவ்வளவு சூழ்ச்சி, எவ்வளவு தூரம் தன் மனசாட்சியை விற்று ஒத்துழையாமை தத்துவத் தால் அடைந்து பலனை உபயோகித்தல் முதலிய காரியங்கள் பாலும் பழமும் சாப்பிடுவது போல் செய்துவருகிறார். இந்தியாவிலுள்ள பிராமணர்களிலெல் லாம் பிராமணரல்லாதாருக்குக் கொடுமை செய்வதில் பண்டித மாளவியாவை விட முன்னிற்கிறார். ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் எவ்வளவு பணம் சிலவு செய்கிறார்? எத்தனை பேர் காலில் விழுகிறார்? எத்தனை பேர் தனக்கு அயோக்கியர் என்று தெரிந்தாலும் அவர்களுக்கு நல்ல வார்த்தை சொல்லி ஏமாற்றி அவர்களுக்குப் பணம் கொடுத்து வேலை செய்கிறார். ஸ்ரீமான் சர். சி.பி. ராமசாமி அய்யர் ³ இரண்டு அய்யங்கார்களுக்கும் முற்றும் மாறுபட்ட வர். ஒருவருக்கொருவர் எவ்வளவோ குரோதத்தோடு இருந்தவர்கள். பிராமணர் நன்மை என்கிற விஷயத்தில் கொஞ்சமும் தங்கு தடையின்றி ஒருவருக் கொருவர் உள் ஆளாயிருந்து கொண்டு ஒருவரை ஒருவர் கைதூக்கி விட்டு உத்தியோக விஷயத்திலும் எவ்வளவோ அநுகூலமாகவும், ஒற்றுமையாக வும் எவ்வளவோ காரியத்தைச் சாதித்துக் கொள்ளுகிறார்கள்.

பிராமணரல்லாதாரிலே ஒரு நாயுடு, ஒரு முதலியார், ஒரு நாயக்கர் ஆகிய மூவருக்குள் ஒருவருக்கொருவர் உத்தியோகப் போட்டியில்லை; தலைவர் போட்டியில்லை; வியாபாரப் போட்டியில்லை; சொந்த விரோத மில்லை; சந்தேகமில்லை; கொள்கையிலும் வித்தியாசம் இல்லை. ஆனால் மூன்று பேருக்கும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையில்லை; நாயக்கருக்கும் நாயுடுகாருக்கும் ஒற்றுமையில்லை; நாயுடுகாருக்கும் முதலியாருக்கும் ஒற்றுமையில்லை; முதலியாருக்கும் நாயக்கருக்கும் ஒற்றுமையில்லை. அய்யங்கார் கோஷ்டியார் இப்படி பிரித்து வைத்துவிட்டு நன்னிலத்தில் பேசும் போது, “முதலியார் ‘மாரீசன்’, அவரை காங்கிரசை விட்டு ஒழிக்க வேண்டும். சென்னையில் பேசும் போது நாயுடு மாறிவிட்டார். அவரை வெளி யாக்கி காங்கிரசை பரிசுத்தப் படுத்தவேண்டும்”. கோபியில் பேசும் போது நாயக்கரை இன்னும் காங்கிரஸில் வைத்திருக்கிறீர்களே, இது உங்களுக்கு தர்மமா? என்று கேட்பதுமாயிருக்கிறார்கள். இதன் காரணமென்ன? நமது கொள்கை கள் ஒன்றாயிருந்தாலும் நம்மை ஒன்று சேர விடாமல் பிரித்து வைத்து தனித்தனியாக சுலபமாய் கொன்றுவிடுவதற்கு செய்த சூழ்க்ஷி யல்லாமல் வேறென்ன?

கடைசியாக, நாம் வாசகர்களுக்கு விண்ணப்பம் செய்து கொள்ளுவ தென்னவென்றால், ஸ்ரீமான் முதலியாரவர்களைப்பற்றி நாம் எழுதியதெல் லாம் ஸ்ரீமான் முதலியாருக்கு பிராமணர்களின் யோக்கியதை தெரிந்திருந்தும் அவர்களைப் பற்றி நமக்குக் கூட தெரியாத பல விஷயங்கள் நமக்கு சொல்லியிருந்தும், பின்னும் பின்னும் பிராமணரல்லாதாருக்கு விரோதமாய் பிராமணர்களுக்கு உதவி செய்கிறாரே, இது காங்கிரஸ் கொள்கையை பிரதான மாய் மதித்து காங்கிரசுக்கு பக்தி காட்டுவதன் மூலம் நடந்து கொள்ளுவதா யிருந்தாலும் அது குடியிருந்த வீட்டிற்கு நெருப்பு வைப்பது போன்ற பலனைக் கொடுக்கின்றதே என்கிற ஆத்திரத்தினாலேயே அல்லாமல் வேறல்ல. இப்போது அவர்கள் வெளியிட்டிருக்கும் கொள்கையும் அதையே கடை பிடிக்கப் போவதாய் குறிப்பிட்டிருக்கும் உறுதியும் நமது மனதைக் கவர்ந்து விட்டது. கொள்கை காரணமாகவே ஸ்ரீமான் முதலியார் அவர்களை நாம் தாக்க நேர்ந்ததும், நம்மை ஸ்ரீமான் முதலியார் அவர்கள் தாக்க நேர்ந்தது மாகும். இப்போது இருவர் கொள்கையும் ஒன்றென்றே தெரிவதால் இனி ஒருவரை ஒருவர் தாக்க நேராது என்பதையும் வாசகர்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் நமது அய்யங்கார் கோஷ்டிக்கும் மற்றும் பார்ப்பன கோஷ்டிக்கும் தென்னாட்டு காந்தியாய், உண்மை அந்தணராய், உத்தமப் பிராமணராய், தியாக மூர்த்தியாய் விளங்கிய ஸ்ரீமான் திரு.வி. கலி யாணசுந்தர முதலியார் அவர்கள் இனி எப்படித் தோன்றுவாரோ அறிவோம். ஒரு சமயம் ‘சூத்திரராகவும்’, ‘தேசத் துரோகியாகவும்’ தோன்றினாலும் தோன்றலாம்.

நாயக்கருக்கு ஒரு அண்ணனாகத் தோன்றினாலும் தோன்ற லாம். யார் எப்படி நினைத்தாலும் பழய ஒத்துழையாமையும் நிர்மாணத் திட்ட மும் நாட்டில் அமலுக்கு வரும்காலத்தில் முதலியாரும், நாயுடுகாரும், நாயக் கரும் முன் போல் ஒன்று கூடி தங்கள் தங்களாலான கருமங்களைச் செய்ய கொஞ்சமும் அஞ்ச மாட்டார்கள். அதுவரை கோவில் நெல்லுக்குப் பெருச் சாளிகள் அடித்துக் கொள்வது போல் பிராமணர்கள் பிழைக்க, உத்தியோகம் சம்பாதிக்க, ஆதிக்கம் பெற நாம் ஒருவருக்கொருவர் காங்கிரசின் பெயரால் போட்டி போட்டு சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒற்றுமையுடன் சும்மா இருந்தால் அதுவே பிராமணரல்லாதாரின் நல்ல காலம் என்றே சொல்லுவோம்.

(குடி அரசு - தலையங்கம் - 13.06.1926)

Pin It