இந்து அரசு
இந்தியாவின் சுதந்திரம் என்பது ஒடுக்கப்பட்ட சாதியினரின் கண்ணோட்டத்தில் காலனித்துவவாதிகளிடம் இருந்து உயர்சாதியினருக்கு வெறுமனே அதிகாரத்தை மாற்றுவது மட்டுமே. இந்த அதிகார மாற்றத்தில் ‘இந்து’ வரிசைப்படுத்தலானது மிக முக்கியமான பாத்திரத்தை வகித்தது.
காங்கிரசின் உயர்சாதி தன்மையானது இன்றும் கூட மறைக்க இயலாததாக உள்ளது. ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த எஸ். நாகப்பா அரசியலமைப்பு அவையால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இருந்தார். அவர் தனிப்பட்ட தொகுதியில் போட்டியிட்டும் ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் 35 சதவிகித வாக்குகளைப் பெற்றாலே வென்றதாக அறிவிக்கப்படலாம் என்ற கருத்தை முன்மொழிந்தார். இதற்காகச் சர்தார் படேல் நாகப்பா உட்பட ஒட்டுமொத்த தலித் சமூகத்தையும் சேர்த்து வசை பாடினார்.
டாக்டர் அம்பேத்கரும் அவரது குழுவும் செய்ததை மறந்து விடுவோம். நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதையும் மறந்து விடுவோம். மீண்டும் உங்கள் வார்த்தைகளில் சொல்வதானால், நீங்கள் இந்த நாட்டின் பிரிவினையிலிருந்து கிட்டத்தட்ட தப்பித்து விட்டீர்கள். நீங்கள் தனி வாக்காளர்களால் உருவான விளைவுகளைப் பம்பாயில் பார்த்திருக்கிறீர்கள். உங்கள் சமூகத்தின் மிச்சிறந்த பயனாளி (காந்தி) பங்கியின் காலனியில் தங்குவதற்காகப் பம்பாய்க்கு வந்தார். உங்கள் மக்கள் அவர் வீட்டைத் தாக்கினர். இது என்னவாக இருந்தது? இது இந்த விஷத்தினது மற்றுமொரு விளைவாக இருந்தது. எனவே நான் இதை மட்டும் எதிர்க்கிறேன். இந்து மக்களில் பெரும்பான்மையானவர்கள் நீங்கள் நலமடைய வேண்டுமென்று விரும்புகிறார்கள். அவர்கள் இல்லாமல் நீங்கள் எங்கே இருப்பீர்கள்?
இறுதியாகக் காங்கிரஸ் இட ஒதுக்கீடு வடிவத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினருக்குக் குறைந்தபட்ச சலுகைகள் மூலம் அரசு வேலையிலும் கல்வியிலும் சலுகை வழங்கியது. ஆனால் ஒவ்வொரு துறையிலும் உயர் சாதியினரின் ஆதிக்கமானது கேள்வி கேட்கப் படாமலேயே தொடர்ந்து கொண்டிருந்தது.
வழங்கப்பட்ட சிறியளவிலான இடஒதுக்கீடு வடிவம்கூட சர்ச்சைக்குரிய எலும்புத் துண்டுகளாகவே இந்துக்கள் கருதினர். பல ஆண்டுகளாக இட ஒதுக்கீடு பற்றிய விளம்பரங்களைத் தொடர்ந்து உயர்சாதியினரின் வன்முறைகள் ஒடுக்கப்பட்டவர்கள் மீது நிகழ்த்தப்படுகின்றன. பீகாரில் 1978 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் முங்கெரிலால் கமிஷனின் இடஒதுக்கீடு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளை ஆரம்பித்தபோது ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு எதிரான வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன. வரலாற்றாசிரியரான ஆர்னிட் சானி “குறிப்பாகத் தலித்துகளுக்கு எதிராகப் பெரிய அளவிலான அட்டூழியங்கள், கலவரங்கள் 102 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றதாகக்” கூறுகிறார். அப்போதுதான், தலைவர்கள் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும்போது இந்துக்கள் அல்லாத சீக்கியர்கள், கிறித்தவர்கள், பௌத்தர்கள் குறிப்பாக இசுலாமியர்கள் மீது வன்முறை திருப்பப்படுவதைப் புரிந்து கொண்டனர்.
“பெரும்பாலும் இந்து - முஸ்லீம் கலவரங்களானது அவர்களுக்கிடையிலான உரசல்களாக அல்லாமல் ஒரு மதத்தின் எல்லையை விரிவு படுத்துவதற்கான உள்முகப் போட்டிகளைத் தூண்டி விடப்படுவதாக இருந்தது. சாண்ட்ரியா பிஃப்ரீடாக் என்பவர் 1980 ல் ஒரு கட்டுரையில் கீழ்க்கண்டவாறு எழுதினார்.
“சுதந்திர இந்தியாவில்;. குறிப்பாக 1970 மற்றும் 1980 களில் இந்து – முசுலிம் கலவரங்களில் சாதி மோதல்கள் மதக் கலவரங்களாகத் திசை திருப்பப்பட்டன. தாழ்த்தப்பட்டோர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிராக உயர் சாதியினரின் போராட்டமாக இந்த மோதல்கள் வெடித்தன. 1985 ஆம் ஆண்டு குஜராத் கலவரம் குறித்து வி.எஸ். டேவ் கமிஷன் “வகுப்புவாத கலவரங்கள் அதிகரிக்கும் போதெல்லாம் இடஒதுக்கீடு எதிர்ப்பு கிளர்ச்சியின் காரணமாகன போராட்டங்கள்;; குறைந்து விடுகின்றன" என 1985 குஜராத் கலவரத்தின் போது குறிப்பிட்டது கவனிக்கத்தக்கது.
1969 ஆம் ஆண்டில் இடஒதுக்கீடு கொள்கை இன்னும் பத்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டபோது, இந்தியாவின் பல பகுதிகளில் இடஒதுக்கீடுக்கு எதிராகப் போராட்டம் வெடித்தது. ‘சாதி - இந்து தேசியவாதம் - குஜராத் வன்முறை’ என்ற புத்தகத்தில் “ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய சாதிகளின் நன்மைகளுக்காகக் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசாங்க வேலைகளில் அரசின் முற்போக்கான தலையீடுகள் ஏற்பட்டபோது மோதல்கள் உருவாயின. இந்து சனாதன வரிசைக்குப் பாதிப்பு ஏற்பட்டபோது இவை உருவாயின. இந்தச் சாதி மோதல்களின் வகுப்புவாத எழுச்சியானது இந்தியாவில் வேறெங்கும் விட அகமதாபாத்தில் அதிகமாகக் காணப்பட்டது. அதன் பிறகு குஜராத்தில் இந்து தேசியவாதிகள் இந்திய பிரிவினைக்குப் பின்னர் நிகழ்ந்த மிகக் கொடிய கலவரத்தை நடத்தினர்” என்று சானி குறிப்பிட்டுள்ளார்.
1970 களின் இறுதியில் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடானது குஜராத் மற்றும் இந்தியா எங்கும் மோதலுக்கான ஒரு முக்கிய காரணமாக மாற்றப்பட்டது. 1980 ல், குஜராத் அரசானது முதுகலை மற்றும் மருத்துவ கல்லூரிகளில் படிப்பதற்காகப் பின்தங்கிய சாதிகளுக்கான இடஒதுக்கீடினை வழங்க முடிவு செய்தது. உடனே பின்தங்கிய சாதிகளுக்கு எதிராக உயர் சாதியினர் ஆக்ரோஷமாக அணிதிரண்டனர். அவர்கள் வீதிகளில் இறங்கி ‘இடஒதுக்கீடு’ மணமகள் என்றும் ‘அரசாங்கம்’ மாப்பிள்ளை என்றும், இதுவொரு போலி திருமணம் என்றும் கேலி செய்தனர். அவர்கள் ஒரு தலித் மாணவரின் களிமண் மாதிரியைச் செய்து அதில் மாதிரி அறுவை சிகிட்சை செய்தனர். அத்தோடு ஒடுக்கப்பட்ட மாணவர்களின் தலைக்குள் வெறும் மரத்தூள்;தான் இருக்கிறது என்று காட்டினர்.
1985ல், குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது சத்திரியர், ஹரிஜன், ஆதிவாசிகள் மற்றும் இசுலாமியர்களின் கூட்டணியை அடிப்படையாகக் கொண்டு வெற்றியைப் பெற்றது. இக்கூட்டணி முர்யுஆ - என அழைக்கப்பட்டது. அந்த அரசாங்கமானது தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடை அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பத்து சதவீதத்திலிருந்து பதினெட்டு சதவிகிதமாக அதிகரித்தது. இதனால், உயர் சாதிகள் மீண்டும் தெருக்களில் வந்து போராட ஆரம்பித்தனர். இந்தப் போராட்டங்களை ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் பிரிவு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தலைமையில் நடத்தியது.
டேவ் ஆணையம் “இடஒதுக்கீடு எதிர்ப்பு இயக்கமானது திடீரென வகுப்புவாதமாக மாறியது” எனக் குறிப்பிடுகிறது. இதைக் காரணமாக வைத்துக் கொண்டு சில கும்பல்கள் முஸ்லிம்களைத் தாக்கத் தொடங்கினர். இந்த ஆணையமானது ஏ.பி.வி.பி., பாஜக மற்றும் விஸ்வ இந்து பரிஷத் உறுப்பினர்கள் வன்முறையில் ஈடுபட்டதைக் கண்டறிந்தது.
மத சிறுபான்மையினரைப் பழிவாங்குவதன் மூலம் ஒரு போலியான ‘இந்து பெரும்பான்மை’ சமூகத்தில் தன்னை எவ்வாறு நிலை நிறுத்திக் கொண்டது என்பதை பல வகுப்புவாத கலவரங்கள் குறித்த ஆய்வானது வெளிப்படுத்தியுள்ளன. உயர் சாதி மேலாதிக்கத்திற்கு எதிரான தாழ்த்தப்பட்ட மக்களின் இடைவிடாத எதிர்ப்புகளிலிருந்து, அரசியல் மற்றும் ஊடக கவனத்தைத் திசை திருப்பிட வகுப்புவாத கலவரங்கள் பெரும்பாலும் திட்டமிடப்பட்டன. இந்தியாவில் மதச் சார்பின்மையானது, ‘இந்து - முஸ்லீம் நட்பே’ என போலியான ‘இந்து’ பெரும்பான்மையை நியாயப்படுத்த முயல்கிறது. ஆனால், உண்மையில் இந்திய சூழலில் மதச்சார்பின்மை என்பது சாதியை அழிப்பதுதான்.
இந்தியாவிலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் இந்திய அறிவுஜீவிகளும் துரதிர்ஷ்டவசமாக இந்து மதத்தைச் சுற்றியுள்ள தவறான எண்ணங்களுக்கு எதிராகச் சிறிதும் செயல்படவில்லை. . ஆதிக்க - சாதித் தலைவர்கள் மதத்தை முன்வைத்ததைப் போலவே அதன் நியாயப்படுத்தலுக்கும் உதவியுள்ளனர். இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாட்டு கல்வி நிறுவனங்களில் அதிகாரம் மிக்க பதவிகளைக் குறிப்பாக உயர் சாதி அறிவுஜீவிகள் பெற்றிருந்தனர். பிந்தைய காலனித்துவ ஆய்வுகள் மற்றும் விளிம்பு நில ஆய்வுகள் வெள்ளை காலனித்துவவாதிகள் மீது கவனம் செலுத்தத் தொடங்கியிருந்தன. எந்தக் குற்றம் செய்தாலும், எந்தவொரு பிரச்சினைகளாக இருந்தாலும் அது அமைப்புகள் மேல் சாட்டப்பட்டது. அதே நேரத்தில், உயர் சாதி கல்வியாளர்கள் தங்களைத் தாங்களே விளிம்பு நிலை மக்களின் குரல்களாகக் காட்டிக் கொண்டனர்.
இத்துணைக் கண்டத்தில் பல சகாப்தங்களாக நடைமுறையிலிருந்த உயர்சாதிகளின் அரசியல் தர்மத்தின் பெருமை அல்லது எதிர்க்கப்படாத சாதிய மேலாதிக்கத்தைப் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி அவர்களிடமிருந்து பறித்தது. இது அவர்களுக்கு மிகப் பெரியதொரு அவமானமாக அமைந்தது. எனவே, உயர் சாதியினர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு மதத்தை உருவாக்கிட முயன்றனர். அவர்கள் தாங்கள் இழந்த பெருமையை, குறிப்பாக வெள்ளை உயரடுக்கினரின் பார்வையில் மீட்டெடுப்பதற்கான திட்டத்தை கையில் எடுத்தனர். பிந்தைய காலனித்துவ கல்வி ஆய்வுகளிலிருந்து பெற்றுக் கொண்டவை. அத்திட்டத்தின் ஒரு பெரும்பகுதியாக அது அமைந்தது.
நரேந்திரநாத் தத்தா என்று பிரபலமான விவேகானந்தரே இடது மற்றும் வலது சாரி இந்துக்களால் பெரும் மதிப்புக்குள்ளான இத்திட்டத்தின் முன்னோடியாவார். விவேகானந்தர் மேற்கத்திய வாசகர்களை மனதில் கொண்டு தேர்ந்தெடுத்த பிராமணிய நூல்களுக்கு விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார். அவ்விளக்கங்களின் மூலம் கருத்து விலகிய பொருளை அவர்களுக்கு வழங்கினார். 1890 ல் மேற்கத்திய நாடுகளில் அவர் மேற்கொண்ட பயணங்களில் அவரது செயல்பாடானது அவருக்கு மிக்க புகழைப் பெற்றுத் தந்தது. அத்தோடு, அவர் இந்து மதத்தின் ‘சிறந்த பிரச்சாரகர்’ என்றும் அறிய வைத்தது. இருந்தாலும் காந்தியின் புகழ் கேள்விக்குள்ளாக்கப்பட்டது அல்லது இனவெறி மற்றும் சாதிவாதக் கருத்துக்களின் வெளிச்சத்தில் உலகின் பல பகுதிகளிலும் அவரது இருப்பானது எதிர்ப்புக்குள்ளானாலும் விவேகானந்தரின் இனவெறிக்கு அதிகக் கவனம் செலுத்தப்படாமலும் இருந்தது. இது அவரது சாதியவாதச் சிந்தனையுடன் ஒத்திருந்தது. காந்தி குஜராத்திலும்; ஆங்கிலத்திலும்; எழுதும்போது இரட்டை நாவுடையவராகச்; செயல்;பட்டார். இதையே விவேகானந்தரும் செய்து வந்தார். இவர்கள் இருவருமே அவர்களது வெளிநாட்டு பயணத்தில் “தேசியவாத சொல்லாட்சிகளால் கட்டுப்படுத்தப்படாதபோது இந்தியா பற்றிய இரட்டைப் பேச்சை பேசி வந்தனர்” என்று டோரோதி எம் ஃபிகியூரா கூறுகிறார்.
விவேகானந்தரைப் பொறுத்தவரை நாகரிகம் என்பது ‘ஆரிய’ இனத்துடன் இனரீதியாக பிணைக்கப்பட்டுள்ளது. ஆரியரல்லாத பிற இனங்களுக்கு நாகரீகத்தை இது வழங்குகிறது. ‘ஆரிய ரத்தம்’ இல்லாமல் இது சாத்தியமற்றது. 1900 ல் அமெரிக்காவில் அவர் ஆற்றிய ஒரு சொற்பொழிவில் “ஆரிய இனமானது தனது ரத்தத்தை ஒரு இனத்திற்கு கொடுக்கிறது. பின்னர் அது நாகரிகமாகிறது என்றும், வெறும் கற்பித்தலால் மட்டும் அது நடப்பதில்லை என்றும்; விவேகானந்தர் கூறினார். ஆரியர்கள் மற்றும் ஆரியர் அல்லாதவர்கள் இடையேயான முதன்மையானதொரு இன வேறுபாட்டை அவர் இந்திய துணைக் கண்டத்தில் கண்டார். “வட இந்தியாவின் மிகப்பெரிய மக்கள் தொகையானது ஆரிய இனத்தோடு தொடர்புடையவர்கள். பைரனீசிலுள்ள பாஸ்குவையும், பின்பாந்தியர்களையும் தவிர ஐரோப்பாவின் அனைத்து மக்களும் ஒன்றானவர்கள்," என்றும் அவர் கூறினார். “தென்னிந்தியாவைச் சேர்ந்த மக்கள் பண்டைய எகிப்தியர்கள் மற்றும் செமித்தியர்களின் அதே இனத்தைச் சேர்ந்தவர்களே” என்றும் அவர் கூறினார்.
இனக்கலப்பு என்பதைப் போலவே சாதியக் கலப்பு உயர் சாதியினரான ஆரியர்களுக்கு மிகவும் ஆபத்தானது என்பதை விவேகானந்தர் உணர்ந்திருந்தார். சாதிகளுக்குள்ளே ரத்தம் போன்று ஏதோ இருக்கிறது. இதுபோன்றதொரு பரம்பரை விஷயம் நிச்சயமாக இதில் உள்ளது” என்று அவர் கூறினார். “உங்கள் ரத்தத்தை நீங்கள் ஏன் நீக்ரோக்கள் மற்றும் அமெரிக்க இந்தியர்களோடு கலந்திட முயற்சி செய்யவில்லை? இயற்கை இதற்கு உங்களை அனுமதிக்காது. இயற்கை உங்கள் ரத்தத்தை அவர்களுடன் கலக்க அனுமதிக்காது. இனத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் நனவிலி மனமானது செயலாற்றிக் கொண்டே இருக்கிறது. அதுவே ஆரியர்களின் சாதி”. அக்காலத்தைய இனவாதிகளைப் போல அவரது சாதியவாதமானது அவரது இனவெறியே என்பதை அவரது எழுத்துக்கள் அப்பட்டமாகக் காட்டின.
காந்தியும் விவேகானந்தரின் அபிமானியாக இருந்தார். காந்தி மற்றும் விவேகானந்தர் ஆகிய இருவரும் பெரும் 1980 களில் தோன்றிய பின்காலனித்துவ கோட்பாட்டியல்வாதிகளுக்கு அபிமானம் மிக்கவர்களாக இருந்தனர். இப்பண்பை எட்வர்ட் சைத்தும் அவரைப் பின்தொடர்ந்தவர்களும் மேலை நாடுகளின் சுயவிமரிசன கோட்பாடுகளைப் பயன்படுத்தத் தொடங்கியபோது – குறிப்பாக - மைக்கேல் ஃபோக்கோ மற்றும் ஜாக் டெர்ரிடா படைப்புகளை அடிப்படையாக வைத்து காலனித்துவ ஆட்சி விமர்சிக்கப்பட்டது.
இந்தக் கோட்பாடுகளைச் செயல்படுத்துவதன் மூலம் சுயத்திற்கு எதிரானதாக இல்லாமல் மேற்கத்திய நாடுகளுக்கு மட்டுமே எதிராக இந்திய பின்காலனித்துவ விமர்சகர்கள் இதைப் பயன்படுத்தத் தொடங்கினர். சொந்தப் பெருமைகளும், மதிப்பீடுகளும்; பெருமிதத்தோடு முன்வைக்கப்பட்டதுடன் அவை காலனிய ஆட்சியாளர்களால் சூழப்பட்டுள்ளது என்றும் மறைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினர். ஆஷிஸ் நந்தி அவர்களின் படைப்பான ‘நெருக்கமான எதிரி - காலனித்துவ ஆட்சியின் கீழ் சுயமாக இழந்தவைகளும்’ என்கிற நூலானது, இந்தத் திட்டத்தின் பொருத்தமான பொருளை, சாதி இந்துக்களின் இழந்து போன பெருமையை அதன் குறிக்கோளாய் வெளிப்படுத்துகின்றது. 1987 ல் சதி வழக்கத்தினால்; ரூப் கன்வார் கொல்லப்பட்ட போது, இந்திய பெண்ணியவாதிகள் போராட்டங்களை நடத்தினர். நந்தி, அவர்களைக் கேலி செய்தும், கண்டிக்கும் விதமாகவும் ஒரு கட்டுரையை எழுதினார். பெண்ணியவாதிகள் இந்தியாவின் விழுமியங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் என்றும், மேலை உலகால் கவரப்பட்டவர்கள் என்றும் கூறினார்.
பின்காலனித்துவ கோட்பாட்டின் முன்னணி ஆதரவாளர்களான ஹோமி பாபா மற்றும் காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவக் ஆகியோர் இத்துணைக்கண்ட வரலாறு பற்றிய உரையாடலை நிறுவினர். இதில்; நாடகத்தனமான ஆளுமைகளான ‘எஜமானர்கள்’ - வெள்ளை காலனித்துவவாதிகள்; - ‘பூர்வீகக் குடிகளில்;’ உயர் சாதியினர் மட்டும் தனியாகப் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டார்கள். வேறுபடுத்தப்படாத பழுப்பு நிற பூர்வ குடிகள் எதிர்ப்பு நுட்பம் போன்ற மக்கள் திரளாகப் பயன்படுத்தப்பட்டனர். சாதிய பிளவுகளும் ஒடுக்குமுறையும் பின்காலனித்துவ சாயத்திற்குள் தார்மீக மேன்மையோடுகூட பூர்வீகக் குடிகள் என்கிற வகைக்குள் மறைந்து விட்டன. பின்காலனித்துவ கோட்பாட்டாளர்களின் எழுத்துக்களில் காலனித்துவம் பற்றிய உயர் சாதியினரின் புலம்பல்கள் அவமானங்கள் மட்டுமே சர்வதேச பார்வையாளர்கள் முன் வைக்கப்பட்டன. அத்தோடு ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கான அரசியல் விருப்புகளும் வரலாற்று தலையீடுகள் ஆகியவற்றையும் கவனமாக அழித்தனர். கல்வித் துறையில் இவ்விரு கோட்பாடுகளின் ஆதிக்கம் இந்தியாவில் இந்து - தேசிய அரசியலுடன் ஒத்துப் போகிறது.
உயர்சாதியினரின் போக்கானது புதிய கண்டுபிடிப்புகளை ‘புராதன வேதங்களில்’ உள்ளதாக நிறுவும் நோக்கில் இருந்தது. அதாவது, நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் பல பண்டைய நூல்களில் உயிருடன் உள்ளது என்பதை நிறுவுவதே பல கல்வியாளர்களின் நோக்கமாகக் காணப்பட்டது. குறிப்பாகத் திபேஸ் சக்கரவர்த்தி இதில் முக்கியமானவர். “இயற்கையையும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளும் ஒரே பிறப்பைக் கொண்டவை என்று சக்ரவர்த்தி கூறினார். இந்து மதம் என்று எளிதில் அடையாளம் காணக்கூடிய ‘பல தெய்வ வழிபாட்டின்’ தனித்துவமான மேன்மையைக் கோருவதற்காக அனைத்து ஏகத்துவ வாதங்களையும் அவர் நிராகரிக்கிறார். “கடவுளர்களையும் ஆவிகளையும் மனிதனுடன் தோற்றம் கொண்டதாக நான் எடுத்துக் கொள்கிறேன்" என்று அவர் தனது ‘ஐரோப்பாவில் மாகாண மயமாக்கல்’ என்கிற நூலில் எழுதுகிறார். வெவ்வேறு கலாச்சாரங்களும் இடங்ளும் அவரவர்களின் சொந்த சிந்தனை வடிவங்களைத் தீர்மானிக்கின்றன என்றும் சக்ரவர்த்தி கூறுகிறார். அத்தகைய சிந்தனை வடிவங்களைப் பிற தரங்களுக்கு எதிராக வைத்துச் சோதிக்க முடியாது. இந்த ஒரு நிலைப்பாட்டின் வெளிப்படையான உட்குறிப்பானது என்னவென்றால், நியூட்டனின் இயக்க விதிகள் இங்கிலாந்திற்கு மட்டுமே பொருந்தும் என்றும் அவை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தர மாதிரிகளைத்தான் உறுதி செய்யும் என்பதே. இந்தியா ஏற்கெனவே காலனித்துவ ஆட்சிக்கு முன் ஒரு குடியரசு நாடாக இருந்தது என்றும் அவர் வாதிடுகிறார். அதாவது பஞ்சாயத்துகள் மூலமான உயர் சாதிகளின் ஆட்சி முறையைக் குறிப்பிடுகிறார். நந்தி, 1979 ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையில், தொழில்நுட்பத்திற்கு மாற்றாக கலாச்சார நடைமுறைகள் உள்ளன என்று எழுதுகிறார்.
உயர் சாதியினரின் சுய உரிமை காப்புகளும், தொடர்ச்சியான சமூக ஆதிக்கத்திற்கான நியாயப்படுத்தலும் இந்த நூல்களில் விவரிக்கப்படுகின்றன. அத்தோடு அவை பெரும்பாலும் சொற்பொருள் சிதைவு மற்றும் தத்துவார்த்த மொழி பயன்பாட்டின் மூலம் விவிரிக்கப் பெறுகின்றன. அரசியல் அறிஞரான ராஜீவ் பார்கவா சாதி ஒழுங்கைக் குறிப்பிட ‘செங்குத்து பன்முகத்தன்மை’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அதாவது, அவர்களின் சுரண்டல் தன்மையை மறைப்பதே பன்முகத்தன்மையின் நேர்மறையான பொருளாகும். இத்தகைய சொற் பிரயோகங்களின் மறைமுகத் தடைகள் மூலம் பன்முகத்தன்மையைக் கொண்டாடுதல் என்பது 19 ஆம் நூற்றாண்டு முதல் உள்ள உயர்சாதியினரின் கனவுகளை தக்க வைத்துக் கொள்ள “செங்குத்து பன்முகத்தன்மை என்பதன் மூலம் அடக்குமுறை கேள்விக்கள்ளாக்கப்படுதவற்கு பதிலியாக வைக்கப்பட்டது.
இந்தக் கோட்பாடுகள் பொதுமக்களின்; உரையாடல்களைக் குழப்பத்திற்குள்ளாக்கின. இது வலதுசாரிகளுக்கு மதத்திற்கு உதவியாக இருந்தன. சமூகவியலாளர் சதீஷ் தேஷ்பாண்டே “சாதி ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் என்ற குரலையும் உணர்வையும் புனைய வசதியாக இருந்தது” என்கிறார்.
உயர் சாதி கல்வியாளர்கள் தங்களைத் தாங்களே வாயில் காப்பாளர்களாக நிலைநிறுத்தி தலித்துக்களின் குரல்களை வெளி வராமல் தடுத்து நிறுத்தினர். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் 2001 ல், இனவெறிக்கு எதிராக டர்பனில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் உலக மாநாட்டைக் கூறலாம். இம்மாநாடு இன பாகுபாடு, இனவெறி மற்றும் சகிப்புத்தன்மை தொடர்பானது. இம்மாநாட்டில் இந்தியாவின் முன்னணி சமூக விஞ்ஞானிகள் குறிப்பாக, ஆண்ட்ரே பீட்டில், டி.எல்.சேத் மற்றும் தீபங்கர் குப்தா, எனக் கலந்து கொண்ட அனைவருமே உயர் சாதிகள் மற்றும் உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் தலித் அமைப்புகளை எதிர்த்தனர். சமூகச் செயல்பாட்டாளர்களான பால் திவாகர் மற்றும் மார்ட்டின் ஆகியோர் சாதிய ஒடுக்குமுறையை இம்மாநாடு பேசுவதைத் தடுத்தனர். சாதிகளின் உணர்வுகளுக்குக் கவனம் கொடுத்து, அவற்றைத் தணிக்கை செய்வது அவர்களுக்குக் கவலையாக இருந்தது. இந்தக் கவலை ஒரு நூற்றாண்டு பழமை கொண்டது. இது மறைமுகமாக உயர்சாதி நலன்களுக்குச் சேவை செய்யும்படி ‘இந்து’ ‘பூர்வ குடிகள்’ ‘உள்நாட்டவர்கள்’ அல்லது ‘விளிம்புநிலை மக்கள்’ என இந்தியர்கள் அனைவரையும் ஒரே குடும்பமாகச் சித்திரிக்கவும் முயன்றது.
கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட சாதிகளின் அனுபவங்கள் மற்றும் வரலாறு பற்றிய ஆராய்ச்சி முன்னெடுப்புகளுக்கான சாத்தியங்களை இந்தத் துறை முன்னுதாரணங்களின் ஆதிக்கமானது தடுக்கின்றன. இந்தத் துறைகள் தாழ்த்தப்பட்டோரின் விடுதலைக்கான முயற்சிகளில் அறிவியல் பூர்வமான தடைகளை ஏற்படுத்தியுள்ளன. சமீபத்திய ஆண்டுகளில், பின்காலனித்துவ கோட்பாடுகளது ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள கல்வியாளர்களான இவர்கள் தாய்மொழி வழி கல்விக்காக வாதிட்டனர். இது உண்மையாக இருந்த போதிலும், அவர்கள் தாங்களாகவே ஆங்கிலத்தில் சிறந்து விளங்கினர். அத்தோடு சிறந்த மேற்கத்திய கல்வியையும் பெற்றிருந்தனர். அவர்களது சொந்தக் குழந்தைகள் பெரும்பாலும் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கவும் செய்தனர். தாய்மொழி வழி கல்வி என்பது தாழ்த்தப்பட்டோருக்கும் அவர்களின் அறிவுசார் பங்களிப்புகளுக்கும் ஒரு கட்டுப்பாட்டை விதிக்கும் ஒரு உத்தி என்று கருதப்படுகிறது.
எனவே, ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை சாதியானது அரசியலையும் வரலாற்றையும் பாலிவுட் திரைப்படங்களைப் பார்ப்பது போல் கட்டாயப்படுத்தப்பட்டன. அவை, வடமேற்கு இந்திய உயர் சாதிகளின் வெற்றிகள் கதைகளாகக் கூறப்பட்டன. திரைகளில் ஒடுக்கப்பட்ட சாதி குண்டர்களை உயர் சாதி ஹீரோக்கள் அடிப்பதை ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் பார்க்க வேண்டியிருந்தது. மேலும், சாதிக் கடமைகளைக் கடைப்பிடிக்கும் உயர் சாதி கதாநாயகிகளைப் போற்ற வேண்டும். ராபர்ட் போன்ற கிறிஸ்தவ பெயர்களைக் கொண்ட வில்லன்களால் உயர் சாதி தாய்மார்கள் அவமானப்படுத்தப் படும்போது அழ வேண்டும். தாழ்த்தப்பட்ட சாதியினருக்கான குறைந்தளவு பிரதிநிதித்துவம் கூட இந்திய சினிமாவின் நீண்ட வரலாற்றில் வழங்கப்படவில்லை. இது கல்வி உட்பட அனைத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மிக நீண்ட காலமாக நடைமுறையிலிருக்கும் தீண்டாமையானது எல்லா விவாதங்களிலும் சாதியாக மடை மாற்றப்பட்டு வந்தன. இறுதியில், சாதியானது பிரிட்டிஷாரின் அபத்தமான ஒரு கண்டுபிடிப்பு என்கிற கருத்தைக் கல்வி நிறுவனங்கள் பரப்பத் தொடங்கின. அத்தோடு, இதில் உயர் சாதியினருக்கு எந்தவொரு பங்கும் கிடையாது என்றும் கூறின. இதுவொரு தற்செயல் நிகழ்வு அல்ல. பின்காலனித்துவ கோட்பாடுகள் அல்லது பெரும்பாலான மக்களை இணைப்பதற்கான இந்து தேசியவாதிகளின் ஒரு யோசனையாக இது திட்டமிடப்பட்டது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் புலேயவாதிகளுக்கும் திலகியவாதிகளுக்கும் இடையிலான போராட்டத்தில் அவர்கள் தங்கள் அரசியல் திட்டங்களைப் பல வடிவங்களில் வெளிப்படுத்திக் கொண்டனர். இருபதாம் நூற்றாண்டில் இது காந்திக்கும் அம்பேத்கருக்குமான போராக வடிவெடுத்தது. நவீன ஜனநாயக மரபுகளின் வழி; சாதியை அழிப்பதன் மூலம், அது சம உரிமைகளுக்கான போராட்டமாக இருக்கும் என்பது புலேயவாதிகளின் திட்டமாக இருந்தது. திலகியவாதிகளின் திட்டமானது முக்கியகமாகச் சாதிய வரிசைகளை நவீன காலத்திற்கு முந்தைய கால சித்தாந்தங்களைக் கையாண்டு தக்க வைத்துக் கொள்வதாகவும் இருந்தது. வரலாற்றாசிரியர்கள், புத்திஜீவிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ‘இந்து’ மற்றும் ‘இந்து பெரும்பான்மை’ என்ற வார்த்தையைக் கேள்விகள் ஏதுமின்றி பயன்படுத்தி வருகின்றனர். திலகியவாதிகளின் திட்டத்துடன் இணைத்தல் மற்றும் புலேயவாதிகளின் திட்டங்களை எதிர்ப்பது அவர்களது திட்டமாக இருந்தது. ‘இந்து’ என்பது ஒரு அப்பாவித்தனமான பயன்பாடலோ, சொல்லாடலோ அல்ல.
கெய்ட் சுற்றறிக்கை மூலம் சாதிகளை வரையறுக்கும் முயற்சியைத் தடை செய்ய அச்சுறுத்தலானது முஸ்லிம்களை நோக்கித் திருப்பி விடப்பட்டது. இச்செயலானது, உயர் சாதியினருக்குப் பின்னடைவைத் தரும் என்பதால் இது ஆர்.எஸ்.எஸ் தோற்றத்திற்கு வழி வகுத்தது. மண்டல் ஆணைய பரிந்துரையானது சாதிய பதட்டங்களுக்கு வழி வகுத்ததோடு, அது விரைவில் இஸ்லாமிய விரோத, இந்து - தேசியவாத அமைப்பு வாதமாகத் திசை திருப்பப்பட்டது.
ராஜீவ் காந்தி 1989 ல் தனது தேர்தல் பிரச்சாரத்தை அயோத்தியில் ஆரம்பித்தபோது “ராம ராஜியம் அமைக்கப் போவதாகச் உறுதியளித்தார்;” - ராமரின் ஆட்சியைத் தருவதாகவும் வாக்குறுதியளித்தார். மோகன்தாஸ் காந்தியும் அவரது அரசியல் இலக்காக இதையே கொண்டிருந்தார். ராகுல் காந்தி முழுமையாகவும் கடுமையாகவும் ‘மண்டல் ஆணைய’ அறிக்கையை எதிர்த்தார். பாராளுமன்றத்திலும் அதைக் கண்டனம் செய்தார். இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸ{க்கும் இடையிலான குறிப்பிடத்தக்க வேறுபாடு என்னவென்றால், பிந்தையவர்கள் ‘சாதிப் போரை’ ஒடுக்கப்பட்ட சாதிய புரட்சி பற்றி வெளிப்படையாக உணர்ந்ததோடு பேசவும் செய்தனர். “மன உறுதியை வளர்ப்பதற்கான அவசர தேவை இன்று ஏற்பட்டுள்ளது. ஆன்மீக சக்தியானது ஏதாவதொரு வகையில் வீழ்ச்சியைச் சந்திக்கும்போது அதை எதிர்கொள்ள சூத்திர புரட்சியையே இவர்கள் நம்பியுள்ளனர்.” எனப் பத்திரிகையாளர் எம்.வி.காமத் அவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் வாராந்திர இதழில் எழுதினார்.
1990 இல் பாபர் மசூதியை நோக்கிச் சென்ற ரத ஊர்வலத்தின் நோக்கமானது மிகத் தெளிவானதாக இருந்தது. 1990 ல் ஆஜ் என்னும் செய்தித்தாள் “ராமின் ஒளி காரணமாக, இட ஒதுக்கீடு என்ற அரக்கன் ஓடி விட்டான்” என்று எழுதியது. ராமர் கதையின் மூலம் சாதிய மனநிலையானது இங்கே குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது. உயர் சாதி ஆரிய மன்னரான ராமர் ஒடுக்கப்பட்ட சாதி ‘பேய்களை’ காலம்தோறும் மீண்டும் மீண்டும் தோற்கடிக்கிறார்.
மற்றொரு சமகால அவதானிப்பாக இத்தகைய முன்னேற்றங்கள் இதனிடையே மேற்கொள்ளப்பட்டன. தற்போது நடைமுறையில் இல்லாத சமூக விஞ்ஞானம் என்கிற இதழில், அக்டோபர் 10, 1990 இல் மண்டல் ஆணைய எதிர்ப்புக்கும், ராமர் கோவில் இயக்கத்திற்குமான தொடர்பைப் பத்திரிகையாளர் சுகுமார் முரளிதரன் என்பவர் எழுதினார்.
மண்டல் ஆணையமானது தேசத்தின் உற்பத்தி பிரிவு மற்றும் அவற்றின் சக்தியைக் பரவலாக்குவதற்கான ஓர் உறுதியான முயற்சியைப் பிரதிபலிக்கிறது. உயர்சாதியினரின் ‘மந்திரானது’ பாரம்பரியமான சமூக வரிசை முறைகளுக்கு மதச் சடங்குகள் மூலம் முன்னுரிமை கொடுத்து அவற்றைப் பராமரிக்க முயல்கின்றது. அத்தோடு மத வழிகளில் அவற்றை ஒருங்கிணைத்துச் சிறுபான்மை சமூகத்தின் நிரந்தர அடிபணிதலையும் விரும்புவதாக இருக்கிறது.
இத்தகைய கவனச் சிதறல் செயல்பாடுகளின் மூலம் ஒருவர் இவ்வளவு காலம் வேலை செய்வதைப் பார்க்கும்போது, சாதியின் சமகால எதார்த்தமானது அடக்குமுறையாக இருக்கிறது என்பது புரிகிறது. 1931 முதல், மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிய வாரியான மக்கள் தொகை எண்ணிக்கை மீதான பயத்தால் இந்திய அரசு சாதி வாரியான மக்கள் தொகையை வெளியிட மறுத்து வருகிறது. உயர்சாதிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும் என்பது அவர்களுக்கு மிக "ஆபத்தான“ ஒன்றாகப் பட்டது. 1990 களின் பிற்பகுதியில், மேற்கொள்ளப்பட்ட ஒரு மாதிரி கணக்கெடுப்பின் மூலம், தலித் அல்லாத ஒடுக்கப்பட்ட சாதிகள் மட்டும் மொத்த மக்கள் தொகையில் 52 சதவீதமாக இருக்கின்றனர் என்பது தெரிய வந்தது. அத்தோடு, இடஒதுக்கீட்டுக் கொள்கையை உயர்சாதியினர் கடுமையாக எதிர்க்கின்றனர் என்கிற உண்மையும் தெரிய வந்தது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் மொத்த மக்கள் தொகையில் 22 சதவீதமாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்த எண்களே அரசாங்க கொள்கையாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், 2011 இல் ஒடுக்கப்பட்ட சாதி அரசியல் தலைவர்களது அழுத்தத்தின் காரணமாகச் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இக்கணக்கெடுப்பின் மூலம் தலித் மற்றும் ஆதிவாசிகளின் மக்கள் தொகை சுமார் 30 சதவீதமாக இருப்பது தெரிய வந்தது. தற்போதைய அரசாங்கம் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் முழு அறிக்கையை வெளியிட மறுத்துவிட்டது. ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் எண்ணிக்கையானது கற்பனை செய்ததை விட மிக அதிகமாக இருக்கலாம் என்பதே அவர்களது உண்மையான பயம். பத்திரிகையாளர் ராஜேஷ் ராமச்சந்திரன் எகானமிக் டைம்ஸ் என்கிற இதழில் “அடிப்படையில் கிடைக்கக்கூடிய அரசாங்க தரவுகளின்; அடிப்படையில் ஓபிசிகளின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 60 சதவிகிதம். எஸ்சிஃஎஸ்டி மட்டும் 30 சதவிகிதம் என்பது இப் புள்ளிவிவரங்கள் மூலம் அறியப்பட்டது என எழுதியது. மேலும் மொத்த மக்கள் தொகையில் உயர் சாதியினர் வெறும் 10 சதவீதம் மட்டுமே என்பதையும் இது வெளிப்படுத்தியது” என்று எழுதினார்..
இதற்கிடையில், தீண்டாமை மற்றும் தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்கள் இந்தியாவெங்கும் முழுமையாகத் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்தியாவில் நடைபெற்ற மொத்த குற்றங்களில்; 65 சதவீதம் தலித்துகளுக்கு எதிராகவே நடைபெற்றன. 71 சதவிகித தலித்து விவசாயிகள் நிலமற்றவர்களாக இருக்கிறார்கள். இந்தத் தொழிலாளர்களில் ஒன்பது சதவீதத்திற்கும் குறைவானவர்களே தேசிய ஊடகங்களில் பணி புரிந்து வருகின்றனர். இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் மற்றும் இந்திய மேலாண்மை நிறுவனங்களின்; மதிப்புமிக்க ஆசிரியர் பணிகளில் தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளின்; எண்ணிக்கை என்பது ஒன்பது சதவீகிதத்துக்கும் குறைவானதாகும். மத்திய அரசு மற்றும் மாகாண அரசாங்கங்களில் ஒடுக்கப்பட்ட சாதியினரின் எண்ணிக்கை மிகவும் அரிதாகத்தான் உள்ளது. பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட சாதி மக்களைச் சிறுபான்மையினர்களான உயர்சாதியினர் நீதிமன்றம், காவல்துறை, ஏனைய மாநில அரசு எந்திரங்கள் மற்றும் கருவிகள் மூலம் இன்றும் ஆட்சி செய்து வருகின்றனர்.
‘இந்து அரசு’ என்பது என்பது இதுவரையிலும் உருவாக்கப்படாமலேயே ஊடகங்களால் ஆகஸ்ட் 5 இல் கொண்டாடப்பட்டது. அதேவேளை ஃபுலேவின் அரசியல் திட்டங்களும் இன்னும் அழிக்கப்படவில்லை.
இரண்டு இயக்கங்களுக்கும் இடையிலான போர் பத்தொன்பதாம் நூற்றாண்டு முதலே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 1925 ல் புனே நகராட்சி கார்ப்பரேஷன் உறுப்பினரான கேசவராவ் ஜெட்டே அவர்கள் புலேவின் சிலையொன்றை அமைக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கையை முன்வைத்தார். நகராட்சியின் பிராமண உறுப்பினர்களின் ஒட்டு மொத்த கருத்தாக ஒடுக்கப்பட்ட - சாதி பூலேவுக்கு ‘அவர்களின் நகரத்தில்’ சிலையை நிர்மாணிக்கட்டும் என்பதாக இருந்தது. சிலை விஷயத்தில் கூட தீண்டாமை சிந்தனையே தொடர்கிறது. ஜெட்டேவின் முன்மொழிவானது உயர் சாதி உறுப்பினர்களின் எதிர்ப்புக்கள் மற்றும் செல்வாக்கின் மூலம் தோற்கடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து டிங்கராவ் ஜவல்கர் ‘தேஷாச் துஷ்மேன்’ அல்லது ‘இந்த தேசத்தின் எதிரிகள்’ என்ற புத்தகத்தை அவர் வெளியிட்டார். இந்நூல் திலகர் மற்றும் அவருக்கு எதிரானவர்கள் பற்றி பேசுகிறது. இந்தத் தலைப்பானது ஒடுக்கப்பட்ட மற்றும் உயர்சாதிகளின் பல்வேறுபட்ட விசயங்களை தேஷ் அல்லது நேசன் என்பதன் அடிப்படையில் பேசுகிறது. புலேயவாதியான ஜவல்கர் 1920களில் உயர்சாதி தலைவர்களை இத் தேசத்தின் எதிரிகள் என்றும், சாதிய அழிவுக்கு எதிரானவர்கள் என்றும் அழைத்து வந்தார். அனைவரும் ஒற்றை விடுதலைக்காக திரண்டு நிற்கிறார்கள், அத்தோடு அதற்காக வேலையும் செய்கிறார்கள். சமத்துவம் மற்றும் சாதிய எதிர்ப்பானது இன்றைய அரசியலில் ‘தேச விரோதம்’ என்று அழைக்கப்படுகிறது. ‘நகர்ப்புற நக்சல்’ ‘நகர்ப்புற மாவோயிஸ்ட்’ மற்றும் அதுபோன்ற பிற பெயர்களும் அவ்வாறே தேச விரோதம் என்று அழைக்கப்படுகிறது.
காங்கிரஸ், பாஜக இரண்டும் கடந்த இரண்டு தசாப்தங்களிலும் அரசு கருவிகளைப் பயன்படுத்தி அரசியல் குண்டர்கள் மற்றும் அரசியல் அனுமதியுடன் சாதிய எதிர்ப்பு ஆதரவாளர்களைத் தாக்கியுள்ளனர். ஆகஸ்ட் 5 நிகழ்வுகள் என்பது உண்மையான நீண்ட கால பெரும்பான்மை புரட்சியை வெறுமனே திசை திருப்பவும் ஒத்தி வைக்கவுமான மற்றொரு வழியாகும். ஆனால், இதன் மற்றொரு பெயர் இத்துணைக் கண்டத்தில் சமத்துவ அரசியலின் பிறப்பு என்பதாகும்.
குறிப்பு விளக்கங்கள்:
1. மதங்களைக் கிண்டல் செய்வதற்காக கேரள இளைஞர்கள் கண்டுபிடித்த ஒரு மதமே ‘டின்கோயிசம்’. மதங்களை நேரடியாக கிண்டல் செய்யாமல், ‘டின்கோயிசம்’ என்னும் புது மதத்தை ஏற்படுத்தி அபத்தங்களான சில காரியங்கள் செய்வதன் மூலம், மற்ற மதங்களில் இருக்கும் அபத்தங்களை கேள்விக்கு உள்ளாக்குவது.
டின்கன் என்பது மிக்கி மௌஸ், ஸ்கூபி போல கேரளாவில் எண்பதுகளில் வடிவமைக்கப்பட்ட ஒரு கார்ட்டூன் கேரக்டர். தொண்ணூறுகளின் துவக்கத்தில் மலையாள இதழான பாலமங்கலம் இதழில் பிரசுரமாகிய இந்த டின்கன் கேரக்டர், குழந்தைகளிடம் மிகப் பிரபலம்.
அப்போது குழந்தையாக இருந்து டின்கனை ரசித்தவர்கள் இப்போது இளைஞர்களாக வளர்ந்து நிற்கிறார்கள். அதில் சில இளைஞர்கள், நிலவிலிருக்கிற மதங்களின் சில நடைமுறைகளால் கோபமுற்று, அதைச் சுட்டிக்காட்ட டின்கனைப் பயன்படுத்தி, அவர் பெயரில் ஒரு புது மதத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். அதுதான் டின்கோயிசம். இந்த மதம் உருவானதே சமூக ஊடகங்களில்தான்.
டின்கோவின் உருவம் எலி வடிவில் இருக்கும். டின்கோவின் நெருங்கிய நண்பர் முயல். டின்கோயிஸ்டுகள் தங்கள் கடவுளான டின்கனின் பெயரை யாரும் உச்சரிப்பதைக் கூட அவர்கள் விரும்புவதில்லை. டின்கோயிசம் கடல் தாண்டியும் பரவி வருகிறது. அமெரிக்காவில் கூட இதற்கு தீவிர ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். கேரளாவில் இருக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் எல்லாம் இந்த மதத்திற்கு ஆதரவு கரம் நீட்டி வருகிறார்கள். அண்மையில் கோழிக்கோட்டில் இந்த மதத்தைச் சார்ந்தவர்கள் ஒன்று கூடி, மிகப் பெரிய மாநாடு ஒன்றை நடத்தியுள்ளார்கள். டின்கோவிற்கு என்று தனி வழிப்பாட்டு பாடலும், வழிப்பாட்டு முறையும் இருக்கிறது. அவர்களது புனித நூல் டின்கன் அறிமுகமாகிய பாலமங்கலம் இதழ்.
மூலம்: திவ்யா திவேதி, ஷாஜ் மோகன் மற்றும் ஜெ. ரகு
ஆங்கிலத்திலிருந்து தமிழில்: சுஜா ராஜேஷ்