1917 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரசின் வருடாந்திரக் கூட்டத்தொடரில் ஒரு விநோத மான சம்பவம் நிகழ்ந்தது. அக்கூட்டத்தொடரில் பின்வரும் தீர் மானத்தைக் காங்கிரஸ் இயற்றியது:

“ஒடுக்கப்பட்ட மக்களின் மீது வழிவழியாகத் திணிக்கப் பட்டு வந்த அனைத்து குறைபாடுகளை – எரிச்சலூட்டுகின்ற  அடக்கி ஒடுக்கும் தன்மை கொண்ட குறைபாடுகளை, கணிசமான அளவுக்கு இன்னல்களையும் அசௌகரியங்களையும்அந்த வர்க்கங்களுக்கு ஏற்படுத்தி வந்த குறைபாடுகளை-அகற்று  வதன் தேவையை, நீதியை, நியாயத்தை இந்திய மக்கள் உணர  வேண்டுமென்று இக்காங்கிரஸ் வலியுறுத்துகிறது.”

ambedkar 330அக்கூட்டத் தொடருக்குத் திருமதி. அன்னிபெசன்ட் தலை வராக இருந்தார். அத்தீர்மானத்தை மதராசைச் சேர்ந்த திரு.ஜி.எ. நடேசன் முன்மொழிந்தார். பம்பாயைச் சேர்ந்த திரு. புலாபாய் தேசாய், மலபாரைத் சேர்ந்த திரு. ராமய்யர், டில்லியைச் சேர்ந்த திரு. ஆசப் அலி அத்தீர்மானத்தை ஆதரித்தனர். அத்தீர்மானத்தை முன்மொழிந்த திரு. நடேசன் கூறியதாவது:

”தாய்மார்களே, பெரியோர்களே, - பல ஆண்டுகளாக  இப் பிரச்சினை இதர மேடைகளிலும் பெரும் கவனத்தை  ஈர்த்து வருகிறது; ஆனால் விஷயாலோசனைக் கமிட்டி  இந்தக் கூட்டத் தொடரின் முக்கியத்துவத்தைக் கருத்தில்  கொண்டு, இந்தியாவுக்கு சுயாட்டிக்கான ஒரு திட்டத்தை  வரைந்த பின்னர், சுயாட்சிக் கடமைக்கு நம்மை நாமே  தயார் செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்று கரு  திற்று. இவ்வகையில் நமது முதலாவது மாபெரும் கடமை எல்லாவிதமான சமத்துவமின்மையையும் அநீதிகளை  யும் அகற்றுவதற்குப் பாடுபடுவதேயாகும். மிக மோசமான,  எரிச்சலூட்டக்கூடிய, அடக்கி ஒடுக்கும் தன்மை கொண்ட  குறைபாடுகளை அகற்றுமாறு இத்தீர்மானம் உங்களைக்  குறிப்பாகக் கேட்டுக் கொள்வதை நீங்கள் காண்பீர்கள்.

உங்களுடைய மத உணர்வுகளைப் புண்படுத்தாமல், உங்க  ளுடைய மதப் பாரம்பரியத்தின் மிகச் சிறந்த குணாதிச  யங்களைக் கைவிடாமல், இந்த மக்களைப் பள்ளிகளில் அனுமதிக்காதிருத்தல் போன்ற இத்தகைய அபத்தமான  கட்டுப்பாடுகளை அகற்ற வேண்டு மென்று உங்களையும் என்னையும் பிறரையும் கேட்டுக் கொள்ளும் உரிமை  காங்கிரசுக்கு உள்ளது என்று கருதுகிறேன். இந்த நாட்டின்  சில பகுதியில் இந்த மக்களுக்கு பொதுக் கிணறைப்  பயன்படுத்தும் உரிமையும் கூட மறுக்கப் படுகிறது.

இந்தக்  கட்டுப்பாடுகளும் மறைய வேண்டும். அதற்காகப் பாடுபட  மானுட இனத்தவரனைவரையும் கேட்டுக் கொள்ளும்  உரிமையும் கூட காங்கிரசுக்கு உள்ளது... நம்மை நாமே  உயர்த்திக் கொள்ள முயலுவதில், இந்த அவமானகரமான கட்டுப்பாடுகளைப் போக்க முயலுவதில் நாம் இந்திய மானுடத்தன்மையையே உயர்த்தியவர்களாவோம்;  நமக்குப் பொறுப்புள்ள சுயாட்சி வழங்கப்படவிருக்கும்  போது எல்லா வர்க்கங்களையும் எல்லா மதங்களையும்  சேர்ந்த இந்தியர்க:ள் முழுமையான உரிமைகளை, பொது வான சமூக உரிமைகளைக் கொண்டிருக்கிறார்கள், எல்லாப் பள்ளிகளிலும் அனைவரும் கல்வி கற்க முடியும், எல்லா  உயர்கல்வி நிலையங்களுக்கும் செல்ல் முடியும் என்று  சொல்லிக் கொள்ளக் கூடிய நிலைமையில் இருப்போம். அப்போதுதான் இந்திய மானுடத் தன்மை தனது  உண்மையான, மிகச் சிறந்த, கண்ணியமான பாரம்பரியங்கள் மிளிர மேன்மையடையும்.”

இத்தீர்மானத்தை ஆதரித்து உரையாற்றிய திரு. புலாபாய் தேசாய் சுட்டிக்காட்டியது வருமாறு:

”நாம் போதித்துவரும் மனிதனின் சமத்துவம் சகோ  தரத்துவம் ஆகிய கோட்பாடுகளுக்கு நமது சகோதரர்கள்  சிலர் அனுபவித்துவரும் துன்பங்கள் மிகப்பெரிய அடியாகும். இன்று காலையில் நீங்கள் நிறைவேற்றிய தீர்மானத்  தின் பகைப்புலனின், நமது சொந்த சகோதரர்களை உயர்த்த  முடியாத நிலையில் இருப்போமானால், எந்த முகத்தைக்  கொண்டு நாம் பிரிட்டிஷ் ஜனநாயகத்தையோ அல்லது  வேறு எந்த சக்தியையோ அணுகமுடியும்? “உங்களுடைய சொந்த மக்களின் ஒரு பகுதியினர் சமூகரீதியாக இழிவுப்  படுத்தப்படும் மடமையை ஒழித்துக் கட்டும் சக்தி உங்க  ளுக்கு இல்லையே” என்று அவர்கள் எள்ளி நகையாடு  வார்கள். நமது சுய-உதவியைக் கொண்டு மட்டுமே நம்மால்  இதைச் செய்ய முடியும். இந்த விஷயத்தில் நம்மைத்தவிர  வேற எந்த சக்தியையும் நாம் அணுக வேண்டிய தேவை  இல்லை. உங்களுக்கு முன்பாக இத்தீர்மானத்தை முன்மொழிய அனுமதித்ததன் மூலம் காங்கிரஸ் மகத்தான அடி  யெடுத்து வைத்திருக்கிறது என்பது நிரூபணமாகியுள்ளது.  இத்திசை வழியில் இந்த கொடிய அவல நிலை நீடிப்பது  இந்துமதத்தின் பெயருக்கே ஓர் அவமானமாகும். ஆகவே,  நீதி, நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் இத்தீர்மானம் கோரும் நியாயங்களை நீங்கள் அவர்களுக்கு எவ்வாறு  மறுக்கமுடியும்? அதை நீங்கள் செய்யத் தவறினால் எந்த  நியாயத்துடன் எந்த முகத்துடன் நீங்கள் சுயாட்சியைக்  கோரமுடியும்?"

திரு. ராமய்யர் கூறியதாவது:

”தாழ்த்தப்பட்ட வர்க்கங்களைப் பிணைக்கும் தளை  களைத் தகர்த்தெறியக் கூடிய சமூக சுதந்திரத்திற்கு இத்  தீர்மானம் அறைகூவல் விடுக்கிறது. அவர்களே இந்நாட்டின்  பாதங்கள், நீங்களும் நானும் சுயாட்சி என்ற குன்றின்மீது  ஏறவேண்டுமெனில் நாம் முதலில் நமது பாதங்களைப் பிணைத்திருக்கும் தளைகளைத் தகர்த்தெறிய வேண்டும்.  அப்போதுதான் நமக்கு சுயாட்சி வரும்.... நிங்கள் ஒரேசமயத்  தில் அரசியல் ஜனநாயகவாதிகளாகவும் சமூக எதேச்சாதிகாரிகளாகவும் இருக்க முடியாது. ஒரு சமூக அடிமையாக இருக்  கும் ஒரு மனிதன் அரசியல் ரீதியாகச் சுதந்திரமானவனாக  இருக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  அரசியல் ரீதியாக மட்டுமன்றி எல்லாவழிகளிலும் ஒன்றுபட்ட இந்தியா என்ற காட்சியைக் காணுவதற்காக நாமனை வரும் இங்கு வந்திருக்கிறோம். ஆகவே நம்மில் பிராமணர்  களாக இருப்பவர்களும், உயர்ஜாதிகளைச் சேர்ந்தவர்களும் நமது கிராமங்களுக்குச் சென்று நமது சொந்த மனிதர்களுக்கு எதிராக, நமது சொந்த நாட்டின் சமூக அதிகார வர்க்கத்தினரை எதிர்த்துப் போராடிவரும் தாழ்ந்த ஜாதி மக்களின் தளைகளைத் தகர்த்தெறிவோம்.”

திரு. ஆசப் அலி கூறியாவது:

“ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் பிரச்சினை மிகக்  கடினமான பிரச்சினைகளில் ஒன்றாகும். அதிகாரவர்க்கத்  தினரின் பாகுபாடான, எதேச்சாதிகாரமான செயல்கள்  அவமானகரமானவை என்று இந்தியர்களாகிய நாம் கூறி  வருகிறோம். ஆனால் இந்தியவர்களாகிய நம்மை அவமானத்  தால் தலைகுனிய வைப்பது இப்போது ஒடுக்கப்பட்ட  மக்களின் – தீண்டத்தகாதவர்களின் முறையாகியுள்ளது.  துரதிருஷ்த்திற்குப் பலியான இத்தகைய கோடிக்கணக்கான மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தங்களது இழி வான தொழில்களில் ஈடுபட்டு வாய்மூடி மௌனிகளாக  உழன்று வருகின்றனர்.

நாட்டின் கொடூரமான, சற்றும் நேர்மையற்ற ‘சம்பிரதாயங்கள் அவர்களை வீசி எறிந்த  இழிநிலை என்ற அதலபாதாளத்திலிருந்து அவர்கள் ஒருபோதும் வெளி யேறியதில்லை. மற்றவர்களுக்கு அது  நம்பிக்கை எனும் வசந்தகாலமாகவோ அல்லது கனவு  நனவாகும் கோடை காலமாகவோ இருந்திருக்கக்கூடும்.  ஆனால் இந்த அதிருஷ்டமற்ற ஐந்துக்களுக்கு அது  நம்பிக்கையற்ற இருளின் பனிக் காலமாகவே இருந்தது.

மனித உரிமைகளை எய்த வேண்டும். அவற்றைப் பேணிக் காக்க வேண்டும் என்று வாய்கிழியக் கூக்குரலிடுபவர் களே தங்களுக்குக் கீழுள்ள மற்றவர்களின் நியாயமான  உரிமைகளைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் இருப்பது  விதியின் கோரவிளையாட்டு போல் தோன்றுகிறது. மற்றவர்கள் தவறுகளும் புரிந்துவிட்டு அவற்றுக்குப் பரிகாரம்  காண்பதற்காகப் போர்களத்தில் ரத்தம் சிந்திக் கொண்டிருக்கும் வேளையில் அத்தவறுகளினால் மானுட இனத்தின் வாய்மூடி மௌனிகளாக உள்ள ஒரு பிரிவினர்  துன்புற்று வருவது நியாயமோ, நேர்மையோ ஆகுமா?  தங்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய கொடுமையான  மரபுகளையும் மீறி “தீண்டத்தகாதவர்களும்” கூட மனிதப் பிறவிகள்தானே, அவர்களும் இந்த மண்ணின் குழுந்தைகள் தானே, தங்களுக்குத் தாங்களே உயர்ந்தவர்கள் என்று  பட்டம் சூட்டிக் கொண்டவர்களின் உடம்பில் ஒடுவது போன்று அவர்களுடைய உடம்பிலும் அதே ‘சிவப்பு  ரத்தம்’தானே ஒடுகிறது.

ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரும்  கூட உலகச் சூழ்நிலைகளில் தங்களை விட மேலானவர் களைப் போன்று அதே சலுகைகளைப் பெற உரிமையுள்ளவர்கள்தான். மனிதனின் பிறப்புரிமையைப் பெறுவதிலிருந்து  அவர்களைத் தடை செய்ய முடியாது. ஒடுக்கப்பட்ட வர்க் கங்கள் என்று இருப்பதே இந்தியர்களுக்கு ஒரு நிரந்தர  அவமானமாகும். இந்த அவமானத்தை வேரறுப்பதற்காகத்  தான் அவர்கள் வேண்டிக் கொள்கின்றனர்."

இத்தீர்மானத்தைக் காங்கிரஸ் நிறைவேற்றியதையும், அதை முன்வைத்து ஆதரித்தவர்கள் இத்தகைய கண்ணியமான சொற்களைப் பயன்படுத்தியதையும் ஒருவிநோதமான சம்பவம் என்று நான் ஏன் விளக்க வேண்டுமென்று பலர் வியக்கக்கூடும். இதற்கு முன் நடைபெற்ற சம்பவங்களை அறிந்தவர்கள் இது ஒன்றும்முறை யற்ற வர்ணனை அல்ல என்பதை ஒப்புக் கொள்வர். இது பல காரணங்களுக்காக விநோதமானதாக இருந்தது.

முதலாவதாக, அக்கூட்டத் தொடரின் தலைவராக மறைந்த திருமதி. அன்னி பெசன்ட் இருந்தார். அவர் ஒரு பிரபலமான பொது வாழ்வுப் பிரமுகராக இருந்தார். அவருடைய பல சிறப்பம்சங்களுக் காக இந்தியாவின் வருங்கால வரலாற்றியலாளர்கள் அவரை நினைவு கூர்வார்கள். அடையாறைத் தலைமையிடமாகக் கொண்ட பிரம்ம ஞான சபையை அவர்தான் தோற்றுவித்தார். ஒய்வுபெற்ற பதிவாள ரான ஒரு பிராமணரின் புதல்வர் திரு. கிருஷ்ணமூர்த்தியை ஒரு வருங்கால மீட்பராக உருவாக்குவதற்கு திருமதி. அன்னிபெசன்ட் பாடுபட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். திருமதி. அன்னி பெசன்ட் ஹோம்ரூல் லீக் இயக்கத்தைத் தோற்றுவித்தார். அவருக்கு ஒரு கௌரவமான இடத்தைப் பெற்றுத்தர திரு. அன்னி பெசன்டின் நண்பர்கள் அவருக்கு இன்னும்பல சிறப்புகள் இருந்ததாகக் கூறக் கூடும். அவர் எப்போதேனும் தீண்டத்தகாதவர்களின் நண்பராக இருந்தாரா என்பது எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்தவரை தீண்டத்தகாதவர்களின்பால் இயல்பான வெறுப்புணர்வு கொண்டிருந் தார். பொதுப் பள்ளிக்கூடங்களில் தீண்டத்தகாதவர்களின் குழந்தைகளை அனுமதிக்கலாமா, அனுமதிக்கக் கூடாதா என்ற பிரச்சினை சமபந்தமாகத் தமது கருந்தை 1909 பிப்ரவரியில் வெளியான இந்தியன் ரெவிவூ என்ற ஏட்டில் “எடுக்கப்பட்ட வர்க்கங்களை மேம்படுத்தல்”  என்ற கட்டுரையில் திருமதி. அன்னி பெசன்ட் பின்வருமாறு தெரிவித்தார்:

“ஒவ்வொரு நாட்டிலும் சமூகக் கோபுரத்தின் அடித்  தளமாக பெரிய வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள், அறியாமை  யில் மூழ்கியவர்களாக, இழிவுபடுத்தப்பட்டவர்களாக, பேச்சு  மொழியிலும் பழக்கவழக்கங்களிலும் தூய்மை யற்றவர்  களாக உள்ளனர். சமுதாயத்திற்குத் தேவையான பல பணிகளைச் செய்கின்றனர். எந்த சமுதாயத்தின் தேவைகளை  அவர்கள் பூர்த்தி செய்கின்றனரோ, அதே சமுதாயம் அவர்  களை இழிவுபடுத்தி ஒதுக்கிவருகிறது. இங்கிலாந்தில் இந்த  வர்க்கம் “மூழ்கிய பத்து” என்று அழைக்கப்படுகிறது. அதற்குக்  காரணம் மொத்த மக்கள் தொகையில் இந்த வர்க்கத்தினர்  பத்தில் ஒரு பகுதியாக உள்ளனர். இந்த வர்க்கம் எப்போதும்  பட்டினியின் விளிம்பில் இருந்துவருகிறது, குறைந்தபட்ச  கூடுதல் நெருக்குதல் அவர்களை வாழ்க்கையின் விளிம்  புக்கே தள்ளிவிடுகின்றன. ஊட்டச்சத்து இன்மையினால்  இந்த வர்க்கம் துன்புற்று வருகிறது. அதனால் ஏற்படும் வியாதிகளுக்கும் இரையாகி வருகிறது.

மிகக்கீழான வகைப்  பட்ட நரம்பு மண்டல அமைப்புக் கொண்ட எல்லா ஜீவ  ராசிகளையும் போலவே இந்த வர்க்கமும் இனப்பெருக்க  வளங்கொண்டதாக இருக்கிறது. ஆனால் இவர்களுடைய  குழந்தைகள் விரைவில் மடிந்து விடுகின்றனர். தகுந்த உண  வின்றி, எலும்பும்தோலுமாக, தோற்றக் கேடுகளுடன்  காணப்படுகின்றனர். அந்த வர்க்கத்தின் சிறந்த வகையினர்  தேர்ச்சியற்ற தொழிலாளர்களாக உள்ளனர். அவர்கள் தோட்டிகளாக, துப்புரவுத் தொழிலாளிகளாக, துறைமுகத்  தில் தினக்கூலிகளாக, பழ விற்பனையாளர்களாக உள்ளனர்;  அந்த வர்க்கத்தின் மோசமான வகைப்பட்டவர்கள் குடிகாரர்களாக, சோம்பித் திரிபவர்களாக, முரட்டுத்தனமான  ஒழுக்கக்கேடர்களாக, மனம்போன போக்கில் செல்பவர்களாக, நாடோடிகளாக, குற்றவாளிகளாக, முரடர்களாக,  சமுதாயத்திற்கு எந்த வகையிலும் பயனற்றவர்களாக மாறி  விடுகின்றனர். முதலாவது வகையினர் உண்மையானவர் களாகவும் நல்ல உழைப்பாளிகளாகவும் உள்ளனர். இரண்  டாவது வகையினர் தொடர்ந்து கட்டுப்பாட்டின்கீழ்  வைக்கப்பட வேண்டியவர்கள், தங்களது உணவை ஈட்டு வதற்கு கட்டாயமாக உழைக்கும்படி செய்யப்பட வேண்டியவர்கள். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் இந்த  வர்க்கத்தினர் ஆறில் ஒரு பகுதியினராக உள்ளனர்.

இவர்கள்  ‘ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினர்’ என்று அழைக்கப்படுகின்றனர்.  ஆரியப் படையெடுப்பாளர்களினால் வெற்றி கொள்ளப் பட்டு அடிமைப்படுத்தப்பட்ட, நாட்டின் பூர்வ குடிமக்கள்  என்பதிலிருந்து இப்பெயர் தோன்றியிருக்கிறது. அவர்கள்  உணவு, உடல், குடியிருக்கும் இடம் எதுவானாலும் தூய்மை  யைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாதவர்களாக இருக்  கின்றனர்; ஆனால் திருமணங்கள் சிறிது சம்பிரதாயங்  களுடன் நடத்தப்படுகின்றன. குழந்தைகள் அன்புடன்  பேணப்படுகின்றார்கள், அவர்களிடத்தில் காட்டுமிராண்டித்  தனமோ, வன்முறையோ அல்லது குற்றம்புரியும் குணமோ  இல்லை. குற்றம் புரியும் வகுப்பினரான பரம்பரைத் திருடர்கள் போன்றவர்கள் தனித்து வாழுகின்றனர்.

அவர்கள்  ஒடுக்கப்பட்ட மக்களில் பெரும்பான்மையாளராக இருக்கும்  தோட்டிகளுடன், துப்புரவுத் தொழிலாளர்களுடன், உழவுத்  தொழில் செய்பவர்களுடன், இதர எளிய கைவினைஞர்களுடன் கலப்பதில்லை. அவர்கள் முரட்டுத்தனமற்ற,  பணிவான, சுறுசுறுப்பானவர்களாக, மிகவும் கீழ்ப்படிந்து  நடப்பவர்களாக, தேவைகள் ஏதும் இல்லாதபோது களிப்புடன் இருப்பவர்களாக, கெட்டிக்காரர்களாக அதே  சமயம் வரையறுக்கப்பட்ட அறிவாற்றல் கொண்டவர்  களாக உள்ளனர்; உண்மை, நற்குடிமைப் பண்புகள்  போன்றவற்றை முற்றிலும் அறியாதவர்களாக உள்ளனர் -  இவர்கள் வேறு எவ்வாறு இருக்க முடியும்? – ஆனால் இவர்  கள் பிரியமுடையவர்களாக, சிறிதே அன்பு செலுத்தி  னாலும் அதற்கு நன்றியுடையவர்களாக, ‘இயற்கையான  வாழ்க்கைப் பற்றுடையவர்களாக’ உள்ளனர். உண்மை யில் அவர்கள் எளிய பயனுள்ள ஆயினும் கண்ணியமான  வாழ்க்கைக்குத் தேவையான சிறந்த பொருள்களை வழங்குகின்றனர்,......

”இவர்களுக்கு இழைக்கப்பட்ட காட்டுமிராண்டித்தன மான கொடுமைகளுக்காக வருத்தப்படுபவர்களினால்,  சுதந்திரங்களைக் கோரும் இந்தியர்கள் மற்றவர்களுக்  கும் மதிப்பளிக்க வேண்டும் என்று கருதுபவர்களினால்,  தங்களுக்குத் தேவை என்று உரிமைகோரும் விஷயங்களில் மற்றவருக்கும் ஒரு பங்கு வழங்க வேண்டும்  என்று எண்ணுபவர்களினால் இவர்களுக்கு என்ன  செய்ய முடியும்?

“எல்லா இடங்களையும் போன்று இங்கும் கல்வி என்ற  நெம்புகோலைக் கொண்டுதான் இவர்களை நம்மால்  மேம்படுத்த முடியும், ஆனால் தொடக்கத்திலேயே ஒரு  சிரமம் ஏற்படுகிறது, ஏனெனில் இரக்க உணர்வும் தர்ம  சிந்தனை போன்ற உன்னத உண்வுர்களால் உந்தப்பட்டு சமுதாயத்தின் ஒரு வர்க்கம், சூழ்நிலைகளைக் கவனமாக  வும் விரிவாகவும் பரிசீலனை செய்யாமல் ஒடுக்கப்பட்ட  சமுதாயத்தைச் சேர்ந்த குழந்தைகளை, உயர் வர்க்கங்  களைச் சேர்ந்தவர்களின் புதல்வர்கள் படிக்கும் பள்ளி  களில் சேர்க்க வேண்டுமென்றும், இந்தக் கொள்கைக்கு ஆதரவாக இல்லாதவர்கள் சகோதரத்துவ உணர்வற்றவர்கள் என்றும் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே சகோதரத்  துவம் என்றால் சமன்படுத்துவது என்று அர்த்தமா.

ஒரு  குடும்பத்தில் மூத்த குழந்தைகளையும் கைக் குழந்தை களையும் ஒரே மாதிரி நடத்த முடியுமா என்று கேட்பதும்  அவசியமாகிறது. இவ்வாறு கூறுவது ஆர்வமேலீட்டினா  லன்றி அறிவாற்றலினால் அல்ல. இயற்கைக்குகந்தும்  அல்ல – இது சகோதரத்துவத்திற்குப் பதிலாக சமத்துவத்  தைக் கோருவதாகும். செயற்கையான சமத்துவத்தை உருவாக்குவதற்காக பலதலைமுறைகளாகப் பெற்ற  கல்வியின் பலன்களை பண்பட்டவர்களும் பண்பு நயம்  மிக்கவர்களும் கைவிட்டு விடவேண்டும் என்று கோருவதாகும். இது வருங்காலத்தின் முன்னேற்றத்திற்கு அழிவு  கரமானதாக இருக்கும், தற்காலத்தின் மேம்பாட்டுக்  கும் பயனற்றதாக இருக்கும், ஒடுக்கப்பட்ட மக்களின்  குழந்தைகளுக்கு முதலில் தூய்மை, வெளிநடத்தையில்  நாகரிகம், கல்வியின் அடிப்படைக் கூறுகள் மதம் மற்றும்  ஒழுக்கப் பண்புகள் ஆகியவை கற்றுத் தரப்பட வேண்டும்.  

அவர்களது உடலில் துர்நாற்றமும் மதுபான நெடியும்  மூக்கைத் துளைக்கும் வாசனை கொண்ட உணவின் நெடியும் வீசுவதாக இருக்கிறது. அவர்கள் பல தலைமுறையாக இப்படித்தான் வாழ்த்து வருகின்றனர்;  நேர்த்தியான தனிநபர் தூய்மை சம்பந்தமான பழக்க வழக்கங்களில் பயிற்சி பெற்ற பரம்பரையிலிருந்து பெறப்பட்ட உடல்களையும் சுத்தமான உணவு வகைகளை  உண்டும் வந்த குழந்தைகளுடன் ஒரே வகுப்பறையில் அருகாமையில் அமருவதற்கு தங்களுடைய உடல்களை  தகுதிவாய்ந்தவையாக்க அக்குழந்தைகளை சில தலை  முறைகளேனும் சிறந்த சுத்தமான உணவை உண்டு  வாழவேண்டும். ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரின் உடற்  கூறியல் தூய்மையை அதே மட்டத்திற்கு நாம் உயர்த்த  வேண்டும். தூய்மையற்றவர்களின் நிலைக்குத் தூய்மை  யானவர்களை இழுத்துச் செல்லக்கூடாது, இது செய்யப்  படும் வரை நெருக்கமான தொடர்பு விரும்பத்தகுந்ததல்ல.

நாம் இந்தக் குழந்தகளையோ அல்லது அவர்  களின் பெற்றோர்களையோ அவர்கள் இவ்வாறு இருப்  பதற்காகக் குறைகூறவில்லை; நாம் எவரும் உணரக்  கூடிய உண்மையைத்தான் கூறுகிறோம். இந்தக் குழந்தைகளுக்கு ஒரு பள்ளியில் அன்றாடம் முதலில் நடத்தப் படும் பாடம் ஒரு குளியல், பின்னர் தூய்மையான  உடை; இரண்டாவதாகத் தூய்மையான முழுமையான உணவு; தங்களது அன்றாடக் குளியலை விடிகாலையிலேயே முடித்துக் கொண்டு, நல்ல உணவு ஊட்டப்  பட்டு பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கான பள்ளியில்  இந்த ஆரம்பத் தேவைகளை வழங்க முடியாது.

“இக்குழந்தைகளின் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும்  மற்றுமொரு சிரமம் தொற்றுவியாதிளாகும்; முதலாவ  தாக ஓர் உதாரணத்தைப் பார்ப்போம். அவர்களுடைய அசட்டையான போக்குகள் காரணமாக அவர்களிடையே  காணப்படும் மிகவும் பொதுவான எளிதில் தொற்றக்  கூடியது கண்நோய், மதராசில் உள்ள எங்களது பஞ்சமப்  பள்ளிகளில் இந்நோயைக் கண்டுபிடித்துத் தடுப்பதற்  காக ஆசிரியர்கள் எப்போதும் கவனமாக இருக்கிறார்கள்.அக்குழந்தைகளுடைய கண்கள் தினமும் கழுவிச் சுத்தம்  செய்யப்படுகின்றன. நோய் ஏற்படுகிறது இதனால் தடுக்கப்  படுகிறது. இத்தகைய மோசமான வியாதிகளிலிருந்து  தங்களது குழந்தைகளைப் பாதுகாக்க அன்றாடம் கவனம்  மேற்கொள்ளும் பெற்றோர்கள் வேண்டுமென்றே அவர்  களை இத்தகைய தொற்றுநோய்களுக்கு இலக்காக அனு  மதிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?

“இந்த ஆதரவற்ற குழந்தைகளின் பழக்கவழக்கங்  களை, மென்னயத்துடன் பேணி வளர்க்கப்பட்ட குழந்  தைகள் பார்த்துப் பின்பற்றுவது விரும்பத் தகுந்ததல்ல.  உதாரணமாகச் சிறந்த மனப்பாங்குகள் தொடர்ச்சியான,  கடுமையான சுயகட்டுப்பாட்டின், மற்றவர்களுடைய  வசதி வாய்ப்புக்களைப் பற்றி எண்ணிப் பார்ப்பதன் பயனாகும்; சிறப்பான முறையில் வளர்க்கப்பட்ட பெற்  றோர்க்கும் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து குழந்தைகள் நற்பாங்கினைத் தெரிந்துகொள்கின்றனர்.

இரண்டாவதாக பொருந்தமான நீதிபோதனை, கண்டிப்பு ஆகிய  வற்றினாலும் தெரிந்து கொள்கின்றனர். இத்தகைய குழந்  தைகள் பள்ளியில் இவ்வாறு பயிற்சி பெறாத குழந்தை  களுடன் பழகினால் அவர்களைச் சுற்றிலும் அவர்கள்  காணும் சம்பவங்களில் வழியில் விரைவிலேயே சென்றுவிடுவார்கள். நீண்ட பயிற்சியினால் நல்ல பழக்கங்கள்  நிரந்தரமாக நம்மிடம் தங்கும்வரை, துல்லியமாக இருப்பதைவிட அரைகுறையாக இருப்பதும் கவனமாக இருப்  பதைவிட கவனக்குறைவாக இருப்பதும் கவனமான இருப்  தாகும். நல்ல பழக்கவழக்கங்களும் அடக்கமும் பரம்பரையாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் பாரம்பரியத்தைப் பறித்துவிட வேண்டுமா? இக்கொள்கையினால் யாரும் செழுமையடையப் போவதில்லை.மாறாக இது தேசத்தையே அதலபாதாளத்திற்கு  இட்டுச் சென்றுவிடும். மென்மையான பேச்சு, சிறந்த  வளமான குரல், இனிய பண்புகள் ஆகிய இவை நெடிய கலாசாரத்தின் மதிப்புமிக்க பலன்களாகும், இவற்றை  செயலற் செய்வது உண்மையான சகோதரத்துவம்  ஆகாது...

“இங்கிலாந்தில், எல்லா வர்க்கங்களையும் சேர்ந்த  சிறுவர்களையும் சிறுமிகளையும் அருகருகில் வைத்துக்  கல்வி புகட்டுவது விரும்பத்தகுந்தாக ஒருபோதும் கருதப்பட்டவில்லை. சமமற்றவர்களை சமமாக நடத்தும்  இத்தகைய கோரமான செயல் அங்கு வெறுப்பையே  உருவாக்கும். ஈட்டன். ஹாரோ ஆகியவை உயர் வர்க்கத்  தினருக்கான பள்ளிகளாகும், ரக்பி, வின்செஸ்டர் ஆகி  யவையும்கூட கனவான்களுக்கான பள்ளிகளே. ஆயினும் அவை ஒரளவுக்கு உயர்குடியினரின் அந்தஸ்தை விடக்  குறைந்தவைதான். பின்னர் முக்கியமாக மாகாணங்களி  லுள்ள மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் பிள்ளை  கள் செல்லும் ஏராளமான பள்ளிகள் உள்ளன. பின்னர்  போர்டு பள்ளிகள், அங்கு கைவினைஞர்கள் மற்றும்  பொதுவான உடலுழைப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்  வர்க்கத்தினரின் பிள்ளைகள் படிக்கிறார்கள். இவை  எல்லாவற்றிற்கும் கீழே ஆதரவற்ற வழிதவறிய குழந்தைகளுக்கான “கந்தல் பள்ளிகள்” உள்ளன.

இது அப்பள்ளி  யில் கல்வி கற்பவர்களையும் அவற்றை நடத்தும் எண்  ணற்ற தரும ஸ்தாபன்ங்களையும் குறிக்கிறது. இங்கிலாந்தில் யாரேனும் ஒருவர், கந்தல் பள்ளிகளில் படிக்கும்  குழந்தைகளை ஈட்டனினும் ஹாரோவிலும் சேர்க்க  வேண்டும் என்ற யோசனையைக் கூறினால் அவருடன்  யாரும் வாதிட மாட்டார்கள், அந்த நபர் எள்ளி நகை  யாடப்படுவார். சகோதரத்துவத்தின் பெயரால் இங்கு  அதேபோன்ற யோசனைகள் கூறப்படும்போது, அத  னுடைய அபத்தத்தன்மையை மனந்திறந்து சுட்டிக்காட்டு  வதற்கு மக்கள் சங்கோஜப்படுவதுபோல் தோன்றுகிறது.  இது ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கு இழைக்கப்பட்ட  கொடூரமான தவறுகளுக்கு எதிரான வன்முறை சார்ந்த  வெறும் எதிர்ச் செயலே இந்த யோசனை என்பதை அவர்  கள் உணருவதில்லை.

இது விழித்துகொண்ட மனச்சாட்சி  யின் கூக்குரல். தனது உணர்வுகளை வழிநடத்திக் செல்  லும் சரியான காரணங்களைத் தேட இன்னமும் சமயம் கிடைக்கவில்லை என்பதை அவர்கள் உணருவதில்லை.  சமூக வேறுபாடுகளின்பால் அரசாங்கப் பள்ளிகள் கவனம்  செலுத்துவதில்லை என்று சிலசமயங்களில் கூறப்படு  கிறது. அதன்மூலம் அவர்கள் தாங்கள் தங்களது உணர்  வில் “அன்னியர்களாக” இருப்பதைக் காட்டிக் கொள்  கின்றனர். தங்களுடைய சொந்த மக்களின் புதல்வர்கள்  விஷயத்தில் அவர்கள் இவ்வாறு நடந்துகொள்ள மாட்டார்கள். ஆயினும் இந்தியர்களின் புதல்வர்கள் விஷயத்தில், அவர்களை சுத்தமானவர்களையும் அசுத்தமானவர்களையும் ஒன்றாக அடைத்துவைக்கும் விஷயத்தில்  அவர்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடும். ஒரு பள்ளி  யில் பண்பட்ட வர்க்கத்தினரின் புதல்வர்கள் மட்டுமே  அனுமதிக்கப்படும் பொழுது அந்த இளைஞர்களின்  “குரலில்” இருக்கும் வேறுபாடுகளைக் காண்பது எளிது.  இங்கிலாந்தில் தங்களது சொந்தப் பிள்ளைகளை ஆங்கி  லேயர்கள் பாதுகாப்பதுபோல, கரடுமுரடான செல்வாக்குகளிலிருந்து தங்களது புதல்வர்கள் பாதுகாக்கப்படும்  பள்ளிகளிக்கே அவர்களை அனுப்புவது இந்தியர்களின்  நலன்களுக்கு உகந்ததாக இருக்கும்.”

 * * *

இத்தீர்மானம் இயற்றப்பட்டது ஒரு விநோதமான சம்பவம் என்று வருணிப்பதை ஒருவர் நியாயப்படுத்துவது ஏன் என்பதற் கான இரண்டாவது காரணம் அது காங்கிரசின் பிரகடனப்படுத்தப் பட்ட கொள்கைக்கு முற்றிலும் எதிரானது என்ற உண்மையில் பொதிந்துள்ளது. காங்கிரசின் “ஆக்கப் பூர்வமான திட்டம்” ஒவ்வொரு தெருமுனையிலிருந்தும் கூவப்படும் இந்த நாட்களில், ஒத்துழையாமை மற்றும் சிவில் கீழ்ப்படியாமை என்ற ஒரு தீவிர மான இயக்கத்திற்குப் பின்னர் காங்கிரஸ் சற்றே இளைப்பாறிக் கொண்டிருக்கும் இச்சமயத்தில் இந்த அறிக்கை இன்றைய காங்கிரஸ் காரர்களுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற் படுத்தக் கூடும். காங்கிரசின் வருடாந்திரக் கூட்டக் தொடர்களுக்குத் தலைமை வகித்த தலைவர்களின் உரைகளிலிருந்து எடுக்கப்பட்ட பின்வரும் பகுதிகள், காங்கிர்சின் நோக்கங்கள் மற்றும் குறிக்கோள் களில் சமூக சீர்திருத்தப் பிரச்சினைகளுக்கு இடமளிக்காதிருப்பதே காங்கிரசின் கொள்கை என்ற உண்மையே மோசமானதாகும்.

முதலாவதாக, 1886 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடை பெற்ற இந்திய தேசியக் காங்கிரசின் இரண்டாவது கூட்டத் தொட ருக்குத் தலைமையேற்ற திரு. தாதாபாய் நவ்ரோஜியின் உரையைப் பார்ப்போம். சமூக சீர்திருத்தக் கொள்கையின்பால் தமது தலைமை உரையில் காங்கிரசின் அணுகுமுறையைக் குறிப்பிட்டு அவர் கூறியதாவது:

“சமூக சீர்திருத்தப் பிரச்சினைகளை காங்கிரஸ் பரி  சீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலி  யுறுத்தப்பட்டு வந்துள்ளது (’ஆம் ஆம்’ என்ற கைதட்டல்கள், குரல்கள்). இதில் நாம் எதுவும் செய்யத் தவறி  யதற்காக நம்மீது குற்றம் சாட்டப்படுகிறது. என்னை விட, சமூக சீர்திருத்தத்திற்கான அவசியத்தை அதிகம்  உணர்ந்தவர்கள் இந்திய தேசியக் காங்கிரசில் எவரும்  நிச்சயமாகக் கிடையாது; ஆனால் கனவான்களே, எல்லா  வற்றிற்கும் உரிய நேரம், உரிய சூழ்நிலைகள், உரிய  கட்சிகள், உரிய இடங்கள் என்று ஒன்று இருக்கிறது  (ஆரவாரம்); நமது அரசியல் அபிலாஷைகளை நமது ஆட்சியாளர்களுக்கு எடுத்துரைப்பதற்காகத்தான் நாம்  இங்கு ஓர் அரசியல் அமைப்பாகக் கூடியிருக்கிறோமே  தவிர சமூக சீர்திருத்தங்களை விவாதிப்பதற்காக அல்ல.  இவற்றை அசட்டை செய்வதாக நீங்கள் எங்களைக்  குறைகூறினால் கணிதவியலின் அப்ட்ருசர் பிரச்சினை  கள் அல்லது புலன் கடந்த நுண்பொருள் ஆராய்ச்சி  குறித்து விவாதிக்காததற்காக நீங்கள் காமன்ஸ் சபையை  யும் சம அளவில் குறைகூற வேண்டியிருக்கும், ஆனால்  இதைத் தவிர, இங்கு இந்து மதத்தைச் சேர்ந்த எல்லா  ஜாதியினரும் உள்ளனர்.

அவர்களிடையே அவர்கள் ஒரே  மாகாணத்தைச் சார்ந்தவர்களாயினும் சம்பிரதாயங்களும்  சமூக ஏற்பாடுகளும் பரந்த அளவில் வேறுபடுகின்றன.  பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த முகமதியர்களும், கிறிஸ்த  வர்களும் உள்ளனர். பார்சிகள், சீக்கியர்கள், பிரமோக்கள்  இன்னும் பல பிரிவினர் உள்ளனர் – உண்மையில் ஒவ் வொரு நபரும், எண்ணற்ற வர்க்கங்களைச் சேர்ந்தவர்  களும்தான் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களாக அமை கின்றனர் (பலத்த கரவொலி). இங்கு கூடியுள்ள அனைத்து  வர்க்கத்தினரும் ஒவ்வோரு தனிப்பட்ட வர்க்கத்திலும் தேவைப்படும் சமூக சீர்திருத்தங்களை விவாதிப்பது  எப்படி?....

அந்தந்த வர்க்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்  கள் மட்டுமே அவர்களுக்குத் தேவைப்படும் சீர்திருத்தங்  களைப் பற்றிப் பயனுறுதியுடன் எடுத்துக் கூறமுடியும். ஒரு தேசியக் காங்கிரஸ், தேசம் முழுவதும் பங்கெடுத்துக்  கொள்ளும் பிரச்சினகளுடன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். சமூக சீர்திருத்தங்களுக்குப்  பாடுபடுதல் மற்றும் இதர வர்க்கப் பிரச்சினைகளை  வர்க்கக் காங்கிரசுகளுக்கு விட்டுவிட வேண்டும்....”

இதே விஷயம், 1887இல் நடைபெற்ற காங்கிரசின் மூன் றாவது வருடாந்திரக் கூட்டத் தொடருக்குத் தலைமை வகித்த மாண்புமிகு திரு. பத்ருதீன் தியாப்ஜியினாலும் குறிப்பிடப்பட்டது. திரு. தியாப்ஜி கூறியதாவது:

“இந்தக் காங்கிரஸ் சமூக சீர்திருத்தங்கள் சம்பந்தமான  பிரச்சினைகளை விவாதிக்கவில்லை என்பதை நமது  நடவடிக்கைகளுக்கெதிரான ஓர் ஆட்சேபனையாக  வலியுறுத்தப்பட்டுள்ளது..... இந்தக் காங்கிரஸ் எந்த ஒரு  வர்க்கத்தின் அல்லது ஜாதியின் பிரதிநிதிகளை உள்ளடக்கியிருக்கவில்லை. இந்தியாவின் ஒரு பகுதியை  மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தாது எல்லா வெவ்வேறு பகுதிகளையும் எல்லா வெவ்வேறு வர்க்கங்களையும்  இந்தியாவின் எல்லா வெவ்வேறு ஜாதிகளையும் பிரதி  நிதித்துவப்படுத்துகிறது என்பதைப் பார்க்கும்போது இந்த  ஆட்சேபனை எனக்கு வினோதமாகத் தோன்றுகிறது  என்பதை நான் ஒப்புக் கொண்டாக வேண்டும். எந்த ஒரு  சமூக சீர்திருத்தப் பிரச்சினையும் இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியை அல்லது சில குறிப்பிட்ட ஜாதியினரை மட்டுமே பாதிக்கும் என்பதாலும் ஆகவே,  கனவான்களே, முசல்மான்களாகிய நாங்களும் கூட எங்களுக்கே உரிய சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியுள்ளது.

அதேபோல் எங்களுடைய இந்து மற்றும் பார்சிநண்பர்களுக்கும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள்  உள்ளன என்றாலும் கூட, இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு குறிப்பிட்ட ஜாதிகளின் தலைவர்களே பாடுபட  வேண்டும் (கரவொலி). ஆகவே கனவான்களே, நாம்  மேற்கொள்ளக்கூடிய ஒரே அறிவார்ந்த, உண்மையில்  ஒரே சாத்தியமான போக்கு என்னவாக இருக்க வேண்டு  மெனில் இந்தியா முழுவதையும் பாதிக்கக்கூடிய பிரச்சினை பற்றி விவாதிப்பதுடன் நாம் நிறுத்திக் கொள்வதும், ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது ஒரு குறிப்பிட்ட  ஜாதியை மட்டுமே பாதிக்கக்கூடிய பிரச்சினைகள் பற்றி  விவாதிப்பதிலிருந்து ஒதுங்கியிருப்பதுமேயாகும் என்று  நான் கருதுகிறேன்.”

காங்கிரசின் எட்டாவது கூட்டத் தொடரில் தமது தலைமை உரையில் திரு. டபிள்யூ. சி. பானர்ஜி தமது உணர்வுகளைப் பின்வரு மாறு தெரிவித்தபோது இந்த விஷயம் 1892இல் மூன்றாவது முறையாக்க குறிப்பிடப்பட்டது:

“நமது விமர்சகர்களில் சிலர் நமது விவகாரங்களைப்  பற்றி நமக்குத் தெரிந்ததை விட அவர்களுக்கு அதிகமாகத்  தெரியும் என்று எண்ணிக்கொண்டு, அரசியல் விஷயங்களில் நாம் குட்டையைக் குழப்பக்கூடாது. அரசி  யலை ஒதுக்கிவைத்து விட்டு சமூக விஷயங்களுக்கு  நம்மை நாமே அர்ப்பணித்துக் கொண்டு நமது நாட்டின்  சமூக அமைப்பை மேம்படுத்தப் பாடுபட வேண்டுமென்று  நமக்கு அறிவுரை கூறிவருகின்றனர்; சமூக விஷயங்  களைப் பகிரங்கமகா விவாதிப்பதில் அவ்வளவாக  நம்பிக்கை இல்லாதவர்களில் நானும் ஒருவன்; அந்த  விஷயங்களை அதே சமூக அமைப்பைச் சேர்ந்த ஒரு  ஜாதியின் தனிப்பட்ட நபர்களிடம் அதன் மேம்பாட்டிற்குத் தங்களால் இயன்றதை செய்யுமாறு விட்டுவிட  வேண்டும் என்று கருதுகிறேன்.

பொது இடங்களில் சமூக  விஷயங்கள் விவாதிக்கப்படும்போது மக்கள் எந்த அள  வுக்கு உணர்ச்சி வசப்படுகின்றனர் என்பதை நாமறி  வோம். அண்மையில் இதுபோன்ற ஒரு சம்பவத்தை  நாம் கண்டோம். வைசிராயின் சட்ட மேலவையில்  வயது சம்மத மசோதா அறிமுகப்படுத்தப்பட்டபோது  இது நிகழ்ந்தது. அந்த நடவடிக்கை சம்பந்தமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் சிறப்புகளைப் பற்றி ஒரு  வார்த்தை கூட சொல்ல நான் விரும்பவில்லை. பகிரங்கமாக ஒரு பகைமை நிலவும் நேசமற்ற உணர்வில் இத்தகைய சமூக விஷயங்கள் விவாதிக்கப்படும்போது  பொது மக்களுடைய மனது எந்த அளவுக்கு குழப்ப  மடைகிறது என்பதை விளக்கவே நான் இதைக் குறிப் பிடுகிறேன்..... சமூக சீர்திருத்தம் என்றால் என்ன  என்பதை நாமனைவரும் ஒரே உணர்வில் புரிந்து கொள்வதில்லை.

நமது புதல்விகளும் நம்முடைய புதல்வர்களைப்  போன்று அதே கல்வியைப் பெற வேண்டும், அவர்களும்  பல்கலைக் கழகங்களில் பயில வேண்டும். அவர்களும்  கூட கற்றறிந்த தொழில்களில் ஈடுபட வேண்டும் என்று  நம்மில் சிலர் ஆர்வத்துடன் இருக்கிறோம்; மற்றவர்கள்  இளம் வயதிலேயே குழந்தைகளுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிடாதிருப்பதில் திருப்தியடைகின்றனர்;  குழந்தைப் பருவத்திலேயே விதவைகளாகி விடுபவர்  கள் தங்களுடைய வாழ்நாள் முழுவதும் விதவைகளாக  இருந்துவிடக்கூடாது என்று இவர்கள் கருதுகின்றனர்.  

இன்னும் சிலர் சமூகப் பிரச்சினைகள் அவைகளாகவே  ஒரு தீர்வுக்கு வர வேண்டும் என்று கருதி வாளாவிருப்பர்.,  தனது சக்திகளனைத்தையும் அரசியல் விஷயங்களுக்  காக, அரசியல் விஷயங்களுக்காக மட்டுமே, அர்ப்பணித்துக்  கொண்ட ஓர் அப்பழுக்கற்ற அரசியல் அமைப்பாக  மட்டுமே காங்கிரஸ் தொடங்கப்பட்டது, அவ்வாறே  இருந்து வந்துள்ளது, அவ்வாறே எப்போதும் இருந்து  வரும் என்று நான் திடமாக நம்புகிறேன். நமது பணிகளின் ஓர் அங்கமாக சமூக விஷயங்களைச் சேர்த்துக்  கொள்ளாததற்காக நம்மீது குறைகூறுபவர்கள் நமது  சொந்த நாட்டவர்களாயினும் வேறு எந்த நாட்டவர்  களாயினும் சரி, வயது சம்மத மசோதாவினால் நாமனை  வரும் காதைப் பிடித்துத் திருகப்பட்டது போன்று சமூக  விஷயங்களிலும் நம்மைக் காதைப் பிடித்துத் திருகி ஒப்புக்கொள்ளச் செய்ய முடியும் என்றும், இதன்மூலம்  அவமானகரமான முடிவுக்கு நாம் வரக்கூடும் என்றும்  அவர்கள் இரகசியமாக விருப்பம் கொண்டுள்ளனர்  என்று நான் ஐயுறுகிறேன். அவர்கள் நமது நன்மை  விரும்பிகள் அல்ல, சமூகப் பிரச்சினைகளை விவாதிப்  பதற்கு மட்டுமே காங்கிரஸ் தகுதிபெற்றது என்று இத்  தகைய விமர்சகர்கள் கூறுவதைக் காணும்போது அவர்  களை தூர விலக்கி வைப்பதே சிறந்ததாக இருக்கும்  என்று கருதுகிறேன்.....”

”நமது சமூக அமைப்பை நாம் சீர்திருத்தம் செய்யும்  வரை அரசியல் சீர்திருத்தம் செய்யும் தகுதியை நாம்  பெற்றிருக்க மாட்டோம் என்று கூறுபவர்களைப் பொறுமை  யுடன் சகித்துக்கொள்ள முடியாதவர்களைப் நானும்  ஒருவன். இந்த இரண்டிற்கும் இடையில் எந்தத் தொடர்  பையும் என்னால் காணமுடியவில்லை. உதாரணமாக,  ஒரே அதிகாரியிடமிருந்து நீதிமன்ற நடவடிக்கைகளை  யும் நிர்வாக நடவடிக்கைகளையும் பிரிக்க வேண்டுமென்று பல ஆண்டுகளாக நாம் யோசனை கூறிவந்த  அரசியல் சீர்திருத்தங்களில் ஒன்றை எடுத்துக் கொள்  கிறேன். அப்பட்டமான அரசியல் சீர்திருத்தமான இதற்  கும் சமூக சீர்திருத்தத்திற்கும் இடையில் என்ன தொடர்  பிருக்க முடியும்? இதேபோன்று நாம் ஆதரித்து வந்த நிரந்தரக் குடியேற்றம் குறித்த, காடுகள் மற்றும் இதர  நடவடிக்கைகள் சம்பந்தமான சட்டத்திருத்தத்தையும்  எடுத்துக் கொள்ளுங்கள்; நான் மீண்டும் கேட்கிறேன்.  

இதற்கும் சமூக சீர்திருத்தத்திற்கும் என்ன சம்பந்தம்?  நமது விதவைகள் மறுமணம் செய்து கொள்ளாமல்  இருக்கிறார்கள், மற்ற நாடுகளில் நடப்பதைவிட நமது  பெண்களுக்கு விரைவில் திருமணம் செய்து கொடுத்து  விடுகிறோம் என்ற காரணத்தினால் நாம் அவற்றிற்குத் தகுதியற்றவர்களாகிவிட்டோமோ? நமது மனைவியரும்  புதல்விகளும் நம்முடன் காரில் நண்பர்கள் வீட்டுக்கு  வருவதில்லை என்ற காரணத்தினால், நமது புதல்வி  யரை நாம் ஆக்ஸஃப்போர்டுக்கும் கேம்ப்ரிட்ஜுக்கும்  அனுப்புவதில்லை என்ற காரணத்தினால் நாம் அவற்  றுக்குத் தகுதியற்றவர்களாகி விட்டோமோ? (மகிழ்ச்சி  ஆரவாரம்).

1895 இல் புனாவில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்ட்த் தொட ருக்குத் தலைமை வகித்த திரு. சுரேந்திரநாத் பானர்ஜிதான் இந்த விஷயத்தைக் கடைசிமுறையாகக் குறிப்பிட்ட காங்கிரஸ் தலைவ ராவார். தமது தலைமை உரையில் இந்த விஷயத்தைத் தொட்டுக் காட்டிய திரு. பானர்ஜி கூறியதாவது:

“நமது முகாமில் கருத்துவேறுபாடுகள் இருப்பதை  நம்மால் சகித்துக்கொள்ளமுடியாது. இது ஒரு இந்து  காங்கிரஸ் என்று சிலர் நம்மிடம் கூறிவருகின்றனர். ஆயினும் நமது முகம்மதிய நண்பர்கள் இங்கு குழுமி  யிருப்பது இந்த கூற்றுக்கு முற்றிலும் மாறுபட்டதாக  இருக்கிறது. இது ஏதோ ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரி  வினரின் காங்கிரஸ் அன்று. இந்துக்கள் மற்றும் முகம்மதி  யர்களின், கிறிஸ்தவர்களின், பார்சிகளின், சீக்கியர்களின்,  காங்கிரசாகும்; தமது சமூகங்களை சீர்திருந்த விரும்பு  வர்கள் மற்றும் விரும்பாதவர்களின் காங்கிரசாகும்.

இங்கு  நாம் ஒரு பொதுவான அணியில் திரண்டிருக்கிறோம் -  இங்கு நாமனைவரும் நமது சமூக, மத வேறுபாடுகளைக்  களைய ஒப்புக்கொண்டிருக்கிறோம்; ஒரே குடிமன்னரின்  பிரஜைகளாக இருந்துகொண்டு ஒரே அரசாங்கத்தின் கீழ்  ஒரே அரசியல் அமைப்புகளின் கீழ் வாழ்ந்து கொண்டுள்ள நாம் பொதுவான உரிமைகளையும் குறைகளை  யும் கொண்டுள்ளோம் என்ற பொதுவான உண்மையை அங்கீகரிக்கிறோம். நமது உரிமையைப் பாதுகாத்து விரிவுபடுத்தவும் நமது குறைகளைப் போக்கவுமான  கண்ணோட்டத்துடன் இந்தக் காங்கிரசை நாம் உருவாக்கி யுள்ளோம். தங்களது புதல்விகள் எந்த வயதில் மணம்  செய்துகொள்ள வேண்டுமென்பது குறித்து உடன்பாடு  காணமுடியாத மருத்துவ நிபுணர் குழுவினரின் நடவடிக்கை அவர்களது அறிவியிலின் கோட்பாடுகளுக்கு  இசைவானதாக இருந்தபோதிலும் கூட அவர்கள் ஏன்  வேறுபட்டிருக்கின்றனர், அல்லது தங்களது விதவைப் பெண்களுக்கு மறுமணம் செய்விக்கவேண்டுமா, கூடாதா  என்பதைப் பற்றி அவர்களுக்கிடையே ஏன் ஒற்றுமை  இல்லை என்பது குறித்து எல்லாம் நாம் என்ன கூற  முடியும்?...

நமது இயக்கம் ஓர் அரசியல் இயக்கம். இது  ஒரு சமூக இயக்கமல்ல; எனது வழக்கறிஞர் நண்பர்களை  ஏன் மருத்துவ நிபுணர்களாக இருக்கவில்லை என்று புகார்  கூற முடியாதோ அதேபோல நாம் ஏன் ஒரு சமூக அமைப்  பாக இருக்கவில்லை என்பதை ஒரு புகாருக்குரிய விஷயமாகக் கூறமுடியாது. அரசியல் விஷயங்கள் சம்பந்தமாகவும் கூட சிறுபான்மையினரின் கருத்துக்களுக்கு நாம்  அளித்துவந்த மதிப்பு அத்தகையதாகத்தான் இருந்து வருகிறது.

1887 இல் ஒரு சமயம் நமது தலைவராக இருந்த  வரும், பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டபோது தேசியப் பாராட்டுதலைப் பெற்றவருமான  திரு. பத்ருதீன் தியாப்ஜியின் முன்முயற்சியின் பேரில்  என்று கருதுகிறேன், ஒரு வர்க்கத்தினரிடையே – அவர்கள் காங்கிரசில் சிறுபான்மையினராக இருந்த போதி  லும் கூட நடைமுறையில் ஒருமித்த கருத்து நிலவும்  போது ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை விவாதிக்கக்  கூடாது அதை உடனடியாக கைவிடவேண்டும் என்ற  ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.”

“நம்முடையதைப் போன்ற ஓர் அமைப்பிற்கு விசேட  அபாயம் நேரிடும்போது அதிலிருந்து அது பாதுகாக்கப்  பட வேண்டும்... எதிர்ப்பையும் சச்சரவையும் தோற்று  விக்கும் விதைகள் உள்ளிருந்தே உருவாகும் அபாயத்தை  எதிர்த்துப் போராட வேண்டும்.

இந்த அறிக்கைகளைப் பற்றிய இரு பிரச்சினைகளுக்கு விளக்கங்கள் தேவைப்படுகின்றன. தலைவர்கள் குறிப்பிட்ட சமூக சீர்திருத்தக்கட்சி எது என்பதைத் தெரிந்துகொள்வது முதலாவ தாகும். சமூக சீர்திருத்தப் பிரச்சினைக்கும் காங்கிரசுக்கும் உள்ள் உறவு குறித்து ஒரு காங்கிரஸ் தலைவர் பிரஸ்தாபிப்பது அவசிய மெனக் கருதிய கடைசி சந்தர்ப்பம் 1895 இல் காங்கிரசில் திரு. சுரேந்திரநாத் பானர்ஜி உரையாற்றியதுதான். 1895க்குப் பின்னர் ஏன் எந்தத் தலைவரும் அந்த விஷயத்திற்கு முக்கியத்துவம் தருவது அவசியமேனக் கருதவில்லை என்பது இரண்டாவதாகும்.

1885ல் பம்பாயில் இந்திய தேசியக் காங்கிரஸ் தோற்றுவிக்கப் பட்டபோது, இத் தேசிய இயக்கம் பிரத்தியேகமாக அரசியல் இயக்க மாக மட்டும் இல்லாமல் அரசியல் பிரச்சினைகளைக் கருத்தில் கொள்வதுடன் இந்திய சமூகப் பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளையும் கூட விவாதிக்க வேண்டும், சமூக அவலங்கள், சமூகத்தீமைகளனைத்தையும் போக்குவதன் மூலம் இந்து சமுதாயத் திற்குப் புத்துணர்வு ஊட்டுவதற்காக மிகச்சிறந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்த இயக்கத்தின் தலைவர்கள் உணர்ந்தனர் என்பதைக் குறிப்பிடுவது முதலாவது பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கு அவசியமாகும். இதே கண்ணோட்டத்துடன், பம்பாயில் நடைபெற்ற முதலாவது காங்கிரஸ் கூடிய சந்தர்ப்பத்தில் திவான்பகதூர். ஆர். ரகுநாத் ராவும் திரு. நீதிபதி (அப்போது ராவ் பகதூர்). 1886ல் கல்கத்தாவில் மேற்கொண்டு எதுவும் செய்யப்படவில்லை.

காங்கிரஸ் சமூகப் பிரச்சினைகளில் அக்கறை கொள்ள வேண்டுமா அல்லது சமூகப் பிரச்சினைகளை விவாதிப்பதற்கு தனி யாக ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டுமா என்பது சம்பந்தமாக காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர்களிடையேயும் நன்கு கல்வி கற்ற இந்திய சிந்தனையாளர்களிடையேயும் இதர தலைவர்களிடை யேயும் விவாதம் தொடர்ந்து நடைபெற்றது வந்தது. இந்திய சமூகப் பொருளாதராம் சம்பந்தமான விஷயங்களைப் பரிசீலனை செய் வதற்காக இந்திய தேசிய சமூக மாநாடு என்ற பெயரில் தனியாக ஓர் அமைப்பைத் தொடங்க வேண்டுமென்று தீவிர ஆலோசனை களுக்குப் பின்னர் தீர்மானிக்கப்பட்டது.

இத்தீர்மானத்தில் பங்கு வகித்தவர்களில் திவான் பகதூர் ஆர். ரகுநாத் ராவ், திரு. மகாதேவ் கோவிந்த ரானடே, திரு. நரேந்திரநாத் சென், திரு. ஜானகிநாத் கோசல் ஆகியோர் அடங்குவர். அந்த மாநாட்டின் பிறப்பிடமாக இருந்த பெருமை சென்னையைத் தான் சாரும். ஏனெனில் 1887 டிசம்பரில் சென்னையில்தான் முதலாவது இந்திய தேசிய சமூக மாநாடு நடை பெற்றது. தமது காலத்தில் பிரதான ராஜியவாதியாக இருந்த மறைந்த ராஜா சர்.டி. மாதவராவ், கே.சிஎஸ்.ஐ அதற்குத் தலைமை வகித்தார்.

ஆனால் இந்த முதலாவது மாநாட்டில் அவ்வளவாகப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. அப்போது கூடியிருந்த உறுப்பினர்கள் இதர முக்கியத் தீர்மானங்களிடையே நமது சமுதாயத்தின் அந்தஸ்தை யும் நமது சமூகப் பயன்பாடுகளையும் மேம்படுத்துவற்குத் தேவை யான நடவடிக்கைகளைப் பரிசீலனை செய்து மேற்கொள்ளவும், இந்தியாவின் பல்வேறு பகுதியில் வருடாந்திர தேசிய மாநாடு களை நட்த்துவதற்குமான தேவையை அங்கீகரிக்கவும், மாநாடுகளின் மாகாண உபகமிட்டிகளை ஏற்படுத்தி ஒழுங்கமைக்கவுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்தனர்.

அந்த மாநாடு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடிய சமூக விஷயங்களில் தொலைதூரக் கடல் பயணங்கள் செய்வதற்குள்ள இடையூறுகள், திருமணங்களுக்கு செய்யப்படும் அழிவுகரமான செலவினங்கள், திருமணங்களுக்கான வயது வரம்பை நிர்ணயித்தல், இளம் விதவை களுக்கான மறுமணம், இளம் பெண்களை முதியவர்களுக்கு மறுமணம் செய்துகொடுப்பதனால் ஏற்படும் தீமைகள், ஒரே ஜாதி யின் உப்பிரிவுகளுக்கிடையே கலப்பு மணங்கள் மற்றும் திருமணங் கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானிக்கப்பட வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

வெவ்வேறு சமூகப் பிரச்சினைகளை சமாளிப்பதற்கு வெவ் வேறு உபகமிட்டிகள் இருக்கவேண்டும் என்று கருதப்பட்டது. சில அடிப்படைக் கோட்பாடுகளையும் இக்கோட்பாடுகளை மிறுவதற் கான தண்டனைகளையும், இத்தகைய தண்டனைகளுக்குக் கட்டுப் பட ஒப்புப்கொள்ளும் சமூக சீர்திருத்தக் கட்சியின் உறுப்பினர் கள் சம்பந்தமாக அவற்றை நடைமுறைப்படுத்தி செயல்படுத்தும் பொறுப்பு உபகமிட்டிகளிடம் ஒப்படைக்கப்படும். 1. உப கமிட்டி களே அவற்றை செயல்படுத்தும் அல்லது 2. சாத்தியமாகும் போதெல் லாம் அவர்களுடைய ஆன்மீகத் தலைவர்கள் மூலமாக, அல்லது 3. சிவில் நீதிமன்றங்களில் மூலமாக, அல்லது இவையெல்லாம் பயனளிக்காவிட்டால் தமது சொந்த சூளுரை ஏற்றுக் கொண்ட உறுப்பினர்கள் விஷயத்தில் விதிகளை அமல்படுத்துவதற்கு ஏதுவாக அரசாங்கத்திற்கு விண்ணப்பித்தல் ஆகிய வழிமுறைகள் மூலம் செயல்படுத்தப்படும்.

இந்து சமுதாயத்தைப் பீடித்துள்ள பல சமூக அவலங்களை விவாதிப்பதற்காகத் தனக்குச் சொந்தமாக ஒரு தனி அமைப்பை சமூக சீர்திருத்தக் காட்சி உருவாக்கியிருந்த அதேசமயம் சமூக சீர்திருத்தப் பிரச்சினைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட காங்கிரசின் போக்கு குறித்து முழுமையாக அவர்கள் அதிருப்தி யடைந்திருந்தனர். அரசியல் சீர்திருத்தத்திற்கு முன்னோடியாக சமூக சீர்திருத்தம் இருக்க வேண்டுமா, கூடாதா என்பதை ஒரு பிரச் சினையாக்குவதில் அவர்களில் சிலர் துடிப்புடன் இருந்த்துடன் ஒரு முடிவு எடுக்கப்படவேண்டுமென்றும் விரும்பினர். இதில் அவர் களுக்கு பல நண்பர்கள் ஆதரவளித்தனர். அவர்களிடையே இந்திய அரசாங்கத்தையும் காணமுடிந்தது. “இந்திய அரசாங்கம் ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன என்பதை பிரிட்டிஷாருக்குக் கற்றுத் தருவதற்கான” முயற்சிகளைக் செய்வதற்குப் பதிலாக சமூக சீர்திருத் தத்தின்பால் தங்களது கவனத்தை இந்தியர்கள் திருப்ப வேண்டும் என்று வைசிராயின் நிர்வாக்க்குழுவின் ஓர் உறுப்பினரான சர். ஆக்லேண்ட் கால்வின் மிகத் தெளிவாகவும் உறுதிபடவும் கூறினார்.  மேலே குறிப்பிட்ட காங்கிரஸ் தலைவர்களின் உரைகளில் சமூக சீர்திருத்தம் குறித்த அவர்களது மேற்கொள்களை இப்போது எளிதில் புரிந்து கொள்ள முடியும். சமூக அவலங்களை அகற்றுவதிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட காங்கிரசுக்கு எதிராக சமூக சீர்திருத்தக்கட்சி செய்த விமர்சனத்திற்கு இவை ஒரு பதிலேயாகும்.

1895க்குப் பின்னர் தமது தலைமை உரையில் எந்த ஒரு காங் கிரஸ் தலைவரும் சமூக சீர்திருத்தப் பிரச்சினைகளை ஏன் குறிப்பிட வில்லை என்ற இரண்டாவது கேள்விக்கு, 1895க்கு முன்னர், சமூக சீர் திருத்தமா, அரசியல் சீர்திருத்தமா என்பது குறித்து காங்கிரசாரிடையே இரு விதக் கருத்துக்கள் நிலவின என்பதுதான் பதிலாகும். ஒரு கருத்து சம்பந்தமான கண்ணோட்டத்தை திரு. தாதாபாய் நௌரோஜி, திரு. பத்ருதீன் தியாப்ஜி, திரு. சுரேந்திரநாத் பானர்ஜி ஆகியோர் ஆதரித் தனர். மற்றோரு கருத்து சம்பந்தமான கண்ணோட்டத்தை திரு. டபிள்யூ.சி. பானர்ஜி வெளியிட்டார். முதலாவது கருத்து சமூக சீர் திருத்தத்திற்கான தேவையை அங்கீகரித்தது. ஆனால், காங்கிரஸ் கூட்டத்தொடர் அதற்கான இடமல்ல என்று கருதியது. இரண்டாவது கருத்து சமூக சீர்திருத்தத்திற்கான தேவையை மறுத்தது; சமூக சீர் திருத்தம் இன்றி அரசியல் சீர்திருத்தம் ஏற்படமுடியாது என்ற கருத் துக்குச் சவால்விட்டது. காங்கிரசில் இருந்த இந்த இரு கருந்தோட்டங் களும் அடிப்படையில் ஒன்றுக்கு ஒன்று எதிரானதாக இருந்தபோதிலும் கூட அவை 1895 வரை ஒன்றின்பால் ஒன்று பகைமை கொள்ளவில்லை.

முன்னதாகக் கூறப்பட்ட கருத்தோட்டமே மேலோங்கிய நிலையில் இருந்தது. அதன் விளைவாக இந்திய தேசியக் காங்கிரசும் சமூக மாநாடும் இரு இணையான அமைப்புகளாகச் செயல்பட்டன. ஒவ்வொன்றும் தனது சொந்த குறிப்பிட்ட நோக்கங்கங்களுக்காகவும் குறிக்கோள்களுக்காகவும் பாடுபட்டன. இந்த இரு அமைப்புகளுக் கும் இடையில் நல்லெண்ணம், ஒத்துழைப்பு ஆகிய உணர்வுகள் மேலோங்கியிருந்தன, தேசியக் காங்கிரஸ் மற்றும் சமூக மாநாட்டின் கூட்டத் தொடர்கள் ஒன்றன்பின்ஒன்றாகத் தொடர்ந்து ஒரே பந்தலி லேயே நடைபெற்றன. காங்கிரஸ் கூட்டத்தொடரில் கலந்து கொண்டவர்களின் பெரும்பாலானவர்கள் சமூக மாநாட்டில் கலந்து கொண் டனர். ஆயினும் சமூக சீர்திருத்தத்திற்கு எதிரான பிரிவைச் சேர்ந்த காங்கிரஸ்கார்ரகளின் கண்களுக்கு சமூக மாநாடு ஓர் உறுத்தலாக இருந்தது. சமூக மாநாட்டிற்கு காங்கிரசில் உள்ள முனைப்பான பிரி வினர் ஆதரவு அளித்து வந்ததையும் அதற்கு இடமளிக்கும் உணர்வையும், குறிப்பாக காங்கிரஸ் பந்தலை அந்தக் கூட்டத் தொடரை நடத்து வதற்குப் பயன்படுத்த அனுமதித்த விஷயத்தையும் கண்டு இந்தப் பிரிவினர் கலக்கமடைந்தனர்.

1895 இல் புனாவில் காங்கிரஸ் கூடிய போது சமூக சீர்திருத்தத்தை எதிர்க்கும் இந்த பிரிவினர் கலகம் செய்த துடன் காங்கிரஸ் பந்தலை சமூகமாநாடு பயன்படுத்த காங் கிரஸ் அனுமதிக்குமானால் அதைத் தீக்கிரையாக்கப் போவதாகவும் அச்சுறுத்தினர். சமூக மாநாட்டிற்கான இந்த எதிர்ப்புக்கு இந்தியாவில் ஏராளமாக இருந்த சமூகப் பழமை வாதிகள் மற்றும் அரசியல் தீவிரவாதிகளில் ஒருவரான மறைந்த திரு. திலகர் தலைமை வகித்தார். இவர்தான் ‘சுயராஜ்யம் எனது பிறப்புரிமை” என்ற முழக் கத்தின் தந்தையாவார். இந்த முழக்கம்தான் காங்கிரஸ் பதாகை களில் இன்றைக்கு மின்னுவதை நாம் காண்கிறோம். காங்கிரசில் இருந்த சமூக சீர்திருத்த ஆதரவுக்கட்சி தனது எதிரிகளை (சமூக மாநாடு காங்கிரஸ் பந்தலைப் பயன்படுத்துவது சம்பந்தமாகத் திரு. திலகரின் கட்சி எழுப்பிய பிரச்சினை குறித்து திரு. ரானடேக்கு திரு. சுரேந்திரநாத் பானர்ஜி எழுதிய கடிதத்திலிருந்து காங்கிரசில் இருந்த சமூக சீர்திருந்த ஆதரவுக் கட்சி அந்த சவாலை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை என்பது தெளிவாகிறது. அக்கடிதத்தில் அவர் கூறியதாவது, “நமது விவாதங்களிலிருந்து சமூகப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கான முழு முதற்காரணம் என்னவெனில், நாம் இத்தகைய பிரச்சினைகளை விவாதித்தோமானால் அது ஆழ்ந்த கருந்து வேறுபாடுகளுக்கு இட்டுச் செல்லக் கூடும். அது பிளவில் முடியக்கூடும், ஆகவே ஒருபிளவைத் தடுப்பது முதலாவது முக்கியத்துவமுள்ள விஷயமாகும். எதிர்த்தரப்பின் வேண்டுகோள் மிகவும் நியாயமற்றதுதான்; ஆனால் சில சமயங்களில் பெரும் தீமைகளைத் தவிர்ப்பதற்காக நாம் நியாயமற்ற கோரிக்கைகளுக்கு இணங்க வேண்டியுள்ளது.”)

எதிர்த்துப் போராடாத் தயாராக இல்லாததே இக்கிளர்ச்சி வெற்றியடைந்ததற்கு பிரதான காரணமாகும். இந்தக் கலகம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திற்று. சமூகசீர்திருத்தம் சம்பந்தமான எந்தப் பிரச்சினையையும் அது எவ்வளவு அவசரமானதாக இருந்தாலும் காங்கிரஸ் அவற்றை விவாத்த்திற்கு அனுமதியாது என்ற தீர்வை அது ஏற்படுத்திற்று (மாநாட்டுக்கு எதிராக காங்கிரசில் சமூக சீர்திருத்த எதிர்ப்புக் கட்சி நடத்திய கலகத்தை சில முன்னாள் சமூக சீர்திருத்தவாதிகள் வரவேற்றனர். “காங்கிரஸ் பந்தல் சமூக மாநாட்டினால் பயன்படுத்தப்படுவதை அனுமதிக்கவில்லை என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஏனெனில் காங்கிரஸ் சமூக மாநாட்டுடன் இணைந்து செயல்படுவதாக ஆங்கிலேயர்களுக்குக் காட்டப்பட்டு வந்த ஏமாற்று வேலையின் முகமூடி கிழித்தெறியப்பட்டது. சமூக மாநாட்டுடன் இணைந்து செயலாற்ற காங்கிரஸ் உண்மையில் விரும்பவில்லை என்பதை இப்போது ஆங்கிலேயர்கள் தெளிவாகப் புரிந்துகொள்வார்கள்” என்று திவான் பகதூர் ஆர். ரகுநாத் ராவ் திரு. ரானடேக்கு எழுதினார்).

தங்களது தலைமையுரைகளில் 1895க்குப் பின்னர் எந்த ஒரு காங்கிரஸ் தலைவரும் சமூக சீர்திருத்தப் பிரச்சினையை ஏன் குறிப்பிடவில்லை என்பதற்கு இதுவே விளக்கமாகும். 1895 இல் தனது நடவடிக்கை யின் மூலம் முழுக்க முழுக்க சமூகத் தீமைகளைக் களைவதிலோ அல்லது தணிப்பதிலோ அக்கறையில்லாத, ஆர்வமில்லாத ஓர் அரசியல் அமைப்பாக காங்கிரஸ் மாறியது.

III

இந்தப் பின்னணியில் இருந்து பார்க்கும்போது 1917இல் தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் பற்றி காங்கிரஸ் இயற்றிய தீர்மானம் ஒரு விநோதமான சம்பவம் என்பது தெளிவாகிறது. 32 ஆண்டுகளாக இயங்கிவந்த போதிலும் கூட காங்கிரஸ் முன் எப்போதும் இத் தகைய விஷயத்தைச் செய்தது கிடையாது. தனது அறிவிக்கப்பட்ட கொள்கைக்கும் இது மாறானதாக இருந்தது.

1917 இல் ஒரு தீர்மானத்தை இயற்றவேண்டியது அவசியம் என்று ஏன் காங்கிரஸ் கருதிற்று? தீண்டப்படாதவர்களைப் பற்றி அக்கறைகொள்ள அதைத் தூண்டியது எது? அதனால் அது பெற விரும்பிய லாபம் என்ன? அது யாரை ஏமாற்ற விரும்பியது? அத னுடைய பார்வையின் கோணத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் காரண மாகவா அல்லது ஏதேனும் உள் நோக்கம் காரணமாகவா? இக் கேள்விக்கான பதிலைக் காண இரு வெவ்வேறு தலைவர்களின் கீழ் பம்பாயில் நடைபெற்ற இரு தனித்தனியான கூட்டங்களில் 1917இல் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இயற்றிய பின்வரும் தீர்மானங்களின் பால் கவனத்தைத் திருப்ப வேண்டும். இக்கூட்டங்களில் முதலாவது 1917 நவம்பர் 11 அன்று திரு. நாரயண் சந்தவார்க்கரின் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் (இந்தியாவிலுள்ள வைஸ்ராய்க்கும், இந்தியா மந்திரிக்கும் சமர்ப்பிக்கப்பட்ட மகஜர்கள் (1918). நாடாளுமன்ற ஆவணம் சி.டி. 9178 பக்கம் 74-75) இயற்றப்பட்டன:

“முதலாவது தீர்மானம்: பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு  விசுவாசமாக இருத்தல் மற்றும் நேச நாடுகளுக்கு வெற்றி  கிட்ட பிரார்த்தித்தல்.”

”இரண்டாவது தீர்மானம் கூட்டத்தில் இறுதிப் பெரும்  பான்மை யினரால் நிறைவேற்றப்பட்டது. எதிர்ப்பாளர்  கள் கிட்டத்தட்ட ஒருடஜன் பேரே இருந்தனர். இந்திய  தேசியக் காங்கிரசும் அகில இந்திய முஸ்லிம் லிகும் பரிந்  துரை செய்த இந்திய நிர்வாகத்தைச் சீர்திருத்தும் திட்டத்  திற்கு அங்கீகாரத்தை தெரிவித்தது.”

“மூன்றாவது தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்  பட்டது. இந்தியாவிலுள்ள தாழ்த்தப்பட்ட வகுப்புகளைக்  சேர்ந்த மக்கள் தீண்டப்படாதவர்களாகக் கருதப்படுவ  தாலும், அவ்வாறே நடத்தப்படுவதாலும், அவர்கள் நடத்தப்படும் விதத்தினால் அவர்களுடைய நிலைமை தரம் தாழ்ந்  திருப்பதாலும், கல்வி விஷயத்தில் அவர்கள் மற்றவர்  களைவிடப் பின்தங்கியிருப்பதாலும், தங்களது மேம்  பாட்டிற்கு நேர்மையான வாய்ப்புகளைப் பெறமுடியாத  நிலையில் இருப்பதாலும் தாழ்த்தப்பட்ட மக்களின் இப்  பொதுக்கூட்டம், அரசாங்கம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளக்கூடிய சட்டமன்றங்களின் சீர்திருத்தம் மற்றும் புனரமைப்பு ஆகியவற்றுக்கான திட்டத்தில், மேற்  கூறப்பட்ட வர்க்கங்களின் நலன்களுக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும் என்று கருதுகிறது. தங்களது எண்ணிக்கைக்கு ஈடான வீதாசாரத்தில் மேற்கூறப்பட்ட சட்ட  மன்றங்களுக்குத் தங்களது பிரதிநிதிகளைத் தாங்களே  தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையை அந்த வர்க்கங்  களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களுடைய நலன்  களைப் பாதுகாப்பதில் பிரிட்டிஷ் அரசாங்கம் கனிவுடன்  நடந்து கொள்ளுமாறு இக்கூட்டம் வேண்டிக் கொள்கிறது.”

“இக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட  நான்காவது தீர்மானம் வருமாறு: ‘தாழ்த்தப்பட்ட மக்களின்  கிழான நிலைக்கு அவர்களது கல்வியறிவின்மையும்  அறியாமையுமே காரணம் என்பதாலும், எந்த ஒரு  சமுதாயத்தின் சமூக மேம்பாடும் அதன் உறுப்பினர்  களிடையே ஒட்டுமொத்தமாகக் கல்வி பரவுவதைப்  பொறுத்தே உள்ளது என்ற உண்மையினாலும் கட்டாய  இலவசக் கல்வி முறையை முடிந்த அளவுக்கு வேகமாக  செயல்படுத்த வேண்டுமென்று அரசாங்கத்தைக் கேட்டுக்  கொள்கிறது.”

ஒருமனதாக இயற்றப்பட்ட ஐந்தாவது தீர்மானம்  வருமாறு: “தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின்மீது மதமும்  சம்பிரதாயமும் திணித்த எல்லாத் குறைபாடுகளையும் அகற்றுவதன் அவசியத்தை, நீதியை, நேர்மையை இந்திய  மக்கள் அனைவருக்கும் பிரகடனம் செய்யும் ஒரு தெளி  வான, சுதந்திரமான தீர்மானத்தை இந்திய தேசியக் காங்கிரஸ் அதன் வரவிருக்கும் கூட்டத்தொடரில் நிறைவேற்று  மாறு கேட்டுக்கொள்ளும் அதிகாரத்தை இப்பொதுக்கூட்  டத்தின் தலைவருக்கு வழங்குகிறது. மிகவும் துயர  மளிக்கும் அடக்கி ஒடுக்கும் தன்மை கொண்ட இக்குறை  பாடுகளினால், அரசுப் பள்ளிகள், மருத்துவ மனைகள்,  நீதிமன்றங்கள், அரசாங்க அலுவலங்கள் மற்றும்  பொதுக்கிணறுகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றில் நுழைவதைத் தடைசெய்வதன்மூலம் அந்த வர்க்கங்கள்  கடும் இன்னல்களுக்கும் சங்கடங்களுக்கும் உள்ளாக்கப்  படுகின்றனர். சமூக மூலகாரணங்களைக் கொண்டிருக்கும்  இக்குறைபாடுகள் சட்டத்திலும் நடைமுறையிலும் அர  சியல் குறைபாடுகளுக்கு இட்டுச் செல்வதனால் இவை  இந்திய தேசியக் காங்கிரசின் அரசியல் பணியிலும்  மற்றும் பிரசாரத்தினுள்ளும் நியாயமாகவே வருகின்றன.”

“தீண்டப்படாதவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்  களைத் தவிர இதர ஜாதிகளைச் சேர்ந்த இந்துக்களனை  வரையும், குறிப்பாக அரசியல் உரிமைகளுக்கு உரிமை  கொண்டாடும் உயர்ஜாதிக்காரர்களை தமது சொந்த  நாட்டில் மிகமோசமான முறையில் அந்த வர்க்கத்  தினரை நடத்திவந்துள்ள அவர்களை தாழ்த்தப்பட்ட  வர்க்கங்களிலிருந்து இழிநிலை என்ற கறையை  அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  ஆறாவது தீர்மானம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.”

முதலாவது கூட்டம் நடந்து முடிந்த ஒரு வாரத்திற்குப் பின்னர் 1917 நவம்பரில் இரண்டாவது கூட்டமும் நடைபெற்றது. பிராமணர் அல்லாத கட்சியின் தலைவரான பாபுஜி நாம்தேவ் பகாடே என்பவர் அதற்குத் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பின்வரும் தீர் மானங்கள் (வைசிராயிடமும் இந்தியா மந்திரியிடமும் சமர்ப்பிக்கப்பட்ட மகஜர்கள், பக்கம் 75) ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன:

 “(1) பிரிட்டிஷ் சிம்மாசனத்துக்கு விசுவாசமாக  இருத்தல்.

 “(2) 1917 நவம்பர் 11 அன்று நடைபெற்ற கூட்டத்தில்  அறுதிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட  தாக அறிவிக்கப் பட்டிருந்தாலும் மீறி காங்கிரஸ்-லிக் திட்  டத்திற்கு இக்கூட்டம் தனது ஆதரவை வழங்க முடியாது.”

 “(3) எல்லா வர்க்கத்தினரும் குறிப்பாக தாழ்த்தப்  பட்ட வர்க்கத்தினர் நாட்டின் நிர்வாகத்தில் பயனுறுதி  யுடன் பங்கு கொள்ளும் நிலைமை ஏற்படும் வரை,  இந்தியாவின் நிர்வாகம் பெருமளவில் பிரிட்டிஷாரின்  கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்று இக்  கூட்டம் கருதுகிறது.”

 “(4) இந்திய மக்களுக்கு அரசியல் சலுகைகளை  வழங்க பிரிட்டிஷ் அரசாங்கம் முடிவு செய்திருக்கும்  பட்சத்தில், தங்களது அரசியல் மற்றும் சிவில் உரிமை  களை உறுதிப்படுத்துவதற்காகப் பல்வேறு சட்டமியற்  றும் அமைப்புகளில் தீண்டப்பாடதவர்க்கென்று சொந்தப்  பிரதிநிதிகளை அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமென்று  இக்கூட்டம் வேண்டிக் கொள்கிறது.”

 “(5) பாகிஷ்கிரித் பாரத் சமாஜின் (இந்திய தாழ்த்தப்  பட்டவர்களின் சங்கம்) நோக்கங்களை அங்கீகரிக்கும்  இக்கூட்டம் அதன் சார்பாக திரு. மாண்டேகுவைச் சந்திக்க  அனுப்பப்பட விருக்கும் பிரதிநிதிக் குழுவையும் ஆதரிக்  கிறது.”

 “(6) தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் சிறப்புத் தேவை  களைக் கவனித்துவரும் அரசாங்கம் ஆரம்பக் கல்வியை  இலவசமானதாகவும் கட்டாயமானதாகவும் ஆக்க வேண்டு  மென்று இக்கூட்டம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.  தாழ்த்தப்பட்ட வர்க்கங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு  உதவித் தொகைகள் வழங்குவதன் மூலம் விசேட வசதி  களை வழங்குமாறு அரசாங்கத்தை இக்கூட்டம் கேட்டுக்  கொள்கிறது.”

 ”(7) மேற்கண்ட தீர்மானங்களை வைஸ்ராய்க்கும்  பம்பாய் அரசாங்கத்திற்கும் அனுப்பி வைப்பதற்கு இக்  கூட்டம் தலைவருக்கு அதிகாரமளிக்கிறது.”

சர் நாராயண் சந்தவர்கரின் தலைமையின் கீழ் பம்பாயில் நடைபெற்ற தங்களது கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினர் இயற்றிய தீர்மானத்திற்கும், தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரை மேம் பாடடைய செய்வது குறித்து 1917 ஆம் ஆண்டின் காங்கிரஸ் தீர்மானத்திற்கும் இடையில் ஒரு நெருங்கிய தொடர்பு இருப்பது தெளிவாகிறது. 1917 ஆம் ஆண்டின் நடைபெற்ற அரசியல் சம்ப வங்களைப் பார்க்கும்போது இத்தொடர்பை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். 1917இல் தான் அல்லது சரியாகச் சொல்லப் போனால் 1917 ஆகஸ்டு 20 அன்றுதான் இந்தியாவுக்கான வெளி யுறவுச் செயலாளராக இருந்த மறைந்த திரு. மாண்டேகு இந்தியா புதிய கொள்கையை காமன்ஸ் சபையில் அறிவித்தார்.

“பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஓர் ஒருங்கிணைந்த பகுதி என்ற முறையில் இந்தியா வில் பொறுப்புள்ள அரசாங்கத்தை முற்போக்கான முறையில் நனவாக்கும் கண்ணோட்டத்துடன் சுயாட்சி அமைப்புக்களைப் படிப்படியாக உருவாக்குவதே” அக்கொள்கையாகும். மாட்சிமை பொருந்திய மன்னரின் அரசாங்கத் தரப்பிலிருந்து இத்தகைய ஏதோ ஒரு கொள்கைப் பிரகடனத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த முன்னணி இந்திய அரசியல்வாதிகள், இத்தகைய ஒரு கொள்கையை எதிர்பார்த்து இந்தியாவின் அரசியல் சட்ட கட்டமைப்பில் மாற்றங் களை ஏற்படுத்துவதற்கான திட்டங்களைத் தயாரித்துக் கொண் டிருந்தனர். அவ்வாறு உருவாக்கப்பட்ட பல திட்டங்களில் இரு திட்டங்களில் மீது பொதுமக்களின் கவனம் குவிந்திருந்தது. அதில் ஒன்று “பத்தொன்பதின் திட்டம்” என்று அழைக்கப்பட்டது. இரண் டாவது “காங்கிரஸ்-லீக் திட்டம்” என்று அழைக்கப்பட்டது.

முதலாவது திட்டம் அப்போதைய தேர்ந்தெடுக்கப்பட்ட 19 கூடுதல் உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்டது. இரண்டாவது திட்டம் காங்கிரஸ் மற்றும் லீகினால் ஆதரிக்கப்பட்ட அரசியல் சீர்திருத் தங்களுக்கான ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டமாகும். இது லக்னோ ஒப்பந்தம் என்றும் அறியப்பட்டது. 1916இல், திரு. மாண்டேகுவின் அறிவிப்பு வருவதற்கு ஓராண்டிற்கு முன்னர் இந்த இரு திட்டங் களும் நடப்பிற்கு வந்தன.

இந்த இரு திட்டங்களில், காங்கிரஸ் தனது சொந்தத் திட் டத்தை மாட்சிமை பொருந்திய மன்னரின் அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருந்தது. அந்த நோக்கத்தைக் கருத்தில் கொண்டிருந்த காங்கிரஸ், காங்கிரஸ்-லீக் திட்டத்திற்கு ஒரு தேசிய கோரிக்கை என்ற அந்தஸ்தையும் தன்மை யையும் வழங்குவதில் குறியாக இருந்தது. இந்தியாவில் உள்ள எல்லா சமூகங்களின் ஆதரவு இத்திட்டத்திற்கு இருந்தால் மட்டுமே இது நடைபெற முடியும். இத்திட்டத்தை முஸ்லிம் லீக் ஏற்றுக் கொண் டிருந்த காரணத்தினால் முஸ்லீம் சமுதாயத்தினரின் ஆதரவைப் பெறுவது என்ற பிரச்சினை எழவில்லை.

அடுத்தபடியாக எண் ணிக்கையில் அதிகமானவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினராவர். முஸ்லீம்களைப் போன்று நன்கு கட்டுக்கோப்பானவர்களாக இல்லாத போதிலும் அரசியல் ரீதியாக அவர்கள் மிகவும் தெளிவுபெற்றவர் களாக இருந்தனர் என்பதை அவர்களுடைய தீர்மானங்கள் காட்டு கின்றன. அவர்கள் அரசியல் ரீதியாகத் தெளிவுபெற்றவர்களாக இருந்தது மட்டுமன்றி அவர்கள் எப்போதும் காங்கிரஸ் எதிர்ப் பாளர்களாக இருந்தனர். உண்மையில் 1895இல் காங்கிரஸ் பந்தல், சமூக அநீதிகளை எடுத்துரைப்பதற்காகப் பயன்படுத்த சமூக மாநாட் டிற்கு அனுமதியளிக்கப்படுமானால் பந்தலைத் தீக்கிராயாக்கி விடுவதாக திரு. திலகரின் ஆதரவாளர்கள் அச்சுறுத்தியபோது, தீண்டப்படாதவர்கள் காங்கிரசுக்கு எதிராகப் பேரணி ஒன்றை நடத்தி அதன் உருவ பொம்மையையும் கொளுத்தினர். காங்கிரசின் பாலான இந்த இயல்பான வெறுப்பு அதுமுதல் தொடர்ந்தது.

1917இல் பம்பாயில் நடைபெற்ற தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் இந்த இரு கூட்டங் களில் இயற்றப்பட்ட தீர்மானங்கள், காங்கிரசின்பால் தாழ்த்தப் பட்ட வர்க்கங்களின் மனதில் இந்த வெறுப்பு இருந்து வந்தது என்பதற்குப் போதுமான அத்தாட்சியாக விளங்குகின்றது. காங் கிரஸ்-லீக் சீர்திருத்தத் திட்டத்திற்குத் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் ஆதரவை பெறுவதில் காங்கிரஸ் ஆவல்கொண்டிருந்த அதேசமயம், அந்த ஆதரவைப் பெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்பதையும் அறிந்திருந்தது. இப்போது காங்கிரஸ் செய்துவருவது போன்று லஞ்ச லாவண்யத்தின் மூலம் மக்களைக் கெடுக்கும் கலையை காங்கிரஸ் அப்போது பயன்படுத்தவில்லையாதலால் –அப்போது காங்கிரஸ் அக்கலையை ஏற்கவில்லை –அது காங்கிரசின் ஒரு முன்னாள் தலை வரான மறைந்த சர்.

நாராயண சந்தவார்க்கரின் சேவைகளைப் பயன் படுத்திக் கொண்டது. தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் மிஷன் சொசைட் டியின் தலைவர் என்ற முறையில் அவர் தாழ்த்தப்பட்ட வர்க்கத் தினரிடையே கணிசமான செல்வாக்குப் பெற்றிருந்தார். அவருடைய செல்வாக்கின் பலனாகவும் அவர் மீதிருந்த மதிப்பின் காரணமாகவும் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரில் ஒரு பிரிவினர் காங்கிரஸ் லீக் திட்டத்திற்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டனர்.

தீர்மான வாசகம் கூறுவதுபோன்று அது காங்கிரஸ் – லீக் திட்டத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கவில்லை. தாழ்த்தப் பட்டவர்களின் சமூக அவலங்களை அகற்றுவதற்கான ஒரு தீர் மானத்தை காங்கிரஸ் நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில்தான் ஆதரவு வழங்க அது ஒப்புக் கொண்டது. சர். நாராயண் சந்தவார்க்கர் மூலமாகப் பேசித் தீர்க்கப்பட்ட தாழ்த்தப்பட்ட வர்க் கங்களுடனான ஒப்பந்தத்தின் தனது பங்கை காங்கிரஸ் தனது தீர் மானத்தின் மூலம் நிறைவு செய்தது.

தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் குறித்த 1917 ஆம் ஆண்டின் காங் கிரஸ் தீர்மானத்தின் மூலகாரணத்திற்கும், சர் நாராயண் சந்தவார்க் கரின் தலைமையின் கீழ் இயற்றப்பட்ட தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் தீர்மானங்களுக்கும் இடையில் உள்ள தொடர்பை இது விளக்கு கிறது. காங்கிரஸ் தீர்மானத்திற்குப் பின் ஓர் உள்நோக்கம் இருந்தது என்பதை இது நிரூபிக்கிறது. அந்த நோக்கம் ஆன்மீக நோக்கமல்ல. அது ஓர் அரசியல் நோக்கமாக இருந்தது.  

 காங்கிரஸ் தீர்மானத்திற்கு என்ன நேர்ந்தது? “தங்களுக்கு அரசியல் உரிமைகள் வேண்டுமென்று உரிமை கோரும் உயர் ஜாதியினரை, தங்களது சொந்த நாட்டால் இந்த வர்க்கங்களை மிக மோசமாக நடத்தி வந்துள்ள உயர்ஜாதியினரை, தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரின் மீது படிந்துள்ள அவமானக் கறையை அகற்றுவதற் கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு” தங்களது தீர்மானத்தில் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினர் கேட்டுக் கொண்டனர். தாழ்த்தப்பட்டவர்க்கத்தினரின் இக் கோரிக்கையைப் பூர்த்தி செய்ய காங்கிரஸ் என்ன செய்தது? தன்க்குக் கிடைக்கப்பெற்ற ஆதரவுக்குப் பகரமாகக் காங்கிரஸ் தனது தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த உணர்வுகளுக்குச் செயல்வடிவமளிக்க தீண்டாமைக்கு எதிராக ஓர் இயக் கத்தை முன்னின்று நடத்தும் கடமையைக் கொண்டிருந்தது. ஆனால் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. அத்தீர்மானம் இயற்றப்பட்டதே ஓர் ஈவிரக்கமற்ற செயலாக இருந்தது.

காங்கிரஸ்-லீக் திட்டத்திற்குத் தங்களது ஆதரவைத் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினர் நல்கியதற்கான ஒரு நிபந்தனையை சம்பிரதாயமாக நிறைவேற்றியதாகவே அது இருந்தது. தீண்டாமை என்ற மனிதனுக்கு மனிதன் இழைக்கும் மனிதத் தன்மையற்ற கொடுமைகளை எதிர்த்து மனசாட்சி உறுத்தல் அல்லது நியாயமான கோப உணர்வு எதுவும் இன்றி காங்கிரஸ் காரர்கள் இருப்பதுபோல் தோன்றுகிறது. அவர்கள் தீர் மானத்தை அன்றே அவர்கள் மறந்துவிட்டனர். அந்தத் தீர்மானத்தைப் பொறுத்த வரை அது வெற்றுக் காகிதமாகத்தான் இருந்தது. அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை.

 (தீண்டப்படாதவர்களுக்குக் காங்கிரஸ் என்ன செய்தது என்பது பற்றிய வரலாற்றில் முதலாவது அத்தியாயம்)

Pin It