அகில இந்திய ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளத்தின் காரியக் கமிட்டிக் கூட்டம் சென்னையில் ராவ்பகதூர் என். சிவராஜ் பி.ஏ,.பி.எல்.,எம்.எல்.ஏ தலைமையில் 1944 செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெற்றது. புதிய அரசியலமைப்பில் தீண்டப்படாதோர்களுக்கு அளிக்கப்படவேண்டிய பாதுகாப்புகள் குறித்து இக்கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ambedkhar3 400

தீர்மானம் – 1

பொருள்: ஷெட்யூல்டு வகுப்பினரை ஒரு தனி சக்தியாக அங்கீகரித்தல்

ஷெட்யூல்டு வகுப்பினர் இந்தியாவின் தேசிய வாழ்வில் முக்கியமான தனி சக்தியினர் என்றும், இந்தியர்களுக்கு அதிகாரத்தை மாற்றுவதற்கு இந்தியாவின் அரசியலமைப்புக்கு அவர்களது சம் மதத்தைப் பெறுவது அவசியம் என்றும் 1944 ஆகஸ்டு 15 ஆம் தேதி திரு. காந்திக்கு எழுதிய கடிதத்தில் மேதகைய வைசிராய் குறிப்பிட்டிருந்தார்.

கிரிப்ஸ் யோசனைகளில் வரையறுத்துக் கூறப்பட்டிருக்கும் நிலையிலிருந்து மன்னர்பிரான் அரசு விலகிச்செல்லுவதை இது காட்டுகிறது என்று இந்தியப் பத்திரிகைகளில் சில குற்றம் சாட்டி யுள்ளன. இத்தகைய பிரசாரத்தைக் கண்டு கமிட்டி தனது நேர்மையான சீற்றத்தை வெளியிடுகிறது; ஷெட்யூல்டு வகுப்பினர் இந்தியா வின் தேசியவாழ்வில் ஒருதனித்த, வேறுபட்ட சக்தியினர் என்பதை திட்டவட்டமான முறையில் கமிட்டி மிகவும் வலியுறுத்திக்கூறுகிறது; கிரிப்ஸ் யோசனைகளின் கருத்து வட்டத்துக்கு உட்பட்டு, சீக்கியர்களையும் முஸ்லீம்களையும்விடவும் அவர்கள் உண்மையிலேயே சமயரீதியில் ஒரு சிறுபான்மையினர் என்பதையும் கமிட்டி எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

திரு. காந்திக்கு எழுதிய கடிதத்தில் வேவல்பிரபு கூறியிருந்ததே ஆரம்பம் முதல் மன்னர்பிரான் அரசாங்கத்தின் நிலையாக இருந்துவருகிறது என்பதை காரியக் கமிட்டி சுட்டிக் காட்ட விரும்புகிறது; 1917 ஆம் ஆண்டு வாக்கிலேயே மாண்டேகு-செம்ஸ்போர்டு அறிக்கை இந்த நிலையை மிகத் தெளி வாக விளக்கியிருக்கிறது; அத்தோடு பொறுப்பாட்சியை இந்திய அரசியல் பரிணாமத்தின் இலட்சியம் எனவும் அது தெளிவுபடுத்தி இருக்கிறது; மேலும் வட்டமேசை மாநாடு, கூட்டு பார்லிமெண்டரிக் கமிட்டி ஆகியவற்றில் ஷெட்யூல்டு வகுப்பினருக்கு தனிப் பிரதி நிதித்துவம் வழங்கப்பட்டிருப்பது, மற்றும் 1935 ஆம் வருடம் இந்திய அரசாங்க சட்டம் போன்ற நடவடிக்கைகள் மூலம் ஷெட்யூல்டு வகுப்பினர் இந்துக்களிடமிருந்து தனித்ததொரு சிறுபான்மை சமூ கத்தினர் என்பதை மன்னர் பிரான் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

எனவே, மன்னர்பிரான் அரசாங்கத்தின் கொள்கையிலிருந்து இது ஒரு பிறழ்வு என்று குற்றம் சாட்டுவது தவறான, விஷமத் தனமான பிரசாரம் என்று கூறுவதில் காரியக்கமிட்டிக்கு எந்தத் தயக்கமும் இல்லை; அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்புகள் தங்களுக்கு வேண்டும் என்னும் நியாயமான கோரிக்கையை ஷெட்யூல்டு வகுப்பினர் முன்வைத்திருக்கின்றனர்; இந்தக் கோரிக்கை யைத் தோற்கடிக்கும் பொருட்டே ஷெட்யூல்டு வகுப்பினரின் பகைவர்கள் இந்த சூழ்ச்சியில் இறங்கியிருக்கின்றனர் என்று கமிட்டி கருதுகிறது; இந்துக்களுக்கும் ஷெட்யூல்டு வகுப்பினர்களுக்கும் இடையே அமைதியும் நல்லெண்ணமும் நிலவுவதற்காகவும், இந்தியாவின் அரசியல் லட்சியம் விரைவில் ஈடேறுவதற்காகவும் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளும்படி எல்லா இந்திய அரசியல் தலைவர்களையும் முக்கியமாக இந்துத் தலைவர்களை காரியக் கமிட்டி கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் – 2

பொருள்: ஷெட்யூல்டு வகுப்பினர் சம்பந்தமாகவும் அரசியலமைப்பு சம்பந்தமாகவும் மன்னர்பிரான் அரசாங்கத்தின் அறிவிப்பு

சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புக்கு ஷெட்யூல்டு வகுப்பினரின் சம்மதத்தைப் பெறுவது ஜீவாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், இந்தியர் கைகளுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்று ஒரு முக்கிய நிபந்தனையாகவும் கருதுவதாக மன்னர் பிரான் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பை அகில இந்திய ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனத்தின் காரியக் கமிட்டி வரவேற்கிறது; இந்த அறிவிப்பை மேதகு வைசிராய் அண்மையில் உறுதி செய்திருப் பதையும் அது வரவேற்கிறது.

ஆனால் அதேசமயம் நாட்டிலுள்ள காங்கிரஸ் மற்றும் ஏனைய அரசியல் அமைப்புகளின் போக்கையும் காரியக் கமிட்டி மன்னர் பிரான் அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறது; மன்னர்பிரான் அரசின் இந்த அறிவிப்பு உண்மையானதல்ல, செயல்படுத்தும் நோக்கத்துடன் அது வெளியிடப் படவில்லை, மாறாக அதிகார மாற்றத்தை ஒத்திப்போடவே இந்தத் தந்திரோபாய்ம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது, ஷெட்யூல்டு வகுப் பினருடன் ஓர் உடன்பாடு காண பெரும்பான்மை சமுதாயம் சித்தமாக இல்லாதிருப்பதற்கு இதுவே காரணம் என்று காங்கிரசும் பிற கட்சி களும் பிரசாரம் செய்கின்றன. இத்தகைய கூற்று ஆதாரமற்றது என்று காரியக் கமிட்டி கருதுகிறது; இத்தகைய ஐயத்துக்கு இடம் தராதபடி நடந்து கொள்ளும்படி மன்னர் பிரான் அரசை அது வலியுறுத்துகிறது; எக்காலத்திலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இந்த அறிவிப்பின்படி நடந்துகொள்வோம் என்று தெளிவுபடுத்தும்படியும் அது அரசைக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 3

பொருள்: அரசியல் சட்டப்பாதுகாப்புகளின் இயல்பு

 பின்கண்ட நிபந்தனைகளை நிறைவேற்றாத எந்த அரசிய லமைப்புச் சட்டமும் ஷெட்யூல்டு வகுப்பினர்களுக்கு ஏற்புடைய தல்ல:-

 அ) அது ஷெட்யூல்டு வகுப்பினரின் சம்மதத்தைப் பெற் றிருக்க வேண்டும்;

 ஆ) ஷெட்யூல்டு வகுப்பினரை ஒரு தனித்த, வேறுபட்ட சக்தியாக அது அங்கீகரிக்க வேண்டும்;

 இ) பின்கண்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு இதில் வழிவகை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

 1) ஷெட்யூல்டு வகுப்பினரின் உயர்நிலைக் கல்வி, பல்கலைக் கழகக் கல்வி, மேற்கல்வி ஆகியவற்றிற்கு மாகாண மற்றும் மத்திய அரசு வரவு செலவுத் திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்பட்ட வேண்டும்.

 2) ஒரு குடியேற்ற ஆணையத்தின் மூலம் ஷெட்யூல்டு வகுப்பினரின் தனிக் குடியேற்றங்களை அமைப்பதற்கு அரசு நிலங் கள் ஒதுக்கப்பட வேண்டும்.

 3) ஷெட்யூல்டு வகுப்பினரின் தேவைகளையும், எண் ணிக்கையையும், முக்கியத்துவத்தையும் பொறுத்து பின்கண்டவற் றில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்:-

 அ) சட்ட மன்றங்கள்,

 ஆ) ஆட்சித்துறை,

 இ) நகரசபைகள், உள்ளாட்சி மன்றங்கள்,

 ஈ) அரசுப் பணித்துறை

 உ) அரசுப் பணித்துறை ஆணையம்.

 4) இவற்றை சட்ட மன்றங்கள் அல்லது ஆட்சித் துறை மாற்றவோ, திருத்தவோ, ரத்து செய்யவோ முடியாத அடிப்படை உரிமைகளாக அங்கீகரிக்க வேண்டும்.

 5) அடிப்படை உரிமைகள் பற்றிய பாதுகாப்பு விதிகள் செய்ல்படுவது குறித்து அவ்வப்போது அறிக்கை சமர்ப்பிப்பதற்கு 1935ஆம் வருட இந்திய அரசாங்கச் சட்டத்தின் 166ஆவது பிரிவின் படி ஆடிட்டர் – ஜெனரல் அந்தஸ்துக்கு சமமான ஓர் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்; ஒரு சமஸ்டி நீதிமன்ற நீதிபதி எவ்வாறு, எந்தக் காரணங்களுக்காக பதவியிலிருந்து நீக்கப்படுகிறாரோ அவ் வாறே அவசியல் ஏற்படும் போது இந்த அதிகாரி நீக்கப்படுவதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும்.

தீர்மானம் – 4

பொருள்: வகுப்புத் தீர்வு

வகுப்புப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று அகில இந்திய ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனத்தின் காரியக் கமிட்டி மிகவும் ஆவலாக இருக்கிறது; ஆனால் அதே சமயம், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே ஓர் உடன்பாடு காண்பதற்கு திரு. காந்தியும் திரு. ஜின்னாவும் இரகசிய பேச்சு வார்த்தைகள் நடத்தி வருவதை அது வன்மையாகக் கண்டிக்கிறது. ஒரு பகுதியினரிடையே மட்டும் ஏற்படும் வகுப்பு உடன்பாடு எல்லா வகைகளிலும் தீங்கானது என்று காரியக் கமிட்டி அபிப்பிராயப்படு கிறது. இது தீங்கானது, ஏனென்றால் இத்தகைய உடன்பாடு இதர சமூகங்களின் ஜீவாதார நலன்களை உதாசீனம் செய்கிறது.

இது தீங்கானது, ஏனென்றால் தங்களுடைய நலன்களுக்குப் பாதகமான முறையில் இரண்டு சமூகங்கள் ஒரு வஞ்சகமான உடன்பாட்டை செய்து கொண்டுவிட்டனவோ என்ற ஐய உணர்வை ஏனைய சமூகங்க ளிடையே தோற்றுவிக்கிறது. இது இன்னொரு வகையிலும் திங் கானது; ஏனைய சமூகங்களை எல்லாம் விட்டுவிட்டு ஒரு குறிப் பிட்ட சமூகத்தை மட்டும் பொறுக்கியெடுத்து, அதன் பாதுகாப்புக் குத் தேவையில்லாத, ஆனால் அதன் செல்வாக்குக்கு அடிப்படையான விசேட சலுகைகளை அந்த சமூகத்துக்கு வழங்குவது அனைவரும் சமம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது அந்தஸ்தில் வேற்றுமைகளைத் தோற்றுவிக்கிறது; இது நியாயமற்றதும் வருந்தத் தக்கதுமாகும்.

பொது வாழ்க்கையில் எந்த இரகசியமும் கூடாது என்று இடைவிடாது உபதேசம் செய்து வந்த திரு. காந்தி இந்து - முஸ்லீம் உடன்பாடு காணுவதற்கு இரகசிய பேரத்தில் இறங்கியிருப் பது கண்டு காரியக் கமிட்டி வியப்படைகிறது. வகுப்புப் பிரச்சினைக் குத் தீர்வு காண வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் ஒளிவுமறைவின்றி, இரகசியமாக அன்றி பகிரங்கமான முறையில் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட வேண்டும், இதுவே வகுப்புப் பிரச்சினைக்குத் தீர்வு காணுவதற்கு சரியான, நேர்மையான வழி முறையாக இருக்க முடியும் என்று கமிட்டி கருதுகிறது.

தீர்மானம் – 5

பொருள்: அரசியலமைப்பைத் திருத்தியமைத்தல்

சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் சம்பந்தமாக தற் போதைய அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள ஷரத்துகள் எத்தகைய விவேகமான கோட்பாடு அடிப்படையிலும் அமைந்திருக்கவில்லை என்று அகில இந்திய ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனத்தின் காரியக் கமிட்டி கருதுகிறது. இப்போதுள்ள ஏற்பாட்டின்படி சில சிறுபான்மையினர் தங்களுடைய மக்கட் தொகை விகிதாசாரத்துக்கு ஏற்ற பிரதிநிதித்துவத்தைக் கூடப் பெறவில்லை; அதேசமயம் வேறு சில சிறுபான்மையினருக்கு அவர்களது வரலாற்று முக்கியத்து வத்தையும் ராணுவ முக்கியத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு அவர்களது மக்கட்தொகை விகிதாசாரத்துக்கும் அதிக மாகவே பிரதிநிதித்துவம் தரப்பட்டுள்ளதைக் கமிட்டி காண்கிறது.

இத்தகைய கோரிக்கைகளை அங்கீகரிப்பது இதர சிறுபான்மை யினரின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும், சமூக, ஜனநாயகக் குறிக்கோளுக்கு இது முரணானது, இத்தகைய ஒரு போக்கை ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது என்று காரியக் கமிட்டி கருதுகிறது. சில குறிப்பிட்ட சிறுபான்மையினருக்கு விசேடப் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதை மாண்டேகு-செம்ஸ்போர்டு அறிக்கையும் சைமன் கமிஷனும் கண்டித்திருக்கின்றன என்பதையும் கமிட்டி இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறது. இந்தியாவின் அடுத்த அரசியலமைப்புச் சட்டம் குடியேற்றா நாடு என்ற முறையி லான இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டமாக இருக்குமாத லால் சிறுபான்மையினர் சம்பந்தமான அரசியலமைப்புச் சட்ட விதி கள் மாற்றப்பட வேண்டும், அனைத்து சிறுபான்மையினரும் சமம் என்ற கோட்பாட்டுக்கு இசைந்ததாக அவை இருக்க வேண்டும் என்று கமிட்டி கோருகிறது.

தீர்மானம் – 6

பொருள்: சட்டமன்றங்களிலும் ஆட்சித்துறையிலும் பிரதிநிதித்துவம்

பிரதிநிதித்துவம் விஷயத்தில் ஒரு சமூகத்துக்கும் இன்னொரு சமூகத்துக்கும் இடையே எத்தகைய பாரபட்சமும் பாகுபாடும் காட்டப்படுவதை ஷெட்யூல்டு வகுப்பினர் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள், முஸ்லீம் சமூகத்தினரது கோரிக்கைகள் விஷயத் தில் கடைப்பிடிக்கப்படும் அதே கோட்பாடுகளில் அடிப்படையில், அதே வழிமுறைகளின் அடிப்படையில் மாகாண சட்டமன்றங்களி லும், மத்திய சட்ட மன்றத்திலும், மாகாண நிர்வாகத்திலும், மத்திய நிர்வாகத்திலும் இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் கோருவார்கள் என்பதை அகில இந்திய ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளத்தின் காரியக் கமிட்டி திட்டவட்டமான வும், தெள்ளத் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறது.

தீர்மானம் – 7

பொருள்: வாக்காளர் தொகுதிகள்

கூட்டுவாக்காளர் தொகுதிகள் முறை ஷெட்யூல்டு வகுப்பினர் கள் தங்களுடைய உண்மையான திறமையான பிரதிநிதிகளை சட்டமன்றங்களுக்கு அனுப்புவதற்கு அவர்களுக்குள்ள உரிமை யைப் பறித்து விடுகிறது, அதே சமயம் இந்து பெரம்பான்மையின ரின் எடுப்பார் கைப்பிள்ளைகளாக, கைக்கூலிகளாக இருப்பதற்குத் தயாராக இருக்கும் ஷெட்யூல்டு வகுப்பைச் சேர்ந்த உறுப்பினர்களை வேட்பாளர்களாக நியமிப்பதற்கு நடைமுறையில் உரிமை பெற் றுள்ளனர் என்பதை கடந்த தேர்தல் அனுபவம் மெய்ப்பித்திருக்கிறது என அகில இந்திய ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனத்தின் காரியக் கமிட்டி கருதுகிறது. எனவே, கூட்டு வாக்காளர் தொகுதிகள் மற்றும் இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாக தனி வாக்காளர் தொகுதி முறையைக் கொண்டுவர வேண்டும் என்று சம்மேளனத்தின் காரியக் கமிட்டி கோருகிறது.

தீர்மானம் – 8

பொருள்: ஆட்சித்துறைகள் கட்டமைப்பு

அனைத்து வகையான செல்வமும், சொத்துகளும், வணிகமும், தொழிலும் பெரும்பான்மை சமூகத்தினரின் கைகளில் குவிந்திருப்பது மட்டுமன்றி, முழு அரசு நிர்வாகமும் கூட பெரும்பான்மை சமூகத் தினரின் கட்டுப்பாடில் இருந்து வருகிறது, இதுவன்றி இச் சமூகத்தைச் சேர்ந்தவர்களே அரசுப் பணித்துறையில் உயர் பதவிகள், கீழ்ப்பதவிகள் முதலிய எல்லாப் பதவிகளையுமே ஏகபோகமாக்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதை அகில இந்திய ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனத்தின் காரியக் கமிட்டி கருத்திற் கொள்கிறது.

இதை மிகவும் அபாயகரமான போக்காக காரியக் கமிட்டி பார்க்கிறது இந்தச் சந்தர்ப்ப சூழ்நிலைமைகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து சிறு பான்மையினரின் குரல் வளையைப் பிடித்து நெரிப்பதற்கு, அவர் களது முதுகில் ஏறு அமர்ந்து ஆதிக்கம் செலுத்துவதற்கு பெரும் பான்மையினருக்கு முழு அதிகாரம் வழங்குவதால் இது சிறுபான்மை யினரை மிகுந்த அச்சம் கொள்ளச் செய்துள்ளது. இந்த ஆதிக்கப் பிடி, வர்மப்பிடி அச்சம் 1935ஆம் வருட இந்திய அரசாங்க சட்டத் தில் நிர்வாகத்துறை சம்பந்தமாக இடம் பெற்றுள்ள அரசியலமைப்புச் சட்ட விதிகளால் மேலும் அதிகரித்துள்ளது. சட்டசபையிலுள்ள பெரும்பான்மையினர் சிறுபான்மையினரின் விருப்பத்தைக் கணக்கி லெடுத்துக் கொள்ளாமலேயே அரசாங்கம் அமைப்பதை இந்த விதிகள் அனுமதிக்கின்றன.

 ஒரு மாற்று ஆட்சித் துறை அமைப்பு இல்லாத நிலைமையில் பார்லிமெண்டரி ஆட்சி முறை ஏற்கப்பட வேண்டியிருப்பினும் பார்லி மெண்டரி அமைச்சரவை முறையை அகில இந்திய ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனம் வன்மையாக, திட்டவட்டமாக எதிர்க் கிறது. ஏனென்றால் இது நிர்வாக அதிகாரத்தை பெரும்பான்மை வகுப்பினரிடம் ஒப்படைக்கிறது; ஏற்கெனவே ஆட்சி பரிபாலனத் துறையில் நுழைந்து ஆழமாகக் காலுன்றிவிட்ட பெரும்பான்மை வகுப்பினர் சிறுபான்மையினருக்கு ஆபத்தானவர்களாக இருந்து வருகின்றனர்.

எனவே, பார்லிமெண்டரி அமைச்சரவை முறை இந்திய நிலைமைகளுக்கு ஏற்றதல்ல, அதற்குப் பதிலாக, சிறுபான்மை யினருக்குப் பந்தோபஸ்து உணர்வை ஊட்டக்கூடியதும், அவர் களது ஆர்வ விருப்பங்களைக் கணக்கிலெடுத்துக் கொள்ளக்கூடியது மான அமைச்சரவை அமைப்பதற்கு வழி செய்யக்கூடிய வேறொரு முறையைக் கொண்டுவர வேண்டுமென்று காரியக் கமிட்டி கருதுகிறது.

மாகாணங்களிலும் மத்தியிலும் ஆட்சி பின்வருமாறு அமைக்கப்பட வேண்டும் என்று காரியக் கமிட்டி வலியுறுத்துகிறது:-

 1) அமைச்சரவை ஒரு பிரதமரையும் இதர அமைச்சர் களையும் கொண்டதாக இருக்க வேண்டும்; அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுத்துக் கூறியுள்ள விகிதாசார அடிப்படையில் பொது சமூகத்தினரையும் சிறுபான்மை சமூகங்களையும் சேர்ந் தவர்களாக இவர்கள் இருக்க வேண்டும்.

 2) பொது சமூகத்தைச் சேர்ந்த பிரதமரும் அமைச்சர் களும் சபை முழுவதாலும் ஒற்றை மாற்றுவாக்கு முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

 3) சிறுபான்மை வகுப்பினர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அமைச்சர்கள் பல்வேறு சமூகங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் உறுப்பினர்களால் ஒற்றை மாற்று வாக்கு முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

 4) அமைச்சரவை உறுப்பினர்கள் சட்ட மன்ற உறுப்பினர் களாக இருக்க வேண்டும், கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும், வாக்களிக்க வேண்டும், விவாதங்களில் பங்கெடுக்கக் கொள்ள வேண்டும்.

 5) அமைச்சரவையில் ஏற்படும் எந்தக் காலி இடங் களும் மூல நியமன விதிகளுக்கு இணங்க நிரப்பப்பட வேண்டும்.

 6) அமைச்சரவையின் பதவி காலம் சட்டசபையின் பதவி காலத்துடன் முடிவடையும்.

தீர்மானம் – 9

பொருள்: அரசுப் பணித்துறைகள்

ஓர் அரசாங்கத்தை ஆட்களைக் கொண்டதாக அல்லாமல் சட்டங்களைக் கொண்டதாக திட்டமிடுவது விரும்பத்தக்கதுதான் என்றாலும் ஓர் அரசாங்கம் எவ்விதம் ஒழுங்கமைக்கப்பட்டாலும் அது ஆட்களைக் கொண்டதாகவே இருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது. இவ்வாறு இருப்பதால், ஓர் அரசாங்கம் நல்ல அரசாங்கமா, கெட்ட அரசாங்கமா என்பதும், பொது விவகாரங்கள் நிர்வாகம் எந்த அளவுக்கு அரசியல் சார்பற்றதாக, பாரபட்சமற்ற தாக அமைந்துள்ளது என்பதும் சட்டத்தைப் பரிபாலனம் செய்ய நியமிக்கப்படுபவர்களது உணர்வையும், கண்ணோட்டத்தை யும், நேர்மைப் போக்கையுமே பொறுத்திருக்கும்.

சாதி வெறியும், குறுகிய மனோபாவமும், நேர்மையின்மையும், ஷெட்யுல்டு வகுப் பினர்கள் பால் பகைமையும் குரோதமும் வெறுப்பும் கொண்டவர்கள் ஆதிக்கம் செலுத்தும் இப்போதைய நிர்வாகத்திடமிருந்து ஷெட் யூல்டு வகுப்பினர் ஒருபோதும் பாதுகாப்பையும், நியாயத்தை யும், பரிவையும் பெற முடியாது என்று திடமான முடிவுக்கு அகில இந்திய ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனம் வந்திருக்கிறது. எனவே, முஸ்லீம் சமூகத்தினருக்குள்ள அதே விகிதாசாரத்தில் அரசுப் பணித் துறைகளில் இட ஒதுக்கீடு பெறுவதற்கு ஷெட்யூல்டு வகுப்பினருக்குள்ள உரிமை அரசியல் சட்ட ரீதியில் அங்கீகரிக்கப் பட வேண்டும் என்று காரியக் கமிட்டி கோருகிறது.

தீர்மானம் – 10

பொருள்: கல்வி வசதி பெறும் உரிமை

ஷெல்யூல்டு வகுப்பைச் சேர்ந்தவர்கள் அதிகார வலிமை படைத்த பதவிகளில் இருந்தாலொழிய ஷெட்யூல்டு வகுப்பினர் கடந்த காலத்தில் போலவே அரசாங்கத்தினதும் பொதுமக்களதும் அவமதிப்புக்கும், அநீதிக்கும், ஏளனத்துக்கும், பழிப்புக்கும், நையாண் டிக்கும் தொடர்ந்து ஆளாகி வரவே செய்வார்கள் என்று அகில இந்திய ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனத்தின் காரியக் கமிட்டி உணர்கிறது. எனவே, ஷெட்யூல்டு வகுப்பினரிடையே உயர் கல்வி யும், மேற்கல்வியும் பரவுவது ஜீவாதார முக்கியத்துவம் வாய்ந் தது என்று காரியக் கமிட்டி கருதுகிறது.

ஆனால் இத்தகைய மிக முன்னேற்றமடைந்த கல்வியைப் பெறுவது ஷெட்யூல்டு வகுப் பினர்களின் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதை மறுக்க முடியாது. இது விஷயத்தில் அரசாங்கத்துக்கு மிகப் பெரும் பொறுப்பு இருக் கிறது, இப்பணிக்கு அது போதிய நிதி ஒதுக்குவது அவசியம் என்று கமிட்டி நம்புகிறது. இவ்வாறு செய்வதை அரசியலமைப்புச் சட்டம் மாகாண மற்றும் மத்திய அரசாங்கங்களின் முக்கிய கடமை யாக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில் நிர்ணயித்துக் கூறியுள்ளவாறு ஷெட்யூல்டு வகுப்பினரின் கல்விக்காக அதிலும் குறிப்பாக அவர்களது முன்னேற்றமடைந்த கல்விக்காக மாகாண அரசாங்கங்களும் மத்திய அரசாங்கங்கமும் அவற்றின் வருடாந்தர வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிட்ட தொகைகளை ஒதுக்க வேண் டும்; இதனை தங்களது வருவாயில் முதல் செலவினமாக அவை கருத வேண்டும்.

தீர்மானம் 11

பொருள்: தனிக் குடியேற்றங்கள்

அகில இந்திய ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனம் பினவருமாறு கருதுகிறது:-

 அ) ஷெட்யூல்டு வகுப்பினர் ஜீவனோபாயத்துக்கு வழி யின்றி, இந்துக்களுடன் ஒப்பிடும்போது சிறு எண்ணிக்கையினராக இந்து கிராமத்தின் புற எல்லைகளில் அந்நியர்கள் போல் வாழ்ந்து வரும் வரை அவர்கள் தொடர்ந்து தீண்டப்படாதவர்களாகவே இருந்து வருவார்கள்; இந்துக்களின் ஈவு இரக்கமற்ற, நெஞ்சீரமற்ற அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகி வருவார்கள், அவர் களால் சுதந்திரமான, முழுநிறைவான வாழ்க்கை வாழ முடியாது.

ஆ) சாதி இந்துக்களின் கொடுங்கோன்மையிலிருந்தும், அரக்கத்தனமான ஒடுக்குமுறையிலிருந்தும் அதிலும் சுயராஜ்யத்தில் இந்த அவலம் மேலும் அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறு இருக்கும் போது, ஷெட்யூல்டு வகுப்பினரை சிறப்பாக, திறம்படப் பாதுகாப் பதற்காகவும், அவர்களது மன உரத்தை, திறத்தை முழு வளர்ச்சி பெறச் செய்வதற்காகவும், அவர்களுக்குப் பொருளாதாரப் பாது காப்பும் சமூக பந்தோபஸ்தும் அளிப்பதற்காகவும், அத்தோடு தீண்டாமையை வேரோடு வேரடி மண்ணோடு வெட்டி சாய்ப்ப தற்காகவும் அரசியல் சட்டத்தில் பின்கண்ட வழிவகை ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று காரியக் கமிட்டி கோருகிறது:-

 1) ஷெட்யூல்டு வகுப்பினரை இப்போதைய அவர்களது இருப்பிடங்களிலிருந்து இடமாற்றம் செய்வதற்கும், இந்து கிராமங் களுக்கு அப்பால், அவற்றுடன் எவ்வகையிலும் ஒட்டும் உறவும் இல்லாத தனி ஷெட்யூல்டு வகுப்பு கிராமங்களை அமைப்ப தற்கும்;

 2) ஷெட்யூல்டு வகுப்பினர்களை அந்தப் புதிய கிராமங் களில் குடியமர்த்துவதற்கும் ஒரு குடியேற்ற ஆணையத்தை அமைப்ப தற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட வேண்டும்.

 3) சாகுபடிக்கு லாயக்கானவையும், வேறு எவரும் குடி யேறாதவையும், உழுது பண்படுத்துக் கூடியவையுமான எல்லா அரசு நிலங்களும் ஷெட்யூல்டு வகுப்பினரின் புதிய குடியேற்றங் களை உருவாக்கும் நோக்கத்திற்காக இந்த ஆணையத்தின் பொறுப் பில் விடப்பட வேண்டும்.

 4) ஷெட்யூல்டு வகுப்பினரின் குடியேற்றத் திட்டத் தைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, நிலங்களைக் கைப்பற்றும் சட்டத்தின்படி தனி நபர்களிடமிருந்து புதிய நிலங்களை வாங்கு வதற்கு ஆணையத்துக்கும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.

 5) இந்தப் பணியை நிறைவேற்றுவதற்காக ஆண்டுக் குக் குறைந்தபட்சம் 5 கோடி ரூபாய் குடியேற்றத்துக்கும் மானியத் தொகையாக வழங்கப்பட வேண்டும்.

தீர்மானம் 12

”அகில இந்திய ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனம் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரிடம் முழு நம்பிக்கை வைக்க ஒருமனதாக முடிவு செய்கிறது; சம்மேளனத்தின் சார்பிலும் ஷெட்யூல்டு வகுப்பினர் சார்பிலும் இதர அரசியல் கட்சிகளுடனோ அல்லது அவற்றின் தலைவர்களுடனோ அவசியம் நேரிடும்போது பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு அவருக்கு அதிகாரம் அளிக்கிறது.”

 ("தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன?" - தொகுதி 16, பின்னிணைப்பு 11)

Pin It