நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல், காங்கிரசானது திரு. காந்தியின் பராமரிப்பில், கவனிப்பில் வந்தபிறகு முழு அளவுக்கு மாற்றமடைந்தது. இந்த மாற்றங்களில் ஒன்று மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். ஏனென்றால் இந்த மாற்றம்தான் காங்கிரசுக்கு இவ்வளவு புகழை ஈட்டித் தந்தது; இதன் காரணமாக அது மக்களின் ஆதரவைப் பெற முடிந்தது. சரி, அந்த மாற்றம்தான் என்ன்? திரு. காந்தியின் காலத்துக்கு முன்னர் இந்தியாவின் பல்வேறு இடங்களின் ஆண்டு தோறும் கூடுவதையும், சில தீர்மானங்களை அதிலும் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையே மீண்டும் நிறைவேற்றுவதையும், இந்தியாவில் பிரிட்டிஷ் நிர்வாகத்தில் காணப்படும் குறைகளில் சிலவற்றைச் சுட்டிக்காட்டுவதையும் தவிர காங்கிரஸ் உருப்படியாக வேறு எதுவும் செய்யவில்லை.

ambedkar 2411919ல் காங்கிரசின் லகாணை திரு. காந்தி தன் கையில் எடுத்துக் கொண்ட பிறகு, அது செய்படும் கட்சியாக மாறிற்று; அல்லது காங்கிரஸ்காரர்கள் வருணிக்க விரும்புவதுபோல் காங்கிரசானது தான் நிறைவேற்றும் தீர்மானங்களைச் செயல்படுத்த சில உறுதிப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டது – இதற்கு முன்னர் இதுகுறித்து காங்கிரஸ் சிந்தித்துப் பார்த்ததே இல்லை.

இவ்வாறு காங்கிரஸ் தனது பாசறையிலிருந்து எடுத்து அவ்வப்போது பிரயோகித்த படைக்கலங்களில் (1) ஒத்துழையாமை; (2) பகிஸ்காரம்; (3) சட்ட மறுப்பு; (4) உண்ணாவிரதம் ஆகியவையும் அடங்கும்; அரசாங்க பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், நீதிமன்றங்கள் முதலியவற்றை அங்கீகரிக்க மறுப்பதன் மூலமும், அதேபோன்று அராசாங்க சேவையைப் பயன்படுத்திக் கொள்ள மறுப்பதன் மூலமும் அரசை பயனற்றதாக்கிச் செயலிழக்கச் செய்வதே ஒத்துழையாமை இயக்கத்தின் நோக்கமாகும்.

பகிஷ்காரம் என்பது காங்கிரசின் ஆணைகளைப் பின்பற்றி நடப்பதற்குத் தயாராக இல்லாத தனிநபர்களுக்கு எதிராக நிர்ப்பந்தம் கொண்டுவரும் குறிக்கோளைக் கொண்ட ஓர் ஆயுதம். இதற்கு இரண்டு விளிம்புகள் உண்டு: ஒன்று சமூக விளிம்பு, மற்றொன்று, பொருளாதார விளிம்பு. சமூக விளிம்பு எல்லா சமூக உறவுகளையும் துண்டித்து விடுகிறது; நாவிதர்கள், சலவையாளர்கள், கசாப்புக்கடைக்காரர்கள், பலசரக்குக் கடைக்காரர்கள், வணிகர்கள் முதலியோரின் சேவைகள் கிட்டாத படிச் செய்துவிடுகிறது; இன்னும் சுருக்கமாகச் சொன்னால் குற்றவாளியின் வாழ்க்கையையே எல்லா வகைகளிலும் முடமாக்கி நாடமாக்கி விடுகிறது.

பண்டங்களை வாங்குவது, விற்பது போன்ற சகலவிதமான வணிகத் தொடர்புகளையும் பொருளாதார விளிம்பு துண்டித்து விடுகிறது. அந்நியப் பொருள்களை விற்பனை செய்யும் பெருவணிகர்களே அதன் குறியிலக்கு. சட்ட மறுப்பு என்பது பிரிட்டிஷ் அரசாங்கத்தை நேரடியாகவே தாக்கும் நோக்கம் கொண்டது. கைதாவது, சிறைக்கூடங்களை நிரப்புவது, இதன்மூலம் அரசாங்கத்துக்குக் கெட்ட பெயரை உண்டுபண்ணுவது என்னும் நோக்கத்தோடு திட்டமிட்டே சட்டம் மீறப்படுகிறது. வெகுஜன சட்ட மறுப்பாகவோ அல்லது தனிநபர் சட்ட மறுப்பாகவோ இது கைக்கொள்ளப்படுகிறது. பரந்த அளவில் உண்ணாவிரதம் இருக்கும் நடவடிக்கையில் காங்கிரசார் ஈடுபடுவதில்லை. தனிநபர் அளவிலேயே உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் சாகும் வரை உண்ணாவிரதத்தையும் பரந்த அளவில் காங்கிரசார் கைக்கொள்வதில்லை.

ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் உண்ணாவிரதம் இருக்கப்படுகிறது. இந்த ஆயுதம் குறிப்பாக திரு. காந்தி தனக்காக வரித்துக் கொண்டுள்ள ஆயுதமாகும். அவரும் கூட ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்துக் கொண்டுதான் உண்ணாவிரதம் இருக்கிறார். இவைதான் இந்தியாவின் விடுதலைக் கோரிக்கைக்கு ஆதரவாக நிர்ப்பந்தங்கள் தருவதற்கு காங்கிரஸ் தனது உலைக்களத்தில் உருவாக்கி வைத்திருக்கும் நான்கு ஆயுதங்களாகும்.

இந்த ஆயுதங்களை உருவாக்கிய பிறகு அவற்றைப் பயன்படுத்திவதில் காங்கிரஸ் முனைந்து ஈடுபட்டது. 1920க்கும் 1942க்கும் இடையே காங்கிரஸ்காரர்கள் இந்த ஆயுதங்களை ஏதேனும் ஒரு வகையில் பயன்படுத்துவதை நாடு கண்டது. இதில் காது செவிடுபடும்படி அவர்கள் எழுப்பிய கூச்சலும் குழப்பமும் பேரொலியும் மக்களை ஈர்த்தன. இந்த நடவடிக்கைகள் யாவும் “சுதந்திரப் போராட்டம்” என ஆடம்பர ஆர்ப்பட்டமாக வருணிக்கப்பட்டன. இத்தகைய நிர்ப்பந்தங்கள் என்ன பலனை விளைவித்தன என்பது தீவிர ஆராய்ச்சிக்குரிய விஷயமாகும். ஆனால் இத்தகைய ஆராய்ச்சிக்கு இது இடமல்ல.

ஒன்றை மட்டும் இங்கு கூறமுடியும்; அதாவது பழைய காங்கிரஸ் இதைவிட மோசமாக எதையும் செய்திருக்க முடியாது. நிர்ப்பந்தங்களைப் பயன்படுத்தியதை உண்மையிலேயே ஒரு சோக நிகழ்ச்சி என்றுதான் கூறவேண்டும். சுயராஜ்யம் என்பது ஒருபுறமிருக்கட்டும், ஆனால் அதன்பொருட்டு துடுக்குத்தனமாக, முன் யோசனையின்றி நிர்ப்பந்த முறைகளைப் பயன்படுத்தியன் விளைவாய் நாட்டுப் பிரிவினை உறுதியானதாயும், நிச்சயமானதாயும், எதார்த்தபூர்வமானதாயும் ஆயிற்று.

நிர்ப்பந்த முறைகளைப் பயன்படுத்தியதன் விளைவாக ஏற்பட்ட பலன்கள் முழுவதையும் இங்கு விவாதிப்பது என்பது சாத்தியமல்ல; எனினும் இந்த “சுதந்திரப் போராட்டம்” பெரும்பாலும் இந்துக்களாலேயே நடத்தப்பட்டது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ஒரே ஓரு சந்தர்ப்பத்தில் தான் முசல்மான்கள் அதில் பங்கெடுத்துக் கொண்டனர்; சிறிது காலமே நடைபெற்ற கிலாபத் இயக்கத்தின்போதுதான் இது நிகழ்ந்தது. விரைவிலேயே அவர்கள் இந்தப் போராட்டத்திலிருந்து விலகிக் கொண்டு விட்டனர்.

இதர சமூகங்கள், குறிப்பாக தீண்டப்படாதோர் சமூகம் ஒருபோதும் அதில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. சொந்த ஆதாயத்துக்காக அங்கு ஒருவரும் இங்கு ஒருவருமாக ஒரு சிலர் வேண்டுமானால் அதில் பங்கெடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் தீண்டப்படாதவர்கள் ஒரு சமூகம் என்ற முறையில் அதிலிருந்து விலகியே நின்றனர். 1942 ஆகஸ்டில் காங்கிரஸ் நிறைவேற்றிய ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானத்தைத் தொடர்ந்து கடைசியாக நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் இதனை குறிப்பாகக் காணலாம்.

இந்த “சுதந்திரப் போராட்டத்தில்” மக்களில் ஐம்பது சதவீதத்தினருக்கும் அதிம்மானோர் எவ்விதம் காங்கிரசுடன் ஒத்துழையாது இருக்கிறார்கள் என்பது குறிப்பாக இந்தியாவுக்கு வரும் ஓர் அயல்நாட்டவர் கண்கூடாகக் காணும் காட்சியாகும். இந்த விந்தையான நிலைகண்டு அவர் பெரிதும் வியப்பதிர்ச்சி கொள்வது முற்றிலும் இயல்பே. இந்த ‘சுதந்திரப் போராட்ட’த்தில் முஸ்லீமகள், கிறித்தவர்கள், தீண்டப்படாதோர் போன்றோர் ஏன் பங்கு கொள்ளவில்லை என்று அவர் கேட்டுவிட்டு, பதிலுக்காக காங்கிரஸ்காரர்களின் முகத்தைப் பார்க்கிறார். காங்கிரஸ்காரர்கள் இதற்குக் தயாராக வழக்கமான பதிலை வைத்திருக்கிறார்கள். தீண்டப்படாதவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள், அதனால்தான் அவர்கள் “சுதந்திரப் போராட்ட”த்தில் பங்கெடுப்பதில்லை என்று இதற்கு சமாதானம் கூறுகிறார்கள்.

இந்தக் குற்றச்சாட்டு யுத்தத்தின்போது பல அயல்நாட்டினரின் வாயிலிருந்து வந்ததை அப்போது நாம் கேட்க முடிந்தது. இதில் மிகவும் வேதனையூட்டும் விந்தை என்னவென்றால், விபரீதம் என்னவென்றால், இந்த அயல்நாட்டவர்களில் பலர் இந்தக் குற்றச்சாட்டு உண்மையாக இருக்கக்கூடும் என்று ஏற்றுக் கொண்ட கசப்பான அனுபவமே ஆகும். அயல்நாட் டினர் இவ்வாறு சுலபமாக மனமாற்றமடைந்ததற்கு இந்த வாதம் மிகவும் எளிமையானதாகவும். நம்பத்தகுந்ததாகவும் இருந்தது காரணமாக இருக்கக் கூடும். இது இரண்டு காரியங்களைச் செய்கிறது. முதலாவதாக ஒரு விந்தையான நிகழ்வுப் போக்குக்கு காங்கிரஸ் சமாதானம் கூறுவதை இது சாத்தியமாக்குகிறது. இரண்டாவதாக இந்தக் குற்றச்சாட்டை நம்பத்தகுந்ததாக்கும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை அது வளர்க்கிறது.

 மிகவும் செல்வாக்கு வாய்ந்த அயல்நாட்டினரே கூட இந்த அபத்தக் குற்றச்சாட்டில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்றால், இந்த விஷமப் பிரசாரத்தை யாரும் பெரிதாக எடுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள். “சுதந்திரப் போராட்டம்” எனக் கூறப்படுவதில் தீண்டப் படாதவர்கள் பங்கெடுத்துக் கொள்ளாதற்கு காங்கிரஸ் தெரிவித்துள்ள காரணம் சுத்த அபத்தமானதாகும். ஓர் ஏமாற்றுக்காரன்தான் இப்படிப்பட்ட காரணத்தைக் கூறமுடியும்; ஒரு முட்டாள்தான் இந்தக் காரணத்தை ஏற்றுக்கொண்டு அதில் திருப்தியடைய முடியும். ஆனால் தற்போது இந்தியாவில் நடைபெற்றுவரும் சில நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது, இந்தியாவின் பிரச்சினைகள் குறித்து அயல்நாட்டினர் என்ன நினைக்கிறார்கள் என்பது மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

ஆதலால் உண்மை நிலைமையை எடுத்துக்கூறி, தீண்டப்படாதவர்களைப் பற்றி அயல்நாட்டவரின் மனத்தில் வேர்கொண்டுள்ள தப்பெண்ணங்களைக் களைவது அவசியமாகிறது; இது தீண்டப்படாதவர்களுக்கு எதிராக கட்டிவிடப்பட்டுள்ள தவறான குற்றச்சாட்டு என்பதையும், அவர்கள் ”சுதந்திரப் போராட்ட’த்தில் பங்கு கொள்ளாததற்கு அவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் எடுபிடியாக இருப்பது காரணமல்ல, மாறாக இந்தியா சுதந்திரம் பெறுவது இந்துக்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டும், அது அவர்களுக்கு சுபிட்ச வாழ்வும், விடுதலையும், ஒளிமயமான எதிர்காலமும் என்றென்றும் கிட்டாதபடிச் செய்து, அவர்களை வெறும் விறகு வெட்டிகளாகவும் தண்ணீர் சுமப்பவர்களாகவும் ஆக்கிவிடும் என்ற பயமே தீண்டப்படாதவர்கள் “சுதந்திரப் போராட்ட”த்தில் பங்கு கொள்ளாதிருக்கக் காரணம் என்பதையும் விளக்கிக் கூறுவது இன்றியமையாததாகிறது.

“சுதந்திரத்திற்கான போராட்ட”த்தில் காங்கிரசுடன் சேருவதற்கு திண்டப்படாதவர்கள் மறுத்துவிட்டனர் என்ற உண்மையே அவர்கள் காங்கிரசுடன் ஒத்துழைக்காததற்கான காரணம் காங்கிரசார் கூறுவதுபோல் சிறுபிள்ளைத்தனமானது அல்ல என்பதற்கு ஒரு திட்டவட்டமான சான்றாக அமைந்துள்ளது. அப்படியானால் இதற்கு வேறு ஏதேனும் உண்மையான, அடிப்படையான காரணம் இருக்க வேண்டும். அந்தக் காரணம் என்ன? காங்கிரசுடன் ஒத்துப்போகாததற்கான காரணத்தை தீண்டப்படாதவர்கள் மிகப்பல சந்தர்ப்பங்களில் பட்டவர்த்தனமாகவே, பகிரங்கமாகவே கூறியுள்ளனர்.

நாங்கள் இந்து ராஜ்யத்தில் இருக்க விரும்பவில்லை; இந்து ராஜ்யத்தில் ஆளும் வர்க்கங்களாக பிராமணர்களும் பனியாக்களும் இருப்பார்கள்; கீழ்த்தட்டு இந்துக்கள் அவர்களுடைய காவல்துறை ஆட்களாக இருப்பார்கள்; இவர்கள் யாவரும் பரம்பரை பரம்பரையாக, வழிவழியாக தீண்டப்படாதோரின் பகைவர்களாக இருந்து வருபவர்கள் – இவ்வாறு தீண்டப்படாதோர் கூறுகின்றனர். இந்த மொழிநடை நயநாகரிகப் பாங்கற்றதாக, உணர்ச்சிகளைப் புண்படுத்துவதாக, வெறுப்பூட்டுவதாக இருக்கிறது என்று கூறிப்படுகிறது. அவ்வாறே இருக்கலாம்.

ஆனால் இத்தகைய கொள்கைக் குரல்கள் அவற்றின் தொனியில் புண்படுத்தக்கூடியதாக இருப்பதை வைத்துக் கொண்டு அவை பொரு ளற்றதாக இருப்பதாகவோ, அவை சுட்டிக்காட்டும் கண்ணோட் டமும், அவை தம்முள் கொண்டுள்ள லட்சியங்களும் வலிமை யற்றவையாக இருப்பதாகவோ அல்லது அவை மெய்யான, மதிக்கத் தக்க அரசியல் தத்துவார்த்த உடை அணிவதற்குத் தகுதியற்றவை என்றோ கருதிவிடலாகாது.

 அரசியல் விஞ்ஞானம் என்னும் கண் கொண்டு பார்த்தால் இந்தக் கொள்கைக் குரல்கள் எதைக் குறிக்கின்றன? பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்திலிருந்து விடுதலை பெறுவதை, சுதந்திரம் அடைவதை தீண்டப்படாதோர் எதிர்க்கவில்லை என்பதை அவை அர்த்தப்படுத்து கின்றன. ஆனால் அதேசமயம் பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியத்திடமிருந்து விடுதலையடைவதோடு திருப்தியடைய அவர்கள் மறுக்கிறார்கள். சுதந்திர இந்தியா மட்டும் போதாது என்று அவர்கள் வலியுறுத்து கின்றனர். சுதந்திர இந்தியா ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும். இந்தியாவில் தனித்தன்மை வாய்ந்த சமூக அமைப்பு இருந்து வருவதன் காரணமாக இந்து சமூகப் பெரும்பான்மையினரை எதிர்கொள்ள வேண்டிய சிறுபான்மை சமூகங்கள் இந்த நாட்டில் இருந்து வருகின்றன, இந்து சமூகப் பெரும்பான்மையினரின் நச்சுப் பல்லைப் பிடுங்குவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டாலொழிய இந்தியாவில் ஜனநாயகம் பாதுகாக்கப் பட மாட்டாது.

ஆதலால் இந்தியாவில் நிலவுகின்ற இந்த விசேட நிலைமைகளைக் கணக்கிலெடுக்கக் கூடியதும், தீண்டப்படாதவர்களை அடக்குவதற்கும் ஒடுக்குவதற்கும் இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த இந்து பெரும்பான்மையினர் அரசியல் அதிகாரத்தைப் பெறு வதைத் தடுக்கக் கூடிய சில பாதுகாப்புகளைப் பெற்றிருக்கக் கூடி யதும், தாங்கள் ஒடுக்கப்படுவதையும் சுரண்டப்படுவதையும் எதிர்த்து வகுப்புவாத பெரும்பான்மையினருடன் நடைபெறும் போராட்டத் தில் குறைந்தபட்சம் தங்கள் சொந்தக் காலில் நிற்பதற்கும் வகை செய்யக் கூடிய குறைந்தபட்சம் ஓரளவு அரசியல் அதிகாரத்தை தீண்டப் படாதவர்களுக்கு வழங்கக் கூடியதுமான ஓர் அரசியலமைப்புச் சட்டம் வகுத்தளிக்கப்பட வேண்டும் என்று தீண்டப்படாதவர்கள் வலியுறுத்துகின்றனர். சுருக்கமாகக் கூறினால், இந்து வகுப்புவாதப் பெரும்பான்மையினரின் கொடுங்கோன்மை உருவாவதைத் தடுக்கக் கூடிய சில பாதுகாப்புகள் அரசியலமைப்புச் சட்டத்திலேயே இடம் பெற வேண்டுமென்று தீண்டப்படாதோர் விரும்புகின்றனர்.

ஆனால் அதேசமயம் காங்கிரஸ் என்ன கருதுகிறது? பிரிட் டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து இந்தியா சுதந்திரம் பெறுவதே எல் லாமும் என்று அது கருதுகிறது. சுதந்திர இந்தியாவில் இந்திய மக்க ளின் நல்வாழ்வுக்கு இதற்கும் அதிகமாக எதுவும் தேவையில்லை என்று அது நினைக்கிறது. சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பைப் பொறுத்தவரையில் அதனை ஒரு பிரச்சினையாகவே காங்கிரஸ் எடுத்துக் கொள்ளவில்லை.

சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு எப்படி இருக்கும் என்று கேட்டால் சுதந்திர இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இருக்கும் என்று காங்கிரசிடமிருந்து பதில் வருகிறது. அது எத் தகைய ஜனநாயகமாக இருக்கும்? வயதுவந்தோர் வாக்குரிமை அடிப் படையில் அமைந்ததாக அது இருக்கும் என்று காங்கிரஸ் பதிலளிக் கிறது. வயது வந்தோர் வாக்குரிமையைத் தவிர, இந்து வகுப்புவாத பெரும்பான்மையினரின் கொடுங்கோன்மையைத் தடுப்பதற்கு வேறு ஏதேனும் பாதுகாப்புகள் இருக்குமா? இதற்குக் காங்கிரசின் பதில் திட்டவட்டமான முறையில் எதிர்முறையானதாகவே அமைந்துள்ளது.

இத்தகைய பாதுகாப்புகளை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள்? இவ் வாறு கேட்டால் அது தேசத்தைக் துண்டாடுவதில்தான் முடியும் என்று காங்கிரஸ் கூறுகிறது. தனது மதிகேட்டை, அறிவு மழுக்கத்தை மூடிமறைப்பதற்கே காங்கிரஸ் இத்தகைய கவர்ச்சிகரமான வாதத்தை முன்வைக்கிறது. இந்தக் கூர்மதியான வாதத்தின் பிதாமகர் திரு. காந்தியைத் தவிர வேறுயாருமல்ல! இத்தகைய பாதுகாப்புகள் அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டால் அதனால் பாதிக்கப்படக் கூடிய உயர்சாதி இந்துக்கள், இதற்காக அவருக்குப் பெரிதும் நன்றி கடன்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் தீண்டப்படாதவர்கள் இந்த சிறுபிள்ளைத்தனமான குதர்க்கவாதத்தை ஏற்க மறுக்கிறார்கள். இந்திய சமூக வாழ்க்கையை வகுப்புகளின் அடிப்படையில்தான் எண்ணிப் பார்க்க வேண்டும். இதைத் தவிர வேறு வழியில்லை. வகுப்புகள் என்பவை இந்திய சமூக வாழ்க்கையில் ஆழமாக நிலைபெற்றுவிட்ட அம்சங்கள்; வகுப்புகளிடையேயான உறவுகளில் வகுப்புவாத உணர்வும் வகுப்பு வாத முற்சார்புகளும் ஆதிக்கம் செலுத்தவதில்லை என்ற கூற்றை ஒப்புக்கொள்வது தவறாகும். இந்த வகுப்புவாதப் பெரும்பான்மை யினரின் சமூக மனப்போக்கை ஒரு வரட்டுத்தனமான சித்தாந்தம் ஆட்கொண்டிருக்கிறது. அது என்ன? பல்வேறு வகுப்புகளுக்கிடையே யான பரஸ்பர உறவுக்கு வெறும் ஏற்றத்தாழ்வை மட்டுமன்றி படி நிலை ஏற்றத்தாழ்வை இந்த சித்தாந்தம் ஆதார அடித்தளமாகக் கொண்டிருக்கிறது.

இந்தப் படிநிலை ஏற்றத்தாழ்வு சித்தாந்தம் சுதந் திரத்திற்கும் சகோதரத்துவத்திற்கும் முற்றிலும் தீங்கு விளைவிக்கக் கூடியதாகும். இந்தப் படிநிலை ஏற்றத்தாழ்வு மறைந்துவிடுமென்றோ அல்லது இந்துக்கள் அதனை ஒழித்துக்கட்டி விடுவார்கள் என்றோ எதிர்பார்க்க முடியாது. இது சாத்தியமல்ல. இந்தப் படிநிலை ஏற்றத் தாழ்வு தற்செயலானதோ, இடைநிகழ்வோ அல்ல. அது இந்துக்களின் ஒரு சமயக் கோட்பாடு. அது இந்து சமயத்தின் அதிகாரப்பூர்வமான சித்தாந்தம். அது புனிதமானது; எந்த இந்துவும் அதனை ஒழித்துக் கட்டுவது பற்றி நினைக்க முடியாது. ஆதலால் படிநிலை ஏற்றத் தாழ்வை தனது சமயக்கோட்பாடாகக் கொண்ட இந்து வகுப்புவாதப் பெரும்பான்மை என்பது ஒரு தாற்காலிகமான கட்டமல்ல. அது ஒரு நிரந்தரமான உண்மை; என்றென்றைக்கும் அபாயகரமானது.

இந்தியா வுக்கு ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை வகுக்கும்போது ஒரு நிலை யான வகுப்புவாதப் பெரும்பான்மை இருந்து வருவதை உதாசீனம் செய்துவிட முடியாது; அதனை அரசியல் ஜனநாயகத்துடன் இணக்கு விப்பதற்குப் பாதுகாப்புகளை உருவாக்கும் பிரச்சினையை எதிர்ப்பட வேண்டியிருக்கும். இதுதான் தீண்டப்படாதோர் முன்வைக்கும் வாதம்.

தீண்டப்படாதோர் கோரிவரும் அரசியல் சட்டப் பாதுகாப்பு கள் அண்மையில் அகில இந்திய ஷெட்யூல் வகுப்பினர் சம்மேள னத்தின் செயற்குழு நிறைவேற்றிய தீர்மானங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தீர்மானங்கள் பின்னிணைப்பு XIல் பிரசுரிக்கப் பட்டிருக்கின்றன. எனினும் வாத நோக்கங்களுக்காக இவற்றில் மூன்றை மட்டும் இங்கு எடுத்துக் கொண்டுள்ளேன். (1) சட்டமன்றத்தில் உத்தரவாதமான குறைந்தபட்ச பிரதிநிதித்துவம்; (2) நிர்வாக சபையில் உத்தரவாதமான குறைந்தபட்ச பிரதிநிதித்துவம்; (3) பொதுப்பணித் துறைகளில் உத்தரவாதமான குறைந்தபட்ச பிரதிநிதித்துவம். இந்தக் கோரிக்கைகளை அப்பட்டமான வகுப்புவாதம் என்று காங்கிரஸ் எள்ளி நகையாடியுள்ளது; அதுமட்டுமல்ல.

தீண்டப்படாதோரை வேலைக்காக ஆளாய்ப் பறப்பவர்கள் என்றும் படம்பிடித்துக் காட்டி யிருக்கிறது. இந்த உத்தரவாதங்களை உயர் தேசியத்தின்பால் காங் கிரஸ் எதிர்க்கிறது; தன்னை அந்த தேசியத்தின் காவல் தெய்வமாக கருதிக்கொண்டு தனக்குத் தானே அட்சதை போட்டுக்கொள்கிறது. பாதுகாப்புகளுக்கு எதிராக காங்கிரஸ் முன்வைக்கும் வாதத்தின் அபத் தத்தை புரிந்துகொள்வது அயல்நாட்டவருக்கு சிரமமாக இருக்கக் கூடும். ஆனால் இந்தப் பாதுகாப்புகள் ஏன் கோரப்படுகின்றன என் பதை அயல்நாட்டினர் தெரிந்து கொண்டால் இவற்றை வகுப்புவாத மாக சித்தரிக்க காங்கிரஸ் செய்யும் முயற்சி எவ்வளவு கடைந் தெடுத்த முட்டாள்தனம் என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

தீண்டப்படாதவர்கள் இந்த உத்த்ரவாதங்களைக் கோரும் நோக்கம் சட்டமன்றங்களையும், அமைச்சரவையையும், நிர்வாகத் தையும் தீண்டப்படாதார்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்ப தல்ல. இந்த உத்தரவாதங்கள் இந்து வகுப்புவாதப் பெரும்பான்மை யினரின் கொடிய நெருக்குதலால் தீண்டப்படாதவர்கள் அதல பாதாளத்துக்குத் தள்ளப்பட்டு விடாதபடி தடுக்கும் வலுவான அடித் தளங்கள் எனலாம். இந்த இந்து வகுப்புவாதப் பெரும்பான்மை யினரை ஒரு வரம்புக்குள், கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதே இந்த உத்தரவாதங்களின் நோக்கம். இத்தகைய உத்தரவாதங்கள் தீண்டப்படாதவர்களுக்கு அளிக்கப்படவில்லை என்றால் அதன் விளைவு மிகவும் பயங்கரமானதாக இருக்கும்.

இந்து பெரும்பான்மை யினர் சட்டமன்றத்தையும், அமைச்சரவையையும், நிர்வாகத்தை யும் கைப்பற்றிக் கொள்வதுடன் நிற்க மாட்டார்கள்; சட்டமன்றமும் அமைச்சரவையும், நிர்வாகமும் இந்து பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தின்கீழ் வந்துவிடும்; அப்போது இந்த சக்திவாய்ந்த அர சாங்க சாதனங்கள் சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்குப் பதிலாக இந்துப் பெரும்பான்மையினரின் கைக்கருவிகளாக மாறி, அதன் ஆணை களை நிறைவேற்றுபவைகளாக ஆகிவிடும்.

மேலே தரப்பட்டுள்ள விளக்கங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, காங்கிரசுக்கும் தீண்டப்படாதோருக்கும் இடை யிலுள்ள பிரச்சினைகளை சராசரி அறிவுத்திறம் படைத்த வெளிநபர் ஒருவர் புரிந்துகொள்வதில் எத்தகைய சிரமமும் இருக்க முடியாது என்பது தெள்ளத்தெளிவு. முதலாவதாக, வகுப்புவாதப் பெரும் பான்மை நிலவுவது அரசியல் ஜனநாயகத்துக்கு மிகவும் ஆபத்தானது என்பதை காங்கிரஸ் ஏற்க மறுக்கிறது; தீண்டப்படாதவர்களோ இந்த அபாயத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு அரசியலமைப்பில் ஆக்க பூர்வமான விதிமுறைகள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

இதுதான் இந்த இரு தரப்புகளுக்குமிடையே உள்ள பிரச்சினை என்பதை அந்த வெளிநபர் புரிந்துகொள்ள வேண்டும். வேறுவிதமாகச் சொன்னால் இந்தியாவை ஜனநாயகத்துக்குப் பந்தோபஸ்து மிக்கதாக ஆக்க வேண்டும் என்பதில் தீண்டப்படாத வர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் காங்கிரசாரோ ஜனநாயகத்தை எதிர்க்காவிட்டாலும், அந்த ஜனநாயகத்தை உண்மையானதாக்கு வதற்கான நிலைமைகள் தோற்றுவிக்கப்படு வதை நிச்சயமாக அவர்கள் எதிர்க்கின்றனர்.

இரண்டாவதாக, அரசியல் சட்டத்தில் பாதுகாப்புகள் இருக்க வேண்டும் என்ற தீண்டப்படாதவர்களின் இந்தக் கோரிக்கை புதுமை யான கோரிக்கை ஒன்றுமல்ல என்பதையும் அயல்நாட்டவர் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பாதுகாப்புகள் என்பவை சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகள், வரையறைகள் என்பவற்றின் மறுபெயரே என்பதை யும், அரசியல் ஜனநாயகம் சீர்குலைக்கப்படுவதிலிருந்து அதனைப் பாதுகாப்பதற்கு இத்தகைய கட்டுப்பாடுகளையும் வரையறைகளை யும் தன்னுள் கொண்டிராத எந்த அரசியலமைப்புமே இல்லை என்பதையும் அவர் மனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் அமெரிக் காவின் அரசியலமைப்புச் சட்டத்தில் இப்படிப்பட்ட கட்டுப்பாடு களும் வரையறைகளும் நிறைய இருக்கின்றன என்பதையும், அடிப் படை உரிமைகள், அதிகாரப் பிரிவினை சம்பந்தப்பட்ட விதி முறைகளில் அவை இடம்பெற்றிருக்கின்றன என்பதையும் அவர் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால், தீண்டப் படாதவர்கள் கோரும் பாதுகாப்புகள் ஏனைய நாடுகளில் உள்ள வற்றிலிருந்து சற்று மாறுபட்ட வடிவத்தில் இருப்பதைக் கண்டு அவர் எவ்விதத்திலும் குழப்பமடைய மாட்டார். ஏனென்றால், அரசியல் ஜனநாயகத்துக்கு அபாயத்தைத் தோற்றுவிக்கக்கூடிய சக்திகளின் இயல்பைப் பொறுத்து பாதுகாப்புகளின் இயம்பும் மாறும்; இந்தியா வில் இந்த சக்திகள் வேறுபட்ட இயல்பைக் கொண்டிருப்பதால் பாதுகாப்புகளும் வேறுபட்ட வடிவத்தை எய்துவது அவசிய மாகிறது.

மூன்றாவதாக, இந்தியாவி யாரேனும் வகுப்புவாத வெறி கொண்டிருக்கிறார்கள் என்றால் அது காங்கிரசை தவிர தீண்டப் படாதவர்கள் அல்ல என்பதையும், அரசியல் சட்டரீதியான உத்தர வாதங்கள் வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்ப்பதற்கு காங்கிரஸ் எத்தகைய தத்துவார்த்த ஆதாரங்களை முன்வைத்தபோதிலும் அர சியல் களத்தை இந்துக்களுக்கு ஒரு சுதந்திரமான மேய்ச்சல் நிலமாக ஆக்குவதே அதன் உண்மையான நோக்கம் என்பதையும் புரிந்து கொள்வதில் அயல்நாட்டவருக்கு எந்தச் சிரமமும் இருக்காது. காங் கிரஸ் இவ்விதம் பகிரங்கமாகக் கூறாவிட்டாலும் காங்கிரஸ் வகுப்பு வாதக் கண்ணோட்டத்துடன் நடந்து கொள்வது முற்றிலும் இயல்பே என்பதை அவர் காணமுடியும்.

ஏனென்றால் இந்து பெரும்பான்மை காங்கிரசின் முதுகெலும்பாகும். இது இந்துக்களால் இந்துக்களின் ஆதரவைக் கொண்டு அமைந்துள்ளது. இந்தப் பெரும்பான்மைதான் காங்கிரசின் பரிவாரமாகும்; எனவே, தனது பரிவாரத்தின் உரிமை களைப் பாதுகாக்க அது கடமைப்பட்டுள்ளது. அயல்நாட்டவர் இதனை உணர்ந்திருந்தால், தேசியத்தின் நலனுக்காகவே இந்தக் கோரிக்கையை தான் எதிர்ப்பதாக காங்கிரஸ் முன்வைக்கும் வாதங் களைக் கண்டு ஏமாறமாட்டார். மாறாக, அப்பட்டமான வகுப்பு வாதம் தறிகெட்டுத் தாண்டவமாடுவதற்குப் பச்சை விளக்குக் காட்டு வதற்கே தேசியத்தைப் பயன்படுத்தி உலகை காங்கிரஸ் ஏமாற்று கிறது என்பதை அவர் புரிந்துகொள்வார்.

கடைசியாக, காங்கிரசின் பிரதிநிதித்துவ இயைபு இந்திய அரசியலில் ஏன் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினை யாகி உள்ளது என்பதையும் அயல்நாட்டவர் தெரிந்து கொள்வார். சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு இப்படித்தான் இருக்க வேண் டும் என்று கூறும் உரிமை தனக்கு மட்டும்தான் உண்டு என்று காங் கிரஸ் தன்முனைப்போடு, அகம்பாவத்தோடு, ஆணவத்தோடு கொக் கரித்திருக்கவில்லை என்றால் காங்கிரசின் பிரதிநிதித்துவத் தன்மை பற்றி எவரும் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். அது யாரைப் பிரதி நிதித்துவப்படுத்துகிறது, யாரைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பது குறித்தும் அக்கறை எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதையும் அயல்நாட்டவர் உணர்ந்து கொள்வார்.

ஆனால் காங் கிரசோ நாட்டின் சார்பில் பேசுவதற்கு தனக்கு மட்டுமே உரிமை உண்டு என்று கூறிவருவதுதான் ஒரு முக்கியமான பிரச்சினையாக உருவாகி இருக்கிறது; இந்நிலைமையில் இதனை ஏற்காதவர்களுக்கு இந்த உரிமை கொண்டாடலை எதிர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.

II

இவ்வாறெல்லாம் இருந்தும் அயல்நாட்டவர்கள் பின்வரு மாறு கேட்கிறார்கள்: “சுதந்திரத்திற்கான போராட்டத்தில்’ காங்கிர சுடன் இணைந்து ஏன் செயல்படக் கூடாது?; இவ்வாறு காங்கிர சுடன் இணைந்து செயலாற்றுவதற்கு அரசியல் சட்ட பாதுகாப்பு கள் சம்பந்தமாக உடன்பாடு ஏற்படுவதை ஏன் நிபந்தனையாக முன் வைக்க வேண்டும்? என்னவிருந்தாலும் சுதந்திரம் பெற்ற பிறகு தானே பாதுகாப்புகள் கிட்டமுடியும்?” இது சம்பந்தமாக முன்னர் நாம் முன்வைத்த விவாதத்தைக் கூர்ந்து கவனித்த ஓர் அயல்நாட்டவர் இந்த ‘சுதந்திரப் போராட்ட’த்தில் காங்கிரசுடன் ஒத்துழைப் பதை அத்தனை பாதுகாப்பானதாக தீண்டப்படாதவர்கள் ஏன் கருத வில்லை என்பதை நிச்சயம் புரிந்துகொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை.

ஆனால் இதனைப் புரிந்து கொள்ளாதவர்கள் சிலர் இருக்கக்கூடும்; ‘சுதந்திரப் போராட்டத்தில்’ தீண்டப்படாதோர் காங் கிரசுடன் கலந்து கொள்ளாததற்கான காரணங்கள் என்ன என்பதை அறிந்துகொள்ளவும் அவர்கள் விரும்பக் கூடும். இதற்கு அவர்கள் தவறான காரணங்களை ஊகிப்பதற்கு அனுமதிப்பதைவிட சரியான காரணங்களை அவர்கள் தெரிந்துகொள்ள உதவுவது உகந்ததாக இருக்கும். இவற்றில் மிக முக்கியமான காரணங்களை மட்டும் இங்கு தருகிறோம்.

முதல் காரணம் பகுத்தறிவின்பாற்பட்டது. தீண்டப்படாதவர் கள் பின்வருமாறு கேட்கின்றனர்: “முன்கூட்டியே ஓர் உடன்பாடு காணலாம் எனக் காங்கிரசிடம் கோருவதில் என்ன தவறு இருக்கிறது? காங்கிரஸ் முன்கூட்டியே ஓர் உத்தரவாதத்தை அளிப்பதில் அதற்கு என்ன நஷ்டம் இருக்கிறது?” பாதுகாப்புகள் சம்பந்தப்பட்ட இந்தக் கோரிக்கைக்கு காங்கிரஸ் முன்கூட்டியே இணங்கினால் அதில் இரண்டு பலன்களை உண்டு என்று அவர்கள் வாதிக்கின்றனர்.

முதலாவதாக, இந்துப் பெரும்பான்மை ஆட்சியில் தங்கள் கதி என்னவாகுமோ என்று பெரிதும் அஞ்சித் தவிக்கும் தீண்டப்படாதோருக்கு இத்தகைய உத்தரவாதம் மிகுந்த ஆறுதலையும் நம்பிக்கையையும் அளிக்கும். இரண்டாவதாக, காங்கிரசுடன் ஒத்துழைப்பதற்கு இந்த உத்தர வாதம் தீண்டப்படாதவர்களுக்கு பெரும் தூண்டுகோலாக இருக்கும். சொல்லப்போனால், தீண்டப்படாதோர் ஏன் ஒத்துழையாமைப்   போக்கைக் கடைப்பிடிக்கின்றனர்? ஏனென்றால் இந்த சுதந்திரம் அடையப் பெற்றால் இந்துப் பெரும்பான்மையினர் தங்களை மீண்டும் அடிமைப்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். ஒரு சிறு விலைகொடுப்பதன் மூலம் அதாவது முன்கூட்டியே ஓர் உடன்பாடு காணுவதன் மூலம் ஏன் இந்த அச்சத்தை அகற்றக்கூடாது?

இரண்டாவது காரணம் அனுபவத்தின்பாற்பட்டது. “சுதந்திரத் திற்கான போராட்டம்” முடிவடைந்ததும் வலுமிக்க சக்திகள் வலு வில்லாத சக்திகளுக்குப் பாதுகாப்பளிக்க பெருந்தன்மையுடன் முன் வந்ததாக உலக அனுபவம் காட்டவில்லை என்று தீண்டப்படாதவர் கள் கூறுகின்றனர்.

இத்தகைய வஞ்சனைக்கு எத்தனையோ உதாரணங்களைக் கூறமுடியும். அமெரிக்காவில் உள்நாட்டுப் போருக்குப் பிறகு நீக்ரோக் களுக்கு இழைக்கப்பட்ட பச்சை துரோகத்தை இவ்வகையில் முக்கிய மாகக் குறிப்பிடலாம். உள்நாட்டுப் போரில் நீக்ரோக்கள் ஆற்றிய பங்கு குறித்து ஹெர்பர்ட் அப்தேகர் பின்வருமாறு கூறுகிறார்:( உள்நாட்டுப் போரில் நீக்ரோ, பக்கங்கள் 35-40.)

நீக்ரோக்களை அடிமைப்படுத்தியிருந்த அரசுகளைச் சேர்ந்த 1,25,000 நீக்ரோக்கள் அமெரிக்க உள்நாட்டுப் போரில் கூட்டிணைப்பை ஆதரித்த வட அரசுகளின் படையில் சேவை செய்தனர். அவர்கள் வடக்கைச் சேர்ந்த 80 ஆயிரம் பேர்களுடன் சேர்ந்து நானூற்று ஐம்பது சண்டை களில் நேர் நிகரற்ற நெஞ்சுரத்துடன், தீரத்துடன், வீரத்துடன் போரிட்டனர். உள்நாட்டுப் போரில் விலகிப்போன பதி னோரு நாடுகளது கூட்டமைப்பு சிதைந்து சீர்குலைந்து போவதிலும், அடிமைத்தனத்தை ஒழிப்பதிலும் இது முக்கியப் பங்காற்றிற்று.

“நீக்ரோ என்பவன் அப்படியே ஒரு மனிதப்பிறவியாக இருந்தாலும் இயல்பாகவே, மாற்றமுடியாத வகையில் கீழானவன், ஓர் அடிமையாக இருப்பதற்கு மட்டுமே தகுதி யானவன் என்னும் இழிவான, கயமைத்தனமான சித்தாந் தத்தின்மீது கட்டி உருவாக்கப்பட்ட ஒரு நாட்டினுள் இதோ 2 லட்சம் ஆயுதந்தாங்கிய நீக்ரோ வீரர்கள் போராடி வருவதைப் பார்க்கிறோம்.

 * * *

அவமானகரமான பாரபட்ச நிலைமைகளுக்கும் மிகவும் பிரதிகூலமான சூழ்நிலைக்கும் இடையேயும் குடியரசின் நீக்ரோ படைவீரர்கள் தங்கள் நாட்டிற்காகப் போராடினர். வெள்ளைப் படைவீரர்கள் மாதம் பதின்மூன்று டாலர் பெற்று வந்தனர். நீக்ரோக்களோ 1864 ஜுலை 14 ஆம் தேதி வரை மாதம் ஏழு டாலர் வீதமே பெற்றுவந்தனர்; பின்னர் பின்தேதியிட்டு 1864 ஜனவரி 1 முதல் இந்த ஊதியம் சமப்படுத்தப்பட்டது. வெள்ளையர்கள் படையில் சேர்ந்தபோது அவர்களுக்கு ஏராளமாக ஊக்க ஊதியம் அளிக்கப்பட்டது; நிக்ரோக்களுக்கு (1864 ஜுன் 15 வரை) அத்தகைய சலுகை எதுவும் தரப்படவில்லை; நீக்ரோக் களுக்கு ‘கமிஷன்’ பெற்ற அதிகாரிகளாக பதவி உயர்வு பெறும் வாய்ப்பு ஏதும் இல்லை.....

அடிமைகளாக இருந்து படைவீரர்களாக நீக்ரோக்கள் போரில் கைது செய்யப்பட் டதால் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்நாட்டுப் போரில் விலகிப்போன பதினொரு நாடுகளின் கூட்டிணைவு அவர் களுக்கு போர்க்கைதிகள் அந்தஸ்தை அளிக்க மறுத்தது (1864 அக்டோபர் வரை இந்த நிலை நீடித்தது). மாறாக அவர் கள் கொல்லப்பட்டனர், திரும்பவும் அடிமைகளாக்கப் பட்டனர் அல்லது கட்டாய உழைப்பு முகாமில் அடைக்கப் பட்டனர்.

 * * *

இதோ இதுவரை அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வந்த ஆயிரக்கணக்கான ஆயுதந்தாங்கிய நீக்ரோ படைவீரர்கள் மூலைமுடுக்கெல்லாம் தெரிந்த தங்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டனர்; புதிதாகப் பெற்ற தங்கள் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், தங்கள் வீரத்தை தீரத்தை நிரூபித்துக் காட் டவும், தங்களுடைய சொந்த பெற்றோர்களை, பிள்ளை களை, மனைவிமார்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்க வும் தங்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டனர்.... குடி யரசைப் பாதுகாப்பதற்காக முப்பத்தோராயிரம் நீக்ரோக்கள் போர்முனையில் தங்கள் இன்னுயிரை ஈந்தனர் என்பதை இப்போதும் நினைவிற் கொள்ள வேண்டும்.

உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்ததும் நீக்ரோக்களுக்கு என்ன நேர்ந்தது? வெற்றி பெற்ற எக்களிப்பில், உணர்ச்சியின் திடீர் எழுச் சியில் குடியரசுவாதிகள் முதலில் என்ன செய்தார்கள்? அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் பாதுகாப்பதற்காக போர் புரிந்த அவர்கள், வெற்றிபெறும் பொருட்டு நீக்ரோக்களின் உதவியைப் பெற்ற அவர் கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு பதின்மூன்றாவது திருத்தத்தைக் கொண்டு வந்தனர்.

இதன்படி சட்டத்தின் பார்வையில் அவர்களது அடிமைத்தனம் ஒழித்துக்கட்டப்பட்டது. ஆனால் வாக்காளர்கள் என்ற முறையிலோ, அதிகாரிகள் என்ற முறையிலோ அரசாங்கத்தில் பங்கு பெற நீக்ரோக்கள் எத்தகைய உரிமையையும் பெற்றார்களா? நீக்ரோக்கள் அரசியல் ரீதியில் வெள்ளையர்களுக்கு சமமாக நடத்தப் பட வேண்டும் என்பதை தெற்கத்திய நாடுகளை அங்கீகரிக்கும்படிச் செய்வதற்கு குடியரசுவாதிகள் சில நடவடிக்கைகளை மேற்கொண் டனர். இது பதினான்காவது திருத்தத்தின் மூலம் செய்யப்பட்டது. நீக்ரோக்கள் உட்பட ஐக்கிய அமெரிக்க நாடுகளில் பிறந்த அனை வருக்கும் இந்தத் திருத்தம் குடியுரிமை வழங்கிற்று; ஐக்கிய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த எந்த ஒரு குடிமகனது உரிமைகளையும் பாதிக்கும், பறிக்கும் எத்தகைய சட்டத்தையும் தடைசெய்தது.

மேலும் வாக்குரிமை பெறுவதிலிருந்து விலக்கப்படும் பிரஜைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப எந்த ஒரு நாட்டின் காங்கிரசிலும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் இது வகை செய்தது. இந்த பதி னான்காவது சட்டத்திருத்தத்தை மதிக்கும் உத்தேசம் ஏதும் தெற் கத்திய நாடுகளுக்கு இல்லை. டென்னசியைத் தவிர இதர நாடுகள் அனைத்தும் இந்தச் சட்டத் திருத்தத்தை நிராகரித்தன; முற்றிலும் வெள்ளையர்களைக் கொண்ட அரசாங்கங்களை அமைத்தன.

குடியரசுவாதிகள் புனருத்தாரணச் சட்டம் (கலசம் செய்யும் நாடுகளில் ஆற்றல் மிக்க அரசாங்கங்களை அமைக்க வகை செய்யும் மசோதா) எனப்படும் ஒரு சட்டத்தை இயற்ற 1867 மார்ச் 2 முதல் முயற்சி மேற்கொண்டனர். கூட்டரசில் இன்னமும் சேராத நாடுகளில் வெள்ளை யர்கள் அமைத்துள்ள அரசாங்கங்களைப் புறக்கணித்துவிட்டு, அங்கு சட்டப்பூர்வமான அரசாங்கங்களை உருவாக்குவதும், அவற்றை கூட்டரசில் மீண்டும் இணைப்பதற்கான சூழ்நிலைமைகளை நிர்ண யிப்பதும் இந்த சட்டத்தின் நோக்கமாகும். டென்னசி தவிர பிரிந்து சென்ற எல்லாத் தெற்கு நாடுகளும் இந்தச் சட்டத்தின்படி ஐந்து ராணுவ மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டமும் கூட்டரசுப் படையைச் சேர்ந்த ஒரு பிரிகேடியர்-ஜெனரலின் பொறுப் பில் விடப்பட்டன.

(1) இந்த நாடுகள் ஒவ்வொன்றும் ஒரு புதிய அரசியல் சட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டும்; (2) பதினான் காவது சட்டத்திருத்தம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்; (3) இந்த நாடுகள் உரிய முறையில் கூட்டரசில் சேரவேண்டும். அதுவரை யிலும் இந்த நாடுகள் ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துவரும்.

குடியரசுவாதிகள் பதினைந்தாவது சட்டத்திருத்தம் எனப்படும் ஒரு திருத்தத்தையும் கொண்டு வந்தனர். ஒரு பிரஜைக்குள்ள வாக்களிக் கும் உரிமையை வருணம், இனம், நிறம், முந்தைய அடிமை நிலை போன்ற எத்தகைய காரணங்களாலும் மறுக்கவோ, குறைக்கவோ கூடாது என்று இந்தத் திருத்தம் கூறுகிறது; இதுவும் அரசியல் சட்டத் தின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு கூட்டரசைச் சேர்ந்த எல்லா நாடுகளையும் கட்டுப்படுத்துவதாக இருந்தது.

ஆனால் நீக்ரோக்களை சமத்துவப் பிரஜைகளாக ஏற்கும் உத்தேசம் தென்பகுதியைச் சேர்ந்த வெள்ளையர்களுக்கு இல்லை. நீக்ரோக்களின் குடியுரிமைகளைப் பறிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது. தென்புலத்து அரசாங்கங்களாலும் தெற்கு நாடு களைச் சேர்ந்த வெள்ளையர்களாலும் இந்தப் பணி ஒரு புனிதமான க்டமையாகக் கருதப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வந்தது. பதினைந் தாவது சட்டத் திருத்தத்தைத் தவிர்ப்பதற்கு தெற்கு நாடுகள் தமது முழு சூழ்ச்சித் திறத்தையும் பயன்படுத்தி, இனம், நிறம் ஆகிய காரணங்களால் அல்லாது வேறு போலியான, மோசடியான காரணங்களின் அடிப்படையில் நீக்ரோக்களுக்கு வாக்குரிமையை மறுப் பதில் முனைந்து ஈடுபட்டன.

இவற்றில் பெரும்பாலான நாடுகள் இந்தக் கெடுமதியோடு பாட்டனார் விதி (பாட்டனார் விதி என்று அழைக்கப்படுவதற்குக் காரணம் ஒருவருடைய பாட்டனார்முன்னர் வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்தால் அவரது வாக்களிக்கும் உரிமை கட்டுப்படுத்தப்பட்டதே இதற்குக் காரணம்)என்பதைப் பயன்படுத்திக் கொண்டன; இந்த விதி நீக்ரோக்களுக்கு வாக்குரிமை கிடைக்காத படிச் செய்தது; அதேசமயம் வெள்ளையர்களுக்கு அந்த உரிமையை முழு அளவுக்கு உறுதிசெய்தது. இன்னொருபுறம் இந்த சீர்குலைவுப் பணியை கூ கிளக்ஸ் கிளான் என்னும் அமைப்பு செய்து வந்தது. இந்தக் கிளான் டென்னசி இளைஞர்களால் ஆரம்பத்தில் ஒரு பொழுதுபோக்கு மன்றமாகவே ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அது நீக்ரோக்களை ஒடுக்குவதற்கும், அவர்கள் தங்கள் அரசியல் உரிமை களைப் பயன்படுத்தாதபடி தடுப்பதற்குமான ஓர் அமைப்பாக மாற்றப்பட்டது. அது நீக்ரோக்களுக்கு எதிராக அடிக்கடியும், தெற்கே உள்ள நீக்ரோக்களிடம் அனுதாபம் காட்டும் வெள்ளையர்களுக்கு எதிராக சில சமயங்களிலும் கொடுமையான அட்டூழியங்களைக் கட்டவிழ்த்துவிட்டது. இந்த அடாவடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

தென்பகுதியைச் சேர்ந்த வெள்ளையர் கூட்டம் முழுவதுமே இந்த ரவுடிக் கும்பலை ஆதரித்து நின்றதையே இது காட்டுகிறது. இந்தக் கும்பல் கூட்டரசின் துருப்புகளை எதிர்த்து நிற்கத் துணியவில்லை. எனினும் கசையடி கொடுத்தல், படுகொலைகள் புரிதல், வீடுகளைத் தீயிட்டுப் பொசுக்கு தல் போன்ற இவர்களது குரூர நடவடிக்கைகளை அமெரிக்க காங் கிரஸ் இயற்றிய சட்டங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை; இது சில மாவட்டங்களுக்கு அவப்பேரைச் சம்பாதித்துக் கொடுத்தது.

தென் நாடுகளின், தெற்கே வாழ்ந்த வெள்ளையர்களின் நோக் கங்களை ஐக்கிய அமெரிக்க நாடுகளின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கள் முட்டுக் கொடுத்து ஆதரித்தன. பதினைந்தாவது சட்டத்திருத்தம் அமலில் இருந்தபோதிலும் நீக்ரோக்களுக்கும் வாக்குரிமை அளிப் பதை மறுக்கும் சட்டங்கள் செல்லுபடியாகத் தக்கவையே என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இன அல்லது நிற அடிப்படையில் வாக்குரிமை மறுக்கப்படவில்லை என்று இதற்கு சமாதானம் கூறப் பட்டது. மேலும் நீக்ரோக்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன் படுத்துவதை கூ கிளக்ஸ் கிளானின் நடவடிக்கைகள் தடுக்கின்றன என்றால் அதற்குப் பரிகாரமே இல்லை; ஏனெனன்றால் தேர்தல் உரிமைகளில் தனிப்பட்ட அமெரிக்க நாடுகள் தலையிடுவதை பதி னைந்தாவது சட்ட திருத்தம் தடுத்ததே தவிர தனிப்பட்ட அமைப்பு கள் தலையிடுவதை அது தடுக்கவில்லை என்றும் உச்சநீதிமன்றம் வாதம் செய்தது.

இந்நிலைமையில் குடியரசுவாதிகள் என்ன செய்தார்கள்? நீக்ரோக்களுக்கு முழுநிறைவான, மிகவும் பயனுறுதியுள்ள உத்தர வாதங்கள் அளிப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்து வதற்குப் பதிலாக அவர்கள் தென்னாடுகளை அங்கீகரிக்கவும் கூட் டரசில் அவற்றை இணைத்துக் கொள்ளவும், கலக்க்காரர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கவும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துருப்புகளைத் திரும்பப் பெறவும் இணங்கினார்கள்; இதன் விளை வாய் நீக்ரோக்கள் அவர்களுடைய எசமானர்களின் ஈவு இரக்கமற்ற கொடுமைக்கு மேலும் ஆளாயினர்; குரங்கு கை பூமாலை ஆயினர். இதுகுறித்து திரு. அப்தேகர் கூறுவதாவது:

 “ஆனால் தெற்கே ஜனநாயகத்துக்காகவும், நாட்டுக் காகவும், சிவில் உரிமைகளுக்காகவும் நிகரற்ற வீரதிரத் தோடு போராடிய நீக்ரோ மக்களும் அவர்களுடைய நண்பர் களும் தோற்கடிக்கப்பட்டனர்; வடபகுதியைச் சேர்ந்த தொழில் துறை மற்றும் நிதித்துறை பூர்ஷுவாக்கள் இழைத்த வெட்கக்கேடான துரோகமே இதற்குப் பிரதான காரணம். 1877ல் இவர்கள் தெற்கைச் சேர்ந்த பிற்போக்கான பண்ணை யார்களுடன் சமரசம் செய்து கொண்டனர். குடியரசுக் கட்சிக் குள் இருந்த பிற்போக்குப் பிரிவினருடன் கூட்டுச் சேர்ந்து வட பகுதியைச் சேர்ந்த பெரிய பூர்ஷுவாக்கள் புரட்சியைக் காட்டிக் கொடுத்துவிட்டனர், விற்றுவிட்டனர்; இதன் மூலம் தெற்கே அடிமைகளின் எசமானர்களாக இருந்த சுயநலக் கும்பல் தன் இஷ்டம்போல் கொட்டமடிக்க விட்டுவிட் டனர்; அவர்கள் தங்கள் சொந்த அரசை அமைத்துக்கொள்ள உதவினர். இருதரப்பினரும் தங்களுக்குள் இரகசியமாக செய்து கொண்ட இந்த உடன்பாடு நீக்ரோக்களின் தலையில் பேரியாக விழுந்தது; அவர்களது வாக்குரிமை பறிக்கப் பட்டது; அவர்க:ள் மிகவும் கேவலமான குற்றேவலர்களாக ஆக்கப்பட்டனர்; சட்டமுறையின்றித் தான்தோன்றித்தன மாகத் தூக்கிலிடப்பட்டனர்; தங்கள் சிவில் சுதந்திரங்களை யும், கல்வி வாய்ப்புகளையும் இழந்தனர்.”

இந்த நயவஞ்சகத் துரோகக் கதை இத்துடன் முடியவில்லை. குடியரசுவாதிகள் தெற்கில் ஜனநாயகவாதிகளை எதிர்த்து நிற்க வேண்டியவர்களாக உள்ள நிலைமையில், மிளா நரகத்திலிருந்து நீக்ரோக்களைக் கைகொடுத்துத் தூக்கிவிட்டால் இந்தப் போட்டி யில் அவர்களது கைஓங்கும். ஏனென்றால் வடக்கில் போன்றே தெற் கிலும் வெள்ளையர்கள் குடியரசுவாதிகள் என்றும் ஜனநாயகவாதி கள் என்றும் பிளவுபட்டுள்ளனர், ஆனால் அதேசமயம் நீக்ரோ வாக்காளர்கள் கணிசமான எண்ணிக்கையில் இல்லாத எந்த ஒரு நாடும் தெற்கில் இல்லை. அப்படியிருக்கும்போது நீக்ரோக்களை ஆதரித்து நிற்பது குடியரசுவாதிகளுக்கு மிகுந்த பலத்தை அளிக்கும். எனினும் குடியரசுவாதிகள் இதனைச் செய்யத் தயாராக இல்லை.

அதற்குப் பதிலாக நீக்ரோக்களின் வாக்குகளை நாடுவதில்லை என்று குடியரசுவாதிகள் ஜனநாயகவாதிகளுடன் ஓர் உடன்பாடு செய்து கொண்டு விட்டதாக தோன்றுகிறது. உண்மையில் தெற்கே ஜன நாயகக் கட்சி இல்லை என்றே கூறவேண்டும். இவ்வாறு அக்கட்சி அங்கு இல்லாமல் போனதற்கு நீக்ரோக்கள் பக்கம் நிற்பதற்கு அது அஞ்சியதே காரணம்.

அமெரிக்காவில் நீக்ரோக்களுக்கு ஏற்பட்ட இந்த அவல நிலையை, உள்ளம் உருக்கும் நிலையை, கண்கலங்க வைக்கும் நிலையை தீண்டப்படாதவர்கள் மறந்துவிட முடியாது. அமெரிக்கா வில் நீக்ரோக்களுக்கு செய்யப்பட்ட துரோகம் இங்கும் நிகழ்ந்து விடாதபடி தடுப்பதற்கே “சுதந்திரப் போராட்டம்” சம்பந்தமாக அவர்கள் இத்தகையதோர் போக்கை மேற்கொள்ள நேர்ந்தது. இதில் என்ன தவறு இருக்கிறது? பாதுகாப்பு விஷயத்தில் மட்டுமீறிய தன் னம்பிக்கை வைத்து அழிந்துபோவதைவிட பயங்கொள்ளிகள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாவது எவ்வளவோ மேல் என்று புர்க்கின் அறி வுரையைப் பின்பற்றுவதைத் தவிர அவர்கள் வேறு என்ன செய்கிறார்கள்?

முதலில் “சுதந்திரப் போராட்டம்”, பின்னர்தான் அரசியல் சட்ட பாதுகாப்புகள் குறித்த உடன்பாடு என்று காங்கிரஸ் முன் வைக்கும் மூன்றாவது வாதமும் நியாயமற்றது, நேர்மையற்றது, பொருளற்றது. சுதந்திரம் பெறுவதற்கு இந்தியாவுக்குள்ள உரிமை சம்பந்தமாக பிரிட்டிஷ் அரசாஙகம் தெளிவுப்படுத்தவிட்ட நிலைமை யில், காங்கிரஸ் பெரிதும் விரும்பும் இந்தப் போராட்டம் அவசிய மற்றது. குதிரைக்கு முன்னால் வண்டியைப் பூட்டுவது போன்றது என்று தீண்டப்படாதவர்கள் உணர்கின்றனர். இந்தியாவின் சுதந் திரக் கோரிக்கை விஷயத்தில் பிரிட்டிஷாரின் போக்கு 1857 கலகத் துக்குப் பிறகு முற்றிலுமாக மாற்றமடைந்துள்ளது. இந்தியாவின் சுதந்திரக் கோரிக்கைக்கு அறவே எதிரான கண்ணோட்டத்தை பிரிட் டிஷ் அரசாங்கம் கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது.

இந்தக் கருத்தை லாரன்சே பகிரங்கமாக வெளியிட்டார். கல்கத்தாவில் உள்ள அவரது சிலையில் பின்கண்ட வாசகம் பொறிக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம்: “பிரிட்டிஷார் வாளின் வலிமை கொண்டு இந்தியாவை வென்றார்கள், அதே வாளின் வலிமையால் அதனைப் பாதுகாப்பார் கள்.” இந்தப் போக்கு மாண்டு மடிந்து குழிதோண்டிப் புதைக்கப் பட்டு விட்டது. ஒவ்வொரு ஆங்கிலேயரும் இன்று இதற்காக வெட்கித் தலைகுனிகின்றனர். இந்தக் கட்டத்துக்குப் பின்னர் மற் றொரு கட்டம் தொடர்ந்தது. இந்தியர்களுக்கு நாடாளுமன்ற அமைப்பு களில் அனுபவம் இல்லை என்று கூறி இந்தியாவின் சுதந்திரக் கோரிக்கையை பிரிட்டிஷ் அரசாங்கம் எதிர்த்தது. அந்த அனுபவத்தை இந்தியர்களுக்கு வழங்கும் பணி ரிப்பன் பிரபு ஆட்சிக் காலத்தில் தொடங்கிற்று.

இதனைத் தொடர்ந்து இந்தியர்களுக்கு அரசியல் பயிற்சி அளிக்க முயற்சி எடுத்துக்கொள்ளப்பட்டது; முதலில் ஸ்தல ஸ்தாபனத் துறையிலும் பின்னர் மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத் தங்களின் கீழ் மாகாண அரசாங்கத் துறையிலும் பயிற்சி அளிக்க ஏற் பாடு செய்யப்பட்டது. இப்போது மூன்றாவது கட்டத்தை அல்லது இன்றைய கட்டத்தை அடைந்துள்ளோம். வாளின் துணை கொண்டு இந்தியாவை எங்கள் ஆதிக்கத்தில் வைத்திருப்போம் என்று கூறிய தற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் குற்றமுணர்ந்து இப்போது வெட்கித் தலைகுனிகிறது. நாடாளுமன்ற அமைப்புகளைச் செயல்படுத்து வதற்கு இந்தியர்களுக்குத் தகுதியில்லை என்றெல்லாம் இப்போது அது கூறுவதில்லை.

இந்தியர்கள் விரும்பினால் விடுதலையை பெறுவதற்கு, சுதந்திரம் பெறுவதற்கு இந்தியாவுக்குள்ள உரிமையை பிரிட்டிஷ் அரசாங்கம் அங்கீகரிக்கிறது. இந்தியர்கள் தங்களது சொந்த அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொள்வதற்கு அவர் களுக்குள்ள உரிமையையும் பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்கிறது. பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டுள்ள இந்தப் புதிய கண்ணோட்டத்துக்கு கிரிப்ஸ் திட்டத்தைவிட வேறு சான்று என்ன வேண்டியிருக்கிறது.

இந்தியா சுதந்திரமடைவதற்கு பிரிட்டிஷ் அரசாஙகம் ஒரு முக்கிய நிபந்தனை விதித்தது; அதாவது நாட்டின் தேசிய வாழ்க்கையில் இடம்பெற்றுள்ள எல்லா முக்கிய சக்திகளின் உடன்பாட்டுடன் கூடிய ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை இந்தியர்கள் உருவாக்க வேண் டும் என்று அது நிபந்தனை விதித்தது. இத்தகைய கட்டத்தைத்தான் இன்று நாம் அடைந்துள்ளோம். எனவே, இந்தியர்களிடையே உடன் பாடு காண முயல்வதற்குப் பதிலாக “சுதந்திரப் போராட்டம்” பற்றியே காங்கிரஸ் ஏன் திரும்பத் திரும்பக் கிளிபிள்ளை போல் பேசிக்கொண்டிருக்கிறது; இப்போராட்டத்தில் கலந்து கொள்ளாத தற்காக தீண்டப்படாதவர்களை ஏன் அவதூறு செய்து வருகிறது, பழிகூறி வருகிறது என்பதை தீண்டப்படாதவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

III

பிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்த யோசனையை காங்கிரஸ் ஏன் எதிர்க்கிறது? இந்த எதிர்ப்புக்கு அது இரண்டு முகாந்திரங்களைக் கூறுகிறது? பிரிட்டிஷ் அரசாங்கம் முன்வைத்திருக்கும் நிபந்தனை இந்தியாவின் விடுதலை விஷயத்தில் தீண்டப்படாதோருக்கு ரத்து அதிகாரத்தை வழங்கியுள்ளது என்று காங்கிரஸ் கூறுகிறது. இது முற்றிலும் மதிகெட்ட வாதமாகும்; இவ்வாறு கூறுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவதாக, இந்தியாவிலுள்ள தீண்டப் படாதவர்கள் காரிய சாத்தியமற்ற கோரிக்கைகளை என்றுமே முன் வைத்ததில்லை. நேர்மையற்ற, நியாயத்திற்கு ஒவ்வாத கோரிக்கை களையும் அவர்கள் முன்வைத்ததில்லை. ரெட்மண்டிடம் கார்சன் கூறியதுபோல், “உங்கள் பாதுகாப்புகளைக் குப்பைக் கூடையில் கொண்டுபோய் போடுங்கள், அவை யாருக்கு வேண்டும்? உங்கள் ஆட்சியில் இருக்க நாங்கள் விரும்பவில்லை” என்று அவர்கள் சொல்லவில்லை. மாறாக, இந்துப் பெரும்பான்மையினரின் போக்கு சமுதாய நலனுக்கு உகந்ததாக இராதபோதிலும், ஜனநாயகப் பண் பற்றதாக இருந்தபோதிலும், அரசியலமைப்புச் சட்டம் தீண்டப் படாதவர்களுக்குப் போதுமான பாதுகாப்புகளை அளித்தால் இந்துக் களின் ஆட்சிக்கு உட்பட்டிருக்க அவர்கள் முற்றிலும் சித்தமாகவே இருக்கிறார்கள். தீண்டப்படாதவர்கள் காரிய சாத்தியமற்ற கோரிக்கை களை எல்லாம் எழுப்பி இந்தியாவின் சுதந்திரத்துக்கு முட்டுக்கட்டை போடுவார்கள் என்று கூறுவது கடைந்தெடுத்த அவதூறாகும், புரளி யாகும்; இதற்கு கடுகளவு ஆதாரம் கூட இல்லை.

சரி, இந்தப் பயத் துக்கு ஆதாரம் இருக்கிறது என்று ஒரு வாதத்துக்காகவே வைத்துக் கொள்வோம். அப்போதும்கூட காங்கிரசுக்கு ஒரு பரிகாரம் இல் லாமல் போகவில்லை. இந்துக்களும் தீண்டப்படாதவர்களும் ஓர் உடன்பாட்டுக்கு வர இயலவில்லை என்றால், இந்தப் பிரச்சினையை, தகராறை சர்வதேச மத்தியஸ்த குழுமத்தின் தீர்ப்புக்கு விடுவோம் என்று கூறுவதற்கு காங்கிரசுக்கு உரிமை உண்டு. காங்கிரஸ் இத் தகைய நிலையை மேற்கொண்டால் பிரிட்டிஷ் அரசாங்கமோ அல்லது தீண்டப்படாதாரோ இதனை சிறிதும் ஆட்சேபிக்க மாட் டார்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை.

ஆனால் காங் கிரஸ் உண்மையில் என்ன செய்கிறது? அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கு நேர்மை யான, நியாயமான, உண்மையான முயற்சி மேற்கொள்வதற்குப் பதிலாக சுதந்திரம் பெறுவதற்கான தனது இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறது; இந்த இயக்கத்தை அவ்வப்போது நிறுத்தி வைக்க வும் அதிலிருந்து ஓரளவு பின்னடையவும் செய்கிறது. தீண்டப்படாத வர்கள் கோரும் பாதுகாப்புகளை அளிக்க சம்மதிப்பதற்குப் பதிலாக, அதிகாரத்தை மாற்றித் தரும்படி பிரிட்டிஷ் அரசாங்கத்தை நிர்ப்பந் திக்க காங்கிரஸ் விரும்புகிறது; திரு. காந்தியின் வாசகத்தில் கூறுவ தானால் “சாவிகளை காங்கிரசிடம் ஒப்படைக்கும்படி”க் கேட் கிறது; அதேசமயம் தீண்டப்படாதவர்கள் கோருவதுபோல் அவர் களுக்குப் பாதுகாப்புகள் அளிக்க அது தயாராக இல்லை. இந்த முடிவுக்குத்தான் தீண்டப்படாதவர்கள் வரவேண்டியிருக்கிறது.

சுருக்கமாகக் கூறினால் இந்துக்கள் வரையறையற்ற முழுச் சுதந்திரம் பெற்றிருக்கக் கூடிய ஒரு சுதந்திர இந்தியாவை, அதேபோது தீண்டப் படாதோரை இந்துக்கள் தங்கள் இஷ்டம் போல் ஆட்டிப்படைக்கக் கூடிய, அவர்களை விலங்கினும் கொடிதாக நடத்தக்கூடிய ஒரு சுதந் திர இந்தியாவையே காங்கிரஸ் விரும்புகிறது. எனவே “சுதந்திரப் போராட்டம்” என்னும் ஆடம்பர ஆர்ப்பாட்டமான பெயரில் அழைக்கப்படும் நேர்மையற்ற, வஞ்சகமான ஒரு போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ள தீண்டப்படாதவர்கள் மறுப்பதில் வியப் பேதும் இல்லை.

 தீண்டப்படாதோருடன் ஓர் உடன்பாடு காணும் பிரச்சினையை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாததற்கு மற்றொரு விந்தையான வாதத்தையும் காங்கிரஸ் முன்வைக்கிறது; அதாவது பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் நேர்மையில்லை என்றும், ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துக் கொள்வது குறித்து இந்தியர்கள் ஓர் உடன்பாட்டுக்கு வந்தாலும் அதிகாரத்தை மாற்றித்தரப் போவதில்லை என்றும் அது அறிவித்திருக்கும் நிலைமையில், அதனிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் இந்தியர்கள் பிரிட்டிஷாருடன் போராடுவதைத் தவிர வேறுவழியில்லை என்றும் காங்கிரஸ் வாதிக்கிறது.

பிரிட்டிஷாரின் நோக்கங்கள் குறித்து இந்தியர்கள் முற்றிலும் அவநம்பிக்கை கொள்வதற்கு நியாயமான காரணம் ஏதும் இருப்பதாகத் தங்களுக்குத் தெரியவில்லை என்று தீண்டப்படாதோர் இதற்குப் பதலளிக்கின்றனர். எது எப்படியிருந்தாலும், இந்தியர்களின் அபிலாஷைகளை, ஆர்வ விருப்பங்களை நிறைவேற்றும் திசைவழியில் பிரிட்டிஷ் அரசாங்கம் முன்னேறிதான் வருகிறது. வேண்டுமானால் இந்த முன்னேற்றம் மெதுவாக இருக்கலாம். அற்ப விஷயங்களோடு இந்தியர்கள் திருப்திப்பட்டுக் கொள்வதே இதற்குக் காரணம். பிரிட்டிஷார் இந்தியாவைக் கைப்பற்றியதி லிருந்து 1886 வரை, தங்களை யார் ஆள்கிறார்கள், எப்படி ஆள் கிறார்கள் என்பது பற்றி இந்தியர்கள் துளியும் கவலைப்படவில்லை. இவற்றைப் பற்றியெல்லாம் எவ்விதத்திலும் தங்களை அலட்டிக் கொள்ளாமலேயே வாழ்வதற்கு அவர்கள் தெரிந்துகொண்டிருந் தனர்.

1886ல் காங்கிரஸ் தோன்றிற்று; பிறகுதான் இந்தியர்கள் முதல் தடவையாக இந்திய அரசாங்கம் குறித்து அக்கறை காட்ட ஆரம் பித்தனர். எனினும் 1910 ஆம் ஆண்டு வரையிலும் கூட, அரசாங்கம் சிறந்த முறையில் செயல்பட வேண்டும் என்பதற்காக கிளர்ச்சி செய்வதோடு நின்று கொண்டனர். சுயாட்சி வேண்டுமென்று 1910ல் தான் காங்கிரஸ் முதன்முறையாக கோரிக்கை முன்வைத்தது.

1919ல் மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் வரவிருந்தபோது இந்தி யர்கள் தங்களது சுயாட்சிக் கோரிக்கையை திட்டவட்டமாக வரை யறுத்துக் கூறும் வாய்ப்பினைப் பெற்றனர். பத்தொன்பதன் குறிப்பு கள் எனும் ஆவணம் 1971ல் இந்தியர்களின் ஆர்வ விருப்பங்களைப் புலப்படுத்தின. இதுபற்றி நன்கு அறிந்தவர்களுக்கு மாகாணங்களில் இரட்டை ஆட்சி ஏற்பட்டால் போதும் என்று அப்போது அரசி யலில் தீவிரவாதிகளாக இருந்த இந்தியர்களே கருதினர் என்பது நினைவிருக்கும். சர். தின்சா வாட்சா, திரு. சமரத் (அரசியல் சீர்திருத்தங்கள் பற்றி தம்முடன் விவாதிப்பதற்கு அவர்கள் வந்தபோது பின்கண்டபடி கூறியதாக திரு. மாண்டேகு தம் இந்திய நாட்குறிப்பில் கூறியிருக்கிறார்: “தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கும், அரசாங்கத்திடம் செல்வாக்கு செலுத்துவதற்கும் எங்களுக்கு அதிகாரம் தாருங்கள்; நியாய உணர்வோடு அதனை நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம். ஆனால் பொறுப்பாட்சிக்கு நாங்கள் தகுதியானவர்கள் அல்ல”. பக்கம் 147.) போன்ற சிலரால் இதுவே ஒரு பெரும் பாய்ச்சலாக எண்ணப்பட்டது.

1930ல் காங்கிரஸ் நிறைவேற்றிய தீர்மானம் சுதந்திரத்தை வலியுறுத்திய போதிலும் திரு. காந்தி வட்டமேசை மாநாட்டில் மாகாண சுயாட்சியுடன் திருப்தியடைந்தார் (வட்டமேசை மாநாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி வெளியே சொல்லப்படவில்லை. ஆனால் மாகாண சுயாட்சியை ஏற்றுக்கொள்ள திரு.காந்தி எவ்வாறு இணக்குவிக்கப்பட்டார் என்பதை மாநாட்டிற்கு வந்திருந்த அனைவருமே அறிவர். 1935 ஆம் வருட இந்திய அரசாங்கச் சட்டத்தில் மத்தியில் பொறுப்பாட்சி ஏற்படுத்துவது சம்பந்தமான சில அம்சங்கள் அடங்கியிருக்கின்றன என்றால் அந்தப் பெருமை வட்டமேசை மாநாட்டில் பங்குகொண்ட காங்கிரசல்லாத பிரதிநிதிகளையே சேரும். ). பிரிட்டிஷ் அரசாங்கமோ அதைவிட அதிகமாக வழங் கியது. எனினும் 1939க்குப் பிறகு தேக்கநிலை ஏற்பட்டது என்றால் தங்கள் நாட்டுக்கு எத்தகைய அரசியலமைப்பு தேவை என்பது குறித்து இந்தியர்களிடையே உடன்பாடு ஏற்படாததே அதற்குக் காரணம்.

தேவதைக் கதைகளில் வருவது போன்று புதையல் மீது பாம்பு உட்கார்ந்து கொண்டு எவரையும் அருகில் நெருங்கவிடாதபடி செய்தது மாதரி இந்திய சுதந்திரத்திற்குப் பிரிட்டிஷார் முட்டுக்கட்டை போட்டு வந்த காலம் மலையேறி விட்டது என்று தீண்டப்படாதவர்கள் கருதுகின்றனர். இந்தியாவின் சுதந்திரம் ‘ரிசீவரிடம்’ இருக்கும் உடைமையைப் போல் இருக்கிறது. வழக்கிலிருக்கும் உடைமையைச் செயலாட்சி புரிய நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் உடைமை காப்பாளரே ‘ரிசீவர்’ என்பவர். பிரிட்டிஷ் அரசாங்கம் இத்தகைய காப்பாளர் பொறுப்பை ஏற்றுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் சம்பந்தமான தகராறு தீர்ந்து உடன்பாடு ஏற்பட்டதும் உடைமையை

1. அரசியல் சீர்திருத்தங்கள் பற்றி தம்முடன் விவாதிப்பதற்கு அவர்கள் வந்தபோது பின்கண்டபடி கூறியதாக திரு. மாண்டேகு தம் இந்திய நாட்குறிப்பில் கூறியிருக்கிறார்: “தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கும், அரசாங்கத்திடம் செல்வாக்கு செலுத்துவதற்கும் எங்களுக்கு அதிகாரம் தாருங்கள்; நியாய உணர்வோடு அதனை நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம். ஆனால் பொறுப்பாட்சிக்கு நாங்கள் தகுதியானவர்கள் அல்ல”. பக்கம் 147.

2. வட்டமேசை மாநாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி வெளியே சொல்லப்படவில்லை. ஆனால் மாகாண சுயாட்சியை ஏற்றுக்கொள்ள திரு. காந்தி எவ்வாறு இணக்குவிக்கப்பட்டார் என்பதை மாநாட்டிற்கு வந்திருந்த அனைவருமே அறிவர். 1935 ஆம் வருட இந்திய அரசாங்கச் சட்டத்தில் மத்தியில் பொறுப்பாட்சி ஏற்படுத்துவது சம்பந்தமான சில அம்சங்கள் அடங்கியிருக்கின்றன என்றால் அந்தப் பெருமை வட்டமேசை மாநாட்டில் பங்குகொண்ட காங்கிரசல்லாத பிரதிநிதிகளையே சேரும்.

சட்டரீதியான உரிமையாளர்களிடம் அதாவது இந்தியர்களிடம் ஒப் படைக்க அது கடமைப்பட்டிருக்கிறது. இவ்வாறிருக்கும் போது இதை ஏன் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்று தீண்டப்படா தோர் கேட்கின்றனர். அவர்கள் மேலும் பின்வருமாறு வினவுகின் றனர்; நாட்டிலுள்ள முக்கியமான சக்திகளிடையே ஓர் உடன்பாடு காணும் நேரான, நேர்மையான போக்கைக் கடைப்பிடித்து, பின்னர் நமது உடைமையை நம்மிடம் ஒப்படைக்கும்படி கூட்டாக ஏன் கேட்கக்கூடாது? இந்தப் பாதையைப் பின்பற்ற காங்கிரஸ் விரும்ப வில்லை. “சுதந்திரப் போராட்டம்” எனும் காங்கிரசின் கோஷம் உண்மையில் ஒரு வெறும் நடைமுறைத் தந்திரம்தான் என்றும் சுதந் திரம் வழங்குவதற்கு ஒரு முன்நிபந்தனையாக பிரிட்டிஷ் அரசாங்கம் கூறி வருவதும், தீண்டப்படாதோர் கோரிவருவதுமான அனைவரும் ஏற்கக்கூடிய ஓர் அரசியலமைப்பை உருவாக்கும் அவசியத்தைத் தவிர்ப்பதே இதன் நோக்கம் என்றும் தீண்டப்படாதோர் கூறுகின்றனர்.

பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியிடும் பிரகடனங்களை எல் லாம் அப்படியே நூற்றுக்கு நூறு உண்மை என ஏற்றுக்கொள்வ தாக தீண்டப்படாதோர் கூறவில்லை; இந்தியர்கள் ஓர் ஒன்றுபட்ட முடிவுக்கு வந்தால் ‘அது தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்’ என்பதாக இருக்கும் என்றும் அவர்கள் கூறவில்லை. பிரிட்டிஷார் தாங்கள் பிரகடனம் செய்தபடி நடந்துகொள்ளத் தவறக் கூடும் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். ஏற்புடையதோர் அரசியலமைப்புச் சட்டம் வகுக்கப்பட்டாலும் பிரிட்டிஷார் தங்கள் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிடவும் கூடும். இதனால் சுதந்திரத்திற்காகப் போராட வேண்டிய அவசியமும் ஏற்படலாம் என் பதையும் தீண்டப்படாதோர் ஏற்றுக்கொள்கின்றனர்.

இத்தகைய சாத்தியக் கூறுகள் எல்லாம் இருப்பதை அவர்கள் புறக்கணித்து விடவுமில்லை. ஆனால் அவர்கள் கூறுவதெல்லாம் இந்தியர்கள் பிரிட்டிஷாரை சோதனை செய்து பார்க்கவில்லை என்பதுதான். எல்லோருக்கும் ஏற்புடையதான ஓர் அரசியல் அமைப்புச் சட்டத்தை வகுக்காமல் அவர்களைச் சோதனை செய்து பார்க்க முடியாது. காங் கிரஸ் இந்தப் பாதையைப் பின்பற்றாதவரை அவர்களுடனான நட வடிக்கைகளில் இன்னும் சொல்லப்போனால் நாடு சம்பந்தப்பட்ட வரை கூட அது நேர்மையைக் கடைப்பிடிக்கவில்லை என்றே தீண்டப்படாதவர்கள் கருதுவார்கள். இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது, காங்கிரசின் “சுதந்திரப் போராட்டத்தில்” பங்கு கொள்ள தீண்டப்படாதவர்கள் மறுத்து வருவதற்குப் போதிய காரணமில்லை என்று யார் கூற முடியும்?

  ("தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன?" - தொகுதி 16, இயல் 7)

Pin It