பெறுநர்,

மேதகைய ஃபீல்ட் மார்ஷல்

ரைட் ஹானரபிள் வைகவுண்ட் வேவல்

(சைரனைகா மற்றும் வின்செஸ்டர்), சிம்லா

ஜி.சி.பி., ஜி.எம்.எஸ்., ஐ,ஜி.எம்.ஐ.இ., சி.எம்.ஜி., எம்.சி.,

இந்தியாவின் வைஸ்ராய் மற்றும் கவர்னர் ஜெனரல்

22, பிரிதிவிராஜ் சாலை,

புதுடில்லி

3.5.1946

அன்பார்ந்த வேவல் பிரபு அவர்களே,

   ambedkar 361  சிம்லாவில் நடைபெற்ற மாநாட்டில், அமைச்சரவைத் தூதுக் குழு தாழ்த்தப்பட்ட சாதியினரின் ஒரு பிரதிநிதியை அழைப்பதற்குத் தவறியதானது, சட்டபூர்வமான பாதுகாப்புகளுக்கான தங்களுடைய கோரிக்கைக்கு அமைச்சரவைத் தூதுக்குழு எவ்வாறு பரிகாரம் தேடப் போகிறது என்பது குறித்து தாழ்த்தப்பட்ட சாதியினரின் மனங்களில் அவநம்பிக்கைகளை ஏற்படுத்தியுள்ளது. நிலைமை மோசமாக இருப்பதால், இது தொடர்பாக, தாழ்த்தப்பட்ட சாதியினரின் பிரதிபலிப்புகளை உங்களிடம் எடுத்துச் சொல்வதற்கு விரும்புகிறேன்.

தாழ்த்தப்பட்ட சாதியினரின் ஒரு பிரதிநிதியைச் சிம்லா மாநாட்டிற்கு அழைக்காமலிருந்ததற்குப் பல விளக்கங்கள் கூறப்படக்கூடும். இவ்வாறு கூறப்படத் தோது உள்ள ஒரு விளக்கம் தாழ்த்தப்பட்ட சாதியினரின் கோரிக்கைகள் பிற கட்சிகளின் நியாயமான உரிமைகளில் தலையிடாத வரை அக்கட்சிகளின் இசைவு அவற்றுக்குத் தேவையில்லை எனக் கூறப்படலாம். குறைந்தபட்சம் அவர்களின் மூன்று கோரிக்கைகள் சம்பந்தமாக நிச்சயமாக இவ்வாறு கூறலாம்.

அவை வருமாறு: (1) தனித் தொகுதிகள், (2) மத்திய நிர்வாகக் குழுவில் போதிய பிரதிநிதித்துவம், மற்றும் (3) ஓர் இடைக்கால அரசு ஏற்படுவதற்கு முன்னதாக ஒரு நிபந்தனை என்ற வகையில், வருங்கால அரசியல் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் நலன்களைப் பாதுகாப்பது சம்பந்தமான சில பொதுவான கோட்பாடுகளை ஏற்றுக் கொள்வதாகக் கட்சிகள் உறுதிமொழி அளிக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட சாதியினரின் கோரிக்கைகளுக்குப் பிற கட்சிகளின் சம்மதம் தேவையில்லை என்ற கருத்தை, 1946 ஏப்ரல் 5ம் நாளன்று என்னுடைய பேட்டியின்போது அமைச்சரவைத் தூதுக்குழுவிடம் நான் மிகவும் பலமாக வலியுறுத்தியிருந்தேன்.

பஞ்சாப், வடமேற்கு எல்லைப்புற மாகாணம், சிந்து மற்றும் வங்காளத்திலுள்ள பெரும்பான்மை சமூகமாகிய முஸ்லீம்கள் தனித் தொகுதிகள் வேண்டுமென்று கோருவது, தாழ்த்தப்பட்ட சாதியினரைப் போன்ற ஒரு சிறுபான்மை சமூகத்தினரின் கோரிக்கையினின்றும் வேறுபட்டதாகும். ஒரு பெரும்பான்மை சமூகத்தினரின் தனித் தொகுதிகளுக்கான கோரிக்கைக்கு சிறுபான்மை சமூகத்தினரின் சம்மதம் அவசியம் தேவை. ஆனால் ஒரு சிறுபான்மை சமூகத்தின் தனித் தொகுதிகள் பெரும்பான்மை சமூகத்தின் விருப்பங்களைச் சார்ந்ததாக ஒரு போதும் இருக்க முடியாது.

இத்தகைய தொகுதி, அடிப்படையாகவே, பெரும்பான்மைக்கு எதிராக ஒரு சிறுபான்மையைப் பாதுகாப்பதற்காக வகுக்கப்பட்ட ஒரு ஏற்பாடாகும். இது இவ்வாறிருக்க, ஒரு தேர்தல் தொகுதி கூட்டுத் தொகுதியாக இருக்க வேண்டுமா அல்லது தனித் தொகுதியாக இருக்க வேண்டுமா என்பதை இவற்றில் எது தங்கள் நலன்களுக்கு உகந்தது என்பதை சிறுபான்மையினர் அறிவார்கள் என்ற அடிப்படையில் அவர்களது முடிவுக்கே முற்றிலும் விட்டுவிட வேண்டும்.

பெரும்பான்மையினர் இந்த விஷயத்தில் எதுவும் சொல்வதற்கு இடமில்லை. சிறுபான்மையோரின் முடிவை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதைத் தொடர்ந்து, தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு தனித் தொகுதி இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பதில் இந்துக்களுக்கு சொல்வதற்கு ஏதும் இருக்க முடியாது.

தனித் தொகுதிக்கான தாழ்த்தப்பட்ட சாதியின் கோரிக்கை வேறு எந்த சமூகத்தையும், இன்னும் சொல்லப்போனால் இந்துக்களையும் கூட பாதிக்காது. அதனால்தான் இந்தக் கோரிக்கையை பிற எல்லா சமூகத்தினரும் ஏற்றுக் கொண்டனர். தாழ்த்தப்பட்ட சாதியினர் இந்துக்களென்றும், எனவே அவர்கள் தனித் தொகுதிகள் கேட்க முடியாது என்றும் இந்துக்கள் வாதிப்பது அர்த்தமற்றதாகும்; ஏனெனில், தனித் தொகுதியானது மெய்யாகவே சிறுபான்மையோரின் பாதுகாப்புக்கான ஓர் ஏற்பாடாகும்.

அதற்கும் மதத்திற்கும் சம்பந்தமில்லை என்ற அம்சத்தை இந்த வாதம் பார்க்கத் தவறுகிறது. இதற்கு ஏதாவது சான்று தேவையெனில், நீங்கள் ஐரோப்பியர்கள், ஆங்கிலோ-இந்தியர்கள் மற்றும் இந்திய கிறித்தவர்களின் விஷயத்தை எடுத்துக் கொண்டு பார்க்கலாம். இவர்கள் அனைவரும் ஒரே மதத்தைச் சார்ந்தவர்களேயாயினும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தொகுதி இருக்கிறது.

இந்த விவரங்களையும் வாதங்களையும் அமைச்சரவைக் குழு கவனத்தில் எடுத்துக் கொண்டு தனித் தொகுதி முறைக்கு இந்துக்களின் சம்மதம் தேவையில்லை, அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட சாதியினரின் பிரதிநிதித்துவம் என்பதை கூட்டுத் தொகுதிகள் கேலிக் கூத்தாக்கியிருக்கும் நிலைமையில் இது முற்றிலும் அமைச்சரவைத் தூதுக்குழு முடிவு செய்ய வேண்டிய விஷயமேயாகும் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் வாதத்தை ஏற்றுக் கொள்வதில் தவறேதும் இருக்க முடியாது.

இடைக்கால அரசியல் தங்களுடைய பிரதிநிதித்துவம் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவத்தில் 50 சதவீதமாக இருக்க வேண்டுமென்ற தாழ்த்தப்பட்ட சாதியினரின் இரண்டாவது கோரிக்கைக்கும், அது வழங்கப்படுவதற்கு முன்னால் இந்துக்களின் சம்மதம் பெறத் தேவையில்லை.

மத்திய நிர்வாக சபையில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு எவ்வளவு பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்பதும் அமைச்சரவைத் தூதுக்குழு முடிவு செய்ய வேண்டிய ஒரு விஷயமாகும். இதுபற்றி முடிவு செய்வதற்கு முன்னால், தாழ்த்தப்பட்ட சாதியினரின் எண்ணிக்கை, அவர்கள் அனுபவித்துவரும் இழிநிலைகள், பிற முன்னேற்றமடைந்த சமூகங்களுக்கு இணையாக அவர்கள் முன்னேறச் செய்வதற்கு வேண்டிய வழிவகைகள் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

கடந்த சிம்லா மாநாட்டின் சமயத்தில் இந்தப் பிரச்சினையை நான் எழுப்பியது உங்களுக்கு நினைவிருக்கும். அப்பொழுது நீங்கள் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இரண்டு இடங்கள் தருவதற்குத் தயாராயிருந்தீர்கள். அது முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டதில் 50 சதவீதத்திற்கும் சற்று குறைவானதாகும்.

மூன்றாவது கோரிக்கையில் புதிதொன்றுமில்லை. 1944 ஆகஸ்டு 15ம் தேதிய உங்களுடைய கடிதத்தில் திரு.காந்திக்கு நீங்கள் தெரிவித்திருந்த உங்களுடைய சொந்தக் கருத்தை மீண்டும் வலியுறுத்துவதேயாகும். அந்தக் கடிதத்தின் 5வது பாராவில் நீங்கள் இவ்வாறு கூறியிருந்தீர்கள்:-

“இந்த சூழ்நிலைமைகளில் நீங்கள் கூறும் அடிப்படையில் விவாதம் நடத்துவதினால் எந்தப் பயனும் ஏற்பாடாது என்பது தெளிவு. ஆயினும் தற்போதைய அரசியல் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டு செயல்படும் ஓர் இடைக்கால சர்க்காரில் ஒத்துழைப்பதற்கு இந்துக்கள், முஸ்லீம்கள் மற்றும் முக்கிய சிறுபான்மையோரின் தலைவர்கள் தயாராயிருந்தால், நல்ல முன்னேற்றம் ஏற்படலாம் என்று நம்புகிறேன். அத்தகைய ஓர் இடைக்கால அரசு வெற்றியடைவதற்கு, அது அமைக்கப்படுவதற்கு முன்னால், புதிய அரசியல் சட்டம் எந்தவிதத்தில் உருவாக்கப்பட வேண்டும் என்பது குறித்து இந்துக்கள், முஸ்லீம்கள் மற்றும் அனைத்து முக்கிய உறுப்புகளிடையிலும் கோட்பாடு ரீதியில் உடன்பாடு ஏற்பட்டாக வேண்டும்.”

நீங்கள் எடுத்துக்கூறிய இந்தக் கோட்பாடு மன்னர்பிரான் அரசாங்கத்தின் சார்பில் கூறப்பட்டதாகக் கொள்ள வேண்டும். அந்த வகையில் அது அமைச்சரவைத் தூதுக்குழுவை கட்டுப்படுத்த வேண்டும். இந்தக் கோட்பாட்டை அமைச்சரவைத் தூதுக்குழு அமலாக்குவதற்கு கட்சிகளின் சம்மதம் வேண்டுமென்பது தேவையில்லை என்று தோன்றும். இதைத்தான் தாழ்த்தப்பட்ட சாதியினர் கோரியுள்ளனர்.

இந்த நிலைபாடுகள் போதிய வலுவுள்ளதாக இருப்பதால், தாழ்த்தப்பட்ட சாதியினரின் கோரிக்கைகள் மீது தீர்ப்புக் கூறுவதற்கு முன்னர் இந்துக்களின் சம்மதம் தேவை என்று அமைச்சரவைத் தூதுக்குழு கருதவில்லை. அதனால்தான் தங்களுடைய பிரதிநிதிகளை சிம்லா மாநாட்டுக்கு அனுப்பும்படி தாழ்த்தப்பட்ட சாதியினர் அழைக்கப்படவில்லை என்ற முடிவுக்கு வருவதற்கு இட்டுச் செல்கிறது என்று கூறுவேன்.

ஆனால், துரதிருஷ்டவசமாக நம் மனத்தில் தோன்றுவது இந்த ஒரு விளக்கம் மட்டுமல்ல. மற்றொரு விளக்கமும் சாத்தியமே. ஓர் இடைக்கால அரசை அமைக்கும் பணியை மேற்கொள்வதற்கும், இந்தியாவின் வருங்கால அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கான ஏற்பாட்டை நிர்ணயம் செய்வதற்கும் தாழ்த்தப்பட்ட சாதியினரின் கோரிக்கை பற்றிப் பரிசீலனை செய்வதற்குக் காத்திராமல், காங்கிரசுக்கும் முஸ்லீம் லீகுக்கும் இடையில் ஓர் உடன்பாடு ஏற்பட்டாலே போதும் என்று அமைச்சரவைத் தூதுக்குழு கருதுகிறது என்பதே அந்த விளக்கம்.

தாழ்த்தப்பட்ட சாதியினர் ஒருவித ஏக்கத்துடன் இருக்கின்றனர். ஏனெனில், தூதுக்குழுவின் திட்டம் என்ன என்பதைப் பற்றி அவர்களுக்குத் திட்டவட்டமாகத் தெரியாது. தூதுக்குழு இரண்டாவதாகக் கூறிய திட்டத்தைக் கடைப்பிடிக்கிறார்களென்றால் – அது உண்மையாகவும் இருக்கக்கூடும் – தாழ்த்தப்பட்ட சாதியினர் இவ்வாறு ஏமாற்றப்பட்டிருப்பதற்கு எதிராக தன்னுடைய கண்டனத்தைத் தெரிவிக்காமலும், இதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு அவர்களே முற்றிலும் பொறுப்பாவார்கள் என்று தூதுக்குழுவிற்குத் தெரிவிக்காமலும் இருந்துவிட்டால் என்னுடைய கடமையிலிருந்து நான் தவறியவனாவேன் என்று உணருகிறேன்.

தாழ்த்தப்பட்ட சாதியினரின் ஒரு பிரதிநிதி என்ற வகையில் இந்தக் கடிதத்தை நான் எழுதியிருக்கிறேன். தங்கள் அமைச்சரவைத் தூதுக்குழுவின் ஓர் உறுப்பினர் என்ற வகையில் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். உங்களுடைய சகாக்களுக்கு இந்தக் கடிதத்தை நீங்கள் சுற்றுக்கு விட்டால், நன்றியுடையவனாயிருப்பேன்.

தங்கள் உண்மையுள்ள,

பி.ஆர்.அம்பேத்கர்

(டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் - தொகுதி 19)

Pin It