கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

கறுப்பு இன மக்களைப் பற்றியும், குறிப்பாக கறுப்பு இனப் பெண்களின் அனுபவங்கள், சந்திக்கும் கொடுமைகள், அவர்கள் மீதான சுரண்டல்கள், பாலியல் துன்புறுத்தல்கள் பற்றியெல்லாம் எழுதி உலகுக்குத் தெரிவித்தார்!

கறுப்பினப் பெண்களுக்குச் சம உரிமை வேண்டும் என்பதை வலியுறுத்தினார்! அதற்காகப் போராடவும் வேண்டும் என அமெரிக்காவின் ‘டோனி மோரிசன்’ அறைகூவல் விடுக்கவும் செய்தார்!.

Toni Morrisonஆம். விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டு உலகம் எவ்வளவோ முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால், நிற, இன, மத, சாதி வெறி தலைவிரித்தாடுகிறது; வேற்றுமைகள் இன்னும் தொடர்கின்றன. இன வேறுபாடு காரணமாக வெள்ளைக்காரர்கள், கறுப்பு இன மக்களைக் கொன்று அழிக்கும் கொடுமை 2005 ஆம் ஆண்டில் கூட ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. வெள்ளைக்காரர்களின் பண்ணைக்கு மூன்று கறுப்பினத் தொழிலாளர்கள் வேலைக்கு வராததால், அந்த மூன்று கறுப்பினத் தொழிலாளர்களையும் சிங்கத்திற்கு இரையாக்கினர் என்பது மிகவும் கொடுமையானது.

இலங்கையில் சிங்கள அரசு தமிழினத்தை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று அழித்து வருவது இன்றைக்கும் நிகழ்கிற உலகக் கொடுமையாகும்.

‘டோனி மோரிசன்’ கறுப்பு இன மக்களின் விடுதலைக்காக எழுதியவர். ஆமெரிக்க வெள்ளையர்கள் கறுப்பினப் பெண்கள் மீது நடத்திய கொடுமைகளை தோலுரித்துக் காட்டினார்.

டோனி மோரிசன் இலக்கியத்திற்காக 1993 ஆம் ஆண்டு உலகின் மிக உயர்ந்த நோபல் பரிசைப் பெற்றார்.

அமெரிக்காவில் உள்ள ‘ஓஹையோ’ என்னுமிடத்தில் 1931 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி கறுப்பினத் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். இவரது பெற்றோர் ஓஹையோ பகுதியில் ஏற்பட்ட இனப்பிரச்சனையால் ‘சேர்ஸ்குரோப்பர்’ என்னுமிடத்திற்குக் குடிபெயர்ந்தனர். டோனி மோரிசன் தந்தை, இரும்புப் பட்டறையில் பற்றவைக்கும் தொழிலாளியாகப் பணிபுரிந்தவர். அவர் தனது மகளுக்கு நாட்டுப்புறக் கதைகளையும், கறுப்பின மக்களின் வாழ்க்கை பற்றியும் கூறுவார்.

டோனி மோரிசன் ‘லோராயன்’ உயர்நிலைப் பள்ளியில் படித்தார். வெள்ளைக்காரர்களால் நடத்தப்பட்ட அப்பள்ளியில் படித்த ஒரே கறுப்பின மாணவி இவர்தான். பின்னர் வாசிங்டனில் உள்ள ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்து தனது பட்டப்படிப்பை முடித்தார். பல்கலைக் கழகத்தில் பயிலும் போதே, இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். மனித சமூகம் பற்றிய தமது முதுநிலைப் பட்ட படிப்பை கர்னல் பல்கலைக்கழகத்தில் 1955 ஆம் ஆண்டு முடித்தார்.

‘டெக்ஸாஸ் சதர்ன் பல்கலைக் கழகம்’ - கலைத்துறையில் விரிவுரையாளராக இரண்டு ஆண்டுகள் பணி புரிந்தார். பின்னர், ‘ஹார்வார்டு பல்கலைக் கழகத்தின்’ - ஆங்கிலத் துறைப் பேராசிரியரானார்.

நியூயார்க்கில் உள்ள ‘சிரியாகஸ்’ என்னும் நகரில், பாடப் புத்தகங்களைத் தயாரித்து வழங்கும் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்துள்ளார். கறுப்பு இன எழுத்தாளர்களான ‘டோனி எடா பாம்பாரா’ மற்றும் ‘காயில் ஜோன்’ முதலியோரின் நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார். பின்னர் நியூயார்க் மாநிலப் பல்கலைக் கழகத்தில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். மாணவர்களுக்கு சமூக உரிமைகள், சிறந்த தலைவர்கள், நல்ல எழுத்தாளர்கள் குறித்து போதித்தார். ‘நியூயார்க் பல்கலைக் கழகத்திலும்’, ‘பிரின்சிடன் பல்கலைக் கழகத்திலும்’ தலைமைப் பேராசிரியராக பணிப்புரிந்துள்ளார்.

ஆப்பிரிக்க, அமெரிக்க இலக்கியங்களை ஆழ்ந்து கற்றார். இலக்கிய விமார்சனக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

டோனி மோரிசன், 1958 ஆம் ஆண்டு ‘ஜெரால்டு மோரிசன்’ என்ற கட்டடக்கலை திருமணம் செய்து கட்டிக் கொண்டார்.

‘The Bluest Eye’ என்னும் இவரது முதல் நாவல் 1970 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நாவல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ‘sula’ என்னும் இவரது இரண்டாவது நாவல் 1973 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்நாவல் கறுப்பினப் பெண்களின் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த நாவலுக்கு 1975 ஆம் ஆண்டு ‘தேசிய புத்தக விமர்சகர்கள் வழங்கிய விருதும்’, ‘ஒகியானா’ விருதும் கிடைத்தது.

‘Sons of solution’ என்றும் இவரது நாவலை ‘புக் ஆஃப் தி மன்த் கிளப்’ தேர்வு செய்தது. ஒரு கறுப்பு இனப் பெண் எழுத்தாளரின் நாவலை அது முதன் முதலாகத் தேர்வு செய்தது சிறப்புக்குரியது. இந்த நாவலுக்கு ‘தேசிய புத்தக விமர்சன சர்கிள்’ விருதும், ‘அமெரிக்கன் அகாடமி மற்றும் இன்ஸ்டியூட் ஆஃப் ஆர்ட்ஸ் அன்ட் லெட்டர்ஸ்’ அவார்டும் 1977 ஆம் ஆண்டு வழங்கப் பெற்றன. இவரது புகழ் வெளியுலகிற்குப் பரவியது. அமெரிக்க ஜனாதிபதி கார்ட்டர் இவருக்கு ‘நேஷனல் சவுன்சில் ஆஃப் தி ஆர்ட்ஸ்’ என்னும் நிறுவனத்தில் பதவி அளித்தார்.

கறுப்பினத்தவர்களும், வெள்ளையர்களும் சமூகத்தில் எப்படி இரண்டறக் கலந்தனர் என்பதை அடிப்படையாகக் கொண்டு ‘The Baby’ என்னும் நாவலை 1981 ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்நாவல் அமெரிக்கா முழுவதும் இவரை பிரபலமாக்கியது. வார இதழ்களின் அட்டைப்படத்தில் எல்லாம் இவரின் புகைப்படமே ஒளிர்ந்தது.

இவர் 1987 ஆம் ஆண்டு ‘Beloved’ என்ற நாவலை எழுதினார். இந்த நாவல் ‘நியூயார்க் கவர்னர் ஆர்ட்ஸ் அவார்டு’, ‘வாசிங்டன் காலேஜ் எழுத்தாளர்கள் விருது’, ‘தேசிய புத்தக விருது’, ‘தேசிய புத்தக விமர்ச்கர்கள் விருது’, ‘புலிட்சர் பரிசு’ முதலிய பல விருதுகளையும், பரிசுகளையும் பெற்றது. மேலும், ‘Lazz’ ‘Paradise’, ‘Love’ முதலிய புகழ் பெற்ற நாவல்களையும் தந்துள்ளார். இவரது ‘Beloved’ என்னும் நாவல் 1998 ஆம் ஆண்டு திரைப்படமாக எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

டோனி மோரிசன், ‘நேஷனல் கவுன்சில் ஆஃப் ஆர்ட்ஸ்’ மற்றும் ‘அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் அன்ட் லெட்டர்ஸ்’ முதலியவற்றில் உறுப்பினராகவும் செயல்பட்டார்.

‘கறுப்பு இன எழுத்தாளர்கள் ஒரு விமர்சனப் பார்வை’ என்ற அடிப்படையில் டோனி மோரிசனின் இலக்கியப் படைப்புகள் குறித்து விமர்சனமும், ஆய்வும் இவருக்குப் பெருமை சேர்த்துள்ளன!.

கறுப்பினப் பெண்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்துலகப் பெண்களின் உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் இவரது எழுத்துக்கள் குரல் கொடுக்கின்றன! ஓங்கிப் பறைசாற்றுகின்றன!!

- பி.தயாளன்