இரண்டாம் உலகப்போருக்குப் பின், அனாதைகளாக விடப்பட்ட குழந்தைகளை எடுத்து வளர்த்தார்.  அதற்காக ‘பியர்ள் பக்’ என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார்.  மேலும், முறையற்ற வகையில் பிறந்த ஆசிய நாட்டுக் குழந்தைகள், இரண்டு வேறுபட்ட இனங்களுக்கு இடையே பிறந்த குழந்தைகள் ஆகியோரைத் தத்து எடுத்து வளர்த்தார். ‘வெல்கம் ஹவுஸ்’ (Welcome House) என்ற பெயரில், உலகில் முதன் முதலில் ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தி ஆனாதைக் குழந்தைகளுக்கு அடைக்கலமும், பாதுகாப்பும் அளித்தார்.  இக் ‘குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில்’ 1964 ஆம் ஆண்டில் மட்டும் ஆறு ஆயிரம் அனாதைக் குழந்தைகள் இருந்தன. குழந்தைகளைத் தத்தெடுத்து, வளர்ப்பவர்களுக்கும் குழந்தைகளைக் கொடுத்து உதவினார். 

     pearl s buck          பியர்ள் பக் நிறுவனம் ஆசியக் கண்டத்தில் உள்ள ஆறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு நிதியுதவி செய்தது.  பியர்ன் பக் நிறுவனமும், வெல்கம் ஹவுசும் சர்வதேச நிறுவனங்களாக 1991 ஆம் ஆண்டு முதல் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 

               ‘பியர்ள் பக்’, மேற்கு விர்ஜினியாவில் உள்ள ஹில்போரோ என்னுமிடத்தில் 26.06.1892 ஆம் நாள் பிறந்தார்.  இவரின் பெற்றோர் அப்சலாம் - கரோலின் சைடன்ஸ்டிரிக்கர் ஆவர்.  இவர்கள் கிறித்தவ மத போதகர்களாக சீனநாட்டிற்குச் சென்றனர்.  ‘பியர்ள் பக்’கும் பெற்றோருடன் சீனாவுக்குச் சென்றார். 

               இவர் குழந்தைப் பருவத்திலேயே ஆங்கிலம், சீன மொழிகளில் நன்கு தேர்ச்சிப் பெற்றார். சீனாவில் ஆரம்பக் கல்வியைக் கற்றார்.  அமெரிக்காவிற்கு 1910ஆம் ஆண்டு சென்று மக்கான் பெண்கள் கல்லூரியில் சேர்ந்து பட்டப் படிப்பு முடித்து, சீனாவுக்குத் திரும்பினார். 

               விவசாய பொருளாதார வல்லுநரான ஜான் லாசிங் பக் என்பவரை 1917 ஆம் ஆண்டு மணம் புரிந்து கொண்டார். பியர்ள் பக் நான்சிங் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணிப்புரிந்தார். மீண்டும் கர்னல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து முதுகலை பட்டப்படிப்பை முடித்தார்.  கணவனும், மனைவியும் இணைந்து கிராமப்புறத்தில் உள்ள ஏழை விவசாய மக்களுக்கு உதவிகள் செய்தனர்.

               சீனாவில் 1927 ஆம் ஆண்டில் கம்யூனிசப் புரட்சி நடைப்பெற்றுக் கொண்டிருந்தது.  சீனாவின் பிற்போக்கு அரசுப் படைக்கும், கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் படைக்கும் கடுமையான போர் மூண்டபோது, ‘பியர்ள் பக்’ குடும்பத்துடன் தப்பி, கப்பல் மூலம் உன்ஜென் சென்று, பின்னர் ஜப்பான் நாட்டிற்குபோய், மீண்டும் நான்சிங் திரும்பினார். 

               ‘பியர்ள் பக்’ 1920 ஆம் ஆண்டு முதல் தனது எழுத்துலகப் பயணத்தைத் தொடங்கினார்.  இவர் சீன மக்களைப் பற்றிய கதைகளையும், கட்டுரைகளையும் எழுதினார்.  ‘கீழைக் காற்று, மேலைக்காற்று’ (‘East wind, West wind’) என்ற தமது முதல் நாவலை எழுதி 1930 ஆம் ஆண்டு வெளியிட்டார்.  மேலும், தொடர்ந்து, The  Good Earth, ‘மகன்கள்’ (Sons), A House Divided முதலிய நாவல்களை எழுதி வெளியிட்டார்.

               இவர் எழுதிய The Good Earth என்ற நாவல் சீன விவசாய மக்களின் வாழ்க்கையையும், குடும்பங்களையும் அடிப்படையாகக் கொண்டது.  இந்த நாவல் மிகவும் பிரபலமடைந்தது.  அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி சாதனை படைத்தது.  இந்த நாவல் ‘பியர்ள் பக்’கிற்குப், பல விருதுகளையும், பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற்றுத் தந்தது. மேலும், பல மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது.  எம்.ஜி.எம். என்ற திரைப்பட நிறுவனம் 1937 ஆம் ஆண்டு இந்த நாவலை திரைப்படமாகவும் எடுத்து வெளியிட்டது.

               ‘முதல் மனைவியும் மற்ற கதைகளும்’ (The first wife and other stories), ‘எல்லா மனிதர்களும் உடன்பிறப்புகளே’ (All men are Brothers), ‘தாய்’ (The Mother), ‘பெருமைக்குரிய இந்த இதயம்’ (‘This Proud Heart’) முதலிய நாவல்களை எழுதித் தாமே வெளியிட்டார். ‘பியர்ள் பக்’- எழுதிய நாவல்கள், நூல்கள் சமூக உணர்வூட்டக் கூடியவைகளாக விளங்கின.  சீனாவை விட்டு வெளியேறி 1934 ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார். இவர் அமெரிக்காவில் பெண்களின் உரிமைகளுக்காகவும், மக்களின் வாழ்வுரிமைகளுக்காகவும், தமது இறுதி மூச்சு உள்ளவரை தீவிரமாகப் பாடுபட்டார். 

               நாவல் இலக்கியங்களுக்காக 1938 ஆம் ஆண்டு ‘பியர்ள் பக்’ நோபல் பரிசு பெற்றார். 

               ‘பியர்ள் பக்’ நாவல்கள், கதைகள், வாழ்க்கை வரலாறு, கவிதை, நாடகம், குழந்தை இலக்கியம், மொழிப்பெயர்ப்பு என பல தளங்களில் இலக்கிய உலகில் பயணம் செய்து அழியாத இலக்கியங்களை உலகிற்கு அளித்துள்ளார். 

               அமெரிக்க எழுத்தாளர்களில் முதன் முதலில் நோபல் பரிசுப் பெற்ற பெண்மணி என்ற பெருமையுடைய ‘பியர்ள் பக்’ 1973 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமது 81 வது வயதில் மறைந்தார். 

இவரது எழுத்துக்கள் ஆசிய மற்றும் மேற்கத்திய நாட்டு மக்களிடையே  நல்லுறவை ஏற்படுத்தியுள்ளன என உலக இலக்கிய திறனாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

- பி.தயாளன்

Pin It