இவரது கவிதைகள் புதிய நவீன வடிவம் கொண்டவை, அதிக உருவகங்களை தமது கவிதைகளில் பயன்படுத்தினார். அவரது கவிதைகள் குரல் வளத்துடன் பாடக்கூடிய இசை வடிவம் கொண்டு விளங்கின. கவிதைகளில் யூதர்களின் துன்பத்தையும், துயரங்களையும் வெளிப்படுத்தினார்.
சேக்ஸ் நல்லி, 1957-ஆம் ஆண்டு “And No one knows where to go” என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டார், மேலும், “Flight and Metamorphosis” என்ற கவிதைத் தொகுப்பை 1959-ஆம் ஆண்டு வெளிவந்தது. இக்கவிதைத் தொகுப்புகளில் யூத மக்களின் பயனற்ற வாழ்க்கை, கசப்பான அனுபவங்கள், நாடு கடத்துதல், இதுதான் தலைவிதி என நினைத்து வாழ்ந்தல், மக்களின் அவலங்கள் முதலியவற்றை வெளிப்படுத்தினார். அவரது கவிதைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணிச்சலையும், தேசப்பற்றையும் ஊட்டக்கூடியவைகளாக அமைந்தன.
சேக்ஸ் நல்லி, ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் 1891 –ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ஆம் நாள் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தார் தனி ஆசிரியர் மூலம் ஆரம்பக்கல்வியைக் கற்றார். இளம் வயதிலேயே இசை, நாட்டியம், முதலியவற்றைக் கற்றார். கவிதை மீது மிகுந்த ஆர்வம் கொண்டு விளங்கினார்.
ஜெர்மன்நாட்டு புகழ்மிக்க கவிஞர்களின் கவிதைகளை விரும்பிப் படித்தார். இளம் வயதிலேயே கவிதைகள் எழுதினார். இவரது கவிதைகளை, ஆஸ்திரியன் எழுத்தாளர் ஸ்டீபன் ஜீவிக் என்பவர் இதழ்களில் வெளிவரச் செய்தார். பின்னர், அவரது கவிதைகள் தின, வார, மாத இதழ்களில் வெளிவந்தன.
ஜெர்மன் நாட்டில் ஹிட்லரின் நாஜிப் படைகளின் கொடுமைகளுக்குப் பயந்து, தமது தாயாருடன் 1940-ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டிற்குத் தப்பிச் சென்றார். இவரது நெருங்கிய உறவினர்கள் ஜெர்மன் நாட்டு அகதிகள் முகாமில் கொல்லப்பட்டனர்.
ஸ்வீடன் நாட்டில், ஸ்வீடிஷ் மொழியைக் கற்றார். ஸ்வீடன் நாட்டுக் கவிஞர்களின் கவிதைகளையும், புகழ் மிக்க எழுத்தாளர்களின் படைப்புகளையும் ஆர்வமுடன் படித்தார். தமது தாயின் துணையுடன் ஸ்வீடன் நாட்டு கவிஞர்களான கன்னர் எகிலோப், ஜோகனஸ் எட்பெல்ட், எரிக் லிண்டிகிரின், ஹோரி வென்பர்க் முதலியோரின் கவிதைகளை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார். இவரது மொழி பெயர்ப்புகள் பாராட்டிச் சிறப்பிக்கப்பட்டது.
சேக்ஸ் நல்லியின் முதல் கவிதைத் தொகுப்பு 1947-ஆம் ஆண்டு ‘In the Houses of Death’ என்ற பெயரில் வெளிவந்தது. அக்கவிதைத் தொகுப்பு யூதர்கள் ஜெர்மனியில் பட்ட துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்த கொடுமைகளையும் சித்தரிக்கக் கூடியதாக அமைந்திருந்தது. அடுத்து, 1949-ஆம் ஆண்டு ‘Eclipse of stars’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டார்.
திருமணம் செய்து கொள்ளாமல், தமது வாழ்க்கை முழுவதையும் கவிதை எழுதவும், மொழிபெயர்ப்பு செய்யவும் அர்ப்பணித்தார்.
‘Eli’ என்ற கவிதை நாடகத்தை எழுதினார், இந்தக்கவிதை நாடகம் மிகச் சிறந்த படைப்பு என அனைவரும் போற்றுகின்றனர். இஸ்ரேல் மக்களின் துன்ப துயரங்களை வெளிப்படுத்தக்கூடிய படைப்பாகும் இது. அந்த நூலில் எட்டு வயது மாணவன் கூட நாஜிப் படைகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை சித்தரிந்திருந்தார்.
இஸ்ரேல் மக்களின் நாட்டுப்பற்று போற்றப்பட்டுள்ளது. இந்த கவிதை நாடகம் மேற்கு ஜெர்மனி வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. மக்களின் பாராட்டைப் பெற்றது. இதன் மூலம், இவரது புகழ் உலகம் முழுவதும் பரவியது.
சேக்ஸ் நல்லியின் ‘Journey of the Beyond’, ‘Stars’. ‘Dustsand’ முதலிய கவிதைத் தொகுப்புகள் மிகவும் புகழ் பெற்றவைகளாகும். இவருக்கு ஜெர்மன் மற்றும் ஸ்வீடன் நாடுகள் பல பரிசுகளையும், விருதுகளையும் வழங்கிச் சிறப்பித்தன. ஸ்வீடன் நாட்டு கவிஞர்கள் சங்கம் 1958-ஆம் ஆண்டு பரிசளித்து பாராட்டியது. மேலும், ஜெர்மன் நாட்டு புத்தக நிறுவனங்கள் பரிசு வழங்கியது. ஜெர்மன் அமைதிக்கு பாடுபட்டதற்காக ‘அமைதி’ விருது அளித்தது.
உலகின் மிக உயர்ந்த நோபல் பரிசு இவருக்கு இலக்கியத்திற்காக 1966-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இப்பரிசை எழுத்தாளர் சாமுவேல் ஜோசப் அக்னான் என்பவருடன் பகிர்ந்து கொண்டார்.
இவரது ‘Sings in the sand’, ‘O the chimey’, ‘Eli’ முதலிய நாடகங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டன. தமது முதுமைக் காலத்தில் ஸ்டாக்ஹோம் நகரில் வாழ்ந்து வந்தார். நரம்புத் தளர்ச்சியால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தார். புற்றுநோயால் 1970-ஆம் ஆண்டு மே மாதம் 12-ஆம் நாள் தமது எழுபத்தெட்டாவது வயதில் காலமானார். சேக்ஸ் நல்லியின் பெயர் ஜெர்மன் மற்றும் ஸ்வீடன் நாடுகளின் இலக்கிய வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.
- பி.தயாளன்