செல்மா லாகர்லாப் ஸ்வீடன் நாட்டில் உள்ள வார்ம்லாண்டு மாகாணத்தில் ஆஸ்ட்ரா எம்டர்விக் என்னும் ஊரில் 1858-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தார். இவரின் தந்தை இராணுவ அதிகாரியாகப் பணிபுரிந்தார்.

selma lagerlofசெல்மா லாகர்லாப், தன் குழந்தைப் பருவத்தில் நோய்வாய்ப்பட்டார். அதனால், அவருக்கு வீட்டிலேயே பாடங்கள் கற்றுத் தரப்பட்டது. பின்னர் அவரது குடும்பம் மர்பேக்காவில் உள்ள எஸ்டேட்டிற்குக் குடியேறியது. இவரின், பாட்டி சாகசக் கதைகள், நாட்டுபுறக் கதைகள், தேவதைக் கதைகள், மகான்களின் கதைகள் முதலிய கதைகளைச் சொல்வார்.

ஸ்டாக் ஹோமில் உள்ள ராயல் பெண்கள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படித்து ஆசிரியர் பட்டம் பெற்றார். பின்பு லேண்ட்ஸ்குரானா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பத்து ஆண்டுகள் பணிபுரிந்தார். ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருக்கும்போதே கதைகள் எழுதத் தொடங்கினார். இவரது ‘கூஸ்டாபெர்லிங்செக’ என்ற நாவல் ஸ்வீடனில் நடைபெற்ற நாவல் போட்டியில் சிறந்த நாவலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன்மூலம் இவர் பிரபலமானார். இந்தநாவலை ‘இடன்’ பத்திரிக்கை வெளியிட்டது.

இவர் தமது கதைகளைத் தொகுத்து ‘இன்விசிபில் லிங்க்ஸ்’ என்ற தலைப்பில் வெளியிட்டார். இந்த நூல் அதிகப் பிரதிகள் விற்பனையானது. மேலும், அவர் நாடு முழுவதும் பிரபலமடைந்தார். இவர், சோபி எல்கான் என்கிற எழுத்தாளரை 1894-ஆம் ஆண்டு சந்தித்தார். இருவரும் இணைபிரியாத் தோழர்களாக விளங்கினர். இவருக்கு ஆஸ்கர் அரச சமூகமும், ஸ்வீடன் அகடாமியும் நிதி உதவி அளித்தது. இதனால் இவர் உத்வேகத்துடன் தொடர்ந்த எழுதினார். இவர் ஃபாலூன் என்னும் இடத்திற்கு குடியேறினார். அங்கு தங்கியிருந்தபோது ஏராளமான கதைகளை எழுதிக் குவித்தார்.

இவர், இத்தாலி, சிசிலி முதலிய நாடுகளுக்கு தனது தோழர் எல்கானுடன் பயணம் செய்தார். இவர் ‘தி மிராக்கல் ஆஃப் ஆண்டிகிரிஸ்டிஸ்’ என்ற நாவலை எழுதினார். அந்த நாவல் சிசிலி நாட்டு சோசலிசத்தைப் பற்றியதாகும்.

‘தி ஹோலி சிட்டி’ என்ற நாவலை எழுதி வெளியிட்டார். இந்த நாவல், ஒரு விவசாயக் குடும்பம் தன்னுடைய நிலத்தை ஏலத்தில் இழந்ததால், புனிதத் தளமான ஜெருசலம் சென்றடைகிறது என்பதை மையக் கருத்தாகக் கொண்டதாகும். இந்த நாவல் செல்மா லாகர்லாப்க்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.

இவர், ‘தி ஒண்டர்புல் அட்வஞ்சர் ஆல் நில்ஸ்’ என்ற நாவலை 1896-ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டார். இந்த நாவலில் ஸ்வீடன் நாட்டின் கிராமங்கள் குறித்தும், பூகோள அமைப்பு, வரலாறு, புராதன நிகழ்ச்சிகள் முதலியவைகள் குறித்து விரிவாக எழுதியுள்ளார். இந்த நாவல் உலக அளவில் அவருக்குப் பாராட்டைப் பெற்றுத் தந்தது. இந்த நாவலை ஸ்வீடன் அரசு துவக்கப்பள்ளிகளுக்கு பாடத்திட்டமாக அறிவித்தது. இந்த நாவல் சிறந்த குழந்தை இலக்கியமாக போற்றப்படுகிறது.

ஸ்வீடிஷ் அகடாமியின் உறுப்பினராக செயல்பட்டார். இவர் சமாதானத்திற்காகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும் போராடத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

இவரது சிறுகதைத் தொகுப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டது. இவரது வாழ்க்கை வரலாறு 1930 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இவர் இலக்கியத்திற்காக 1909-ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.

இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மன் நாட்டில் ஹிட்லரின் நாஜிப் படைகளால், எழுத்தாளர்களும், அறிவுஜீவிகளும், கலைஞர்களும் பல்வேறு வகையான கொடுமைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும், சித்ரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு செல்மா லாகர்லாப் உதவியும் பாதுகாப்பும் அளித்தார்.

நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் நாட்டுக் கவிஞர் நெல்லி சாக்ஸ் பயணம் மேற்கொள்ள விசா வாங்கிக் கொடுத்து, வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து, அவரது உயிரைக் காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்லாந்து நாட்டிற்கும், சோவியத் இரஷ்யாவிற்கும் போர் நடைபெற்றபோது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு தன்னுடைய நோபல் பரிசுத் தொகையைச் செலவு செய்தார். உலகின் பல நாடுகளின் விடுதலைப் போராட்டங்களுக்கு உதவி செய்தார். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொண்டார்.

செல்மா லாகர்லாப்பின் கதைகள், நாவல்கள் தரம் மிக்கவைகளாக விளங்குவது மட்டுமல்ல, புதிய எழுத்தாளர்களை, இலக்கியப் படைப்பாளிகளை உருவாக்கும் சக்தி வாய்ந்தவைகளாகும்.

இலக்கியத்திற்காக முதன் முதலில் நோபல் பரிசு பெற்ற பெண்மணி செல்மா லாகர்லாப் 1940 –ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16-ஆம் நாள் இவ்வுலகைவிட்டு மறைந்தார். அவர் மறைந்தாலும், அவர் படைத்தளித்த உன்னதமான இலக்கியங்கள் அவரது பெயரையும், புகழையும் என்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கும்.

- பி.தயாளன்

Pin It