‘கேபிரிலா மிஸ்ட்ரல்' - லத்தீன் அமெரிக்க நாடுகளில் முதன் முதலில் நோபல் பரிசு பெற்ற பெண்மணி. இவர் சிலி நாட்டுக் கவிஞர்; இவர் மிகச் சிறந்த கல்வியாளர். இலக்கியத்திற்கான நோபல் பரிசை 1945 ஆம் ஆண்டு பெற்றார்.
‘கேபிரிலா மிஸ்ட்ரல்’ சிலி நாட்டில் உள்ள விக்குனா என்னும் ஊரில் 06.04.1889 ஆம் நாள் பிறந்தார். பள்ளி ஆசிரியரான இவரது தந்தை, கவிஞராகவும், நுண்கலைப் பிரியராகவும் விளங்கினார்.
‘கேபிரிலா மிஸ்ட்ரல்’- மூன்று ஆண்டுகள் மட்டுமே பள்ளியில் சேர்ந்து படித்தார். பின்னர் எமிலிமா என்ற குடும்ப உறவினரான ஆசிரியரிடம் வீட்டிலேயே கல்வி கற்றார். இவரின் குடும்பம் பரம்பரையாகக் கல்வி கற்பிப்பவர்களாக இருந்ததால் இவரும் கல்வியில் ஆர்வமுடன் விளங்கினார்.
இவருக்குப் பெற்றோர் ஈட்டிய பெயர் ‘லுசில்லா காட்டே அல்கயாகா’ என்பதாகும். சிறு வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். தனக்கு மிகவும் பிடித்த கவிஞர்களான ‘கேபிரிலா டி அன்னுன்ஜியோ’ மற்றும் ‘பிரடரிக் மிஸ்ட்ரல்’ என்பவர்களின் பெயர்களை ஒன்றிணைத்து ‘கேபிரிலா மிஸ்ட்ரல்’ என்ற புதுப் பெயரில் கவிதைகள் எழுதினார்.
தமது பதினாறாவது வயதில், ‘லா கேன்டிரா’ என்னும் ஊரில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். ‘ரோமிலியோ உரிடா’ என்பவரைக் காதலித்து, திருமணம் செய்து கொண்டார். அவர் கவிதை எழுதுவதிலும், கல்வி கற்பிப்பதிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்.
கணவர் ரோமிலியோ உரிடா 1909 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அதன்பொருட்டு வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வியினால், தனது சோகங்களை கவிதைகளாக வடித்தார். அக் கவிதைகளின் தொகுப்பு, ‘சோனட்ஸ் ஆஃப் டெத்’ என்ற பெயரில் வெளிவந்து உலகப் புகழ்பெற்றது.
பதினைந்து ஆண்டுகள் ஆரம்ப மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகப் பணி புரிந்தார். கல்வி கற்பிக்கும் முறையினால் குழந்தைகளையும், மாணவர்களையும் மிகவும் கவர்ந்தார். இதனால் கல்வித் துறையினரால் பாராட்டப்பட்டார்.
ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வித் திட்டம் தயார் செய்து, கல்வி கற்பிக்க வேண்டுமென மெக்சிகோ நாட்டிலிருந்து 1922 ஆம் ஆண்டு இவருக்கு அழைப்பு வந்தது. இந்த அழைப்பை ஏற்று மெக்சிகோ ஏழைக் குழந்தைகளுக்கான கல்வித் திட்டத்தைத் தயாரித்து அளித்ததன் மூலம் சிறந்த கல்வியாளராகவும், நிர்வாகியாகவும் திகழ்ந்தார். இதனால் ‘கேபிரிலா மிஸ்ட்ரலுக்கு’ ‘நாட்டின் சிறந்த ஆசிரியர்’ எனும் பட்டத்தை மெக்சிகோ நாட்டு அரசு அளித்துச் சிறப்பித்தது. சிலி நாட்டின் கல்வி முறையை வளர்ப்பதில் பெரும் பங்கு வகித்தார். மேலும், கல்வித் துறையில் ஆக்கப் பூர்வமான மாற்றங்களைக் கொண்டு வர அரும்பாடுபட்டார்.
அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகம், மிடில்பர்க் கல்லூரி, வாஸர் கல்லூரி, பெர்னார்டு கல்லூரி மற்றும் போர்டோரிக்கோ பல்கலைக் கழகம் முதலியவற்றில் ஸ்பானிஷ் இலக்கியங்களை கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார்.
சிலி நாட்டு அயலுறவுக் கொள்கையில் கவனம் செலுத்தினார். சிலி நாட்டு அரசின் தூதுவராகப் பதவி வகித்தார். பல கலாச்சாரக் குழுக்களை அமைத்து லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கிடையே கலாச்சாரப் பரிமாற்றத்தை ஏற்படுத்தினார்.
அமெரிக்கா, போர்ச்சுக்கல் முதலிய நாடுகளில் சிலி நாட்டின் வெளிநாட்டுப் பிரதிநிதியாகச் செயல்பட்டார். ‘லீக் ஆஃப் நேஷன்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, நேபாளம், லிஸ்பன், மேட்ரிட் போன்ற நாடுகளின் கலாச்சார ஒற்றுமைக்கு வழிகோலினார்.
இவரது கவிதைகள் நல்லொழுக்கங்களைப் போதிப்பவையாகவும், கருணை, இரக்கம், எளிமை, அடக்கம் முதலியவைகளை அடிப்படையாகக் கொண்டும் திகழ்வன.
இவரது கவிதைத் தொகுப்பான ‘சோனட்ஸ் ஆஃப் டெத்’ (Sonnets of Death) 1914 ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்தக் கவிதைநூல் சிலி நாட்டின் தேசியப் பரிசைப் பெற்றது. இதன் மூலம், இவர் சிலி நாட்டின் சிறந்த கவிஞராக பிரபலமடைந்தார்.
இவர் ‘Despair’ ‘Tenderness’ ‘Tala’ முதலிய கவிதை நூல்களையும் வெளியிட்டார். காதல், மரணம், குழந்தைப் பருவம், கர்ப்பம், மதம், நீதி, சிலி நாட்டின் அழகு. தமது கிராமம் முதலியவைகள் குறித்து கவிதைகள் எழுதினார். பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு இவரின் கவிதை நூல்கள் வெளிநாடுகளில் வெளியிடப்பட்டன.
இவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசை 1945 ஆம் ஆண்டு பெற்றார். நோபல் பரிசு அளிக்கப்பட்டபோது, கேபிரிலா மிஸ்ட்ரல் நிகழ்த்திய உரையில், “இப்பரிசை லத்தீன் அமெரிக்க மக்களின் சார்பாகப் பெற்றுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.
நோபல் பரிசு மூலம் கிடைத்த பணத்தை, சிலி நாட்டில் உள்ள கிராமப்புற ஏழைக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காகச் செலவிட்டார்.
கேபிரிலா மிஸ்ட்ரல், 10.01.1957 ஆம் நாள், தமது அறுபத்து ஏழாவது வயதில் புற்று நோயால் மறைந்தார். இவரை அடக்கம் செய்த கல்லறையில், இவரது கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில வரிகள் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இவரது பெயரால் பரிசுகள் வழங்கப்பட்டு சிறந்த கவிஞர்கள் பாராட்டப்பட்டு வருகின்றனர்!