கிரேசியா டேலிட்டா இத்தாலி நாட்டில் உள்ள நியூரோ நகருக்கு அருகில் உள்ள கார்டினியா என்னும் கிராமத்தில் 1871 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் நாள் பிறந்தார்.
ஆரம்பக் கல்வி மட்டுமே படித்தவர். சிறு வயதிலேயே எழுத்தாளராக வேண்டுமென்ற இலட்சியத்தை மனதில் கொண்டார்.
இவருடைய தந்தை ஒரு விவசாயி இவரது தந்தை நியூரோ நகரின் மேயராக சிறிது காலம் பதவி வகித்தார்.
கிரேசியா டேலிட்டா தமது தாய் மொழியான ‘லோகு டூரஸ்’ஸில் தேர்ச்சி மிக்கவரானார். ஒரு துவக்கப்பள்ளி ஆசிரியர் மூலம் பிரெஞ்ச் மற்றும் இத்தாலி மொழிகளைக் கற்றுக் கொண்டார்.
இவர் சிறுவயதிலேயே கதைகளையும், நாவல்களையும் ஆர்வமுடன் படித்தார். இவரது, தந்தைக்கான வீட்டிற்கு வருபவர்களின் குணாதிசியங்களையும், நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்தார். அவற்றை கதை வடிவில் எழுதினார். அக்கதைகளை அவருக்கு பாடம் கற்றுத் தந்த ஆசிரியர் இதழ்களில் வெளியிடச் செய்தார். இவரது முதல் கதை இதழில் வெளியானபோது, இவருக்கு பதிமூன்று வயது மட்டுமே.
இவரது சிறுகதைகள் ரோம் மற்றும் மில்லன் ஆசிய பகுதிகளிலிருந்து வெளிவந்த இதழ்களில் தொடர்ந்து வெளிவந்தன. இவர் தம்முடைய சிறுகதைகளைத் தொகுத்து முதன் முதலாக 1888 ஆம் ஆண்டு வெளியிட்டார்.
கிரேசியா டேலிட்டா, ரஷ்யன் நாவலாசிரியர்களான கார்டுஸி, டி அனுன்ஸியா மற்றும் ஜியோவனி வெர்சா முதலியவர்களின் நாவல்களை மிகவும் விரும்பிப் படித்தார். இந்த தாக்கத்தால் இவர் நாவல் எழுதத் தொடங்கினார்.
காக்லியருக்கு 1890 ஆம் ஆண்டு தன்னுடைய முதல் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். இங்கு இவர் பார்மிரோ மேடியானி என்பவரைச் சந்தித்தார். இருவரும் மனம் விரும்பி 1890 ஆம் ஆண்டு திருமணம் புரிந்து கொண்டனர். பின்னர் இருவரும் ரோம் நகரில் குடியேறினர்.
கிரேசியா டேலிட்டா தமது முதல் நாவலான ‘பிளவர் ஆஃப் சார்டினியா’ வை 1892 ஆம் ஆண்டு வெளியிட்டார். தமது கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையையும், நிகழ்வுகளையும் தமது கதைகளில் உருவாக்கம் செய்தார். தான் பிறந்த கிராமத்து மக்களின் பழக்க வழக்கங்களையும், வாழ்க்கைமுறைகளையும் மையமாகக் கொண்டு, ‘ஹானஸ்ட் சவுல்ஸ்’ என்ற நாவலை 1895 ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்த நாவலில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டில் நடைபெற்ற இயக்கங்கள் பற்றியும், இயற்கை நிகழ்வுகள் பற்றியும் பதிவு செய்தார். மேலும் பகுத்தறிவுக்கு மாறான செயல்பாடுகளையும் கண்டித்து உள்ளார்.
பழங்கால மனிதர்களுக்கு ஏற்பட்ட பாதக நிகழ்வுகளையும், துயரச் சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு, ‘தி ஓல்டு மேன் ஆஃப் தி மவுன்டைன்’ என்று நாவலை 1900 ஆம் ஆண்டு வெளியிட்டார்.
இவர் ‘எலியஸ் போர்டுலு’ என்ற நாவலை 1903 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டார். இந்த நாவல் மிக அதிக அளவில் விற்பனையானது. இவருக்கு புகழைப் பெற்றுத் தந்தது. இந்த நாவல் அனைத்து அய்ரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. இதனால் இவர் பலநாட்டு எழுத்தாளர்களால் பேசப்படுபவராக மாறினார். இவரது நாவல் குறித்து விமர்சனங்கள் பல்வேறு இதழ்களில் வெளியிடப்பட்டன.
கிரேசியா டேலிட்டா அய்ம்பதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். இவரின் கதைகளில் எளிய மனிதர்களான நாடோடிகள், சிறு நில உடைமையாளர்கள், ஆடு மேய்ப்பவர்கள் முதலிய கதாபாத்திரங்களை முதன்மைப்படுத்தியுள்ளார்.
இவர் எழுதிய ‘தி நேம்ஸ் இன் லைஃப்’, ‘லைட் அண்ட் டார்க்’, ‘தி சன்ஸ் ரிட்டன்’ முதலிய சிறுகதைகள் மிகவும் புகழ் பெற்று விளங்குகின்றன.
‘தி ஐவி’ என்ற நாடகத்தை 1912 ஆம் ஆண்டு படைத்தளித்தார். பல இதழ்களில் கவிதைகள் எழுதி உள்ளார்.
இவருக்கு 1926 ஆம் ஆண்டு, சிறந்த இலக்கியத்தை படைத்ததற்காக நோபல் பரிசு அளிக்கப்பட்டது.
கிரேசியா டேலிட்டா நோபல் பரிசு பெற்ற பிறகு மிகவும் உற்சாகமாக எழுதினார். ‘தி பொயட்ஸ் ஹவுஸ்’ ‘சம்மர்சன்’ முதலிய நூல்ளை 1933 ஆம் ஆண்டு வெளியிட்டார். இவர் தனது வரலாற்றை ‘லேண்ட் ஆப் தி விண்ட்’, ‘திபேரியர்’ முதலிய தொகுப்புகளாக வெளியிட்டார்.
கிரேசியா டேலிட்டா 1936 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் ரோம் நகரில் காலமானார். இவரது மறைவிற்கு பின்பு ‘கோஸிமா’, ‘தி சிடார் ஆஃப் லெபனான்’ முதலிய நூல்கள் வெளியிடப்பட்டன. ‘நோபல் பரிசு பெற்ற கிரேசியா’, ‘கிராமியக் குயில் கிரேசியா’ முதலிய நூல்கள் இவரது இலக்கியத் தொண்டையும், இவரது வாழ்வையும் மக்களுக்கும் வெளிப்படுத்துபவைகளாகும்.
- பி.தயாளன்