பொன்னிற கண்களில்
ஒரு பூனையின் தவிப்பை காண்கிறேன்
மெல்லிய மௌனத்தில்
ஒரு வெள்ளை இருட்டு இருக்கிறது
ப வடிவ நெற்றியில் பா வடியும் நேர்த்தி
பருவம் மிச்சமிருக்க
புருவம் இச்சை வளர்க்கும்
புன்னகைக்கும் பூவிதழில்
புதிர் வரிகள் பிரமாதம்
சிறப்பு பரிசாக கூந்தல் சோலை
சேலை வடிவாக சித்திரம் நீ நம்பு
நகப் பூச்சற்ற நின் விரல்
யுகம் பூசும் பொன்னிறம் உன் நிறை
தொங்கும் கவிதை காதுகளில்
சங்கத் தமிழோ உன் பாதங்களில்
ஒரு காட்டுச்செடியென
உன் விட்டேத்தி பார்வை
பூட்டுகளற்ற முற்றம்
கன்னத்தில் கை கொண்ட தனிமை
சொல்லில் தவிக்கும் பேருடல்
சொல்லாமல் தவிக்கும் பூ வனம்
சொற்களற்ற முகத்தில் மீண்டும் மீண்டும்
நான் தேடுவதெல்லாம்
வெண்ணிற இரவுகளின்
இன்னொரு நாஸ்தென்கா உன்னை
- கவிஜி