பழகியவற்றை
பழகியயிடத்திலேயேவிட்டு
பழகாதவற்றை 
பழகிக்கொள்ளச்
சொல்லித்தருகிறது
இடமாற்றம்.

வீட்டைக்கட்டிப்பார்... !
என்பதின் பாதியளவு பொதி
வீட்டை மாற்றிப்பார்....!
என்றால் மிகையிலை
என்கிறேன்..

தன்னைத்தானே
ஆமோதித்து
ஆட்டிக்கொள்கிறது
என் தலை.

அன்றொருநாள்
வேண்டியதாகி
பின்னர்
வேண்டாதவையாகி
இன்று
வேண்டவே வேண்டாமென்றாகி
வீசப்படும் போது
எல்லாமொரு நாள்
குப்பைதான்
என்று புரியவைப்பதற்குள்
படாதபாடு பட்டுவிடுகின்றன
வாங்கி வாங்கிச் சேர்த்த வகைவகையானச்
சாமான்கள்.

"அனைத்தும் வாடகை தான்" என்று
தனக்குள் மெதுவாகச்
சொல்லிப்பார்க்கத்துடிக்கிறது
எதையாே
புரிந்துகொண்டுவிட்ட
மனது.

இன்னுமொரு
புதுவிலாசம்
கிடைத்த 
தற்கால மகிழ்ச்சியில்
எனது
அடையாளங்கள்
சிரிக்கின்றன...
சிதறிய
சில்லரைகள் போலே....!

வெகுநேரமாகக்
கைநீட்டிக்
கூப்பிட்டுக்
கொண்டேயிருக்கின்றது
சாய்வு நாற்காலி.....
அவ்வசதியைத் தேடுகிறதென்
அசதி
என்பதை எப்படியோ
தெரிந்துகொண்டு.!

- எஸ்.வீ.ராஜன்

Pin It