Indian car1.

தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தும்
கரடுமுரடான - நெடிய புதர்களின் வன்மத்தால்
செலுத்துவாரற்று வெறிச்சோடிக் கிடக்கும் இரதம்,

எந்த திசையை முன்வைத்து
இழுக்கப்பட்ட தென்பதற்றுப் போக
வெண்சாமரங்களின் மிதவையால்
புழுதிகள் சமன் செய்யப்பட்டுள்ளன.

என் பாட்டன்; முப்பாட்டன்; அவன்பாட்டன்
என்றெல்லோரும் நடந்திருக்கக்கூடும்
இரயில் தடங்களைப்போல்
துருப்பிடித்து - கூர் மழுங்கி
விச்ராந்தையாய் கிடக்கும் இத்தேர்ச் சாலையை.

என் தலைமுறையில் நிகழும்
அதனுரத்த ஓலம் என்னைக்
கூனிக்குறுகி வெட்கிக்கச் செய்கையில்

யாவும் தேசத்தில் சரியாயிருக்கிறதென
பட்டத்து மகிஷிக்கு தொய்யலிட்டு விரகமேற்றும்
புராதன சீமான்களாகிய நீங்கள்
குற்றவுணர்வற்று
காதுபொத்தி கடந்து போகிறீர்கள்.

காலசுழற்சியில் நீரும் நேர்கீழாய்:
அலைகளற்று உலகம்
சிம்மாசனத்தில் செல்லரிப்பு.

பருவங்கள் நனைத்த நிராகரிப்பின் உச்சத்தில்
என் கைப்பிடியுள் உம் கடிவாளம்

நெய்த புதர்களின் வேர்களறுபட
எல்லையற்று படரும் இரதம்
வான்நோக்கி தீவிர முனைப்பாய். 



2. பேரமைதி கிழிந்த தொடைவழியே...


ஆ.....ழப் பதிகின்றன வலிகள்.

காரணங்களுக்காய் திறந்தாயிற்று
நிறமூறியயென் கருப்புக்காகித ஸ்வர்கம்.

மூங்கில் காடுகளைக் கிழித்த
பழக்கமற்றதொரு புல்லாங்குழல் வழியே
இழிந்த முயற்சியினெங்கும்
வெளிக்கிளம்புகின்றன.

மெலிந்த தொடையி
லிறங்கும் கசிவின் பேரபாயம்.

எனக்கென்ன தெரியும்
வலிக்கும் முலைகளைப் பற்றி
நடுங்கும் தொடைகளைப் பற்றி.

ஒற்றைக் கையால் வீசியெறியும்
கடற்காற்றின் உக்கிரத்தில்
தோளுரசும் முட்டி தாண்டிய
செஞ்சாந்துக் கதனையில் கதறுகிறதென்
குழவித்தனம்.

யாரோ பதித்துச்சென்ற இயலாமைகளின்
சிறு தடயத்தின் கீழ்
ஒட்டிக்கொண்டிருந்த கருப்பைகளை
கத்தரித்துவிட்டு நுழைகையில்

முன்றிலில் தொங்கிக் கொண்டிருந்தன
இரண்டென் கருப்புக் காம்புகளும்.

Pin It