உழவரைப் பிணித்த தளையினை அறுத்துப்
பழமையில் வெற்றி கண்ட முதலியே
நுண்ணிதின் பாரீர் உமைஇன் றெதிர்ப்போர்
பண்ணை அல்ல நீவிர் படைத்த
உடைமை ஒழிந்த வினைஞர் அன்றோ
படைத்திடும் செயலை அவரை யன்றி
நடத்திட முடியா தென்றே இருப்பதும்
உடனுரு வாகிய புவிவெப்பம் தன்னைத்
தடுத்திட உம்மால் இயலா திருப்பதும்
கொடுமை ஒழியவும் உயிரினம் தொடரவும்
ஒதுங்கி வழிவிடல் ஒன்றே தீர்வென
மெதுவாய்ச் சொன்னேன் தவறாது கேளாய்

(முன்னாளில் (நிலப் பிரபுத்துவ சமூகத்தில்) உழவர்களைப் பிணித்து இருந்த தளைகளை அறுத்து, வெற்றி கண்ட முதலாளிகளே! உங்களை இன்று எதிப்பவர்கள் அந்த நிலப் பிரபுக்கள் அல்ல என்பதையும், உங்களால் படைக்கப்பட்ட உடைமை அற்ற தொழிலாளிகள் தான் என்ற உண்மையையும் புரிந்து கொள்ளுங்கள். (பொருட்களை) உற்பத்தி செய்யும் செயலை அத்தொழிலாளர்களால் தான் செய்ய முடியும் என்பதாலும், உங்கள் பாதையில் உருவாகி உள்ள புவி வெப்ப உயர்வினால் உலகம் அழியப் போவதைத் தடுக்க (சந்தைப் பொருளாதார முறையினால்) முடியாது என்பதாலும், (முதலாளித்துவ அமைப்பில் உள்ள) கொடுமைகளை ஒழிக்கவும், இவ்வுலகில் உயிரினங்கள் தொடர்ந்து வாழவும் நீங்கள் ஒதுங்கி (சோஷலிச அமைப்புக்கு) வழி விடுவது ஒன்று தான் தீர்வு என்று மெதுவாகச் சொல்வதைத் தவறாது கேட்பீர்களாக.)

- இராமியா

Pin It