பிரெஞ்சு இலக்கியத்திலும் திரைப்படத்திலும் அரசியல் தத்துவார்த்தத் துறைகளிலும் அலைவீசி அடித்து ஓய்ந்து விட்ட நவீன திருத்தல்வாதத்தின்  கர்த்தா ஜீன்பால் ஸார்த்தர், பிரெஞ்சு அறிவு ஜீவிகளின், மாணவர்களின், மாவோயிஸ்டுகளின் ஆன்மீக வழிகாட்டி (Spiritual Leader) என்று பிரகடனப்படுத்தப்பட்டவர்.

பிரெஞ்சு நாட்டிலேயே தோல்வியைத் தழுவிய இவருடைய திருத்தல்வாதத்தை ஏந்தி, இந்தியாவின் கம்யூனிஸ எதிர்ப்பு, சோவியத் எதிர்ப்பு அரசியல் இலக்கியவாதிகள் கிளம்பி இருக்கிறார்கள்.  அமெரிக்க பிரிட்டிஷ் பிரசுராலயங்கள் இவர் புத்தகங்களை பெருமளவில் அச்சிட்டு விநியோகிக் கின்றன.  இந்தியாவின் ஏகபோகங்களின் பத்திரி கையில் துவங்கி சின்ன இலக்கியப் பத்திரிகைகள் வரையிலும் இவரைப் பற்றி கட்டுரைகளும் புத்தகங்களும் பிரச்சாரம் செய்கின்றன.

முதலாளித்துவ நாடுகளில் தோன்றிய புதிய இடதுசாரிகளின் ((Newleft)) தத்துவ ஆசானாகவும் இவர் திகழ்கிறார்.  இவருடைய தத்துவம் பற்றியும், அரசியலில் இவரது நிலைப்பாடு என்ன என்பது பற்றியும், சமூகப் பொருளாதாரம் பற்றியும், கலை இலக்கியம் வர்க்கப் போராட்டம் பற்றியும்- இவரது தத்துவார்த்த இயக்கம் பற்றியும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி என்ன சொல்கிறது என்பதையும் சுருக்கமாகத் தொட்டுக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

இரண்டு ஸார்த்தர்களாக பிளவுபடுகிற, சுய முரண்பாடுகளில் சிக்கிய குழப்பமுற்ற ஜீன்பால் ஸார்த்ரேயை இனி நாம் சந்திப்போம்.I

தலைவிதியோ கடவுளின் விருப்பமோ முன் கூட்டியே அவனுக்காக வகுக்கப்பட்ட ஒரு அமைப்போ, முன்கூட்டியே அவனுக்காக வகுக்கப்பட்ட சாராம் சமோ அவனைக் கட்டுப்படுத்துமேயானால் அவன் சுதந்திரமானவனாக இருக்கமாட்டான்.  சமயச் சார்பான அமைப்புகள், அரசியல் அறநெறிகள், தத்துவம் சார்ந்த மாறாத அமைப்புகள் எதிலும் மனிதனைப் பொருத்தி விடுவதை ஸார்த்தர் எதிர்க்கிறார்.

நமது இலட்சியங்கள், நமது மதிப்பீடுகள், நமது உலகம் ஆகியவற்றை உருவாக்குவதற்கான முழுப் பொறுப்பையும் நாம் எடுத்துக் கொள்ளும் போதுதான் வாழத்தகுதி (authentic) உடையவர்கள் ஆகிறோம், நாம் நமது உலகை உண்டாக்கிக் கொள்கிறோம் என்கிறார் ஸார்த்தர்.

ஸார்த்தரின் முழுமுற்றான சுதந்திரம் வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது பிரெஞ்சு மக்களின் நாஜி எதிர்ப்பு இயக்கத்தில் பிறந்தது.  நாஜி விஷம் நமது சிந்தனைகளில் ஊடுருவியதன் காரணமாக ஒவ்வொரு சரியான சிந்தனையும் நாம் ஈட்டிய வெற்றியாகும்.  சர்வ வல்லமை வாய்ந்த போலீஸ் படையொன்று நமது நாவுகளை அடக்குமாறு நிர்ப்பந்தித்ததின் விளைவு, நாம் உதிர்த்த ஒவ்வொரு சொல்லும் கொள்கைப் பிரகடனம் என்கிற மதிப்பைப் பெற்றது, ‘இந்தக் கேவலத்தைக் காட்டிலும் மரணமே மேலானது’ என்கிற வார்த்தைகளில் வெளியிட்டிருக்கப்பட வேண்டிய தேர்வு ஆகும் இது என்கிறார் ஸார்த்தர்.

அசலான தேர்வு பற்றிப் பேசும்போது ஸார்த்தர் அது இணக்கத்தை மறுப்பது என்கிறார்.  ஒடுக்கு முறையை எதிர்க்கும் நமது சக்தியில்தான் சுதந்திரம் இருக்கிறது என்கிறார்.  மனச் சுதந்திரத்தை இயக்கம் முடக்கப்பட்ட அனாதரவான சக்தியற்ற மனிதர் களின் சுதந்திரம் என்கிறார்.  எனவேதான் ஸார்த்தர் சுதந்திரமும் செயலும் பிரிக்கப்பட முடியாதவை என்கிற நிலைப்பாட்டினை எடுக்கிறார்.

மனிதனின் வாழ்க்கைக்கு முன்பே இருக்கக் கூடிய மாற்ற முடியாத சாராம்சங்களும் மதிப்பீடு களும் ஏதும் இல்லை.  இந்த வாழ்க்கைக்கு உள்ள அர்த்தம் ‘இல்லை’ என்று சொல்வதிலும், ‘இல்லை’ என்று சொல்வதின் மூலம் ஓர் உலகை உருவாக்கு வதும்தான் என்கிறார் ஸார்த்தர்.

ஸார்த்தருக்கு புறப்பொருளைப் பற்றிய அக் கறையே இல்லை.  அப்படியானால் புறப்பொருளின் தொடர்பு அற்ற பிரக்ஞை, தனக்குத்தானே விரி வடைந்துகொண்டே இருக்கவேண்டும்.  இப்படி விரிவடைவது தொடர்பற்ற நிலையில் எவ்வாறு சாத்தியம்? ஸார்த்தரின் பிரக்ஞை தனக்குள் முடங்கி யிருக்கவில்லை.  செயலுக்குள் பிரவேசிக்கிறது.

ஸஇங்கே கொஞ்சம் சிந்திப்போம்.  அதாவது ஸார்த்தர் புறஉலகுக்குள் பிரவேசிக்கிறார்.  வாழ்க்கை பற்றின மதிப்பீடுகளும் சாராம்சமும் கொண்ட போராட்ட உலகத்துக்குள் பிரவேசிக்கிறார்.  அப் புறம் மீண்டும் அவர் உலகத்தை அவருக்கேயான அக உலகத்தை உருவாக்குவார்.  புறப்பொருளின் தொடர்பற்றுப் போவார்.  அக உலகில் விரி வடைவார்.  விஞ்ஞானத்தை மறுப்பார்.  மீண்டும் புற உலகுக்கு வருவார், மீண்டும் அக உலகுக்கு...]

மரபு வழிப்பட்ட மனிதாபிமானக் கோட் பாட்டைப் போலவே மானுட விரோதக் கொள் கையும் அர்த்தங் கெட்டதாகும் என்கிறார் ஸார்த்தர்.  (இங்கேயும் ஒரு உள் முரண்பாடு ((Internal Contradiction) மானுட விரோதக் கொள்கை என்று நிர்ணயம் செய்வதே, மனிதாபிமானம் என்ன என்பது பற்றின மதிப்பீட்டிலிருந்தும் சாராம்சத்தி லிருந்தும் நிர்ணயிக்கப்படுவதே என்பது ஒரு நடைமுறை அனுபவம்.)

ஒரு சுதந்திரமான மனிதன் தனியனாக இருக்க வேண்டும், அதே நேரத்தில் தான் மேற்கொள்ளும் முடிவுகளுக்கு முழுமையான பொறுப்பை ஒப்புக் கொள்ள வேண்டும்.  எனக்கு மற்றவனும் மற்றதும் புறப்பொருள்கள்.  மற்றவனுக்கு நானும் இதர பொருட்களும் புறப்பொருள்கள் என்கிறார் ஸார்த்தர், மனிதனின் உளவியல் இந்த அடிப்படையில் ‘நான் மற்றது’ என்ற பிரிவின் அடிப்படையில் செயல் படுகிறது என்றார் ஸார்த்தர்.  மனிதனின் சாராம்சம் ஃபிராய்டு கருதுவது போல் ஈடிபஸ் சிக்கலில் இல்லை. ஹிட்லர் கருதுவதுபோல் தாழ்வு மனப் பான்மையிலும் இல்லை. பிரக்ஞைபூர்வமற்ற மனம் என்பதே இல்லை என்ற முடிவுக்கு வருகிறார்.

சமுதாயம் என்பது வெறும் கூட்டம். பெரும் அனாமதேயம்.  அது தனிநபர், மற்றவனுடன் போராடிக் கொண்டிருக்கும் போர்க்களம், மனிதன் சமுதாயத்தைக் கண்டனம் செய்வதில்தான் தன் இயல்பான, சாராம்சத்தன்மையைப் பெறுகிறான்.  வாழத்தக்க அசலான வாழ்க்கைக்கான போராட்டம் மனிதன் மனிதனுக்கு எதிராக நடத்த வேண்டிய ஒன்றாகும்.  அறம், நியாயம், மதிப்பீடு என்பன தன்னிச்சையான, முழுமையான சுதந்திரத்தின், விருப்பத்தின் முடிவு என்கிறார் ஸார்த்தர்.

(வர்க்கத்திற்கு அப்பாற்பட்ட ஒழுக்கமோ அறமோ நியாயமோ இருக்க முடியாது என்கிறார் லெனின்.  வர்க்கங்களுக்கு இடையில் இருக்கிற போராட்டத்தை மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் இருக்கிற போராட்டமாகச் சுருக்கு கிறார் ஸார்த்தர்.  மனிதன் சமுதாயத்தை, அது சோஷலிசம் ஆனாலும், கம்யூனிசம் ஆனாலும், முதலாளித்துவம் ஆனாலும் - கண்டனம் செய்வதே தன் இயல்பான சாராம்சத்தைப் பெற வழி என்கிறார் ஸார்த்தர்.  இயற்கையிடமிருந்தும், சமுதாயத்திட மிருந்தும் தன்னைப் பிரித்துக்கொள்ளும் மனிதனின் சுதந்திரம் எத்தன்மையானதாக இருக்கும்? அது அராஜகமானதாகவே இருக்கும்.  ஆகவேதான் ஸார்த்தர் மாவோயிஸ்டுகளுக்கு தலைமையேற்க முடிகிறது).

பொருளாதாரம், அடித்தளம், தத்துவம், கலை ஆகியவை மேல் கட்டுமானம் என்கிற மார்க்ஸீயக் கோட்பாட்டைக் கடுமையாகத் தாக்குகிறார், தமக்கு எவ்வித உரிமையும் இல்லை என்று கருதக் கூடியவர்களால் மட்டுமே ஒரு உண்மையான புரட்சிகரமான நிலைபாட்டை எடுக்க முடியும், இச்சுதந்திரத்தை அதிகாரபூர்வமான கம்யூனிஸ்ட் கட்சியின் கெடுபிடியான நிர்ணயவாதத் தத்துவம் மறுக்கிறது எனக் குற்றஞ்சாட்டுகிறார்.

(இதே ஸார்த்தரின் நிர்ணய வாதங்களை ஏற்றுக்கொண்ட ஒரு இயக்கம் சாத்திய மில்லையா? என ஸார்த்தரே கேட்கின்ற நிலைக்கு வந்தார் என்பது அனுபவ உண்மை).

காரணம் - விளைவு என்பதெல்லாம் முட்டாள் தனமான மார்க்சிய வாய்ப்பாடு என்று பேசிய ஸார்த்தர், மனிதனது சுதந்திரமானது ஒரு இலக்கினை நோக்கிப் பயன்படுத்தக்கூடிய காரணகாரியத் தொடர்பிலிருந்து பிரிக்க முடியாதது என்று தனக்கெதிராகவே இன்னொரு ஸார்த்தரை நிறுத்துகிறார்.

தனிமனித சுதந்திரம் பற்றிப் பேசின ஸார்த்தர், மற்றவர்களின் சுதந்திரத்தை அங்கீகாரம் செய்வது தான் தனிமனிதனின் சுதந்திரத்துக்கான ஊற்றுக் கண் என்ற நிலைக்கும் வருகிறார்.  விஞ்ஞான நிர்ணயத்திற்கு நேரான முரணனான முழுமை யான சுதந்திரத்தை வலியுறுத்திய இவர் மானுட இலட்சியங்களைச் சாதிக்க விஞ்ஞான விதியைப் பின்பற்றும் நிலைக்கு வந்து சேருகிறார்.

தன் சொந்தத் தேர்வில் இன்னிலைக்கு வந்து சேர்ந்த ஸார்த்தருக்கு சமுகப் பொருளாதார வர்க்கப் போராட்டம் பற்றின தெளிவான பிரக்ஞை இல்லை.  இவர் வர்க்கப் போராட்டத்தை மனிதனுக்கும் மனிதனுக்கும், இளைஞனுக்கும் முதியவனுக்கும், அப்பாவுக்கும் மகனுக்கும் நடக்கும் வயது வித்தியாசப் போராட்டமாகக் குறுக்கி விட்டார்.

முதலாளித்துவ உலகின் போட்டியான எந்திர நாகரிகத்தில் சிக்கிவிட்ட இந்த மனிதனின் நியாய மான ஆனால் திசைதவறிய போக்குகளை அவர் பேட்டியின் மூலமே இரண்டாவது பகுதியில் காண்போம்.

genepal 600II

ஸார்த்தரின் தத்துவார்த்த முரண்பாடுகள் அவர் அரசியல் நடவடிக்கைகளில் எப்படி எதிரொலித்தது எனப் பார்ப்போம், இப்பகுதியில் 1969 Le Nouvel observator  என்கிற பிரெஞ்சுப் பத்திரிகைக்கு ஸார்த்தர் அளித்த பேட்டி கீழ்வருவது:

“பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு முன்னே உள்ள ஒரே வழி பலாத்காரம்.  இதிலிருந்து யாரும் தப்பமுடியாது.  இன்றைய மாணவர் களுக்கு முன்னால் மூன்று வழிகள் இருக்கிறது.  நாம் அவர்களுக்கு உருவாக்கி வைத்திருக்கிற இந்த சமுதாயத்தின் தூக்குக் கயிற்றுக்குத் தலை கொடுப்பது, அல்லது இந்த அமைப்போடு சமரசம் செய்து கொள்வது, அல்லது புரட்சியின் முன்னணிப் படையான தொழிலாளி வர்க்கத்தோடு சேர்ந்து கொரில்லா யுத்தம் நடத்துவது; இந்த அமைப்பை நொறுக்கித் தள்ளுவது.”

1969ல் அப்படிச் சொன்ன ஸார்த்தரின் மாற்றம் பரிதாபமானது! ஸார்த்தர் கோபமாக இந்த முதலாளித்துவ அமைப்பை எதிர்த்து போராட்டத் திற்குப் பிரகடனம் செய்கிறார்.  தொழிலாளி வர்க்கத்துடன் ஒற்றுமைக்கும் அறைகூவல் விடுக் கிறார்.  இவருடைய அதிதீவிர வாதத்தினால் திசை அறியாது தவிக்கிறார்.  காலகாலமாக இருக்கிற முதலாளித்துவத்தின் பழக்க வழக்கங்களின் உறைந்து போன முடிவுகளை ((customery and time worn concepts of propaganda ) பரிசீலனை செய்வதில் தவறி விடுகிறார்.

அந்த ‘நாம்’ யார் என்பது இவரால் தெளிவு படுத்தப்படவில்லை.  ‘நாம்’ உருவாக்கும் இளைஞர் களுக்கு எதிரான உலகம் என்கிறபோது மூத்த தலைமுறையைக் குறிப்பிடுகிறார்.  பழைய தலை முறையை எதிர்த்துக் கொரில்லா யுத்தம் துவங்க வேண்டும் என்கிறார்.  பழைய தலைமுறையைப் பற்றிப் பேசும்போது ஸார்த்தர், எஜமானர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் - சுரண்டல்காரர் களுக்கும், சுரண்டப்படுபவர்களுக்கும் இடை யிலான போராட்டத்தைப் பார்க்க மறந்துவிடு கிறார்.  ‘நாம்’ என்கிற அடைமொழிக்குள் பிரெஞ்சுத் தொழிலாளி வர்க்கம் கண்டிப்பாக இருக்க முடியாது.  இவர் மக்களை வதைப்படுத்தும் போது சமூகப் பொருளாதார அடிப்படையில் அல்லாமல் வயது அடிப்படையில் ((according to age) நிர்ணயம் செய்கிறார்.

இளைஞர்கள்தான் புரட்சியின் தரைக் கண்ணாடி என்கிற டிராட்ஸ்கியைப் போலவே ஸார்த்தரும் குழப்பமான நிலைக்கு வருகிறார்.

அறிவு ஜீவிகள்தான் அனைவரிலும் மேம் பட்டவர்கள்.  அவர்களால் தான் சுய விமர்சனம் செய்துகொள்ள முடியும், தங்களுக்கெதிராகவே தங்களால் போராட முடியும்.  தங்களை விமர் சனத்துக்கு உட்படுத்தித் திருத்திக் கொள்ள முடியும். பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும்.  நிர்ணயங்களை இவர்கள்தான் மறுக்க முடியும்.  இவர்களால்தான் எதுபற்றியும் எங்கேயும் எல்லா வற்றையும் விவாதிக்க முடியும் என்றெல்லாம் முடிவுக்கு வருகிறார் ஸார்த்தர்.

இவரின் பல பேட்டிகளையும் புத்தகங் களையும் படித்தாலும் இவர் என்ன மாதிரி கலைஞனின் சுதந்திரத்தை விரும்புகிறார் என்று கண்டு கொள்ள முடியவில்லை.  ஒன்றுமட்டும் தெரிகிறது.  எந்த அமைப்பையும் எந்த விதமான சமூக உத்திரவாதத்தையும் எதிர்த்த சுதந்திரம்தான் ஸார்த்தரின் சுதந்திரம்.

இப்படி எல்லாவற்றையும் எதிர்த்துக் கலகம் செய்யும் ஸார்த்தர் 1970 ஜனவரி மாதத்திய பேட்டியில் கேட்கிறார்:

‘ஒரு புதிய வகையிலான நசிந்து போகாத ஒரு அரசியல் இயக்கத்தை ((Political Organisation) ஸ்தாபிப் பதை கற்பனை செய்வது சாத்தியமில்லையா?’

இந்த ஸார்த்தர் இப்போது மக்களின் நண்பர் ((Friend of the people) என்கிற பிரெஞ்சு மாவோயிஸ்டு களின் பத்திரிகைக்கு பிரதான ஆசிரியராக இருக் கிறார்.

மாவோவின் கலாசாரப் புரட்சியை அதிகார வர்க்கத்திற்கு எதிரான மாணவர்களின் எழுச்சி என்கிறார்.  தொழிலாளர்களின் அதிகார பீடத்தை எதிர்த்து மாணவர்கள் இளைஞர்கள் போராட வேண்டும் என்கிறார்.  தொழிலாளி வர்க்கக் கட்சியின் தலைமையை எதிர்த்துப் போராடச் சொல்கிறார்.  மாவோவின் ராணுவ அதிகாரத்தை சிலாகிக்கிற இவர் தொழிலாளி வர்க்கத் தலை மையை எதிர்த்துப் போராடச் சொல்கிறார்.

III

இவரைப் புரட்சிக்காரராகக் காட்ட முயற்சிக்கிற சோவியத் எதிர்ப்பாளர்கள், பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி சோவியத் யூனியனுக்கு அடிபணிகிறது, சந்தா செலுத்தும் விவரமில்லாத முரட்டுக் கம்யூனிஸ்டுகள், வறட்டுத் தொழிற்சங்கவாதிகள் ரஷ்யக் கம்யூனிஸ்டுகள் என்று புழுதி வாரித் தூற்றுகிறார்கள்.

இந்தியாவிலும் முதலாளித்துவ நாடுகளிலும் இருக்கிற தான்தோன்றித்தனமான கம்யூனிஸ எதிர்ப்பாளர்களுக்கு ஸார்த்தரைப் பிடிப்பது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை.

ஆனால் ஸார்த்தர் கம்யூனிஸ்ட் கட்சியோடு ஒத்துழைத்த சம்பவங்களும் உண்டு.  தொழிலாளி வர்க்கத்தை முன்னணிப் படையாக ஏற்றுக் கொண்ட ஸார்த்தர் கம்யூனிஸ்ட் கட்சியோடு வியட்நாம் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்தியதும் உண்டு.  அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பிலும் இணைந்து குரல் கொடுத்ததும் உண்டு.

இன்றைய பிரெஞ்சு இளைஞர்களும் மாணவர் களும் ஸார்த்தரின் எக்ஸிஸ்டென்ஷியலிஸத்தி லிருந்து விலகி, கம்யூனிஸ்ட் தொழிலாளி வர்க்கப் போராட்டங்களில் இணைந்து செயல்படுவதே இதற்குச் சான்று.  இதைப் பற்றியெல்லாம் பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி பின் வருமாறு கூறுகிறது.

“அதி முன்னேற்றமான ஜனநாயகம் என்பது சோஷலிஸத்தை நோக்கிச் செல்லும் ஒரு கட்டம்.

முற்போக்கான ஜனநாயகம் முதலாளித்துவத்தின் அடிப்படை உற்பத்தி சொத்துரிமையை துடைத் தெறிவது அல்ல.  அது அரசு முழுவதையும் தொழி லாளி வர்க்கம் ஆட்சி செய்யும் என்பதும் அல்ல.  நிஜத்தில் அது சோசலிஸமும் அல்ல.  ஆனால் அது பெரும்பாலான மக்களின் தொழிலாளர் களின் நலன் கருதியது.  மூலதனத்தின் செல்வாக்கி லிருந்து பொருளாதாரத்தை விடுவிப்பது.  இது ஏகபோகத்தின் சக்தியை வீழ்த்தி தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் செல்வாக்கை உயர்த்தும்.  தொடர்ந்த தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்தில் தலைமைப் பாத்திரத்தை தொழிலாளி வர்க்கம் எடுக்கும்.

ஆகவே முற்போக்கான ஜனநாயகம் என்பது சோசலிசப் புரட்சிக்கான சிறப்பான சூழ்நிலை களை உருவாக்கிக் கொடுக்கும்.

ஆகவே இப்போது முற்போக்கான ஜனநாயகத் துக்காக இன்றைய சூழ்நிலையில் முற்போக்கான இயக்கங்களை ஒன்றுபடுத்துவோம்.”

(பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி 19வது காங்கிரஸில் புதிய இடதுசாரிகள் பற்றிப் பேசும் போது எடீனா பெஜான் (Etienne Fejon) பேசியதி லிருந்து...)

IV

இலக்கியத் துறையிலும் அரசியல் துறையிலும் ‘மார்க்ஸியம்கூட அவ்வளவு புரட்சிகரமானது இல்லை’ என கோஷமிட்ட ஸார்த்தருக்கு இந்தி யாவில் மத்தியதர வர்க்கத்தினரிடம் மதிப்பு பெருகிக்கொண்டு வருகிறது.  இவரது வாழ்க்கை பற்றின கண்ணோட்டம் அரசியல் நடைமுறையை முழுதாக அறிந்து கொள்ளாமலேயே - கம்யூனிஸத்துக்கு எதிராக இவரைத் தூக்கிப் பிடிக்கிறார்கள்.

இவரது தத்துவார்த்தத் தெளிவின்மையையும் அரசியல் சித்தாந்த இலக்கியக் குழப்பங்களையும் அறிவிப்பதோடு இந்தியாவின் இளைஞர், மாணவர் இயக்கங்களை, தொழிலாளி விவசாயி வர்க்கங் களை இணைப்பதற்கு பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு மிக நல்ல முன்னுதாரணம் தருகிறது.

(இக்கட்டுரை 1977 பிப்ரவரி மார்க்சிய ஒளிஇதழில் வெளிவந்தது).