இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி மத்தியக் குழுவின் அறைகூவல், மே 1, 2017

தொழிலாளர் தோழர்களே,

தங்களுடைய வாழ்வாதாரத்தின் மீதும், உரிமைகள் மீதும் முதலாளி வகுப்பு நடத்திவரும் தாக்குதல்களை வீரத்தோடு எதிர்த்து வருகின்ற இந்திய மற்றும் எல்லா நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களுக்கு, இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி தன்னுடைய புரட்சிகர வாழ்த்துக்களை 2017 மே நாளில் தெரிவித்துக் கொள்கிறது.

இந்திய அரசாங்கத்தின் தனியார்மயத் திட்டங்களை வீரத்தோடு எதிர்த்து வரும் வங்கி, காப்பீடு, இயந்திரங்கள் உற்பத்தி, பாதுகாப்பு, இரயில்வே, விமானத் துறை மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களை நாங்கள் வணங்குகிறோம். சங்கம் அமைக்கும் உரிமையைப் பாதுகாத்து வீரத்தோடு போராடி வருகின்ற வாகன உற்பத்தி மற்றும் பிற வளர்ந்து வருகின்ற தொழில் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களை நாம் வணங்குகிறோம். தொழிலாளர்களாக தங்களுடைய உரிமைகளுக்காக தீரத்தோடு போராடிவரும் ஆஷா மற்றும் ஆங்கன்வாடி தொழிலாளர்களை நாம் வணங்குகிறோம். கிராமப்புற வேலை உத்திரவாதச் சட்டத்தின் கீழ் தங்களுடைய உரிமைகளுக்குப் போராடுவதற்காக சங்கம் அமைத்திருக்கின்ற கிராமப்புற தொழிலாளர்களை நாம் வணங்குகிறோம். மாருதி தொழிலாளர்களுக்கு எதிராக கொடுக்கப்பட்ட கொடூரமான நீதிமன்றத் தீர்ப்புக்கு மிகச் சரியான பதிலடி கொடுத்த இந்தியத் தொழிலாளி வகுப்பை நாம் வணங்குகிறோம்.

மே நாளானது, கடந்த ஆண்டில் தொழிலாளி வகுப்பு பெற்ற அனுபவங்களைத் தொகுத்துப் பார்க்கவும், வருகின்ற ஆண்டில் நாம் முன்னேறுவதற்கான நிலைப்பாட்டைத் தீர்மானிக்கவும் ஒரு முக்கிய வாய்ப்பாகும். சூழ்நிலையை நிதானத்தோடு மதிப்பீடு செய்து நம்முடைய வேலைத் திட்டத்தை நாம் தீர்மானிக்க வேண்டும். தொழிலாளர்களே தங்களுடைய சொந்தத் திட்டத்தை உருவாக்கி, அதைப் பாதுகாப்பதற்காக உறுதியோடும் உணர்வோடும் போராடுவதன் மூலம் மட்டுமே தொழிலாளி வகுப்பு முன்னேற முடியும்.

கடந்த 12 மாதங்களில் முதலாளித்துவ தாக்குதல்களுக்கு எதிராக உலக அளவில் தொழிலாளி வகுப்பினருடைய எதிர்ப்பு கண்கூடாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. இது முதலாளி வகுப்பின் பிரச்சனைகளை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறது. 2008-09 நெருக்கடிக்கு முன்னர் முதலாளிகள் அனுபவித்து வந்த அதிக இலாப விகிதத்தை மீண்டும் அடைய வேண்டும் என்பதற்காக உலக முதலாளிகள் மிகவும் வெறித்தனமாக முயற்சி செய்து வருகிறார்கள். முதலாளி வகுப்பிற்காக சேவை செய்து வரும் அரசாங்கங்கள், தொழிலாளி வகுப்பின் ஒற்றுமையை அழிப்பதற்காக அதிக அளவில் இனவெறி, வகுப்புவாத, பாசிச தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.

தனியார்மயம், தாராளமயம் மற்றும் தொழிலாளர் உரிமைகள் மீது நடத்தப்படும் அப்பட்டமான தாக்குதல்களுக்கு எதிரான ஆர்பாட்டங்களில் நமது நாட்டுத் தொழிலாளர்களுடைய பங்கேற்பு கடந்த 12 மாதங்களில் அதிகரித்து வந்திருப்பதை நாம் கண்டிருக்கிறோம். கடந்த செப்டெம்பர் மாதத்தில் நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்தில் பல கோடிக்கணக்கானத் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

பெரும் நிறுவனங்களைக் கொழுக்கச் செய்யும் சமூக விரோதத் திட்டத்தை, ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கும், ஏழை மக்களை உயர்த்துவதற்கும் ஆன ஒரு திட்டமாக முன்வைப்பதற்கு பிரதமர் மோடியின் முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் மோசடியான பேச்சுத் திறமையை ஆளும் முதலாளி வகுப்பு நம்பியிருக்கிறது. மிக விரைவில் “பெரும் சீர்திருத்தங்களை”க் கொண்டுவரப் போவதாக பிரதமர் அறிவித்திருக்கிறார். அதாவது, தொழிலாளர்கள் மற்றும் உழவர்களுடைய உரிமைகள் மீது மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படும் என்று இதற்குப் பொருளாகும். இந்தத் திட்டத்தை கேள்வி கேட்கும் அல்லது எதிர்க்கும் எவரும் “தேச விரோதிகளென” முத்திரை குத்தப்பட்டு, குற்றவாளிகளாக நடத்தப்படுகிறார்கள்.

ஒன்றுபட்ட செயல்பாடுகளின் தேவை குறித்து, மேலும் மேலும் பெரும்பான்மையான தொழிலாளர்கள் தங்கள் அனுபவத்திலிருந்து உணர்ந்து வருகின்றனர். இது தொழிலாளர்களிடையே ஒற்றுமை வளர வழி வகுத்திருக்கிறது. ஆனால் இந்த ஒற்றுமையானது, முதலாளி வகுப்பின் திசை திருப்பலான அரசியல் சதித்திட்டங்கள் மூலம் தொடர்ந்து உடைக்கப்பட்டு வருகிறது.

வகுப்புவாத, சாதிப் பிளவுகளைத் தூண்டிவிடுவது மட்டுமின்றி, பல கட்சி பிரதிநிதித்துவ சனநாயக அரசியல் வழிமுறையைப் பயன்படுத்தி முதலாளி வகுப்பு, தொழிலாளர்களைத் தொடர்ந்து பிளவுபடுத்தியும், திசை திருப்பியும், முதலாளிகளுக்கு இடைப்பட்ட சண்டையில் ஏதாவதொரு பக்கத்திற்கு ஆதரவாக நிற்குமாறு செய்தும் வருகிறது.

செயலாக்க அதிகாரத்தை தம் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக, தங்களுக்கிடையே மோதிக் கொள்ளும் பல்வேறு கட்சிகள், முதலாளித்துவ வகுப்பைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. முதலாளி வகுப்பின் பல்வேறு கட்சிகளின் பின்னால் தொழிலாளர்கள் பிளவுபடுத்தப்பட்டு நிற்க வைக்கப்படுகின்றனர். பாராளுமன்றம், சட்ட மன்றம் அல்லது உள்ளூராட்சி என எந்தத் தேர்தல்களாக இருந்தாலும், அதைப் பயன்படுத்தி ஆளும் முதலாளி வகுப்பு தொழிலாளர்களை மேலும் பிளவுபடுத்தி வருகின்றனர். முக்கிய போராட்டமானது பாராளுமன்றத்திலுள்ள எதிரெதிரான கட்சிகளுக்கு இடையில் தான் என்ற பொய்யான கருத்தை தொழிலாளர்களுக்கு அளித்து வருகின்றனர்.

முக்கியமான போராட்டமானது தொழிலாளி வகுப்பிற்கும் முதலாளி வகுப்பிற்கும் இடையில் தான் என்ற உண்மையை முதலாளி வகுப்பும் அதனுடைய அரசியல்வாதிகளும் மறைத்து வருகின்றனர். ஆளும் கட்சி மட்டுமின்றி பாராளுமன்ற எதிர்க்கட்சிகளும், முழு அரசு இயந்திரமும் முதலாளி வகுப்பிற்கு சேவை புரிகின்றன என்ற உண்மையை அவர்கள் மறைக்கிறார்கள்.

மாருதி தொழிலாளர்களின் அண்மைக்கால அனுபவம் உள்ளிட்ட நமது வாழ்க்கை அனுபவம், நீதி மன்றங்களும், காவல் துறையும் எப்போதும் முதலாளித்துவ உடமையாளர்களுக்கு சேவை செய்வதோடு தொழிலாளர்களுடைய உரிமைகளைத் தாக்கி வருகிறார்கள் என்ற கசப்பான உண்மையை உறுதிப்படுத்துகின்றன. அரியானா மாநிலத்திலும், மத்தியிலும் காங்கிரசு ஆட்சி நடத்திய போதும், அதை மாற்றி இரண்டு இடங்களிலும் பாஜக ஆட்சி நடத்தி வருகின்ற சூழ்நிலையிலும் இதுதான் உண்மை என்பதை மாருதி தொழிலாளர்களின் அனுபவம் உறுதிப்படுத்தியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டுமல்ல, முழு அரசு இயந்திரமும் முதலாளி வகுப்பிற்கு சேவை செய்கின்றன என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

150 ஏகபோகக் குடும்பங்களைத் தலைமையாகக் கொண்ட முதலாளி வகுப்பு, திட்டத்தைத் தீர்மானிக்கவும், தன் விருப்பத்தைத் திணிக்கவும், அதை எதிர்ப்பவர்களை நசுக்குவதற்கும் அரசைப் பயன்படுத்துகிறது. தன்னுடைய உள் முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்ளவும், தன்னுடைய ஆட்சியை சட்ட ரீதியானதாக காட்டிக் கொள்ளவும் அது தேர்தல்களைப் பயன்படுத்துகிறது. தங்களுக்கு மிகவும் விசுவாசமான கட்சிகளில் ஒன்று தேர்தல் களத்தில் வெற்றி பெறுவதை உறுதி செய்வதற்கு தங்களுடைய பெரும் பண பலத்தையும், அரசின் மீதும், ஊடகங்கள் மீதும் தங்களுக்குள்ள கட்டுப்பாட்டையும் முதலாளித்துவ ஏகபோகங்கள் பயன்படுத்துகிறார்கள். பழைய மற்றும் புதிய தேர்தல் மோசடிகள் மூலம் “மாபெரும் வெற்றியை” உற்பத்தி செய்யக் கூடிய அளவிற்கு சொத்துக்களும், அதிகாரமும் குவிக்கப்பட்டிருக்கின்றன.

தேர்தல் முடிவுகளை பெரு முதலாளி வகுப்பு தீர்மானித்தாலும், தொழிலாளி வகுப்பை நம்பிக்கையிழக்கச் செய்வதற்காக அதை “மக்களுடைய தீர்ப்பாக” அவர்கள் முன்வைக்கிறார்கள். எடுத்துக் காட்டாக, உத்திரப் பிரதேசத்தின் தேர்தல் முடிவு, பெரும்பான்மையான உழைக்கும் மக்கள், பாஜக-வின் ஆட்சியை விரும்புவதைக் காட்டுவதாகக் கூறிப் பரப்புரை நடத்தப்படுகிறது.

செயலாக்க அதிகாரத்தின் பொறுப்பிற்கு எந்தக் கட்சி தேர்ந்தெடுக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து தங்களுடைய விதியும், எதிர்காலமும் தீர்மானிக்கப்படுகிறது என்ற மாயை தொழிலாளர்களிடையே பரப்பப்பட்டு வருவதே, தற்போதுள்ள பல கட்சி பிரதிநிதித்துவ சனநாயகத்தின் மிகமும் மோசமான பாதிப்பாகும். இதன் மூலம் ஆளும் முதலாளி வகுப்பு, இந்த அமைப்பிற்குள்ளேயே “சுமாரான மாற்றை” எப்போதும் தேடுகின்ற வகையில்,  தொழிலாளி வகுப்பினை தற்போதைய அமைப்பில் வலுவாகக் கட்டிப்போட்டு வைக்கிறது. காங்கிரசு கட்சியினுடைய ஆட்சி வெட்ட வெளிச்சமாகும் போது, “சுத்தமான” மாற்றாக பாஜக பரப்புரை செய்யப்படுகிறது. பாஜக-வின் ஆட்சி பொறுக்க முடியாததாக ஆகும் போது, “மதச் சார்பற்ற” மாற்றாக காங்கிரசு கட்சி முன்வைக்கப்படுகிறது. அவ்வப்போது ஒரு கட்சியை மாற்றி இன்னொரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மாற்றமின்றி நீடிப்பது ஏகபோக குடும்பங்கள் தலைமை தாங்கும் முதலாளி வகுப்பின் சர்வாதிகாரமாகும். ஒவ்வொரு அரசாங்கமும் மக்களுடைய உரிமைகளைத் தாக்குவதில் மேலும் கொடூரமாக இருப்பதால், தொழிலாளர்கள் – உழவர்களுடைய நிலைமைகள் மோசத்திலிருந்து படுமோசமாக ஆகி வருகின்றன.

தேவைப்படுவது என்னவென்றால், முதலாளித்துவ சர்வாதிகரத்தின் ஒரு வடிவமாக இருக்கும் தற்போதுள்ள பாராளுமன்ற சனநாயக அமைப்பிற்கு ஒரு மாற்றாகும். சுரண்டும் சிறுபான்மையினருடைய விருப்பத்தையல்ல, உழைக்கும் பெரும்பான்மையினருடைய விருப்பத்தை நிறைவேற்றக் கூடிய ஒரு பாட்டாளி வகுப்பின் சனநாயக அமைப்பு நமக்குத் தேவை.

உயர்மட்டத் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை மக்களுடைய கைகளில் வைக்கக் கூடிய ஒரு புதிய நவீன அரசியல் சட்டத்தை நாம் நிறுவ வேண்டும். அரசியல் கட்சிகள், மக்களை அதிகாரத்திலிருந்து ஒதுக்கி வைக்க அனுமதிக்கக் கூடாது. அதிகாரமானது எந்த சுயநலக் கிருமிகளாலும் கைப்பற்றப்படாமல், அது மக்களின் கைகளில் இருப்பதை உறுதி செய்வதற்கு அணி திரட்டுவதாக அரசியல் கட்சிகளுடைய பங்கு இருக்க வேண்டும்.

தேர்தல்களுக்கு வேட்பாளர்களை முடிவு செய்வதில் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள மக்களுக்கு திட்டவட்டமான முக்கிய பங்கு இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கைகளில் எல்லா அதிகாரத்தையும் கொடுத்துவிடாமல் ஒரு பங்கை மட்டும் மக்கள் அவர்களிடம் அளிக்க வேண்டும். நம்முடைய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அவர்களுடைய செயல்பாடுகள் குறித்து நமக்கு பதில் சொல்ல வேண்டிய உரிமையையும், அவர்களை எந்த நேரத்திலும் திருப்பியழைக்கும் உரிமையையும் நாம் வைத்துக் கொள்ள வேண்டும். சட்ட வரைவுகளை முன்வைக்கும் உரிமையும் நம்மிடம் இருக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தை நம் கைகளில் வைத்துக் கொண்டு, உழைக்கும் பெரும்பான்மையான மக்கள் நாம், முதலாளித்துவ பேராசையை நிறைவேற்றுவதற்கு பதிலாக, மனிதத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பொருளாதாரத்தைத் திருத்தியமைக்க முடியும்.

தொழிலாளர் தோழர்களே,

13 மாருதி தொழிலாளர்களுக்கு ஆயுள் சிறை தண்டனை வழங்கிய கொடூரமான நீதி மன்றத் தீர்ப்பு, “எல்லா தொழிலாளர்களுக்கும் ஒரு படிப்பினையைக் கற்றுக் கொடுக்குமென” முதலாளி வகுப்பு நினைக்கிறது. ஆனால் அது, நாடெங்கிலும் உள்ள தொழிலாளர்களை மாருதி தொழிலாளர்களுக்கும், தொழிலாளி வகுப்பு முழுவதற்கும் நீதி கேட்டு வீதிகளுக்குக் கொண்டு வந்திருக்கிறது.

நமக்கு எதிரிலுள்ள ஒரு முக்கியமான பணியானது, தொழிற்சாலைகளிலும், தொழிற் பேட்டைகளிலும் தொழிலாளர் ஒற்றுமைக் குழுக்களைக் கட்டி வலுப்படுத்துவதாகும். அப்படிப்பட்டக் குழுக்கள் ஏற்கெனவே பல இடங்களில் உருவாகியுள்ளன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், வெவ்வேறு தொழிற் சங்கங்களைச் சேர்ந்த தலைவர்களும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த கம்யூனிஸ்டுகளும் அனைவரும் தொழிலாளர்களுடைய உரிமைகளுக்காக ஒன்றுபட்டு வருகின்றனர். முழு தொழிற்பேட்டையில் உள்ள எல்லா தொழிலாளர்களின் போராட்டத்திற்குக் கூட்டுத் தலைமையளிக்க தொழிலாளர் ஒற்றுமைக் குழுக்கள் உதவி வருகின்றன.

தொழிலாளர் ஒற்றுமைக் குழுக்களைக் கட்டி வலுப்படுத்துவதற்கு முக்கிய திறவு கோலானது, எல்லாத் தொழிலாளர்களுக்கும் உரிய உரிமைகளைப் பாதுகாத்து தொடர்ந்து போராடி வருவதாகும். ஊதியம் பெறும் தொழிலாளர்களாகவும், மனிதர்களாகவும், தொழிலாளர்கள் நமக்கு உரிமைகள் இருக்கின்றன. இவற்றில், ஒரு மாண்பு மிக்க மனித வாழ்க்கை, நாம் விரும்பும் தொழிற் சங்கத்தை அமைத்துக் கொள்ளும் உரிமை, 8 மணி நேர வேலை நாளுக்கான உரிமை, ஓய்வுக்கும் பொழுது போக்கிற்கும் உரிமை, உடல் நலம், ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியன உள்ளிட்டனவாகும்.

தொழிலாளர்கள், உழவர்கள், எல்லா ஒடுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகப் போராடுகின்ற அதே நேரத்தில், சீர்திருத்தப்பட்டதாகவும், தூய்மையானதாகவும் கூறப்படும் முதலாளித்துவத்தைப் பற்றியும், முதலாளி வகுப்பின் பாராளுமன்ற சனநாயகம் குறித்தும், தற்போதுள்ள அமைப்பிற்குள்ளேயே மாற்றாகக் கூறப்படுவன பற்றியும் எல்லா மாயைகளையும் நாம் எதிர்க்க வேண்டும். நமக்கு முன்னே ஒரே ஒரு மாற்று தான் உள்ளது. அது புரட்சிகர மாற்றாகும்.

இந்திய மறுமலர்ச்சியை நிறைவேற்றும் கண்ணோட்டத்தோடு நம்முடைய உரிமைகளுக்கான போராட்டத்தை நாம் மேற் கொள்ள வேண்டும். அதாவது, நிறைவு செய்ய முடியாத ஏகபோக முதலாளிகளுடைய பேராசையை நிறைவேற்றுவதற்காக இல்லாமல், உழைக்கும் மக்களுடைய தேவைகளை நிறைவேற்றும் வகையில் பொருளாதாரத்தை மாற்றியமைக்கவும், அரசை மீண்டும் வடிவமைக்கவும் வேண்டும்.

மே நாள் வாழ்க!

எல்லா நாட்டுத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்!

இன்குலாப் ஜிந்தாபாத்!

                                      

Pin It