மனிதனின் உடலுழைப்பை மட்டுமே முதன்மையாகக் கொண்ட உற்பத்தி முறையே மனிதகுல வரலாற்றில் தொடக்கக் காலம் தொட்டு நிலவியிருந்தது. 1750க்குப்பின் நிராவி ஆற்றல் கண்டுபிடிக்கப் பட்டது. அதன்பின் எரிசக்தியைக் கொண்டு பெரிய இயந்திரங்கள் மூலமாக உற்பத்தி செய்யும் முதலாளிய உற்பத்தி முறை தோன்றியது. இதுவே தொழிற் புரட்சியின் தொடக்கமாகும். உடலுழைப்பை மட்டுமே கொண்டு செய்த உற்பத்தியைவிட இயந்திரங்கள் மூலமான உற்பத்தி பல மடங்கு அதிகமாக இருந்தது.

முதலில் இங்கிலாந்து நாட்டில் முதலாளிய உற்பத்திக்கான தொழிற்சாலைகள் வேகமாக உருவாயின. பிறகு பிற அய்ரோப்பிய நாடுகளிலும் அமெரிக்கா விலும் தோன்றின. முதலாளிய உற்பத்தியால், கைத் தொழில்கள் முற்றாக அழிக்கப்பட்டன. வேளாண்மை யிலும் இயந்திரங்கள் புகுத்தப்பட்டன. இவற்றால் மரபாகச் செய்துவந்த தொழிலையும் வேலை வாய்ப்பையும் இழந்த இலட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் தொழிற் சாலைகளில் வேலை தேடி அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

தொழிற்சாலைகளில் வேலை நேரம், பதினான்கு, பதினாறு, பதினெட்டு மணி என்று இருந்தது. கூலியும் மிகக் குறைவாக இருந்தது. கசக்கிப் பிழியப்பட்ட தொழிலாளர்கள், வேலை நேரத்தைப் பத்துமணி நேரமாகக் குறைக்க வேண்டும் என்று போராடி னார்கள். வேலை நிறுத்தம் செய்தனர். 1866 முதல் 8 மணிநேர வேலை என்பது சட்டமாக்கப்பட வேண்டும் என்று போராடினர். போராடிய தொழிலாளர்களை முதலாளிகள் கொடுமையாகத் தாக்கினர். போராட்டத் தின் முன்னணித் தலைவர்கள் சிறையில் அடைக்கப் பட்டனர். சிலர் தூக்கிலிடப்பட்டனர்.

1886 மே முதல் நாள் முதல் 8 மணிநேர வேலை என்பதைச் சட்டப்படியானதாக்க வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்புத் தீர்மானித்தது. இதற்காக மே முதல் நாள் வேலை நிறுத்தம் செய்வது, பேரணி கள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அமெரிக் காவில் சிகாகோ நகரில் மே 4 அன்று வைக்கோல் சந்தைத் திடலில் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப் பாட்டத்தில், காவல்துறையினர் தொழிலாளர்களைத் தாக்கினர். தொழிலாளர்களின் குருதி தோய்ந்த ஆடையே செங்கொடியானது. சிக்காக்கோ தொழிலாளர் தலைவர் கள் சிறைக்கும் தூக்கு மேடைக்கும் அனுப்பப்பட்டனர். சிகாகோ நிகழ்ச்சி உலகத் தொழலாளர்களிடையே பேரெழுச்சியை ஏற்படுத்தியது.

1889இல் பாரிசு நகரில் நடந்த, உலக அளவில் சோசலிசத் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் 1890 மே முதல் நாளை, எல்லா நாட்டுத் தொழிலா ளர்களும் அவர்களின் நாட்டுச் சூழ்நிலைக்கு ஏற்ப, தொழிலாளர் நாளாகக் கொண்டாட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதன்படி 1890 மே முதல் நாள் அய்ரோப்பாவின் பல நாடுகளிலும், அமெரிக்காவிலும் தொழிலாளர்கள், பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தி மே நாள் கொண்டாடினர்.

1893இல் கம்யூனிஸ்டு அகிலத்தில் மாநாடு ஜுரிச்சில் நடந்தது. இதில் எங்கெல்சும் கலந்து கொண் டார். இம்மாநாட்டில் மே நாளின் குறிக்கோள் தெளிவாக வரையறுக்கப்பட்டது. “உழைக்கும் வர்க்கத்தின் முதன் மையான குறிக்கோள் சமூக மாற்றத்தின் மூலம் வர்க்க வேறுபாடுகளை அழித்தொழிப்பதாகும். உலகம் முழு வதும் எல்லா மக்களுக்கும் அமைதியை ஏற்படுத்துவ தாகும். எனவே மே நாள் ஆர்ப்பாட்டங்கள் எட்டு மணி நேர வேலை நாளுக்காக மட்டுமல்லாமல், மேற்கூறிய நோக்கங்களுக்கும் பயன்பட வேண்டும்” என்று தீர்மானம் இயற்றப்பட்டது.

1900இல் லெனின் மே நாளையொட்டி, “இரஷ்ய மக்களின் அரசியல் விடுதலைக்கான அடக்க முடியாத போராட்டத்திற்கும், பாட்டாளி வர்க்க மேம்பாட்டிற்கும், சோசலிசத்திற்கான வெளிப்படையான போராட்டத்திற் கும் மக்களை அணிதிரட்டுவதற்கான வாய்ப்பாக மே நாளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று அறிக்கை விடுத்தார்.

1917இல் லெனின் தலைமையில் சோசலிசப் புரட்சி வெற்றி பெற்றது. பிரிந்து போகும் உரிமையுடன் 15 தேசிய இனங்களின் சோசலிச குடியரசுகளைக் கொண்ட சோவியத் ஒன்றியம் அமைக்கப்பட்டது. சோவியத் நாட்டில் சோசலிசப் புரட்சியின் வெற்றி, உலக அளவில் தொழிலாளர்களிடையே பேரெழுச்சியை ஏற்படுத்தியது. தொழிலாளர் இயக்கங்களின் போராட் டங்கள் வலிமை பெற்றன.

இந்தப் பின்னணியில்தான், முதலாளிய நாடுகளின் முயற்சியால் 1919இல் ஜெனிவாவில் உலகத் தொழி லாளர் அமைப்பு (International Labour Organization – ILO) ஏற்படுத்தப்பட்டது. தொழிலாளர்கள் பொதுவுடை மைத் தத்துவத்தினால் ஈர்க்கப்படுவதைத் தடுப்பதே இதன் உள்நோக்கம். முதலாளியச் சமூக அமைப்புக் குள்ளாகவே தொழிலாளர்களுக்குச் சில உரிமை களையும், சலுகைகளையும், வசதிகளையும் அளித்திட முயன்றனர். 1929இல் ஏற்பட்டு, சில ஆண்டுகள் நீடித்த பொருளாதார நெருக்கடியால் முதலாளிய அரசுகள் தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களை நடை முறைப்படுத்துவதைத் தள்ளிப்போட்டன. இப்பொரு ளாதார நெருக்கடி காலத்தில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் மெனார்டு கீன்ஸ் என்கிற பொருளாதார அறிஞர் மக்கள் நல அரசுக் கோட்பாட்டை வலியுறுத் தினார்.

இரண்டாம் உலகப் போருக்குப்பின், வளர்ச்சி யடைந்த நாடுகளின் தொழிலாளர்களுக்கு வரையறுக் கப்பட்ட ஊதியம், ஊதிய உயர்வு, போனஸ், ஓய்வூதியம், சங்கம் அமைக்கும் உரிமை, தங்கள் கோரிக்கை களுக்காக வேலை நிறுத்தம் செய்தல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தும் உரிமை முதலானவை வழங்கப்பட்டன. மக்கள் நல அரசுக் கோட்பாட்டின்படி, பொது மக்களுக்கு அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம், மின்சாரம், குடிநீர், போக்குவரத்து ஏந்துகள், உறையுள் முதலானவை அளிக்கப்பட்டன. இத்தகைய அடிப்படைத் தேவைகளைச் சோவியத் நாட்டில் முதலில் அரசு மக்களுக்கு அளித்தது. வளர்ச்சிய டைந்த முதலாளித்துவ நாடுகளில் 1970களுக்குள்ளாக இவை மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன.

இரண்டாம் உலகப் போருக்குப்பின் விடுதலை பெற்ற இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் ஏற்பட்ட தேச அரசுகள் மக்களின் அடிப்படைத் தேவை களை அளித்திட 1970கள் வரை ஓரளவு முயன்றன. இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்கள் அமைக்கப் பட்டன. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. வேளாண் மையில் நீர்ப்பாசனத்திற்கும், விரிவாக்கப் பணிக்கும், ஆராய்ச்சிக்கும் அரசு நிதி ஒதுக்கியது. சிறு தொழில் களில் உற்பத்தி செய்வதற்கான சில பொருள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. உள்நாட்டுச் சந்தையைப் பாதுகாக்க வெளிநாடுகளிலிருந்து இவ்வளவு பொருள்கள் தாம் இறக்குமதி செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. தேவைக்கு ஏற்ப இறக்குமதி வரி உயர்த் தப்பட்டது. தொழிற்சங்கங்களின் போராட்டங்களை அரசு கடுமையாக ஒடுக்கிய போதிலும், தொழிலாளர் களுக்கான சில பாதுகாப்புகளும் இருந்தன. தொழிலாளர் களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் ஆதரவாகச் செயல் படுவது போல அரசுகள் காட்டிக்கொள்ள முயன்றன.

1973ஆம் ஆண்டில் பெட்ரோலியப் பொருள்களின் விலை பல மடங்காக உயர்ந்தது. அதனால் எல்லா நாடுகளிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. குறிப்பாக மூன்றாம் உலக நாடுகள் கடன் வாங்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டன. உலக வங்கியும், பன்னாட்டு நிதியமும் கடனும் நிதி உதவியும் அளித்தன. ஆனால் பொருளாதாரத்தின் மீது அரசுக்குள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்; பன்னாட்டு நிறுவ னங்கள் முதலீடு செய்யவும், தொழில் தொடங்கவும் அனுமதிக்க வேண்டும் என்பன போன்றவை நிபந்த னைகளாக விதிக்கப்பட்டன.

இங்கிலாந்தில் மார்க்கெட் தாட்சர் (1979-1990) அமெரிக்காவில் ரொனால்டு ரீகன் (1980-1989) ஆட்சிக் காலத்தில் தாராளமய தனியார்மயக் கொள்கை கள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டன. வளர்ச்சி பெற்ற நாடுகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களும், நிதி மூலதன நிறுவனங்களும் உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களைத் தங்குதடையின்றி சுரண்டுவதற்காக, 1986இல் உருகுவேயில் காட் ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. 1994இல் காட் ஒப்பந்தத்தில் உறுப்பு நாடுகள் கையொப்ப மிட்டன. 1995 சனவரி முதல் உலக வணிக அமைப்பு என்ற பெயரில் இது நடைமுறைக்கு வந்தது. இதுதான் தாராளமய, தனியார்மய, உலகமயக் கொள்கை எனப் படுகிறது. மேலும் புதிய பொருளாதாரக் கொள்கை என்றும் புதிய தாராளமயம் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் இராசிவ் காந்தி 1984இல் பிரதமராகப் பொறுப்பேற்றது முதலே புதிய பொருளாதாரக் கொள்கை யை நடைமுறைப்படுத்தத் தொடங்கினார். ஆயினும் 1991இல் நரசிம்மராவ் பிரதமராகவும், மன்மோகன் சிங் நிதி அமைச்சராகவும் பதவி ஏற்ற பிறகுதான் இது அரசின் கொள்கை என அறிவிக்கப்பட்டது. மாநில அரசுகளும் உலகமயக் கொள்கையைப் பின்பற்றின. 25 ஆண்டுகளாக தாராளமய, தனியார்மய, உலக மயக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வருவதால், தொழிலாளர்களின், உழைப்பாளிகளின் வாழ்க்கை யில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை மே நாளையொட்டி நாம் ஆராய வேண்டும்.

1990இல் சோவியத் நாட்டிலும் கிழக்கு அய்ரோப் பிய நாடுகளிலும் சோசலிச அரசமைப்பு வீழ்ச்சியுற்றது. 1978 முதல், உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில், முதலாளியம் படிப்படியாக வளர்த் தெடுக்கப்பட்டது. அதனால் “சோசலிசம் தோற்று விட்டது; இனி, முதலாளியத்திற்கு மாற்று இல்லை” என்று கூறி முதலாளித்துவக் கும்பல் கூத்தாடியது. “தாராளமய - தனியார்மயக் கொள்கை மூலமே எந்தவொரு நாட்டிலும் வேகமான - முழுமையான வளர்ச்சியை எட்டமுடியும்; நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் பயன்கள் படிப்படியாகக் கீழ்தட்டில் உள்ள மக்களுக்குக் கிடைக்கும்” எனும் கருத்து முதலாளிய ஊடகங்கள் மூலம் வலிமையாகப் பரப்பப்பட்டது.

1980க்குப்பின் ஏற்பட்ட உயர் தகவல் தொழில் நுட்பமும் உயிரி தொழில் நுட்பமும் தொழிற் புரட்சியின் மூன்றாவது கட்டம் என்று சொல்லப்படும் அளவுக்கு, உற்பத்தியிலும், பொருளாதாரத்திலும் சமூக - அரசியல் தளங்களிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின. இவற்றை அடிப்படையாகக் கொண்ட தொழில்களில் மூலதனத்தைக் குவித்துக் கொள்ளை இலாபம் ஈட்டிட முதலாளிகள் போட்டிப் போட்டனர். சுதந்தரமான சந்தை யில்-தடையற்றப் போட்டி, பொருள்களின் உற்பத்தியைப் பெருக்கும். அவற்றின் தரத்தை உயர்த்தும். விலை யைக் குறைக்கும். நுகர்வோர் தம் விருப்பத்திற் கேற்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்பு பெருகும் என்று புதிய தாராளமய வாதிகள் கூறினர்.

இதன் அடிப்படையில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள், மகிழுந்துகள், மோட்டர் சைக்கிள்கள், குளிர் பதனச் சாதனங்கள் (ஃபிரிட்ஜ், ஏ.சி. போன்றவை) கணினிகள், மடிக் கணினி, வீட்டு அலங்காரப் பொருள் கள், அழகு சாதனப் பொருள்கள், கைப்பேசிகள் முதலானவற்றை உற்பத்திச் செய்ய அயல்நாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு முதலாளிகளும் அனுமதிக்கப் பட்டனர். ஏற்றுமதி மண்டலங்கள், சிறப்புப் பொருளியல் மண்டலங்கள், தொழில்நுட்பப் பூங்காக்கள் என்பன அமைக்கப்பட்டன. இவற்றில் பெருமுதலாளிய நிறு வனங்கள் முதலீடு செய்வதற்கு, அரசுகள் நிலம், நீர், மின்சாரம், சாலைவசதி முதலானவற்றை இலவச மாகவோ குறைந்த விலைக்கோ அளித்தன. உற்பத்தி வரி, ஏற்றுமதி வரி, இறக்குமதி வரி முதலானவற்றில் விலக்குகளும், சலுகைகளும் அளிக்கப்படுகின்றன.

இவற்றுள் கைப்பேசிகளின் விலை மட்டுமே குறைந்தது. கைப்பேசி மட்டுமே வெகுமக்களால் பயன் படுத்தப்படுகிறது. இந்தியாவில் 75 கோடிப்பேர் கைப் பேசி வைத்துள்ளனர். கைப்பேசித் தவிர, மற்ற பொருள்களெல்லாம் உயர் வருவாய் பிரிவினராக உள்ள 30 விழுக்காட்டினர் வாங்குவதற்காகவும், ஏற்றுமதிக்காகவும் உற்பத்திச் செய்யப்படுகின்றன. பல ஆயிரம் கோடி முதலீட்டில் தொடங்கப்படும் இத்தொழில் நிறுவனங்களில் சில நூறு பேர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. உயர் தொழில்நுட்பக் கல்வி பெற்றவர்களுக்கு மட்டுமே மாதம் பல ஆயிரம் சம்பளம் தரப்படுகிறது. கீழ்நிலையில் வேலை செய்வோர் குறைந்த சம்பளத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணி செய்கின்றனர். இந்நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைக்க அனுமதிப்பல்லை. இலட்சக்கணக்கானோர் இந்த வேலைகளுக்காகக் காத்துக் கொண்டிருப்பதால், இவர்கள் அடிமைகள் போல் வேலை வாங்கப்படு கின்றனர். பத்துமணி நேர வேலை என்பது எழுதப் படாத சட்டமாகிவிட்டது.

நூற்பாலைகள், நெசவாலைகள், உருக்காலைகள், இன்னபிற ஆலைகளிலும் தொழிலகங்களிலும் அதிக முதலீட்டில் புதிய உயர் தொழில்நுட்பங்கள் புகுத்தப் பட்டதால் பல இலட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். சில ஆலைகள் மூடப்பட்டு அவற்றின் நிலங்கள் கொள்ளை இலாபத்திற்கு விற்கப்பட்டன. உயர் தொழில்நுட்பம் கொண்ட பெருத்த மூலதனத் துடன் போட்டியிட முடியாமல் சிறுதொழில் உற்பத்தி யாளர்கள் தம் தொழிலைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். உதிரிப் பாகங்கள் செய்துவந்த சிறு பட்டறைகள் அடியோடு அழிந்துவிட்டன. சிறிய நகரங் களில் கருமார் பட்டறைகள் காணாமல் போய்விட்டன. தச்சுத் தொழிலும் பொற்கொல்லர் தொழிலும் பெரும் பகுதி பெருமுதலாளிகளிடம் சென்றுவிட்டன. இவற்றைக் கணினியால் இயக்கப்படும் இயந்திரங்கள் செய்கின்றன.

பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டு வருகின்றன. இவற்றில் இலட்சக்கணக்கான வேலைகள் பறிபோயின. கல்வி தனியார் மயமாகிவிட்டது. தனியார் மழலையர் பள்ளி முதல் கல்லூரிகள் வரை மாணவர்களும் ஆசிரியர்களும் சுரண்டப்படுகின்றனர். கடந்த 25 ஆண்டுகளில் நடுவண் அரசிலோ, மாநில அரசுகளிலோ, பொதுத்துறை நிறுவனங்களிலோ புதியதாக ஒரு பணி இடம்கூட உருவாக்கப்படவில்லை. கடந்த 25 ஆண்டு களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 விழுக்காடு என்பதிலிருந்து 9 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது என்று மன்மோகன் சிங் தூக்கத்தில்கூட பெருமையு டன் பிதற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால் இது புதிய வேலை வாய்ப்பை உருவாக்காத வளர்ச்சி, பணக்காரனை மேலும் பணக்காரனாக்கு கின்ற, ஏழையை மேலும் ஏழையாக்குகின்ற வளர்ச்சி இது! தொழிலாளர்களையும் உழைக்கும் மக்களையும் சுரண்டிக் கொழுக்கும் வளர்ச்சி இது!

இந்தியாவில் 15 முதல் 60 அகவை வரையிலான உழைக்கும் வயதினர் 40 கோடிப் பேர் உள்ளனர். இவர்களுள் அரசுத் துறை, தனியார் துறைகளில் அமைப்புசார்ந்த பிரிவுகளில் 4 கோடிப்பேர் வேலை செய்கின்றனர். உறுதிசெய்யப்பட்ட வேலை, முறைப்படுத்தப்பட்ட ஊதியம், தொழிலாளர் சட்டப் பாதுகாப்பு முதலானவற்றைப் பெறுகின்றனர். பணவீக்கத்தின் உயர்வுக்கு ஏற்ப இவர்களின் ஊதியமும் உயர்த்தப்படுவதால் விலை உயர்வால் இவர்கள் பாதிக்கப்படுவதில்லை.

பலவகையான தொழில்கள், வணிகம், வேளாண்மை (பெருநிலவுடைமையாளர்) செய்வோருள் உள்ள உயர் வருவாய்ப் பிரிவினர் 6 கோடிப் பேர் உள்ளனர். இவர்களும் இவர்களின் குடும்ப உறுப்பினர்களும் (தோராயமாக 24 கோடிப்பேர்) தாம், புதிய தாராள மயத்தின் வளர்ச்சியின் பயன்களை - உழைக்கும் மக்களைச் சுரண்டுவதன் மூலம் பெறுகின்றனர். இவர்கள் சுயதொழில் செய்வோர் என்ற பிரிவில் உச்சாணியில் இருப்பவர்கள். இந்த 24 கோடிப் பேருடன் அமைப்பு சார்ந்த 4 கோடித் தொழிலாளர் களின் குடும்ப உறுப்பினர்கள் 16 கோடிப் பேரையும் சேர்த்தால் 40 கோடிப் பேர். இவர்கள் தான் வளர்ச்சி யின் பெரும் பயனைத் துய்க்கின்றனர். 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 120 கோடி மக்கள் இருக்கின்றனர். இந்த 40 கோடிப் பேர் போக மீதி 80 கோடிப் பேர் வாய்க்கும் வயிற்றுக்குமான போராட்டமாக - இயலாமைகளும், துன்பங்களும் தோய்ந்த வாழ் நிலையில் உள்ளனர். முதலாளியம் ஒருபுறத்தில் செல்வர்களையும், மறுபுறத்தில் வறியவர்களையும் உண்டாக்குகிறது என்று மார்க்சு கூறினார். 25 ஆண்டுகளாக இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய தாராளமயத்தின் விளைவுகள் இதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் (GDP) 1950இல் வேளாண்மையின் பங்கு 55% ஆக இருந்தது. 1980 களில் இது 27 விழுக்காடாக இருந்தது. 2010இல் இது 15% ஆகக் குறைந்துள்ளது. உழைக்கும் வயதினருள் பாதிப்பேர் வேளாண் தொழிலில் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் 60 விழுக்காட்டினர் வேளாண் மையைச் சார்ந்து வாழ்கின்றனர். கடந்த 25 ஆண்டு களாக, கொள்ளை இலாபம் தரும் சேவைப் பிரிவிலும், வசதி படைத்தோரின் நுகர்வுகளுக்கான பண்ட உற்பத்தியிலும் மட்டுமே மூலதனம் குவிக்கப்பட்டு வருகிறது. வேளாண்மையில் முதலீடு செய்வது பெரிதும் சுருங்கிவிட்டது. 2010ஆம் ஆண்டில் ரூ.3,75,000 கோடி வேளாண் கடனாகத் தரப் பட்டுள்ளது என்று அரசு கூறுகிறது. ஆனால் இதில் பெரும் பகுதி முதலாளிகள், டிராக்டர்கள், அறுவடை இயந்திரங்கள், தெளிப்பு நீர்ப் பாசனக் கருவிகள் போன்றவற்றைத் தயாரிக்கத் தரப்பட்டுள்ளது. 1987இல் மொத்த தானிய உற்பத்தி 20 கோடி டன்னாக இருந்தது. 2010இல் 23 கோடி டன்னாக மட்டுமே உயர்ந்துள்ளது. 23 ஆண்டுகளில் வெறும் 3 கோடி டன் மட்டுமே கூடுதல் விளைச்சல். அடிப்படையான ளோண்மை எந்த அளவுக்குப் புறக்கணிக்கப்பட்டிருக் கிறது என்பதை இதுப் புலப்படுத்துகிறது. கடந்த 16 ஆண்டுகளாக சராசரியில் ஒரு நாளைக்கு 47 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். மொத்தம் 2,30,000 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்திய அரசு, ஊர்ப்புறங்களில் வாழ்வோரில் 2400 கலோரிக்கும், நகரங்களில் வாழ்வோரில் 2100 கலோரிக்கும் குறைவான சக்தி தரும் உணவை உண்போர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வதாக அளவுகோல் வைத்துள்ளது. இதன்படி சிற்றூர்களில் 1993-94இல் 2400 கலோரிக்கும் குறைவாக உண்போர் 74.5% ஆக இருந்தது. இது 2004-2005இல் 87% ஆக உயர்ந்தது. நகரங்களில் இதேகாலத்தில் இது 50% லிருந்து 74.5% ஆக உயர்ந்துள்ளது. 1950களில் ஒருவர் ஓராண்டில் உண்ணும் தானியத்தின் அளவு 150 கிலோவாக இருந்தது. இது 1980களில் 180 கிலோவாக உயர்ந்தது. 2008இல் இது 156 கிலோ வாகக் குறைந்துள்ளது.

“பொருளாதார வளர்ச்சியின் காரணமாக மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. அதனால் மக்களின் உணவுப் பழக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. காய்கறிகள், பழங்கள், இறைச்சி, முட்டை, பால் ஆகியவற்றை உண்பது அதிகமாகி வருவதால் தானிய மாக உண்ணும் அளவு குறைந்து வருகிறது” என்று ஆளும்வர்க்க அறிவாளிகள் விளக்கமளிக்கின்றனர். இதில் ஒரு பகுதி உண்மை இருக்கிறது. இறைச்சி, முட்டை, பால் ஆகியவற்றை உண்பது மேல்தட்டு வர்க்கத்தினரிடம் அதிகமாகி வருகிறது. அதேசமயத்தில் கீழ்த்தட்டில் வாழும் உழைக்கும் மக்கள் உண்ணும் தானியத்தின் அளவு குறைந்து வருகிறது. அதனால் தான் 5 அகவைக்குட்பட்ட குழந்தைகளில் 47 விழுக் காடு குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவாக உள்ளன.

இறைச்சி, முட்டை, பால் கிடைத்திட, கால்நடை களுக்குத் தீவனமாக தானியங்கள் பயன்படுத்தப்படு கின்றன. ஒரு கிலோ இறைச்சி கிடைக்க 10 கிலோ தானியம் பயன்படுத்தப்படுகிறது. கால்நடைகளுக்கு அளிக்கப்படும் தானியம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் என்பன மனிதர்கள் மறைமுகமான வகையில் உண்ணும் தானியமாகக் கணக் கிடப்படுகிறது. எந்தவொரு நாட்டிலும் பொருளாதார வளர்ச்சியின் விகிதத்திற்கு ஏற்ப அந்நாட்டின் மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உண்ணும் தானி யத்தின் அளவும் அதிகமாகும். இந்தியாவில் மட்டும் இது குறைவதற்குக் காரணம் வளர்ச்சியின் பயன்கள் சிறுபான்மையினராக உள்ள மேல்தட்டினருக்கு மட்டு மே கிடைப்பதாலாகும்.

இங்கிலாந்திலும் பிற அய்ரோப்பிய நாடுகளிலும் முதலாளிய சமூக அமைப்பு, அதற்குமுன் அங்கு நீண்டகாலமாக நிலவியிருந்த நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பைத் தகர்த்தெறிந்து தோன்றியது. முதலாளிய உற்பத்தி முறையின் வளர்ச்சியால் வேளாண்மையும் கைத்தொழில்களும் நசிந்தன. அதனால் இவற்றில் வேலை இழந்தோர் நகரங்களில் தொழிற்சாலைகளில் வேலை தேடிச் சென்றனர். நாளுக்குநாள் இவர்களின் எண்ணிக்கைப் பெருகியது. குறைந்தக் கூலிக்கு வேலை செய்வதற்காகப் போட்டிப் போட்டுக் கொண்டு காத்துக்கிடக்கும் பெரும்படை (Reserve army of labour) முதலாளியத்துக்குத் தேவை என்று மார்க்சு கூறியுள்ளார்.

அய்ரோப்பிய நாடுகளில் தொழிற்சாலைகளில் வேலை கிடைக்காதவர் எண்ணிக்கைப் பெருகி, நெருக் கடியான நிலை ஏற்பட்டது. புதியதாகக் கண்டுபிடிக்கப் பட்ட வடஅமெரிக்கா, தென்அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களில் இவர்கள் குடியேறினர். அந் நாடுகளின் தொல்குடியினரை விரட்டியும், கொன்று குவித்தும், அப்பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மட்டும் 5 கோடிப் பேர் அய்ரோப்பிய நாடுகளிலிருந்து இப்புதிய கண்டங் களுக்குக் குடியேறினர்.

ஆபிரகாம்லிங்கன் ஆட்சிக்காலத்தில் அமெரிக்க அய்க்கிய நாடுகளில் நடந்த உள்நாட்டுப் போர் (1862-1865) என்பது தென்பகுதியில் அடிமைகளைக் கொண்டிருந்த - வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட நிலப்பிரபுத்துவத்துக்கும், வடபகுதியில் வளர்ச்சி பெற்றிருந்த முதலாளியத்துக்குமான முரண்பாடேயாகும். இதில் நிலப்பிரபுத்துவம் வீழ்ந்தது. முதலாளியம் வென்றது. இவ்வாறு உபரியாக இருந்த உழைக்கும் மக்கள் வெளியேறுவதற்கான வாய்ப்பு இருந்ததாலும், பல நாடுகளைக் காலனி நாடுகளாக ஆக்கி, அந் நாடுகளின் செல்வத்தையும், மக்களின் உழைப்பை யும் சுரண்டியதாலும் இந்நாடுகளில் முதலாளியம் பெருவளர்ச்சி அடைந்தது. எனவே இந்நாடுகள் தொழில் வளர்ச்சி பெற்ற வளமான நாடுகளாகத் திகழ்கின்றன.

அதனால் இந்த நாடுகளில் வேளாண்மை செய்வோர் சிறு பகுதியினராகவே உள்ளனர். அமெரிக்காவில் 2% மக்கள் மட்டுமே வேளாண்மையில் உள்ளனர். அய்ரோப்பிய நாடுகளில் 5-10% பேர் வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களைச் சார்ந்து வாழ்கின்றனர். சப்பான், தென்கொரியா போன்ற நாடுகளில் 20% மக்கள் இவ்வாறு இருக்கின்றனர். ஆனால் இந்தியாவில் 60% மக்கள் வேளாண்மையைச் சார்ந்து வாழ்கின்றனர். ஆனால் வடஅமெரிக்கா, அய்ரோப்பிய நாடுகள் போன்ற தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகளைப் போல் இந்தியா வை மாற்றப் போவதாக கடந்த 25 ஆண்டுகளாகக் காங்கிரசு ஆட்சியும், பா.ச.க. ஆட்சியும் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றன.

இந்தியாவில் முதலாளியம் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் நிழலில் வளர்ந்தது. மேல்சாதிக்காரர்களாகவும், பெருநிலவுடைமையாளர்களாகவும், வணிகர்களாகவும் இருந்தவர்களில் ஒரு பிரிவினரே இந்தியாவில் முத லாளிய உற்பத்தியில் - தொழில்களில் ஈடுபட்டனர். அதனால் முதலாளியமும் நிலப்பிரபுத்துவமும் முரண் படவில்லை. மாறாக இவை சமரசம் செய்து கொண்டன. அதனால் நிலப்பிரபுத்துவத்தின் அடித்தளமாக விளங் கிய சாதி அமைப்பு அப்படியே கட்டிக் காக்கப்பட்டு வருகிறது. முதலாளியத்தால் வேளாண்மையும் கைத்தொழிலும் நலிவுற்ற போதிலும், பாதிக்கப்பட்ட உழைக்கும் மக்களில் ஒரு பிரிவினர் மட்டுமே முதலாளிய உற்பத்தியில் வேலை பெற முடிந்தது. பெரும்பாலோர் மரபாகத் தாம் செய்து வந்த அதே தொழில்களில், குறைந்த வரு வாயுடன் பசியும் பட்டினியுமாகத் துன்பத்தில் உழன்று கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சி இந்திய சமூகத்தில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று காரல்மார்க்சு அமெரிக்காவின் டிரிபியுனல் ஏட்டுக்கு 1853களில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட் டுள்ளார். ஆனால் மேலோட்டமான சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சாதி அடிப்படையிலான சொத்துடை மையும், உற்பத்திச் சாதன உடைமையும், வேலைப் பிரிவினையும், உயர்வு தாழ்வும் அப்படியே நீடிக் கின்றன. சமூகத்தில் இழிவான - அருவருப்பான வேலைகள் என்று கருதப்படும் துப்புரவு போன்ற பணிகளைத் ‘தீண்டப்படாதவர்கள்’ என்று கருதப்படும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களே செய்கின்றனர்.

‘ஒவ்வொரு சாதியும் ஒரு சமூகமாக இருக்கிறது’ என்று மேதை அம்பேத்கர் கூறினார். தொழிற்சங்கங் களில் இருந்தாலும் சாதி உணர்வும், பற்றும் மறைவதில்லை. சாதிக்குள்ளாகவே திருமணம் - அகமணமுறை அப்படியே நீடிக்கிறது. நகரங்களில் வாழ்ந்தாலும், வெளிநாடுகளில் வேலை செய்தாலும், உயர்கல்வி பெற்றாலும், உயர் பதவிகள் வகித்தாலும் தன்சாதிக் குள்ளாகவே திருமணம் செய்தல் - சாதிப் பழக்கவழக்கங்கள் - சடக்குகள் உறுதிப்பாட்டுடன் பின் பற்றப்படுகின்றன. இதற்கு இந்திய அரசியல் சட்டம் பாதுகாப்பாக உள்ளது. நீதித்துறையும் துணைநிற்கிறது.

பண்ணை அடிமைத்தனங்களிலிருந்து விடுபட்டு, ‘சுதந்தரமான தனிமனிதர்களாக’ முதலாளியச் சமூகத் தில் உழைப்பாளர்கள் உருவாவார்கள் என்றும், இவர்கள் தொழிலாளர் வர்க்கமாக ஒன்றுதிரண்டு முத லாளிய வர்க்கத்தைத் தூக்கி எறிவார்கள் என்றும் மார்க்சு கூறினார். ஆனால் இந்தியாவில் தொழிற்சங்கங்களில் உள்ள தொழிலாளர்களிடையே கூட சாதி கடந்த வர்க்க ஒற்றுமை உருவாகவில்லை. கூலி உயர்வுக்கான தொழிற்சங்கமாகச் செயல்படுகின்றனவே தவிர, முதலா ளியத்தை வீழ்த்துவதற்கான புரட்சிகர அரசியல் வளர்த் தெடுக்கப்படவில்லை.

முதலாளிகளும், பெரும்பண்ணையார்களும், பணக் காரர்களும் சாதி கடந்து தாம் சுரண்டும் வர்க்கம், ஆளும்வர்க்கம் என்ற புரிதலைப் பெற்றுள்ளனர். எனவே இவர்கள், உழைக்கும் மக்கள், தாம் சுரண்டப் படும், அடக்கப்படும், ஒடுக்கப்படும் வர்க்கம் என்கிற புரிதலைப் பெற்றுவிடக்கூடாது என்பதற்காக இங்கே சாதி அமைப்பைக் கட்டிக் காத்திட எல்லாம் செய்கின்ற னர். இதைப்போலவே தம் ஆதிக்கத்திற்காக மதத்தைப் பயன்படுத்தும் போக்கை ஆதிக்கச் சாதிகளின் சார் பாகத் திலகர் வளர்த்தெடுத்தார். பிறகு காந்தி இதற்குத் தலைமை தாங்கிப் புதிரான புதிய விளக்கங்கள் அளித் தார். 1980க்குப்பின் இந்துத்துவ அரசியல் தீவிரமாகச் சங் பரிவாரங்களால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இது வர்க்க ஓர்மைக்கு எதிரானதாகும். இந்துத் தேசியம் என்பது இந்தியத் தேசியத்தைப் போலவே போலி யானதும் ஆபத்தானதுமாகும். பழைமையை நிலைக்க வைக்கும் பாசிசமாகும்.

உலகத் தொழிலாளர் அமைப்பு (ILO), சங்கம் அமைக்கும் உரிமையும், தொழிற்சங்கங்களின் உரிமை களும் குறித்து 1948இல் நிறைவேற்றிய 87ஆவது தீர்மானத்துக்கும், தொழிற்சங்கங்கள் மூலம் தம் கோரிக்கைகளுக்காகப் போராடும் உரிமை குறித்து 1949இல் நிறைவேற்றிய 98ஆவது தீர்மானத்துக்கும் இந்திய அரசு இன்னும் ஏற்பளிப்பு வழங்கவில்லை. 87ஆவது தீர்மானத்துக்கு 150 நாடுகளும் 98ஆவது தீர்மானத்துக்கு 160 நாடுகளும் ஒப்புதல் அளித் துள்ளன. இந்த அடிப்படையில்தான் செயலலிதா ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சில இலட்சம் பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டதை நியாயப்படுத்தியது உச்சநீதிமன்றம். கடந்த நாடாளு மன்றக் கூட்டத் தொடரில் பா.ச.க.வின் ஆதரவுடன், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையச் சட்டத்தை நிறைவேற்றிவிட்டது. ஓய்வூதியம் முழுக்க முழுக்கத் தனியாரிடமும் சந்தைக்கும் விடப்படுவதை இச்சட்டம் உறுதி செய்கிறது. அந்நிய மூலதனத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாக, புதிய தாராளமயக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில், தொழிலாளர்கள், உழைப்பாளிகள், வெகுமக்களின் உரிமைகளையும் நலன்களையும் பறிக்கின்ற அரசாக இந்திய ஆட்சியும் மாநில ஆட்சிகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனவே உழைக்கும் மக்கள் சாதி கடந்து, மதம் கடந்து, பாட்டாளிவர்க்கமாக ஓரணியில் திரண்டு பெருமுதலாளிகளுக்கும், பணக்காரர்களுக்கும் அரணாக விளங்கும் இந்த ஆட்சி முறையை அடியோடு வீழ்த்த வேண்டும். இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டத் தின் மூலமே இதை வென்றெடுக்க முடியும். இதுவே நம் மே நாள் சிந்தனையாகும்.

Pin It