கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி மோடி அரசு ரூ.1000, 500 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. நாட்டில் சாமானிய மக்களுக்கு மட்டுமே அது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் மோடியின் ஆத்ம நண்பர்கள் அனைவருக்கும் அது பல நாட்களுக்கு முன்பே தெளிவாகத் தெரிந்திருந்தது. அதனால் அவர்கள் தங்களின் கைவசம் இருந்த பணங்களை தங்கம், ரியல் எஸ்டேட் என பல வகையிலும் பாதுகாப்பாக முதலீடு செய்து கொண்டார்கள்.
ஆனால் கையில் 1000, 500 என சொற்ப தொகையை வைத்திருந்த மக்கள் அதை மாற்ற முடியாமல் மணிக்கணக்கில் வங்கிகளின் முன் காத்துக் கிடந்தார்கள்.
சாமானிய மக்கள் அப்படி காத்துக் கிடந்து தங்களின் செல்லாமல் போன ரூபாய் நோட்டுக்களை மாற்ற அலைந்து கொண்டிருந்த போதுதான், அமித் ஷா இயக்குநராக உள்ள அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 5 நாட்களில் மட்டும் ரூ.745.59 கோடி மதிப்பிலான 1000, 500 ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டன.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட 6 நாள்கள் கழித்து அதாவது நவம்பர் 14-ம் தேதி முதல் கூட்டுறவு வங்கிகள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பெற ரிசர்வ் வங்கி தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கதையை ஏன் தற்போது சொல்கின்றேன் என்றால், தான் இயக்குநராக இருந்த கூட்டுறவு வங்கியில் இப்படி மோசடியாக பணத்தை மாற்ற உதவிய அமித் ஷாவின் திறமையைப் பாராட்டித்தான் தற்போது மோடி அரசு கூட்டுறவு அமைச்சகம் என்ற பெயரில் புதிய அமைச்சகத்தை உருவாக்கி அதை அவரிடமே ஒப்படைத்துள்ளது என்பதால்தான். அதாவது திருடன் கையிலேயே சாவியைக் கொடுத்துள்ளது.
அரசியல் சாசனத்தின் 7-வது அட்டணைப்படி கூட்டுறவு சங்கங்கள் மாநில அரசைச் சார்ந்தவை ஆகும். ஆனால் அதை மதிக்காமல் புதிய கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்குவது என்பது மாநில அரசுகளின் கூட்டாட்சி உரிமைகளை மீறும் செயலாகும்.
தொடர்ந்து மாநில உரிமைகளைப் பறித்து ஒவ்வொரு மாநிலத்தின் பண்பாட்டுக் கூறுகளையும் சிதைத்து பார்ப்பன ஒற்றைப் பண்பாட்டை திணிக்க முற்படும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டை தனது பிடிக்குள் கொண்டுவர நினைப்பது அதையும் ஒழித்துக் கட்டுவதற்காகத்தான்.
நாடு முழுவதும் ஒரு லட்சத்து 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு வங்கிகளின் கிளைகள் உள்ளன. இவற்றில் மொத்தமாக 12 லட்சம் கோடி ரூபாய் பொதுமக்களின் வைப்புத் தொகை உள்ளது. இதுதான் மோடி அரசின் கண்களை உறுத்திக் கொண்டே இருக்கின்றது.
மோடியை பொறுத்தவரை அதானி, அம்பானி போன்ற தனது நண்பர்களைத் தவிர மற்ற யாரிடமும் சல்லி பைசா கூட இருக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி இருந்தால் அதைப் பிடிங்கி உடனே தனது நண்பர்களுக்கு கூறு போட்டு கொடுத்துவிட வேண்டும். அதற்காகத்தான் புதிய கூட்டுறவு அமைச்சகத்தை தற்போது உருவாக்கி அதற்கு அமித் ஷா-வை அமைச்சராகப் போட்டிருக்கின்றார்கள்.
இப்படி கூட்டுறவு வங்கிகளை ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கோடுதான் வங்கிகள் தொடர்பான 1947 ஆண்டுச் சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்து கடந்தாண்டு மார்ச் மாதம் அவசர சட்டத்தை ஒன்றிய அரசு பிறப்பித்தது. பின்னர் கடந்தாண்டு ஜூன் மாதம் நாடாளுமன்றத்தில் அது தொடர்பான மசோதாவைத் தாக்கல் செய்து சட்டமாக்கியது.
கூட்டுறவு அமைப்புகளை ரிசர்வ் வங்கி முறைப்படுத்தினாலும் அவை மாநில பதிவாளர் கட்டுப்பாட்டில் தான் இதுவரை இருந்து வருகின்றன. ஆனால் இனி ஒன்றிய அரசு அதில் தலையிட்டு தனது அதிகாரத்தை செலுத்த முடியும். தேவைப்பட்டால் கூட்டுறவு வங்கிகளின் இயக்குநர் குழுவைக்கூட கலைத்துவிட முடியும்.
குஜராத் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கூட்டுறவு அமைப்புகள் வலுவாக உள்ளதால் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குஜராத் சட்டசபை தேர்தல் போன்றவற்றை கருத்தில்கொண்டு கூட ஒன்றிய அரசு கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்கி இருக்கலாம் என்றும் சொல்லப்படுகின்றது.
நிச்சயமாக கூட்டுறவு வங்கிகளின் நிதி இனி சாமானிய மக்களின் வளர்ச்சிக்கு செல்வதைக் காட்டிலும் அது மோடியின் வளர்ச்சிக்கு துணைபுரியும் அவர்களின் கார்ப்ரேட் நண்பர்களின் வளர்ச்சிக்கு செல்லும் என உறுதியாகச் சொல்ல முடியும்.
ஏற்கெனவே இந்திய வங்கித் துறையில் சுமார் 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வாராக் கடன் இருக்கிறது. இந்த வாராக் கடன் என்பது வராது என தெரிந்தே மக்களின் பணத்தை அரசியல்வாதிகளின் ஆசியுடன் கார்ப்ரேட்டுகளுக்குத் தாரை வார்ப்பதாகும்.
கடந்த 8 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் 100 கோடிக்கு மேல் கடன் வாங்கிய 'பரம ஏழை'களின் கடன் ரூ 6.32 லட்சம் கோடிகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 12 பொதுத்துறை வங்கிகள் மட்டும் 8 ஆண்டுகளில் பெரும் தொழிலதிபர்களுக்காக தள்ளுபடி செய்த தொகை ரூ.2.78 லட்சம் கோடி ஆகும். கடன்கள் இப்படி தள்ளுபடி செய்யப்பட்டாலும் கடனை செலுத்தாதவர்கள் மீதான நடவடிக்கை தொடரும் என அரசு அறிவித்தாலும் வங்கிகள் வசூலித்த தொகை என்னவோ மொத்த கடனில் 7 சதவீதம் மட்டுமே.
இப்படி பொதுத்துறை வங்கிகளில் இருந்த பணத்தை எல்லாம் எடுத்து சூறையாடிய கும்பல்தான் தற்போது கூட்டுறவு வங்கிகளில் உள்ள பணத்தின் மீது கண் வைத்திருக்கின்றது.
நூறு, இருநூறு திருடும் திருடனைக் கட்டிவைத்து அடித்து உதைக்கும் மக்கள் ஒரு போதும் கோடிகளில் திருடும் திருடனைக் கண்டுகொள்வதில்லை.
அவர்கள் அது போன்ற திருடர்களுக்கு அரசியல்வாதி என்றும், அதிகார வர்க்கம் என்றும் பெயர் வைத்து அவர்கள் தங்களை ஆட்சி செய்யவும், அடக்கி ஒடுக்கவும் அனுமதி கொடுக்கின்றார்கள்.
அப்படி கொடுக்கப்பட்ட அனுமதியால்தான் தற்போது சட்டப்படி கொள்ளையடிக்க கூட்டுறவு வங்கிகள் திறந்து விடப்பட்டுள்ளது.
- செ.கார்கி