கீற்றில் தேட...

சங்பரிவார பத்திரிகைகளுள் ஒன்றான பஞ்சன்யாவில், அமேசான் நிறுவனத்தை, ‘கிழக்கிந்தியக் கம்பெனி 2.0’ என்று விமர்சித்து எழுதியிருக்கிறார்கள். இது நம்மை முட்டாள்கள் ஆக்குவதற்கானச் செயலாகும். இவர்கள்  யாரையும் எப்போதும் எதிர்த்தது கிடையாது. பாபர் வந்த போதிலிருந்து அவர்களோடு சேர்ந்து அமைச்சர் பதவிகளை வாங்கிக் கொண்டு வாழ்ந்த கும்பல் இவர்கள். 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பலரும் சிறைக்குச் சென்றார்கள். ஆனால் ஆர்எஸ்எஸ் காரர்கள் கலந்து கொள்ளவில்லை. ராஜாஜி கலந்து கொள்ளவில்லை. இவர்கள்தான் தேசப்பற்று பற்றி பேசுகிறார்கள். மற்றவர்களை ஆன்ட்டி இந்தியன் என்று சொல்கிறார்கள். அதேபோல் மன்னிப்புக் கடிதம் கொடுத்துவிட்டு வந்த (வீர)சாவர்க்கர் பற்றியெல்லாம் நாம் படித்திருக்கிறோம். சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்கும் உண்மை வரலாறு சரியாகத் தெரியாததாலும், அவர்கள் வறுமையில் வாடுவதாலும், அறியாமையில் இருப்பதாலும் இவர்கள் இப்படிப்பட்டப் பொய்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

trump and modi1991 லிருந்து NEP, புதிய பொருளாதாரக் கொள்கை கொண்டுவரப்பட்டது. New Economic Policy என்றால் New Colonization Policy தான். இவர்கள் அனைத்தையும் தனியாரிடம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இது தேசியத் தன்னிறைவிற்கு எதிரானது. 2008 இல் உலகெங்கும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்ட போது இந்தியாவில் நாம் தப்பித்துக் கொண்டோம். ஏனெனில் வேளாண் துறையில் அந்நிய முதலீடு கிடையாது. சீனாவில், வெளிநாட்டு முதலீடு வருகிறதென்றால், இவ்வளவு காலம், இவ்வளவு இலாபம்தான் ஈட்டிக்கொள்ள வேண்டும், தொழில்நுட்பத்தை இங்கு கற்றுக் கொடுத்திருக்க வேண்டும், பணியாளர்களுக்கு உத்தரவாதம் கொடுக்கப்பட வேண்டும் என்பன போன்ற விதிமுறைகள் இருக்கின்றன. உலகமயமாதல், தனியார்மயமாதல், தாராளமயமாதல் என எல்லாவற்றையும் திறந்துவிட்டு இன்று அமேசான் நிறுவனத்தைக் கிழக்கிந்தியக் கம்பெனி என்று சொல்வதற்கு இவர்களுக்கு எந்த அருகதையும் கிடையாது.

இந்தியாவில் என்ன செய்கிறார்கள்? அனைத்தையும் அம்பானி அதானிக்குக் கொடுத்து விடுகிறார்கள். ரஃபேல் உற்பத்திக்கான வாய்ப்பை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட்க்கு கொடுக்கவில்லையே. அம்பானிக்குத்தான் கொடுத்தார்கள். இங்கே அமேசான் போன்ற நிறுவனங்களை எதிர்ப்பது ஆனால் அமெரிக்காவோடு கூட்டணியில் இருப்பது.

டிரம்புக்கு ஆதரவாக தேர்தலில் இவர்கள் செயல்பட்டதை எல்லாம் நாம் பார்த்தோம். இப்போது இப்படிப் பேசுவதெல்லாம் வெறும் வாக்கு வங்கிக்காக, தேர்தலுக்காக, அப்பாவிச் சூத்திரர்களையும் பஞ்சமர்களையும் ஏமாற்றுவதற்காகச் சொல்வது. வேலையில்லாத் திண்டாட்டம் எப்போதும் இருக்க வேண்டும், வறுமை எப்போதும் இருக்க வேண்டும் அப்போதுதான் கர்மா என்று சொல்லி மதத்தையும் சாதியத்தையும் முதலாளித்துவத்தையும் நிலைநிறுத்த முடியும்.

யூடியூப், ஃபேஸ்பக் போன்ற சமூக ஊடகங்கள் வந்ததெல்லாம் சிந்தனைப் புரட்சியாகும். இன்று யார் எது பேசினாலும் உடனடியாக அது மக்களிடம் சென்றடைந்த விடுகிறது. இவர்கள் சொன்னால்தான், இவர்கள் பத்திரிகைகளைப் படித்தால்தான் செய்திகளைத் தெரிந்துகொள்ள முடியும் என்ற காலம் எல்லாம் போய்விட்டது. அறிஞர் அண்ணா சொன்னது போல இது சாமானியர்களின் காலமாகும். இங்குள்ள இந்துத்துவ முதலாளிகளுக்கும் அமெரிக்க முதலாளிகளுக்கும் போட்டி நடக்கும்போது இப்படிப் பேசி அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்களுக்குத் தனிப்பட்ட முறையில் ஒத்து வராதவர்களை எதிர்ப்பார்கள்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக பெங்களூரில் கேஎஃப்சி தொடங்கப்பட்ட போது அதை எதிர்த்துப் பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் இன்று கேஎஃப்சி, மெக் டொனல்ட்ஸ் போன்றவை அனைத்துப் பகுதிகளிலும் நிரம்பியிருக்கின்றன. அவர்கள் எப்போதோ இங்கு வந்து விட்டார்கள். இந்தியப் பொருளாதாரம் இவர்கள் சொல்வதைப்போல சுதேசிப் பொருளாதாரமாக இருக்கிறதா அல்லது விதேசிப் பொருளாதாரமாக இருக்கிறதா?

இந்தியப் பொருளாதாரம் இந்தியர்களுடையக் கட்டுப்பாட்டில் இல்லை. உலக வங்கியில் கடன் வாங்கவேண்டும். பொருளாதாரத்தில் பெரிய அளவில் பற்றாக்குறை இருக்கிறது. இவர்களுடைய பொருளாதாரத் தத்துவமே இவர்களுடையது இல்லை. நியூ எக்கனாமிக் பாலிசி எல்லாம் ஆங்கிலேயர்கள் சொன்னதுதான். இன்னும் சொல்லப்போனால் கிழக்கிந்தியக் கம்பெனி காலத்திலாவது பொதுத்துறையில் ரயில்வே அஞ்சல் துறை போன்றவற்றை வைத்திருந்தார்கள். பொதுக்கல்வியை அவர்கள்தான் கொடுத்தார்கள். ஆனால் இவர்கள் எல்லாவற்றையும் தனியார் துறைக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுத்துறையை ஒழித்துவிட்டு இவர்கள் எப்படிக் கிழக்கிந்தியக் கம்பெனி மீண்டும் இந்தியாவிற்குள் வருகிறது என்று சொல்ல முடியும்? நன்கு படித்த பொருளாதார அறிஞர்களிடம் இவர்கள் பேச முடியாது. அவர்கள் பேசுவதெல்லாம் அப்பாவி மக்களிடம்தான். இப்போது ஆளுகிறவர்களே கிழக்கிந்தியக் கம்பெனி போன்றவர்கள்தான். ஏழை மக்களுக்கான உழைக்கும் மக்களுக்கான ஆட்சி நூற்றுக்கு நூறு கிடையாது.

அமெரிக்காவும் சரி ஜெர்மனியும் சரி ஜப்பானும் சரி அவர்களுடைய தேசிய நலனைக் கவனத்தில் கொண்டு செயல்படுகிறார்கள். ஆனால் இந்தியாவில் இவர்களுடையத் தனி நலனைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதாவது pro-brahmins, pro-rich என்று கவனமாகச் செயல்பட்டு வருகிறார்கள். மக்களுடையப் பொருளாதார நிலையில் சமூக நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

பேராசிரியர் முனைவர் வெ.சிவப்பிரகாசம்