forest flowersபிசாசாய் இருப்பது விடுதலை.
கடவுளாய் இருந்து பார்த்தவன் சொல்கிறான்.

நிழல்களின் வழியேவும் இன்னொரு நானில் வாழ்கிறான். இங்கிருக்கும் போதே அங்கிருக்கும் தன்மையை நீங்கள் மறுதலிக்கலாம். மறு உயிர்ப்பு என்பதில் நம்பிக்கை இல்லை என்றாலும்... மறு வாசிப்பில் நம்பிக்கை நிகழும் என்பது திண்ணம். உடைந்து விட்ட போதும் உருவங்கள் பெருகும் என்பது விதி. கரைந்து விட்ட போதும் சூனியம் இல்லை அது ஒரு துளி.

*

மலை உச்சியில் அமர்ந்திருக்கிறான்
மிச்ச பகலை என்ன செய்வது.

நீண்ட நெடிய பயணத்தின் வழியே நீங்காத துன்பங்கள் மறைந்தோடும். இன்னபிற சிரிப்பின் வழியே சொல்லும் பூதாகர சித்தாந்தங்களை ஒரு பொட்டல சோறு போட்டுடைக்கும். நம்பாதோருக்கும் நெற்றியில் சுருக்கம் விழும். சூரிய கோளாறு அப்படி. சிலிர்த்து திரும்ப பாறைக்கும் காது முளைக்கும். கண்கள் முளைத்த கல் சொல்கையில் பாதைகள் கவனம் பெரும்.

*

சபித்து விடவும் தான்
சித்திரத்தில் நீளும் கை இருக்கிறது

அடைபட்ட நாள் பிறழ்வை இறுக்கத்தின் இயலாமைக்கு வர்ணம் பூசுகிறான். வாழ்வை அதிகம் அள்ளி பூசிக் கொண்டவன்...வழக்கத்துக்கு மாறாகவே நாட்களை காண்கிறான். நீர் பூத்த நெருப்பின் மத்தியில் வண்டூரும் கனவை அவன் வேர்த்து விறுவிறுக்க ஓவியமாக்குகிறான். பிறகு உள்ளே ஓய்ந்தொளிந்து கொள்கிறான். பெருமூச்சை அடக்கி வண்ணங்களின் வழியே படும் ஒளியை பிடித்து தெளிப்பது சாகாதிருக்கிறேன் என்பது.

*

அழுது ஒழுகுவதை விட சிரித்து சிதறுவது மேல்
நுட்பத்தில் சிறகு பறக்கலாம். துக்கத்தில் ஒருபோதும் இல்லை வானம்.

தொலைதூரங்கள் பொருட்டென்று நம்பினால் கடல் மீறிடும் லாவகம் வாய்க்காது. நகல்கள் நாட்டியமாடலாம். அசலே கால்களாகின்றன. கருப்பு நாய்க்கும் கண்கள் மினுங்கும் நம்பு. காத்திருத்தலில் கவிதை கிடைக்கலாம் இரு. மூழ்கி விட்டாலும் முத்தாகிடும் தன்மைக்கு மூச்சை பழக்கு. முன்பொருமுறை நிகழ்ந்தது தான் பின்பொருமுறையும் நிகழும். இதோ தானொரு முறையெனவும்.

- கவிஜி