கொழுக்கிறார்கள் - பார்ப்பன பெரு முதலாளி ‘இந்துக்கள்’; வதைபடுகிறார்கள் - ஏழை எளிய ‘இந்துக்கள்’
அரசு வங்கிகளில் பல்லாயிரம் கடன் வாங்கி பட்டை நாமம் சாத்தி விட்டு வெளி நாட்டில் சொகுசு வாழ்க்கை நடத்துகிறார்கள். பார்ப்பன-பனியா ‘இந்துக்கள்’.உழைக்கும் இந்துக்கள் வங்கிகளில் பெறும் சில ஆயிரம் ரூபாய்க்கு அவமானப் படுகிறார்கள்.
17 வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத வழக்கில், 2016ஆம் ஆண்டு நாட்டை விட்டு தப்பியோடியவர் விஜய் மல்லையா. பஞ்சாப் நேசனல் வங்கியில் 14,000 கோடி ரூபாய் கடன் மோசடி செய்த வழக்கில் 2018ஆம் ஆண்டில் இந்தியாவை விட்டு தப்பியோடிவர்கள் குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரது மாமனார் மெகுல் சோக்சியும். அதனைத்தொடர்ந்து நாட்டையே உலுக்கிய 23,000 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கிக் கடன் மோசடியில் குஜராத்தைச் சேர்ந்த ஏ.பி.ஜி. ஷிப்யார்டு என்னும் கப்பல் கட்டுமான நிறுவனம் சிக்கியுள்ளது. இன்றைய தேதியில் இதுதான் இந்தியாவின் மிகப்பெரிய வங்கிக்கடன் மோசடி. இந் நிறுவனத்திற்கு இடம் வழங்கியது குஜராத் மாநில பாரதிய ஜனதா அரசுதான் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
ஊடகங்கள் அதிகம் பேசிய இந்த வங்கி மோசடிகளை தாண்டி, கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்த வங்கி மோசடிகள் ஏராளம். ராஜஸ்தான் சிண்டிகேட் வங்கியின் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த சாந்தா கோச்சர், அவரது கணவர் தீபக் கோச்சர், வீடியோகான் தலைமை நிர்வாகி அதிகாரி வேணுகோபால் தூத் ஆகியோர் தொடர்புடைய ரூ.1,875 கோடி மதிப்பிலான வங்கிக்கடன் மோசடி, ரோட்டோமேக் பென்ஸின் ரூ.3,695 கோடி மதிப்பிலான வங்கிக்கடன் மோசடி, ரூ.4,355 கோடி மதிப்பிலான பி.எம்.சி. வங்கி மோசடி, ஓரியண்டல் மற்றும் பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் ரூ..6,000 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பரிவர்த்தனை மோசடி, பிரைப் நிறுவனத்தின் ரூ.8,000 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் மோசடி என பெரிதும் வெளிச்சத்திற்கு வராத வங்கி மோசடிகளும் ஏராளம்.
இதையெல்லாம் விட பெரியக்கொடுமைகள் பல இருக்கின்றன. சாதாரண கூலித் தொழி லாளர்கள் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச தொகையை சரியாக பராமரிக்காவிட்டால் கூட கட்டணம் விதிக்கிறது ரிசர்வ் வங்கி. 3 முறைக்கு மேல் ஏடிஎம்.களில் பணம் எடுக்கக்கூட கட்டணம் வந்துவிட்டது. அவ்வளவு கணக்காக, உழைக்கும் மக்களிடம் பணத்தை கறக்கும் வங்கிகள், மோடி அரசின் முதல் 7 ஆண்டுகளில் வாராக்கடனால் இழந்தவை மட்டும் ரூ.10.72 லட்சம் கோடி ரூபாய். இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் 2021ஆம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எழுப்பிய கேள்விக்கு ரிசர்வ் வங்கி அளித்த பதில் இந்த உண்மை வெளிப்பட்டுள்ளது.
தள்ளுபடி செய்யப்பட்ட மொத்த வாராக் கடனில் சுமார் 75 விழுக்காடு கடன்கள் பொதுத் துறை வங்கிகள் கொடுத்த கடன்களாகும். 2020-21 நிதியாண்டில், ஸ்டேட் வங்கியால் தலைமை தாங்கப்படும் ஐந்து வங்கிகள் மட்டும் ரூ. 89,686 கோடி ரூபாய் வாராக்கடன்களை தள்ளுபடி செய்திருக் கின்றன. ஆனால் யார் யாருக்கு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்ற முழு விவரங்களை வங்கிகள் வெளியிடவில்லை. மாணவர்கள் பெறும் கல்விக்கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத பட்சத்தில் புகைப் படங்களை வெளியிட்டு அவமதிக்க எவ்வித தயக்கமும் காட்டாத வங்கிகள், பெரு நிறுவனங்களை காட்டிக்கொடுப்பதில் மட்டும் கள்ள மவுனம் சாதிக்கின்றன. மோடியின் நெருங்கிய நண்பரான கவுதம் அதானிக்கு மட்டுமே சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பெரு நிறுவனங்களின் லட்சக் கணக்கான கோடி ரூபாய் கடன்களை மிக எளிமையாக தள்ளுபடி செய்ய அனுமதிக்கும் ஒன்றிய அரசுக்கு கொரோனா பேரிடர் காலத்தில்கூட ஏழை, எளிய மக்களுக்கு பண உதவி செய்ய மனம் வரவில்லை. மாணவர்களின் கல்விக் கடனை, வேளாண் கடன்களையோ, சிறு, குறு நிறுவனங்களின் தொழில் கடன்களை ரத்து செய்வதே இல்லை. மோடி யாருக்கான ஆட்சியை நடத்துகிறார் என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.
கார்ப்பரேட் சேவைக்கு பாஜகவுக்கு கிடைக்கும் பரிசு
சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் அதல பாதாளத்தில் வீழ்ந்தன. அப்போது அடைக்கப் பட்ட சில நிறுவனங்களின் கதவுகள் நிரந்தரமாகவே அடைபட்டுவிட்டன.
செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பணம் முழுமையாக ரிசர்வ் வங்கிக்கு திரும்பியது. ஆனால் எவ்வளவு பணம் திரும்பியது என்று துல்லியமாக கடைசிவரை அறிவிக்கவில்லை. மொத்தத்தில் மிகப் பெரிய தோல்வியை தழுவி யது அத்திட்டம். கறுப்புப் பணம் பணமாகவே இருக்கும் என்ற திரைப்பட மடத்தனத்தை நிஜத்தில் செய்து காட்டிய மோடியின் சர்க்கஸ் என்று பொருளாதார நிபுணர்கள் விமர்சித்தனர். கறுப்புப் பணத்தை ஒழிக்க போராடுவதாக சொல்லிக்கொள்ளும் இந்த மோடி அரசுதான் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்காக 2017-ஆம் ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் என்ற முறையை உருவாக்கியது.
இந்தக் பத்திரங்களைக் குறிப்பிட்ட சில தேதி களில் மட்டும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா விடமிருந்து நன்கொடை வழங்க நினைக்கும் நபர்களோ அல்லது நிறுவனங்களோ காசோலை வழங்கி பெற்றுக் கொள்ளலாம். வாங்கிய பத்திரத்தை எந்தக் கட்சிக்கு நன்கொடை வழங்க விரும்புகிறார்களோ அந்தக் கட்சியிடம் அதை ஒப்படைத்துவிட வேண்டும். பத்திரத்தைப் பெற்றுக்கொண்ட அரசியல் கட்சி, வங்கியில் அதை ஒப்படைத்து, தனது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட நன்கொடையைப் பெற்றுக் கொள்ளலாம். இவை அனைத்தும் 15 நாட் களுக்குள் நடக்க வேண்டும். இந்தப் பரிவர்த்தனைகள் எதுவும் பொதுவெளியில் தெரியாது. அரசியல் கட்சி களும், யாரிடம் தேர்தல் பத்திரங்கள் வழியாக நன்கொடை பெற்றார்கள் என்னும் விவரங்களை வெளியிடத் தேவையில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழியாக வும் இதுகுறித்த தகவல்களைப் பெற முடியாது. இந்த விவரங்களைத் தெரிந்துகொள்ள தேர்தல் ஆணையத்தாலும் முடியாது.
பெரும் தனியார் நிறுவனங்களும், பணபலம் படைத்தவர்களும் சட்டத்துக்குட்பட்டே, யாருக்கு எவ்வளவு வழங்கினார்கள் என்னும் தகவலை வெளியிடா மலேயே, எந்த வரையறையும் இன்றி கட்சிகளுக்கு நன்கொடை வழங்கலாம். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா என்னும் பொதுத் துறை நிறுவனம் மூலமே இந்த பரிமாற்றங்கள் நடைபெறுவதால் இதன் ஒட்டு மொத்த பிடியும் மறைமுகமாக ஒன்றியத்தை ஆளும் அரசின் கைகளிலேயே இருக்கும். தேவைப்பட்டால் அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் விசாரணைக்கு பெறலாம். இதனால் ஆட்சியில் இருக்கும் கட்சி யாரிடமிருந்து பணம் பெறுகிறது என்றே தெரியாத அளவுக்கு ஏகபோகமாக பெற வாய்ப்பு உருவாகிறது என்று பொருளாதார அறிஞர்கள் பலரும் குற்றம்சாட்டினர். பலரது குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையில் பாரதிய ஜனதாவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் நிதி ஆண்டுக்கு ஆண்டு பெருகிக் கொண்டே செல்கிறது.
குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற 2019-20 நிதியாண்டில் மட்டும் பாரதிய ஜனதா, கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து மட்டும் 720 கோடி ரூபாய்க்கும் மேல் பெற்றுள்ளது. இது காங்கிரஸ் பெற்ற 139 கோடி ரூபாயைக் காட்டிலும் 5 மடங்கு அதிகம். அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய கட்சிகளும் பெற்ற தொகையே 922 கோடி ரூபாய்தான். 2019-20 நிதியாண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாரதிய ஜனதா பெற்ற மொத்த நன்கொடை 2,555 கோடி ரூபாய். இது அந்த நிதியாண்டில் அனைத்துக் கட்சிகளுக்கும் கிடைத்த நன்கொடை யில் 76 விழுக்காடு. 2018-19 நிதியாண்டில் பாரதிய ஜனதாவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்த 1,450 கோடி ரூபாயைக் காட்டிலும் 75 விழுக்காடு அதிகம். ஆனால் எதிர்க்கட்சியான காங்கிரஸிற்கு 2018-19 நிதியாண்டில் கிடைத்த நன்கொடையை விட 2019-20 நிதியாண்டில் 17 விழுக்காடு குறைவாகவே கிடைத்துள்ளது. 2018-19-இல் தேர்தல் பத்திரங்கள் மூலம் 383 கோடி ரூபாய் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி 2019-20 நிதி யாண்டில் 318 கோடி ரூபாய் என குறைவாகவே பெற்றுள்ளது.
பாரதிய ஜனதா பெற்றுள்ள 2,555 கோடி ரூபாய்க்கும், காங்கிரஸ் பெற்ற 318 கோடி ரூபாய்க்கும் இடையே உள்ள மலையளவு வித்தியாசத்தை பார்த்தாலே தேர்தல் பத்திரங்கள் மூலம் நடைபெறும் தில்லுமுல்லுகளை உணரலாம். காங்கிரஸின் நிலைமையே இதுதான் என்றால் பிற தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் பெற்ற நன்கொடைகளை ஒப்பிட வேண்டிய அவசியமே எழவில்லை. இத்தகைய சமத்துவமின்மை தேர்தல் களத்தில் எப்படி சமமான போட்டியை உண்டாக்கும் என்பதை கேள்விக்குட்படுத்த வேண்டியுள்ளது. பெரு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பாரதிய ஜனதா செய்யும் அரும்பெரும் சேவைகளுக்கு கிடைக் கும் பரிசுதான் இவ்வளவு நன்கொடையா என்றும் சந்தேகிக்க வேண்டியுள்ளது. அது மட்டுமல்ல, தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவற்றை சாவி திருகும் பொம்மைகளாக பாரதிய ஜனதா பயன்படுத்துவதையும் இதனோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது. 2019-20 நிதியாண்டில் பிரபல கட்டுமான நிறுவனர் சுதாகர் ஷெட்டிக்கு சொந்தமான குல்மார்க் ரியல் எஸ்டேட் நிறுவனம் பாரதிய ஜனதாவிற்கு 20 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது. 2020 ஜனவரியில்தான் அமலாக்கத்துறை இந் நிறுவனத்தில் சோதனை நடத்தியது.
எனவே, நடைமுறையில் உள்ள தேர்தல் பத்திர முறை துளியும் வெளிப்படைத்தன்மை அற்றதாகவும், கறுப்பு பணத்தை ஊக்குவிப்ப தாகவுமே இருக்கிறது. இதன்மூலம் அதிக ஆதாயம் பெறும் கட்சியாகவும் பாரதிய ஜனதா இருக்கிறது. பாரதிய ஜனதா ஆட்சியில் ஊழலே இல்லை என்று பேசும் வலதுசாரிகள் பலர் இருக்கிறார்கள். ஊழலை சட்டப்பூர்வமாக்கி விட்டால், பின்னர் எப்படி அது ஊழலாக இருக்கும்? தேர்தல் பத்திரங்கள் சட்டப்பூர்வ ஊழல் என்பதைத்தான் இந்த புள்ளிவிவரங்கள் நிறுவுகின்றன.
(‘நிமிர்வோம்’ வெளியிடாக வெளி வந்துள்ள ர.பிரகாஷ் எழுதிய ‘மோடி இந்துக்களுக்கு என்ன செய்தார்’ நூலிலிருந்து)