நாலடியாரின் பாடற்குறிப்புகளைக் கொண்டு அப்பாடல் எழுந்த வாழ்க்கைச் சூழலில் கறவை மாடு வளர்ப்பு - பால், தயிர், நெய் முதலான பாலுற்பத்தி பொருட்கள் - அவற்றின் பயன்பாடு - காளை வளர்ப்பு - மாட்டுவைத்தியம் - மாட்டுத்தரகு முதலான செய்திகளை அணுகலாம்.
நாலடியாரின் கறவை மாடு வளர்ப்பு
‘பல்லாவுள் உய்த்துவிடினுங் குழக்கன்று வல்லதாந் தாய்நாடிக் கோடலைத்' (101) நிறைய பசுக்கள் இருக்கும் மந்தைக்குள் ஒரு கன்றினை விட்டால் அது மிகச் சரியாக அதன் தாயை அடையாளம் காணும் என்று இயம்புகிறது இப்பாடல். மந்தைகளாக ஆநிரைகள் வளர்த்தல் தொடர்பான செய்தி என்பதறிக.
‘இரவலர் கன்றாக ஈவார் ஆவாக விரகிற் சுரப்பதாம் வண்மை விரகின்றி வல்லவர் ஊன்ற வடிஆ போல் வாய்வைத்துக் கொல்லச் சுரப்பதாங் கீழ்.' (279)
கன்றுக்கு பாலூட்டும் பசு விருப்பத்தோடு கொடுப்பதும் கறப்பவர் அழுத்திக் கறக்கும்போது விருப்பமின்றி பசு பால் சுரப்பதையும் இப்பாடல் குறிப்பின் வழி அறிகிறோம்.
வாய்வைத்து என்பது இப்படிக் கருத வைக்கிறது… பால் சுரக்க விரும்பாமல் சுரப்பை இறுக்கிக் கொண்டிருக்கும் மாட்டின் பால் மடியில் கறப்பவர் வாய் வைத்து ஊட்டி சுரக்கச் செய்வர் போலும்
‘ஆமாபோல் நக்கி அவர் கைப் பொருள்கொண்டு சேமா போற் குப்புறூஉம் சில்லைக் கண்' 377 ‘ஆமாபோல் நக்கி' என்பதிலிருந்து வளர்க்கப்படும் மாடு வளர்ப்பவரிடம் காட்டிய அன்பையும் பசுக்கள் அன்போடு வளர்க்கப்பட்டதையும் புரிந்து கொள்ளலாம்.
பால், தயிர், நெய்
‘ஆவேறு உருவின ஆயினும் ஆபயந்த பால்வேறு உருவின அல்லவாம் பால்போல் ஒரு நன்மைத்தாகும் அறநெறி ஆபோல் உருவு பலகொளல் ஈங்கு'. (118)
மாடுகள் வெவ்வேறு உருவத்தில் இருந்தாலும் அவை தரும் பால் ஒரே நிறத்தில் காணப்படுகிறது என்கிறது இக்குறிப்பு. நிறைய மாடுகளைக் கறந்து பார்த்த பழக்க ஒப்பீடு இது.
‘பாலாற் கழீஇப் பலநாள் உணக்கினும் வாலிதாம் பக்கம் இருந்தைக்கு இருந்தன்று‘ (258) இப்பாடலில் வெண்மை நிறத்தைச் சுட்டுவதற்காக மட்டுமே பால் கூறப்பட்டுள்ளது.
‘பருகற்கு அமைந்தபால் நீரளாய் அற்றே' (239) பாலில் நீரைக் கலந்தால் பருகும்போது அது சுவை குறைகிறதாம் பால் உணவாகப் பயன்பட்டிருக்கிறது என்பதோடு ‘பாலோடு அளாயநீர் பாலாகும் அல்லது நீராய் நிறந்தெரிந்து தோன்றாதாந் தேரிற்.' 177 எனும் குறிப்பில் அதன் கலப்படம் குறித்த செய்தியையும் உடன் காண்க.
‘உப்பொடு நெய் பால் தயிர் காயம் பெய்தடினும் கைப்பறா பேய்ச்சுரையின் காய்' (116) இப்பாடலில் பால் தயிர் நெய் மூன்றும் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம்.
‘நீரினும் நுண்ணிது நெய்யென்பர் நெய்யினும் ஆரும் அறிவர் புகைநுட்பம்' (282) நீரைவிட அடர்த்தி குறைவு நெய் நெய்யைவிட மிக நுண்ணியது புகை என்று அவர்கள் கூறும் ஒப்பீடுகளில் நெய் அவர்கள் வாழ்வில் ஒன்றிய ஒன்று என்பது புலப்படுகிறது.
‘ஆன்படு நெய்பெய் கலனுள் அதுகளைந்து‘ (238) என்ற குறிப்பு நெய்யைக் கலனில் வைத்திருக்கும் செய்தியைத் தருகிறது.
‘நெருப்பழற் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம் எரிப்பச் சுட்டு எவ்வநோய் ஆக்கும்' (124) என்னும் குறிப்பில் வரும் நெய் நெருப்பில் சேர்ந்தால் எரியும் என்பது கொள்ளிக்கட்டை (தீப்பந்தம்) குறித்த செய்தி ஆகும். அது ஆநெய் என்பதை விடவும் விளக்கெரிக்க உதவும் எண்ணெய் எனக் கொள்வதே பொருத்தம். ‘விளக்கொளியும் நெய்யற்ற கண்ணே அறுமே' (371) என்பதிலிருந்து விளக்கெரித்த நெய் வேறாவது காண்க.
‘ஆகாது எனினும் அகத்துநெய் உண்டாகப் போகா எறும்பு புறம்சுற்றி‘ (337) ஒரு கலனில் நெய் இருக்கிறது. உள்ளே விழுந்தால் பிசுபிசுப்பில் சிக்கி எறும்பு நகரமுடியாத துயரில் மாட்டிக் கொள்ளும். ஆனாலும் நெய்ப்பானையைச் சுற்றி எறும்பு வருகிறது என்பதும் ஆவின் பயனான நெய் தொடர்பான செய்திகளுள் ஒன்று.
பால் உணவுகள்
‘பாற்கூழை மூழை சுவையுணராதாங்கு‘ (321) பாற்கூழ் என்பதற்குப் பாலூற்றி சர்க்கரை சேர்த்த இனிப்பான உணவு என்பர் உரையாசிரியர்கள். அதன் சுவையை கிண்டிக் கொண்டிருக்கும் அகப்பை உணராது என்று கூறப்பட்டுள்ளது.
‘தோல் தின்னுங் குணுங்கு நாய் பாற் சோற்றின் செவ்வி கொளல் தேற்றாது ஆங்கு‘ (322) நாற்றமடிக்கின்ற தோல் உணவை விரும்பித் தின்று பழகிய நாய் பழக்கமின்மையால் பால் சோற்றை விரும்பாது என்பது பாடல் நவிலும் செய்தி. வளர்ப்பு நாய்களுக்குப் பால்சோறு போட்டுள்ளனர் என்பது நாம் கண்டடையும் செய்தி.
‘நெய்யிலாப் பாற்சோற்றின் நேர்‘. (333)
பாயசம் என்கிறார்கள் உரையாசிரியர்கள். பாலும் சர்க்கரையும் சேர்த்திருந்தாலும் நெய் சேர்க்காவிட்டால் சுவை குன்றும் என்று அலைந்திருக்கிறது அவர்களின் நாக்கு.
‘பொற்கலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல் அக்காரம் பாலோடு‘ (206) சர்க்கரை பால் சேர்த்து அரிசியை வேக வைக்கும் சர்க்கரைப் பொங்கல் இது.
மாட்டுத்தரகு
‘நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறூஉங்‘ 115 என்ற குறிப்பின் வழி தரம் பார்த்து மாடு வாங்குவதும் அதற்கேற்றாற் போல் விலை கிடைப்பதும் கன்றினை மட்டும் விற்பதும் என மாட்டு வியாபாரம் குறித்த செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன.
காளைமாடுகள்
'சேமா' 377 என்பது பொலிகாளை. அதாவது மாடுகள் சினை பிடிப்பதற்காக வளர்க்கப்படும் காளைகள். அது விரும்பி வளர்க்கப்பட்டாலும் ஒரு வேலையும் செய்யாமல் குப்புற அடித்துப் படுத்துக் கொள்ளும் என்கிற செய்தி கிடைக்கிறது
காளை மாடு அக்காலச் சமூகத்தில் வீரத்தின் அடையாளமாகப் போற்றப்பட்டுள்ளமையால், {‘காளை பின்‘ (398)} காளை போல் கம்பீரமாக இருக்கும் ஆண்மகனுக்கு ஆகுபெயராக வழங்கியிருப்பதும் புலனாகிறது.
‘கொய்புல் குறைத்துக் கொடுத்தென்றுந் தீற்றினும் வையம்பூண் கல்லா சிறுகுண்டை‘ (350) வளர்ச்சியில்லாத மாட்டிற்கு குறைந்த அளவு புல் கொடுத்து தின்ன வைத்தாலும் அது வண்டியிழுக்க உதவாது என்கிறது இப்பாடல். ‘சிறுகுண்டை‘ என்பது குள்ளமான மாடு. கொய்புல் மாட்டிற்காக அவர்கள் கொய்து வரும் புல். வையம் என்பது வண்டி.
‘பகடு நடந்த கூழ் (2) என்பதிலிருந்து காளை மாடு உழவுக்குப் பயன்பட்டதை அறியலாம். இதே பாடலில் சகடம் என்னும் குறிப்பைக் கொண்டு வண்டி பயன்பாட்டினையும், உழவுக்கு மாடுகள் பயன்பட்டதைப் போலவே வண்டியிழுக்கவும் பயன்பட்டிருப்பதையும் குறிப்பாக அறிந்து கொள்ளலாம்.
‘கருநரைமேற் சூடேபோல் தோன்றும்‘ 186 மாட்டிற்குச் சூடு போடுதல் நோய்தீர்க்கும் வைத்தியம் (மாட்டுக்கு வைத்தியம் பார்க்கும் செய்திகளை உள்ளடக்கிய நூல் மாட்டு வாகடம் எனப்படும். இவற்றில் பல்வேறு வடிவத்தில் போடப்படும் சூடுகளைக் காணலாம்.). மாட்டின் நோய் தீர்க்கவோ அடையாளத்திற்கோ சூடு போட்டு மாடுகளைப் பராமரித்ததற்கு ஆவணமே இக்குறிப்பு.
காளையை வெட்டுதல்
மேற்சொன்ன 186 ஆம் பாடலில் கருநரையைக் கொன்றன்ன இன்னா செயினும் (எருதைக் கொன்றால் கூட) என்றிருக்கிறது. இது கொண்டு எருது (நரை) வெட்டப்பட்டுள்ளதை அறிய முடியும்.
எருதின் மீது போடப்பட்ட சூடு வெளியில் தெரிவதுபோல் சான்றோர்களின் சிறிய தீச்செயலும் வெளிப்படையாகத் தெரியும் என்பதால் பிறர் நன்மை கருதிகூட (சான்றோரிடம் காணப்படும் தீயசெயலும் நன்மை பொருட்டானதே. சூடு மாட்டுக்கு நோய் தீர்ப்பதற்கானது. மாட்டைத் துயர்படுத்தினும் அது நன்மைக்கே. நன்மைக்கே ஆனாலும் மாட்டைத் துயர்படுத்துவதால் அது பழி.) யார்க்கும் துன்பம் தரமால் வாழ்வதே பெருமை என்பது இப்பாவின் பொருள்.
கருநரையைக் கொன்றன்ன – இது தொத்தல் மாடுகளைக் கொன்று கறி தோல் முதலானவை பெறும் மாடு வெட்டும் குறிப்பே.
நிரைகவர்தல்
‘பழிப்பில் நிரையாமா சேர்க்கும் நெடுங்குன்ற நாட‘ 319 (கழகப் பதிப்பு *) பழிப்பில் நிரை சேர்க்கும் என்பதிலிருந்து குற்றமில்லாத பயன் மிக்க மாடுகளைப் பெருக்கிய செய்தி கிடைக்கிறது. பழிப்பில் என்று கூறப்படுவதிலிருந்து அது பெருமைக்குரிய ஒன்றாகக் கருதப்பட்டிருப்பதும் தெரிய வருகிறது.
கரந்தை வீரர்களிடம் வெற்றி பெற்று பழிப்பின்றி நிரையை சேர்க்கும் மலை நாடன் என்று அக்காலப் போர்முறையைப் பொருத்திப் பொருள்கொண்டு பார்த்தால் இது நிரைகவர்தலாகிய வெட்சி.
(* பழிப்பில் நிறையாமா சேக்கும் நெடுங்குன்ற நாட 319 இவ்வாறு நாலடியார் உரைவளத்தில் மூலப்பாடல் குறிப்பிடப்பட்டுள்ளது. உரையில் நிரை என்றே எழுதப்பட்டுள்ளதால் நிறை என்பது அச்சுப் பிழை. ஆனால் மற்றப் பதிப்புகளில் இல்லாததுபோல் சேர்க்கும் என்றில்லாமல் சேக்கும் என்று உள்ளது. (சேக்குதல் – தங்குதல்) சேக்கும் என்பதற்கு தங்கும் என்பது பொருள். தருமர் மற்றும் பதுமனார் உரைகளிலும் சேக்கும் என்ற சொல்லே எடுத்தாளப்பட்டுள்ளது. உரைவளம் அடிப்படையில் குற்றமில்லாத பயன்மிக்க ஆநிரை தங்கியிருக்கும் மலை என்று மலைவளம் கூறப்படுகிறது. பிற பதிப்புகளில் எல்லாம் பழிப்பில் நிரையாமா சேர்க்கும் நெடுங்குன்ற நாட என்றே உள்ளதால் இங்கு உரைவளத்தின் மூலப்பாடல் தவிர்க்கப்பட்டு கழகப் பதிப்பின் மூலப்பாடலே வேதகிரி முதலியாரின் பதிப்பில் ஒப்புநோக்கப்பட்டு எடுத்தாளப்பட்டுள்ளது.)
துணைநூற்பட்டியல்
- முத்துரத்ன முதலியார் எஸ், வித்துவான் கந்தசாமி பிள்ளை எம்.ஆர், ப.ஆ 1990. நாலடியார் உரைவளம் முதல் பாகம். தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு.
- முத்துரத்ன முதலியார் எஸ், வித்துவான் கந்தசாமி பிள்ளை எம்.ஆர், ப.ஆ 1990. நாலடியார் உரைவளம் இரண்டாம் பாகம். தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு.
- இளவழகனார் உரை, திசம்பர் 2007, நாலடியார், கழக வெளியீடு.
- புலவர் குழு, கழகத் தமிழகராதி,, 2005, தி.தெ.சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்.
- நா.கதிரைவேற்பிள்ளையின் தமிழ் மொழி அகராதி, கெளமாரீஸ்வரி ப.ஆ, 4 ஆம் பதிப்பு 2009, எஸ், சாரதா பதிப்பகம், சென்னை.
- Naaladiyar pdf Book Download, GOOGLE வேதகிரி முதலியாரின் பதவுரையும் கருத்துரையும்.
- tamildigitallibrary.in_admin_assets_book_TVA_BOK_0011431_மாட்டு_வாகடம், 1960, நெல்லையப்பப் பிள்ளை.
- பொ.முத்துவேல்