vayal tamilமக்களின் வாழ்க்கைநிலை மேம்பட்டு விளங்குவதற்குத் தொழில்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. சங்க காலச் சமுதாய மக்களை அவர்களின் தொழில் அடிப்படையில் உழவர்கள், கைத்தொழில் செய்வோர், வேட்டுவர், இடையர், மீனவர், வணிகர், அரசியல் பணி செய்பவர் என்று பகுத்துப் பார்க்க முடிகிறது.

நானிலங்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்பச் சங்க கால மக்கள் தொழில்களைச் செய்துள்ளனர். இதற்கு நில அமைப்பும் அவர்கள் வாழ்வியற் சூழலும் அடிப்படைகளாக இருந்துள்ளன.

வேளாண்மைத் தொழில், நெசவுத் தொழில், இரும்புத் தொழில், அணிகலத் தொழில், ஓவியத் தொழில், இசைக் கருவிகள் செய்தல் போன்றவை குறித்துச் சங்க இலக்கியக் குறிஞ்சித்திணைப் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன. வேளாண்மைத் தொழில் பற்றிய குறிப்புகள் பலவகையில் பதிவாகியிருக்கின்றன. அவற்றுள் பயிர்ப் பாதுகாப்பு முறைகள் குறித்த பதிவுகள் மிகவும் கவனம் பெற்றுத் திகழ்கின்றன.

வேளாண் தொழில்

மனித வாழ்விற்கு அடிப்படையானது உணவு. பழங்கால மனிதர்கள் காட்டில் கிடைக்கும் பழங்கள், பயறுகள் போன்றவற்றை உண்டு வாழ்ந்துள்ளனர். மக்கள் தொகை பெருகப் பெருக உணவின் தேவையும் பெருகியது. உணவுக்காக நிலங்களைப் பயன்படுத்திப் பயிர் செய்துள்ளனர்.

மனிதன் தோன்றியபோதே வேளாண்மையும் தோன்றியது எனலாம். உணவுப்பொருளின் இன்றியமையாமையை உணர்ந்த மக்கள் வேளாண்மைத் தொழிலை மேற்கொண்டனர். எனவே வேளாண்மைத் தொழில் தலைமைத் தொழிலாக, உயிர்த்தொழிலாகப் போற்றப்பட்டது. அ.மு. பரமசிவானந்தம் அவர்கள் வேளாண்மை என்பதற்கு இவ்வாறு விளக்கம் அளிக்கிறார்

“வேளாண்மையைக் குறிக்க ‘Agriculture’என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. Agriculture என்பது இலத்தீன் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு வந்ததாகும்.

‘Ager’ என்றால் வயல் (Field),‘Culture’ என்றால் பண்படுத்தல் (cultivate) எனப் பொருள் கொள்கின்றனர். இவற்றைப் பெருத்த நோக்கினால் நிலத்தை நல்ல வகையில், மற்றவர்களுக்கு வேண்டிய உணவு முதலியவற்றைக் கொடுக்கும் வகையில், நல்ல பயிர்விளையும் வகையில் பண்படுத்துதல் ‘Agriculture’ ஆகின்றது (சமுதாயமும் பண்பாடும், ப. 219).

வேளாண்மை என்ற சொல்லுக்குக் கொடை, உபகாரம், பயிர் செய்யுந்தொழில், சத்தியம் எனவரும் பொருளைத் தமிழ்ப் பேரகராதி குறிப்பிடுகின்றன.

தமிழர் சமுதாயம் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையையுடையதாக இருந்திருக்கிறது. சங்க கால மக்கள் நிலங்களை நான்கு வகையாகப் பிரித்து, அந்தந்த நிலங்களுக்கேற்ற தொழில்களைச் செய்து வந்துள்ளனர்.

இன்றைக்கு இருப்பதுபோலவே பண்டைத் தமிழ்ச் சமுதாயத்தின் பெரும்பகுதி மக்கள் வேளாண்மையையே தங்கள் வாழ்க்கையின் உயிர்நாடியாகக் கொண்டிருந்தனர்.

விளைநிலங்களை உருவாக்குதல்

வேளாண்மைத் தொழிலுக்கு நிலமும், நீரும் இன்றியமையாதவையாகும். மலைப் பகுதியில் வாழ்ந்த குறிஞ்சி நில மக்கள் வேளாண்மைத் தொழிலுக்கு ஏற்றவாறு நிலத்தை வெட்டிச் சீர்செய்து, பயிர் செய்துள்ளனர். மேலும் மலைப் பகுதியிலுள்ள காடுகளை அழித்தும், மரங்களை வெட்டியும் விளைநிலங்களை உருவாக்கியுள்ளனர்.

விளைநிலங்களுக்காக வெட்டப்பட்ட மரங்களைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். மரங்களை வெட்டிச் சுட்டெரித்துச் சீர்திருத்தப்பட்ட புனம் ‘சுடுபுனம்’ என்றழைக்கப்பட்டது. மரங்களை எரித்ததால் மண் நன்கு சுடப்பட்டு பயிர்கள் நன்றாக வளர உதவுகின்றது.

மரங்களை எரித்ததனால் கிடைக்கக்கூடிய சாம்பல் உரமாகவும் பயன்பட்டிருக்கிறது. தீயினால் காட்டினைத் திருத்தி எரிக்கப்பட்ட கொல்லை ‘எரிதின் கொல்லை’ என்றழைக்கப்பட்டது. குறவர்கள் காடுகளிலுள்ள அகில், சந்தனம் போன்ற மரங்களை வெட்டியழித்து விளைநிலத்தை உருவாக்கிய செய்தி காணப்படுகின்றது.

“சுடுபுன மருங்கிற் கலித்த வேனற்படுகிளி கடியுங் கொடிச்சிகைக் குளிரே” (குறுந். 291; 1-2)
“நறையகில் வயங்கிய நளிபுன நறும்புகை” (குறுந். 339; 1)
“எரிதின் கொல்லை யிறைஞ்சிய ஏனல்” (அகம். 288; 5)

வேளாண்மைத் தொழிலுக்காகப் பயன்படுத்தப்பட்ட நிலப்பகுதிகள் அதனியல்பு கருதி வெவ்வேறு பெயர்களில் வழங்கப்பட்டதைச் சங்கப் பாடல்களின் மூலம் அறியமுடிகின்றது. குறிஞ்சி நிலத்துப் புன்செய் நிலம் ‘துடவை’ என்றும், பழமையான விளைநிலம் ‘முதைபுனம்’ என்றும், மரங்களை வெட்டியெரித்து உருவாக்கிய நிலம் ‘சுடுபுனம்’ என்றும் வழங்கப்பட்டுள்ளன.

காடுகளை அழித்து விளைநிலமாக்கப்படும் புதிய நிலம் ‘இதை’ என்று வழங்கப்பட்டுள்ளது. ‘புனம்’ என்பது மலைச்சார்பான கொல்லையாகும்.

“புனவன் துடவைப் பொன்போல் சிறுதினை” (குறுந்.105; 1)
“முதைபுனங் கொன்ற ஆர்கலி உழவர்” (குறுந்.155; 1)

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய இந்நானிலங்களும் வன்புலம், மென்புலம் என்ற இரு பிரிவில் அடங்குகின்றன. மண்வளமும், நீர்வளமும் குறைந்த பகுதியாகிய குறிஞ்சியும், முல்லையும் வன்புலத்திலும் மண்வளமும், நீர்வளமும் நிறைந்த பகுதியாகிய மருதமும், நெய்தலும் மென்புலத்திலும் அடங்குகின்றன.

தினை, வரகு முதலிய புன்செய் பயிர் விளையும் நிலங்களைப் ‘புன்புலம்’ என்றழைத்தனர். இதை ஒரு ஐங்குறுநூற்றுப் பாடல் இவ்வாறு சுட்டுகிறது:

புன்புலம் வித்திய புனவர் புணர்த்த” (ஐங். 246; 3)

நீர் ஆதாரங்கள்

பயிர்த்தொழிலுக்கு நிலத்தை அடுத்து மிகவும் இன்றியமையாதது நீர்வளமாகும். ஒரு நாட்டின் வளமும் நலமும் அந்நாட்டின் நீர்வளத்தைக் கொண்டு அமைகின்றன. மனிதனுக்குத் தேவையான உணவுப் பொருட்களை உருவாக்குவதற்கும், மனிதனின் உடல் நலத்திற்கும் நீர் இன்றியமையாததாகின்றது.

நீரில்லையேல் இவ்வுலகம் இல்லை என்று கபிலர் குறிப்பிடுகின்றார். பண்டைக் காலந்தொட்டே வேளாண்மைக்கு நீர் வளம் தேவை என்பதை மக்கள் அறிந்திருந்தனர். நீர்நிலைகளை அமைத்துக் கொடுப்பது அரசனின் கடமையாகக் கருதப்பட்டது.

திணை அடிப்படையில் வாழ்ந்த சங்க கால மக்கள், அந்தந்த நிலத்திற்கும் இயற்கையாக அமைந்த நீர்நிலைகளையும் செயற்கையாக அமைத்துக்கொண்ட நீர்நிலைகளையும் அன்றாட வாழ்க்கைக்கும், வேளாண்மைக்கும் பயன்படுத்திக் கொண்டனர்.

குறிஞ்சி நிலத்தில் இயற்கையாக அமைந்த நீர்நிலைகளாக அருவியும், சுனையும் காணப்படுகின்றன. அருவி நீரும், சுனை நீரும் வேளாண்மைத் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்டன.

“மைபடு சிலம்பின் ஐவனம் வித்தி
அருவியின் விளைக்கும்” (குறுந். 371; 1-2)
“அகல்வாய்ப் பைஞ்சுனைப் பயிர்கால் யாப்ப” (நற். 5; 2)

மழை நீர் இயற்கையாகக் கிடைக்கக்கூடிய செல்வமாகும். உழவுத் தொழிலுக்கு ஏற்றவாறு பெய்யும் மழை ‘தொழில் மழை’ என்று அழைத்தனர். குறிஞ்சி நில மக்கள் பருவமழை பெய்யாத காலங்களில் மழைநீரைக் குளங்களில் சேமித்து வைத்துப் பயன்படுத்தியுள்ளனர்.

நீர் சேமித்து வைத்துள்ள குளங்களின் கரைகள் உடையாமல் பாதுகாக்கக் காவல் பணி மேற்கொள்ளப்பட்டிருந்ததைக் குறிஞ்சித்திணைப் பாடல்களின் மூலம் அறியமுடிகிறது.

“தொழின்மழை பொழிந்த பானாட் கங்குல்
எறிதிரைத் திவலை தூஉஞ் சிறுகோட்டுப்
பெருங்குளங் காவலன் போல” (அகம். 252; 11-13)
“அன்னாய் வாழிவேண் டன்னை யுவக்காண்
மாரிக் குன்றத்துக் காப்பா ளன்னன்” (ஐங். 206; 1-2)

பழந்தமிழர்கள் நீர்நிலைகளை அமைக்கும் இடங்களைத் தேர்ந்தெடுப்பதில் சிறந்து விளங்கியுள்ளனர். பள்ளமான பகுதிகளையும், அறைகளையும் பொறைகளையும் இடையிடையே கரையாக அமையுமாறு பிறைவடிவில் குளங்களை அமைத்துள்ளனர். குளங்களுள் சிறுகுளம், பெருங்குளம் என இரண்டு வகை காணப்படுகின்றது.

இவற்றுள் சிறுகுளத்து நீர் குடிப்பதற்கும், பெருங்குளத்து நீர் பயிர்த்தொழிலுக்கும் பயன்படுத்தப்பட்டதைக் கீழ்வரும் புறநானூற்றுப் பாடலடிகளால் அறிந்துகொள்ள முடிகின்றது.

“அறையும் பொறையும் மணந்த தலைய
எண்ணாள் திங்கள் அனைய கொடுங்கரைத்
தெண்ணீர் சிறுகுளம்” (புறம். 118; 1-3)

பெய்த மழைநீரைக் கொண்டு பயிர்செய்ததோடு மட்டுமல்லாமல், எஞ்சிய நீரைத் தேக்கி வைத்து மழை பெய்யாக் காலத்தில் பயன்படுத்தியதையும் அறியமுடிகிறது.

உழவும் வாழ்வும்

‘அகல உழுதலின் ஆழ உழுதல் நன்று’ என்பது பழமொழியாகும். எருதுகளைக் கொண்டு பல ஏர்களால் நிலத்தை உழுத செய்தி குறிஞ்சித்திணைப் பாடல்களில் காணப்படுகின்றது. அவ்வாறு உழுத நிலத்தில் பயறுகளை விதைத்துள்ளனர். நிலத்தை உழுவதற்கு எருதுகளை மட்டுமின்றி எருமைகளையும் சங்க காலத்தில் பயன்படுத்தியுள்ளனர்.

“முதைபடு பசுங்காட் டரிற்பவர் மயக்கிப்
பகடுபல பூண்ட வுழவுறு செஞ்செய்
இடுமுறை நிரம்பி ஆகுவினைக் கலித்து” (அகம். 262; 1-3)
“பெருநெல் பல்கூட்டு எருமை உழவ” (நற். 60; 2)

களைகளைப் போக்கவும், ஈரம் தாங்கவும், பயிர்கள் நன்றாக வேர்விட்டுப் படரவும், கீழ்மண் மேலும், மேல்மண் கீழும் புரளவும் ஆழ உழும் முறையே உழவர்களால் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. வேளாண்மையில் உழுதல், உரமிடுதல், களைநீக்குதல், நீர் பாய்ச்சுதல், பயிர்ப்பாதுகாப்பு ஆகியவை இன்றியமையாதவையாகும்.

சங்க காலத்தில் விதைப்பயிறுகளை விதைக்க ‘வட்டி’ என்ற சிறுபெட்டியைப் பயன்படுத்தியுள்ளனர். இதைக் ‘கடகப்பெட்டி’ என்றும் வழங்கியுள்ளனர். ஓலை அல்லது மூங்கில்களைக் கொண்டு ‘வட்டி’ செய்யப்பட்டுள்ளதைக் கீழ்க்காணும் அறியமுடிகின்றது.

“முதைப்புனங் கொன்ற ஆர்கலி உழவர்
விதைக்குறு வட்டி போதொடு பொதுள” (குறுந். 155; 1-2)

பயிரிடுதல்

குறிஞ்சி நில மக்கள் ஐவன நெல், தினை, பருத்தி, அவரை, உழுந்து போன்ற பயிர்களைப் பயிரிட்டுள்ளனர். ஐவன நெல் மலைப்பகுதிகளில் விளையும் நெல்லாகும். இதை ‘மலைநெல்’ என்றும் வழங்குவர். மலைப்பகுதியிலுள்ள காடுகளைத் தீயிட்டுக் கொளுத்திச் சீர்செய்த நிலங்களில் அருவி நீரைக்கொண்டு ஐவன நெல்லை விதைத்துள்ளனர்.

“அருவிப் பரப்பின் ஐவனம் வித்தி” (குறுந். 100; 1)
“துறுகல் அடுக்கத்து வில்லோர் மாற்றி
ஐவனங் கவருங் குன்ற நாடன்” (ஐங். 267; 2-3)

வேளாண்மைத் தொழில் செய்து வந்த மக்கள் எந்தெந்தக் காலங்களில், எந்தெந்தத் தாவரங்கள் காய்க்கும் என்பதை அறிந்திருந்தனர். பருவ காலத்திற்கு ஏற்றவாறு பயிர்களைப் பயிரிட்டுள்ளனர். உழுந்து பனிப்பருவத்தில் காய்க்கும், அவரை பனிப்பருவத்தில் மலரும் போன்ற செய்திகள் குறுந்தொகைப் பாட்டொன்றில் இடம்பெற்றுள்ளன.

“பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகாற்
கொழுங்கொடி அவரை பூக்கும்
அரும்பனி அற்சிரம் வாரா தோரே” (குறுந். 82; 4-6)

ஊடுபயிர் முறை

“ஒரு பயிரின் வரிசைகளுக்கிடையில் மற்றொரு பயிரைச் சாகுபடி செய்தல் ‘ஊடுபயிரிடுதல்’ எனப்படும். ஊடுபயிர் முறையில் முதன்மைப் பயிரின் (Main Crop) எண்ணிக்கை எவ்வகையிலும் பாதிக்கப்படக்கூடாது. பயிரின் இடைவெளியைத் தக்க மாற்றம் செய்து ஊடுபயிரான (Inter crop) வேறொரு பயிரை அவ்விடைவெளியில் பயிரிட வேண்டும்.

ஊடுபயிரின் வயது முதன்மைப் பயிரின் வயதைவிடக் குறைவாக இருத்தல் வேண்டும். சில சமயங்களில் ஊடுபயிரின் வயது முதன்மைப் பயிரின் வயதைவிடக் கூடுதலாக இருப்பதும் உண்டு.” இவ்வாறு அறிவியல் களஞ்சியம் குறிப்பிடுகின்றது.

குறிஞ்சி நில மக்கள் தினைப் பயிர்களுக்கிடையே அவரையையும், பருத்தியையும் ஊடுபயிராக விதைத்திருந்த செய்தி காணப்படுகிறது. தினை கொய்த தாளில் அவரை படர்ந்து காய்த்திருக்கின்றது. இதிலிருந்து ஒரு பயிருக்கிடையே மற்றொரு பயிரைப் பயிரிடும் ‘ஊடுபயிர்’ முறையைச் சங்க காலத்திலேயே தமிழர்கள் அறிந்திருந்ததைக் காணமுடிகிறது.

“சிறுதினை கொய்த விருவி வெண்காற்
காய்த்த வவரைப் படுகிளி கடியும்” (ஐங். 286; 1-2)
“பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகாற்
கொழுங்கொடி யவரை பூக்கும்” (குறுந். 82; 4-5)
“வரை வெள்ளருவி மாலையின் இழிதர
கூலம் எல்லாம் புலம்புக நாளும்” (நற். 93; 2-3)

நற்றிணையின் முதல் பதிப்பாசிரியராகிய பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் மலைப்பகுதியில் வாழ்ந்த குறவர்கள் நெல், புல், வரகு, சாமை, தினை, இறங்கு, தோரை, இராகி, எள், கொள், பயறு, உழுந்து, அவரை, துவரை, கடலை, மொச்சை, சோளம், கம்பு ஆகிய பதினெட்டு வகைக் கூலங்களை விளைவித்ததாக உரை எழுதியிருப்பது கவனத்திற்குரியது.

எருவிடுதல்

சங்க காலத்தில் கால்நடைகளின் கழிவுகளையும், இலை தழைகளையும் உரமாகப் பயன்படுத்தியுள்ளனர். நிலத்தின் வளத்திற்கும், பயிர்களின் வளத்திற்கும் எருவிடுதல் இன்றியமையாததாகும். தொழு உரமிடுவதும், தழையுரமிடுவதும் இன்றும் வழக்கிலுள்ளன.

அறிவியல் வளர்ச்சியால் செயற்கை உரங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. பயிருக்குத் தேவைப்படும் சத்துக்களை தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து இவற்றில் எது தேவையோ அதை மட்டும் இடும் முறையும், இலை வழியாக உரமிடும் முறையும் (Foliar application) அறிவியல் வளர்ச்சியால் விளைந்தவையாகும். மீண்டும் தொழு உரங்கள் (farm yard manure), பசுந்தாள் உரங்கள் (green - manure), உயிர் உரங்கள் (Bio-fertilizer) ஆகிய இயற்கை உரங்களைப் பயிருக்கு இடும் சூழல் தற்காலங்களில் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

“முதைபடு பசுங்காட் டரிற்பவர் மயக்கிப்
பகடுபல பூண்ட வுழவுறு செஞ்செய்
இடுமுறை நிரம்பி ஆகுவினைக் கலித்து” (அகம். 262; 1-3)
“ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு” (குறள். 1038)

குறிஞ்சி நில மக்கள் பழமையான நிலங்களில் மழை பெய்து நன்கு வளர்ந்துள்ள கொடிகள் மண்ணில் மறையும்படி உழுத செய்தி காணப்படுகின்றது. கொடிகள் தழையுரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

நிலத்தை உழுவதற்கு முன்னர் எரு இட்டுள்ளனர். உழுவதைக் காட்டிலும் உரமிடுதல் சிறந்தது என்று திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

பயிர்ப் பாதுகாப்பு

மலையும் மலை சார்ந்த பகுதியில் விளைந்த பயிர்களைப் பறவைகளிடமிருந்தும், விலங்குகளிடமிருந்தும் பாதுகாப்பது பெரும் பணியாக இருந்துள்ளது.

குறிஞ்சிக் குறவர்கள் யானை, பன்றி போன்ற விலங்குகளை விரட்டித் தினைப்புனக் காவல் மேற்கொண்டிருந்தனர். குறிஞ்சி நிலக் கொடிச்சியர் இசைக்கருவிகளை இசைத்து கிளிகளை விரட்டியுள்ளனர்.

கிளிகடிதல்

குறிஞ்சி நிலத்திற்குரிய ஒழுக்கம் புணர்தலும் புணர்தல் நிமித்தமுமாகும். தலைவியின் பெற்றோர் தலைவியைத் தோழியுடன் கிளிகளை விரட்டத் தினைப்புனத்திற்கு அனுப்புகின்றனர்.

தினைப்புனக் காவலில் உள்ள தலைவி தலைவனைச் சந்திக்கின்றாள். இத்தகைய சூழலையுடைய குறிஞ்சித்திணைப் பாடல்களில் பயிர்ப்பாதுகாப்பு குறித்த செய்திகள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.

“வேங்கைஅம் கவட்டிடைச் சாந்தின் செய்த
களிற்றுத்துப்பு அஞ்சாப் புலிஅதள் இதணத்து
சிறுதினை வியன்புனம் காப்பின்” (நற். 351; 6-8)
“நெடுவரை ஆசினிப் பணவை ஏறி” (கலி. 41; 9)

வேங்கை மரத்தின் உயர்ந்த கிளையில் கட்டிய பரணில் இருந்து கிளிகளை ஓட்டிய செய்தி காணப்படுகின்றது. சந்தன மரக்கட்டைகளைக் கொண்டு பரண் அமைத்து, அதன்மேல் புலித்தோலை விரித்துள்ளனர்.

இத்தகைய பரணின் மீதிருந்து தலைவி கிளிகளை விரட்டியதாகக் கூறப்படுகின்றது. பரணை இதணம், கழுது, பணவை என்ற பெயர்களால் வழங்கியுள்ளனர்.

கிளிகடி கருவிகள்

குறிஞ்சி நில மக்கள் தழல், தட்டை, குளிர், கணை, கிணைப்பறை, கவண் போன்ற கருவிகளைக் கொண்டு கிளிகளை ஓட்டியுள்ளனர். மேலும் தொண்டகச் சிறுபறையை இசைத்தும் கிளிகளை விரட்டித் தினைப்புனக் காவல் புரிந்துள்ளனர் என்பதைச் சங்க இலக்கியப் பாடல்களால் அறியமுடிகின்றன.

குளிர்

குளிர் என்னும் கருவி கொண்டு தினைப்புனத்தில் மேய வரும் கிளிகளை விரட்டியுள்ளனர். இக்கருவிகளைக் கொண்டு பெரும்பாலும் பெண்களே கிளிகளை விரட்டியுள்ளனர். இக்கருவி இசைக்கு ஏற்பப் போடப்படும் தாளத்தைப் போன்று ஒலிக்கக்கூடியது.

குளிர் என்பது மூங்கிலை வீணைபோல் கட்டித் தெரித்து ஓசை எழுப்பும் கருவியாகும். ஒரு சில நேரங்களில் குளிரின் ஓசையைக் கேட்டு மயங்கிய கிளிகள் தினைப்புனத்தை விட்டுப் போகாமலும் இருப்பதுண்டு என்று உ.வே.சாமிநாதையர் குறுந்தொகை உரையில் குறிப்பிடுகின்றார்.

“படுகிளி கடியும் கொடிச்சி கைக்குளிரே
இசையின் இசையா இன் பாணித்தே” குறுந். 291; 2-3)

தட்டை

தட்டை என்பதும் தட்டைப்பறை என்பதும் ஒன்றாகக் கொள்ளப்பட்டுள்ளது. மூங்கிலைக் கணுக்குக்கண் உள்ளாக நறுக்கிப் பலவாகப் பிளந்து ஓசை உண்டாக ஒன்றிலே தட்டுவது என்று நச்சினார்க்கினியர் குறிஞ்சிப்பாட்டு உரையில் குறிப்பிடுகின்றார். தட்டையின் ஒலியைத் தேரை எழுப்பும் ஒலிக்கு உவமையாகச் சங்கப்புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

“இட்டுவாய்ச் சுனைய பகுவாய்த் தேரை
தட்டைப் பறையிற் கறங்கு நாடன்” (குறுந். 193; 2-3)

தழல்

மலைச் சாரலில் உள்ள கொடிப் பிரம்பினால் பின்னிய, தழல் என்னும் கருவியைக் கையால் சுழற்றும்போது எழும் ஓசையின் வழி பறவைகளை விரட்டியுள்ளனர்.

தழல் என்ற கருவியைச் சுழற்றியும், தட்டை என்ற கருவியைப் புடைத்தும் (தட்டியும்) தினைப்புனத்தைப் பாதுகாத்துள்ளனர். குளிர், தட்டை, தழல் ஆகிய இம்மூன்று கருவிகளும் பெண்களால் மட்டும் பயன்படுத்தப்பட்ட பயிர்ப்பாதுகாப்புக் கருவிகளாகும்.

“தழலை வாங்கியும் தட்டை யோப்பியும்
அழலேர் செயலை அந்தழை அசைஇயும்
குறமகள் காக்கும் ஏனல்” (அகம். 188; 11-13)
“தழலும் தட்டையும் குளிரும் பிறவும்
கிளிகடி மரபின ஊழூழ் வாங்கி” (குறிஞ். 43-44)

கவண்

கவண் என்பது கைவிரலுள் கோத்துச் சுழற்றும் கயிற்றுக் கருவியாகும். கவணைக் கொண்டு குறிஞ்சி நில மகளிர் பறவைகளையும், கானவர்கள் விலங்குகளையும் விரட்டியுள்ளனர்.

தினைப்புனத்தில் மேய்கின்ற யானைகளை விரட்டக் கவண் கல் எறிந்துள்ளனர். கானவர்கள் நீண்ட ஆசினிப்பலா மரத்தில் கட்டப்பெற்றுள்ள பரணின்மீது ஏறிநின்று கவண் கல் எறிகின்றனர். அவ்வாறு எறியப்பட்ட கல்லானது, வேங்கைப் பூக்களைச் சிதறி, கனிந்த ஆசினிப் பலாவை உதிர்த்து, தேன் கூட்டைச் சிதைத்து, மாங்கொத்துக்களை உழக்கி, வாழை மடலைக் கிழித்துப் பலாப்பலத்தினுள் சென்று தங்குவதாகக் கூறப்படுகின்றது.

இதிலிருந்து கவண் கல் வீசுவோர் ஆற்றலையும், அக்கல் செல்லும் வேகத்தின் திறனையும் கீழ்க்காணும் கலித்தொகைப் பாடலால் அறிய முடிகின்றது.

“கடுவிசைக் கவணையில் கல் கை விடுதலின்
இறுவரை வேங்கை ஒள்வீ சிதறி
ஆசினி மென்பழம் அளிந்தவை உதிரா
தேன்செய் இறாஅல் துளைபடப் போகி” (கலி 41; 10-13)

விலங்குகடி கருவிகள்

சங்க கால மக்கள் அடார், கணை, கிணை, ஞெகிழி போன்ற கருவிகள் விலங்குகளை விரட்டுவதற்குப் பயன்படுத்தியுள்ளனர்.

ஞெகிழி

யானையை விரட்டுவதற்குக் கொள்ளிக் கட்டையைப் பயன்படுத்தியுள்ளனர். இவ்வழக்கம் இன்றும் உள்ளதைக் காணலாம். யானை முதலான விலங்குகள் நெருப்புக்கு அஞ்சும் என்பதையறிந்து கொள்ளி கொண்டு யானையை ஓட்டியுள்ளனர்.

ஞெகிழியில் பெயர்த்த நெடுநல் யானை” (குறுந். 357; 6)

கணை, கிணைப்பறை

குறிஞ்சி நில மக்கள் தினைப்புனத்தில் புகுந்த யானையை வில் கொண்டு ‘கணை’ எய்து விரட்டிய செய்தி காணப்படுகின்றது. ‘கிணை’ என்பது ஒருவகைப் பறையாகும். கிணைப்பறையால் ஒலியெழுப்பி விலங்குகளிடமிருந்து பயிர்களைக் காத்துள்ளதை அறியமுடிகிறது.

யானையை விரட்டுவதற்குக் குறிஞ்சித்திணைக்குரிய தொண்டகச் சிறுபறையையும் பயன்படுத்தியுள்ளனர்.

“ஒளிதிகழ் ஞெகிழியர் கவணையர் வில்லர்
களிறென ஆர்ப்பவர் ஏனல் காவலரே” (கலி. 52:13-14)
“சிறுதினை விளைந்த வியன்கண் இரும்புனத்
திரவரி வாரின் தொண்டகச் சிறுபறை” (குறுந். 375; 3-4)

அடார்

தினைப்புனத்தில் விளைந்த தினையை மேய வருகின்ற பன்றியைப் பிடிக்க ‘அடார்’ என்ற கருவியைப் பயன்படுத்தியுள்ளனர். ‘அடார்’ என்பது பெரிய கல்லாலான அமைப்பாகும். கருங்கல் பலகையை ஒரு பக்கமாகச் சாய்த்துக் கீழே முட்டுக்கொடுத்து உணவை உள்ளே வைத்திருப்பர்.

உணவை உண்ண வரும் விலங்கு அந்த முட்டைத் தொட்டவுடன் கல் விழுந்து அதனுள் மாட்டிக்கொள்கிறது. பன்றிகள் தினைப்புனத்திற்கு வரும் சிறிய வழிகள்தோறும் இக்கற்பொறியை வைத்திருந்ததைச் சங்க இலக்கியங்களின் வழியாக அறியமுடிகிறது.

“தினையுண் கேழல் இரியம் புனவன்
சிறுபொறி மாட்டிய பெருங்கல் அடாஅர்
ஒண்கேழ் வயப்புலி படூஉம் நாடன்” (நற். 119; 1 - 3)
“விளைபுன நிலத்திலின் கேழல் அஞ்சிப்
புழைதொறும் மாட்டிய இருங்கல் அடாஅர்” (மலை. 193-94)

தற்காலத்தில் அணில், எலி போன்ற சிறிய விலங்குகளைப் பிடிக்க வெடால் அல்லது எடால் என்ற கருவி பயன்படுத்தப்படுகின்றது. சங்க காலத்தில் பயன்படுத்திய ‘அடார்’ என்ற கருவியின் சிறிய மாற்று வடிவமாக வெடாலைக் கருதலாம்.

பொய்ப் புலி உருவம்

தினைப்பயிரை சிறிய விலங்குகள் அழிக்காமல் காக்கப் பெண்புலிபோல் உருவம் செய்து, அதற்குக் கழலைக்காயைக் கண்ணாக அமைத்து உயிருள்ள புலி போன்ற தோற்றத்துடன் நிறுத்தியுள்ளனர். இப்பெண் புலியின் பொய்த்தோற்றம் கண்டு, அப்பக்கம் ஆண்புலியின் இயக்கம் இருக்கும்.

புலிக்கு அஞ்சிய விலங்குகள் தினைப்புனத்திற்கு வருவதில்லை. இதிலிருந்து உயிர்களிடையே அச்ச உணர்வை உண்டாக்கி அவைகளிடமிருந்து பயிர்களைக் காக்கும் ஓர் உத்தியைக் கையாண்டுள்ளதை அறியமுடிகிறது.

“கல்முகை வயப்புலி கழங்கு மெய்ப்படூஉ
புன்புலம் வித்திய புனவர் புணர்த்த
மெய்ம்மை யன்ன பெண்பாற் புணர்ந்து” (ஐங். 246; 2 - 4)

‘பொய்ப்புலி’ முறையை இன்று வயல்களில் வைக்கப்படும் சோளக்கொல்லைப் பொம்மையோடு ஒப்பு நோக்கலாம்.

களையெடுத்தல்

நன்செய் நிலங்களில் விளைந்த களைகளைக் கையால் பிடுங்கியும், புன்செய் நிலத்தில் விளைந்த களைகளைத் ‘துளர்’ (களைக்கொட்டு அல்லது களைக்கொத்து) கொண்டு வெட்டியும் எடுத்த செய்தி காணப்படுகின்றது.

நன்செய் பயிரான நெற்பயிருக்கிடையே களையாக வளர்ந்துள்ள மலை மல்லிகை, மரல் ஆகியவற்றைக் கையால் பறித்ததையும், புன்செய் பயிரான தினையிடையே வளர்ந்துள்ள களைகளைத் துளர் கொண்டு வெட்டி எடுத்ததையும் கீழ்க்காணும் குறிஞ்சித்திணைப் பாடல்களில் காணமுடிகின்றது.

“அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பருவிலைக் குளவியடு பசுமரல் கட்கும்
காந்தள் வேலிச் சிறுகுடி பசிப்பிற்” (குறுந். 100; 1-3)
“கடவை மிடைந்த துடவையஞ் சிறுதினைத்
துளரெறி நுண்டுகட் களைஞர் தங்கை” (குறுந்.392; 4-5)

அறுவடை

கார்ப் பருவ மழையில் விதைக்கப் பெற்ற புன்செய் பயிர்கள் முன்பனிக் காலத்தின் தொடக்கத்தில் விளைந்து விடுகின்றன. வேங்கை மலர்கள் மலர்ந்தவுடன் தினை அறுவடை செய்யப்படுகின்றது.

வேங்கை பூப்பது தினை அறுவடைக்குரிய காலமாகக் கருதப்படுகின்றது. குறிஞ்சி நில மக்கள் இரவு நேரங்களிலும் தினை அறுவடை செய்துள்ளனர். இரவு நேர அறுவடையின்போது விலங்குகள் அணுகாமலிருக்கத் தொண்டகப் பறையடித்து விலங்குகளை விரட்டி அறுவடை செய்ததைக் குறிஞ்சித்திணைப் பாடல்களில் காணமுடிகின்றது.

“சிறுதினை விளைந்த வியன்கண் இரும்புனத்து
இரவுஅரி வாரின் தொண்டகச் சிறுபறை
பானாள் யாமத்துங் கறங்கும்” (குறுந். 375; 3-5)

கதிர்களுடன் கூடிய தினை, வரகு போன்றவைதாளுடன் அறுவடை செய்யப்பட்டன. அறுவடை செய்தவற்றைப் பாறைகளின்மேல் குவித்து வைத்து, எருது அல்லது யானையைக் கொண்டு தாம்படித்த செய்தி காணப்படுகின்றது.

மென்தினை நெடும்போர் புரிமார்
துஞ்சுகளிறு எடுப்பும் தம்பெருங்கல் நாட்டே”
(நற். 125; 11-12)
“எருதுகால் உறாஅது இளைஞர் கொன்ற
சில்வினை வரகின் புல்லென் குப்பை” (புறம். 327; 1-2)

குறைந்த அளவு விளைச்சல் எனில் இளைஞர்கள் காலால் மிதித்துத் தானியங்களைப் பிரித்ததையும் அறிய முடிகிறது.

தானியப் பாதுகாப்பு

யானை அல்லது எருதுகளைக் கொண்டு தாம்படித்துப் பிரித்தெடுத்தத் தானியங்களைப் பாறைகளின் மேலிட்டுக் குறவர்கள் நன்கு காயவைத்துள்ளனர். இவ்வாறு காய வைப்பதனால் தானியங்களிலுள்ள ஈரம் உலர்ந்து, நீண்ட நாள் கெடாமலிருக்க உதவுகின்றது. நன்செய் பயிராகிய நெல்லைக் ‘கூடு’ மற்றும் ‘நெடுங்கூட்டிலிட்டும்’, புன்செய் பயிராகிய தினை, வரகு போன்றவற்றைக் ‘குதிர்’ மற்றும் ‘தொடுகூடுகளிலிட்டும்’ சேமித்து வைத்திருந்ததைச் சங்க இலக்கியங்களின் வழியாக அறியமுடிகின்றது.

“இருங்கல் வியலறைச் செந்தினை பரப்பி” (குறுந். 335; 2)
“செவ்வி சேர்ந்த புள்ளி வெள்ளரை
விண்டுப் புரையும் புணர்நிலை நெடுங்கூட்டுப்
பிண்ட நெல்லின் தாய் மனை (நற். 26; 2-4)

குறிஞ்சி நில மக்கள் காடுகளை வெட்டியழித்து, மரங்களை எரித்து, நிலங்களைத் திருத்திப் பயிர் செய்துள்ளனர். தினைப் பயிர்களுக்கிடையே அவரையையும், பருத்தியையும் ஊடுப¬யிராக விதைத்திருந்தனர்.

பண்டைத் தமிழரிடம் ஊடுபயிர் முறை செழுமைபெற்று இருந்ததைச் சங்க இலக்கியங்களால் அறிய முடிகிறது.

நெல், புல், வரகு, சாமை, தினை, இறங்கு, தோரை, இராகி, எள், கொள், பயறு, உழுந்து, அவரை, துவரை, கடலை, மொச்சை, கம்பு, சோளம் ஆகிய பதினெட்டு வகைப் பயிறுகளை மலைப்பகுதியில் விதைத்திருந்தனர்.

வேங்கை மலர்கள் மலரும் காலமே அறுவடைக்குரிய காலமாகக் கருதப்பட்டது. குளிர், தட்டை, தழல், கவண், ஞெகிழி, கணை, கிணைப்பறை, அடார் போன்றவற்றைப் பயிர்ப்பாதுகாப்புக் கருவிகளாகச் சங்க கால மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.

அவ்வகைப் பாதுகாப்பு முறைகள் பலவும் தற்கால வேளாண் குடிகளிடம் இன்றளவும் வழக்கத்தில் இருப்பதைக் காணமுடிகிறது.

துணைநூற் பட்டியல்

1. பதிப்பாசிரியர் குழு, தமிழ்ப் பேரகராதி, சென்னைப் பல்கலைக்கழகம், 1982,
2. பரமசிவானந்தம், அ.மு., சமுதாயமும் பண்பாடும், தமிழ்க் கலைப் பதிப்பகம், சென்னை, 1972, இரண்டாம் பதிப்பு.
3. பதிப்பாசிரியர் குழு, அறிவியல் களஞ்சியம், தொகுதி 5, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1988
4. நாராயணசாமி ஐயர், நற்றிணை மூலமும் உரையும், சைவ வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1915

- முனைவர் ந.பெரியசாமி

Pin It