ஆநிரை கவர்தல், ஆநிரை மீட்டல் என்பன இனக்குழுக்களுக்கிடையிலான சமூக முரண்பாடாகத் தோன்றிப் பின்னர் அது வேந்தர்களின் உருவாக்கத்தில் போர் முறையாக வளர்ந்தது என்பது பொதுவாக அறியப்பட்டதாகும். இவ்விரண்டுச் செயற்பாட்டையும் தொல்காப்பியம் வெட்சித் திணையில் பேச புறப்பொருள் வெண்பாமாலை வெட்சி, கரந்தை என்னும் இரு திணைகளில் விரித்துப் பேசுகின்றது. வெட்சியைத் தொல்காப்பியம் குறிஞ்சிக்குப் புறனாக அமைத்துள்ளது. அவ்வாறாயின் ஆநிரை கவர்தல், மீட்டல் ஆகிய இரு செயல்பாடுகளும் குறிஞ்சி சார்ந்தவை எனக் கொள்ளத்தகும். தொல்காப்பியமும் புறப்பொருள் வெண்பாமாலையும் இனக்குழுக்களுக்கிடையிலான சமூக முரண்பாடாகத் தோன்றிய இவ்விரு செயல்பாடுகளும் வேந்தர் சமூகத்தில் வளர்ச்சிப் பெற்றது வரையிலுள்ள அனைத்து அசைவியக்கங்களையும் தொகுத்து வகைதொகை செய்து நிரல்படுத்தித் தந்துள்ளன. ஆநிரைச் சண்டையின் நிகழ்வுகள் நடுகல்லோடு முடிவுறுவதைத் தொல்காப்பியம் சுட்டுவதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்விலக்கண நூல்களைப் பார்க்கும்போது வெட்சியின் துறைகள் அனைத்தும் வேந்தர் சமூகத்தின் தொடர் நிகழ்வு போன்ற தோற்றத்தைத் தருகின்றது. ஆனால் புறநாநூற்றப் பாடல்கள் வழி ஆநிரை கவர்தல், மீட்டல் ஆகிய அசைவியக்கங்களை நுட்பமாகக் கவனிக்கும் போது ஒரு சமூக அமைப்பின் சிதைவையும் மற்றொரு சமூக அமைப்பின் வளர்ச்சியையும் அவை அடையாளப்படுத்துவதாகத் தென்படுகின்றது.

aanirai kavarthal‘வெட்சிதானே குறிஞ்சியது புறனே’ எனத் தொடங்கித் தொல்காப்பியம் கரந்தையையும் உள்ளடக்கி 37 துறைகளுடன் வெட்சியை விளக்குகின்றது. ஆநிரை கவர்தலும் ஆநிரை மீட்டலும் என்பது வெட்சியின் மையச் செயல்பாடுகளாகும். போரின் தொடக்க நிலையாக வெட்சி அமைவதாக உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். போரில் பசுக்கூட்டங்கள் அழிந்துபடாமலிருக்க அவற்றைக் களவில் கொண்டுவருதல். அவ்வாறு கொண்டுவரும் போது அக்களவைத் தடுத்துப் பசுக்களை மீட்டல் என்பதும் வெட்சியின்பாற்படும். பன்னிரு படலத்தை அடியொற்றி எழுந்த புறப்பொருள் வெண்பாமாலை புறத்திணைக்கு 12 திணைகள் அமைத்து விரிவுபடுத்தியுள்ளது. வெட்சியை வெட்சி, கரந்தை என இரண்டாகப் பிரித்து ஆநிரை கவர்தல், ஆநிரை மீட்டல் ஆகிய இரண்டையும் தனித்தனி போர் நிகழ்வுகளாகக் காட்டியுள்ளது. வெட்சிப்படலம் இருபது துறைகளையும் கரந்தைப்படலம் பதின்நான்கு துறைகளையும் கொண்டவையாக அமைக்கப்பட்டுள்ளது. வெட்சியைப் புறப்பொருள் வெண்பாமாலை மன்னுறுதொழில், தன்னுறு தொழில் என இரண்டாகப் பிரித்துக் காண்கிறது. ஆநிரை கவர்தல் என்னும் தொழில் மன்னனின் ஏவல் காரணமாகவும் ஏவல் இன்றியும் நிகழலாம் என்பதால் அது இரண்டாகப் பகுக்கப்பட்டுள்ளது.

குறிஞ்சியில் களவொழுக்கம் உரிப்பொருளாக அமைகின்றது. ஆநிரை கவர்தல் என்பதும் களவு சார்ந்தது. எனவே வெட்சியும் குறிஞ்சியும் இயைபுடையது. ஆதலின் வெட்சியின் புறனாகக் குறிஞ்சிக் காட்டப்பட்டுள்ளது என உரையாசிரியர்கள் விளக்கம் தருகின்றனர். இந்த ஒர் இயைபின் காரணமாகத்தான் வெட்சிக்குக் குறிஞ்சி புறனாகக் காட்டப்பட்டதா? என்பது விவாதத்திற்குரியது. அவ்வாறாயின் வெட்சித்திணை சார்ந்த நிகழ்வுகளைக் குறிஞ்சி நிலம் சார்ந்த புறவாழ்வியல் மரபுகளாகக் கொள்ளலாமா? அவ்வாறு கொண்டால் குறிஞ்சி நிலம் சார்ந்த, குறிப்பாகச் சங்க இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் முறைகள் ஒத்துப் போகுமா என்பது ஐயத்திற்குரியது. வெட்சித் திணையின் மையமானச் செயல்பாடு ஆநிரை கவர்தல் ஆகும். ஏனெனில் ஏனைய நிகழ்வுகள் அனைத்தும் ஆநிரை கவர்தலின் காரணமாக ஏற்படும் தொடர் நிகழ்வுகளாகும்.

முல்லைநிலம் குறித்து கா.சிவத்தம்பி குறிப்பிடும் கருத்து இங்குக் கவனிக்கத்தக்கது. “காடுகளை அழித்து உருவாக்கப்பட்ட குடியேற்றப்பகுதியாகவே முல்லை குறிப்பிடப்படுகின்றது. நற்றிணை 59ஆவது பாடல் அதனைக் காட்டுநாடு என்றே குறிப்பிடுகின்றது. இவ்வகைக் குடியேற்றங்களின் தோற்றுவாயை இது ஒருவேளை குறிக்கலாம்.

முல்லைப் பொருளாதாரத்தைக் குறித்த நம்முடைய முதற் கருத்துப்பதிவு, அது கால்நடை மேய்ச்சலை முற்றிலுமாகச் சார்ந்து இருக்கவில்லை என்பதுதான். தமிழ்நாட்டின் பூகோள அமைப்பு அப்பகுதி மக்களை நாடோடிகளாக்கும் இயல்புகளைக் கொண்டிருக்கவில்லை. ஆகவே, அத்தகைய பகுதியில் வேட்டையாடுவோர் நிலையிலிருந்து நிலைத்த குடியிருப்புடைய குடியானவன் நிலைக்கு மாறிட நீண்ட காலம் பிடித்திருக்காது” ( 2003:164).

முல்லை நிலம் காடுகளை அழித்து உருவாக்கப்பட்ட குடியேற்றப் பகுதி என்பதும் அங்குக் கால்நடை மேய்ப்பும் வேளாண்மையும் இணையானப் பொருளாதரார நடவடிக்கையாக இருந்தது என்பதும் சிவத்தம்பியின் கருத்து.

மேய்ச்சல்காரர்களே உழவர்களாகவும் இருந்தனர் என்று மேலும் அவர் குறிப்பிடுகின்றார். “முல்லைநில மக்கள் வாழ்க்கையில் கால்நடை வளர்ப்பு முக்கியமான இடம் வகித்தபோதிலும் வேளாண்மை மெல்ல விரிவடைந்தது. முல்லைப் பொருளாதாரத்தில் முகிழ்ந்த இப்பாடல்களில் வேளாண்மை மேய்ச்சலோடு சேர்ந்தே பேசப்படுகின்றது.

முல்லையில் குறிப்பிடப்படும் வேளாண்மை, வெட்டி எறிந்து பின் பயிரிடும் வேளாண்மையேயாயினும் சில குறிப்புகள் மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் பயிரிடப்பட்டமையைச் சுட்டுகின்றன. நற்றிணை 121 ஆவது பாடலில் வரும் விதையர் மற்றும் முதையல் என்ற சொற்கள் மேய்ச்சல்காரர்களே உழவர்களாக விளங்கினார்கள் என்பதையும் அவர்கள் முன்னரே பயிரிடப்பட்ட நிலங்களில் பயிரிட்டனர் என்பதையும் தெரிவிக்கின்றன. தோட்;ட உழவினைக் காக்கும் மேய்ச்சல்காரர் கொல்லை கோவலர் என்ற குறிப்பு நற்றிணை 266 மற்றும் 289 ஆகிய பாடல்களில் காணப்படுகின்றது. அது (மேய்ச்சல்காரர்), ஆயர்கள் வேளாண்மை செய்வோராக மாறிவருவதைக் காட்டுகின்றது. வரகுதான் மிக அதிகம் பயிரிடப்பட்ட தானியமாகத் தெரிகின்றது. நெற்சாகுபடி குறித்த எவ்விதக் குறிப்பும் நமக்குக் கிடைக்கவில்லை” (2003:165). முல்லையில் வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் இருந்தது என்பதில் ஐயத்திற்கு இடமில்லை. காட்டெரிப்பு வேளாண்மை குறிஞ்சி நிலத்தில் தொடங்கியது. அது முல்லையிலும் தொடர்ந்திருக்க வாய்ப்புண்டு. குறிஞ்சி நில வேளாண் அனுபவம் முல்லையில் மேம்பட்ட வேளாண்மையாக அமைய உதவியிருக்க வேண்டும்.

முல்லை நில வேளாண்மை குறிஞ்சி நில வேளாண்மையை விட வளர்ச்சி பெற்றதாகக் காணப்பட்டாலும் அது அந்நிலத்தின் சமூக அமைப்பை மாற்றியமைக்கும் அளவிற்கு வளர்ச்சி பெறவில்லை. இங்குக் கலப்பையின் பயன்பாடு (நற்.12:1-5), குறுந்.220:1-3, பெரும்.185-188) வழக்கில் இருந்தது. முல்லை நிலம் கற்கள் நிறைந்த குறிஞ்சி நிலம் போல் அல்லாமல் மண்வளம் மிக்கதாக இருந்ததால் கலப்பை உருவாகின்றது. கால்நடைகளின் துணைகொண்டு நிலத்தை உழவு செய்யும் முயற்சியின் விளைவே கலப்பை ஆகும். இதற்கானச் சூழலை முல்லை நிலம் வழங்கியது. கால்நடைகளை வளர்க்கும் நுட்பமான அறிவைப் பெற்ற முல்லைநில இனக்குழு மக்கள் கால்நடைகளைப் பல்வேறு பயன்பாடுகளுக்காகப் பயன்படுத்தவும் முயற்சித்தனர். குச்சிகளால் நிலத்தைக் கிளறிப் பயிரிடுவதற்குப் பதிலாகக் கலப்பையைக் கால்நடைகளின் கழுத்தில் பிணைத்து உழுது பயிரிடும் முறை முல்லை நிலத்தில் தோன்றியது. ஆனால் முல்லை நில ளோண்மையும் பெரும் சவால்களைச் சந்தித்தது.

கால்நடைகளை வளர்த்தல் என்பது முல்லை நிலத்தின் முதன்மையான உற்பத்தி முறையாக இருந்தமையால் வேளாண்மை செய்யும் இடங்களுக்கப்பால் மேய்ச்சல் நிலத்தை அவர்கள் தேடவேண்டிய நிலை இருந்தது. எனவே ஆண்கள் கால்நடைகளை மேய்ப்பதற்காக வாழிடங்களுக்கு வெளியே தங்க வேண்டியச் சூழல் அமைந்தது. ஆடுமாடுகளை மேய்ச்சலுக்காகக் காடுகளுக்கு ஓட்டிச் சென்றனர் (அகம்.354:3-4). காடுகளில் வனவிலங்குகளிடமிருந்து அவற்றைக் காப்பாற்ற வேண்டிய நிலையும் இருந்தது(அகம்.394:13-15,94:7-8). மறுபுறத்தில் ஆநிரைகளைக் கவர்ந்து செல்லும் கரந்தை வீரர்களிடமிருந்தும் கால்நடைகளைக் காப்பாற்ற வேண்டியிருந்தது. கால்நடை வளர்ப்பில் இதுவே அவர்களுக்குப் பெருஞ் சவாலாக இருந்தது. கரந்தை வீரர்களை எதிர்த்துப் போரிட வலுவான வீரர்கள் முல்லைக்குத் தேவைப்பட்டனர். அவர்களின் வீரத்தைக் கொண்டாடியது. அத்தகைய வீரர்களையே தலைவர்களாக மதித்தனர். ஆநிரையை மீட்கும் போது கொல்லப்படும் வீரர்களுக்கு நடுகல் நட்டு வழிபட்டனர் (ஞா.ஸ்டிபன் 2017:58-59).

கலப்பையின் கண்டுபிடிப்பிற்குக் கால்நடை மற்றும் வேளாண்மை குறித்த ஒருங்கிணையப்பெற்ற அறிவு கைகொடுத்துள்ளது. முல்லையில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டவர்கள் வேளாண்மையும் செய்தமையால் இந்த வாய்ப்பு எளிதாக அமையப்பெற்றது.

ஆநிரை மேய்த்தல் என்பது முல்லை நிலத்தின் இன்றியமையாதப் பொருளாதார வாழ்வு ஆகும். குறிஞ்சி நிலம் வேட்டையாடுதலும் உணவு சேகரித்தலையும் அடிப்படையாகக் கொண்டதாகும். அவ்வாறாயின் ஆநிரைகள் குறிஞ்சி நிலத்திற்குரியவை அன்று எனத் தெளியலாம். ஆநிரைக் கவர்தலில் ஈடுபட்ட வீரர்க்ள் யார் என்பதைத் தெளிவுபடுத்துவதன் மூலம் இந்த நிகழ்வு ஏன் குறிஞ்சி நிலத்தோடு தொடர்புப்படுத்தப்படுகின்றது என்பதை அறியலாம். வெட்சி, கரந்தைத் திணைகளில் அமைந்த பாடல்கள் குறைவாகவே சங்க இலக்கியங்களில் பதிவாகியுள்ளன (கரந்தை. புறம்.259, 260, 261, 263, 264, 265, 270, 286, 287, 290, 291, 298, வெட்சி புறம். 257, 258, 262, 269, 297) இப் பாடல்கள் தரும் செய்திகளைக் காணும் போது ஆநிரைக் கவர்தல், மீட்டல் ஆகியவை எந்நிலங்களில் நிகழந்தவை என்பதை வெளிப்படையாக அறிய இயலவில்லை.

குறிஞ்சி நிலம் ஆநிரை வளர்ப்புக்குரிய நிலமன்று. முல்லை நிலமே அதற்குரியது. அவ்வாறாயின் ஆநிரைக் கவர்ந்தவர்கள் யார்? அதாவது வெட்சி வீரர்கள் எந்நிலத்தைச் சார்ந்தவர்கள்? கரந்தை வீரர்கள் யார்? அவர்கள் எந்நிலத்தைச் சார்ந்தவர்கள்? வெட்சியைக் குறிஞ்சியின் புறனாகக் குறிப்பிடும் தொல்காப்பியம் ஆநிரைக் கவர்தல் என்னும் செயற்பாடு குறிஞ்சியை மையமாகக் கொண்டு நிகழும் நிகழ்வாகவே கருதியிருக்க வேண்டும். வெட்சியாரின் செயல்பாட்டிற்கான எதிர்வினையே கரந்தையாரின் செயல்பாடு. பொதுவாக வெட்சி, கரந்தை பற்றிப் பேசும் தமிழ் ஆய்வாளர்கள் இதனைக் குறிஞ்சி முல்லைக்கிடையிலான மோதலாகவே பார்த்துள்ளனர். முல்லை கால்நடைச் சமூகமாக இருப்பதால் பொதுப்புத்தி இவ்வாறு பொருள்கொள்ளும் வாய்ப்பைத் தருகின்றது. முல்லை நிலத்தார் குறிஞ்சியில் ஆநிரைகளை மேய்க்கச் செல்லும் போது ஆகோள் பூசல் நிகழ்ந்ததா? அல்லது குறிஞ்சி நிலம் சார்ந்த வெட்சியார் முல்லை நிலம் வந்து ஆகோள்களைக் கவர்ந்து சென்றனரா? என்ற தெளிவு இன்றியமையாதது. இத் தெளிவில்லாமல் வெட்சி, கரந்தை பூசல்களின் பண்பாட்டு அசைவுகளைப் புரிந்துகொள்ள இயலாது. இங்கு விவாதிக்கப்பெற்ற சிக்கல்களைச் சங்க இலக்கியப் பாடல்களின் வழி தெளிவுப்படுத்த முயல்வோம்.

 சீறூர் வீரர்கள் குறித்துப் புறநானூற்றில் மிகுதியாகப் பேசப்பெற்றுள்ளன. “இனக்குழுச் சமுதாய எச்சங்களைத் தாங்கிய அரசு எனும் அமைப்பு உருவாகாத வன்புலச் சமுதாயத் தலைவர்களான சீறூர் மன்னர்களின் இயல்பும் சீறூர்த் தலைவியின் சமுதாயத் தொடர்பும் இச்சமுதாய வழிபாட்டு முறைகளும் உணவு முறைகளும் போர் நோக்கங்களும் சமுதாய நலம் பேணுதல் என்பதை மட்டுமே மையமாகக் கொண்டிருந்தன. புலவர்களால் வரவேற்கத்தக்க பண்புடையவராய்ச் சீறூர் மன்னர்கள் இருந்துள்ளனர்” (பெ.மாதையன் 2004: 39).

புறநானூற்றில் சீறூர் வீரர்களைப் பற்றிய குறிப்புகள் கரந்தைத் திணையிலும் ( 259, 260, 261, 263, 264, 265, 270, 286, 287, 290, 291, 298) வெட்சித் திணையிலும் (257, 258, 262, 269, 297) வந்தமைகின்றன. துறைகள் மூதின் முல்லை, வல்லான் முல்லை சார்ந்தனவாக அமைந்துள்ளன. “மூதின் முல்லை, வல்லான் முல்லைப் பாடல்கள் சீறூர் மன்னர் சமுதாயம் சார்ந்தனவாகவே இருப்பதைப் போல வெட்சி, கரந்தைத் திணைப் பாடல்களும் இச்சமுதாயம் சார்ந்தனவாகவே உள்ளன. இந்த அடிப்படையில் இச்சமூகத்தைக் கால்நடைப் பொருளாதாரத்தை அடிப்படையாய்க் கொண்ட சமுதாயமம்; புன்செய் நில வேளான்மையை அடிப்படையாய்க் கொண்ட சமுதாயம் என இரண்டாய்ப் பாகுப்படுத்தலாம். இவ்விரண்டில் கால்நடைப் பொருளாதாரத்தை அடிப்படையாய்க் கொண்டு வாழ்ந்த சமுதாயத்தில் நிரை கவர்தல், நிரை மீட்டல் போர் முறைகளைக் காண முடிகின்றதே அன்றி நிலங்கவர் போர்களைக் காண இயலவில்லை. வேந்துவிடு தொழில் மேல் சென்ற வன்புலச் சமுதாயத் தலைவர்களான சீறூர் மன்னர்கள் தமக்காக நிலங்கவர் போர்களில் ஈடுபட்டமைக்குச் சான்றேதும் இல்லை" (பெ. மாதையன் 2004: 27). இதனை ராஜ்கௌதமன் கால்நடை இனக்குழுச் சமுதாயம் எனக் குறிப்பிடுகின்றார் (2009: 14-15). பெ.மாதையனும் ராஜ்கௌதமனும் ஆநிரை கவர்தலும் மீட்டலும் கால்நடை இனக்குழுக்களுக்குள் நிகழ்ந்ததாகவே கருதுகின்றனர். வெட்சியாரும் கரந்தையாரும் கால்நடை இனக்குழு என்றால் ஆநிரைக்கவர்தல் ஏன் நிகழ்கின்றது என்பது விவாததத்திற்குரியது. இவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு, அதிகாரப் போட்டி, பகைமை போன்ற ஏதேனும் காரணிகள் தொழிற்பட்டதா என்பதும் தெளிவுப்படுத்தப்பட வேண்டும்.

குறிஞ்சியிலும் முல்லையிலும் வாழ்ந்த எல்லா இனக்குழுக்களும் ஒரே மாதிரியான வளர்ச்சியைப் பெற்றவர்களாக இருக்கவில்லை. உற்பத்திமுறையில் வேறுபாடுகள் இருந்தன. கால்நடை வளர்ப்பவர்கள் வேளாண்மை செய்பவர்களைவிட வளமாக இருந்தனர். “எல்லோரும் ஏற்றுக்கொண்டுள்ளபடி, கால்நடைகளை வீட்டு வளரப்புக்குட்படுத்தியது தனிநபர் சொத்துரிமைக்குப் பெரும் உந்து சக்தியாக அமைந்தது எனலாம்.

நிலைத்த குடியிருப்பும் கால்நடை வளர்ப்புடன் கூடிய வேளாண்மையும், போதுமான உணவைக் கையிருப்பாக வைக்க வகை செய்தன. அத்தகைய பல குடியிருப்புகள் உருவாகும் போது, அவற்றுள் குறை வளர்ச்சியுள்ள குடியிருப்புகள், அவற்றுள் கூடுதலான செல்வச் செழிப்புடனிருந்த குடியிருப்புகளை நோக்கி இயல்பாகவே தம் கவனத்தைத் திருப்பின. இவ்வாறுதான் திட்டமிட்ட கவர்தலும் போர்களும் நிகழ்ந்தன" (சிவத்தம்பி 2003: 166-167). ஆநிரை கவர்தல் என்னும் செயற்பாட்டிற்கு இரு வேறு இனக்குழுக்களுக்கிடையிலான உற்பத்திமுறைகளில் இருந்த தேக்கநிலையே காரணமாக அமைந்தது என்பதை சிவத்தம்பி சுட்டிக்காட்டுகின்றார்.

இவற்றின் அடிப்படையில் முன்னர் குறித்த வினாக்களுக்குத் தெளிவு காணச் சீறூர் என்பது யாது? அது எங்கு இருந்தது என்பதைக் கண்டறிவது இன்றியமையாதது. அகநாநூற்றுப் பாடல்களிலும் சீறூர் பற்றியக் குறிப்புகள் காணக்கிடக்கின்றன. “பாலை நிலத்திற்குரியவர்களாக எயினர், வேட்டுவர், மறவர், ஆரலைக்கள்வர் குறிக்கப்படுகின்றனர். எயினர் வேட்டுவர் என்றும் குறிக்கப்படுவதுண்டு. இவர்களது வாழிடங்கள் குறும்பு, பறந்தலை, சீறூர் என அழைக்கப்பட்டன. உடன்போக்கு போகும் போது சீறூரில் தங்கிச் சென்ற குறிப்புகளும் உள்ளன (அகம்.87). எயினர் வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்டவர். வேட்டுவர் வில்லால் நிலத்தை உழுது பயிர் செய்து உண்டதாகப் புறுநாநூறு (170: 3-4) குறிப்பிடுகின்றது. மறவர் ஆநிரைக் கவர்பவர்களாகவும், ஆரலைக்கள்வர் வழிப்பறி செய்பவர்களாகவும் சொல்லப்படுகின்றனர். பாலைவழிச் செல்லும் போது சீறூர்வழிச் சென்றதாகப் பலப் பாடல்கள் குறிப்பிடுகின்றன (அகம்.9:9-10, 52:5-7, 63:1-13, 77: 4-13, 87, 104:7-13)” (ஞா.ஸ்டீபன் 2017:68). அகப்பாடல்கள் சீறூரைப் பாலை நிலம் சார்ந்ததாகக் குறிப்பிடுகின்றன. அனால் புறப்பாடல்கள் வெட்சி, கரந்தை பூசல்கள் குறிஞ்சி, முல்லை நிலங்களின் நிகழ்வாகக் குறிக்கின்றன. இதற்குப் புறம் 259 ஆவது பாடல் தெளிவானச் சான்றாக அமைகின்றது.

ஏறுடைப் பெரு நிரை பெயர்தர, பெயராது

இலை புதை பெருங்காட்டுத் தலை கரந்து இருந்த

வல் வில் மறவர் ஒடுக்கம் காணாய்;,

வெல்லல், செல்லல், சிறக்க, நின் உள்ளம்,

முருகு மெய்ப்பட்ட புலைத்தி போலத்

தாவுபு தெறிக்கும் ஆன்மேல்-

புடை இலங்கு ஒள் வாள் புனை கழலோயே (புறம்.259).

ஆநிரைகளைக் கவர்ந்து செல்லும் மறவர்கள் மீட்க வருவோரை எதிர்பார்த்துப் பெருங்காட்டில் ஒளிந்திருந்த செய்தியை இப்பாடல் பதிவு செய்துள்ளது. முல்லை நிலப் பிற்புலம் இங்குக் காட்சிப்படுத்தப்படுவதைக் காணலாம். ஆநிரைகள் முல்லை நிலத்திலிருந்தே கவரப்பட்டன என்பதை இப்பாடல் உணர்த்துகின்றது. ஆநிரைகளைக் கவரும் போது பகைவர்களுக்கு அஞ்சி காட்டில் ஒளிந்ததில்லை என்று ஒரு வெட்சி மறவனின் வீரத்தைப் புறம் 257 ஆவது பாடல் குறிப்பிடுகின்றது. இப்பாடலும் ஆநிரைக் கவரச் செல்லுமிடம் முல்லை நிலம் என்றே கருதும் வாய்ப்பைத் தருகின்றது. ஆநிரை மேய்ப்பவர்களைப் புல்லார் என இப்பாடல் குறிப்பிடுகின்றது. புல்லார் ஆநிரைகளை அழைத்துச் செல்லும் வழி அறிந்து வெட்சி வீரர் புல்லாரை வீழ்த்தி ஆநிரைகளைக் கவர்ந்து வருகின்றனர். மறவர்கள் கவர்ந்து சென்ற பசுக்களை மீட்பதற்காக கரந்தை வீரன் ஒருவன் போரிட்டு நடுகல்லானச் செய்தியைக் குறிப்பிடும் புறம் 260 ஆவது பாடல் அம்புகளால் துளைக்கப்பட்ட அவ்வீரனின் உடல் காட்டாற்றில் சாய்ந்ததாகக் குறிப்பிடுகின்றது. இக் குறிப்பும் முல்லை நிலத்தை முன்நிறுத்துவதைக் காணலாம். முல்லை நிலத்திலிருந்தே ஆநிரைகள் கவரப்பட்டன என்பதை மேற்குறித்த சான்றுகள் உணர்த்துகின்றன. ஆநிரைகளை மேய்க்கும் போதும் ஆநிரைகள் ஊரின்கண் அடைக்கப்பட்ட போதும் அவை மறவர்களால் கவரப்பட்டன. அவ்வாறாயின் கரந்தை வீரர்கள் முல்லை நிலத்தார் எனவும் வெட்சி வீரர்கள் முல்லை நிலத்திற்கு வெளியே உள்ளவர்கள் எனவும் தெளியலாம்.

வெட்சி வீரர்கள் பெரும்பாலும் மறவர்கள் என்றே குறிக்கப்படுகின்றனர். இவர்கள் குறிஞ்சியிலும் பாலையிலும் வாழ்ந்தனர் என்றும் அறிய முடிகின்றது. சங்ககாலத்தில் இனக்குழுச்சமூகம் வேட்டையாடி உணவு சேகரித்தவர்கள், வேட்டையாடி உணவு உற்பத்தி செய்தவர்கள், வேட்டையாடி ஆநிரை கவர்ந்தவர்கள் என்னும் மூன்று நிலைகளில் இருந்ததாகக் குறிப்பிடும் பக்தவத்சல பாரதி “மூன்றாம் வகையினர் வேட்டையாடியும், ஆநிரை கவர்ந்தும், வணிகச் சாத்துக்களைக் கொள்ளையிட்டும் வாழ்ந்தார்கள். இவர்கள் எயினர், மழவர், மறவர், வாள்குடி மறவர் என்றெல்லொம் இனங்காணப்பட்டனர். ஆநிரைக் கவர்தலை முழுநேரத் தொழிலாகக் கொண்டிருந்த மழவர்கள் சங்க இலக்கியத்தில் 22 இடங்களில் குறிக்கப்பட்டுள்ளனர். கடுங்கண் மழவர், வன்கண் மழவர், செங்கண் மழவர், கூர்ம்படை மழவர், கல்லா மழவர் என்றெல்லாம் கூறப்பட்டனர்” என்கிறார் ( 2014: 57-58) "இவர்கள் பாலை நில மக்களாகவே குறிக்கப்படுகின்றனர். இவர்கள் வேட்டைத் தொழிலை முதன்மையாகக் கொண்டவர்கள். மலையும், காடும்; வேட்டைக்குரிய இடங்கள் என்பதில் ஐயமில்லை. வளம் குன்றிய, பாழ்பட்ட குறிஞ்சி, முல்லை நிலப்பகுதிகளே பாலை நிலமாகும்" (ஞா.ஸ்டீபன்: 2017: 67). அவ்வாறாயின் பாலை நிலம் என்பது குறிஞ்சி, முல்லை நிலங்களோடு ஒத்துப் போகும் பண்புகளைப் பெற்ற இடம் எனக் கருதலாம். வேட்டையாடுதலை முதன்மைத் தொழிலாகக் கொண்ட எயினர், மழவர், மறவர், வேடர் அகிய இனக்குழுக்களுக்கு உணவு ஈட்டல் அடிப்படையில் குறிஞ்சி, முல்லை, பாலை ஆகிய மூன்று நிலங்களும் அவர்களது புழுங்கு வெளியாக அமைந்திருந்தது எனக் கருதமுடியும். இவர்கள் பாலையை வாழிடமாகக் கொண்டிருந்தாலும் குறிஞ்சியும் முல்லையும் அவர்களது வாழ்வாதார நிலங்களாக அமைந்திருந்தன.

சீறூரை மையமாகக் கொண்ட வீரர்களே ஆநிரைக் கவர்தலில் பெரிதும் ஈடுபட்டுள்ளனர். சீறூர் இனக்குழுச் சமூகமாக அமைந்திருந்தது. “பாதீடு என்பதே சீறூர்ச் சமூகத்தின் இன்றியமையாத அறமாகக் காணப்படுகின்றது. ஊருக்கு அரண் அமைத்ததில்லை என்ற செய்தி சீறூர்ச் சமூகம் நிலைக்குடி என்பதை உறுதி செய்கின்றது. பல பாடல்கள் சீறூரின் அமைப்பை வருணித்துள்ளன. எனவே சீறூர்ச் சமூகம் இடம் பெயர்ந்து செல்லும் குலக்குழு அமைப்புடையது அன்று என உறுதி செய்யலாம். ஆநிரைகளோடு வருகின்ற தலைவனை ஊர் மக்கள் கூடி வரவேற்றதாக புறம் 262 ஆம் பாடல் குறிப்பிடுகின்றது. அவன் வரவிற்காக ஊர் மக்கள் காத்திருந்த செய்தி புறம். 258 ஆம் பாடலில் பதிவாகியுள்ளது. ஆநிரை கவரச் சென்ற தலைவனை வாழ்த்துவதாக புறம் 254 ஆம் பாடல் அமைந்துள்ளது. இச்செய்திகளும் சீறூர்ச் சமூகத்தினர் நிலையாக ஓரிடத்தில் தங்கியிருந்தனர் என்பதை உறுதி செய்கின்றன. கால்நடை வளர்ப்பு இனக்குழுக்கள் நிலையாக ஓரிடத்தில் தங்குவதில்லை. அவர்கள் கால்நடைகளை மேய்ப்பதற்காக இடம்பெயர்வர். அல்லது மேய்ச்சல் நிலம் வைத்திருப்பர். சீறூர்ச் சமூகம் இத்தகையப் பண்புகளைப் பெற்றிருந்ததாகக் குறிப்புகள் காணப்படவில்லை. எனவே சீறூர்ச் சமூகம் என்பது கால்நடை வளர்ப்பு இனக்குழு இல்லை எனக் கருதலாம்" (ஞா.ஸ்டீபன் 2017: 70). வெட்சி வீரர்கள் அடிப்படையில் வேட்டைத் தொழிலைக் கொண்ட நிலைக் குடியினர் என்பது தெளிவு. வேட்டைத் தொழிலைக் கொண்ட இனக்குழுக்குளுக்கும் கால்நடை வளர்ப்பைத் தொழிலாகக் கொண்ட இனக்குழுக்களுக்குமிடையில் நடந்த மோதல்களே வெட்சி, கரந்தைப் பூசல்கள் என்பதை இங்கு விவாதிக்கப்பெற்ற சான்றுகளின் வழி உறுதி செய்யலாம்.

வெட்சி வீரர்கள் ஏன் ஆநிரை கவர்தலில் ஈடுபட்டனர் என்பதையும் புறப்பாடல்களின் மூலம் அறியமுடியும். “ஆநிரை கவர்தல் என்பது சீறூர் தலைவனின் சமுதாயத் தகுதியை உயர்த்தும் நோக்குடையது அன்று. அது அவனது ஊர் மக்களின் உணவுத் தேவையை நிறைவேற்றுவதற்காகச் செய்யப்படும் வீரச் செயலாகும். சீறூர் வீரர்கள் கரந்தை வீரர்களாகக் காட்டப்படுகின்றனர். எனவே தான் ஆநிரை கவரும் போது கொல்லப்படும் வீரர்கள் நடுகல்லாய் வழிபடப்பட்டனர். வெட்சி வீரர்களால் கொல்லப்பட்ட கரந்தை வீரர்கள் நடுகல்லான செய்தியைப் புறம் 260, 261, 263, 264. 265 ஆகிய பாடல்கள் பதிவு செய்துள்ளன. தலைவனின் புகழைப் புகழ்ந்து பாட வரும் பாணனிடம் நடுகல்லைக் காட்டி அவன் வீரத்தை ஊர் மக்கள் எடுத்தியம்பும் செய்தியும் இப்பாடல்களில் காணப்படுகின்றன. அத்தலைவன் இன்மையால் இரப்போரும் பாணனும் இனி வருந்தத் தக்காரே (புறம் 280) என வருந்தும் செய்தியும் உள்ளது. இங்குச் சுட்டப்பெற்ற பாடல்களின் செய்திகள் இன்றியமையாதவை. ஆநிரைக் கவர்தலின் போது கொல்லப்படும் வீரர்கள் நடுகல் அமைத்து வழிபடப்பட்டனர். அவர்கள் ஒரு குழுவின் உணவுத் தேவைக்காகப் போரிட்டு மாண்டவர்கள். அவர்கள் கவர்ந்து வந்த ஆநிரைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. எனவே அவர்கள் தலைவர்களாக மதிக்கப்பட்டனர். அவர்களது வீரம் போற்றப்பட்டது. ஆநிரைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன என்பது சமத்துவச் சமுதாயத்தின் இயல்பு என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். இதனைப்போன்றே சாத்தர்களை வருத்தி மறவர்களால் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களும் பாதீடு செய்யப்பட்டன (அகம்.88:13-17). பாதீடு செய்வது பாலை நிலத்தின் இன்றியமையாத பரிமாற்ற உறவாக அமைகின்றது. இப்பரிமாற்ற உறவே தொன்மையானதும் சமத்துவச் சமுதாயம் சார்ந்ததாகவும் உள்ளது (ஞா.ஸ்டீபன் 2017: 70-71).

சீறூர் சமூகம் சமத்துவப் பண்பைக் கொண்ட இனக்குழுவாக இருந்தது என்பதை உணரலாம். ஆநிரை கவர்தல் என்பது வேட்டையின் மூலம் உணவுத் தேவையை நிறைவு செய்ய இயலாமையின் காரணமாகத் தோன்றிய வழிமுறை எனக் கருதலாம். ஆநிரைக் கவர்தல் என்பதும் வேட்டை சார்ந்த தொழிலாகக் கருதப்பட்டிருக்க வேண்டும். சீறூர் வீரர்கள் ஆநிரை கவர்தலில் தனித்த அடையாளத்தைப் பெற்றிருந்தனர். இவர்களின் வீரமும் ஆநிரைக் கவரும் தெழில்நுட்பமும் வேந்தர்களால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. வேந்துவிடு தொழில் இதற்குத் தக்கச் சான்றாகும். புறநானூற்றில் வேந்துவிடு தொழில் குறித்தப் பல பாடல்கள் இடம்பெற்றுள்ளன (புறம்.281, 284, 287, 291, 292, 294, 296, 297, 301, 303, 304, 306, 307, 308, 314, 316, 318, 319, 320, 324). இவற்றள் பெரும்பாலானப் பாடல்கள் சீறூர் வீரர்கள் குறித்தவை என்பது குறிப்பிடத்தக்கது. வேந்தனின் போர் பொருட்டு வேந்துவிடு தொழில் சென்ற சீறூர் மன்னன் ஒருவன் பற்றிய குறிப்பு நேரடியாகவே புறம் 319 ஆவது பாடலில் பதிவாகியுள்ளது.

சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்,

வேந்துவிடு தொழிலொடு சென்றனன் வந்து, நின்

பாடினி மாலை அணிய,

வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே (புறம். 319).

சீறூர் மன்னன் நேற்று வேந்தனால் ஏவப்பட்ட தொழிலை ஏற்றுச் சென்றுள்ளான். அவன் வெற்றியுடன் திரும்பி வந்து நின் பாணிச்சிக்கு வாடாத பொன் தாமரைப் பூவினைத் தலையில் பரிசாகச் சூட்டுவான் என்று தன் இல்லம் வந்த பாணனிடம் சீறூர் மன்னனின் மனைவி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. வேந்துவிடு தொழிலில் பரிசாகப் பொன் பெற்றுவருவான் என்பது கவனத்திற்குரியது. ஆநிரை கவர்ந்து வந்த சீறூர் மன்னன் இப்போது பொன்னைப் பரிசாகப் பெற்று வருகின்றான் என்பது சீறூர் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றத்தைச் சுட்டிக்காட்டுகின்றது. சீறூர் மன்னர்கள் வேந்தர்களின் ஏவல் தொழில் செய்பவர்களாக மாறியுள்ளனர். “வேந்தர்களைப் பற்றிப் புலவர்கள் பாடும் போது வம்ப வேந்தர் என்றே குறிப்பிட்டனர். காரணம், அவர்கள் சங்காலச் சமுதாயத்தில் புதிதாக எழுச்சிப் பெற்றவர்கள். எந்தநேரமும் தொல்குடிகளை ஒடுக்க முற்பட்டவர்கள். இந்த ஒடுக்குமுறை குடிகளுக்கிடையிலான மாடுபிடி சண்டையில் தொடங்கி பின்னாளில் நாடுபிடி சண்டையாக எழுச்சி பெற்றது. எழுச்சி பெற்ற நிலையில் வேந்தர் எழுச்சி மேலோங்கி நின்றது. இந்த வேந்தர்கள் குறுநிலப்பகுதிகளில் வாழ்ந்த வேளிர்களையும் சீறூர் மன்னர்களையும் தம் கீழ் கொண்டு வந்தனர். சங்ககாலத்தில் ஓயாத போர்களும் பூசல்களும் மக்களை அல்லலுறச் செய்தன. வேறுபுலம் பெயரச் செய்தன.இத்தகைய சூழ்நிலையில் தொல்குடிப் பண்பாட்டிற்கும் வேந்தர் பண்பாட்டிற்கம் இடையில் முரண்பாடு உருவாயிற்று. வேந்தர் பண்பாட்டை ஏற்றுக்கொண்ட தொல்குடிகள் அவர்களுக்கு மாமன்மாராயினர், மைத்துனராயினர். ஏற்க மறுத்தவர்கள் துடைத்தெறியப்பெற்றனர்." (ர.பூங்குன்றன் 2018: 72-73). தொல்குடிகளின் வீரமும் அவர்களது மரபுவழி அறிவும் வேந்தர்களால் சுரண்டப்பட்டன. பாதீடு செய்த சீறூர் மன்னன் இப்போது வேந்தர்களைப் போன்று பரிசளிப்பவனாக மாறுகின்றான். நல்ல உணவையும் இறைச்சியையும் பெற்று மகிழ்ந்த இப்போது சீறூரில் பரிசு பெறுவதற்கு வருகின்றான்.

வேந்தர்களுக்குத் துணையாகப் போர்த்தொழில் செய்த சீறூர் வீரர்களுக்கு மருத நிலங்களும், சீறூர்களும் பரிசாக வழங்கப்பட்ட செய்திகளும் பதிவாகியுள்ளன. தொல்குடிகளை அடக்கவும் அவர்களது பொருளாதாரத்தை வீழ்த்தவும் வேந்தர்கள் ஆநிரை கவர்தல் என்னும் உத்தியைப் பயன்படுத்தினர். இதற்கு இத்தொழிலில் வல்லுனத்துவம் பெற்ற சீறூர் விரர்களைப் பயன்படுத்தினர். உணவுக்காக ஆநிரை கவர்ந்து பாதீடு செய்த சீறூர் வீரர்கள் இப்போது கூலிக்காக ஆநிரை கவர்பவர்களாக மாற்றம்மடைந்தனர். “சங்க காலத்தில் வளமற்ற முல்லை நிலத்தில் சீறூர் மன்னர்களும் வாழ்ந்தனர். வேந்தர் எழுச்சி சீறூர் மன்னர்களில் இரண்டு பிரிவினரை உருவாக்கியது. இரண்டாவதாகக் கூறப்பெற்ற தண்ணடை மன்னர்தாம் மகட்பாடு அஞ்சினர். சீறூர் வாழ்க்கையிலிருந்து வெகுதூரம் வந்து விட்டாலும் மறக்குடிக்குள்ளேயே பெண்கொடுப்பதும் எடுப்பதுமாகிய மரபினை மீற விரும்பவில்லை. வேந்தன் செல்வத்திலும் பலத்திலும் உயர்ந்தவனாயிருந்தாலும் தங்கள் குடிக்குரிய வரிசையில் அவன் இல்லை என்பதில் உறுதியுடன் நிற்கின்றனர். இந்த மன்னர்கள் வளமிக்க ஊர்கள் அழிவதை ஏற்றுக்கொள்ளத் தயாராகயிருந்தார்களேயொழிய தங்கள் குடிப் பெண்களை மணம்முடித்துக் கொடுக்க விரும்பவில்லை" (ர.பூங்குன்றன் 2018: 80-81). மகட் கொடை மூலமும் சீறூர் மன்னர்கள் வேந்தர்களுக்கு அடிமையாகியுள்ளனர். வேந்தர்களின் எழுச்சியும் சீறூரில் அவர்களது தலையீடும் பெருகியதும் சீறூரின் இனக்குழு பண்புகள் சிதைவடையத் தொடங்கின. பாதீடும், உணவுக்காக ஆநிரை கவர்தலும் மதிப்பிழந்து போயின. ஆநிரை கவர்தல் என்பது வலிந்து போருக்கு அழைக்கும் உத்தியாகவும் தொல்குடிகளின் பொருளாதாரத்தைச் சிதைத்து அடிமைப்படுத்தும் வழிமுறையாகவும் திசை திரும்பியது.

இனக்குழு அமைப்பு வலுவாக இருந்த காலங்களில் ஆநிரை கவர்தலும் மீட்டலும் தொழிற்பட்டாலும் எந்தவொரு இனக்குழுவும் அழிக்கப்படவில்லை. கவர்தலும் மீட்டலும் ஒர் இனக்குழுவின் பொருளாதரத்தையோ வாழ்வாதாரத்தையோ சிதைக்குமளவிற்குச் சென்றதாகச் சான்றுகள் இல்லை. அது ஒரு சமன் நிலையில் தொழிற்பட்ட சமூக அசைவியக்கமாகவே செயல்பட்டுள்ளது. ஏனெனில் எந்த ஒரு இனக்குழுவும் தங்களது உணவுத் தேவைக்காக ஆநிரைகளைக் கவர்தலை மட்டும் தொழிலாகக் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது உணவுத் தேவையின் ஒரு பகுதி மட்டுமே ஆநிரை கவர்தலின் மூலம் எதிர்கொள்ளப்பட்டது. மறவர், எயினர், மழவர், வேட்டுவர் ஆகியவர்கள் வேட்டையாடுதலை முதன்மைத் தொழிலாகக் கொண்டவர்கள். இவர்கள் ஒருபோதும் கூட்டமாகச் சென்று ஆநிரைகளைக் கவர்ந்து வந்ததாகச் செய்திகள் இல்லை. பெரும்பாலும் தனித்த வீரர்களே ஆநிரை கவர்தலில் ஈடுபட்டுள்ளனர். இனக்குழுச் சமூக அமைப்பில் இது போர் அன்று. இரண்டு இனக்குழுக்களுக்கிடையிலான, அவ்வப்போது வந்து செல்லும் மோதலே அன்றி ஒருவரை ஒருவர் அழிக்கும் நோக்குடைய போர் அல்ல. குறிஞ்சி, பாலை சார்ந்த இனக்குழுக்களுக்கும் முல்லை நில கால்நடை வளர்ப்பு இனக்குழுக்களுக்குமிடையில் உற்பத்திமுறையில் இருந்த ஏற்றத்தாழ்வே வெட்சி, கரந்தை என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவு. வேட்டைத் தொழில் குறிஞ்சியை மையமாகக் கொண்டதாலும் பாலை தனிநிலமாகக் கொள்ளப்படாததாலும் குறிஞ்சி வெட்சிக்குப் புறனாக இலக்கண நூல்கள் கட்டமைத்திருக்க வேண்டும் எனக் கருதலாம்.

துணைநின்ற நூல்கள்

  • மாதையன், பெ. 2004: சங்கால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும், சென்னை: பாவை பப்ளிகேஷன்ஸ்
  • மாதையன், பெ. 2009: தமிழ்ச் செவ்வியல் படைப்புகள்: கவிதையியல், சமுதாயவியல் நோக்கு, சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
  • பக்தவத்சல பாரதி சீ., 1990: பண்பாட்டு மானிடவியல், சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
  • பக்தவத்சல பாரதி சீ., 2014: இலக்கிய மானிடவியல், புத்தாநத்தம்: அடையாளம்
  • ராஜ்கௌதமன் 2009: ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும், சென்னை: தமிழினி.
  • சாமிநாதையர் உ.வே. (உ.ஆ.), 1956: புறநானூறு: மூலமும் உரையும், சென்னை: கபீர் அச்சகம்.
  • சிவத்தம்பி கா. 2003: பண்டைத் தமிழ்ச் சமூகம்: வரலாற்றுப் புரிதலை நோக்கி, சென்னை: மக்கள் வெளியீடு.
  • ஸ்டீபன், ஞா. 2010: தொல்காப்பியமும் இனவரைவியல் கவிதையியலும், சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
  • ஸ்டீபன், ஞா. 2017: இலக்கிய இனவரைவியல், சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
  • பூங்குன்றன் ர., 2018: “மகட்பாற் காஞ்சி ஒரு பழங்குடி மரபு”. புதிய ஆராய்ச்சி, இதழ் 09: ஜனவரி - ஜுன்

- ஞா.ஸ்டீபன்

Pin It