சங்கம் மருவிய காலத்தில் தோன்றியதாகக் கருதப்படும் இனியவை நாற்பது (இனிய நாற்பது) என்னும் நூலின் செய்திகளை, பொருளாதார சமூக வளர்ச்சிக் கண்ணோட்டத்துடன் காண்போம்.

இந்நூலுக்குள் புகுதற்குமுன், தமிழ்மக்களின் வரலாற்றை நுணுகி ஆராய்ந்தவர்களில் ஒருவரான நா.வானமாமலை அவர்கள், பன்னூல் ஆய்வுகளைக் கொண்டு பொருள் முதல் வாத நோக்கில் தெளிவாக்கியுள்ள தமிழர் வரலாற்றை முதலில் பார்ப்போம்.

‘உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி சரித்திர மாறுதல்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு பெறுகிறது. அவற்றின் வளர்ச்சியில் ஒரு கட்டத்தில் அவற்றைத் தமக்கு உடமையாகக் கொண்ட ஒரு வர்க்கமும் அவற்றைப் பயன்படுத்தி வேலை செய்யும் மற்றொரு வர்க்கமும் தோன்றுகின்றன. இவ்விரு வர்க்கங்களுக்கிடையே இயற்கையில் இருக்கும் முரண்பாடுகள் காரணமாகப் போராட்டம் நிகழ்கிறது. அப்போராட்டங்களின் விளைவாக சமூக மாறுதல்கள் தோன்றுகின்றன.’ (பக்கம் 2) (தமிழர் வரலாறும் பண்பாடும்)

‘நிலைத்த வாழ்க்கை காரணமாக உற்பத்திச் சக்திகள் வளர்ந்திருக்க வேண்டும். ஆடு மாடுகளுக்குத் தீனியும் தங்களுக்கு உணவும் பெறுவதற்கு முல்லை நில மக்களிலே ஒரு பகுதியார் ஆற்றங்கரைகளிலே குடியேறி நன்செய் பயிர்செய்ய கற்றுக் கொண்டார்கள். குளங்கள் தோண்டப்பட்டன. ஆறுகளை மறித்து அணைகள் கட்டப்பட்டன. அகன்ற நிலப்பரப்புகள் சாகுபடிக்கு வந்தன. இப்புதிய வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் சிறிதளவு உணவுக்குப் போக தானியம் மிஞ்சியது. மேலும் நீண்ட வாய்க்கால்களைத் தோண்டினார்கள் மடைகளை அமைத்தார்கள் மேலும் விளைச்சல் பெருகியது. உழவுக்கு வேண்டிய கருவிகள் செய்யவும் ஆடு மாடுகளைப் பாதுகாக்கவும் ஆடை நெய்யவும் தோலிலே ஏற்றங்களுக்கு வேண்டிய பைகள் செய்யவும் விளைந்த நெல்லைப் பாதுகாக்க கட்டடங்கள் எழுப்பவும் தனித்தனி பிரிவினர் தோன்றினர். இவ்வாறு சிக்கலான வேலைப் பிரிவினை எழுந்தது. இவற்றை மேற்பார்க்க சிறுசிறு பிரதேசங்களில் குறுநில மன்னர்கள் தோன்றினர். பெரிய ஆறுகளின் நீரை முழுதும் பரந்தளவு நிலத்தில் பாய்ச்சி விவசாயம் செய்யவும் பல பகுதியினரையும் ஒருங்கு விவசாயத் தொழிலிலே ஈடுபடுத்தவும் மத்திய ஆட்சி தேவையாயிற்று, பரந்த நிலப்பரப்பின் தலைவர்களாக இருந்தவர்கள் முடியுடை மன்னர்களானார்கள். எந்தப் பகுதியில் விளைச்சல் அதிகம் கண்டு தானியம் மிஞ்சியதோ அப்பகுதி வலிமையுடையதாயிற்று. ’ (பக்கம் 5) (தமிழர் வரலாறும் பண்பாடும்)

‘இந்தச் சமூகத்தில் தமிழ் மக்கள் உற்பத்தி சக்திகளுக்கும் தங்களுக்குமுள்ள உறவு காரணமாக இரு பிரிவாகப் பிரிந்தனர். ஒன்று நிலக்கிழார். அல்லது நிலவுடைமையாளர். மற்றொரு பிரிவினர் அவற்றில் உழைத்துப் பிழைக்கும் உழவர்கள். இச்சமூகத்தில் வர்க்கப் பிரிவினையும் முரண்பாடும் தோன்றிவிட்டன. அது எவ்வாறு தோன்றிற்று. எப்படி வளர்ச்சியுற்றது என்பது ஆராய்ச்சிக்குரிய விசயம்.’ (பக்கம் 6) (தமிழர் வரலாறும் பண்பாடும்)

மேற்கண்டவாறெல்லாம் நா. வானமாமலை அவர்கள் கூறுவதற்கேற்ற குறிப்புகள் இனியவை நாற்பதில் காணக் கிடைக்கின்றனவா?

மேலே சொல்லப்பட்டுள்ளவாறு, சிக்கலான வேலைப் பிரிவினை எழுந்தது என்னும் சூழலில் மேற்பார்வைக்கான குறுநில மன்னர்கள் தோன்றினார்கள்.

‘பண்டைத் தமிழகத்தில் நாட்டின் தலைவனாகவும் அரசியலின் தலைவனாகவும் மன்னன் ஒரு தனியிடத்தைப் பெற்றிருந்தான். தமிழகத்தில் முப்பகுதிகளான சேர சோழ பாண்டிய நாடு மூன்றும் மூன்று மன்னரின் ஆட்சியின்கீழ் இருந்து வந்தன. அம்மன்னரின் கீழ்ப் பல்வேறு குறுநில மன்னர்கள் ஆங்காங்கு அரசாண்டு வந்தனர்.’ (தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், பக்கம் 164)

என்று டாக்டர் கே.கே.பிள்ளை அவர்களும்,

‘நடுவு நிலையில் நின்று நாட்டினையாண்ட அரசன் மக்களால் இறைவனாக மதித்து வழிபடப் பெற்றான். கொடியவர்களால் துன்புறுத்தப்பட்டாரும் வறுமையால் வாட்டமுற்றாரும் ஆகிய பலரும் தம் குறைகளைச் சொல்லி நலம் பெறுதற்கு ஏற்ற முறையில் காட்சிக்கு எளியராகவும் இன்சொல்லுடையராகவும் பண்டைத் தமிழ் வேந்தர் விளங்கினர்.’ (சங்ககாலத் தமிழ் மக்கள் பக்கம் 29)

என்று க.வெள்ளைவாரணன் அவர்களும் அச்சமூகத்தில் குறுநில மன்னனுக்கிருந்த அதிகாரத்தையும் மதிப்பையும் எடுத்துரைக்கின்றனர். அதாவது, குறுநில மன்னர்களின் அரசியல் தலைமை அக்காலத்தில் வகித்த இடம் கவனங்கொள்ளத் தக்க ஒன்று

……… ..................

‘அரசனின் தலையாய கடமை அறத்தின் வழியிலே நின்று கோலோச்சுவதே என்று கொள்ளப்பட்டது.யானை குதிரை தேர் படை மறவர் என நாற்படையாலும் ஓர் அரசனின் படைமாட்சி அமைந்தாலுங்கூட அறநெறியிற் செல்லுதலே அரசின் முறைமை என்று பேணப்பட்டது’ (பக்கம்70, 71)

என சி.பாலசுப்பிரமணியன் அவர்கள் 'நெஞ்சின் நினைவுகள்' என்னும் நூலில் 'சங்ககால மன்னரும் மக்களும்' என்ற கட்டுரையில் அரசனுக்கும் அறத்துக்குமான தொடர்பை எடுத்துரைக்கிறார்.

சங்க கால வாழ்வியலின் நீட்சியான (தொடர்பறாத) சங்கம் மருவிய கால வாழ்வியலின் அறநூலான இனியவை நாற்பது பற்றிக் கூறுகையில்,

‘இனியவை நாற்பது சங்கமருவிய காலத்து இலக்கியம் என்பர். எல்லாரும் மனத்துள் கொள்ளத்தகும் சிறந்த அறிவுரைகள் இந்நூலுள் காணப்படுகின்றன’ (தமிழ் இலக்கிய வரலாறு பக்கம் 89)

- அது எல்லாருக்குமான அறிவுரைகளைக் கொண்டுள்ளது - என்பதாக எழுதிச் செல்கிறார்.. சங்க காலத்தையும் சங்கம் மருவிய காலத்தையும் துண்டு துண்டாகப் பார்த்ததால் அவருக்கு அப்படித் தோன்றியிருக்கலாம்.

ஆனால், இனியவை நாற்பதைப் படிக்கையில் அதன் அற அரசியல் ‘எல்லோருக்குமானது’ என்று அவர் சொல்வதற்கு முரண்பாடாக அமைந்திருக்கிறது.

வரலாற்றுப் பொருள்முதல்வாத நோக்கின்றி இனியவை நாற்பதைப் பொத்தாம் பொதுவாகப் படித்தால் சி.பா அவர்கள் சொல்வது போலத்தான் தோன்றும். மனித குல வரலாற்றோடு இணைத்துப் படிக்கையில், உணவைச் சேகரித்து வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் சேகரிப்பதை விடுத்து உற்பத்தி செய்யத் தொடங்கிய புராதன பொதுவுடைமைச் சமூகத்திற்குப் பின் சிறு சிறு குறுநில மன்னர்களாக மாற்றம் பெற்று தன்போன்ற மற்ற குறுநிலத் தலைவர்களிடம் நிலவுடைமை அதிகாரத்திற்குப் போட்டி போட்டுக் கொண்ட காலத்தை கண்முன் நிறுத்துவதுபோல் இருப்பதாகத் தோன்றுகிறது.

வளரும் நகரங்களின் தொடக்க காலத்திய அல்லது தன்னை அதிகாரத்தில் வலிமையாக்கிக் கொள்ள வேண்டிய நிலப்பரப்பின் தலைவன் தனக்கேற்ற வகையில் ஏற்படுத்த முயலும் சமூக அமைப்பு தொடர்பான செய்திகளாகவும் விரிகிறது.

முதலில் இந்நூல் முரண்பட்ட இரு வர்க்கங்களில் நிலவுடைமையாளரான குறுநில மன்னருக்கு அல்லது அதிகாரத்தின் அருகிருந்த மேல்தட்டைச் சார்ந்தவருக்குத்தான் கூறப்பட்டது என்பதற்கான சான்றுகளைக் காண்போம்.

'உடையான் வழக்கினிது (3)' என்னும் பாடலின் பொருள் செல்வர் கொடுக்கும் கொடையே இனிது என்பதாகும். உடையான் என்பதைக் கொண்டே எதிர்நிலையினான இல்லானையும் காண முடியும். இதே நூலில் ஓரிடத்தில் விருந்து வைக்கும் அளவிற்குச் செல்வனாயிருக்கிற {பால்படுங் கற்றாவுடையான் விருந்து (39)} மாடுகளுடையவனையும் 'பிச்சை புக்குண்பான்' பிளிறக்கூடாது (40) என்னும் வறியவனையும் வர்க்க முரண்பாட்டோடு காண முடியும்.

‘இம்முறையில் பொருளாதார வாழ்வையும் வர்க்க முரண்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு தமிழ் நாட்டு மக்களின் வரலாறு முழுதும் எழுதப்பட வேண்டும்.’

என நா. வானமாமலை அவர்கள் கூறுவதற்கேற்ப, உற்பத்தி சக்திகளைக் கொண்டு நிலவுடைமைக்காரர்கள் (வலியவர்கள்) மற்றும் உழவர்கள் (எளியவர்கள்) என இரண்டாகப் பிரிந்துள்ள குறிப்புகள் இனியவை நாற்பதில் காணக் கிடைக்கின்றன.

'ஏவது மாறா இளங்கிளமை (4)' என்பதில் ஏவுகிற இடத்தில் வலிமை மிக்க ஒருவரைக் காண முடிகிறது. அதே போல் 'ஆற்றானை ஆற்றென்று அலையாமை (29)' என்பதிலிருந்து ஆற்றாதவன் ஒருவனையும் அவனை வேலை வாங்கும் அதிகார மிக்கோனையும் 'எளியர் இவரென்று இகழ்ந்துரையாராகி (30)' என்பதிலிருந்து எளியரை இகழ்ந்துரைக்கும் இடத்தில் இருக்கிற வலியாரையும் இகழ்ச்சிக்குள்ளாகும் எளியரையும் 'அறிவார் யாரென்று அடைக்கலம் வெளவாத (31)' என்னும் குறிப்பிலிருந்து பறித்துக் கொள்கிற (வெளவும்) அதிகாரமிக்க ஒருவரையும் பறி கொடுக்கிற ஒருவரையும் காண முடிகிறது. இவ்வகையிலான வர்க்கங்களாகப் பிளவுபட்ட அமைப்பில் 'கோல்கோடிடாமல் செங்கோலனாதல் இனிது (6)' என்று வலிமை மிக்க ஒருவர்க்கே கூற முடியும்.

மேலும் 'ஊர்முனியா செய்தொழுகும் ஊக்கம் (34)' என்னும் குறிப்பும் ஊர்மக்களின் பிரதிநிதியாக இருப்பவர் மக்கள் மகிழத்தக்க செய்கையைச் செய்தாக வேண்டிய பொறுப்புடையவராய் இருப்பதைச் சுட்டுகிறது. 'பற்றமையா வேந்தர் கீழ் வாழாமை இனிது' (33) என்னும் விடுதலை உணர்ச்சியும் பற்றில்லாச் சூழலில் போரெழுந்தால் 'மாமன்னர் தானை தடுத்தல்' (34) குறித்தும் செய்திகள் கிடைக்கின்றன. மாமன்னரின் படை தடுத்தல் மாமன்னரோடு பற்றமையப் பழகுதல் என்பவை குறுநில மன்னருக்கன்றி மற்றவர்க்கு இயலாத ஒன்றே.

பேரரசு ஒன்றுமில்லாமல்போய் சிற்றரசாக மாறியதும் சிற்றரசு வலிமை மிக்க பேரரசாக மாறியதும் நாம் அறிந்தவொன்றுதான். குறுநில மன்னர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் வலிமையான அரசியல் அதிகாரத்தோடு திகழ்ந்தனர் என்பது உறுதியான செய்தி. ஆட்சி அதிகாரத்தைக் காக்க வேண்டிய பெரும் பொறுப்பும் அதற்காகப் பலரைச் சரிக்கட்டுதலும் பலரை தீர்த்துக் கட்டுதலும் அவர்களின் முதன்மையான பணிகளாக இருந்துள்ளன.

‘‘உண்மையும் மக்கள்பால் வாஞ்சையுமுடைய அரசர் இடைவிடாது செயலாற்றி வந்தனர். ஒற்றர்கள் வாயிலாக மக்கள் நிலையை அறிந்து அதற்கு ஏற்றவாறு பணியாற்றி வந்தனர். ஒற்றர்கள் மீது வேறு ஒற்றர்களையும் ஏவி உண்மையை அறிந்து வந்தனர்.’ (தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், பக்கம் 168)

என்று கே.கே.பிள்ளை, மன்னர்களின் செயல்பாடுகள் பற்றிக் கூறுவது கொண்டும், குறுநில மன்னர்களின் விழிப்பான நிலையை அறியலாம். இனியவை நாற்பதிலும் ஒரு பாடலில் ‘ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரிந்தமை’ (36) என ஒற்றர்கள் மூலம் நாட்டின் நிலையை மன்னர் அறிய வேண்டியது குறித்து பேசப்படுகிறது. ஆக, 'ஒற்றாடி முற்றும் தெரிந்து நல்லவை செய்து பல்லுயிர்க்கும் பகுத்துண்டு வெற்றிபெறும் வேந்தர்க்கு இவை இனிது (36)' என்னும் அறமொழியை வேந்தரிடமன்றோ கூறலாகும்?

……………………………………………

அடுத்ததாக அரசு வலிமையாக மாற உபரியை அதிகமாக அபகரிக்க வேண்டும். அதாவது செல்வத்தைக் குவிக்க வேண்டும். இதுகுறித்து தேவிபிரசாத் சட்டோபாத்யாயா அவர்கள் கூறுவதைக் காணலாம்.

‘நேரடி உற்பத்தியாளர்களிடமிருந்து சமூக உபரியைத் தொடக்க நிலையிலுள்ள வளரும் நகர மையங்களுக்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டியது நகரங்களை உருவாக்குவதற்கான அவசியமான முன் நிபந்தனையாகும். இது எவ்வாறு நடைபெற்றது என்பது முக்கியமான கேள்வியாகும். இதற்கு மூன்று பொருத்தமான வழிகள் மட்டுமே இருந்தன. நேரடிக் கொள்ளை பண்டமாற்று ஒப்புக்கொள்ள வைத்தல் ஆகிய வழிமுறைகளே அவை.’ (பக்கம் 36) (தத்துவத்தின் தொடக்கங்கள்)

நேரடிக் கொள்ளை என்பது அருகிருக்கும் நிலப்பரப்புகளைப் போர் மூலம் வெற்றி கொண்டு அங்கிருக்கும் செல்வத்தை அபகரிப்பது. (இதற்குப் படையைப் பராமரிக்கும் செலவு ஆகும்). பண்டமாற்று என்பது நமக்குத் தெரிந்ததே. ஒப்புக்கொள்ள வைத்தல் என்பது மக்களிடம் நம்பிக்கைகளை ஏற்படுத்தி செலவின்றி அதிகளவில் பொருள்களைக் குவிப்பது. இம்மூன்றையும் அடிப்படையாக வைத்துக் கொண்டு இனியவை நாற்பதுக்குள் நுழையலாம்.

போர் (நேரடிக் கொள்ளை) செய்து வெற்றி பெறத் தேவையான படை குறித்த செய்திகள் பல பாடல்களில் உள்ளன. யானை ஒன்றைப் படையில் காணுதலும் யானை வீட்டில் கட்டியிருத்தலும் யானை போர்க்களத்தில் மதங்கொண்டு போரிடுதலும் இனிது என்று மன்னர்க்கு உரைக்கப்படுகிறது. குறுநில மன்னராக இருப்பதால்தான் மன்னரின் வீட்டில் மற்றும் படையில் யானை இருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. இச் செய்திகள் யாவும் அறியாதாருக்கு வற்புறுத்துவது போலவே தெரிகிறது.

‘சிற்றாளுடையான்’ (39), ‘நட்டாருடையார்’ ( ‘பந்தமுடையான்’ (8) என்று கூறப் பெறுவன ஆள்பலம் மிக்கவர்களைத்தான் என்பதோடன்றி இவர்களையே படைத் தலைவராக்கிப் படைக்கலம் வழங்குதலும் வேண்டும் என்னும் குறிப்பைக் கொண்டு படைத் தலைவராய் ஆக்குபவரும் படைக்கலம் வழங்குபவரும் யாரென வினவினால் அவர் இவர்களைவிடவும் வலிமைமிக்க தலைவர் என்பது தானாய் விளங்கும்.

'ஏவது மாறா இளங்கிளைமை குற்றமின்றிக் கற்பவன் ஏருடையான் வேளாண்மை திசைதோறும் நட்பு' (4) என்பனவெல்லாம் மன்னனுக்கு அதிகாரம் நிலைக்க உதவுபவையே. அதோடன்றி ஏருடையவனிடம்தான் நிலத்தை வேளாண்மைக்கு விட வேண்டுமெனவும் மன்னர்க்கு அறிவுறுத்தத் தவறவில்லை. 'வறனுழக்கும் பைங்கூழ்க்கு வான்சோர்வு இனிது' (16) என்று பயிருக்கு மழையை (அதிகாரம் நிலைக்கச் செய்யும் என்பதால்) இனிதென்று கொண்டனர். 'காவோடு அறக்குளம் தோண்டுதலும்' (24) அந்நிலத்திற்குத் தேவையான நீருக்காகத்தான். மிகுதியாகத் தானியம் சேமிக்கப்பட வேண்டும் (18) என்பதும் பேசப்படுகிறது.

'ஊனமொன்றின்றி உயர்ந்த பொருளுடைமை' (14) என்பதும், 'சேரும் திரு தீராமல் இருத்தல்' (13) என்பதும், 'முட்டில் பெரும்பொருள் ஆக்குதல்' (20) என்பதும், 'வருவாயறிந்து வழங்கல்' (23) என்பதும், செல்வக்குவிப்பின் செய்திகளன்றோ? அதிலும் 'ஊனமொன்றின்றி உயர்ந்த பொருள்' (14) என்பதைப் 'பால்படுங் கற்றா' (39) என்பதோடு பொருத்தினால் அவ்வுயர் பொருள் கால்நடைச் செல்வமான மாடென்றும் அமையும்.

இவ்வாறு செல்வம் திரட்டுவதை,

‘அவர்கள் அரசியற்பாதுகாப்புக்காக நாட்டு மக்களிடமிருந்து பெறும் பொருள் விளைவதில் ஆறிலொன்றாகிய நிலவரியேயாகும். அதுவன்றி நாடு காவலுக்கென மக்கள் தரும் சிறு தொகை புரவு வரி என வழங்கப் பெறுவதாகும். வாணிபம் செய்பவர்பாற்பெறும் சுங்கப் பொருளும் பகைவர் தந்த திறைப்பொருளும் அரசாங்கத்திற்குரியனவாம். இப் பொருள்கள் நாட்டின் காவலுக்குரிய படைகளுக்கும் அரண் முதலிய பிற சாதனங்களுக்கும் நீர் நிலை பெருக்கல் பெருவழியமைத்தல் மன்றங்களில் நீதி வழங்கல் இளமரச் சோலை அமைத்தல் முதலிய’ (தமிழர் வாழ்வியல் 29)

எனவும்,

‘ஆறுகளை வெட்டி அவற்றின் வழியே மலைகளிற் பெய்யும் மழைநீரை ஏரி குளம் ஊருணி என்னும் நீர் நிலைகளிற் பாய்ச்சிப் பண்டைத் தமிழ்வேந்தர் நாட்டை வளப்படுத்தினர்.' (தமிழர் வாழ்வியல் 37)

எனவும் க.வெள்ளைவாரணர் கூறுகிறவற்றோடும் ஒப்புநோக்கலாகும்.

பண்டமாற்று குறித்து நேரடிச் செய்திகள் கூறப்படவில்லையெனினும் மறைந்து கிடக்கும் வாணிபக் குறிப்புகள் இல்லாமல் இல்லை. கோல் கோடுதல் என்னும் தொடருக்குத் தராசுக்கோல் என்று பொருள் கொள்வாரும் உள்ளனர். விளைச்சலுக்குப் பயன்படும் 'விதையைக் குற்றி உணவாகக் கொள்ளக்கூடாது' (41) என்பது போலவே 'கடன்வாங்கி உணவு உண்ணும் நிலையைக் காணக்கூடாது' (11) என்றும் ஓரிடத்தில் சொல்லப்படுகிறது. பிறகோரிடத்தில் 'கடன் வாங்கியாவது செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும்' (32) என்றும் சொல்லப்படுகிறது. பொருள் அழிய அழியக் கடன் வாங்கி உண்ணத்தான் கூடாது. கடன் வாங்கிச் செய்ய வேண்டியதைச் செய்யலாம் எனில் அது பொருளை வளர்க்கும் வழி எனத் தெரிகிறது. இவை வாணிபம் மூலம் செல்வம் கைமாறிய செய்திகளைத் தெரிவிக்கும் குறிப்புகள்..

கூறப்பட்டனவற்றுள் ஓர் அறமென, அந்தணர்க்கு ஆவோடு பொன்னீதல் (24) சுட்டப்படுகிறது. வலிமையான நகர நாகரிகத்திற்கு அடிகோலும்போது ஒப்புக் கொள்ள வைத்தல் என்னும் உத்தியாகத்தான் அந்தணர்பால் செல்வங் குவிக்கும் முறைக்கும் முன்னுரிமை கொடுத்துள்ளனர். தேவிபிரசாத் சட்டோபாத்யாயா அவர்களின் மொழியில் சொல்வதெனில்,

‘சமூக உபரியைக் கொண்டு வருவது என்பதற்கான சரியான பொருள் மதகுருமார்களிடமும் மத நிறுவனங்களிடமும் செல்வத்தைக் குவிப்பது என்பதாகும்.’ பக்கம் 37 ('தத்துவத்தின் தொடக்கங்கள்' தேவிபிரசாத் சட்டோபாத்யாயா)

செல்வம் குவிப்பதுதான் நோக்கமெனில் வறியோர்க்கு ஈதல், காக்கும் படை வைத்திருத்தல் தேவைப்படுவோர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்தல் இவையெல்லாம் ஏன்? புராதன பொதுவுடைமைச் சமூக சமத்துவ நிலை தகர்ந்த சூழலில் மன்னனிடம் போகும் செல்வம் முறையாகத்தான் பயன்படுத்தப்படுகிறது என்னும் தோற்றத்தை மக்கள் ஏற்க வேண்டும். அவர்களின் ஒப்புதலோடுதான் தன்னை மையமாகக் கொண்ட சமூக அமைப்புமுறையை ஏற்படுத்த இயலும். அதோடின்றி போலச்செய்தலால் மன்னரோடு தொடர்புடையாரும் பிறரும் ஆவோடு பொன்னீந்து செல்வக் குவிப்பிற்கு மிகுதியும் பங்களிப்பார்கள் என்பதும் ஒரு நோக்கம்.

'மிக்காரைச் சேர்தல் (17), மானமுடையார் மதிப்பு (5), சலவரைச் சாரா விடுதல் (21), புலவர்தம் வாய்மொழி போற்றல் (21), நிறையின் மாந்தரைப் புல்லா விடுதல் (26), கயவரைக் கைக் கழிதல் (30), பொருளல்லார் கேண்மை கொள்ளா விடுதல் (35), மாணா மயரிகளைச் சேராமல் ஒழிதல்' என்பதோடு 'தந்தையே மாற்றுக் கருத்துரைத்தால் கூட அவரையும் ஒரு பொருட்டாகக் கொள்ளாமல் விடுதல்' (8) என்பது மன்னர்க்கே உரியவை என்பதை அறியலாம். இதனை க. வெள்ளைவாரணன் அவர்கள்,

‘தம் மனம்போனபடி முறை பிறழ்ந்து நடக்கும் சிற்றினத்தாரைத் தம் ஆட்சிக் குழுவினின்றும் விலக்கினர். நம் நாட்டிற்கெனப் போர்க்களத்தில் உயிர் வழங்குமியல்பினராகிய படை வீரர்களை வறுமையகற்றித் தம்மைப்போலப் பரிசிலர்க்கு வழங்கும் வண்மையுடையவராகப் பெரும்பொருள் தந்து ஆதரித்தனர்.அதனால் அவ்வீரர்கள் போர் என்று கேட்பின் பகைவர் நாடுகள் எவ்வளவு தூரமாயிருந்தாலும் விரைந்து சென்று போரில் வெற்றி தந்தார்கள்.’ (தமிழர் வாழ்வியல் பக்கம் 31) என உரைக்கிறார்.

மேற்சொன்னவை அனைத்தும் - வேண்டியவர்க்கு வேண்டியவற்றைச் செய்தலும் பகைவரை அழித்தலும் தானியம் மிகுதியாகக் கொள்வதும் உண்மையானவர்களைத் துணையாகக் கொள்வதும் - வலிமையான சிற்றரசாக இருக்க வேண்டியதற்கான அடிப்படைகளே என்பதை நமக்கு உணர்த்துவன..

‘முன்னாளில் ஓர் அரசன் பிறனோர் அரசனொடு பொருது அவனை வென்றால் அவன் நாட்டிலுள்ள மகளிரைச் சிறைபிடித்து வருதலுண்டென்பதும் அங்ஙனம் பிடித்து வரினும் அவரைக் கற்பழித்து மானஞ்சிதைத்து வருத்தாமல் பாதுகாத்துக் கோயில்களிற் கடவுளைத் தொழுதுகொண்டு அங்குக் கடவுட்டிருப்பணி செய்யும்படி இருத்துவர் என்பதும் அறியப்படுகின்றன’ (பட்டினப்பாலை ஆராய்ச்சி) (18)

மறைமலையடிகளார் கூறுவதையே இப்பனுவலின்கண், பிறன்மனை பின்னோக்காப் பீடினிது(16) என்று வருகிற குறிப்பு உணர்த்துவதாகவும் தெரிகிறது.

'நிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் (11)' என்றும், 'மனமாண்பிலாதவரை அஞ்சி அகறல் (11)' என்றும், 'தடமென் பணைத்தோள் தளிரியலாரை விடமென்றுணர்தல் (38)' என்றும் வருகிற குறிப்புகள் - (‘பெண்கள் போர்ப் பாசறைகளில் தம் கணவருடன் தங்கக் கூடாதென்றும் ஒரு மரபு இருந்து வந்தது’ (தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் பக்கம் 138) என இருப்பதால் பெண்கள் தொடர்பான செய்திகள் போர்க்களத்துச் செய்திகளாகவும் இருக்கலாம். போர்ப் பாசறையில் பெண்கள் பணியாற்றிய குறிப்புகளும் சில இலக்கியங்களில் வரத்தான் செய்கின்றன. இவை ஆய்விற்குரியன..) – உரைகளின்படி செல்வம் அழிக்கும் விலைமகளிர் தொடர்பானவை எனவும் தெரிகிறது.

இவற்றோடு சூதாடிகளை விட்டு விலகிவிட வேண்டும் (24) என்றும் கூறப்படுகிறது. இவையாவும் செல்வத்தைக் காக்க வேண்டிய நிலையிலான வலியவரை எச்சரிக்கும் குறிப்புகளே.

……………………

சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்ததென அனைவரும் ஒப்புக்கொண்ட ஒரு நூலிற்கு மிகவும் முந்தியதான மனித குல வரலாற்றின் புராதன பொதுவுடைமைச் சமூகத்துச் செய்திகளை இவ்வாறு காலத் துல்லியம் இல்லாமல் பொருத்துவது சரியா?

அந்தமான் செண்டினல் தீவில் வாழும் பழங்குடியினரின் வாழ்வியலை எடுத்துக் கொள்வோம். இப்போதும் அவர்களுடையது இனக்குழுச் சமுதாயம்தான் .அதுபோல பேரரசிடம் சிக்காத ஒரு இனக்குழு பல நூற்றாண்டுகள் தொடர்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்பதும் நம்மால் மறுக்க முடியாத உண்மை. மனிதகுல வரலாறு என்பது தமிழ் மக்களுக்கு மட்டுமில்லை. எல்லோருக்கும் பொது.

‘சோழப் பேரரசு காலத்தில் ஓங்கி வளர்ந்த ஊராட்சிக்கு வழிகோலியாயிருந்தது சங்க கால வழக்கமேயாகும்.’ (தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் பக்கம் 168)

என்று கே.கே.பிள்ளை கூறுவதை நோக்கினால் ஒரு உண்மை புரியும். என்னவெனில், 8 ஆம் நூற்றாண்டிற்கு அடிப்படை பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த வழக்கம் என அவர் கூறுவதைக் கொஞ்சம் நீட்டுவோம். சங்க காலம் மற்றும் சங்கம் மருவிய காலத்திய மன்னர் தலைவர் மன்றம் நிர்வாகம் என்பதான அமைப்பிற்கும் ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி இருக்கிறது. ஏனெனில் மாற்றங்கள் திடீரென்று நிகழ்ந்து விடுவதில்லை. மனித சமூகத்தின் மாற்றங்கள் யாவும் படிப்படியாகப் பல நூற்றாண்டுகளாக ஏற்பட்டவை.

முன்னதான இனக்குழுச் சமூகத்தில் உபரி மதிப்பின் விளைவாகப் பின்பற்றப்பட்ட இனக்குழுத் தலைவர் முறையே பல நூற்றாண்டுகளாகப் பின் வந்தவைக்கு வழிகோலியிருக்கிறது எனக் கொள்ளுதலும் பொருத்தமேயாகும்.

இன்னொரு விதத்தில் காண்போம். பேரரசுகள் உடைகிற போதெல்லாமும்கூட வலிமையிழந்து கிடந்த பல்வேறு குறுநில மன்னர்கள் வலிமை பெற முனைவார்கள். அப்போதைய சூழலும் கூட இவ்வாறுதான் அமையும். அங்குள்ள தலைவன் வலிமை பெறுவதற்காகத் தன்னைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து தன் மாற்றார்களை அழிக்க முனைவான். புதுமுயற்சியில் இறங்கும் அத்தகையோருக்கும் இவ்வித அறங்கள் ஏற்புடையனவே எனவும் கருதலாம்.

 ‘ஒரு கருத்தை ஒரு வார்த்தையுடன் இணைக்கும் வழக்கம் அல்லது கருத்தை சுமந்து செல்லும் வாகனமாக வார்த்தையை உருவாக்குவது சமூகம் என்றழைக்கப்படும் தனித்த குழுவைச் சார்ந்ததாகும்’ (பக்கம் 24)

என்று தேவிபிரசாத் சட்டோபாத்யாயா கூறுவதுபோல், ஒரு காலகட்டத்தைச் சேர்ந்த இலக்கிய நூலின் சொற்கள் அக்காலச் சமூகம் அதற்குள் ஏற்றியிருக்கிற பொருளையும் நுணுகிக் காண வேண்டியதாய் சுமந்தபடியேதான் இருக்கின்றன. ஆகவேதான் தமிழ்ச் சமூக வரலாற்றைப் பொருளாதாரத்தை அடிப்படையாய்க் கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டியதும் மிக முக்கியமானதாய் இருக்கிறது.

‘இவ்வரலாற்றைத் தனியொருவர் எழுதுவது இயலாது. நூற்றுக்கணக்கான வரலாற்று வல்லுநர்கள் தமிழறிஞர்கள் மார்க்ஸியவாதிகளின் கூட்டு முயற்சியால் இவ்வரலாறு உருவாக வேண்டும். முதன்முதலில் பல கருத்து வேற்றுமைகள் தோன்றுவது இயற்கையே. பல கருத்து மோதல்களின் விளைவாக உண்மை வெளிப்படும். பண்டைத் தமிழர் சரித்திரத்தை ஆரம்பம் முதல் மத்திய காலம் வரைக்கும் ஆராய்ந்து எழுதுவதற்கு பரவலான சான்றுகள் இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் கிடைக்கின்றன. அவற்றை சேகரித்து சமூக வளர்ச்சி தொழில் கண்ணோட்டத்தில் ஒரு வரலாறு உருவாக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட தமிழர் வரலாறு நமக்கு அவசியம் தேவை. ’ (பக்கம் 9)

என நா.வானமாமலை. அவர்கள் சொல்லுவதற்கிணங்க, உண்மை வரலாறு வெளிப்படக் கூடிய சில மோதல்களுக்காகவாவது, இவ்வகையான ஆய்வுகள் இன்றியமையாதன என்பதையும் முடிக்குந்தறுவாயில் சுட்டியே ஆக வேண்டும்.

குறிப்பு:

அடைப்புக்குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ள எண்கள் இனியவை நாற்பதின் பாடல்களைக் குறிப்பவை. கடவுள் வாழ்த்தை முதலாவதாகக் கொண்டு கடைசிப் பாடல் நாற்பத்தொன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ள கழகப் பதிப்பில் உள்ளவாறு இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

துணைநூற்பட்டியல்

1. இனியவை நாற்பது (நானாற்பது), பதிணெண்கீழ்கணக்கு, மகாதேவ முதலியார் விருத்தியுரை 2007 கழக வெளியீடு
2. பூதஞ்சேந்தனார் இயற்றிய இனிது நாற்பது, 1928, உரை கோவிந்தராஜ முதலியார் கா.ர., மதராஸ் ரிப்பன் அச்சியந்திர சாலை www.tamilvu.org
3. வானமாமலை நா, தமிழர் வரலாறும் பண்பாடும் 6ஆம் பதிப்பு 2007 நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை. www.tamildigitallibrary.in
4. பாலசுப்பிரமணியன் சி. டாக்டர், 27 ஆம் பதிப்பு 1998, தமிழ் இலக்கிய வரலாறு மணமலர் பதிப்பகம், (பாரி நிலையம்) சென்னை. www.tamilvu.org
5. பாலசுப்பிரமணியன் சி.டாக்டர், 1980, நெஞ்சின் நினைவுகள், நறுமலர்ப் பதிப்பகம்(பாரிநிலையம்) சென்னை. www.tamilvu.org
6. தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, தத்துவத்தின் தொடக்கங்கள் (இரா.சிசுபாலன்) பிப்ரவரி 2019 பாரதி புத்தகாலயம் சென்னை.
7. மறைமலை அடிகளார், பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை, www.tamilvu.org
8. க.வெள்ளைவாரணன் க, சங்ககாலத் தமிழ்மக்கள் 2 ஆம் பதிப்பு 1950 நேஷனல் பப்ளிஷிங் கம்பெனி சென்னை. 29)
9. கே.கே.பிள்ளை, 2002, தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
10. புலவர் குழு, கழகத் தமிழகராதி,, 2005, தி.தெ.சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,
11. நா.கதிரைவேற்பிள்ளையின் தமிழ் மொழி அகராதி, கெளமாரீஸ்வரி ப.ஆ, 4 ஆம் பதிப்பு 2009, எஸ், சாரதா பதிப்பகம், சென்னை.

- பொ.முத்துவேல்

Pin It