கீற்றில் தேட...

இந்தக் கவிதை(?) எழுத்துக்களை வாசிப்பவர்கள் மனம் புண்பட்டால் என்னை மன்னித்து அருள்வீராக.

“குறிமடக்கி அமரும் புத்தனின் வழிகளில் படர்கிறது யோனியின் ரேகை”, "ஆகச் சிறந்த புணர்ச்சியை நிறைவேற்ற வேண்டுமாயின் -----தான் புணர வேண்டும் அவளுக்குத்தான் ஆயிரம் கைகள்" - 'காமத்துப்பால்' என்ற புத்தகத்தில் 'தூய மார்க்சிய கவிஞரும், அறிஞருமான' வசுமித்ர என்பவர் எழுதியது.

ambedkar 241இவர் தான் "புத்தரின் ஆண்……. அம்பேத்கர் அறிவைத் தேடுகிறார்” என இழிவுபடுத்தி (அடே கிறுக்கன்களா இது விமர்சனம் அல்ல, விஷம்) வன்மத்தைக் கொட்டினார். அதற்கு எதிராக தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர் சாமுவேல்ராஜ் இந்த நபரின் மீது வன்கொடுமை தண்டனைச் சட்டத்தின் கீழ் புகார் கொடுத்திருக்கிறார். இந்தச் சூழ்நிலையை தம் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள, தம் இருப்பை வெளிக்காட்டிக் கொள்ள, முகநூலில் சில பேர் 'கம்யூனிஸ்ட்கள் x தலித்துகள்' என்று இழுத்துச் சென்று அதன் வழியாக அம்பேத்கரை சமூக மாற்றத்திற்கு எதிரானவராகச் சித்தரித்து வன்மத்தை தீர்த்துக் கொள்கிறார்கள்.

"நாடு பாசிச இருளில் சிக்கித் தவிக்கும் வேளையில் இவர்களைக் கடந்து செல்லுங்கள். 'புக் மார்க்கெட் டெக்னிக்' இது" என்று தான் நான் முகநூலில் எழுதினேன். ஆனால் சில 'இடதுசாரி இளம்பருவக் கோளாறுக்காரர்கள்' முரட்டு முட்டு கொடுத்ததோடு, "தோழர் சாமுவேல்ராஜ் புகார் தந்தது தவறு" என்றது அச்சத்தையும், ஆச்சரியத்தையும் அளிக்கவே, அவர்களுடன் முகநூல் விவாதம் நடத்தி, அவர்களின் உள்மனம் மறுத்தாலும் 'கண்டிக்கிறோம்' என்ற சடங்கு வார்த்தைகளை வர வைத்தோம்.

தோழர் சாமுவேல்ராஜ் புகார் கொடுத்த பின், 'தம் வார்த்தைகளை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்' என வசுமித்ர (வருத்தமோ, மன்னிப்போ அல்ல) தெரிவித்து இருந்தாலே இப்பிரச்சினை அத்துடன் முடிந்திருக்கும். ஆனால் அதை அவர்கள் செய்யவும் இல்லை. மாறாக, அவரது மனைவி கொற்றவை 'அவன் போனால் பிரச்சினையாகும். நான் போய் செருப்பால் அடித்து வருகிறேன்' என்ற கதையாக, விலாவரியாக விலாசம், எழுத்துப் பிழை எல்லாம் சொல்லி, 'என் பெயரையும் சேர்த்து புகார் கொடு, என்ன வந்தாலும் சந்திக்கிறோம்' எனக் கொக்கரிக்கிறார்.

கொற்றவையுடன் நட்பு வளையத்தில் உள்ள 'இளம்பருவக் கோளாறு' தோழர்கள் இச்செயலைக் கடிந்தும், கண்டித்தும் சொல்ல வேண்டாம், முணுமுணுப்பு கூட செய்யவில்லை. இச்சூழ்நிலையை தங்களையும், தங்கள் புத்தக வியாபாரத்தையும் பெருக்கிக் கொள்ள இலாவகமாக "விமர்சனத்திற்கு வழக்கா?" எனக் கூப்பாடு போட்டு கூட்டம் திரட்டுகின்றனர்.

"தோழர் சாமுவேல்ராஜ் அம்பேத்கரை விமர்சித்ததை எதிர்க்கவில்லை, புத்தகத்தைத் தடை செய்யக் கோரவில்லை, ஏன் விமர்சித்தீர்கள் என்று வினா தொடுக்கவில்லை. மாறாக, அம்பேத்கரை இழிவுபடுத்தியதற்காகவே இந்த வழக்கு" என்று உரைத்தபோது உங்கள் இரும்புக் காதுகளுக்கு ஏறவே இல்லை.

வசுமித்ர வகையறா அம்பேத்கரை இழிவுபடுத்தும் வேலையை கடந்த 4 ஆண்டுகளாக செய்து வந்தனர். அதன் உச்சம்தான் 'குறி'யில் வந்து நிற்கிறது. 'வசுமித்ர- கொற்றவையுடன்' இணக்கம் காட்டும் 'இடதுசாரி இளம்பருவக் கோளாறு' தோழர்கள் சாதாரண எதிர் வினையாற்றிருந்தால் கூட அவர்களுக்கு இவ்வளவு தைரியம் வந்திருக்காது. இவர்களும் வசுமித்ர வகையறா கருத்துக்கு ஆட்பட்டவர்கள் என்பது இவர்களின் கள்ள மெளனம் மூலம் அப்பட்டமாகவே தெரிகிறது.

ஜெய்பீம் - லால்கலாம் முழக்கமும், எதிரிகளின் குலை நடுக்கமும்

நவீன இந்தியாவின் தொடக்கத்தில் 1925-களில் கம்யூனிஸ்ட் கட்சியும், RSS-ம் துவக்கப்பட்டது தாங்கள் அறிந்ததே. கம்யூனிஸ்ட் கட்சியினர் பல பிரிவாய்ப் பிளந்தும், பிரிந்தும், பின் (1) பாராளுமன்றப் பாதை, (2) ஆயுதப் போராட்ட பாதை, (3) பிரச்சார-எழுச்சி புரட்சிக் கட்டங்கள் என 3 பாதைகளாகப் பிரிந்து செயல்பட்டனர். பாராளுமன்றப் பாதையைத் தெரிவு செய்த CPIM, CPI, CPIML இவற்றில் CPM மட்டுமே 3 மாநில ஆட்சி அதிகாரத்தில் இருந்து, இன்று கேரளாவில் மட்டும் என சுருங்கி விட்டது. அனைத்து இடதுசாரிகளும் சேர்ந்து 67 எம்.பி.-க்கள் வரை பாராளுமன்றத்தில் இருந்தனர். தற்பொழுது வெறும் 4 எம்.பிக்களாக சுருங்கிப் போய் விட்டனர். மாநிலங்களில் ஓரிரு எம்.எல்.ஏக்கள் உடன் தேங்கி நிற்கிறது. இடதுசாரிகளுக்கு உலகம் முழுவதும் பின்னடைவுதான் நிலவுகிறது.

ஆயுதப் போராட்ட பாதை கம்யூனிஸ்ட்டுகள் படிப்படியாக வளர்ந்து 200 மாவட்டங்களில் செல்வாக்கு பெற்று அரசின் கொடும் ஒடுக்கு முறையால் சில பகுதிகளில் என்றளவில் சுருங்கி விட்டனர். பிரச்சாரம், எழுச்சி, புரட்சி என்ற 'கட்ட' வழியைத் தேர்வு செய்த கம்யூனிஸ்ட்டுகள்கூட செல்வாக்கு பெற்று விடவும் இல்லை.

அம்பேத்கர் ஏறக்குறைய 1930களில் தொடங்கி 1956 வரை தம் பேராற்றலைச் செலுத்தி இயன்றளவு நிலம், இட ஒதுக்கீடு, சட்ட பாதுகாப்பு, இந்துத்துவாவிற்கு எதிரான பெளத்த மத மாற்றம், தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றை முதலளித்துவ வரம்பை உச்ச அளவில் பயன்படுத்தி அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதி செய்து முடித்தார். அவரது வழித்தோன்றல்களான கன்சிராம், மாயாவதி, பி.எஸ்.பி கட்சி உத்திரப் பிரதேசத்தில் 3 முறை ஆட்சி செய்தது. பல மாநிலங்களில் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மாநில அளவில் தேர்வாகியுள்ளனர். ஆயினும் சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு என்ற கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியவில்லை.

ஆனால் 1925-ல் தொடங்கப்பட்ட RSS இயக்கம் மெல்ல வளர்ந்து ராணுவம், நிதித்துறை, RSS துணை ராணுவப்படை ஆகியனவற்றை நான்கு புறமும் வளைத்து இரும்புச் சுவர் போன்ற திறந்தவெளி சிறையில் நம்மை வைத்துள்ளனர். நீங்கள் நம்ப மறுத்தாலும் நெஞ்சை சுடும் உண்மை இதுதான்.

கம்யூனிஸ்ட்டுகள் தேர்தல் பாதை - ஆயுதப் பாதை - பிரச்சாரப் பாதை ஆகிய மூன்று வழிகளிலும் மோசமான பின்னடைவையே சந்தித்துள்ளனர். அம்பேத்கரின் சட்ட ரீதியான பாதுகாப்பு ஒரு சில தலித்துகளுக்கு நன்மை அளித்திருந்தாலும் வெகுமக்கள் நிலையில் மாற்றமில்லை.

அம்பேத்கரிஸ்ட்கள், மார்க்சிஸிட்கள் தற்சமயம் மீள முடியாத பின்னடைவைச் சந்தித்து வருகிறார்கள். பாசிச மோடியின் பேருருவத்தின் முன்னால், முதலாளித்துவக் கட்சிகளில் அவரை எதிர் கொள்ளும் திறன் படைத்த தேசியத் தலைவர்களே இல்லை. மாநிலக் கட்சிகளில் 24-ம் புலிகேசி வடிவேலைப் போல் சரண்டர் பார்ட்டிகள்தான் அதிகம். இந்த வரலாற்றுப் பின்புலத்தில் தான் குஜராத் ஊனா எழுச்சிக்குப் பின்பு தோழர்கள் கன்னையாகுமார், ஜிக்னேஷ் மேவானி, பிற இடதுசாரித் தலைவர்கள் இணைந்து தலைநகர் டெல்லி வீதிகளில் ஜெய்பீம்-லால்சலாம் என முழங்கி அணி திரளும் போது, ஆட்சி, அதிகாரம், துணை ஆயுதக் குழுக்கள், பணபலம் இவ்வளவு இருந்தும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அஞ்சி நடுங்குகின்றனர். அதுவும் மோடியின் குஜராத் இந்துத்துவ சோதனைச் சாலையில் “செத்த மாட்டை நீயே புதைத்துக் கொள், நிலத்தை எமக்குக் கொடு” என்ற முழக்கம் கிலியை ஏற்படுத்துகிறது. குஜாரத்தில் தலித் + கம்யூனிஸ்ட்கள் + முஸ்லீம்கள் + முற்போக்காளர்கள் அணி சேர்ந்து காங்கிரஸை ஆதரித்ததால் வெற்றிக்கு அருகில் கொண்டு வந்து காங்கிரஸை நிறுத்தினார்கள். இக்கூட்டின் விளைவாக தோழர் ஜிக்னேஷ் மேவானி எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றார்.

periyar photo in anti caa

(வட இந்தியாவில் C.A.A. எதிர்ப்புப் போராட்டக் களத்தில் உயர்த்திப் பிடிக்கப்படும் அம்பேத்கர், பெரியார் படங்கள்)

வட இந்தியா முழுவதும் அண்மையில் நடந்த C.A.A. எதிர்ப்பு போர்க்களத்தில் மேற்படி கூட்டணியும், இஸ்லாமிய மாணவர்கள், மக்கள், கல்லூரி மாணவர்கள் இணைந்து முழங்கிய ஜெய்பீம்-லால்சலாம் முழக்கங்களும் பாசிச இந்துத்துவ வயிற்றில் புளியைக் கரைத்து இருக்கிறது. வட இந்தியாவில் தோழர்கள் கண்ணைய குமார், ஜிக்னேஷ் மேவானி, பீம் ஆர்மி சந்திரசேகர் ஆசாத் போன்றவர்கள் நம்பிக்கை கீற்றை விதைத்து இருக்கிறார்கள்.

இந்தியாவில் பெரும் அறிவுப் பின்புலம் கொண்ட டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழக அறிவுஜீவிகள் மற்றும் நவ்வேல்கார், பிரபாத் (பட்நாயக்), ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்ட இடதுசாரிகள் இம்முழக்கத்தை அறிவுத்தளத்திலும் முழங்கியபோது ஏற்பட்ட எழுச்சியால், டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் செயல்பட்ட ஏ.பி.வி.பி. அமைப்பின் பொறுப்பாளர்கள் முழுவதும் வெளியேறி, ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தின் வளாகத்திலேயே மனுஸ்மிருதியைக் கொளுத்தியதும் நடந்தது.

யார் இவர்கள்? நோக்கம் என்ன?

தமிழ்நாட்டில் வசுமித்ராவுடன் ஒரு நான்கு பேர், நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து “அம்பேத்கருக்கு அறிவில்லை - கம்யூனிஸ்ட்டுகளுக்குத் துரோகம் இழைத்து விட்டார் - அம்பேத்கர் முஸ்லிம்களுக்கு எதிரானவர்" என முக்கி முக்கி முகநூலில் எழுதினார்கள். தலித்கள் + கம்யூனிஸ்ட்கள் + முஸ்லீம்கள் ஒற்றுமையைக் குலைக்காதீர்கள் என இவர்களிடம் எழுதியும், பேசியும் பயனில்லை.

இந்த சீர்குலைவு வேலையின் உச்சமாக முஸ்லீம்களுக்கு எதிராக…. அம்பேத்கர் பேசியதாக எழுதி, "பேசுவது மோகன் பகவத் அல்ல, அம்பேத்கர்" என எழுதி, RSS மோகன் பகவத்துடன் அம்பேத்கரை ஒப்பிட்டனர்.

"தமிழ்நாட்டில் SDPI, WPI, TMMK, முஸ்லீம் லீக். தவ்கீத் ஜமாத் இன்னும் பல முஸ்லிம் இயக்கங்கள் உள்ளன. அவர்கள் நடத்தும் விடியல் வெள்ளி, ஏகத்துவம், சமரசம், தீன்குலப்பெண்…. உள்ளிட்ட பத்திரிக்கைகள் எவற்றிலும் ஒரே ஒரு கட்டுரை கூட அம்பேத்கர் முஸ்லீம்களுக்கு எதிரானவர் என வரவில்லை. மாறாக SDPI, TMMK, முஸ்லீம்லீக், WPI உள்ளிட்ட அமைப்புகள் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடுகிறார்கள். இப்படி தமிழ்நாட்டில் தலித் + முஸ்லீம் கூட்டு உறுதியாக உள்ளது. நீங்கள் இவ்வாறு அறிவு (கெட்ட) தளத்தில் எழுதுவது கீழ்மட்ட களத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். இத்தகைய உங்கள் செயல் RSS-க்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் வேலையைத் தவிர வேற என்ன?" என்ற எம் கேள்விக்குப் பதில் இல்லை.

வசுமித்ர வகையறாவின் நச்சுப் பிரச்சாரத்திற்கு சில 'இடதுசாரி இளம்பருவக் கோளாறுக்காரர்கள்' பலியானார்கள். பலியானவர்கள் கொடுத்த தெம்பு இன்று 'குறி' வரையில் வந்து நிற்கிறது.

மாநில உரிமைகள் பறிப்பு, முத்தலாக் சட்டம், காஷ்மீர் 370 –வது ஷரத்து இரத்து, CAA அமலாக்கம், பொது சிவில் சட்டத் தயாரிப்பு வேலை, அடுத்து ராமர் கோயிலை மையமாக வைத்து இந்துராஷ்ட்ரம் அமைப்பது என பாசிஸ்ட்கள் வெறி கொண்டு திரிகிறார்கள். அறிவுஜீவிகளைக் குறி வைத்துக் கொல்கிறார்கள், சிறைப்படுத்துகிறார்கள். இந்தியா எங்கும் இடதுசாரிகள், முற்போக்காளர்கள், புரட்சிக்காரர்கள் மிகவும் பலவீனமாக உள்ளோம். இந்நிலையில் இவர்களுடைய பங்களிப்பு என்பது சில புத்தகங்கள் போடுவது என்றளவில்தான் இருக்கிறது. நாமும் அதை வரவேற்கிறோம், பாராட்டுகிறோம், அங்கீகரிக்கிறோம். ஆனால் அது போதுமா?

'தூயமார்க்சிஸ்ட்களான' இவர்கள் பாசிஸ்ட்டுகளை எதிர்க்க பெரியாரிஸ்ட்கள் + அம்பேத்கரிஸ்ட்கள் + முஸ்லீம்கள் + தேசிய இன விடுதலை அமைப்புகளைத் திரட்டி, பெருந்தளம் அமைக்கும் பணியில் ஈடுபடுகிறார்களா? அதற்கு எடுத்த முயற்சி என்ன? ஒருவேளை இந்தியா முழுக்கவும் அல்லது தமிழகம் முழுக்கவும் கம்யூனிஸ்ட்களை மட்டுமாவது ஒருங்கிணைத்து 'பொதுமேடை' அமைத்து, 'பொது செயல்திட்டம்' வகுத்து பாசிஸ்ட்டுகளுக்கு எதிராக செயல்படுகிறார்களா? கம்யூனிட்ஸ்களில் உள்ள பிரிவுகளில் உள்முரண்பாடுகளைத் தீர்த்து ஒரே இலக்கு, அதனைத் தொடர்ந்து ஒரே அமைப்பாக்குவது நோக்கிப் பயணம் செய்திட ஏதேனும் சிறு முயற்சி எடுத்து இருக்கிறார்களா?

இவர்கள் உண்மையில் இந்துத்துவாவை எதிர்க்கிறார்கள் என்றால், RSS, சிவசேனா கொளுத்திய “இந்து மதத்தின் புதிர்கள்” என்ற அம்பேத்கரின் நூலை அல்லவா திறனாய்விற்கு எடுத்திருக்க வேண்டும்? அம்பேத்கர் அதில் இந்துத்துவ சித்தாந்தம், அதன் கடவுள் லீலைகளை நார்நாராகக் கிழித்து தொங்க விட்டிருப்பார். இத்தகைய பணிகளே இன்றைய காலத்திற்குத் தேவை. செய்தார்களா வசுமித்ர வகையறாக்கள்?

இவர்கள் நடத்து பதிப்பகங்கள் கூட கீழைக்காற்று, கீழடி, NCBH, பாரதி புத்தகாலயம் போல் வலிமையாகக் காலூன்றி அறிவுத்தளத்தில் மார்க்சிய சிந்தனைகளை வளர்க்கின்றனவா? (இவர்களில் நேர்மையாகப் புத்தகம் போடும் ஒரு சிலருக்கு இந்த விமர்சனம் பொருந்தாது) இவர்கள் தங்களை 'தூய மார்க்சிஸ்டுகளாக' மார்க்கெட் செய்து சம்பாதிக்க விரும்புகிறார்கள். மூலதனம் நூலை விற்று வந்த பணம், மார்க்ஸ் மூலதனத்தை எழுதிய பொழுது அவர் புகைத்த சிகரெட் காசுக்குக்கூட தேறவில்லை என்றார். மார்க்ஸ் ஹைகேட் கல்லறையில் இருந்து ஹை பிட்சில் சிரிப்பது தெரிகிறதா?

தெலுங்கானா எழுச்சியும் - அம்பேத்கரும்

வசுமித்ர வகையறாக்கள் மேல் ஏன் சந்தேகம் வலுக்கிறது என்றால், அம்பேத்கரின் சம காலத்தில் வாழ்ந்தவர்களான காந்தி, நேரு, வல்லபாய் பட்டேல், இவர்களோடு ஒப்பிட்டு மார்க்சிய அடிப்படையில் வரலாற்றை ஆராய்ந்தார்களானால் அம்பேத்கரின் பாத்திரத்தை நிச்சயமாக முற்போக்கானதாக மட்டுமே பதிவு செய்வார்கள். தெலுங்கானா நில உரிமைப் போராட்டத்தை ஒடுக்கும்பொழுது அம்பேத்கர் அமைச்சரவையில் இருந்தார் எனக் குற்றம் சாட்டுகிறார்கள். அமைச்சரவை யார் கட்டுப்பாட்டில் இருந்தது? அவர் வாழ்நாள் கனவான இந்து சட்டத்தைக் கூட “சோசலிஸ்ட் நேருவைக்” கொண்டு நிறைவேற்ற முடியாமல் வெளியேறினார் என்பதைக் காட்டிலும், வெளியேற்றப்பட்டார் என்பதே சரி.

kanniahkumar and jigneshஇதோ இப்பொழுது தோழர்கள் ஜிக்னேஷ் மேவானி குஜராத்தில் நில உரிமைக்கான போராட்டத்தை நடத்தி, சில இடங்களில் நிலத்தை மீட்டும் கொடுத்திருக்கிறார். பீம் ஆர்மி சந்திரசேகர் ஆசாத் நில உரிமை கோரிக்கையைப் பேசுகிறார். வட இந்திய கம்யூனிஸ்ட் அமைப்புகளுடன் இணைந்து இந்தியா முழுவதும் பல சிறுசிறு தலித் அமைப்புகள் நில உரிமைப் போராட்டத்தை நடத்துகிறார்கள். அவர்களுடன் இணைந்து நில உரிமைப் போராட்டத்தின் வரலாற்றுத் தவறுகளை நேர் செய்யலாமே, குறிப்பாக ஜிக்னேஷ் மேவானி, அதிதீவிர இடதுசாரித் தோழர் கன்னையாகுமாருடன் இணைந்து நிற்கிறாரே, அவர்களை வரவேற்கலாமே? என்றாவது இந்த ஆக்கப்பூர்வமான கூட்டை வரவேற்று இருக்கிறார்களா? பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்களா வசுமித்ர வகையாறாக்கள்? இத்தகைய தலித் அமைப்புகளுடன் கம்யூனிஸ்ட்கள் கைகோர்த்து செயல்படத் தவறினால், அது மோடி பாசிஸ்டுகளுக்கு அல்லவா பயன்படும் என்பது தூயமார்க்சிஸ்ட்களான இவர்களுக்குத் தெரியாமலா இருக்கிறது?

'அம்பேத்கர் கருத்து முதல்வாதி' - பெரியார் யார்?

'அம்பேத்கர் கருத்து முதல்வாதி' என்று கூக்குரலிடும் இவர்கள் கவனமாக பெரியார் குறித்த விமர்சனங்களைத் தவிர்க்கிறார்களே ஏன்? அம்பேத்கரை மக்களிடம் இருந்து ஒழித்துக் கட்டி விட்டு, பின் பெரியாருக்கும் வருவார்கள். அம்பேத்கரிடம் உள்ள தத்துவார்த்தப் பலகீனங்கள் தெரியாமலா, பெரியார் அம்பேத்கரிடம் அவ்வளவு ஐக்கியப்பட்டு நின்றார்? இவர்களின் செயல்திட்டம் அம்பேத்கரைத் தனிமைப்படுத்துவது, பின் பெரியாரை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்துவது... இது ஆளும் பாசிஸ்ட்டுகளுக்கு பயன்படும் செயலன்றி வேறென்ன? இதை என்.ஜீ.ஓ.க்கள்தானே செய்வார்கள்?

மார்க்சியமே தீர்வு - ஐக்கியப்பட்டால் அனைவருக்கும் வாழ்வு

மார்க்சியமே அனைத்திற்குமான தீர்வு. அதில் எனக்கும் எப்பொழுதும் சந்தேகமே இல்லை. ஆனால் மார்க்சியம் இயங்கியல் அடிப்படையில் தீர்வுகளைத் தேடுகின்ற தத்துவம்.

தலித்கள் + முஸ்லீம்கள் + தேசிய இன விடுதலை இயக்கங்கள் என அனைத்து ஒடுக்கப்பட்ட சாதி, மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகள், குழுக்கள், அதன் தலைவர்களை முட்டாள்கள், கருத்து முதல்வாதிகள், புரட்சிக்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் எனத் தூற்றுவதால் ஐக்கியம் எப்பொழுதும் ஏற்பட வாய்ப்பே இல்லை. மாறாக வசுமித்ர வகையறாக்கள் வைக்கும் விஷமத்தனமான பிரச்சாரங்கள் நட்புமுரண்களை பகைமுரண்களாக்கி பிளவுகளை அதிகரிக்கவே செய்யும்.

இவர்களின் 'கற்பனை மார்க்சியத்தில்' ஜீபூம்பா என்றவுடன் அனைவரும் ஓரணியில் திரள்வார்கள் என்று நம்புகிறார்கள். அது நடக்காதபோது வார்த்தைச் சேற்றை வாரி, நட்பு சக்திகளின் மேல், அதன் தலைமைகளின்மேல் சகட்டு மேனிக்கு வீசுகிறார்கள். சொல்லப் போனால், கம்யூனிஸ்டுகளுடனும் இந்தியா முழுவதும் நடக்கின்ற இன விடுதலைப் போராட்ட இயக்கங்களுடனும் ஒன்றுபட்டு நிற்காமல் போனாலும், சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக செயல்பட்ட விடுதலைப் புலிகளை நாம் ஆதரித்துதானே வந்தோம்.

அனைத்து வர்க்கங்களின் நம்பிக்கைக்கும் நல்வாழ்வுக்கும் மூல உத்தி, செயல் உத்தி வகுத்து செயல்படுவதன் வாயிலாக வரலாற்றுப் போக்கில் அனைத்து வர்க்கங்களுக்கும் இடையே ஐக்கியம் ஏற்படும். கியூபாவில் பிடலின் ஜூலை 18 இயக்கமும், கம்யூனிஸ்ட் கட்சியும் கலந்து போயினவே. இன்றைய காவி கார்ப்பரேட் பாசிஸ்ட் மோடிக்கு எதிராக அனைத்து வர்க்கங்களையும் அனைத்துவிதமான போக்குள்ள ஏன் வசுமித்ர வகையறாக்களைக் கூட அணி சேர்த்திடவே நாம் முனைகிறோம். இறுதியாக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் புரட்சி நடந்த நேபாளில் கூட மாதேசிகள், தலித்துக்கள் உள்ளிட்ட அனைவரையும் ஐக்கியப்படுத்திய புரட்சி நடந்தது. (இன்றைய நிலைமை வேறு)

அம்பேத்கரையும் ஆயுதமாக்குவோம், இந்துத்துவ பாசிஸ்ட்டுகளை வெல்வோம்

ம.க.இ.க. 1993-ல் ஸ்ரீரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம் நடத்தி ஸ்ரீரங்கநாதனின் கருவறைக்குள் அம்பேத்கரின் படத்தை எடுத்துக் கொண்டு சென்று, இந்து ஒற்றுமை என்ற போலி வார்த்தைகளை அம்பலப்படுத்தி, காவி பாசிச பயங்கரவாதத்திற்கு எதிராகக் களமாடினார்கள். பார்ப்பன பாசிச பயங்கரவாத மாநாடு நடத்தி, "இந்துத்துவாவின் சோதனைச்சாலை குஜராத் என்றால், இந்துத்துவாவின் கல்லறையை தமிழ்நாட்டில் எழுப்புவோம். இது பெரியார் மண் என நிரூபிப்போம்" என முழங்கினார்கள். அம்பேத்கரையும், பெரியாரையும் பார்ப்பன பாசிஸ்ட்டுகளுக்கு எதிரான ஆயுதமாக ஏந்தி நிற்கின்றனர்.

ம.க.இ.க. மையக் குழு படைத்த "ஆயிரம் காலம் அடிமை என்றாயே, அரிஜனன்னு பேரு வைக்க யாரடா நாயே" என்ற பாடல் ஒலிக்காத தலித் மேடைகள் உண்டா? தமிழக சேரிகளின் தேசிய கீதமாக அல்லவா அந்தப் பாடல் பாடப்படுகிறது. பாசிச பார்ப்பன பயங்கரவாதத்தை அம்பலப்படுத்திட அம்பேத்கரின், பெரியாரின் பங்களிப்பையும் உயர்த்திப் பிடித்தது. சேரிகளில் RSS நுழைவு அபாயத்தை எச்சரித்து அறிவூட்டியது.

ஆனால் வசுமித்ர வகையறாக்கள் அம்பேத்கரை அம்பலப்படுத்துவது என்ற பெயரில், அம்பேத்கரை இந்துத்துவப் பயங்கரவாதத்திற்கு இரையாக்க முயற்சிக்கிறார்கள். இவர்களின் அம்பேத்கரை அம்பலப்படுத்தும் நூல்களைப் படிக்கும் சாதி வெறியர்கள் இன்னும் மூர்க்கமாக அம்பேத்கரின் சிலைகளை உடைக்கவும், அசிங்கப்படுத்தவும் செய்வார்கள். அதன் விளைவாக தலித்துக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள் குற்ற உணர்ச்சி இன்றி நடக்கும். வசுமித்ர வகையறாக்களின் இத்தகைய அருவருப்பான பணியை RSS-க்காக செய்தாலும், அறியாமல் செய்தாலும், எந்த விலை கொடுத்தும் தடுத்து முறியடிப்போம். வெற்றி அம்பேத்கருக்கே - செவ்வணக்கம்.

ஜெய்பீம்! லால்சலாம்!!

- மு.கார்க்கி