பண்டைய தமிழ்ச் சமூகம் பன்முகப் பண்பாட்டு மரபுகளையும் வரலாற்றுப் பதிவுகளையும் உள்ளடக்கி யுள்ளது. அத்தகைய கூறுகளை அறியும் வண்ணம் அமைந்திருப்பவை பண்டைய தமிழ்ச் சமூகத்தின் எழுத்துச் சான்றுகளாகிய இலக்கியங்கள், கல்வெட்டுகள், இன்றுவரை தொடர்ந்து வரும் நாட்டுப்புற வழக்காறுகள், செய்மரபுகள், பண்பாட்டு மரபுகள் போன்றவை ஆகும். இவற்றுள் இலக்கியங்கள் குறிப்பிடத்தக்க இடம் பெறுகின்றன. தற்பொழுது நமக்குக் கிடைக்கும் தொன்மையான தமிழ் இலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் செய்யுள் தொகை நூல்களாகும். இச்செய்யுள் இலக்கியங்கள் பண்டைய தமிழ்ச்சமூகத்தின் பண்பாட்டு நடத்தைகள், சடங்குகள், விழாக்கள், வழிபாடுகள் போன்ற மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தி நிற்கின்றன. பண்டைய தமிழ்ச் சமூகத்தில் மக்கள் சிறப்பாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் பல அரிய செயல்களை நிகழ்த்தினர் என்பதற்கான சான்றாதாரங்கள் பண்டைத்தமிழ் இலக்கியங்களில் பதிவாகியுள்ளன. மனிதர்களின் நம்பிக்கைகளாக உருப்பெற்றுள்ள இத்தகைய கூறுகள் அவ்வக்கால இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. பண்டைய தமிழ்ச்சமூகத்தில் பல அரிய செயல்களைச் செய்த மாந்தர்களையும், ஆற்றல் களையும் கண்டு மக்கள் அஞ்சியுள்ளனர். அவற்றை வணங்கியுள்ளனர். தங்களது குறைகளைப் போக்க அவற்றை நாடியுள்ளனர். அத்தகைய ஆற்றல்களையும்/ மாந்தர்களையும் சமூகம் உன்னிப்பாகக் கவனித்து வந்துள்ளது. அவற்றைப் பேய், பேய்மகளிர், சூர், சூரரமகளிர், அகவன் மகள், முதுவாய்ப் பெண்டிர், வேலன், கட்டுவிச்சி, கானமர் செல்வி எனத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

அணங்கு

பண்டைய தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள ‘அணங்கு’ என்னும் ஆற்றல் எத்தகைய சிறப்புகளைக் கொண்டது? மனிதனின் கண்களுக்கு எளிதில் தென்படக்கூடியதா? மனிதனைப் போன்ற தோற்றம் கொண்டதா?

விலங்கா? அது ஆணா? பெண்ணா? அது எங்கு உறையும்? யார் யாரை எவ்விடத்தில் தாக்கும்? போன்ற வினாக்களுக்கு ஆய்வுலகம் இன்று வரை விளக்கம் தேடிக்கொண்டே இருக்கிறது. பல்வேறான முடிவுகள் வெளிவந்த போதிலும் சங்க இலக்கியப் பதிவுகளில் காணப்படும் அணங்கு பற்றிய செய்திகளை மேலும் ஆய்வுக்கு உட்படுத்தலாம்.

தொல்காப்பியத்தில் அணங்கு பற்றிய செய்திகள் காணக்கிடைக்கின்றன.

“அணங்கே விலங்கே கள்வர் தம் இறையெனப்

பிணங்கல் சாலா அச்சம் நான்கே” (தொல்.பொருள்.252)

 இங்கு அணங்கென்பது அச்சத்தை விளைவிக்கக் கூடிய வருத்தும் பண்பின் அடிப்படையில் அமைந்த உருவமற்ற, மாற்று உருவமுடைய கூறுகளின் ஆற்றல் களைக் குறிக்கக் கூடிய ஒன்றாகக் காட்டப்படுகின்றது. அணங்கும் பேயும் வேண்டிய உருவங்களை எடுக்க வல்லன (ம. கா. 631-633) ஆகும்.

 அணங்கு பற்றி உ.வே.சா. குறிப்பிடும் பொழுது ‘ காம நெறியின் உயிர்கொளுந் தெய்வமகள்’ எனக் கூறிச் செல்கிறார் (மணி- மூலமும் உறையும். பக்.78; உ.வே.சா.பதிப்பு). அணங்கு என்பதற்குத் தமிழ்ப் பேரகராதி வருத்தம், நோய், அச்சம், கொலை, தெய்வம், தெய்வ மகள், வருத்திக் கொல்லும் தெய்வ மகள், தெய்வத்திற்கொப்பான மாதர், பேய், அழகு, வடிவு என 15 பொருட்களைத் தருகிறது. (தமிழ் லெக்ஸிகன் 01.1 ப.61)

பழந்தமிழ் இலக்கியங்களில் அணங்கு என்னும் சொல் வருத்தம், தெய்வம் ஆகிய இரு பொருள்களில் மிகுதியாக வந்துள்ளது. தெய்வம் எனப் பொருள் பயின்று வந்துள்ள இடங்களில் இலக்கிய உரையாசிரியர்கள் “வீற்றுத்தெய்வம்” எனப் பொருளுரைத்துச் சென்று உள்ளனர். ‘வீற்றுத்தெய்வம்’ என்பது ஒரு பொருளிலோ, இடத்திலோ உறையும் ஒன்று எனப் பொருள்படும் (அகம். களிற்றுயானைநிறை, கழக வெளியீடு).

அணங்கு உறையும் இடங்கள்

அணங்கு உறையும் இடங்களாக மலை, நீர் நிலைகள், காடு, காவன் மரம், முன்றில், ஊர், போர்க்களம் (நற்.288:1-4) ஆகியவற்றைத் தமிழ் இலக்கியங்கள் சுட்டுகின்றன. மேலும் நீர் நிலைகளின் அளவால் மிகுந்த அச்சத்தைத் தரும் கடற்பரப்பில் அணங்கு உறையும் என்பதும் அலையுடைய பெரிய கடற்பரப்பின் கண் விரும்பி உறையும் கடல் தெய்வமாக அது கருதப் பட்டதும் (நற். 155: 47; அகம். 207: 1-4) இலக்கியங்கள் வழித் தெரியவருகின்றது. ஊர்மக்கள் பருகும் நீர் நிலையாகிய ஊருணியில் அணங்கு உறைந்தமையினை ஐங்குறுநூறு(28:1) குறிப்பிடுகின்றது. காட்டிலும், நகரிலும் அணங்கு உறைந்தமையினை அகநானூறு (319: 5-6, 99: 7-10) குறிப்பிடுகின்றது. இல்லில், முன்றில் அணங்கு உறைந்தமையினை ‘மணம் புணர்ந்து ஓங்கிய, அணங்குடை நல்இல்’ என்று மதுரைக்காஞ்சி (577-578) குறிப்பிடுகிறது.

போர்க்களத்தில் அணங்கு உறைந்தமையினைப் புறமும்(292: 7-8), அரசனின் வெற்றி, தோல்வி போன்ற வற்றினை உணர்த்தும் காரணிகளுள் ஒன்றாகிய காவன் மரத்தில் தங்கியிருந்தமையினைப் பதிற்றுப்பத்தும் (88:5-6) கூறுகின்றன.

அணங்கு உறையும் எனக் கருதப்படும் இடங் களுக்குச் செல்வதனை மக்கள் தவிர்ப்பர். இவை அச்சத்தினை உணர்த்தக் கூடிய இடங்களாகவும் அமைந் திருக்கின்றமையினால் மக்கள் இவ்விடங்களுக்குச் சென்றால் சில ஆற்றல்களால் அவர்கள் தாக்குற நேரிடும். மேலும் இவ்விடங்கள் தீய ஆற்றல்கள்/ அச்சந்தரும் ஆற்றல்கள் உறைந்திருக்கும் இடங்களாகும் எனக் கருத்துருவம் செய்துள்ளனர். இதன் காரணமாக இத்தகைய இடங்கள் கவனிக்கத்தக்க வகையில் சிறப்பு இடங்களாகக் கருதப்படுவதனைக் காணமுடிகிறது. தங்களைவிடக் கூடுதல் ஆற்றல் உள்ள ஆவி போன்றன இவ்விடங்களில் உறைவதினால் அவற்றை இயல்பை மீறிய மீவியல் இடங்களாகக் கருதினர் எனலாம். அணங்கு உறையும் இடங்களாகக் குறிக்கப்படும் இடங்கள் அனைத்தும் மக்கள் வாழும் பகுதியைவிட்டு நீங்கிய பகுதிகளாகும்.

அணங்கினை மக்கள் வழிபடுதல்

குறிஞ்சி நிலத்தில் கானவனின் அம்பு குறி தவறிப் போய்விட்டதனை எண்ணி ‘இம்மலையில் தெய்வம் தோன்றி நின்றது, மழை பெய்தால் அத்தெய்வத்தின் வீறு தணியுமாகலின் மலையை மழை வந்து சூழ்வதாக’ என்று மலை மேலதாகிய கடவுளை வழிபடும் பொருட்டுத் தன் சுற்றத்தோடு வந்து மலைக்குப் பலி இட்டு நீர் விளாவி வழிபட்ட நிலையினை,

“அணங்கொடு நின்றது மலை, வான் கொள்க” (நற். 165: 1-5) என்கிற அடியின் மூலம் அறிய முடிகிறது. அக்கால மக்கள் ‘அணங்கு என்னும் கண்ணுக்குப் புலப்படாத ஆற்றலைத் தெய்வம் என்று வணங்கி வந்திருக்கின்றனர் (பட்டினப்பாலை. 86-87). அணங்கின் பாதிப்பிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள மக்கள் காப்புக் கட்டுதலை (அகம்.7:2-6) வழக்கமாகக் கொண் டிருந்தனர். கடலில் உறையும் தெய்வத்தினை மக்கள் வணங்கியுள்ளனர் (அகம். 270:5-9). உயர்ந்த மதிலின் கதவில் தெய்வத்தன்மை பொருந்தி அமைவதாகக் கருதி அதற்கு வழிபாடு செய்துள்ளனர் (ம. கா.352-354).

அணங்கு என்னும் ஆற்றல் இவ்வாறான இடங்களில் தான் உறையும் என்பதோடு மட்டுமல்லாது அது வருத்தும் இயல்புடையது என்பதும் அதனிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வழிபாடு செய்வதையும் மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். மேலும் இத்தகைய அணங்கு என்னும் ஆற்றல் சூள் செய்தாரை அச்சூள் பொய்யாகின்ற போது அவர்களை வருட்டுவதும் இயல்புடையது( குறுந்.53:5-7) என மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். பெண்கள் பூப்புக்கு வந்த காலந் தொடங்கி அவர்களது உடலில் அணங்காகிய புனித ஆற்றல் புகுந்துகொள்வதாகவும் அவை பெரும்பாலும் அவர்களின் மார்பகங்களிலும், அல்குலிலும் தங்குவதாகவும் சுட்டிச் செல்கிறார் ஹார்ட்(1973).

சூர்/ சூரர மகளிர்

 சூர் என்பதற்குத் தமிழ் அகராதிகள் அச்சம், தெய்வம், சூரன்பா, போன்ற பொருட்களைத் தருகிறது என்கிற போதிலும் பாட்டுத்தொகை நூல்களில் குறிக்கப் பெறும் சூர், சூரர மகளிர் என்கிற சொல்லாட்சிகள் மலையுறை தெய்வத்தைக் குறிக்கின்றன. இம் மலை யுறை தெய்வம் ஆண், பெண் தெய்வங்களாகக் கருதப் பட்டமையினை சூர்(அகம்.98:2-6). என்றும், சூரர மகளிர் (திருமுருகு.38-41) என்றும் இலக்கியங்கள் வேறுபடுத்திக் காட்டுகின்றன. மேலும் சூரர மகளிர், வரையரை மகளிர், சூர்மகள் எனச் சுட்டப்பட்டுள்ள சான்றுகள் மலையுறைவது பெண் தெய்வமாகக் கருதப்பட்டிருந்தமையினைத் தெரிவிக்கின்றன. சூரர மகளிர் என்போர் அச்சந்தரும் தெய்வ மகளிர் என்ற நிலையிலேயே சுட்டப்படுகின்றனர். இவர்கள் மலை, சுனை ஆகியவற்றில் உறைந்துள்ளமையைப் பரணர் (அகம். 198:14-17) சுட்டியுரைத்துள்ளார். மேலும் இத்தெய்வ மகளிர் அழகு மிகுந்தவர்களாக இருந்ததாக (ஐங்.255:1-2, அகம். 342:10-12, 162:23-28) இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இவர்கள் இளம் பெண்டிரை அணங்குவதாக ஐங்குறுநூறு (191:3-5) குறிப்பிடுகின்றது. மேலும் தலைவன் தலைவியிடம் தாம் வந்து திருமணம் செய்து கொள்வதாகவும், தாம் இருவரும் சேர்ந்திருக்கலாம் என்றும் தெய்வ மகளிரான சூரர மகளிரைச் சுட்டிச் சூளுரைக்கின்றான் (குறுந்.53:5-7).

 சூரர மகளிர் மண்ணுலகில் இருக்கும் இயல்பான மகளிரைப் போல் இருந்து மலையுச்சியில் பந்து விளையாடி இருக்கின்றனர். பந்தாடி முடிந்தவுடன் அக்களைப்புப் போகும் வண்ணமாகச் சுனையிலே நீராடியிருக்கின்றனர் (கலி. 40:22-25). இம்மகளிர் சோலையிலும், மலைப்பக்கத்திலும், மரத்தடியிலும் விளையாடியிருக்கின்றனர் (திருமுருகு. 38-41; குறிஞ். 193-195) என்னும் செய்திகளைப் பழந்தமிழ் இலக்கியங் களின் வழியாக அறிய முடிகிறது.

பேய்

தொல் பழங்காலம் முதல் தற்காலம் வரை பேய் குறித்த நம்பிக்கைகள் மக்கள் மனவியலோடு நெருங்கிய தொடர்புடையவையாக உள்ளன. சங்க இலக்கியங் களிலும் அதற்குப் பின்வந்த இலக்கியங்களிலும் பேய் குறித்த பதிவுகள் பலவாறு காணப்படுகின்றன. பேய் மேகம், பேய்க் காற்று, பேய் மழை, பேயடி, பேய்த்தனமா அடிக்கிறான், பேய்பிடிச்சவன் மாதிரி இருக்கான், காசுக்குப் பேயா அலையுறான் போன்ற சொற்றொடர்கள் மக்கள் மத்தியில் வழக்கத்தில் உள்ளன. பேய் மனித வாழ் வியலோடும் வழிபாட்டு நிலைகளோடும் தொடர்பு படுத்திப் பேசப்பட்டு வந்துள்ளமையை இலக்கியங்களின் வழியும் நாட்டுப்புற சமய வழிபாட்டின் வழியும் அறிய முடிகிறது. சங்க இலக்கியத்தில் பேய் என்பது பேஎய் (குறுந்.263:5-6) எனவும் கழுது (நற்.171:9) எனவும் பதிவாகியுள்ளது. பேய் என்பதற்குத் தீமை, கெட்டது, அச்சம் என அகராதிகள் பொருள் விளக்கம் தருகின்றன. அச்சம் என்ற பொருளில் இப்பதம் பலவிடங்களில் (அகம்.377:10; குறுந்.263:5; பரி.5:14; 7:84) குறிப்பிடப் பட்டுள்ளது.

பேய் உருவம்

காய்ந்த மயிர், அகன்ற வாய், பிறழ்ந்த பற்கள், சுழலும் விழிகள், பாம்பும் கூகையும் கூடி வதியும் காதுகள், பருத்த உடல், பெருத்த வயிறு எனும் தோற்றத்தில் காண்பதற்கு அச்சம் தரும் நடையை உடையதாகப் பேயின் உருவம் அமைந்திருக்கும் (திருமுருகு.47:51). பேய் பிணத்தைத் தின்று குடலை மாலையாக இட்டுக் குருதிச் செங்கையால் கூந்தல் தீட்டிக் காட்சியளிப்பதால் அதன் இயற்கை நிறம் மாறிக் காணப்படுகிறது (புறம்.62:1-4). பேயின் உருவம் மனித உருவத்தினை விடக் கோரமான உருவத்தை உடையதாக இருக்கும் என்பதை மேற்கண்ட இலக்கியச் சான்றுகள் உரைக்கின்றன. பேயில் ஆண், பெண் என்ற வேறுபாடும் உண்டு (பட்,259-260). இவற்றில் கழுது என்பது (நற்.171:9) ஆண் பேயாகவும், கூளி என்பது (அகம்.233:11, பதி.36:11) பெண் பேயாகவும் கருதப்படுகின்றன.

பேய் உறையும் இடங்களும் உணவுப் பழக்கமும்

பேய்கள் போர்க்களம்(புறம்.370:22-27), முதுகாடு (புறம்.356:1-4), கடுநெறி(பதி.19:1-2), மன்றம்(பதி.35:6-9) ஆகிய இடங்களில் உறைகின்றன. தாழி கவிக்கும் மண்திட்டுக்களிலும் காணப்படும். கோட்டான்களும் பருந்துகளும் விரும்பும் இடுகாட்டில் உறைந்திருக்கும் (புறம்.338). இடுகாட்டில் நரிகளுடன் சுற்றித்திரியும் (புறம்.373). போர்க்களத்தில் காயமடைந்த வீரர்களின் உடல்களைத் தேடிவரும்(பதிற்.36). மனித உடலில் நுழையும் தன்மை கொண்டு அமையும்(குறுந்.263). நள்ளிரவில் நடமாடும்( நற்.179) இயல்பினை உடையது. மேலும் இவை கூட்டம் கூட்டமாகத் திரியும் இயல்பினை உடையவை. பேய்கள் பிணம் தின்னும். இறந்தவருக்குப் படைக்கும் உணவையும் பிண்டத்தையும் தின்னும் (புறம்.238; 234; 249) இயல்பின.

 போரில் காயம்பட்டுக் கிடக்கின்ற வீரர்களைப் பிணந்தின்னும் விலங்கினங்கள் வந்து தின்னாமல் உயிர் போகும் மட்டும் அருகிலிருந்து பேய்கள் காத்து நின்றதனைப் பேய்க்காஞ்சி என்னும் துறை கூறி நிற்கின்றது. பேய்கள் புண்பட்டவர்களைத் தாக்காத வண்ணமாகவும், வீட்டிற்கு வராமலிருக்கும் வண்ண மாகவும் மக்கள் தங்களது வீடுகளில் பல்வேறு சடங்கு களைச் செய்திருக்கின்றனர்; மனையில் வேப்பிலையைச் செருகியிருக்கின்றனர்; ஐயவி(வெண் கடுகு) தூவி யுள்ளனர்; நறும் புகையைப் புகைத்துள்ளனர்; யாழும், குழலும் கூடிய பல்வேறு இசைக்கருவிகளை ஒலிக்கச் செய்துள்ளனர்; மணியடித்துக் காஞ்சிப்பண் பாடித் தலைவனது விழுப்புண்களைப் பேய் அணுகாமல் காத்திருக்கின்றனர் (புறம்.281). இத்தகைய பேய்கள் பண்டைய தமிழரின் வெற்றித்தெய்வமான கொற்ற வைக்கு ஏவல் செய்யும் கூலிகளாகச்(கலி.89) செயல் பட்டிருக்கின்றன. இவ்வாறாகப் பேய் பற்றிய பதிவுகள் சங்க இலக்கியங்களில் பயின்று வந்துள்ளன.

வேலன்

பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நோயினைப் போக்கும் ஆற்றல் பெற்றவனாகவும், தெய்வ ஆற்றல் உள்ளவனாகவும் அறியப்படுபவன் வேலன். இவன் முருகனுடைய பூசாரியாவான். முருகனுடைய வேலைத் தாங்கி ஆடுவதால் இவன் வேலன் எனப் பெறுகிறான். மணமாகாத கன்னிப் பெண்களைச் சூர், அணங்கு போன்றவை தீண்டித் துன்புறுத்துவதாக மக்கள் நம்பினர். பெண் ஒருத்தி ஓர் ஆணுடன் காதல் கொண்டு உறவு கொள்ளும்போது அவளுடைய உடம்பில் மாற்றங்கள் பல ஏற்படும். அதனைச் சரியாக உணர்ந்து கொள்ளாத தாயும், செவிலியும் அப்பெண் முருகனால் தீண்டப் பட்டாள் என வேலனை அழைத்து முருகனை அமைதிப் படுத்தப் பணிக்கின்றனர். வேலன் முருக வழிபாடான வெறியை எவ்வாறு நிகழ்த்த வேண்டும் என்று நன்கு அறிந்தவன். அதனைத் தொல்காப்பியம் ‘வெறியறு சிறப்பின் வெல்வாய் வேலன்’ என்று குறித்துள்ளது. வேலன் முருகனை அழைத்து அவன் புகழைப் பாடிக் கொண்டு வரும்போது அவன் ஒருவகையான மருளுக்கு உள்ளாகிறான். அப்போது முருகு அவன் மேல் இறங்கியதாகக் கருதப்படுகின்றது. வேலைக் கையிலேந்தி மருளோடு ஆடுகிறான். முருகனுடைய பூசாரியான வேலன் நடந்தும் மருளாடல் வெறியயர்தல், வெறி யாடல், வெறியாட்டு எனப் பாட்டுத்தொகை நூல்களில் குறிக்கப் பெற்றுள்ளது.

வெறியாட்டு நிகழ்த்துவதற்கு முன்னர் கழங்கு குறி பார்த்திருக்கின்றனர். இது வேலன் கழற்சிக்காய்கள் மூலம் குறியுணர்த்துவதாகும்(ஐங்.249). களவுக் காலத்தில் தலைவியின் மாறுபாட்டிற்குறிய காரணத்தை அறியும் வண்ணமாகவும் உடன்போக்கில் தலைவனும் தலைவியும் எங்கு சென்றனர் என்பதனை அறியவும் இத்தைய குறியை நிகழ்த்தியிருக்கின்றனர்(அகம்.195). வெறியாட்டு நிகழ்த்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் போது வெறியாடும் களத்தினைத் தேர்ந்தெடுக்கின்றனர். வேலனுடைய மன்றம்(ம.கா.611-616), முன்றில்(குறுந்.53) ஆற்றின் நடுப்பகுதி(குறுந்.263) போன்ற இடங்கள் வெறியாடுவதற்கு உரிய களங்களாகத் தேர்ந்தெடுக்கப் படுகின்றன. வெறியாட்டு நிகழ்த்தப்படும் இடத்தில் பந்தல் அமைக்கப்பட்டிருக்கிறது(அகம்.98). வெறி யாடும் களத்தில் வேலன் பல்வேறு சடங்கு முறைகளை மேற்கொண்டிருக்கிறான். வேலன் தலைவியின் நோயினை நீக்கும் பொருட்டுக் களத்தினை மலர் மாலைகளால் அழகுபடுத்துகிறான்( அகம்.114; நற்.322) பசும் மஞ்சள் சந்தனம் சேர்த்துத் தெளித்துச் செவ்வரளி மாலையுடன் இன்னும் பிற மாலைகளையும் பந்தலில் தொங்க விட்டிருக்கின்றான்.

களத்தினை அணி செய்த வேலன் தன்னை இலைகளாலும், தழைகளாலும், பூக்களாலும், கடம்ப மாலைகளாலும் (நற்.34) அழகு செய்து கொள்கிறான். கையில் சிவந்த காப்பு நூலைக் கட்டியிருக்கிறான். தினையையும், வெள்ளரிசியையும் குருதியில் தோய்த்துப் படையலாக இட்டிருக்கிறான். மேலும் நெய்யையும் வெண்சிறு கடுகையும் அப்பி இருக்கிற தினையினை வெறியாடும் களம் முழுக்கப் பரவும் வகையில் நீரோடு சேர்த்து(அகம்.272) ஆட்டுக்குட்டியினை அறுத்து அந்த குருதியில் தினையையும் கலந்து களம் முழுக்கப் பரப்பி இருக்கிறான்(அகம்.22).

நறுமணப் புகையை எழுப்பி முருகனுடைய வேலினை வெறியாடும் களத்தின் மையத்தில் நிறுத்தி மணிகளை ஒளிக்கச் செய்து முருகனை வேலன் அழைக் கின்றான். முருகன் அவன் மேல் ஆவேசமுற்றதும் ஒருவகையான மயக்க நிலையில் துள்ளிக் குதித்து ஆடிப்பாடுகிறான். கிடாயை(மறி) வெட்டி அதன் குருதியை முருகனுக்குப் பலியாக இடுகிறான். இவ்வாறாக வெறியாடும் வேலன் சடங்கினை நிகழ்த்தித் தலைவியின் நோயைப் போக்குகிறான்.

குறி கூறும் மகளிர்: முதுவாய்ப் பெண்டிர், அகவன் மகள், கட்டுவிச்சி

பறவைகளைக் கொண்டு குறி அறிந்ததால் புள் என்னும் சொல்லே எல்லாக் குறிகளையும் குறிக்கும் நிமித்தம் என்னும் பொதுப்பெயரால் வழங்கலாயிற்று (தொல்.பொருள்.புறத்திணை.36,47). பண்டைய காலங்களில் கடந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகிய மூன்று காலங்களிலும் நிகழ்ந்த, நிகழப்போகும் செயல்பாடுகளைக் கணித்துக் கூறும் ஆற்றல் பெற்ற வர்கள் இருந்தனர். இவர்கள் மக்களின் துன்பங்களைப் போக்குவர்களாகச் செயல்பட்டனர். இததகைய சிறப்பான ஆற்றல்களைத் தம்மகத்தே உள்ளடக்கியவர் களைப் பின்வருமாறு பாட்டுத்தொகை நூல்கள் சுட்டு கின்றன. குறிகூறும் ஆற்றலைக்கொண்ட பெண்கள் அவர்கள் சொல்லும் திறத்திற்கேற்பவும், அவர்கள் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையின் பொருட்டும் பல பெயர்களில் அழைக்கப்பட்டனர்.

கட்டுவிச்சி என்பவள் நெல் முதலியவற்றை முறத்தில் வைத்து எண்ணிப் பார்த்துக் குறி கூறுபவள். அதனால் கட்டுவிச்சி எனப் பெறுகின்றாள். சங்கு மணிக் கோவை போன்ற வெண்மையுடைய நெடிய கூந்தலை உடைய, பின்வருவனவற்றை, முன்னால் நடந்தவற்றைத் தெளிவுறத் தவறாமல் உரைக்கும் தன்மையுடையவள் கட்டுவிச்சி(அகம்.23). இவள் குறிஞ்சி நிலத்தைச் சார்ந்தவள். இவள் கட்டுப்பார்த்து குறிசொல்லும் போது தான் வழிபடும் தெய்வங்களை விளித்துப்(அகவி-அழைத்து) பாடுவதால் இவள் அகவன் மகள் எனவும் அழைக்கப் பெறுகின்றாள் (குறுந்.23). இவள் முதுமை அடைந்தவள்; இவளின் தலை மயிர் நரைத்திருக் கின்றது. இவள் செம்முது பெண்டிர் எனவும் அழைக்கப் பெறுகிறாள்(நற்.288). இவர்கள் அறியுநர், முதுவாய் பெண்டிர் (அகம்.22) எனவும் அழைக்கப் பெறுகின்றனர். இத்தகைய குறி கூறும் பெண் தன் கையில் சிறு கோலை ஏந்தியிருக்கிறாள்(அகம்.97; 152; 208: குறுந்.298). அவள் குறி சொல்லத் தொடங்கும் முன் கோலை ஆட்டிச் சுட்டித் தெய்வத்தை அகவி பாடுகிறாள். தன் தெய்வத்தை அழைக்கின்றாள். அத்தெய்வம் உறைந் திருப்பதாகக் கருதப்படும் மலையைப் பாடுகிறாள். தலைவனோடு காதல் கொண்ட தலைவி தலைவனின் பிரிவினால் பசலை என்கிற நோய் தாக்கப்பட்டு மெலிந்து பொலிவிழந்து காணப்படுகிறாள். தன் மகளின் உடல் மெலிவுக்குக் காரணம் என்ன என்று அறியாத தாயும், செவிலியும் குறி சொல்லும் மாதரை அழைத்துத் தம் மகளின் உடல் பொலிவிழந்ததற்குக் காரணம் அறிய முற்படுகின்றனர். குறி சொல்லும் மாதர் முறத்திலே பிடி நெல்லையிட்டு தெய்வத்துக்குப் பரப்பி வழிபாடு செய் கிறாள். பின்னர் அந்நெல்லை நன்னான்காக எண்ணி எஞ்சியவை ஒன்று, இரண்டு, மூன்றளவும் பார்த்துத் (கட்டும், கழங்கும்) தலைவி உற்ற நோய்க்கு முருகன் தான் காரணம் என்றும் அவனால் தான் நோய் நேர்ந்தது என்றும் கூறுகின்றாள். அத்தோடு நில்லாமல் இந்நோய் நீங்க வேண்டுமாயின் வேலனை அழைத்து வெறியாடும் களம் திருத்தி முருகவேலுக்குச் சிறப்பெடுக்க வேண்டு மெனவும் கூறுகிறாள் ( நற்.288).

மேலும் கட்டுவிச்சியே களம் அமைத்து வெறி யாட்டையும் நடத்தியிருக்கிறாள். இவள் முருகனை வழிபட்ட முறை மிகுந்த அச்சம் தரும் வகையில் அமைந்தது. முருகனுக்குரிய மந்திரத்தை யாரும் கேட்க முடியாதபடி தனக்குள்ளே மெல்ல உரைக்கின்றாள். குனிந்து மலர்களைத் தூவி முருகனை வணங்குகிறாள். பூக்களைப் பலியாகத்தூவும் முன் அவள் தன் கை விரல் களில் பெருவிரல் தவிர மற்ற நான்கு விரல்களையும் மடக்கிக்கொண்டு இரண்டு பெருவிரல்களையும் தன் நெஞ்சில் வைத்து முத்திரை காட்டுகிறாள் (திருமுருகாற்றுப் படை). வேலனைப் போன்று காப்புக்கட்டிக் கொள்கிறாள். ஆட்டுக்கிடாயைப் பலியாகக் கொடுத்து அதன் குருதியை வெள்ளரிசியில் பிசைந்து பலியாகத் தூவுகின்றாள். இசைக்கருவிகள் பல முழங்க நறுமணப் புகை எழுப்பி முருகனுக்குரிய மலையைக் குறிஞ்சிப் பண்ணில் பாடி வணங்குகிறாள். இவ்வாறாகக் குறமகள்/ கட்டுவிச்சி பற்றிய பதிவுகள் பாட்டுத்தொகை நூல்களில் விரவியுள்ளன.

தொல் தமிழ்ப் பண்பாடும் மீவியல்புச் சொல்லாடலும்

 தமிழ்ப் பண்பாடு என்பது ஒற்றைப்பண்பாடு அன்று. அது பல்வேறு இனக்குழுச் சமூகங்களின் ஒழுகலாறுகளின் கூட்டுத்தொகை ஆகும். அக்காலத் தமிழக நில எல்லைக்குள் வட வேங்கடம் முதல் தென் குமரி வரை பல்வேறு சமூகப் பண்பாட்டு வாழ்வியல் ஒழுகலாறுகளைப் பேணியும், தமிழ் மொழி பேசியும் வாழ்ந்து வந்த வெவ்வேறு இனக்குழுச்சமூகங்களின் பண்பாடுகளையும் ஒழுங்கமைத்துக் கொண்டதே தமிழ்ப் பண்பாடாகும். அத்தகைய ஒழுகலாறுகள் ஓரளவு ஒருமுகப் படுத்தப்பட்டே தமிழிலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கொள்ளலாம். இவ்வொழுகலாறுகள் பல்வேறு பண்பாடுகளின் கூட்டினைவாக, பல்வேறு நிலங்களில் வாழும், பல்வேறு வகையான மக்கள் சமூகங்கள் தாம் கொண்டுள்ள சடங்குகள், பண்பாட்டு ஒழுகலாறுகளைச் சடங்கியல், நிகழ்த்துதல்கள், உணவு, உடை, இருப்பிடம், நிகழ் கலைகள், தெய்வ நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள் என எல்லாவற்றையும் உள்ளடக்கியவையாக உள்ளன. அந்த வகையிலேயே இங்குத் தமிழ்ப் பண்பாடு என்பது பொருள் கொள்ளப்படுகிறது. பண்பாட்டைக் கட்டமைக்கும் காரணிகளுள் முதன்மையானதாகக் கருதப்படுவது நிலம், பொழுது என்னும் அடிப்படை களாகும். இவற்றை அடிப்படையாக வைத்தே பண்பாட்டின் அனைத்து இயக்கங்களும் நிகழ்கின்றன; நிகழ்த்தப்படுகின்றன. பண்டைய தமிழ்ச்சமூகத்தின் பண்பாட்டுச் சொல்லாடல்களையும்/ முறைகளையும் புரிந்து கொள்வதற்கும், அறிந்து கொள்வதற்கும் அடிப் படையாக அமைவன பாட்டுத்தொகை நூல்களாகும். இவற்றினூடாகவே தமிழ்ச் சமூகவியலைக் கட்டமைக்க முனையலாம். நிலத்தினை ஐந்தாகவும் அவற்றிற்குரிய பொழுதுகளைப் பெரும்பொழுது, சிறுபொழுது என இரண்டாகவும் பாகுபடுத்தியுள்ளனர். ஒவ்வொரு நிலத்திற்கும் சிறப்பான பொழுதுகளும், அங்கு வாழும் மக்கள் அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என அனைத்தும் ஒருங்கே அமைந்துள்ளன. இதனை அடிப் படையாகக் கொண்டே தமிழ்ப் பண்பாடும், வாழ்வியல் முறைகளும் கட்டமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்ச் சமூகத்தில் மீவியல்பு என்கிற அருஞ்சொல் புழக்கத்தில் இல்லாத போதிலும் மீவியல்பு என்னும் கருத்தமைவும் அதனை வலியுறுத்தும்/ பொருள்படுத்தும் வழக்காறுகளும் ஒழுகலாறுகளும் பண்பாட்டில் விரவிக் காணப்படுகின்றன. எனினும் மீவியல்பு பற்றிய பண்பாட்டுப் பதிவுகள் சீரிய முறையிலும் பெரிய அளவிலும் தமிழ்ச் சமூகச் சூழலில் அகழ்ந்தெடுக்கப் பட்டு ஆய்வுக்குட்படுத்துகிற போது தமிழ்ப் பண் பாட்டின் புதிய பரிமாணங்கள் பல வெளிச்சத்துக்கு வரும் என்பது திண்ணம்.

அணங்கு என்கிற சொல்லாடல் குறித்து இன்றைய சமூகத்தில் பல்வேறு வழக்காறுகள் காணப்படுகின்றன. சான்றாக மந்தையில் மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும் போது காளையும் பசுவும் சேரும் நிலையினை மாடு அணங்குவது என்றும், அது போன்று மரத்தைப் பற்றி நிற்கும் மாந்தரைப் பார்த்து மரத்தோடு அணங்கி யிருக்கிறான் என்றும் கூறுவர். இவ்வாறு அணங்கு என்பது இரண்டறக் கலத்தல், ஒன்றோடு ஒன்று சேருதல், ஒன்றின் அருகே இன்னொன்று வருதல் என்பவற்றைக் குறிக்கின்றது. இந்நிலையில் அணங்கு என்பது ஒரு செயல்பாடு/ செயல்பாட்டைக் குறிக்கக் கூடிய சொல்லாகவும் உள்ளது. சூரரமகளிர் அணங்கிற்று என்றும் கூறுவர். ஆனால் அணங்கு என்பது ஆணாகவோ, பெண்ணாகவோ சித்தரிக்கப் படவில்லை என்றே நினைக்கத்தோன்றுகிறது. அணங்கு என்பது ஓர் ஆற்றலின் செயல்பாட்டினைக் கூறுவதாக அமைந்தது. அது தனியாக ஓர் ஆற்றலாகக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்பது எனது கருத்து. இது மேலும் தொடர் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதாகும்.

இது போன்றே சூர்/சூரரமகளிர் என்கிற ஆற்றல் பற்றிய பதிவுகள் காணப்படுகின்றன. மக்கள் வழக் காற்றில் தெருக்கூத்து என்கிற நிகழ்த்துக் கலையில் சூரன் என்கிற கதாபாத்திரம் யாருக்கும் அடங்காதவன், வில்லன், அவன் எல்லோரையும் அடக்கி ஆள்பவன் இறுதியில் அழிந்து விடுவான். தெருக்கூத்தில் வரும் சூரன் இரவு 12 மணியளவில் நடுநிசியில்தான் நாடகத்தில் இடம் பெறுவான். பார்ப்பதற்கே அச்சத்தைத் தோற்றுவிக்கும் வகையில் முகமெல்லாம் சிவப்பு நிறம், பெரிய மீசை, பெரிய பற்கள், கோழி இறக்கையால் ஆன கிரீடம், கறுப்புச் சட்டை எனும் உருவத் தோற்றத் துடன் வருவான். அது போன்று மக்கள் வழக்கில்/பேச்சு வழக்கில் ஒருவனைப் பார்த்து அவன் என்ன சூரனா? என்றும், அதே போன்று திறமாக அனைவரும் வியக்கும் படியான செயல்களைச் செய்யும் பெண்பாலினரை அவ பெரிய சூரி என்றும் அழைக்கின்ற வழக்கம் இருக்கின்றது.

குடலைக் குத்திக் கிழிக்கும் வல்லமையுடைய கத்திக்குச் சூரி கத்தி என்ற பெயரும் உண்டு. சங்க இலக்கியத்தில் இடம்பெறும் சூர், சூரரமகளிர் எனும் ஆற்றலை மக்கள் வணங்கியமை, மக்கள் மத்தியில் இந்த ஆற்றலானது பெற்றிருந்த இடம் ஆகியவற்றைக் கொண்டு, இது ஒரு மீவியல் ஆற்றலாக இருந்தமையை அறிய முடிகிறது. சங்க இலக்கியங்களில் பேய் பற்றிய நம்பிக்கைகள், அவை உறையும் இடங்கள், அவற்றின் செயல்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து மக்கள் வழக்காற்றில் பேய் என்கிற சொல்லாடல் பயின்று வருகிறது. பேய் என்றால் கொடியது, தீயது, அச்சம் தரக்கூடியது போன்ற கருத்தமைவுகள் சமூகத்தில் உள்ளன. பேய்க் காமன் என்னும் தெய்வத்தினைத் தென் தமிழகத்தில் மக்கள் வணங்குகின்றனர். அந்த வகையில் பேய் என்பது தற்கால வழக்கத்திலும் பண்டைய தமிழ்ச் சமூகத்திலும் இயல்பை மீறிய ஆற்றலாகக் கருதப்பட்டு வந்துள்ளமையை அறிய முடிகிறது.

 பழந்தமிழ் இலக்கியங்களான பாட்டுத்தொகை நூல்களில் குறிக்கப் பெறும் வேலன் பழந்தமிழ்ச் சமூகத்தில் சிறப்புக்குரிய மாந்தனாக கருதப்பட்டிருக் கின்ற செய்தியினைக் காண முடிகிறது. இவன் முருகனுடைய வேலினைக் கையிலேந்தி முருகன் தம்மீது வரப் பெற்று தன்னை நாடிவரும் மாந்தர்களின் நோயினைப் போக்கும் ஆற்றல் பெற்றவன். அவன் மீது முருகு என்னும் ஆற்றல் இறங்கப் பெறுவதாக இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளமையினை அறிய முடிகிறது. மணமாகாத கன்னிப் பெண்களைச் சூர், அணங்கு போன்றவை தீண்டித் துன்புறுத்து வதாகவும் அதுபோன்றே முருகும் தீண்டுமெனவும் மக்கள் நம்பினர். அவ்வாறு துன்புறுத்தும் அணங்கு, சூர் போன்றவற்றை நீக்குவதற்கும், முருகினை அமைதிப் படுத்திப் பெண்ணை விட்டு விலக்கி வைக்கவும் வேலன் என்கிற பூசாரியை மக்கள் நாடினர்.

வேலன் பெண்களை அணங்கியிருக்கும் ஆற்றல் களை விலக்கும் பொருட்டுப் பல்வேறு சடங்குமுறை களை மேற்கொள்கிறான். அத்தகைய சடங்குகள், வேலனுடைய உருவ அமைப்பு ஆகியவை மக்களிட மிருந்து அவனைத் தனித்து அடையாளங்காட்டுகின்றன. வேலன் இயல்பை மீறிய மனிதனாகச் செயல்படுகிறான்; சடங்குகளைச் செய்து முருகனை அழைத்து அவனது புகழைப் பாடிக்கொண்டு வரும்போது அவன் ஒரு வகையான மருளுக்கு உள்ளாகிறான். இது முருகு அவன் மேல் இறங்கியதற்கான செயல்பாடாகும். அவன் வேலைக் கையில் ஏந்திக்கொண்டு மருளாடுகிறான். முருகனுடைய பூசாரியான வேலன் நடத்தும் மருளாட லானது வெறியயர்தல், வெறியாடல், வெறியாட்டு எனச் சங்க இலக்கியத்தில் குறிக்கப் பட்டுள்ளது.

மக்கள் வழக்குகளில் காணப்படும் வெறி பிடித்தவன், வெறி நாய், மாடு வெறிக்குது போன்ற சொல்லாடல்களும் இங்கு இணைத்து எண்ணத்தக்கன. வெறி என்பது வேறொன்று தன்னுள் புகுதல், தன்னுடைய இயல்பான நிலையிலிருந்து மாறுபட்டுத் தன் நிலையை மறத்தல், வேறொன்றாக மாறுதல் என்னும் நிலைகளைக் குறிக்கிறது. இந்நிலையில் வெறியாடும் வேலன் இயல்பினை மீறியவனாக உருவகப் படுத்தப்படுகிறான். இது போன்று கட்டுவிச்சி/ குறத்தி வெறியாடும் நிலைகளும் சங்க இலக்கியங்களில் பதிவு பெற்றுள்ளன. இத்தகைய கட்டுவிச்சி/ முதுவாய்ப் பெண்டிர் நடப்பது, நடக்கவிருப்பது, நடந்து கொண் டிருப்பது என முக்காலங்களையும் உணரும் ஆற்றல் பெற்றவளாகத் திகழ்கின்றாள். அவ்வாறு முக்காலமும் உணர்ந்து மக்களின் அச்சத்தினைப் போக்கும் வகையில் செயல்படும் இம்மகளிர் சமூகத்தில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவர்களாவர். இவர்கள் வெறி யாடலையும் நிகழ்த்தியிருக்கின்றனர். தமிழர்களின் தொன்மையான சமூகம் தாய்வழிச் சமூகமாக இருந் திருக்கக் கூடும் என்பதற்கான எச்சங்களில் இதுவும் ஒன்றாகும். தாய்வழிச் சமூகத்தில் பெண்ணே பூசாரி யாகவும் இருந்துள்ளாள் என்று கருதுவதற்கு திருமுரு காற்றுப்படை பழமுதிர்ச்சோலைப் பகுதி இடம் தருகிறது. சிலப்பதிகாரத்தில் வேட்டுவர்களின் தெய்வ மான கொற்றவையின் பூசாரி சாலினி என்பதும் பெண்ணே ஆகும். எனவே கட்டுவிச்சி/ முதுவாய்ப் பெண்டிர் போன்ற மகளிர் இயல்பை மீறியவர்களாகக் கருதப்பட்டமையினை அறியமுடிகிறது.

 முருகன், அணங்கு, சூர்/சூரர மகளிர் போன்றவை தாக்கி வருத்தும் ஆற்றல்களாக கருதப்பட்டிருக்கின்றன. இவ்வாற்றல்கள் வேண்டும் என்கிற போது ஒருவரை அணங்கும், துன்புறுத்தும் இவை இயல்பை மீறிய ஆற்றல்கள் ஆகும். ஆனால் வேலன், முதுவாய் பெண்டிர்/ கட்டுவிச்சி போன்றவர்கள் மனிதர்கள் ஆவர். இவர்கள் உருவம் உள்ளவர்கள். இவர்கள் மீது வேறொரு ஆற்றல் புகுந்தே பிரிதொரு நிலைக்குத் தளமாற்றம் அடைகின்றனர். அதற்காகப் பல்வேறு சடங்குமுறை களை மேற்கொள்கின்றனர். அந்தச் சடங்கு முறைகள், சடங்குகளை மேற்கொள்ளும் நேரம் ஆகியனவும் இவர்களை வேறொரு தளத்தில் இருத்துகின்றன. அத்தகைய தளம்தான் இயல்பை மீறிய மீவியல்புத் தளம் ஆகும். பண்டைய தமிழ்ச் சமூகத்தில் இயல்பை மீறிய ஆற்றல்கள், மாந்தர்கள் பற்றிய பதிவுகள் இடம் பெற்றுள்ளனவே தவிர இவர்கள் மீவியல்பு என்கிற சொல்லாடல் சுட்டப்பெறவில்லை. இப்பகுதி தனித்த விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.