சீமானுக்கு எதிராக யார் எழுதினாலும், பேசினாலும் அவர்களை எல்லாம் மிகக் கீழ்த்தரமாக வசை பாடுவதையே ஒரு தொழிலாக செய்து வருகின்றார்கள் சீமானின் அடிமைத் தம்பிகள். எப்படி மோடிக்கு எதிராகப் பேசும் அனைவருமே இந்திய மக்களுக்கு எதிரானவர்களாக, தேசத் துரோகிகளாக சித்தரிக்கப் படுகின்றார்களோ, அதே போல சீமானுக்கு எதிராக எழுதுவதும், பேசுவதும் ஒட்டு மொத்த தமிழர்களுக்கு எதிரானதாக சித்தரிக்கப் படுகின்றது.

seeman in public meetingநாம் ஆதாரங்களோடு சீமானின் பொய்ப் பித்தலாட்டங்களை அம்பலப் படுத்தினால், அதை மறுத்து ஆதாரங்களோடு விவாதம் செய்யத் துப்பில்லாத அரசியல் நிர்வாணிகளாக, மொக்கைப் பேர்வழிகளாக இருக்கும் சீமானின் தம்பிகள், சீமானை அம்பலப் படுத்துபவர்களைப் பார்த்து “கதறுங்கடா கதறுங்க...... நீங்களெல்லாம் கதறுனா எங்க அண்ணன் சரியான பாதையில்தான் போய்க் கிட்டு இருக்கிறாரு…” என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள். ஏதோ சீமானுக்கு மட்டும் தான் தமிழ்நாட்டின் மீது அக்கறை இருப்பது போலவும், மற்றவர்கள் எல்லாம் தமிழ்நாட்டை அழிக்க சதி செய்வது போன்றுவதுமான மனநோய்க்கு ஆளாகி, உளறிக் கொண்டு இருக்கின்றார்கள்.

சீமானை அவரது அடிமைத் தம்பிகள் எதற்காக பின்பற்றுவதாகச் சொல்கின்றார்களோ அதில் ஏதாவது உண்மை இருக்கின்றதா என்பதை ஒவ்வொன்றாக நாம் பார்ப்போம்.

சீமான் சிறுபான்மையின மக்களை தமிழர்களாக ஏற்றுக் கொண்டிருக்கின்றாரா?

சில சிறுபான்மையின இளைஞர்கள் இன்று நாதகவிற்கு ஆதரவாகக் களமாடுவதை நம்மால் பார்க்க முடிகின்றது. அதற்குக் காரணம் சீமான் சிறுபான்மையின மக்களை தமிழர்கள் என்று ஏற்றுக் கொள்வதாக அவர்கள் கூறுகின்றார்கள். சீமானும் பல இடங்களில் அப்படிப் பேசியதை நாமும் கேட்டிருக்கின்றோம். ஆனால் அது உண்மையா? நாதக கட்சி ஆரம்பித்த போது வெளியிட்ட அதன் பழைய ஆவணத்தில் என்ன சொல்லப்பட்டிருந்தது? “தமிழ்நாட்டு ஆட்சியை திராவிடர்களிடம் இழந்தோம். தொடர்ந்து இன்றுவரை திராவிடர்களிடம் அடிமையாக இருந்து வருகிறோம் என்ற அறிவும் மானமும் அற்றவர்களாக இருக்கிறோம். மேலும் நம்முடைய முந்தைய ஆண்டைகளான முகமதியர்கள், விசயநகர நாயக்கர்கள், மராட்டியர்கள், ஆங்கிலேயர்கள் முதலியோருடைய அரசியல் சின்னங்கள் அகற்றப் படவில்லை. அவர்களுடைய பொருள் ஆளுமைகளும் (நிலவுடைமை, தொழிலுடைமை) நீக்கப் படவில்லை, கட்டுபடுத்தப் படவில்லை என்ற புரிதல் அற்றவர்களாக இருக்கிறோம்" என்று விஷத்தைக் கக்கி இருந்தது. சீமானின் எதிரிகள் பட்டியலில் முதலில் இருந்தவர்கள் முகமதியர்கள் தான்.

முஸ்லிம்களின் அரசியல் சின்னங்கள் அகற்றப்பட வேண்டும். அவர்களுடைய பொருள் ஆளுமைகளும் அதாவது நிலவுடைமை, தொழிலுடைமை போன்றவற்றை நீக்க வேண்டும் என்று சொன்ன சீமான்தான் சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவானவரா? இது யாருடைய குரல்? நாம் ஆர்.எஸ்.எஸின் குரல் என்கின்றோம். எப்படி மோகன் பகவத் இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்கள் என்று சொல்கின்றாரோ அதையேதான் சீமான் வேறு ஒரு வடிவில் அப்போது சொன்னார், இப்போது அதே தோசையை திருப்பிப் போட்டு வேறு வடிவில் சொல்லிக் கொண்டு இருக்கின்றார். அதாவது இங்கிருக்கும் சிறுபான்மையின மக்கள் அனைவரும் முப்பாட்டன் முருகனின் வாரிசுகள் என்று. ஒரு காலத்தில் மோடியைப் புகழ்ந்து புளகாங்கிதம் அடைந்ததால் சீமான் இப்படி எழுதி இருப்பாரா? இல்லை திருச்சி சங்கர் அய்யர் இதை எழுதிக் கொடுத்திருப்பாரா? எனவே ஆர்.எஸ்.எஸின் கருத்தும், சீமானின் கருத்தும் ஒன்றே என நாம் சொல்கின்றோம். ஆனால் சீமானின் தம்பிகளோ “கதறுங்கடா கதறுங்க... நீங்களெல்லாம் கதறுனா எங்க அண்ணன் சரியான பாதையில்தான் போய்க் கிட்டு இருக்கிறாரு…” என்று சொல்கின்றார்கள்.

சீமான் சாதிக்கு எதிரானவரா?

சீமானின் சில காணொளிகளை கேட்டுவிட்டு பல நாதக அடிமைத் தம்பிகள் அப்படித்தான் நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் ஒருவன் சாதிக்கு எதிராக உறுதியாக நிற்கின்றான் என்பதை எப்படி மதிப்பிடுவது? நிச்சயமாக அவனது செயல்பாடுகளை வைத்துத் தான் மதிப்பிட முடியும்? இமானுவேல் சேகரன் கொலைக்கு முக்கிய காரணமானவர் என்று குற்றம் சாட்டப்பட்ட முத்துராமலிங்கம் சிலைக்கு வருடம் தவறாமல் மாலை போட்டு மரியாதை செலுத்துவதோடு ‘தேசியமும் தெய்வீகமும் எனது இரண்டு கண்கள்’ (இங்கு முத்துராமலிங்கம் குறிப்பிடும் தேசியம் என்பது இந்திய தேசியம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்) என்ற வார்த்தையை மேடை தோறும் மறக்காமல் சொல்லும் சீமானிடம் சாதிப் பற்று இல்லை என்று நாம் நம்ப வேண்டும் என நாதக அடிமைகள் எதிர்பார்க்கின்றார்கள். தமிழ்நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் எனச் சொல்லும் சீமான் ஒருநாளும் இந்த நாட்டின் பூர்வகுடி மக்களான தலித்துகளும், பழங்குடிகளும் ஆள வேண்டும் எனச் சொன்னதில்லை.

தமிழ்நாட்டில் நடந்து வரும் சாதிய ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து சீமான் இதுவரை தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவில்லை என்பதோடு, அப்படி தலித்துகள் மீது சாதிக் கலவரத்தை திட்டமிட்டு உருவாக்கும் சக்திகளுடனும், சாதிமறுப்புத் திருமணத்திற்கு எதிராகவும் செயல்படும் சூத்திர சாதி வெறியர்களை அன்போடு அரவணைத்துச் செல்லும் கீழ்த்தரமான வேலையையும் இன்று வரையிலும் செய்து வருகின்றார். பாமகவுக்கும், தமிழ்நாட்டில் செயல்படும் பல்வேறு நாடார் சாதி, தேவர் சாதி அமைப்புகளோடும் சீமானுக்கு உள்ள உறவு என்பது வெளிப்படையானது. மேலும் தமிழ்நாட்டில் மிக வறிய நிலையில் கடும் அடக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் உள்ளாக்கப்படும் அருந்ததியர்கள் மீது வன்மத்தோடு தெலுங்கர்கள் என்ற முத்திரை குத்தி, அவர்களை மேலும் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தும் வேலையையும் நாதக கூச்சமே இல்லாமல் இன்று வரையிலும் செய்து வருகின்றது என்று நாம் சொல்கின்றோம். சீமானின் அடிமைத் தம்பிகளோ “கதறுங்கடா கதறுங்க... நீங்களெல்லாம் கதறுனா எங்க அண்ணன் சரியான பாதையில்தான் போய்க்கிட்டு இருக்கிறாரு…” என்று சொல்கின்றார்கள்

உண்மையில் தமிழ் மொழியின் மீது சீமானுக்குப் பற்றுள்ளதா?

‘ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுபவர்களை எல்லாம் கட்டி வைத்து அடிப்பேன்’ என்று சொன்ன சீமான் தம்முடைய முந்திய கட்சி ஆவணத்தில் "... வந்தேறிகளின் மினுக்கத்தில் மயக்கமுற்ற இரண்டகத் தமிழர்கள் தம்மொழியை மனுவாளர்களின் சமற்கிருதக் கலப்பிற்கு இடம் தந்ததால் பிறந்தவையே திராவிட மொழிகள் (தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, மராட்டியம், முதலியன) அதனால் உண்டானவர்கள் திராவிடர்கள்…..” என்கின்றார்.

உலகில் உள்ள அனைத்து வரலாற்று, மொழி அறிஞர்களும் தமிழை திராவிட மொழி என்றும், தமிழர்களை திராவிடர்கள் என்றும் அழைக்கும் போது இந்த ‘அறிவியல் அறிஞர்’ மட்டும் அதை ஒப்புக் கொள்ள மறுக்கின்றார். காரணம் உலகில் உள்ள வரலாற்று அறிஞர்கள் அந்தச் சொல்லை இன அடிப்படையில் குறிப்பிடுவதால் அதில் எங்கே ஆரியர்கள் விடுபட்டு விடுவார்களோ என்ற பார்ப்பன அடிமைத்தனம். அதுமட்டுமல்ல, சமஸ்கிருத மொழிக்கு இடம் கொடுத்த மொழிகளை திராவிட மொழிகள் என்று குறிப்பிடுகின்றது பழைய கட்சி ஆவணம். ஆனால், மணிப்பிரவாள நடை என்ற புதிய நடைப்போக்கை தமிழகத்தில் தோற்றுவித்து தமிழ் மற்றும் சமஸ்கிருதத் தொடர்களை மாற்றி, மாற்றி எழுதி, தமிழ் மொழியை சிதைத்த பார்ப்பனக் கூட்டத்தை மட்டும் தமிழர்கள் என்று இன்றும் சீமான் உறுதியாக சொல்லிக் கொண்டிருக்கின்றார்.

உண்மையிலேயே சீமானுக்கு தமிழர்கள் மீதும் தமிழ் மொழியின் மீதும் பற்று இருக்குமேயானால் தமிழ் மொழியைச் சிதைத்து தமிழனின் அறிவியல் அறிவை முடமாக்கி, அவனை சாதிகளாகப் பிரித்த பார்ப்பனக் கூட்டத்தை தமிழர் அல்ல என்று சொல்லி இருப்பார். அவர்களின் இலக்கியங்களையும் நெருப்பிலிட்டுக் கொளுத்தியிருப்பார். ஆனான் சீமானின் சித்தாந்த வழிகாட்டியான சங்கர் அய்யர் கோபித்துக் கொள்வார் என்று அதை விட்டுவிட்டார் என்று நாம் சொல்கின்றோம். சீமானின் அடிமைத் தம்பிகளோ “கதறுங்கடா கதறுங்க... நீங்களெல்லாம் கதறுனா எங்க அண்ணன் சரியான பாதையில்தான் போய்க்கிட்டு இருக்கிறாரு…” என்று சொல்கின்றார்கள்.

ஈழத் தமிழ் மக்கள் மீதும் பிரபாகரன் மீதும் சீமானுக்குப் பற்று இருக்கின்றதா?

வெறும் ஐந்து நிமிடங்கள் கூட பிரபாகரனை சந்தித்துப் பேசாத சீமான் தினம் தினம் அவிழ்த்துவிடும் புளுகு மூட்டைகளிலேயே மிகப் பிரபலமான புளுகு மூட்டை எனக் கருதப்படும் ஆமைகறி தின்றது முதல் பன்றிக் கறி தின்றது வரையிலான புளுகு மூட்டைகள் ஒன்றே சீமான் மாபெரும் பொய்யன் என்பதற்குப் போதுமானதாக இருந்தாலும், நாம் இன்னும் தீவிரமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஈழப்படுகொலைக்குப் பின்னர் ஐநாவின் டப்ளின் தீர்ப்பாயத்தில் நடந்த விசாரணை மிக முக்கியமானது. அதில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 41 பக்க அறிக்கையை சமர்ப்பித்திருந்தனர். அதில் LTTEயினர் போர்க் குற்றம் புரிந்தனர் என்று கூறியுள்ளார் சீமான். அந்த அறிக்கையில் 40 ஆவது பக்கத்தில், "ஆண், பெண், குழந்தைகள் என்ற பேதமின்றி அனைவரையும் புலிகள் போரில் ஈடுபடுத்தினர், குழந்தைகளை LTTEயினர் பெற்றோரிடம் இருந்து பிடுங்கி, தங்களின் படைகளில் இணைத்துக் கொண்டனர். திருமணமான பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை LTTEயினர் செய்தனர், மேலும் போரின் இறுதிக் கட்டத்தில் LTTEயினர் அப்பாவி மக்களை கேடயமாகப் பயன்படுத்தியதாகவும், தப்பிக்கப் பார்த்த தமிழர்களை சுட்டுக் கொன்றனர்" என்றும் சிங்கள அரசாங்கம் பிரபாகரன் மீது கூறும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் கூறியிருந்தார்கள்.

இது எல்லாம் சீமானுக்குத் தெரியாமல் நடந்தது என்று அவரது அடிமைத் தம்பிகள் சொல்லக்கூடும். இதுதொடர்பாக, அந்த அறிக்கையை சமர்ப்பித்த பால்நியூமனே அவரின் வாயால் கனடா வானொலியில் ஒப்புக் கொண்டு பேசியது மட்டும் இல்லாது, அதை மறுமுறை பதிவு செய்து நியாயம் கற்பித்த ஆடியோவும் வெளியாகி அப்போதே பலரால் கண்டனத்திற்கு உள்ளாகியது. சீமான் ஒரு அப்பட்டமான இன துரோகி என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?

அது மட்டுமல்ல விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்க வேண்டும் எனப் போராடிக் கொண்டு இருக்கும் போது, விடுதலைப் புலிகள் தான் ராஜீவ் காந்தியைக் கொன்றதாக பொருள் வரும்படி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக சொன்ன நபர்தான் சீமான்.

மேலும் "ஓர் ஈழ அகதிப் பெண்ணைத்தான் தான் திருமணம் செய்வேன்" என்று சொன்ன சீமான் அதைக் காப்பாற்றினாரா? 'பிரபாகரனை தமிழகம் கொண்டு வந்து தூக்கிலிட வேண்டும்' என்று சட்டமன்றத்தில் ஜெயலலிதாவுடன் சேர்ந்து தீர்மானத்தை இயற்றிய காளிமுத்து அவர்களின் மகளைத் தானே திருமணம் செய்தார். அத்தோடு அப்படிப்பட்ட தீர்மானம் போட்ட காளிமுத்துவை பெருந்தமிழராக அறிவித்து வருடந்தோறும் வீரவணக்கமும் செலுத்தி வருகிறார். ‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என்று சொன்ன ஜெயலலிதாவுக்கு கொஞ்சம் கூட மான, வெட்கமே இல்லாமல் ‘இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என்று ஓட்டு கேட்ட கேடுகெட்ட நபரிடம் இருந்து நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும் என்று நாம் கேட்கின்றோம். ஆனால் சீமானின் அடிமைத் தம்பிகளோ “கதறுங்கடா கதறுங்க... நீங்களெல்லாம் கதறுனா எங்க அண்ணன் சரியான பாதையில்தான் போய்க்கிட்டு இருக்கிறாரு…” என்று சொல்கின்றார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள இயற்கை வளங்களை எல்லாம் நாதகவால் மட்டுமே காப்பாற்ற முடியும் என சீமான் சண்டமாருதம் செய்கின்றாரே?

இதைவிட ஒரு பெரும் பொய் இருக்கவே முடியாது. தூத்துக்குடியையே அழித்துக் கொண்டிருந்த ஸ்டெரிலைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கைதாகி சிறையில் இருந்த அப்போதைய நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரான அ.வியனரசு அவர்களை ஜாமீனில் கூட சீமான் எடுக்கவில்லை என்பதோடு, கட்சிக்குள் இருக்கும் ஒரு குறிப்பிட்ட சாதியின் (நாடார்) ஆதிக்கத்தையும், ஜனநாயக மறுப்பையும் கேள்வி கேட்டதற்காக கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார். அதுமட்டுமல்ல தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை அழிப்பதில் முன்னிலையில் இருந்த மணற்கொள்ளையன் வைகுண்டராஜனுடனும், கிரானைட் கொள்ளையன் பி.ஆர்.பி உடனும் சீமான் நெருக்கமான உறவைப் பேணி வருகின்றார் என்று நாம் சொல்கின்றோம். ஆனால் சீமானின் அடிமைத் தம்பிகளோ “கதறுங்கடா கதறுங்க... நீங்களெல்லாம் கதறுனா எங்க அண்ணன் சரியான பாதையில்தான் போய்க்கிட்டு இருக்கிறாரு…” என்று சொல்கின்றார்கள்.

சீமான் பெண்ணுரிமைக் காவலரா?

இன்று பெண்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் சரி சமமாக இடங்களைத் தருகின்றேன் என்று சொல்லும் சீமானின் யோக்கியதை என்ன? சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கின்றன. பெண்களைப் பற்றிய சீமானின் பார்வை என்னவோ, அதே தான் அவரது கட்சியைச் சேர்ந்த ஆணாதிக்கப் பொறுக்கிகளின் பார்வையும். நாதகவிற்கு எதிராக பெண் தோழர்கள் பேஸ்புக் போன்றவற்றில் கருத்துக்களைத் தெரிவித்தால் பின்னூட்டத்தில் சென்று அருவருக்கத் தக்க வகையில் ஆபாசமாகக் கருத்திடுவதை இன்று வரையிலும் சீமானின் தம்பிகள் ஒரு தொழிலாகவே செய்து வருகின்றார்கள். நமக்குத் தெரிந்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்களிலேயே "ங்கோத்தா… ங்கொம்மா…" என்று பேசும் ஒரே மட்டமான ஆள் சீமான் மட்டுமே. ஆனால் இது போன்ற நபர்களுக்கு சில பெண்கள் கூட பரிந்து பேசுவது வேதனையானது. எனவே சீமான் ஓர் ஆணாதிக்கவாதி என்கின்றோம். ஆனால் சீமானின் அடிமைத் தம்பிகளோ “கதறுங்கடா கதறுங்க... நீங்களெல்லாம் கதறுனா எங்க அண்ணன் சரியான பாதையில்தான் போய்க்கிட்டு இருக்கிறாரு…” என்று சொல்கின்றார்கள்.

நாதக தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மாற்று சக்தியாக விளங்குகின்றதா ?

நாதக தம்பிகள் அப்படித்தான் நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். இன்னும் சீமானின் காணொளிகளைத் தாண்டி முதல்நிலை ஆதாரங்களை நோக்கி நகராததால் ஏற்பட்ட துன்பியல் நிகழ்வு அது. சீமான் முன்வைக்கும் அனைத்து கருத்துக்களுமே ஏற்கெனவே இங்கிருக்கும் CPM, CPI மற்றும் பல்வேறு நக்சல்பாரி மற்றும் மாவோயிச, சுற்றுச்சூழல் அமைப்புகளால் சொல்லப்பட்டு வந்ததுதான். ஆனால் நாகத தம்பிகள் அவை எல்லாம் சீமானின் மூளையில் இருந்து உதித்த முத்துகள் என்று உளப்பூர்வமாக நம்புகின்றார்கள். அதனால் கோணல் மாணலாக ஓடிக் கொண்டிருக்கும் தமிழ்நட்டின் அரசியலை நேராக செலுத்தக் கூடிய வல்லமை ‘ஆள் இன் ஆல் அழகு ராஜாவாக’ இருக்கும் சீமானிடம் மட்டுமே இருப்பதாக சத்தியம் செய்கின்றார்கள்.

சீமானின் தம்பிப் பிள்ளைகள் என்னதான் தங்கள் கருத்தில் உறுதியாக இருந்தாலும் ஏற்கெனவே திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளில் பல்லாண்டுகளாக உறுப்பினர்களாக இருக்கும் யாருமே சீமானை இப்போதுவரை ஒரு பொருட்டாகக் கூட எடுத்துக் கொள்ளவில்லை. காரணம், அவர்கள் சீமானின் அரசியலில் எந்தப் புதுமையோ, புரட்சியோ காணவில்லை. குறைந்தபட்சம் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருக்கும் ஒரு கடைநிலை தொண்டனுக்கு இருக்கும் அரசியல் அறிவு கூட சீமானின் அடிமைத் தம்பிகளிடம் இல்லை என்பதைத்தான் இது காட்டுகின்றது என்று நாம் சொல்கின்றோம். ஆனால் சீமானின் அடிமைத் தம்பிகள் “கதறுங்கடா கதறுங்க... நீங்களெல்லாம் கதறுனா எங்க அண்ணன் சரியான பாதையில்தான் போய்க்கிட்டு இருக்கிறாரு…” என்று சொல்கின்றார்கள்

நாதக ஆட்சியைப் பிடிக்கும் என்று உறுதியாக தம்பிகள் நம்புகின்றார்களே?

சீமானின் தம்பிகளின் நிலை தற்போது இலவு காத்த கிளிகளின் நிலையைப் போல ஆகி இருக்கின்றது. தேர்தலுக்குத் தேர்தல் தங்களின் ஓட்டு சதவீதம் உயர்ந்து வருவதாக சீமான் தொடர்ந்து சொல்லி வருகின்றார். ஆனால் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மணப்பாறை ஊராட்சியில் சீமான் கட்சிக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஒரே ஒரு ஓட்டு என்றால் வேட்பாளரின் குடும்பத்தினர் கூட ஓட்டு போடவில்லையா என்று மகா ஜனங்கள் எல்லாம் சீமானைப் போலவே புஹா..ஹா..ஹா.. என்று சிரித்துக் கொண்டு இருக்கின்றார்கள். மேலும் பெரும்பாலான தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் 10 முதல் 50 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றுள்ளதாகவும் முன்னணி ஊடகங்களில் எல்லாம் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அண்ணனின் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு வெற்றி பெறும் உத்தி கிராமப்புறங்களில் சுத்தமாக எடுபடவில்லை என்பதைத்தான் இது காட்டுகின்றது.

யூடியூபில் இரண்டில் இருந்து மூன்று லட்சம் பேர்வரை சீமானின் காணொளியை பார்ப்பதால் தம்பிகள் எல்லாம் மிதப்பில் இருந்தார்கள். அனிருத்தின் பாடல்களைக் கூடத்தான் பல கோடி பேர் யூடியூப்பில் பார்த்திருக்கின்றார்கள். அதற்காக அனிருத் தேர்தலில் நின்று முதலமைச்சர் ஆகிவிட முடியுமா? ஏதோ பாத்தமா, கேட்டமா, புஹா..ஹா..ஹா.. சிரிச்சமா., போனமானு இல்லாமா அதிகமா ஆசைப்பட்டா இப்படித்தான் ஆகும். அண்ணன் கோட்டையை பிடிக்கப் போகின்றாரோ இல்லையோ... அண்ணனை நம்பி களத்தில் இறங்கியவர்கள் இருப்பதை எல்லாம் கோட்டை விட்டுவிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் அண்ணனோ இவ்வளவு ரணகளத்திலும் கூட கூசாமல் உள்ளாட்சி தேர்தலில் 10 சதவீதம் ஓட்டு கிடைத்ததாக போகிற போக்கில் அடித்து விடுகின்றார். அவரது அடிமைத் தம்பிகளோ அது எப்படி சாத்தியம் என்று யோசிக்காமல் வழக்கம் போல கைதட்டி ஆராவரம் செய்கின்றார்கள். நாம் எங்கே அந்த 10 சதவீதத்திற்கு ஆதாரம் கொடு என்று கேட்டால், அதற்கும் வழக்கம் போல “கதறுங்கடா கதறுங்க... நீங்களெல்லாம் கதறுனா எங்க அண்ணன் சரியான பாதையில்தான் போய்க்கிட்டு இருக்கிறாரு…” என்று சொல்கின்றார்கள்.

நீங்கள் ஆர்எஸ்எஸ் பொய்யர்களிடம் எப்படி விவாதம் செய்ய முடியாதோ, அதே போலத்தான் நாதக அடிமைத் தம்பிகளிடமும் விவாதம் செய்ய முடியாது. காரணம் இரண்டு பேருமே, உண்மை என்றால் கிலோ என்ன விலை என்று கும்பலைச் சேர்ந்தவர்கள். நாம் எவ்வளவு தான் ஆதாரங்களை வைத்து எழுதி இருந்தாலும், அதற்கு நேரடியான பதிலை நாதக தம்பிகளிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது.

நாதகவை அம்பலப்படுத்துவதை பெரியாரிய இயக்கங்களும், மார்க்சிய இயக்கங்களும் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும். நாதக தம்பிகளின் ஆபாசமான அவதூறுகளை எல்லாம் நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. சாக்கடையில் படுத்து உருளும் பன்றிகளையும், தெருவில் வருவோர் போவோரை எல்லாம் பார்த்து காரணமே இல்லாமல் குரைக்கும் நாய்களையும் எப்படி கடந்து போகின்றோமோ, அப்படி கடந்து போய்விட வேண்டும். விவாதம் என்பது எப்போதும் உண்மைகளை நோக்கியே இருக்கட்டும்.

- செ.கார்கி

Pin It