பத்தாண்டுகளுக்குப் பின்னால் ஒரு நெருக்கடியான காலத்தில் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் திமுக ஆட்சி அமைக்கின்றது. திமுக கூட்டணி 159 இடங்களில் வென்றிருக்கின்றது. திமுக தனித்தே 130 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. மோடியின் அடிமைகளாய் தமிழ்நாட்டின் நலன்களைக் காவு கொடுத்த அதிமுக அடிமைகள், ஆட்சியை இழந்தது சமூக அக்கறை கொண்டவர்களை நிம்மதிப் பெருமூச்சுவிட வைத்திருக்கின்றது. அந்தக் கட்சியின் ஓபிஎஸ், ஜெயக்குமார், பாண்டியராஜன் போன்றவர்களே தோல்வி அடைந்து இருக்கின்றார்கள். அதிமுக கூட்டணி 75 இடங்களில் வென்றிருக்கின்றது.
ஆனால் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என கணிக்கப்பட்ட சங்கிகள் நான்கு இடங்களில் வெற்றி பெற்றது சமூக வலைதளங்களில் இருந்து உண்மை வெகு தூரத்தில் இருப்பதை உறுதிப்படுத்துகின்றது.
அதிமுகவின் வாக்குகள் பிஜேபிக்கு விழுந்ததால்தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள் என நாம் கடந்து சென்றுவிட முடியாது. அதிமுக பெற்ற ஏறக்குறைய 33 சதவீத வாக்குகளையும் திமுக பெற்ற ஏறக்குறைய 38 சதவீத வாக்குகளையும் நோக்கினால் இவ்வளவு மோசமான நிர்வாகத் திறனற்ற ஆட்சியை எடப்பாடி கொடுத்தாலும், தமிழ்நாட்டின் மீது பல நாசகார திட்டங்களைக் கொண்டு வந்த பிஜேபியோடு அவர்கள் கூட்டணி வைத்திருந்தாலும், மக்கள் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் ஓட்டு போடும் மனநிலையில் இருந்திருக்கின்றார்கள் என்பதைத்தான் காட்டுகின்றது. இதில் அதிமுக ஓட்டுக்கு 2000 வரை பணம் கொடுத்ததும் கூட அதன் வாக்கு சதவீதம் உயர்ந்ததற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
எப்படி இருந்தாலும் பிஜேபியின் வெற்றி, நிச்சயம் அதற்கு தமிழ்நாட்டில் பெரிய தலைவலியைத்தான் ஏற்படுத்தப் போகின்றது. குறிப்பாக அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றோ, ஏழு பேரின் விடுதலை தொடர்பாகவோ, நீட் சம்மந்தமாகவோ திமுக கொண்டு வரும் திட்டங்களுக்கு வேறு மாற்று வழியே இல்லாமல் நிச்சயம் அதிமுக ஆதரவு தெரிவித்து திமுகவோடு இணைந்து கொள்ளும். ஆனால் சங்கிகளோ என்ன செய்வது என்று தெரியாமல் கதறப் போகின்றார்கள்.
வழக்கம் போல இந்தத் தேர்தலிலும் அதிபர் சீமான் அவர்களின் நாதக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்திருக்கின்றது. வாக்கு சதவீதம் கூட பெரிய அளவில் உயரவில்லை. உண்மையில் ஒரு மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என நினைக்கும் யாருமே சீமான் அவர்களைப் போல கிச்சுக் கிச்சு மூட்டும் புளுகுக் கதைகளை கூச்சமில்லாமல், குற்றவுணர்வு இல்லாமல் பேசித் திரிய மாட்டார்கள்.
தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை சீமான் அவர்களுக்கு வெற்றி பெற வேண்டும் என்ற எந்த நோக்கமும் எப்போதும் இருந்தது கிடையாது. சீமான் அவர்களின் ஒரே நோக்கம் தமிழ்நாட்டில் வேறுன்றி இருக்கும் பார்ப்பனிய எதிர்ப்பு மரபை உடைத்து சீர்குலைப்பதுதான்.
பல மேடைகளில் தன்னுடைய பார்ப்பன விசுவாசத்தை அவர் பொங்க விடுவதும், அந்த மேடைகளில் எல்லாம் திட்டமிட்டு கலைஞரையும் இன்னும் திராவிட அரசியலின் அடிநாதமாக பார்க்கப்படுபவர்களையும் இழிவு படுத்துவதும்தான் அவரின் ஒரே முதன்மையான வேலையாக இருந்திருக்கின்றது.
திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதைத் தாண்டி சீமானிடம் எந்த உருப்படியான அரசியல் திட்டமும் இல்லை. சீமான் அவர்களை நம்பி தேர்தலில் போட்டியிடுவது தம்பிகளின் விருப்பமாக இருக்கலாம். ஆனால் சீமானுக்கு ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லை என்பதை இனியாவது அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அடுத்து இந்தத் தேர்தலில் போட்டியிட்ட மய்யம், அமமுக, தேமுதிக, சமக போன்றவை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் மண்ணைக் கவ்வி இருக்கின்றன. மக்கள் இவர்களை ஒரு பொருட்டாகவோ மாற்று சக்தியாகவோ கூடப் பார்க்கவில்லை என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அநேகமாக இந்தத் தேர்தலோடு இவர்களின் அரசியல் வாழ்க்கை முடித்து வைக்கப்படலாம்.
தமிழ்நாட்டின் நிலை இதுவென்றால் கேரள மக்கள் தங்கள் மண்ணில் மதவாத நச்சுக் கிருமிகளுக்கு இடமில்லை என சங்கிகளை பின்னங்கால் பிடரியில் பட ஓட ஓட விரட்டி அடித்திருக்கின்றார்கள். அங்கே ஒரு இடத்தில் கூட பிஜேபியால் வெற்றி பெற முடியவில்லை.
சபரிமலை பிரச்சினையை வைத்து காலுன்ற நினைத்த சங்கிகளுக்கு நிச்சயம் இது அதிர்ச்சியைக் கொடுத்து இருக்கும். அந்த வகையில் தமிழ்நாட்டை விட கேரள மக்கள் முற்போக்கானவர்களாகவே உள்ளார்கள்.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும் அங்கே பிஜேபி பெரிய அளவில் வளர்ந்திருப்பதை மறுக்க முடியாது. அந்தக் கட்சி அங்கே ஏறக்குறைய 38 சதவீத வாக்குகளை வாங்கி இருக்கின்றது.
இது பெரும்பான்மையாக வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதத்தைவிட 10 சதவீதம் மட்டுமே குறைவு. உண்மையில் பிஜேபி காலி செய்தது காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வாக்குகளைத்தான். கம்யூனிஸ்ட்கள் அங்கே வேலை செய்தார்களா என்றே தெரியவில்லை.
புதுச்சேரி மற்றும் அசாமில் பிஜேபி வெற்றி பெற்றிருக்கின்றது. இதில் ஏற்கெனவே அசாமில் பிஜேபி ஆட்சியில் இருக்கின்றது. ஒரு அசுரத்தனமான வெற்றி நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் எதிலும் பிஜேபிக்கு கிடைக்கவில்லை என்பதையே நிலைமைகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
மோடி அமித்ஷா, யோகி என ஒரு பெருங்கூட்டமே ஒவ்வொரு மாநிலத்திலும் டேரா அடித்து பிரச்சாரம் செய்தும் அதனால் புதிதாக புதுச்சேரியை மட்டுமே வெல்ல முடிந்திருக்கின்றது. அதுவும் கூட்டணியின் துணையோடு.
ஆனால் ஒரு மாதத்திற்கு முன்பிருந்த அரசியல் சூழலும் தற்போது இருக்கும் அரசியல் சூழலும் முற்றிலும் மாறுபட்டதாகும். கொரோனோ இரண்டாவது அலை சங்கிக் கும்பலின் அரிதாரத்தை முற்றிலும் கலைத்துப் போட்டிருக்கின்றது.
கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல், தடுப்பூசி கிடைக்காமல், ஆக்சிஜன் கிடைக்காமல் தினம் கொத்துக் கொத்தாக மடிந்து கொண்டு இருக்கின்றார்கள். உலக நாடுகள் எல்லாம் மோடியின் நிர்வாக திறமையின்மையைப் பார்த்து காறித் துப்புகின்றன.
எனவே நடந்து முடிந்த தேர்தல்களைவிட இனி நடக்கப் போகும் தேர்தல்தான் உண்மையில் சங்கிக் கும்பலுக்கு கடும் நெருக்கடியைத் தோற்றுவிக்கும்.
ஆட்சியைப் பிடித்திருக்கும் திமுகவிற்கு நாம் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்வோம். அதே சமயம் தற்போது தமிழ்நாட்டு மக்கள் பெரும் அபாயத்தில் வாழ விடப்பட்டுள்ளார்கள். இதே நிலை நீடித்தால் நிச்சயம் தமிழ்நாடு குஜராத் போலவோ உபி, டெல்லி போலவோ மாற நீண்ட நாட்கள் பிடிக்காது.
ஏற்கெனவே அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை, தடுப்பூசி இல்லை, ரெம்டிசிவியர் மருந்தில்லை. ஆனால் வழக்கம் போல சமூகம் இயங்கிக் கொண்டு இருக்கின்றது. மதுக்கடைகள் கூட மூடப்பெறாமல் வருமானத்திற்காக மக்கள் சாக விடப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.
சாமானிய மக்களுக்கு உணவும், இருப்பிடமும் குறைந்த பட்ச வாழ்க்கை பாதுகாப்பையும் உறுதி செய்துவிட்டு பொதுமுடக்கம் அறிவிப்பது ஒன்றே தற்போதுள்ள ஒரே வழி. முதலாளிகளின் லாபத்தை உறுதி செய்வதற்காக ஆயிரக்கணக்கான மக்களை தெரிந்தே பலி கொடுக்கத் துணிவது அப்பட்டமான கார்ப்ரேட் சிந்தனையாகும்.
மக்களை வீடுகளுக்குள் இருக்கச் செய்ய வேண்டும். அவர்கள் வீடுகளில் இருக்க வேண்டும் என்றால் அவர்களை அரசு தன்னுடைய சமூக நல திட்டங்களில் மூலம் காப்பாற்ற வேண்டும்.
பெரும் கடன் நெருக்கடியில் புதிதாக பொறுப்பேற்கும் இந்த அரசுக்கு தற்போதுள்ள பெரிய சவால் மக்களை நோய்த் தொற்றில் இருந்து காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பதுதான். மக்களின் தீர்ப்புக்கு நியாயம் சேர்ப்பார்களா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.
- செ.கார்கி