கீற்றில் தேட...

மக்கள் மட்டுமே வரலாற்றை படைக்கிறார்கள்!
==========================

அன்பார்ந்த தமிழர்களே! தமிழ்த்தேச மக்களே!!  

2016 மே 16 தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல். நாம் எல்லோரும் இத்தேர்தலில் ஏதோ ஒருதரப்பை சார்ந்தவர்கள்தான். கொள்கை, கட்சி, தலைவர்கள், பணம் அல்லது இவற்றில் ஏதும் இல்லாத ஏதோ ஒரு தரப்பை சார்ந்தவர்களாக தன்நலனை அல்லது இனநலனைக் கொண்டவர்களாக இருக்கிறோம். இத்தேர்தல் ஒரு போரின் வளர்ந்த வடிவமாக இருக்கிறது ஆயுதங்கள் களையப்பட்டு வாக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.  அதிக படையும் சரியான வியூகமும் கொண்ட படை வெல்வது போல, அதிக வாக்குகள் பெற்ற கட்சி தேர்தலில் வெல்கிறது. போரில் நாம் ஒரு தரப்பா அல்லது இடையில் சிக்கி அழியும் தரப்பா அல்லது நம் மீதுதான் இப்போர் திணிக்கப்பட்டு இருக்கிறதா என்பதையும் யோசிக்கத்தான் வேண்டும்.

இத்தேர்தலை பரிசீலனை செய்தால் வழக்கத்தோடு  சில புதிய குறிப்பிடத்தகுந்த விவரங்கள் கிடைக்கிறது, பெரும்பான்மை கட்சிகள் தனித்தும், பெயரளவிற்கு கூட்டணியோடும் தேர்தலை சந்திக்கின்றன. இது  கட்சிகள், ஆட்சிகள், கூட்டணிகள் மீதான மக்களின் நம்பிக்கையின்மையின் விளைவே ஆகும். தாயகக்காப்பு, தற்சாற்பு, தமிழராட்சி போன்ற நிலைப்பாடுகளை முன்னிறுத்துகிற தமிழ்த்தேசிய இன அரசியல் தனித்து ஒலிப்பதும் இத்தேர்தலின் தனித்த கூறு.

இந்த தேர்தல் 2016 தேர்தலை மட்டும் எதிர்நோக்காமல் அடுத்த தேர்தலையும் எதிர்நோக்கி நடக்கிறது. பழைய கருத்துகள், வாழ்க்கைமுறை, மதிப்பீடுகள் அழிந்து வருவதையும் புதிய கருத்துகள், வாழ்க்கைமுறை, மதிப்பீடுகள் உருவாகி வருவதையும் நாம் உணர்ந்து வருகிறோம். இந்த மாறுதல் அரசியல் அமைப்பு முறையிலும் அதில் பங்காற்றுபவர்களிடமும் எதிரொலித்தே ஆக வேண்டும்.

ஆதிக்கஅரசியல் வழக்கொழிந்து போவதும் உரிமை அரசியல் உருவாக்கம் நடந்தேறும் தற்போதைய சூழலில் நாம் நம்முடைய நிலை, நம் தாயகத்தின் நிலை குறித்து முழுப் பரிசீலனை மற்றும் எதிர்காலம் குறித்த புதிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் நம்முடைய மாற்றத்திற்கான செயலை இத்தேர்தலிலும் வெளிப்படுத்துவோம்.

குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும்
==========≠=============

நம் தாயகத்தின் தாய்நிலமான குறிஞ்சி  இமயமலைகளுக்கு மூத்தது.  கிழக்குத் தொடர்ச்சி மலைகள் 160 கோடி ஆண்டு பழமையானது. இக்கண்டத்திலேயே பல்லுயிர்ச் சூழல் நிலவுவது, மேற்குத் தொடர்ச்சி மலைகளில்தான். நிலத்திற்கு மழையை வழங்குவது, ஆறுகளைத் தோற்றுவிப்பது, வளங்களையும், தாவரங்களையும் வழங்கியதோடு  விலங்குகளும், மனிதர்களும் தங்கள் உயிர்களை நீட்டித்துத் கொள்ள வேட்டையாட அனுமதித்தது இந்த மலைகள்தான்.

இன்று சுண்ணாம்புத்தாது, பாக்ஸைட், இரும்புத்தாது போன்ற தனிமங்கள் சூறையாடபடுவதால், பைன், வேட்டில், தைலமரங்கள், தேக்கு போன்ற அயல் மரங்களாலும், கிரனைட், கல்குவாரி என்ற பெயரில் வானை முத்தமிட்டு நின்ற பல்லாயிரம் மலைகள் சூறையாடப்பட்டு படுகுழிகளாகவும், அவர்களின் கால்களுக்கு கிழே சல்லிகளாகக் காத்துக் கிடைக்கிறது. தன் பிள்ளைகள் ஒரு நாள் கையில் எடுத்து கொள்ளும் என்ற நம்பிக்கையில்.

முல்லை - காடும் காடு சார்ந்த இடமும்
=================≠========

        தமிழகத்தில் மலைகள், சமவெளிகள், நதிகள், கடல், ஏரிகள், கோயில்கள் என நிலம், நீர் சார்ந்த பலவகைக் காடுகள் உள்ளன. இவை காட்டுயிர் வளம் மிக்கது. நிலத்தில் 33% காடு இருந்தால் மட்டுமே நிலம் வாழத் தகுதியானதாக இருக்கும், ஆனால் நம் தமிழகத்தில் 17% காடுகளே உள்ளன. அதிலும் 2.5% காடுகளே பாதுகாக்கபட்ட காடுகள். மற்றவை ஒரே வகைபட்ட பணம் காய்க்கும் மரங்கள், பழத்தோட்டங்கள், காபி தேயிலைத்தோட்டங்கள், தைல மரங்கள், கருவை மரங்கள், தொழிற்சாலைகள், பணம் படைத்தவர்களின் மாளிகைகளே உள்ளன. இது காட்டு உயிரினங்களின் வாழ்வை அழிப்பதோடு மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மோதலை உருவாக்கி சமநிலையை அழிக்கிறது.

மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும்     
==========================

தமிழகம் வேளாண்மை செழித்த நிலம். தமிழகத்தின் பெரும்பகுதி மண் வளம் மிக்கது. ஒரு ஹக்டருக்கு 18 ஆயிரம் கிலோ வரை நெல் விளைந்தாக வரலாறு சொல்கிறது. உலகில் பல நாடுகளில் விளையும் வேளாண் பொருள்கள் இங்கு விளைந்து இருக்கின்றன. நஞ்சை, புஞ்சை   என்று நிலத்தை இரு பெரும் பிரிவாகப் பார்த்து நிலத்திற்கு ஏற்ற வேளாண்மையை மேற்கொண்டவன் தமிழன். சூழலின், மண்ணின் தன்மைக்கேற்ற பலநூறு நெல் ரகங்களும், பருப்பு, தானிய வகைகளும் காய், கனி வகைகளையும் தன்னகத்தே கொண்டவன். வேளாண்மையோடு  இயைந்த கால்நடை வளர்ப்பு இருந்திருக்கின்றன.
”காவேரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி - என
மேவிய யாறு பலவோடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு.”

- பாரதியார்.

என 33 ஆற்றுப் படுகைகளும், 39366 ஏரிகளும் இது அல்லாது குளம், குட்டை எனப்பல நீர் நிலைகளும் கல்லணை, முல்லைப்பெரியாறு போன்ற தடுப்பணைகளும் 10 அடி ஆழத்திலேயே நிலத்தடி நீரும், ஆண்டுதோறும் தேவையான மழைவளமும் பெற்றதுதான் தமிழகம். இந்த வளமான மருதநில வாழ்வு தமிழினத்தையும், தமிழ்நாட்டையும், அதன் நாகரிகத்தையும் வளப்படுத்தியது. ஆனால், இன்று தமிழகத்தில் 40% நிலங்களே வேளாண்மைக்கு தகுதி உடையதாக இருக்கிறது. நிலமெங்கும் கருவை மரம், மண்ணரிப்பு, மண் வளம் குன்றல், வீட்டுமனைகளாக, தொழிற்சாலைகளாக, சிறப்புப்பொருளாதார மண்டலங்கள் என விளைநிலங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. அண்டை   தேசங்களின் ஆற்றுநீர் உரிமை மறுப்பு, ஆறு, ஏரி, குளம், கண்மாய் அழிப்பு, 500,1000 அடி ஆழ் குழாய் வழி தண்ணீர் உறியும் தொழிற்சாலை, தண்ணீர் வணிகம், தொழிற்சாலைக்கழிவு மற்றும் வேதிஉரங்கள் வழியாக நீரூம் நிலமும் அழிகின்றன.

ஆயிரக்கணக்கான விதைகளும், தாவரங்களும், கால்நடைகளும் அழிகின்றன. நம்மை நம்பியதால் காட்டை விட்டு வெளிவந்து உழைத்தும் வேறு வழிகளிலும் பயன் தந்த கால்நடைகள் கறிக்கடைகளிலும், வீதிகளிலும் அவ்வினத்தின் கடைசி வாழ்வை இழந்து வருகின்றன. அதனுடைய விழாவைக் (சல்லிகட்டு) கூட நடத்த முடியாத நமக்காக எங்கேயோ ஒரு கன்றை ஈன்று சென்று இருக்கும். அது அதனுடைய இயல்பு.

நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடமும்
==========================

தமிழகம் முப்புறமும் கடலால் சூழப்பட்டது. அதன் கரை 1100 கி.மீ கொண்டது.  தமிழ்நிலம் மழையால் வளம் பெறுவதற்கும் உயிரினப் பன்மைக்கும் இக்கடல்தான் காரணம். வரலாற்று காலம் முதலே பன்னாட்டுஅரசு தொடர்புகளையும், நாகரிக இனங்களுடான உறவையும், வணிக உறவுகளையும் உலகம் முழுவதும் உருவாக்கியதும், சோழப்பேரரசை உருவாக்கியதும்  இந்தக் கடல்தான்.

பல லட்சம் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் இக்கடல்தான். இன்று மீனவர்களின் கடல் எல்லையை சுருக்குவது, கடலில் இருந்தும், கரையில் இருந்தும் மீனவர்கள் விரட்டப்படுவது, கடலின் உயிர்ச்சூழல் அழிக்கப்படுவது, அதன்மணல் குன்றுகளை, தாது மணலை சூறையாடுவது, கடலோடு இணைய வேண்டிய ஆற்று நீரைத் தடுப்பது, கழிவுகளைக் கலப்பது, கரையெங்கும் அணு, அனல் மின்நிலையங்களை நிறுவது, பன்னாட்டு நிறுவனங்கள் கடலை வாரி எடுத்துச் செல்வது போன்ற அழிவுப்பணிகள் நடக்கின்றன. இந்தக் கடல் பல்லாயிரம் கோடி பொருள் ஈட்டித் தந்தாலும் அதோடு மட்டும் சம்மந்தப்பட்டது அல்ல.

தமிழக, தமிழீழ  நிலத்தின் இணைப்பு இக்கடல். ஆயிரக்கணக்கான தமிழ் மீனவர்கள் கொல்லப்படுவதற்கும், லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள்  இனக்கொலைக்கு உள்ளாக்கப்பட்டதும் இக்கடல் மீதான அரசியல், பொருளாதார ராணுவ நலன்கள் குறிப்பிடத்தகுந்த காரணங்களாகும்.

கடலும் நிலமும் சூழல், அரசியல், பொருளாதார, பாதுகாப்பு தன்மைகளில் ஒன்றை ஒன்று சார்ந்ததாக உள்ளது. இதில் ஒன்றைக் கட்டுப்படுத்துபவரே இன்னொன்றையும் கட்டுப்படுத்த முடியும். இரண்டையும் கட்டுப்படுத்துபவர்களாலேயே இம்மண்டலத்தில் தம் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

தமிழர்களின் எதிர்காலம் இக்கடலுடன்தான். ஒன்று தமிழர்கள் சூழலியல், அரசியல், பொருளாதாரப் படகை திறமையான படகோட்டியாக   இக்கடலில் செலுத்தி வளத்தோடு சுதந்திரமாக வாழ வேண்டும் இல்லையேல் அதனுடைய முக்கியத்தும் நம்மை இரத்த சகதியில் முழுகடிக்கவேண்டும்.    

நம்முடைய மலையும் மலை சார்ந்த இடமும், காடும் காடு சார்ந்த இடமும்,  வயலும் வயல் சார்ந்த இடமும், கடலும் கடல் சார்ந்த இடமும் இத்திணை சார்ந்த வாழ்வும் ஒழுக்கமும் அழிக்கபட்டு அதன் அறிவும் கடவுளர்களும் திருடப்பட்டு எங்கும் பாலையாய் களவும் சூறையாடலும் நிறைந்தாய் நம் நிலமும் வாழ்வும் தற்சார்பும் தாயகமும்  இந்தியமயத்தால், திராவிடமயத்தால், உலக மயத்தால் அழிக்கப்பட்டு வருகிறது.

வேளாண்மை  
============

வேளாண் நிலப்பரப்பு மற்றும் மண்ணின் உற்பத்தித்திறன் குறைந்து வருவது, தண்ணீர் பற்றாக்குறை, விதை மற்றும் இடுபொருள்களின் விலை உயர்வு, ஒரே வேளாண் பொருள் உற்பத்தி, மின்சாரப்பற்றாக்குறை மற்றும் எரிபொருள் விலை உயர்வு, விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமை, விவசாய வேலைக்கு ஆள் பற்றாக்குறை, விவசாயக் கடன் நெருக்கடி, இயற்கை அழிவு, இறக்குமதி பொருளுடன் போட்டி, துண்டு துண்டான நிலம், மையப்படுத்தப்படாத உற்பத்தி, அரசின் பாராமுகம் என வேளாண்மை மதிப்பற்ற, லாபமற்ற, நசிவடைந்து வரும் (கடந்த 50 வருடங்களில் உள்நாட்டு உற்பத்தியில் 4 ல் 3 மடங்கு குறைந்துள்ளது) தொழிலாகவே மாறி உள்ளது.

தொழில், வணிகம்
=================

தமிழகத்தின் தொழில்துறையில் பெருந்தொழில் குழுமங்கள் பெரும்பாலும் இந்திய அரசு, பன்னாட்டு நிறுவனம், மற்றும் தமிழர் அல்லாதோரின் தொழில் குழுமங்களாகத்தான் உள்ளன. தமிழகத்தில் உள்ள தொழில் மூலதனத்தில் பெரும்பகுதி அயலர்கள் கையில் குவிந்து இருப்பதும், அவர்களின் உற்பத்தி மற்றும் சேவையும் அயலர், அயலக தேவைக்காகவே உள்ளது. ஆனால் அதற்குத் தேவையான மூல வளங்கள் மற்றும் அரசின் சலுகைகள் இங்கிருந்தே பெறப்படுகின்றன.

10 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தமிழர்கள் மற்றும் தமிழகச் சிறு உற்பத்தியாளர்களால் நடத்தப்படுகிறது. இத்தொழில்கள் மின் பற்றாக்குறை, மூலப் பொருள்களின் விலை ஏற்றம், மூலதனம் இல்லாமை, கடன் நெருக்கடி, ஆள்பற்றாக்குறை, அதிக உழைப்பு நேரம், சந்தையில் பெருநிறுவனங்களுடனான போட்டி, தொழில் வாய்ப்பு குறைவு, அரசின் ஆதரவின்மை போன்ற காரணங்களால் நசிந்து வருகின்றன.

அதே போல் சிறு வணிகத்தில் தமிழர்களும் பெருவணிகத்தில் அயலர்களே கட்டுப்படுத்துகின்றனர். உலக வர்த்தக ஒப்பந்தமும், இந்திய ஒப்பந்தமும் (இந்தியாவில் எங்கு வேண்டுமாலும் தொழில் தொடங்க குடியேற அனுமதிக்கிற அடிப்படை உரிமை) தமிழகத்தின் தொழில் வளத்தை அயலர்கள் தமிழர் அல்லாதவர்கள் தங்கள் கட்டுக்குள் வைத்துகொள்ளவே உதவுகிறது.

எட்டு மணி நேர வேலை, சம வேலைக்கு சம ஊதியம், தொழிற்சங்க உரிமை, ஓய்வூதியம், தன் நிலத்தில் தனக்கே வேலை உரிமை போன்ற அடிப்படை தொழிலாளர் உரிமைகள் இல்லை. இந்த மண்ணிற்காகவும், மக்களுக்காகவும் உழைத்தாலும் அரசியல் அதிகாரத்தையோ மூலதனத்தையோ கட்டுப்படுத்தும் அதிகாரமற்ற நிலையிலே தமிழக தொழிலாளர் வர்க்கம் உள்ளது.

கிராமம் - நகரம்
==============

      தமிழக வேளாண்மை வீழ்ச்சி, மரபுசார் தொழில்களின் அழிப்பு, வளச்சூறையாடல், அரசுத் திட்டம் இன்மை காரணமாக கிராமங்கள் புறக்கணிக்கப் படுவதும், நகரங்களில் தொழிற்பெருக்கம், வேலை, கல்வி, வாழ்வாதாரப் பாதுகாப்பு காரணமாக நகரங்கள் மக்களின் குவிமையமாக மாறிவருகிறது. இதனால் கிராமங்கள் புறக்கணிப்புக்கும் நகரங்கள் நெருக்கடி மிகுந்தாகவும், வாழத் தகுதியற்றதாகவும் மாறி இருக்கிறது.   

வேலையின்மை
==============

தமிழகத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து காத்து இருக்கிறார்கள். ஒரு வேலைக்கு ஆயிரம் பேர் போட்டி இடுகிறார்கள். (800 வி ஏ ஓ பணிக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பம்) ஆனால் அதே சமயம் இங்கு உள்ள பெருபான்மை இளைஞர்கள் பணிக்குத் திறனற்றவர்கள், தகுதியற்றவர்கள் என்று உற்பத்தியில் இருந்து வெளியே நிறுத்துகிறது நிறுவனங்கள் மற்றும் அயல் சார்பு உற்பத்தி முறை. குறைந்த சம்பளம், அதிக உழைப்பு பொருத்தமற்ற பணி, குற்றக் கும்பலாக்கபடும் நிலை, அயல் நாடுகளில் கடும் உழைப்பு, உரிமை அற்ற நிலை, வருடந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பிணமாக திருப்பி அனுப்பி வைக்கப்படும் நிலை. இளைஞர்கள் வலிமையின் அடையாளம் என்பதற்கு மாறாக  பொறுப்பு, தகுதி, திறன் அற்ற கூட்டமாக அடையாளப் படுத்துகிறது இந்த தகுதி அற்ற அமைப்புமுறை.

வெளியார் சிக்கல்
================

     2011 மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி 2001 முதல் 2011 வரை இடைப்பட்ட பத்து ஆண்டுகளில் 44 லட்சம் பேர் தமிழகத்திற்கு வெளியில் இருந்து தமிழகத்திற்குள் குடியேறி உள்ளனர். (மொழிவழி மாநிலமாக தமிழகம் அமைக்கபட்ட 1956 நவம்பர் 1ற்குப் பிறகு தமிழகத்தில் குடியேறியவர்கள் பல லட்சம் பேர்) எல்லை மாவட்டங்கள் பெருநகரங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் குடியேற்றம் நிகழ்ந்துள்ளது. கூலி வேலை தொடங்கி இந்திய அரசு, தனியார் நிறுவன அதிகாரிகள் வரை, சிறு வணிகம் தொடங்கி பெரும் தொழில் நிறுவனங்கள் வரை வெளியார் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது.

குடி மனைகள் தொடங்கி பெரும் தோட்டங்கள் வரை அவர்கள் வாங்கிக் குவிப்பதும், குடும்ப அட்டை, ஓட்டுரிமை, சமயம், அரசியல் அமைப்புகள், பதவிகள் என இவர்களின் ஆக்கிரமிப்பு விரிவடைந்து வருகிறது. இவர்களோடு இணைந்து தமிழகத்தில் வாழும் அயல் இனத்தின் ஆளும் வர்க்கங்கள் தமிழர்கள் மீது அரசியல் பொருளாதாரத் தளங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் தமிழர்கள் அவர்கள் தாயகத்திலேயே அகதிகளாக்கப்படுவார்கள்.

தமிழகத்தின் உரிமைப் போராட்டங்கள்
======================

     நூற்றாண்டாக தமிழ் மொழி காக்கும் இனப்போராட்டம் நடக்கும் தமிழ்நாட்டில், தமிழ் செம்மொழி என காகிதத்தில் ஏற்கும் அரசு அதைக் கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, நீதிமன்ற மொழியாக ஏற்காமல் துவக்கோடு துணை ராணுவப் படையை நிறுத்துகிறது. குறுக்கு நெடுக்காக வடமொழி, இந்தி, ஆங்கிலத்தைத் திணிக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ் குறித்துச் சட்டம் போட இந்தியாவிடம் நிற்க வேண்டி இருக்கிறது. 

    மொழிவழி மாநிலம் அமைக்கப்பட்ட போது அண்டை மாநிலங்களிடம் தமிழகம் இழந்த 80ஆயிரம் ச.கி.மீ தாயக நிலப்பகுதியையும், இலங்கைக்குத் தாரைவார்க்கப் பட்ட கட்சத்தீவையும் இதுவரை மீட்காமல் இருப்பது,

ஈழத்தமிழர்கள் தங்கள் தேசிய இன உரிமைக் குரலை எழுப்பிய நாளில் இருந்து அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அதற்குத் துணை நின்ற தமிழகத்தால் அங்கு நடந்த இனப்படுகொலையைத் தடுக்க முடியாத  அவலம். இனக்கொலைக்கு நீதியையும் தீர்வையும் பெற்றுத் தரமுடியாத கையாலாகாத நிலை.

வளங்கள், வரிகள், வட்டிகளாக இந்திய அரசிற்கும், உலக வங்கிக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தமிழகத்தின் பல்லாயிரம் கோடி செல்வ வளங்கள் கொள்ளை போவதைத் தடுக்க முடியாத நிலை.

மதமாற்றப் பட்ட தமிழர் சமயங்கள்
=====================

தமிழகத்தில் தனி வழிபாட்டு சமய முறைகளாக இருந்த இயற்கை வழிபாடு, முன்னோர் வழிபாடு, அம்மன் வழிபாடு, சைவம், வைணவம், வள்ளலார் வழிபாடு, ஐயா வைகுண்டர் வழிபாடு, மெய்வழிச்சாலை என தமிழர்களின் பல்வேறு சமயங்களை அழிக்கும் விதமாக அத்தனி மரபுகளை இந்து மதமாக சட்ட நிர்வாக வழியில் அடையாளப்படுத்தி அழித்துவருகிறது.

சமூக முரண்பாடுகள்
==================

தமிழ்ச் சமுகத்தில் சாதி, சமய, இன, பாலின மோதல் அதிகரிப்பதும் சமூக அமைதி குறைந்து வருவதும் குடும்ப அமைப்பு முறை சிதைவடைவதும், மனிதர்கள் தனி நபர்களாக கைவிடப்படுவதும், இளமையிலே போதைக்கு அடிமையாவதும், குற்றக்குழுக்களில் இணைவதும், குற்றவியல், பொருளியல், சமூகக் குற்றங்கள் பெருகுவதும்  நடந்தேறி வருகிறது.

சாதி அமைப்பு முறை
==================

தமிழகத்தில் நிலவும் சாதியமைப்பு முறை, தமிழர்களிடையே பிறப்பு அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு, பாகுபாட்டைக் கொண்ட வெறுக்கத்தக்க ஒடுக்குமுறை அமைப்பாக உள்ளது. சாதி என்னும் அமைப்பு வடிவம் உற்பத்திமுறை, பார்ப்பனியம், இந்திய அரசு அதிகாரம் ஆகியவற்றால் பாதுகாக்கக்கூடியதாக உள்ளது. இம்மூன்றில் ஒன்று அல்லது இரண்டை மட்டும் எதிர்ப்பவர்கள் மற்றும் சாதிகளுக்கிடையே முரண்பாட்டை பார்ப்பவர்கள் சாதி அமைப்புமுறையை பாதுகாப்பவர்களாகவே உள்ளனர். உண்மையில் நிலவும் சாதி அமைப்புமுறைக்கும் தமிழ்த்தேசிய இனத்திற்கும் இடையிலான முரண்பாட்டை தீர்ப்பதே சாதி ஒழிப்பு அரசியலாக இருக்க முடியும். 

தமிழ்நாடு சட்டமன்றம்
=====================

ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்புப்போரை நிறுத்த, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க, பொது வாக்கெடுப்பு நடத்த, அங்கு நடந்தது இனப்படுகொலை என இந்திய அரசை வலியுறுத்தக்கோரி என தமிழ்நாடு சட்ட மன்றம் பல தீர்மானங்களை இயற்றி உள்ளது. அதே போல் ஏழு தமிழர் விடுதலை, சென்னை உயர் வழக்கு மன்றத்தில் தமிழை நீதிமன்றமொழியாக்கவும், முப்பது ஆண்டுகளுக்கு முன் மாநில சுயாட்சியை வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. இத்தீர்மானங்களின் கதி என்ன? உண்மையில் இந்தத் தீர்மானங்கள் எதுவுமே இந்திய அரசால் ஏற்கப்படவில்லை. இன்று வரை பதில் கூட சொல்லவில்லை.

இந்தியாவில், தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் அதிகாரங்களை 213 ஆகப் பிரித்தும், இதில் அடங்காததை எஞ்சிய அதிகாரமாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்ட மன்றத்திற்கு 61, இந்திய அரசிற்கு எஞ்சிய அதிகாரம் உள்ளிட்ட 100, இரண்டிற்குமான பொதுப்பட்டியலில் 52, (இதிலும் இந்திய அரசு சட்டமே இறுதியானது) என  அதிகாரம் பிரிக்கப்பட்டுள்ளது.

61 அதிகாரம் என்பதில் ஆடு, மாடுகளை பட்டியில் அடைத்தல், அதற்கு மருத்துவம் செய்வது, மனிதர்களுக்கான சுடுகாடு இடுகாடு, மது சட்டம் ஒழுங்கு பொது அமைதி சிறைச்சாலை  போன்ற நிர்வாகம் சார்ந்த மக்களைக் கட்டுப்படுத்துகிற அதிகாரங்கள்தான் உள்ளது. 61 அதிகாரத்தில் 42 ல்  இந்திய அரசு மற்றும் பொதுப் பட்டியலில் மேலாதிக்கத் தலையீடு உண்டு. 19 மட்டும் தலையீடு அற்றது என்று சொன்னாலும் இவற்றிலும் இந்திய அரசின் சீர்மைக்கொள்கை மற்றும் நெறிமுறைகள் கட்டுபடுத்துகின்றன.

இந்திய அரசு தனக்குள்ள 356 வது பிரிவு அதிகாரத்தைப் பயன் படுத்தி இதுவரை 126 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கலைத்துள்ளது. அதேபோல இருக்கும் மாநிலங்களையே இல்லாததாக்கும், புதிய மாநிலங்களை உருவாக்கும் ஏக அதிகாரங்களைக் கொண்டதுதான் இந்திய அரசு. தமிழ்நாடு சட்ட மன்றம்  சட்ட அடிப்படையில் இறையாண்மை அற்றது. 

பிரிட்டிஷ் இரட்டை ஆட்சி முறையில் உருவாக்கப்பட்டது தமிழ்நாடு சட்டமன்றம். தமிழ்த்தேசிய இனத்தின் இறையாண்மையை மறுக்கின்ற அமைப்பு முறையில் அன்று முதல் இன்று வரை எந்த வித மாறுதலும் இல்லை. அதே போல் அதில் பங்கேற்று ஆட்சியை நடத்தியவர்கள் அன்று முதல் இன்று வரை தமிழர் அல்லாதவர்களே,

1921 தொடங்கி 2016 வரையில் 27 தடவை  முதல்வர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் இருபது முறை முதல்வராக தெலுங்கர்களும், மூன்று முறை மலையாளிகளும், மூன்று முறை கன்னடரும், இரண்டு முறை தமிழரும்  தேர்வு செய்யப் பட்டுள்ளனர். அண்ணாதுரை தமிழர் அல்ல என்று இராமசாமியும், கருணாநிதி தமிழர் அல்ல என்று எம்ஜியாரும், எம்ஜிஆர் தமிழர் அல்ல என்று கருணாநிதியும், ஜெயலலிதா தமிழர் இல்லை என்று திராவிட இயக்கமும் மாறி மாறி அவர்களே உண்மைகளை அம்பலப் படுத்திக் கொண்டார்கள்.  இப்போதும் இவர்கள் பட்டியலில் விசய நகர தெலுங்குப் பேரரசக் கனவோடு விசயகாந்தும் இணைந்துள்ளார். தமிழக சட்டமன்றத்தின் மீதான அமைப்பு முறையிலான இந்திய மேலாதிக்கம் நிலவுவதும், இன அடிப்படையில் தெலுங்கு மேலாதிக்கம் நிலவுவதுமே நிலையாக உள்ளது.

மலை, காடு, நிலம், நீர், கடல், இயற்கைவளம் பல்லுயிர்ச்சூழல் உள்ளிட்ட  தமிழர்தாயகம் சூறையாடப்படுவதும்

தொழில், வேளாண்மை, மற்றும் வணிகநசிவு, கல்வி, மருத்துவம், தண்ணீர் வணிகமயமாக்கபட்டது, பெருகிவரும்  வேலையின்மை, தொழிலாளர்கள் மீதான சுரண்டல்,  வெளியாரின் வேட்டைக் காடாக தமிழகம் என அதன் தற்சார்பு அழிப்பும்,

அதிகாரம் அற்ற அமைப்பாக தமிழக சட்டமன்றம் அதில் அயல்இன மேலாதிக்கம் நிலவது தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய இனத்தின் தமிழராட்சி உரிமை மறுப்பே ஆகும்.

மேலே முன் வைக்கபட்ட விவரங்கள் பிரச்சனைகளை எண்ணிப் பாருங்கள் இவை தனித் தனி பிரச்சனைகளா? தனி நபர் பிரச்சனைகளா? இல்லை. இந்திய மயத்தால் உலக மயத்தால் தற்சார்பு அழிக்கபட்ட, அதிகாரம் பறிக்கபட்ட நமது பிரச்சனைகள். தமிழ்த்தேசிய இனத்தின் அரசியல் அதிகாரப் பிரச்சனை.

தாயகத்தை பாதுகாக்க, தற்சார்பான தமிழகத்தை கட்டமைக்க, தமிழர் தேசிய இன உரிமையை வென்றெடுக்கும் போராட்டத்தில் துணை நிற்கப்போவது யார்?

திமுக, அதிமுக, தேமுதிக, மதிமுக போன்ற திராவிட கட்சிகளா? இந்திய மேலாதிக்க கட்சிகளான காங்கிரஸ், பாரதிய சனதா கட்சி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்சிகளா?

திராவிடம்
==========
இந்த இரண்டு அணிகளின் தோற்றத்தின் போது இந்தியத்திற்கும் திராவிடத்திற்கும்  தமிழ்த்தேசிய இனத்தை, அதன் தாயகத்தை மேலாதிக்கம் செலுத்துவது பார்பனர்களா, தெலுங்கர்களா என்ற முரண்பாடு இருந்தது. இந்தப் போட்டியில் தெலுங்கு ஆளும் வர்க்கம் வென்றதுதான் திராவிட ஆட்சி.

இந்திய மேலாதிக்கத்திற்குட்பட்ட பேட்டை ரவுடிதான் திரவிடம். (தெலுங்கு மேலாதிக்கத்தின் இன்னொரு நிலம் கர்நாடகம்) இவர்களுக்குள் முரண்பாடு முற்றும் போது தமிழர்களின் இயல்பான முரண்பாடுகளை கையில் எடுத்து கொள்வது திராவிடத்தின் தந்திரம். அது கையாண்ட, முன்னெடுத்த போராட்டங்களை பரிசீலித்தால் அதன் எதிர்ப்பு உள்ளிடற்ற எதிர்ப்பு என்பது விளங்கும்.

தமிழர்கள் தனி அரசியல் அணியாக உருவாகி விடக் கூடாது என்பதற்காகவும், தமிழ்மக்களிடம் தங்களை தக்க வைத்து கொள்ளவும் தமிழ், தமிழர்,  தமிழக நலன்களில் அக்கறை இருப்பது போல் நடிக்கிறது. ஒன்று அம்பலப்பட்டு போனால் இன்னொன்று என்று தனக்குள்ளாகவே மாற்றுகளை பல திராவிடக் கட்சிகளை உருவாக்கி வைத்திருக்கிறது. பணக்குவிப்பு, அதிகாரக்குவிப்பு, அறிவுவிரோதம், தனிமனித வழிபாடு, சந்தர்ப்பவாதம், ஊழல் டாம்பீகம், வெற்றுக்கூச்சல் எல்லாம் திராவிடத்தின் அடையாளங்கள்.

இந்தியம்
=========

இந்தியம் உருவானதே இத்துணைக் கண்டத்தில் உள்ள தேசிய இனங்களையும், அவர்களின் தாயகங்களையும் மறுத்துதான். இனவழிப்பட்ட தேசியங்களை மறுக்கத்தான் இந்தி, இந்து வழிபட்ட இந்தியதேசியமும், இஸ்லாமிய வழிபட்ட பாகிஸ்தான் தேசியமும் இந்தியத்தால் உருவாக்கப்பட்டது. இவர்களின் இனமூலம் ஆரிய பார்ப்பனியம், பண மூலம் இந்தி பெருமுதலாளிகள். இன்று இவர்கள் இந்திய ஒற்றை ஆதிக்கத்தின் உச்சமாக ஆர்எஸ்எஸ் வழிகாட்டலில் பாசக தலைமையில் பாசிச ஆட்சி நிறுவப்பட்டுள்ளது. மிச்சம் இருக்கும் தேசிய இனம், தாயகங்களின் பன்மையை அழித்து ஒன்றைஆதிக்க இந்தியாவை கட்டி வருகிறது. பாரதிய சனதா கட்சி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவர்கள் தோற்றத்தில் வேறுபாடு கொண்டவர்களாக இருந்தாலும், இவர்கள் இந்தியத்தின் பிதாக்களாக, பிள்ளைகளாக, வளர்ப்புத் தந்தைகளாக உள்ளனர். இவர்களின் கொடியில் இருக்கும் நிற வேறுபாடு வேறுபட்ட மக்களை உள்ளிளுக்கவே. தேசிய இனம் என்றாலே எல்லா கொடியும் காவியாக வெளுத்து விடும்.

ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் இடையிலான வேறுபாடு தமிழர்களை யார் ஆதிக்கம் செலுத்துவது பார்ப்பனர்களா தெலுங்கர்களா என்பதே. உலகமயத்திற்கும் இந்தியமயத்திற்கும் உள்ள வேறுபாடு சட்ட உரிமையாக்கபட்டது  இந்தியமயம், ஒப்பந்த உரிமையாக்கபட்டது உலகமயம்.

இந்தியமயம், திராவிடமயம், உலகமயத்தின் பிள்ளைகள்தான் ஊழல், கொள்ளை, செயலற்றதன்மை, அதிகார வெறிபிடித்த உழல்மயமான நிர்வாகம். இவற்றை ஒழிப்பது இந்திய, திராவிட, உலகமய ஒழிப்பிலே அடங்கி இருக்கிறது. குட்டி பகை ஆடு உறவு என்பது ஊழலை பாதுகாப்பதே.

தமிழ்த்தேசியமே மாற்று
=====================

தமிழர்கள் ஒரு தேசியஇனம், அவர்களின் தாயகம் தமிழகம் என்பதை முன்வைத்து தமிழ்த்தேச சோசலிச குடியரசை அமைப்பதை இலக்காகக் கொண்ட தமிழ்த்தேசியமே உலகமயம் இந்திய மயம் திராவிட மயத்திற்கு மாற்று.
தமிழ்த்தேச சோசலிசக் குடியரசு எனும் இறுதி இலக்கோடு தமிழர் தாயகக்காப்பு,  தற்சார்பு, தமிழராட்சி எனும் உடனடி இலக்கோடு மக்கள் திரள் போராட்டத்தின் வழியாகவே நாம் இம்மாற்றத்தை அடைய முடியும்.

மக்கள் திரள் வழி
=================

மக்களால் மட்டுமே வரலாறு படைக்க முடியும். மக்கள் போராட்டம் எனும் போது சப்பான் ஆக்கிரமிப்புக்கு எதிராக சீன மக்களின் ஆயுதம் தாங்கிய போராட்டமும், பிரிட்டிஷ் பேராதிக்கத்திற்கு எதிராக இத்துணைக் கண்டத்தில் நடந்த போராட்டமும் கடந்த அறுபது வருடங்களாக ஈழத்திலும் காஷ்மீரிலும் தமிழகத்திலும்  நடந்து வரும் போராட்டங்களும் மக்கள்திரள் போராட்டங்கள்தான். அதில் போராட்ட முறை (கருவி ஏந்திய, ஏந்தாத) சார்ந்த வேறுபாடுகள் வரலாற்றுச் சூழலால் தீர்மானிக்கப் படுகிறது.

தமிழர்களும் தமிழ்த்தேச மக்களும் அனுமதித்தால் ஒழிய தமிழர் தாயகத்தையும் தற்சார்பையும் தமிழ்த்தேசிய இன உரிமையையும் யாராலும் இறுதியாக அழிக்க முடியாது. தங்கள் மீது திணிக்கப்பட்ட இந்தியமயம், உலகமயம், திராவிடமயத்தை உணரும் போது தமிழர்கள் தங்கள் போராட்டத்தின் மூலம் வரலாறு படைப்பார்கள். மக்கள் போராட்டக் கொதிப்பில் இந்தியம், திராவிடமயம் உலகமயம் ஆவியாகும். தமிழ்த்தேசிய இனப் போராட்டத்தின்  வளர்ச்சி இந்தியத்தை நிலைமறுக்கும்.

தமிழ்நாடு சட்டமன்றம் மேலாதிக்கத்திற்கும் தேசிய இன உரிமைக்கும் இடையே போராட்டம் நடக்கும் மக்கள் போராட்டக்களம்தான். தமிழ்த்தேசிய இன அரசியல் அதிகார உரிமையை மறுக்கும் மன்றத்தில் அதைக் கோரி அதில்  பங்கேற்பது மக்கள் போராட்டமே. இந்தியம் திராவிடம் கால்பரப்பி நிற்கும் மன்றத்தை கைப்பற்றுவது ஒரு களத்தில் அதை ஒழிப்பதே.

நாம் தமிழர் கட்சி
=================

மேற்கண்ட தமிழ்த்தேசிய இனத்தின் நோக்கங்களை நோக்கி பயணப்படும் வகையில் எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே என்னும் முழக்கத்தோடு நடைபெறப்போகும் 2016 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தமிழ்த்தேசிய இனத்தின் சார்பாக களம் காண்கிறது. 234 வேட்பாளர்களில் தமிழர் தலைமையில் இளைஞர்கள், பெண்கள், திருநங்கை,  தொழிலாளர்கள், விவசாயிகள், அறிவாளிகள், கலைஞர்கள், ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை இனத்தவர், சமயத்தவர் என சமுகத்தின் அனைத்து பிரிவின் பின்னணியில் இருந்தும் வந்தவர்களாக உள்ளனர்.

நாம் தமிழர் ஆட்சி செயல்பாட்டு வரைவு எனும் ஆவணத்தை தமிழ் மக்களிடையே முன் வைத்துள்ளது.  அவ்வறிக்கையில் தமிழக சட்டமன்றத்திற்கு 61 பிரிவுகளில் மட்டுமல்ல (படை, நாணயம், மாநிலத்திற்கு இடையிலான ரயில் தவிர) அனைத்துப் பிரிவுகளிலும் சட்டம் இயற்றும், நடைமுறைப் படுத்தும் அதிகாரத்திற்காகப் போராடுதல், தமிழகத்தில் அனைத்துத் தளங்களிலும் தமிழர் தலைமையை, முன்னுரிமையை நிறுவுதல், தமிழ்நாட்டுக்கு தனி கொடி, அரசு முத்திரை என தமிழராட்சித் திட்டகளும்,

வேளாண் தொழிலை தேசியத்தொழிலாக அறிவித்து அரசுப் பணியாக மாற்றுதல்.
தற்சாற்பான தொழில் துறை கட்டமைத்தல்.
பன்னாட்டு குளிர்பானங்களுக்குத் தடை.
இளநீர், பதநீர் உள்ளிட்ட தேசியக் குடிபானத்திற்கு அனுமதி.
டாஸ்மாக் சாராயக் கடைகளுக்குத் தடை.
பனம்பால், தென்னம்பாலுக்கு அனுமதி.
மலை, காடு, நிலம், கடல் உள்ளிட்ட தாயகப் பாதுகாப்பு

அனைவருக்கும் வேலை, தமிழ் மொழி, பண்பாடு, கலை வளர்ச்சிக்குச் செயல்படுதல்


தண்ணீர், கல்வி, மருத்துவம் விலையில்லாமல் வழங்குவது அரசின் கடமையாகவும், தமிழீழ விடுதலைக்குப் போராடுதல் உள்ளிட்ட தமிழர் தாயக பாதுகாப்பு திட்டங்களையும் தற்சார்பு பொருளாதாரத் திட்டங்களையும், தமிழராட்சித் திட்டங்களையும் முன் வைத்து தமிழ்த்தேசிய இனத்தின் தமிழ்த்தேசிய மக்களின் ஆதரவை எதிர்பார்த்து நாம் தமிழர் கட்சி இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் வாக்கு கேட்டு வருகிறது. வாக்களிப்போம் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்திற்கே!

தாய்நிலத்தில் கால்ஊற்றி நிற்போம்!

தமிழராட்சிக்கு  தற்சார்பிற்குப் போராடுவோம்!

விடுதலைக்கு வாக்கையும் கருவியாக்குவோம்!

- தமிழர் முன்னணி