தமிழர் பாரம்பரியம் என்கிற போர்வையில் இளைய தலைமுறையிடம் சாதி என்னும் நஞ்சை விதைப்பதை நியூஜெர்சி, டல்லாஸ், வாஷிங்டன் தமிழ்ச் சங்கங்கள் வெட்கமில்லாமல் செய்வது மட்டுமில்லாமல் போஸ்டர் அடித்து ஒட்டிக் கொள்ள வேறு செய்கிறார்கள்.

"வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்", "கோட்டு போட்டவன் அறிவா பேசுவான்" என்றெல்லாம் நாட்டில் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் அறிவை 1960லேயே மூட்டை கட்டி பரண்மேல் போட்டுவிட்டு, அமெரிக்காவில் குடிகொண்டிருக்கும் பெருசுகள் அப்படித்தான் உலகம் நம்புகிறது என்று நினைத்துக் கொண்டு செய்யும் சேட்டைகளைக் கண்டால் - நாடு இப்போதிருக்கும் நிலையில் வாயிலே சிரிக்க முடியவில்லை. இதை அடுத்த தலைமுறைக்கு வேறே கடத்துகிறார்களாம்.

washington tamil sangam

(2018 ஆம் ஆண்டு வாஷிங்டன் தமிழ்ச் சங்க அழைப்பிதழ்)

பண்ணையார் காலத்து விவசாய முறை இருந்தபோது விதை தானியங்களை முளைக்குமா முளைக்காதா என்று பரிசோதித்து அறியும் முறை என்று சொல்வது ஏற்றுக் கொள்ளத் தக்கதே. அப்போது மாரியம்மன் திருவிழாக் காலங்களில் இதை எடுத்துச் சென்று சடங்குகள் செய்தனர். அப்போது வேறெந்த முறையும் கிடையாது. அவர்களுக்கு தெரிந்த வழியில் வைத்திருக்கும் விதைகள் தரமானவையா என்று கண்டுபிடித்தார்கள் என்பதும் ஓரளவு ஏற்றுக் கொள்ளத் தக்கது. ஆனால் அதை யார் செய்தார்கள்? மூட்டை விதைநெல் வைத்திருந்த பண்ணையார்கள் செய்தனர். பண்ணைக் கூலிகள் யாரும் அதைச் செய்ய அனுமதிக்கப் பட்டதாய் தகவல் இல்லை. இது தமிழர் பாரம்பரியம் என்றால் நிலமற்ற விவசாயக் கூலிகள் தமிழர்கள் இல்லையா? அல்லது, தமிழர்கள் அனைவரும் பண்ணையார்களா?

இதை ஆண்கள் யாரும் செய்வதில்லை. பெண்கள் மட்டுமே. அதிலும் மாதவிடாய் இருந்தவர்கள் அதற்கு அருகில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இது குறித்த மூடநம்பிக்கைகளும் அதிகளவில் நிலவுகிறது. நன்றாக வளரக் கூடிய முளைப்பாரி வைத்தவள் கற்புக்கரசியாகவும், சரியாக வரவில்லை என்றால் பெண்கள் மனதில் நீ அவ்வளவு ஒன்றும் உசத்தி அல்ல என்கிற இழிவைச் சொல்லியும் இகழப்பட்டது. அதற்கு மேலே ஒருபடி சென்று நன்றாக முளைக்க வைப்பவள் வளமான பெண்ணாகவும், குறைபாடுடைய விதைகள் கிடைக்கப் பெற்றவள் ராசியில்லாதவள் என்கிற மூடநம்பிக்கைகளும் மேலோங்கி இருந்தன.

விதை முளைப்பதை வைத்து ஒரு பெண்ணை மலட்டுத் தன்மை உடையவளாக இருக்கலாம் என்றும், கற்பில்லாதவள் என்றும் வெட்கமில்லாமல் நிர்ணயித்தது அறிவார்ந்த சமூகமா? அதை நம் பிள்ளைகளுக்கு பாரம்பரியம் என்கிற பெயரில் கடத்தத் தான் வேண்டுமா? இவர்களெல்லாம் படித்து பட்டம் பெற்று வெள்ளைக்காரனுடன் அமர்ந்து மாட்டுக்கறி தின்றாலும், மண்டையில் மாட்டுச் சாணத்தை வைத்து சிந்திக்கிறார்களா என்று யாரேனும் ஆராய வேண்டும்.

இது தமிழர் பாரம்பரியம் என்றால் தமிழ் பேசும் இஸ்லாமியர்களோ, கிறிஸ்தவர்களோ இதைச் செய்கிறார்களா? தமிழ் பேசும் ஒடுக்கப்பட்டவர்கள் செய்கிறார்களா, பொங்கல் போல? சரி, பொங்கலாச்சும் வீட்டுல இருக்கவங்க சாப்பிடுவாங்க.. முளைப்பாரியைக் கொண்டாடி முடிச்சிட்டு என்ன பண்ணுவீங்க சார்? பொறியலோ குழம்போ வைப்பீங்களா? உயர்சாதி உயர்வர்க்கப் பண்பாடாக இருக்கும் இந்த முளைப்பாரியை தமிழர் பண்பாடு என்று தமிழர்களுக்கெல்லாம் ஹோல்சேல் டீலர்கள் போல தங்களை முன்னிறுத்தும் தமிழ்ச் சங்கங்கள் ஏன் சொல்கின்றன என்பதற்குத் தனி ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

இதற்கு முதன்மைக் காரணம் சாதி. போன தலைமுறையில் கல்வி கிடைக்கப் பெற்ற குறிப்பிட்ட சில சாதிகளின் பண்பாட்டை தமிழர் பண்பாடாக நிலைநிறுத்தும் போக்கு சங்கங்களை கையில் வைத்திருப்பவர்களிடம் அதிகரித்து வருகிறது. எல்லா சாதிகளும் அதைச் செய்கின்றன. பரத நாட்டியம் தமிழர் பாரம்பரியக் கலையாக நிலைநிறுத்தப் பட்டதைப் போல. இந்த முளைப்பாரிப் பண்பாடு தங்களை ஆண்ட சாதியாக காட்டிக் கொள்ள விரும்பும் சாதிகளுக்கு பொதுப் பழக்கமாக இருப்பதால் இதை தமிழர் பண்பாடாக நிலைநிறுத்தும் முயற்சியும் முழுமூச்சாய் நடைபெறுகிறது. இது ஒருவகையில் பெண்ணடிமைத்தனத்தை பாரம்பரியத்தின் பெயரால் அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் அருவருக்கத் தக்க செயலே.

சரி, சொன்ன ஒரே வெய்ட் பாயிண்டான "விதைகளின் தரத்தை சோதிப்பது" என்கிற வாதத்தை எடுத்துக் கொள்வோம். அமெரிக்காவில் எத்தனை தமிழர்கள் விவசாயம் பார்க்கிறார்கள்? எத்தனை தமிழர்கள் தங்கள் பிள்ளைகள் விவசாயியாக ஆக வேண்டுமென்று சொல்லித் தருகிறார்கள்? சைன்டிஸ்ட்டா ஆகணும், டாக்டரா ஆகணும். இன்ஜினியரா ஆகணும். ஆனா விதைநெல்லு முளைக்குறதுக்கும் நாந்தான் அதிகாரின்னு தன்னை முன்னிறுத்திக்கணும். வெட்கமாயில்லை? முதல்ல உங்க மக்களை விவசாயி ஆக்குங்க... அப்புறம் விதை நெல்லை சோதிக்கலாம்.

இவங்க சோதிக்கிற எந்த தானியமும் இவங்க வசிக்கிற பகுதியில் வளராது. அங்கே வளரும் பயிர்களான கேரட், பீன்ஸுக்கு முளைப்பாரியில் இடம் உண்டா? அதுவும் கிடையாது. சரி, முக்கியமான கேள்வி - வீட்டில் விதை தானியம் வச்சிருக்கீங்களா? சூப்பர் மார்க்கெட்ல பச்சைப் பயிறு வாங்கி, அதை வீட்டில் முளைப்பாரி போட்டு, மூளை வீங்க அதுக்கொரு இத்துப் போன விளக்கம் குடுத்து, நாலு பேருக்கு முன்னே பட்டுடுத்தி வீட்டுப் பொம்பிளை, பிள்ளைகளையோ காட்சிப் பொருளாக்கி, அசிங்கமா அதை தூக்கிட்டு வரதுக்கு - நீங்க பருத்திமூட்ட குடோன்லேயே இருக்கலாமே சென்ட்றாயன்?

பழங்காலத்தில் செய்தனர் என்றால் - அது தான் அவர்கள் வாழ்வாக இருந்தது. அவர்களுக்கு வேறெந்த முறைகளும் தெரிந்திருக்கவில்லை. அப்போது பாம்பு கடிக்குக் கூட வைத்தியம் இல்லை. இப்போ பாம்பு கடித்தால் கடிவாயை வெட்டி, வாயை வைத்தா உறிஞ்சிக் கொண்டிருக்கிறோம்? கேன்சர் வந்தால் மாட்டு மூத்திரமா குடிக்கிறோம்? முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை தான். வேறு வழி கிடைக்கும்வரை அதைச் செய்தார்கள். ஆனால் ஆறு தலைமுறை கடந்தும் அதையே பிடித்துக் கொண்டு திரிந்தால் "தம்மின் தம்மக்கள் அறிவுடைமை" என்பது பொய்யாகி, இவ்வளவு அறிவியல் வளர்ந்த பிறகும் நம் பிள்ளைகளை பண்பாட்டின் பெயரால் முட்டாள்கள் ஆக்க முனைவது சாதி, பண்ணையார்த்தனம் தவிர வேறொன்றும் இல்லை.

கிராம வாழ்வை மீட்டுத் தருகிறார்களாம்... கிராம மீட்பு என்பது நிலவுடைமை - ஜாதிய - பெண்ணடிமைச் சமூகத்தை அமெரிக்காவிலும் கட்டமைக்கும் முயற்சியே!

திருந்துவார்களா அமெரிக்க தமிழ்ச் சங்கத்தினர்?

- கவிதா

Pin It