சாதியை அழித்தொழிப்பதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) CPI(M) பங்கு குறித்து சில கேள்விகள்: விஜூ கிருஷ்ணனுக்கு ஒரு திறந்த கடிதம்

பின்னணி:

சமீபத்தில் நடந்த ஊனா தலித் அஸ்மிதா யாத்திரைக்கு CPI(M) மற்றும் அதைச் சார்ந்த அமைப்புகளில் இருந்து ஓர் அணியை விஜூ கிருஷ்ணன் தலைமை தாங்கி அழைத்துச் சென்றார். இந்த நேரத்தில் அவர்களுடைய கட்சி, சாதிக்கு எதிரான பல போராட்டங்களில ஈடுபட்டு வருகிறது. விஜூவிற்கும் அவருடைய கட்சிக்கும் சாதியை அழித்தொழிப்பதில் உள்ள பங்கு மற்றும் இடதுசாரி அம்பேத்கரிய ஒற்றுமையைப் பற்றி சில கேள்விகளை தலித் கேமரா (DC) முன்வைக்கிறது.

அன்புள்ள விஜூ,

கடந்த வருடத்தில் இருந்து நம் நாட்டில் சாதிக்கு எதிராக வீரியம் நிறைந்த பல எழுச்சிப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் உங்களுடைய அமைப்பும் பங்கு கொள்ள முயற்சி செய்கிறது. இந்த நேரத்தில் சாதியை அழித்தொழிப்பதில் உங்களுடைய கட்சியின் பங்கு குறித்து ஓர் அர்த்தமுள்ள உரையாடலை உருவாக்குவதற்கு மட்டுமே இந்தக் கடிதம் எழுதப் படுகிறது. சமீபத்தில் நடந்த ஊனா தலித் அஸ்மிதா யாத்திரைக்கு, CPI(M) மற்றும் அதைச் சார்ந்த அமைப்புகளில் இருந்து ஓர் அணியை தலைமை தாங்கி அழைத்துச் சென்றீர்கள். இடதுசாரி-அம்பேத்கரியம் மற்றும் ‘நீல் சலாம் - லால் சலாம்’ குரல்கள் இணைந்து ஒலிப்பது பற்றிய உங்களுடைய முயற்சிகளைப் புரிந்து கொள்ள எங்களுக்கு ஆவலாக உள்ளது. சாதி ஒழித்தல் முயற்சிகளில் CPI(M)ன் பங்கு குறித்து எங்களுடைய கேள்விகளுக்கு உங்களுடைய பதில்களை எதிர்பார்க்கிறோம்.

1. நிலப்பட்டுவாடா

தலித் குடும்பங்களுக்கு 5 ஏக்கர் நிலம் பட்டுவாடா செய்ய வேண்டும் என்னும் கோரிக்கை பல வருடங்களாக இருந்து வருகிறது, இதுவே ஊனா இயக்கத்தின் ஒரு முக்கிய கோரிக்கையும் கூட. சமீபத்திய RTI தகவலின் படி (மூலம்: thewire.in - Progress Report on implementation of Land ceiling laws as on 31 December 2015), உங்கள் கட்சி ஆட்சி செய்த (செய்யும்) கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட நில அளவு தான் நாட்டிலேயே மிகவும் குறைவான ஒன்றாக உள்ளது. ஆனால 5 ஏக்கர் நிலம் பட்டுவாடா செய்ய வேண்டும் என்று உங்களுடைய கட்சி குஜராத்தில் நடக்கும் போராட்டங்களை ஆதரிப்பது நகைப்பாக இருக்கிறது. கேரளாவில் ஒருவருக்கு 0.41 ஏக்கர் நிலமும், மேற்கு வங்கத்தில் ஒருவருக்கு 0.33 ஏக்கர் நிலமும் மட்டுமே வழங்கப்படுகிறது. இது நம்முடைய நாட்டில் ஒருவருக்கு சராசரியாக வழங்கப்படும் நிலத்தின் அளவான 0.88 ஏக்கரை விட மிகக் குறைவு.

காங்கிரஸ் மற்றும் உங்களுடைய கட்சி மாறி, மாறி ஆட்சி செய்யும் கேரளாவில் ஆதிவாசி மற்றும் தலித் மக்கள் நிலத்துக்கான போராட்டங்களை 90களில் இருந்து இன்றைக்கும் நடத்துகிறார்கள். 2007ல் இடதுசாரி அரசு ஆட்சியில் இருந்த பொழுது நடந்த செங்கரா நிலப் போராட்டத்திற்கு காரணம், தலித் மற்றும் ஆதிவாசி மக்களுக்கு LDF மற்றும் UDF அரசுகள் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதே. இந்த போராட்டத்தை உங்களுடைய கட்சி மற்றும் இடதுசாரி அரசு ஒரு சட்டவிரோத நில ஆக்கிரமிப்பாகத் தான் பார்த்தது. அந்த நிலத்தில் இருந்த குடும்பங்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதில் உங்களுடைய கட்சி மற்றும் இடதுசாரி அரசு உறுதியாக இருந்தது. அந்த போராட்டக்காரர்களை ஏகாதிபத்திய கைக்கூலிகள் என்று உங்கள் கட்சித் தலைவர்கள் அழைத்தார்கள். உங்கள் கட்சிக்கு எதிரான விமர்சனங்கள் வைப்பவர்கள் மீது நீங்கள் கூறும் வழக்கமான ஒன்று தான் இது.

கேரளாவில் தாங்கள் இருந்த நிலத்தின் குத்தகை காலம் முடிந்ததும் 3 வருடங்களாக தலித் மற்றும் ஆதிவாசி மக்களால் நடத்தப்பட்டு வரும் அரிப்பா நிலப்போராட்டத்தில் போராட்டக்காரர்களை அங்கே உள்ள காங்கிரஸ், பிஜேபி, CPI, CPI(M) மற்றும் உள்ளூர் மக்கள் காரணமே இல்லாமல் கூட்டு சேர்ந்து தாக்கினீர்கள். போராட்டக்காரர்களுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கொடுக்க வேண்டாம் என்று CPI எம்.எல்.ஏ. அங்குள்ள மக்களுக்கு கூறியதை உங்கள் கட்சித் தலைவர்கள் ஆதரித்தீர்கள். 10 ஏக்கர் நிலம் வேண்டும் என்ற தலித் மற்றும் ஆதிவாசி மக்களுடைய கோரிக்கையை சாத்தியமில்லாத கோரிக்கை என்று உங்களுடைய உள்ளூர் அமைப்பு நிராகரித்தது. கேரள மாகாணம் உருவான பிறகு புதிதாக ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்ட் அரசு நிலச்சுவான்தார் அமைப்புக்கு எதிராக 1957-ல் உருவாக்கப்பட்ட சட்டத்திற்குப் போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. விவசாயக் கூலிகளுக்கு (பெரும்பாலும் தலித் மக்கள்) ஆதரவு தராமல் மேல் சாதி நாயர் மக்களுக்கே ஆதரவாக இருந்தது.

இது 1957ன் சட்டத்தில் 70வது பிரிவில் தெளிவாக உள்ளது. 1957க்கு முன் தலித் மக்கள் பெருமளவில் பங்கேற்ற மற்றும் உயிர் துறந்த விவசாயிகள் போராட்டங்களில் முக்கிய குரல் “நிலம் உழைப்பவருக்கே” என்று இருந்தது. இந்த போராட்டங்களுக்குப் பிறகு நடந்த நிலப்பட்டுவாடாவின்போது தலித் மக்கள் நிராகரிக்கப்பட்டனர். தலித் மக்கள் உபரி நிலப்பட்டுவாடாவை சார்ந்தே இருந்தனர். ஆனால் முதலாவதாக அமைக்கப்பட்ட அரசு, உபரி என்று அறிவித்த பல நிலங்கள் இன்று நீதிமன்ற வழக்கில் உள்ளது. தலித் மக்களை நிலக்கூலிகளாகவே வைப்பதற்காக சங்கங்கள் மூலமாக அவர்களுடையகூலி பற்றி மட்டுமே பேசப்படுகிறது. ஆனால் குத்தகை முடிந்தும் தோட்டங்கள் நில முதலாலிகளிடம் இருப்பதைப் பற்றி யாரும் பேசுவது இல்லை. மேற்கு வங்கத்தில் இந்த சங்கங்கள் கூட இல்லை. அரசு அங்கே விவசாயக் கூலிகளே இல்லை என்ற நிலையை எடுத்தது. இது மண்டல் கமிசன் அமைக்கப்பட்ட பொழுது மாகாணத்தில் பிற பிற்படுத்தப்பட்ட சாதி மக்களே இல்லை என்று கூறியது போல.

கேரளாவில் LDF மற்றும் UDFஆல் நில உச்சவரம்பு மூலம் கொண்டு வரப்பட்ட நிலச் சீர்திருத்தம் மழுப்பலான விதிகளைக் கொண்டுள்ளது. இவை ஆதிக்க சாதி மக்களுக்கு ஆதரவாகவே உள்ளது. பலர் தங்களுடைய நிலங்களை மத அறக்கட்டளைகள், குடும்ப அறக்கட்டளைகள் மற்றும் தோட்டங்களாக மாற்றி, தலித் மற்றும் ஆதிவாசி மக்களை ஏமாற்றி அவர்களை காலனி மற்றும் சேரிகளில் வாழ நிர்ப்பந்தித்தனர். 1957ல் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சரராக இருந்த வி ஆர் கிருஷ்ணா ஐயரின் குடும்பம் தங்களது நிலத்தை குடும்ப அறக்கட்டளையாக மாற்றியது.

உங்கள் கட்சி தலித் மக்களுக்கு 10 செண்ட் நிலம் வழங்கியதாக பிரச்சாரம் செய்தது ஒரு பெரிய பித்தலாட்டம். இந்த நிலத்தை தலித் மக்கள் பணம் கொடுத்து வாங்கினர்.

Kerala Institute of Local Administration (கேரள உள்ளாட்சி அமைச்சகத்தின் மூலம் நிறுவப்பட்டது) என்னும் தன்னாட்சி உடைய ஒரு பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனம் கிறுத்துவ தலித் மக்களை சேர்க்காமல் நடத்திய கணக்கெடுப்பில் 55% தலித் மக்கள் அச்சுறுத்தும் வகையில் இருக்கும் 26,198 காலனிகளில் வாழ்கின்றனர் எனவும், 2011 வருட கணக்கெடுப்பின்படி 15 லட்சம் தலித் குடும்பங்களில் 12% குடும்பங்கள் வாழத் தகுதியற்ற வீடுகளில் வாழ்கின்றனர் மற்றும் 43% தலித் மக்கள் சற்று வாழத் தகுந்த வீடுகளில் வாழ்கின்றனர் எனவும் தெரிவிக்கிறது.

34 வருடங்கள் மேற்கு வங்கத்தை ஆட்சி செய்த இடதுசாரிக் கட்சியும் உங்களின் கட்சியும் தலித் மற்றும் ஆதிவாசி மக்களுக்கு நிலப் பட்டுவாடா செய்ததை ஒரு பெரிய சாதனையாக காட்டி வருகிறீர்கள். அரைகுறை புள்ளிவிவரங்கள் மற்றும் பொய்களின் மூலம் குஜராத் வளர்ச்சி எப்படி காண்பிக்கப்படுகிறதோ, அதே போலவே தான் உங்களுடைய அரசும், இடதுசாரிஅறிவுஜீவிகளும் நிலப்பட்டுவாடாவை காண்பிக்கிறீர்கள். ஒருவருக்கு தலா 0.33 ஏக்கர் வீதம் வழங்கப்பட்ட இந்த நிலம் விவசாயம் செய்ய ஏதுவாக இல்லாமல் பலர் வேறு மாகாணங்களுக்கு தினக்கூலிகளாக சென்று விட்டனர். மேலும் சிலர் நிலத்தை மேல் சாதி ஆட்களுக்கே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். 2004-2005 National Sample Survey Organisationனின்(NSSO) அறிக்கைப்படி மேற்கு வங்கத்தில் 12 லட்சம் குடும்பங்கள் ஒரு வருடத்தின் பல மாதங்களில் போதிய உணவு இல்லாமல் வாழ்கிறார்கள். முக்கியமாக ஊரகப் பகுதிகளில் விவசாயக்கூலிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் உச்சகட்ட நெருக்கடியில் உள்ளனர். மேற்கு வங்க கிராமங்களில் ஆயிரத்தில் 106 குடும்பங்கள் பட்டினியாக இருக்கிறார்கள் (இந்த நிலை ஆந்திரப் பிரதேசத்தில் ஆயிரத்திற்கு 6, அசாமில் ஆயிரத்திற்கு 17, பீகாரில் ஆயிரத்திற்கு 20 மற்றும் ஒடிசாவில் ஆயிரத்திற்கு 48). இதில் பெரும்பாலான மக்கள் தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் இசுலாமிய சமூகத்தைத் சேர்ந்தவர்கள்.

2001ம் வருடத்தின் தேசிய மாதிரி ஆய்வின் படி (National Sample Survey) 58.3% ஊரக ஏழைக் குடும்பங்களில், முக்கியமாக இந்திய விவசாயத் தொழிலாலர்கள் மற்றும் குத்தகை விவசாயிகளிடம் வெறும் 6% நிலமே உள்ளது. மேற்கு வங்கத்தில் 55.4% கூலித்தொழில் செய்யும் குடும்பங்கள் 3.9% நிலமே வைத்துள்ளனர். 2001ஆம்வருடம், 39.2% விவசாயக் குடும்பங்களிடம் நிலமே இல்லை. அதே கணக்கெடுப்பில், நிலமற்ற கூலித் தொழிலாலர்களின் எண்ணிக்கை 35.1%ஆக உள்ளது (மூலம்: அஜித் நாராயண் போஸ்,பஸ்சிம் பங்லார் அர்தனிதி ஓ ராஜனீதி).

2011ஆம் வருடக் கணக்கெடுப்பின் படி மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு கோடி தலித் குடும்பங்களில் 15% குடும்பங்கள் வாழத் தகுதியற்ற வீடுகளில் வாழ்கின்றனர். 55% தலித் மக்கள் சற்று வாழத் தகுந்த வீடுகளில் வாழ்கின்றனர். பசுமைப் புரட்சி சாதி முறையை உடைக்கும் என்ற வாய்ப்பேச்சைத் தவிர, பசுமைப்புரட்சி பற்றி ஒரு விரிவான பார்வையை CPI(M) நிலைநாட்டவோ அல்லது செயல்படுத்தவோ இல்லை. அவர்களுடைய தோல்வியை நடைமுறையில் உள்ள முதலாளித்துவத்தின் பின்னால் ஒளித்துக் கொள்கிறார்கள்.

2. கையால் மலம் அள்ளும் தொழில்

பார்ப்பனிய முறையின் மூலம் தலித் மக்களின் மீது பாரம்பரியமாக திணிக்கப்பட்ட மாட்டுத் தோலை உரிக்கும் தொழிலை இனி செய்ய மாட்டோம் என ஊனா அஸ்மித யாத்திரையில் உறுதிமொழி எடுத்திருப்பது ஒரு புரட்சிகரமான முடிவு. அதேபோல், நம் நாட்டில் கையால் மலம் அள்ளும் தொழில், தலித் மக்களின் வாழ்வின் ஒரு கொடூரமான உண்மை. பல அமைப்புகள் மற்றும் கட்சிகள் போல உங்களின் கட்சியும் கையால் மலம் அள்ளும் தொழிலைத் தடை செய்வதற்கு பிரச்சாரம் செய்கிறது. ஆனால் உன்மை என்னவென்றால், நீங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களிலே கூட கையால் மலம் அள்ளும் தொழில் நடக்கிறது.

ஜூலை 3, 2015இன் சமீபத்திய சமூகப் பொருளாதார-சாதிவாரிய கணக்கெடுப்பின் படி, திரிபுராவில் 6.9 லட்சம் குடும்பங்களில் 17,332 குடும்பங்கள் கையால் மலம் அள்ளும் தொழிலில் ஈடுபடுகின்றனர். 2011 மற்றும் 2015இல் எடுத்த கணக்கெடுப்பின் படி திரிபுராவில் கையால் மலம் அள்ளும் தொழில் செய்யும் குடும்பங்கள் அதிக சதவிதத்தில் உள்ளன. அதற்கு அடுத்து பீகார், உத்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளது. 2011இன் சமூகப் பொருளாதார-சாதிவாரிய கணக்கெடுப்பின் படி (Socio Economic and Caste Census (SECC)) கேரளாவில் 13,687 குடும்பங்கள் கையால் மலம் அள்ளும் தொழில் சார்ந்து வாழ்கின்றனர். National Scheduled Castes Finance and Development Corporation இன் 2011ஆம் வருட கணக்கெடுப்பின்படி, மேற்கு வங்கத்தில் கையால் மலம் அள்ளும் தொழில் ஒரு உண்மை நிலையாகவே உள்ளது. Safai Karmachari Andolanஇன் கண்டுபிடிப்பு கூட கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் கையால் மலம் அள்ளும் தொழில் இருப்பதை உறுதி செய்து உள்ளது.

3. தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள்

காலம் காலமாக தலித் மக்களின் மீது தொடுக்கப்படும் கொடுமைகள் இன்றளவும் நடந்து கொண்டிருக்கிறது. குஜராத்தில் சமீபத்தில் நடந்த மிருகத்தனமான தாக்குதல் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் தலித் மக்களின் எழுச்சிக்கு ஒரு காரணம் ஆகும். இப்பொழுது தலித் மக்கள் தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் பொழுது, அவர்கள் மீதான வன்கொடுமை ஆதிக்க சாதிகளால் இன்னும் வீரியத்துடன் நடைபெறுகிறது. உங்களுடைய கட்சியும் தலித் மக்களின் மீது தங்களுடைய அரசு அதிகாரம் மற்றும் கட்சி அதிகாரம் மூலம் வன்கொடுமைகள் செய்து வருகிறது. 1979இல் மேற்கு வங்க அரசு மரச்சிப்பியில் வங்காள தேசத்திலிருந்து தஞ்சம் அடைந்த தலித் மக்கள், இசுலாமிய சமூக மக்கள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர்மீது பெரும் வன்கொடுமையை அவிழ்த்துவிட்டது. அதே அரசு ஆட்சிக்கு வரும் முன் தஞ்சம் அடைந்தவர்களை குடியேற்றம் செய்வதை ஒரு உறுதிமொழியாக முன்வைத்தது. ஆனால் இடதுசாரி கொள்கை உள்ள மேல் சாதி மக்கள் (பதர்லோக்) மட்டுமே குடியேற்றம் செய்யப்பட்டனர். இன்று அவர்கள் இந்தியா மற்றும் மேற்கு வங்கத்தில் நல்ல நிலையில் இருக்கின்றனர்.

தலித்கள் மீது உங்கள் கட்சி செலுத்தும் வன்கொடுமைக்கு வாழும் உதாரணமாக இருப்பவர் சித்திரலேகா - ஒரு தலித் பென் ஆட்டோ ஓட்டுனர். கேரளாவில் உங்களுடைய கட்சியின் ஆதிக்க சக்திக்கு எதிராக பத்து ஆண்டுகளாக போராடி வருகிறார். ஆனால் உங்களுடைய கட்சித் தலைமை அவருடைய போராட்டங்களை கண்டும் காணாமல் உள்ளது. சமீபத்தில் ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் நடந்த கலந்துரையாடலின் போது கூட உங்கள் கட்சி குழு உறுப்பினர் பிருந்தா காரத் அவர்கள் சித்திரலேகா விடயம் பற்றி எதுவும் அறியவில்லை என்று கூறினார். பிறகு எப்பொழுதும் போல குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப் படவேண்டும் என்று பட்டும் படாமலும் தெரிவித்தார். இதன்பிறகு கூட, கேரளாவில் உள்ள உங்கள் கட்சி ஆட்கள் சித்திரலேகா முந்தைய அரசினால் அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வீடு கட்டத் தடையாக இருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, தனக்கு சித்திரலேகா பற்றி தெரியாது என்று பிருந்தா காரத் கூறுவது நம்பும்படியாக இல்லை. ஏனெனில், சனவரி மாதத்தில் பென்கள் மீது செலுத்தப்படும் வன்முறைகளைப் பற்றி திருவனந்தபுரத்தில் பிருந்தா காரத் பேசும் பொழுது, மூன்று கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் உள்ள செயலகத்தின் முன் சித்திரலேகா போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார். இந்த தொடர் வன்கொடுமையைப் பற்றி 2013ல் உங்களுடைய கட்சி கட்டுப்பாட்டு ஆணையத்தலைவர் எஸ். இராமசந்திரன் பிள்ளையிடம் கொடுக்கப்பட்டது.

ஒரு வருடம் பின்பு உங்களுடைய கேரளக் கட்சி, தொண்டர்களிடம் விசாரணை முடித்து சித்திரலேகா கொடுத்த புகார் பொய்யானது என்றும், உங்கள் கட்சி மீது அவதூறு பரப்ப கொடுக்கப்பட்டது என்றும் தீர்ப்பு அளித்தீர்கள். தொடர்ச்சியாக ஃபேஸ்புக்கில் CPI(M) கொள்கைப் பரப்பாளர்கள் சித்திரலேகா மீது தனி நபர் நடத்தை குறித்து அவதூறு பரப்பி வருகின்றனர். 2005ல் உங்களுடைய கட்சியும், உங்கள் கட்சியின் நாளிதழும் சித்திரலேகா விடயம் உங்களுக்கு எதிரான ஊடகப் பிரச்சாரம் என்று கூறியது. ஆனால் இப்பொழுது உங்கள் கட்சியில் சிலர் சித்திரலேகாவிற்கு நடந்தது தவறு என்றும் அவருக்கு நியாயம் கிடைத்து விட்டது என்றும் கூறுகிறார்கள். அவர்கள் கூறுவது போலவே இருந்தாலும் சித்திரலேகா விடயத்தில் 2005ல் உங்கள் நிலைக்கும் இவர்கள் கூறுவதற்கும் நிறைய மாற்றம் இருக்கிறது.

கர்நாடகாவில் 2000ஆம் வருடம் கம்பலபள்ளியில் மேல்சாதி மக்களால் தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். உங்களுடைய கட்சி உறுப்பினரும் கர்நாடகாவில் ஒரு செல்வாக்கு மிகுந்த நபருமான சங்கரப்பா, குற்றம் சாட்டப்பட்ட மேல் சாதி மக்களுக்கு ஆதரவாக வாதாடி அவர்கள் விடுதலை ஆவதற்கு உதவினார். இன்று குற்றம் புரிந்தவர்கள் சுதந்திரமாக சுற்றுகிறார்கள், பாதிக்கப்பட்ட தலித் குடும்பத்தினரும் தலித் அமைப்புகளும் நியாயத்திற்காக இன்றளவும் போராடுகிறார்கள். பிறகு சங்கரப்பா உங்கள் கட்சியின் வழக்குரைஞர் அமைப்பின் மாநிலத் தலைவராக பல வருடம் இருந்து உங்கள் கட்சியின் அமைப்புகள் சார்பாக வாதாடினார்.

கேரளாவில் 2009ஆம் ஆண்டு உங்களுடைய இடதுசாரி கட்சி ஆட்சியில் இருக்கும் பொழுது, வர்கலாவில் உள்ள தலித் காலனிகள் மீது வன்முறையை அவிழ்த்து விட்டீர்கள். DHRM அமைப்பின் நிகழ்வுகளில் கலந்து கொண்டதற்காக வர்கலாவில் உள்ள தலித் பென்கள் மீதும் வன்முறை நடத்தப்பட்டது. சில நாட்கள் கழித்து DHRM மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு பின்பு சிவசேனா அமைப்பு அவர்களைத் தாக்கியது. கொலைக்கான ஆதாரம் இல்லமல் DHRM உறுப்பினர்களை தாக்கியது மட்டுமில்லாமல், DHRM உடன் தொடர்பு இருக்கும் தலித் பெண்கள்மீது வன்முறை அவிழ்த்து விடப்பட்டது. பாதிக்கப்பட்ட தலித் மக்களின் உறவினர்கள் அப்போதிய உள்துறை அமைச்சரும், உங்கள் கட்சி உறுப்பினருமான கொடியேரி பாலகிருஷ்ணனை சந்தித்தபோது, அவர்கள் தீவிரவாதி என்று பழி சுமத்தினீர்கள். இந்த கதி நம் நாட்டில் தலித் மற்றும் இசுலாமிய சமுகத்தினருக்கு தொடர்ந்து நடக்கும் ஒரு செயலாகவே இருக்கிறது.

கண்ணன் தேவன் மலைத்தோட்டத்தில் தலித் பெண் தொழிலாலளர்கள் “பொம்பள ஒருமை” என்கிற சங்கத்தை ஆரம்பித்தார்கள். இந்த அமைப்பின் மூலமாக ஊக்கத்தொகை, ஆண்களுக்கு சமமான ஊதியம் வேண்டியும், கொடுக்கப்படும் ஊதியத்திற்கு அதிகமாக தரப்படும் வேலைக்கு எதிராகவும் போராடினார்கள். மேலும் அதற்கு முன்பிருந்த சங்கங்கள் ஆண்களுக்கு ஆதரவாகவும், ஆண்களால் நடத்தப்பட்டதுமாக இருந்ததும் இவர்கள் ஏற்படுத்திய சங்கத்துக்குக் காரணம். CITU மற்றும் AITUC இணைந்து தொழிலாளர்களுக்காக ஊக்கத்தொகை பற்றி நடத்திய பேச்சுவார்த்தையை தொழிலாளர்களின் கலந்தாலோசனை இல்லாமல் நடத்தினர். இதனை எதிர்த்தும் இந்த பெண்கள் சங்கம் வேலைநிறுத்தம் நடத்தியது. இது CITU எந்த அளவிற்கு தொழிலாளர்களின் நலனில் அக்கறையில்லாமல் செயல்படுகிறார்கள் என்பதையும் குறிப்பாக தலித் பெண்தொழிலாளர்களின் குரலுக்கு எவ்வாறு மதிப்பளிக்காமல் செயல்படுகிறார்கள் என்பதையும் காட்டுகிறது. மேலும் CITU மற்றும் AITUC  சங்கங்களின் உறுப்பினர்கள் கண்ணன் தேவன் நிர்வாகத்திற்காக தலித் பெண்களை தொந்தரவு செய்ததும், மிரட்டியதும் தெரியவந்தது. இதன்மூலம் தெரிய வருவது CITU மற்றும் AITUC  சங்கங்கள் தொழிலாளர் நலன்களுக்காக பாடுபடுவதை விட தங்களின் சங்கங்களை நிலைநாட்டுவதற்காகவே உழைக்கிறார்கள் என்பதே.

“பொம்பள ஒருமை” சங்கத்தின் மூலமாகப் பெண் தொழிலாளர்கள் சுயமாகப் போராடி ஊக்கத்தொகை பெற்ற பிறகு ஊதிய உயர்வுக்கான போராட்டத்தை முன்னெடுக்க முடிவு செய்தனர். முழுக்க பெண்களால் நடத்தப்படும் சங்கமாக இருப்பதால் ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு “பொம்பள ஒருமை” சங்கத்திற்கு கிடைத்ததால் அந்தச் சங்கத்தில் இருந்த பெண்களில் சிலரை திசை திருப்பி CITU மற்றும் AITUC  சங்கங்கள் ஊதிய உயர்விற்கான வேறொரு போராட்டத்தைத் திட்டமிட்டனர். அதற்கு அவர்கள் சில வழிமுறைகளை பயன்படுத்தினர்.

CITU சங்கத்திடம் இருந்து தொழிலாளர்கள் பெருந்தொகைகளை அதிக வட்டிக்குப் பெற்றிருந்தனர். மாதம் தோறும் அவர்களது வருமானம் இந்தக் கடனை அடைப்பதற்கே செலவிடப்பட்டது. இதன் மூலம் அந்தப் பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சங்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்தனர். தொழிலாளர்களின் நலனுக்கான சங்கங்களே முதலாளிகள்போல் செயல்பட்டன.

CPI(M) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து சங்கப் பெண் தலைவர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்தன. குறிப்பாக ஒரு பெண் தலைவருக்கு எதிராகப் போடப்பட்ட பாலியல் வன்முறையைத் தூண்டுதல் வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது.

சங்கப் பெண் தலைவர்களின் தனிப்பட்ட சூழ்நிலைகளைப் பயன்படுத்தி அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களது கணவர்கள் மூலமாக சங்கத்தின் ஒற்றுமையைக் குலைத்தனர். பயமுறுத்துவதன் மூலமாகவும், தனிமைப்படுத்துவதன் மூலமாகவும் இந்தப் பெண்கள் பெரிய அரசியல் கட்சிகளுக்கு எதிராக செயல் பட முடியாதவாறு அவர்கள் பார்த்துக்கொண்டனர். இம்மாதிரியான அழுத்தங்கள் மூலமாக அவர்கள் “பொம்பள உரிமை” சங்கத்தை உடைத்தனர். விளிம்புநிலையில் மற்றும் அதிக அளவில் உபயோகப்படுத்தப்படும் நிலையில் இருக்கும் தொழிலாளர்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டிய CITU மற்றும் AITUC சங்கங்கள் தங்களைப் பாதுகாவலர்களாகக் காட்டிக்கொண்டு “பொம்பள உரிமை” சங்கத்தினரின் நேர்மையான முயற்சிகளை உடைத்தனர். அவர்களைத் தங்கள் சங்கங்களில் சேரச்சொல்லி நிர்ப்பந்தித்தனர். தொழிலாளர்களின் போராட்டங்களைத் தாங்கள் முன்னெடுத்ததாகக் காட்டிக் கொண்டனர்.

தற்போதைய CPI(M) ஆட்சியில் கூட இரண்டு தலித் பெண் சகோதரிகளின் தந்தை காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்த காரணத்திற்காக அவர்கள் CPI(M) கட்சிக்காரர்களால் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். இது பற்றி புகார் அளிக்க கட்சி அலுவலகத்திற்குச் சென்ற அவர்கள் மேல் பொய்ப் புகார் அளிக்கப்பட்டு ஒன்றரை வயதுக் குழந்தையுடன் கைது செய்யப்பட்டனர். இது பற்றி கருத்து தெரிவித்த CPI(M) உறுப்பினரும், முதல்வருமான பினராய் விஜயன் இது சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சனை என்றும், இதற்கு காவல்துறை தான் பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். ஷம்சீர் எனும் CPI(M) கட்சித் தலைவர்களில் ஒருவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவதூறு பரப்பியதற்காக அந்தச் சகோதரிகளில் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அதன்பிறகும் கூட ஜெயச்சந்திரன் எனும் கட்சித் தலைவர்களில் ஒருவர் அந்தச் சகோதரிகளைப் பற்றி நகைப்புக்குள்ளாக்கும் விதமாகப் பேசினார்.

தலித் மாணவர்கள் HCU, EFLU போன்ற இடங்களில் இதற்கு முன்பு மரணமடைந்தபோது உங்களது மாணவர் அமைப்பு எந்த மாதிரியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் BJPக்கு எதிராக அரசியல் செய்ய முடியும் என்பதற்காகவே ரோஹித் வெமுலாவின் மரணத்தை கையிலெடுத்தீர்கள். ரோஹித் வெமுலாவின் மரணத்திற்கு முன்புவரை ஒடுக்கப்பட்ட ஆராய்ச்சி மாணவர்களின் துயரத்தைப் பற்றி ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. ஆனால் தற்போது இந்தப் போராட்டங்கள் தேசிய அளவில் முக்கியத்துவம் அடைவது அறிந்ததும் நீங்கள் எல்லா இடத்திலும் போய் கலந்து கொள்கிறீர்கள்.

ஜந்தர் மந்தரில் அன்னா ஹசாரே போராட்டம் நடத்தியபோது சுஷ்மா ஸ்வராஜுடன் ஒரே மேடையைப் பகிர்ந்து கொண்டீர்கள். நிர்பயா பாலியல் வன்முறை மற்றும் படுகொலை தொடர்பாக ஜந்தர் மந்தரில் நடந்தப் போராட்டங்களிலும் கலந்து கொண்டீர்கள். ஆனால் 2014-ல் பகானா எனும் ஊரில் ஆதிக்க சாதியான ஜாட் இன ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட தலித் பெண்கள் அதே ஜந்தர் மந்தரில் ஒரு மாத காலம் போராட்டம் நடத்தியபோது நீங்கள் குறிப்பாணை வழங்கியதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. அந்தப் பெண்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியபோது உதவிகேட்டு AIDWA சென்றபோது இதில் BSP சம்மந்தப்பட்டிருப்பதால் தங்களால் எதுவும் உதவ முடியாது எனத் தெரிவித்தனர். உங்களுடைய இந்த நடவடிக்கைகளெல்லாம் தலித் மக்கள் மேல் உங்களுக்கு உண்மையிலேயே எந்த அக்கறையும் இல்லை என்பதையும் ஊடகங்களில்காட்டிக் கொள்வதற்காகவும், உங்களது கட்சி வளர்ச்சிக்காகவும், ஓட்டு அரசியலுக்காகவுமே இதையெல்லாம் செய்கிறீர்கள் என்பதாக எடுத்துக் கொள்ளலாமா?

4. சாதி அமைப்பின் பாத்திரம்வ்குறித் த சிபிஐ(எம்)இன் பார்வை

சிபிஐ(எம்)இன் சாதி அமைப்பு குறித்த பார்வை வெளிப்படையான நடைமுறை பாகுபாடு மற்றும் ஒடுக்குதல் வெளிப்பாடுகளான தீண்டாமை சமூக ஒதுக்கிவைப்பு போன்றவற்றையே அடிப்படையாக கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட எந்த மைய நீரோட்ட அரசியல் கட்சிகளும் சில அரிய வழக்குகள் தவிர்த்து இதை வெளிப்படையாக நியாயப்படுத்தாது. மேலும் அவர்கள் விரும்பாவிட்டாலும் இவற்றை பொதுவில் கண்டித்தே ஆகவேண்டும். மேலும் உங்களுடையது உள்ளிட்ட பல கட்சிகள் பல்வேறு மாநிலங்களில் தீண்டாமை உள்ளிட்ட சமூக ஒதுக்குதல்களை எதிர்த்து போராடியிருக்கின்றன. ஆனால் இது எல்லாவற்றையும் தாண்டி, சாதி அமைப்பின் பங்கு குறித்த கருத்தியல் வரலாற்றுப் பார்வையை உங்கள் கட்சி ஆவணங்களில் எங்கும் காணோம். மாறாக, இந்திய சமூகத்தில் சாதி அமைப்பின் வரலாற்றுப் பாத்திரம் முற்போக்கானதாக நாகரீகமற்ற தேசத்திலிருந்து எல்லா இடங்களிலும் சமூகத்தை வளர்த்ததாகவே பார்க்கப்படுகிறது. இதை சிபிஐ(எம்)இன் தோற்றுநர்களில் ஒருவரும் கட்சி பொதுச் செயலாளருமான இஎம்எஸ்ஸின் புத்தகமாக "கேரளம், மலையாளீ மதர்லேன்ட்" புத்தகத்தில் காணலாம், அவர் இந்திய சமூகத்தை குறிப்பாக கேரள சமூகத்தை வளர்த்ததில் சாதியின் பங்கு குறித்து குறிப்பிடும்போது:

“கேரளாவுக்கு மட்டுமல்ல முழு இந்தியாவுக்குமே, சாதி ஆரிய பார்ப்பனர்களின் மிகப்பெரிய பங்களிப்பாகும். ஐரோப்பிய அடிமைமுறையின் அதே அடிப்படையை இந்திய சாதி அமைப்பு கொண்டிருக்கிறது. இன்று நாம் சாதி அமைப்பை எதிர்க்கிறோம்; வெறுக்கிறோம். அடிமை முறையைப் போலவே, சாதி அமைப்பும் பல லட்சம் லட்சம் பொதுமக்களை சுரண்டி ஒடுக்கியது. ஆனால் அடிமை அமைப்பைப் போலவே, சாதி அமைப்பும் மனித சமூகத்தை நாகரீகமற்ற தேசத்திலிருந்து அது இப்போதிருக்கும் நிலைக்கு வர உதவியது.

சாதி அமைப்பின் செயல்படுத்தல் இந்தியாவில் சமூக முன்னேற்றத்தின் முக்கிய நிகழ்வாகும். அப்போதுதான் மக்கள் தங்கள் தொழிலின் அடிப்படையில் பல்வேறு சாதிகளாக பிரிக்கப்பட்டதும், விவசாயம், கைத்தொழில், வாணிபம், கலைகள், இலக்கியம், போர்த் திறன்கள் போன்ற பலவும் வளர்ச்சியுறத் தொடங்கியது. சாதி அமைப்பின் சாரமானது - மகன் தந்தையின் தொழிலைக் கற்றல், ஒவ்வொரு குழந்தையிலும் தன் குடும்பத் தொழிலில் பயிற்சி பெறவும் திறன் பெறவுமான ஆர்வத்தை வளர்ப்பது, குடும்பத் தொழிலில் திறன் பெற்று வசதியாக வாழ்தல் போன்ற பல. அதன் காரணமாக ஒவ்வொரு சாதியின் ஆண்களும், பெண்களும் தங்கள் தொழிலை வளர்க்கும் வாய்ப்பை பெற்றனர்; ஒவ்வொரு சந்ததியும் தங்கள் முந்தைய சந்ததியினரிடம் கற்றதோடு சேர்த்து புதிய அறிவையும் நடைமுறை செயல்படுத்தல் முறைகளையும் தங்கள் தொழிலில் சேர்த்தனர். இவ்வாறாக ஒவ்வொரு தொழிலும் வளர்ந்தது. பண்டைய கிரேக்க, ரோம, எகிப்திய நாகரீகங்கள் அடிமை அமைப்பின் மேல் கட்டப்பட்டதுபோல ஹிந்து சமூகம் சாதி அமைப்பின் மேல் கட்டப்பட்டது. சூத்திரர்கள், சண்டாளர்களை சுரண்டியே வைசியர்கள் விவசாயமும் வாணிபமும் செய்து தங்களுக்கும் மக்களுக்குமான செல்வத்தைக் கூட்டினர். சத்ரியர்கள் போர்த்திறனை வளர்த்து, புதிய ஆயுதங்களை உருவாக்கி சாம்ராஜ்யங்களைக் கட்ட முடிந்தது. சாதி அமைப்பே ரிஷிகளும் பார்ப்பனர்களும் வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள், அறிவியல், நிகழ்த்துகலைகளை உருவாக்கி கற்பிக்க வைத்தது. சுருக்கமாக, உயர்ந்த ஆர்ஷ பரத கலாச்சாரம், பண்டைய இந்து சாம்ராஜ்யங்கள், வெளிநாட்டவர்களை அவர்கள் மையங்களை ஈர்த்த கைவினைப் பொருட்கள், தன்னிறைவுற்ற கிராமங்கள் எல்லாமே சாதி அமைப்பின் அடிப்படையிலேயே வளர்ந்தன”

ஆனால் அம்பேத்கர் தெளிவாக சாதி அமைப்பு அதனுடைய தொழிலாளர் பிரிவினைகள் எப்படி எந்த சமூகத்துக்கும் சீரழிவானது, இந்திய சமூகத்தை எப்படி தேங்கச் செய்தது என சாதியை அழித்தொழித்தலில் குறிப்பிடுகிறார்:

“இந்த தொழிலாளர் பிரிவினை தன்னெழுச்சியானதல்ல, அது இயல்பான நாட்டங்களை அடிப்படையாகக் கொண்டதல்ல. சமூக மற்றும் தனிநபர் திறன் நம்மை ஒரு தனிநபரின் திறனை போட்டியிடுமளவு தனது சொந்த வாழ்க்கையை தேர்ந்தெடுத்து அமைத்துக் கொள்ளுமளவு வளர்க்க வேண்டுகிறது. இந்த கொள்கை சாதி அமைப்பில் மீறப்படுகிறது. எந்தளவென்றால் அது தனிநபர்கள் செய்ய வேண்டியவைகளை முன்னமே முடிவுசெய்கிறது - அவர்கள் பயிற்சிபெற்ற உண்மையான திறன்களின் அடிப்படையிலல்ல; பெற்றோர்களின் சமூக நிலையின் அடிப்படையில்.

இன்னொரு பார்வையில், சாதி அமைப்பினால் நேரும் தொழில்களின் இந்த வகைப்பாடு நேர்மறையாக நாசகரமானது. தொழில்துறை தேங்குவதில்லை. அது விரைவான சட்டென்ற மாறுதல்களுக்கு ஆளாகிறது. இந்த மாறுதல்களால், ஒரு தனிநபர் தனது தொழிலை மாற்றிக் கொள்ள சுதந்திரம் வேண்டும். அப்படி மாற்றும் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் சுதந்திரம் இல்லாது ஒருவர் தனது வாழ்க்கைக்கு வேண்டியதைப் பெறமுடியாது. இப்போது சாதி அமைப்பு இந்துக்களை தேவை இருக்கும் இடத்தில் தொழில் மேற்கொள்ள அனுமதிக்காது, அது பரம்பரையாக அவர்களுக்கென விதிக்கப்படாதவரை. ஒரு இந்து தனது சாதிக்கென விதிக்கப்படாத தொழிகளை மேற்கொள்வதைவிட பட்டினி கிடந்து இறப்பதைக் காணலாம், இதன் காரணம் சாதி அமைப்பிலிருக்கிறது. தொழில்களை மாற்றிக்கொள்ள அனுமதிக்காததன் மூலம், நாம் நாட்டில் பார்க்கும் வேலையின்மைக்கு சாதி அமைப்பு நேரடியான காரணமாகிறது.

தொழில் பிரிவினையின் ஒரு வடிவமாக சாதி அமைப்பு மற்றொரு பெரிய குறைபாடும் கொண்டுள்ளது. சாதி அமைப்பின் தொழிலாளர் வகைப்பாடு தேர்வை, தனிநபர் உணர்வுகளை, தனிநபர் விருப்பங்களுக்கு இடம்கொடாத வகைப்பாடாகும். அது விதியென்னும் சமயக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. சமூகத் திறன் குறித்த கருதுதல்கள் நம்மை தொழில்துறை அமைப்பிலிருக்கும் ஆகப்பெரிய தீமை அவ்வளவு வறுமையும் அதிலுள்ள வாதையுமல்ல என்று உணரச் செய்யும். அது பல நபர்களுக்கு அழைப்புகள் (=தொழில்கள்) அவர்களுக்கு ஈடுபாடற்ற விஷயங்களில் அவர்களை ஈடுபடுத்தியிருப்பதே. இத்தகைய அழைப்புகளை ஒருவரை தொடர்ந்து வெறுப்பில், தீய எண்ணங்களில் தவிர்க்கும் எண்ணத்தில் தள்ளுகிறது.”

5. பார்ப்பனியம்

இந்துமதத்தையும்/பார்ப்பனியத்தையும் இந்தியாவில் இருக்கும் பாசிசத்திற்கு மூல வேர்களாக அம்பேத்கர் கருதினார். இந்து மதம் தான் மிகத் தீயதான சமூக பொருளாதார முறைமையான - சாதிய முறைமைக்கு அடிப்படையான காரணம் என்பதை இந்துமதத்தை ஆழ்ந்து ஆய்வுக்கு உட்படுத்தி ஐயத்திற்கு இடமின்றி நிறுவினார் அம்பேத்கர். சங் பரிவாரங்களும் இந்து மதத்தில் இருந்து வேரெடுத்த கிளைகளில் ஒன்று தான். மற்றபடி இந்து மதத்தை விட்டு விலகிய அமைப்பல்ல. இப்படி இருந்தும், உங்களுடைய கட்சி இதுவரையிலும் பார்ப்பனியத்தைப் பற்றி கட்சி ஆவணங்களிலோ கட்சி நிகழ் நிரல்களிலோ ஆராய்ந்ததே இல்லை. மாறாக உங்கள் கட்சியில் இருக்கும் பொதுப்பார்வை, இந்து மதம் என்பது சாதிய அமைப்பு கொண்ட சுதந்திரமான மதம். அதில் இருக்கும் மூட நம்பிக்கைகள் மற்ற மதங்களில் இருப்பதைப் போல சமூகத் தீங்கானவை. இதையே உங்களுடைய கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாரம் யெச்சுரி கட்சிப் பத்திரிக்கையான பீப்பிள்ஸ் டெமாக்கிரஸியில் (People Democracy) எழுதியுள்ள கட்டுரையில் விவரிக்கிறார். அதன் தலைப்பு ‘போலி இந்துத்துவம் அம்பலப்பட்டது - காவிப் படையின் கட்டுக்கதைகளின் யதார்த்தமான நிலை’. அதில் சங் பரிவார், இந்து மதத்தில் இருந்து விலகிச் சென்று விட்டதாகவும் இந்து மதமொரு சுதந்திர மதமாக இருப்பதாக சித்தரிக்கிறார். அவர் ஆதி சங்கரரை (சமத்துவ புத்த மதத்தை வீழ்த்தி பார்ப்பனியத்தை மீட்டுருவாக்கி அல்லது வலிமைபடுத்திய தத்துவ தலைவர்), விவேகானந்தரை (சாதிய முறையை வலுவாக ஆதரித்து அதில் சில சீர்திருத்தங்களை மட்டுமே வேண்டியவர், மதமாற்றத்தை பற்றி எச்சரித்தவர்), பகவத் கீதையையும் கீழ்க்கண்டவற்றுக்காக குறிப்பிடுகிறார். அவர் சொல்கிறார்

“ ‘இந்து உணர்வு’ என்று பிஜேபி பஜனை செய்வதின் அர்த்தம் இதுவாகத் தான் இருக்கிறது (கோல்வாக்கர் புத்தகத்தை குறிப்பிட்டு). ஆனால் இது பரந்து பட்ட பெரும்பான்மையான இந்து கருத்தியலில் இருந்து விலகிச் செல்கிறது. இந்து கருத்தியல் விவேகானந்தராலும், ஆதி சங்கரராலும் அதிகம் வழிகாட்டுதலுக்குள்ளானவை. கோல்வாக்கராலோ சுய-அவதாரங்கள் எடுத்துக் கொள்ளும் சங்பரிவாரங்களாலோ வழி நடத்தப்படுபவையல்ல. ஆதி சங்கரர் ‘தொடர்ந்து பல நதிகள் பல வழிகளில் ஓடினாலும் இறுதியில் கடலில் கலப்பதைப் போலவே, பல மனிதர்கள் பல நம்பிக்கைகளைப் பின்பற்றினாலும் இறுதியில் ஒரே இறையிடம் கலந்துவிடுகிறார்கள்’ என்கிறார். விவேகானந்தரின் கூற்று ‘ யாரேனும் மற்றொருவருடைய மதத்தை அழித்து தன்னுடய மதமொன்றே தனித்து நிலைபெற கனவு கண்டால், என்னுடய இதயத்தின் ஆழத்தில் இருந்து அவனை நினைத்து பரிதாபப்பட்டு மற்ற மதங்களின் கொடியில் எழுதவிருக்கும் வாசகத்தை குறிப்பிட்டுக் காட்டுவேன், ‘எதிர்ப்பதைக் காட்டிலும் உதவுங்கள், நல்லிணக்கத்திற்கோ, சமாதானத்திற்கோ, வேற்றுமைக்கெதிராகவோ சண்டையிடாதீர்கள்’.

எல்லாவற்றையும் தாண்டி, பகவத் கீதை கூறுவதை எடுத்துக் கொள்ளுங்கள், “ எந்தவொரு சடத்தையும் நம்பிக்கையுடன் தொழும் பக்தனுக்காக, அவன் தொழும் வடிவத்திலேயே அவனுடைய நம்பிக்கையை நிலைப்படுத்துவேன்” (பகுதி V11 (21). பசுவினுடைய நிறம் எதுவாக இருந்தாலும், பாலினுடைய நிறம் எப்பொழுதும் வெண்மையானதுதான். ஆர்.எஸ்.எஸினுடைய இந்து ராச்சியம் இந்த மெய்யறிவிலிருந்து முற்றிலும் விலகியிருக்கிறது”.

அன்றாட வாழ்க்கையிலும் கலாச்சார தளங்களிலும் பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதன் மூலம் பார்ப்பனிய மேலாதிக்கம் இந்த சமூகத்தில் ஒரு ஆழ்ந்த முத்திரையை பதித்துக் கொண்டிருக்கிறது. உங்களுடைய கட்சியும் கூட பல மதச்சார்பற்ற பொது இடங்களில் பார்ப்பன சின்னங்களை தைரியமாக எதிர்க்க வலுவில்லாமல் தானே இருந்தது. ஓணம் பண்டிகை கூட ஒரு காலத்தில் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்ட ஒரு பகுஜன அரசனான மகாபலியைக் கொண்டாட வேண்டிய ஒரு பண்டிகை, இன்று பார்ப்பன சமூகத்தின் மோசமான சின்னமாகிவிட்டது. பார்ப்பன சமூகத்தையும் அவர்கள் தூக்கிப் பிடிக்கின்ற சைவ உணவு முறையையும் கொண்டாடுகிற ஒரு பண்டிகையாக மாறிவிட்டது. இது மடடுமல்லாமல் , ஏன், பல்கலைக்களங்களிலும் மற்றும் பிற கலாச்சார தளங்களிலும் கூட பார்ப்பனப் பண்டிகைகளை கொண்டாடுவதை நீங்கள் எதிர்க்கவும் இல்லை, விவாதத்திற்கு உட்படுத்தவும் இல்லை. ASAI போன்ற அமைப்புகள், தீபாவளி போன்ற பண்டிகைகளுக்காக நடத்துகின்ற கலாச்சார போராட்டங்களைக் கூட உங்கள் SFI ஆதரிக்கவில்லை. உங்கள் அமைப்க்ச் சேர்ந்தர்வர்கள் கூட கிருஷ்ண ஜெயந்தி போன்ற இந்துப் பண்டிகைகளை மிக ஆர்வமாகக் கொண்டாடி நாங்களும் சாதி ரீதியான இந்து அமைப்புகளுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்று மார்தட்டிக் கொண்டீர்கள். ஆனாலும் இப்போது அதை மறுக்க முயற்சி செய்கிறீர்கள்.

இந்த மாதம் கைரளியில் (Kairali), இடதுசாரி அரசுடைய ஆசிர்வாதத்துடன் ராஷ்ட்டிரபதி பவனில் நடக்கப்பட்ட ஓணம் பண்டிகையில் ரிக்வேத செய்யுள்கள் வாசிக்கப்பட்டன. ஏன், கிருஸ்துவ மதத் தலைவரான போப் ஆண்டவர் , மார்க்சிஸ்ட் கட்சியின் மிக உயர்ந்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஈ கே நாயனார் அவர்களுக்கு விவிலியத்தை அளித்தபோது, அவர் போப் ஆண்டவருக்கு பகவத் கீதையை அளித்தார். இந்த மேலாதிக்க மனோபாவம் எதைக் குறிக்கிறது என்றால் பகவத் கீதை மட்டுமே இந்தியக் கலாச்சாரத்தின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியாக அடையாளப்படுத்தப்படுகிறது. முன்னை அமைச்சரவையில் இருந்த முஸ்லீம் லீக் அமைச்சர் கூட தன ஒரு பொது விழாவில் மெழுகுவர்த்தியை ஏற்ற மறுத்தபோது அவர் ஒரு முஸ்லீம் மதவாதி என்று உங்களுடைய கட்சியாலும் பொது ஜனம் என்று கூறிக்கொள்ளும் இந்து மத வெறியர்களாலும் முத்திரையிடப்பட்டது.

மேலே கூறப்பட்ட செயல்கள் எதைக் குறிக்கிறது என்றால் இந்து மத அடிப்படையிலே ஒரு பரந்த மனோபாவத்தையுடைய ஒரு மதம் என்றும், சங் பரிவார் போன்ற அமைப்புகள் தான் அதை கொச்சைப்படுத்துகின்றன என்றும் குறிக்கின்றது. ஆனால், பார்ப்பனியத்தை எல்லா தளங்களிலும் ஒரு தீவிர விவாத பொருளாக்காமலும் பார்ப்பனியத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமலும் நாம் எப்படி சாதியை அழிக்கப் போகின்றோம்?

ஏன் இந்த நாட்டின் அரசியல் போக்கை மாற்றிய அளவில் சிறந்த பங்களிப்புகளை அளித்த தலித்திய தலைவர்களும், அறிவுஜீவிகளும் அம்பேத்கர் இயக்கங்களில் இருந்து மட்டும் வந்துருக்கிறார்கள்? ஏன் உங்கள் கட்சியில் மட்டும் தலித்திய தலைவர்களும் அறிவு ஜீவிகளுக்கும் இப்படிப்பட்ட ஒரு தீராத பற்றாக்குறை?

6. சிபிஐ(எம்) தலைமையில் தலித் பிரதிநிதித்துவம்

தற்போது நடந்துகொன்டிருக்கும் அரசியல் செயல்பாடுகளில் முக்கியாமன அம்சமொன்று தலித் இயக்கங்கள் மீதான முக்கியத்துவமும், தலித் தலைமையின் கீழான போராட்டங்களும். இந்த போராட்டங்கள் இந்துத்துவ ஃபாசிசத்திற்கும், அதன் அடிப்படையான பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கும் தீவிரமான சவாலை முன்வைத்திருக்கின்றன. ஆனால் தலித் தலைமை குறித்த கேள்வி உங்கள் கட்சியிலும் உங்கள் மக்கள் பிரதிநிதிகளிடத்தும் உங்கள் கட்சி அறிவுஜீகளிடத்தும் எப்போதும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. உங்கள் பொலிட் பீரோ உறுப்பினர்கள் 1/3 பங்கினர் இப்போதும் பார்ப்பனர்கள்தான், மீதத்தில் பெரும்பாலானோரும் நிலவுடைமை ஆதிக்கச் சாதியினரே.

உங்கள் பொலிட் பீரோவில் ஒரு தலித்தும் இருந்ததில்லை. ஒரு முஸ்லிம் வரவும் 44 ஆண்டுகளாகியிருக்கின்றன. உங்கள் அறிவுஜீவிகளிலும் பெரும்பாலானோர் பார்ப்பன மற்றும் ஆதிக்கச் சாதியினரே. உத்திரப் பிரதேசத்துக்கு அடுத்து தலித்துகள் எண்ணிக்கை அதிகமுள்ள மேற்கு வங்கத்திலும் மத்திய மற்றும் மாநிலத் தலைமைகளின் தலித் பிரதிநிதித்துவம் அதன் மக்கட்தொகையோடு ஒப்பிடுகையில் படு குறைவாகவுள்ளது. அதேநேரம் சிறுபான்மை ஆதிக்கசாதி அறிவுசீவி சமூகம் உங்கள் கட்சித் தலைமையை அது மேற்கு வங்க அரசு மற்றும் சிவில் சமூகத்தில் எல்லா இடங்களிலும் ஆதிக்கம் செலுத்துவதுபோலவே ஆக்கிரமித்துள்ளது. கேரளா அல்லது மேற்கு வங்கத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த மக்கட் பிரதிநிதி ஒருவர் அவர் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் இடஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளிலேயே தேர்ந்தெடுக்கப்பட முடியும், மற்ற நிகழ்வுகள் அரிதே.

அம்பேத்கரிய இயக்கங்களிலிருந்து வந்த எண்ணற்ற தலித் தலைவர்களும் அறிவுஜீவிகளும் இந்நாட்டின் அரசியல் செயல்பாட்டுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்திருக்கும்போது, உங்கள் கட்சியில் தலித் தலைமையும் அறிவுஜீவிகளும் இல்லாமலிருப்பதற்கு காரணமென்ன?

- தலித் கேமரா

ஆங்கில மூலம் - http://www.dalitcamera.com/inquiring-role-cpim-annihilation-caste-open-letter-vijoo-krishnan/

Pin It