chandrasekar azad ravan“ஜிக்னேஷ் மெவானி” “சந்திரசேகர் ஆசாத் எனும் ராவணன்” இவர்களிருவரும் சாதி ஒழிப்பை இலட்சியமாக கொண்டவர்கள். அம்பேத்கரை தங்களின் போராட்டத்திற்கான உந்துசக்தியாக கொண்டவர்கள். ஆனாலும் ‘இழப்பதற்கு ஏதுமற்ற பாட்டாளிவர்க்கம் இந்தியாவில் இல்லை; உழைக்கும் மக்களில் பெரும்பாலவரான சாதி இந்துக்களுக்கு இழக்க முடியாத சொத்தாக சாதி இருக்கிறது; ஆதலால் சாதிகளுக்கிடையே ஒற்றுமை சாத்தியமில்லை; ஆகவே இந்தியாவில் வர்க்கப்போராட்டம் சாத்தியமில்லை’ என்கிற அறிவியலுக்குப் புறம்பான அம்பேத்கரின் கருத்தை நிராகரித்து முன்னேறுகிறார்கள்.

“தலித்துகளும், முஸ்லீம்களும் இணைந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்கான அரசியல் படை ஒன்றை உருவாக்குவது!” என்கிற வர்க்க அணிசேர்க்கையை முவைத்தார் குஜராத்தை சேர்ந்த "உனா எழுச்சி”-யின் நாயகனான ஜிக்னேஷ் மெவானி. இப்போது உத்தரப்பிரதேசத்தில் பீம் படையை உருவாக்கியுள்ள வழக்கறிஞர் சந்திரசேகர் ஆசாத்தும், “தனது செயல்பாடுகள் தலித்துகள், பிற்படுத்தப்போட்டோர், சிறுபான்மை மக்களின் உரிமைக்கானதாக இருக்கும்” என வர்க்க அணிசேர்க்கையையே முன்வைக்கிறார். “சமத்துவம், விடுதலை, நீதி” என முழக்கமிடும் இவர் தன்னை ராவணன் என அழைத்துக் கொள்கிறார்.

ஆம்! சாதி ஒழிப்பு என்பது வர்க்கப்போராட்டம்தான், அதற்கு தேவையாயிருப்பது ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் வர்க்க அணிசேர்க்கைதான் என்பதை இயல்பாக எடுத்துக்கொண்ட இவர்களிருவரிடமும் வெளிப்படுவது வர்க்க அரசியல்தான்.

வர்க்கபோராட்டத்தை மறுத்த அம்பேத்கரின் வாதம் அவரது காலத்திலேயே முறியடிக்கப்பட்டது!

நாம் முந்தைய கட்டுரைகளில் பார்த்தபடியான 1921-இல் இசுலாமியர்களும், தலித்துகள் உட்பட ஒடுக்கப்பட்ட மக்களும் இணைந்து நின்ற கேரளா மலபார் பகுதியின் “மாப்ளா கிளர்ச்சி” ஆகட்டும்; 1946 – 1951 ஆண்டு காலத்தில் தலித்துகள், இசுலாமியர்கள், ஒடுக்கப்பட்ட அனைத்து மக்கள், இவர்களோடு இணைந்து உயிரை தியாகம் செய்த ஆதிக்க சாதி உழைக்கும் மக்கள் அனைவரும் சேர்ந்து நாட்டையே உலுக்கிய “வீரத்தெலுங்கானா” போராட்டம் ஆகட்டும்; 1943-இல் “அடித்தால் திருப்பி அடி” எனும் முழக்கத்தோடு தஞ்சையில் பிறந்த சாதி ஒழிப்பு போராட்டங்கள் ஆகட்டும் அனைத்துமே சாதி ஒழிப்பிற்கு வர்க்க அணிசேர்க்கையையும், அதன் மூலமான வர்க்கப்போராட்டத்தையும் தவிர வேறு வழி எதுவும் இல்லையென்பதையே நிரூபித்தது.

இவையனைத்தும் அம்பேத்கரின் காலத்திலேயே நடந்தது. அவருக்கு சாதி ஒழிப்பை முன்னெடுத்து சென்ற வர்க்க அணிசேர்க்கையும், வர்க்கப்போராட்டமும், வர்க்க அரசியலும் கசந்தது. அவருக்கு மட்டுமல்ல, அவர் சட்ட அமைச்சராக இருந்த 1950-இல் இந்தியாவிற்கு வந்த அமெரிக்காவின் ஃபோர்டு பவுண்டேசனுக்கும் கசந்தது.

அம்பேத்கருக்கும் ஆளும்வர்க்கத்திற்கும் இருந்த ஒரே வேறுபாடு என்னவென்றால், அம்பேத்கர் உண்மையை ஒத்துக்கொள்ள மறுத்து கசப்பை வெளிப்படுத்தினார். ஆளும்வர்க்கம் உண்மையை ஒத்துக்கொண்டு தனது கசப்பை வெளிப்படுத்தியது.

இந்தியாவின் சமூகச்சூழல்களை ஆய்வு செய்த அமெரிக்காவின் ஃபோர்டு பவுண்டேசன் தலித்துகள், பெண்கள், பழங்குடியினங்கள் ஆகியப் பிரிவினரிடையே கம்யூனிசம் எளிதாக காலூன்றும் என அனுமானித்தது. ஆளும்வர்க்கத்தை தூக்கியெறியும் கம்யூனிசத்துக்கு மாற்றாக, இவர்களிடையே ஆளும்வர்க்கத்துக்கு சேவை புரியும் சீர்த்திருத்த அரசியலையும், அதற்கான இயக்கங்களையும் கொண்டு சேர்க்க முடிவு செய்தது.

அம்பேத்கரின் காலத்தில் ஃபோர்டு பவுண்டேசன் முன்வைத்த இந்த முடிவுகளை அவர் எதிர்க்கவில்லை. தனது கண்டுபிடிப்பான ‘இந்தியாவில் வர்க்கப்போராட்டம் நடக்காது, கம்யூனிசம் காலூன்றாது’ என்பதை முன்வைத்து வாதாடவில்லை.

அம்பேத்கர் அப்படி வாதம் செய்திருப்பாரேயானால் இந்தியாவெங்கும் பற்றிப்படர்ந்து கொண்டிருந்த கம்யூனிச நெருப்பின் நிலையினை ஆதாரங்களுடன் முன்வைத்து ஆளும்வர்க்கமே அவரை வாயடைக்க செய்திருக்கும்.

அம்பேத்கரின் வாதம் அவரது காலத்திலேயே உழைக்கும் மக்களின் போராட்டங்களாலும், அதைக்கண்டு நடுங்கிய ஆளும்வர்க்கத்தாலும் முறியடிக்கப்பட்டது. 

அம்பேத்கரியத்தை தூக்கி நிறுத்த ஆனந்த் டெல்டும்ப்டெக்கள் மேற்கொண்ட பித்தலாட்டங்கள்!

அம்பேத்கரின் பலவீனத்தை உணர்ந்தவர்களில் முக்கியமானவர் ஆனந்த் டெல்டும்ப்டெ. அதேநேரத்தில் அந்த பலவீனத்தை மறைக்க முட்டாள்தனமான முயற்சி செய்தவரும் அவரேதான்.

அவர் தனது “ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்” என்ற நூலில் சொன்னார், “வர்க்கப்போராட்டம் தவிர்க்க முடியாதது. வர்க்கப்போராட்டம்தான் சாதியை ஒழிக்கும். ஆனால் இந்தப் போராட்டங்களில் தலித்துகளின் பங்கேற்பு மட்டும் சாத்தியமில்லை”

இந்திய துணைக்கண்டத்தின் ஏடறிந்த வரலாறான வர்க்கப்போராட்ட வரலாறுகள் அனைத்தும் தலித்துகளின் பங்கேற்போடே நடந்தன என்பதற்கு நாம் மேலே தந்துள்ள சில சான்றுகளே போதும். இப்போதும் அப்படித்தான் நடக்கின்றன என்பதற்கும் “ஜிக்னேஷ் மெவானியும்” “சந்திரசேகர் ஆசாத் எனும் ராவணனும்” சிறந்த சாட்சிகளாகும். இனியும் இப்படித்தான் நடக்கும் என்பதே அறிவியல்.

இந்த உண்மைக்கு மாறாக ஆனந்த் டெல்டும்ப்டெ பொய் சொன்னார். அந்த பொய்யில் புனையப்பட்ட நூலை தமிழக முற்போக்கு இயக்கங்களிடமும் அதன் ஊழியர்களிடம் திணிக்கும் பணியை செய்தவர் எஸ்.வி.ஆர்.

இவர் கரூரை மையமாகக் கொண்டு இயங்கும் "AREDS" என்ற N.G.O-வோடு நேரடியாக தொடர்புடையவர். பின்நவீனத்துவவாதிகளின் செயல்பாட்டுக்குத் துணையாக 'நெறிக்கப்பட்ட குரல்வளைகள்', 'அந்நியமாதல்' ஆகிய நூல்களைக் கொண்டு வந்தவர். இங்கிலாந்தில் செயல்பட்ட கம்யூனிஸ்டுகளை பட்டியலிட்டு காட்டிக்கொடுத்த ஜார்ஜ் ஆர்வெல் என்கிற உளவாளி சோசலிச ஒன்றியத்தை கேவலமாக சித்தரித்து எழுதிய 1984 என்ற நூலை பாராட்டி பரப்பி கம்யூனிச எதிர்ப்பை முன்னெடுத்தவர். சிறீலங்கா டெமாக்கரெட்டிக் பாரம் (SLDF), லிட்டில் எயிட் போன்ற N.G.O-க்களோடு சேர்ந்து புலியெதிர்ப்பு அரசியல் நடத்தியவர்.

தலித்துகளை காயடிக்கும் இவர்களின் நோக்கம் என்ன?

இவர்கள் கூறுகிறார்கள், “கம்யூனிஸ்டுகள் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்திற்கான வழிமுறைகளில் ஒன்றாக சாதியை முடிவுக்குக் கொண்டு வருவதைப் பார்க்கிறார்கள். (அதாவது ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் இல்லையென்றால் கம்யூனிஸ்டுகள் சாதியைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள் -நாம்) சாதியை ஒழித்துக்கட்டும் போராட்டத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பும் அடங்கியிருப்பதைப் பார்ப்பதில்லை. கம்யூனிஸ்டுகளின் இப்போக்கில் மேலோங்கியிருப்பது தலித்துகளின் பார்வையல்ல. (அதாவது மேல்சாதியினரின் பார்வை -நாம்) இதற்கு கம்யூனிஸ்டுகள் என்ன நியாயம் கூறினாலும், தலித்துகளையும் அவர்கள் நடத்தும் சாதி எதிர்ப்புப் போராட்டங்களையும் இடதுசாரிகள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள் என தலித்துகளிடையே நிலவுகிற வெறுப்புணர்வை நீக்கிவிடாது”

இவர்கள் கம்யூனிஸ்டுகள் வேறு, தலித்துகள் வேறு என்று நஞ்சை விதைத்தார்கள். கம்யூனிஸ்டுகளாக வளர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து போராடியவர்களுக்கு சாதி சாயம் பூசி பிளவுபடுத்தினார்கள். ஒன்றாக நின்று ஒன்றாகப் போராடியவர்களை ‘தலித்துகள் போராடுகிறார்கள், அதை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்’ என்று திரித்து கட்சியை உடைக்கும் வேலையை செய்தார்கள்.

இப்படி விஷத்தை கக்கியவர்கள்தான் “என்னை ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுகிறவன் என்றோ, சாதி ஒழிப்புப் போராட்டத்தையும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கிறவன் என்றோ யாரேனும் எண்ணுவார்களேயானால், நான் அப்படிப்பட்டவன் அல்ல என்பதை அவர்களுக்கு தெளிவுப்படுத்த விரும்புகிறேன்” என்று உருகுகிறார்கள்.

அதாவது வர்க்கப்போராட்டத்திற்கு எதிரானவன் இல்லையென்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். எதிராக இல்லையென்றால் என்ன செய்திருக்க வேண்டும்?

  • பெரும்பான்மை தலித் மக்களை கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைய வைத்து வர்க்கப்போராட்டத்தையும் சாதி ஒழிப்பையும் மேலும் பலம் பொருந்தியதாக மாற்றியிருக்க வேண்டும்.
  • தலித் சமூகப் பின்னணியினர் கட்சியில் செல்வாக்கு செலுத்தும்போது சாதி ஒழிப்பிற்கும் வர்க்கப்போராட்டத்திற்குமான உறவுகள் குறித்த தவறான கருத்துகளை களையவும் முன்னேறவும் முடியும் என்பதை நிலைநாட்டியிருக்க வேண்டும்.

ஆனால் இவர்கள் செய்தது என்ன?

  • உழைக்கும் மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்க அமெரிக்காவின் ஃபோர்டு பவுண்டேசன் துணையோடு இந்திய ஆளும்வர்க்கம் கட்டியமைத்த தலித் தலைமை, தலித் அரசியல், தலித் கலைவிழாக்கள், தலித் இலக்கியங்கள் என்கிற சதிக்கு துணைபோனார்கள். கம்யூனிஸ்டுகள் வேறு, தலித்துகள் வேறு என்று நஞ்சை விதைத்து கட்சியை உடைத்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக தலித் அமைப்புகளை முன்வைத்தார்கள்.

தலித் அமைப்புகள் எந்த தலித்துகளுக்கு என அவர்களே வெளிப்படுத்தும் உண்மை!

sv rajadurai“திடீரென்று ஒரு கட்டத்தில் நாடு முழுவதும் கீழ்சாதியினரிடமும் தலித்துகளிடமும் சாதி எதிர்ப்பு உணர்வு வளரத் தொடங்கியது. காரணம் மேற்கத்திய தாராளவாத நவீனத்துவம் பின்னணியிலான பிரிட்டீஷ் ஆட்சியாகும். சாதி எதிர்ப்பிற்கு வேண்டிய பொருத்தமான கருத்துநிலை பிரிட்டீஷ் காலத்தில் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் என்னும் வடிவங்களில் வெளியிலிருந்து வந்த சத்தூட்டம் போன்றவற்றால் தோன்றியது. நகரங்களிலும் தொழில் வளர்ச்சியடைந்தப் பகுதிகளிலும் தலித்துகளிடையே கல்வி பரவி பணம் ஈட்டுவதற்கான வாய்ப்பு உருவாகியது. பண பொருளாதாரத்தின் வளர்ச்சி, வேலை வாய்ப்புகளில் ஏற்பட்ட வளர்ச்சி ஆகியவை சேர்ந்து தலித்துகளிடையே ஒரு புதிய வர்க்கம் உருவாக காரணமாயின. தலித் இயக்கங்களை மேற்சொன்னவற்றின் விளைவாகத்தான் பார்க்க வேண்டும்”

இந்த கேடுகெட்ட கூற்றை மேலோட்டமாக படித்தால், ஆகா வெள்ளையர் ஆட்சியில் அனைத்து தலித்துகளுக்கும் கல்வியும் வேலையும் கிடைத்து சுபிட்சமடைந்தது போல் தோன்றும்.

ஆனால் உண்மை என்ன?

  • வெள்ளையர் ஆட்சி காலமான 19-ஆம் நூற்றாண்டின் போது மட்டும் பட்டினியால் மாண்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 10 லட்சம். இவர்களில் பெரும்பான்மையோர் ஒடுக்கப்பட்ட தலித்துகள்.
  • வெள்ளையர்கள் ஆட்சியில் தலித்துகளில் சில ஆயிரம் பேர்களுக்கு இராணுவத்திலும் தொழில் நிறுவனங்களிலும் கடைநிலை வேலை வாய்ப்புகள் கிடைத்தன. அதேநேரத்தில் இலட்சக்கணக்கான தலித்துகள் வால்பாறை, ஆனைமலை என உள்நாட்டிலும் இலங்கை, பர்மா, மலேசியா, மொரீஷியஸ் என வெளிநாடுகளிலும் அடிமைகளாக்கப்பட்டனர். வெள்ளை முதலாளிகளுக்காக காடுகளை அழித்து தேயிலை தோட்டங்கள் உட்பட பெருந்தோட்டங்கள் உருவாக்கும் பணியில் தாங்கொண்ணாத துயரங்களையும், நோய்களையும் அடைந்து மரணத்தை தழுவிக்கொண்டிருத்தார்கள்.
  • மீதமுள்ள கோடிக்கணக்கான தலித்துகளை வெள்ளை ஏகாதிபத்தியத்தின் காலை நக்கிப் பிழைத்துக்கொண்டிருந்த பண்ணை நிலவுடமையாளர்கள் அடிமைகளாக வைத்து நசுக்கிக் கொண்டுதானிருந்தனர்.

ஆக, வெள்ளையர்கள் தங்கள் நலனிலிருந்து வழங்கிய வாய்ப்பில் கொஞ்சமே கொஞ்சம் பயனடைந்த சிறுபிரிவினர் தங்களுக்கு கிடைத்த பொருளாதாரத்தின் மூலமாக தலித் அமைப்புகளை உருவாக்கினார்கள்.

எதற்கு? ஏகாதிபத்தியத்தை எதிர்க்காத, வர்க்கப்போராட்டம் அல்லாத, சில்லறை சலுகைகளுக்காக.

இவர்கள் வெள்ளை ஏகாதிபத்தியத்தோடு சமரசம் செய்துகொள்வதன் மூலம் வெள்ளை ஏகாதிபத்தியத்தால் அதிக இலாபமடைந்த, உயர்நிலை அதிகாரங்களில் இருந்த பார்ப்பனர் உட்பட உயர்சாதியினர் அனைவரோடும் சமரசமே செய்தனர் என்பதை எவ்வளவு கேவலமாக மறைக்கிறார்கள்?

மேலும் இவர்கள் சொல்கிறார்கள்,

“பிரிட்டீஷ் ஆட்சி தலித்துகளுக்கு மூன்று வகையான வாய்ப்புகளை வழங்கியது. காலனி ஆட்சியின் நலன்களின் அடிப்படையில்தான் பிரிட்டீஷ் இராணுவத்திலும் இதர துறைகளிலும் தலித்துகள் நுழைய வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனாலும்

1. பல நூற்றாண்டுகளாக சாதி அமைப்பின் கீழ் தாங்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டு வந்ததை காலனி ஆட்சி உருவாக்கிய மதசார்பற்ற ஆட்சியானது தலித்துகளுக்கு உணர்த்தியது.

2. எந்தவொரு போராட்டத்தையும் மேற்கொள்வதற்கான பொருளாதார வளர்ச்சிக் கட்டத்தை அவர்கள் அடையவும் அதை கடந்து செல்லவும் உதவியது.

3. தலித்துகள் தங்களது மானுட கவுரவத்தை மீட்டெடுக்கும் பொருட்டு சுதேசி ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதற்கு பிரிட்டீசார் இங்கிருந்தது உத்தரவாதமாக இருந்தது.

கொஞ்சமும் கூச்சமின்றி இவர்கள் சொல்வதைப் பாருங்கள்! என்னவகையானப் போராட்டங்களை நடத்தினார்களாம்?

இவர்கள் வெள்ளையர்களின் சில்லறை சலுகைகளில் மயங்கி சட்டவாதத்தில் மூழ்கிக் கிடந்தபோது பெரும்பாலான தலித்துகள் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்துகொண்டு தங்களை அடிமைப்படுத்தியிருந்த சாதியாதிக்க நிலவுடமையாளர்களையும், அவர்களை பாதுகாத்து பயனடைந்த வெள்ளை ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து வீரம்செறிந்தப் போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தார்கள்.

ஆனந்த் டெல்டும்ப்டெ மற்றும் எஸ்.வி.ஆர்-களின் கனவில் மண்ணைப் போடும் வர்க்க அணிசேர்க்கையும் வர்க்கப் போராட்டமும்!

வெள்ளையர்களின் தயவில் சில்லறை சலுகையடைந்த கொஞ்சமே கொஞ்சமான தலித்துகளின் சட்டவாதப் பிரதிநிதியாகத்தான் அம்பேத்கர் இருந்தார். மத்திய அரசாட்சி முறையை கொடுத்ததற்காகவும், மக்களிடையே ஒற்றுமையை எற்படுத்தி விட்டதாகவும் கூறி அதற்காக தான் எப்பொழுதும் பிரிட்டிஷ் அரசிற்கு விசுவாசமாக நடப்பேன் என உறுதியோடு ஆட்சியாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்தார்.

இதைத்தான் ஆனந்த் டெல்டும்ப்டெ “தலித்துகள் வெளிநாட்டினரை ஏகாதிபத்தியவாதிகளாக கருதி அவர்களுக்கு எதிராக உடனடியாக களத்தில் இறங்க மாட்டார்கள். இந்த நாட்டுக்கு வந்த முஸ்லீம் மற்றும் பிரிட்டீசாரின் ஆட்சிகள் தலித்துகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளது. அவர்கள் மீதான ஒடுக்குமுறையை தளர்த்தியுள்ளது. ஏகாதிபத்தியத்தின் துணைவிளைவாகத்தான் இச்சலுகைகள் கிடைத்தன என்பதை தலித்துகள் அறிவார்கள். ஆனாலும் தலித்துகள் ஏகாதிபத்தியத்திற்கு கடன்பட்டவர்களாக எண்ணுவதற்கு காரணமுண்டு. உள்நாட்டு ஏகாதிபத்தியத்தைப்போல் (பார்ப்பனியத்தைப்போல்) வெளிநாட்டு ஏகாதிபத்தியம் தலித்துகளின் மனித மாண்பைப் பறிக்கவில்லை. ஏகாதிபத்திய கொள்ளையில் தலித்துகளுக்கு சுமை அதிகரித்தது என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டேயில்லை. அவர்களுக்கு கிடைத்த மனித மாண்பும் மனித அடையாளமும் அவர்கள் மீது சுமத்துகிற மற்ற எல்லா சுமைகளையும் மறக்கச் செய்துவிடும். அன்னியர்களின் ஆட்சி மட்டும் இல்லாவிட்டால் தலித்துகள் தங்களது விடுதலைக்கான பரந்த வெளியை அடைந்திருக்க முடியாது” என்று வண்ணம் பூசினார்.

அம்பேத்கர் சலுகைகள் மூலம் சமூக மேலாண்மை பெரும் நோக்கிலேயே வர்க்கப்போராட்டத்தை எதிர்த்தார். அதற்காகவே கம்யூனிஸ்ட் கட்சியையும் எதிர்த்தார். கம்யூனிஸ்டுகள் தன்னுடைய பரம்பரை எதிரி என்றும், கம்யூனிஸ்டுகள் என்பவர்கள் தொழிலாளர்களை தங்களுடைய அரசியல் நோக்கத்திற்காக சுரண்டுபவர்கள் என்றும் கூறி வெறுப்பைக் கொட்டினார்.

இதனைத்தான், “கம்யூனிஸ்டுகளின் இப்போக்கில் மேலோங்கியிருப்பது தலித்துகளின் பார்வையல்ல. இதற்கு கம்யூனிஸ்டுகள் என்ன நியாயம் கூறினாலும், தலித்துகளையும் அவர்கள் நடத்தும் சாதி எதிர்ப்புப் போராட்டங்களையும் இடதுசாரிகள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள் என தலித்துகளிடையே நிலவுகிற வெறுப்புணர்வை நீக்கிவிடாது” என்று தேன் தடவி விசத்தைப் பரப்பினார் ஆனந்த் டெல்டும்ப்டெ.

அம்பேத்கர் மேற்கொண்ட வர்க்கப்போராட்ட எதிர்ப்பை அப்போதைக்கு சரி என்று நியாயப்படுத்துவதோடு ஆனந்த் டெல்டும்ப்டெவும் எஸ்.வி.ஆரும் நிற்கவில்லை. இப்போதும் எப்போதும் வர்க்கப்போராட்ட எதிர்ப்புதான் சரி என்று நிறுவவே படாதபாடு படுகிறார்கள்.

இவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும் என்ற நூலை இந்தியாவில் உலகமயமாக்கல் எதிர்ப்புப் போராட்டங்களை கம்யூனிஸ்டுகள் முன்னெடுத்த நேரத்தில் கொண்டுவந்தார்கள்.

“இந்த நூல் ஒரு சுமுகமற்ற சூழலில் உருவாகியது” என சொல்லும் ஆனந்த் டெல்டும்ப்டெ தொடர்கிறார், “மும்பை எதிர்ப்பு 2004 என்னும் மாநாட்டில் நடந்த விவாதங்கள், முடிவுகள் ஆகியவற்றைத் தொடர்ந்து மேற்கொள்வதற்காகக் கூடியிருந்த செயலாளர்களிடையே சாதி பற்றிய உணர்ச்சிகரமான விவாதம் நடைபெற்றதை நான் அறிந்தேன்…

ஒரு வகையில் இந்த விவாதத்தில் புதிதாக ஏதுமில்லை என்பது தெளிவாயிற்று. ஏற்கனவே இந்த விவாதத்தில் கலந்து கொண்டது போன்ற உணர்வே எனக்கு ஏற்பட்டது. இந்திய தேசிய காங்கிரசுடனும் கம்யூனிஸ்டுகளுடனும் அம்பேத்கர் நடத்திய விவாதங்கள் அனைத்தும் சாதியின் முக்கியத்துவம் என்னும் பிரச்சனைப் பற்றியவைதான். காங்கிரஸ் குறிப்பாக அது ‘தீவிரவாதிகளி’ன் கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு சாதிகள் உள்நாட்டு பிரச்சனை என்றும், காலனியாட்சியிலிருந்து நாம் விடுதலை பெற்ற பிறகு அப்பிரச்சனைத் தீர்க்கப்படும் என்றும் கூறியது. தங்களது கருத்துநிலை வலிமை, வெகுமக்களை துன்புறுத்தும் பல்வேறு முரண்பாடுகளில் முதன்மை முரண்பாட்டைக் கண்டறியத் தங்கள் வசம் இருந்த மேம்பட்ட மார்க்ஸியக் கருவிகள் ஆகியவற்றால் பெருமிதம் கொண்டிருந்த கம்யூனிஸ்டுகளோ, சாதிகளை ஒரு பிரச்சனையாக பார்க்க மறுத்தனர்...

இன்று சாதி ஒரு பிரச்சனைதான் என்பதை எளிதாக ஏற்றுக் கொள்கிறார்கள்; அவற்றின் முக்கியத்துவத்தை அவர்களில் யாருமே மறுப்பதில்லை...

தொடக்ககாலக் கம்யூனிஸ்டுகளும் மக்களிடையே இருந்த பிளவைப் பொருட்படுத்தாமல் சுதந்திரப் போராட்டத்தின் போது ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுவாதாக பாசாங்கு செய்துவந்த போலி தேசியவாதிகளும் அன்று கொண்டிருந்த கருத்துக்களைத்தான் இந்த விவாதம் வேறு வடிவத்தில் வெளிப்படுத்தியது...

‘மும்பாய் எதிர்ப்பு’ மாநாட்டிற்குப் பிந்திய கருத்தரங்கு கொல்கத்தாவில் நடந்தது. சாதிப் பிரச்சனை பற்றிய ஒரு கட்டுரையை எழுதி அந்தக் கருத்தரங்கில் படிக்குமாறு எனக்கு அழைப்பு வந்தது…

இன்றைய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டச்சூழலில், சாதிப்பிரச்சனை விவாதிக்கப்படுமேயானால், அப்பிரச்சனைக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் உள்ளார்ந்த பிணைப்புகள் உள்ளன என்பதையும்; அது எவ்வாறு ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதாரவாகவோ இடையூராகவோ இருக்கும் கட்டுரையில் சொல்ல விரும்பினேன்...” என்கிற முன்னுரையோடு கூடிய நூலில்தான் அவர் சொல்கிறார்,

“ஏகாதிபத்தியத்தைத் தோற்கடிப்பதற்காக சாதியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கூற்றானது ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்திற்கான வழிமுறைகளில் ஒன்றாக சாதியை முடிவுக்குக் கொண்டு வருவதைப் பார்க்கிறார்கள். சாதியை ஒழித்துக்கட்டும் போராட்டத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பும் அடங்கியிருப்பதைப் பார்ப்பதில்லை. கம்யூனிஸ்டுகளின் இப்போக்கில் மேலோங்கியிருப்பது தலித்துகளின் பார்வையல்ல. இதற்கு கம்யூனிஸ்டுகள் என்ன நியாயம் கூறினாலும், தலித்துகளையும் அவர்கள் நடத்தும் சாதி எதிர்ப்புப் போராட்டங்களையும் இடதுசாரிகள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள் என தலித்துகளிடையே நிலவுகிற வெறுப்புணர்வை நீக்கிவிடாது...”

அதாவது முதலில் சாதியை ஒழியுங்கள். அப்புறம் ஏகாதிபத்திய எதிர்ப்பு, அதற்கான வர்க்க அணிசேர்க்கை, வர்க்கப்போராட்டம் என்பதையெல்லாம் குறித்து சிந்திக்கலாம்.

இப்போது ஜிக்னேஷ் மெவானியும் சந்திரசேகர் ஆசாத் எனும் இராவணனும் சொல்கிறார்கள், “தலித்துகள், பிற்படுத்தப்போட்டோர், சிறுபான்மை மக்கள் ஆகியோரின் வர்க்க அணிசேர்க்கைதான் முதலில் தேவை. அதன்மூலமான வர்க்கப்போராட்டத்தால்தான் சாதியக்கொடுமைகளை எதிர்கொண்டு சாதி ஒழிப்பை அடைய முடியும்”

வரலாறு வர்க்கப் போராட்டத்தின் மூலம் மட்டுமே முன்னேறி செல்லும்! 

- பாவெல் சக்தி & திருப்பூர் குணா

Pin It