கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இனி என்ன செய்வதென தெரியாமல் திகைத்து நிற்கின்றன தமிழக விவசாய சங்கங்கள். இதுவரைக்கும் சங்கங்கள் கர்நாடகா அடாவடி செய்கிறது என்றுதான் நம்பிக் கொண்டிருந்தன. கூடவே, தமிழக அரசு முனைப்பு காட்டவில்லை என்கிற சிறு முனகலும் உண்டு. ஆனால், இப்போது இதுவரை நீதிமன்றங்களின் எந்த உத்தரவையும் மதிக்காத கர்நாடக அரசைப்போல மத்திய அரசும் மதிக்காததைக் கண்டு செய்வதறியாது திகைத்து கிடக்கின்றன. கர்நாடகா முரண்டு பிடித்தபோது, “மத்திய அரசே! இராணுவத்தை அனுப்பு! கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்” என்றெல்லாம் சட்ட நுணுக்கங்கள் பேசியவர்கள் இப்போது மத்திய அரசு பல்டி அடித்ததும் எங்கு முறையிடுவதென தெரியாமல் உண்ணாவிரதத்தில் இறங்கிவிட்டனர்.

இதற்கெல்லாம் மசிகிற மனிதாபிமான அரசுகளையா நாம் கொண்டிருக்கிறோம்?

விவசாய சங்கங்கள் தமது கைகளில் ஆயுதங்களாக உள்ள தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களை சார்ந்த 20 எம்.எல்.ஏ-க்கள், இந்த 3 மாவட்டங்களின் பகுதிகளை மட்டுமே கொண்ட 3 எம்.பி-கள், இதுபோக உள்ளூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஆகியோரை பயன்படுத்தாமல் இருப்பது ஏன்?

மன்றாடுகிற நிலைமையில்தான் உள்ளோமா? பணிய வைக்க முடியாதா?

நாம் ஒரு மாநில அரசையோ அல்லது மத்திய அரசையோ பணிய வைப்பதற்கு முன்பாக நம்மை சார்ந்திருக்கும் மக்கள் பிரதிநிதிகளை பணிய வைத்திருக்க வேண்டும். ஆளும்வர்க்கம் தமக்கு சாதகமாக செயல்படத்தான் இப்போதுள்ள பிரதிநிதிகளை மக்கள் மூலமாகவே தேர்ந்தெடுக்க வைக்கின்றன. ஆனாலும், மக்கள் ஒன்றாக திரண்டு நின்று அப்பிரதிநிதிகள் நமதுப் பிரச்சினையிலிருந்து விலகி நிற்க முடியாத அளவுக்கு அவர்களுக்கு அழுத்தம் கொடுத்தால் நமது அடிப்படை உரிமைகளை, வாழ்வாதாரத்தை இழக்காமல் தடுக்க முடியும்.

farmers tamilnadu

காவிரி பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டிய கடமை எல்லோரையும்விட டெல்டா மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகளுக்கு உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மட்டும் 20 எம்.எல்.ஏ-க்களுக்கும், 3 எம்.பி-களுக்கும், உள்ளூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கும் உள்ளது.

இவர்களெல்லாம் காவிரிக்காக செய்தது என்ன? செய்ய நம் விவசாய சங்கங்கள் நிர்பந்தித்தது என்ன?

ஒன்றுமேயில்லை. 4 மாதங்களுக்கு முன்புதான் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடந்தது. அப்போது நமது விவசாய சங்கங்கள் தேர்தலை எதிர்கொள்ளும் கட்சிகளிடம் ஏதாவது கோரிக்கை வைத்து நிர்பந்தித்தது உண்டா? தங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத கட்சிகளை டெல்டா மண்ணுக்குள் காலடி வைக்க விடமாட்டோமென நின்றதுண்டா? தி.மு.க, அ.இ.அ.தி.மு.க, காங்கிரசு, பி.ஜெ.பி எல்லோரும் துரோகம் செய்வது தெரிந்து பலகாலம் ஆகியும் இவற்றை முறியடிக்க விவசாயிகள் மக்களிடம் இந்த துரோகத்தை தோலுரித்து கட்சிகளை தனிமைப் படுத்தியதுண்டா?

எதுவுமில்லை!

ஒன்று துரோகம் செய்யும் கட்சிகளுக்கு மாறாக விவசாய சங்கங்கள் ஒரே அமைப்பாக மாறி தேர்தலை எதிர்கொண்டிருக்க வேண்டும். அல்லது அனைவரும் சேர்ந்து தேர்தலைப் புறக்கணித்திருக்க வேண்டும்.

அதுகுறித்து யாரும் சிந்திக்கவேயில்லை.

இதுவரைத்தான் கோட்டை விட்டார்கள் பரவாயில்லை. இப்போது உள்ளாட்சித் தேர்தல் காலம்தானே! இதையாவது முறையாகப் பயன்படுத்த வேண்டாமா? தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே அதைப் புறக்கணிக்கிறோம் என்று விவசாய சங்கங்கள் முன்கூட்டியே அறைகூவல் விட்டிருக்க வேண்டாமா?

அதை செய்யாததான் விளைவாக காவிரி பிரச்சினையில் துரோகம் செய்யும் கட்சிகளையும், அவைகளின் அரசியல் பிரதிநிதிகளையும் விவசாய சங்கங்கள் காப்பாற்றுகிறது. சங்கங்களின் இந்த அணுகுமுறை கூட விவசாயிகளுக்கு துரோகம் செய்வதேயாகும்.

சங்கங்கள் நுனிப்புல் மேய்கின்றன!

காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு இனவெறியோடு தமிழர்களை பழிவாங்குகிறது என்றே சங்கங்கள் கருதுகின்றன. அங்குள்ள ஆட்சியை காப்பாற்றவோ அல்லது அங்கு ஆட்சியைப் பிடிக்கவோதான் மத்தியில் ஆட்சி அமைக்கும் காங்கிரசும், பி.ஜே.பி-யும் தமிழர்களுக்கு துரோகம் இழைப்பதாகவும் அவை கருதுகின்றன.

ஏன் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்ற கனவு காங்கிரசிற்கும், பி.ஜே.பி-க்கும் கிடையாதா? ஒரு மாநில மக்களுக்கு மட்டும் அப்பட்டமாக துரோகம் இழைத்தால் அங்கு பிறகு காலூன்றவே முடியாது என்கிற படிப்பினை இல்லாதவைகளா அக்கட்சிகள்?

அப்படி தமிழகத்தை நசுக்க கர்நாடக அரசோடு மத்திய கூட்டு சேர்ந்து மத்திய அரசு செயல்பட்டால் தாங்கள்தான் தமிழகத்தின் பாதுகாவலர்கள் என்று நிரூபித்து ஆட்சியைப் பிடிக்கவும், தக்க வைத்துக் கொள்ளவும் தமிழ்நாட்டிலுள்ள ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என அனைத்து கட்சிகளும் கோதாவில் இறங்கி பெரிய பிரளயத்தை உருவாக்கி இலாபம் பார்க்கத் தொடங்கிவிடும்.

அது காங்கிரசு மற்றும் பி.ஜே.பி-க்கு தமிழகத்தில் இடமேயில்லாமல் செய்துவிடும்.

காங்கிரசிற்கும், பி.ஜே.பி-க்கும் கர்நாடகா எவ்வளவு முக்கியமோ அதுபோலவே தமிழ்நாடும் முக்கியம். இல்லையென்றால் இப்போது பி.ஜே.பி தமிழ்நாட்டில் நேரடியாக அ.இ.அ.தி.மு.க-வை மிரட்டியும், இந்து முன்னணியின் மூலம் பல பகீரத நடவடிக்கைகளை மேற்கொண்டும் காரியம் சாதிக்கத் துடிக்காது.

ஆகவே, காங்கிரசும், பி.ஜே.பி-யும் கர்நாடகத்தைப் பாதுகாத்து தமிழ்நாட்டை பலிகொடுக்கிறதென்பது அரசியலற்ற முட்டாள்தனமான வாதமாகும்.

பிறகு ஏன் காவிரி கர்நாடகத்திற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது?

டெல்டா பகுதியான காவிரிப் படுக்கையில் கச்சா எண்ணெய் இருப்பது 1958-லேயே கண்டறியப்பட்டது. மத்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தால் (ONGC) 1964-இல் முதல் ஆழ்துளை எண்ணெய் கிணறு தோண்டப்பட்டு 1984-லிருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு எடுக்கும்பணி முடுக்கி விடப்பட்டது.

இதனிடையே திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி முதல் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வரையிலான 667 சதுர கிலோ மீட்டர் சுற்றளவில் மீத்தேனும், நிலக்கரியும் இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றை கொள்ளையடிக்க கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (Great eastern energy corporation Ltd) போன்ற பன்னாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு நிறுவனங்களும் துடிக்கின்றன.

பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுக்காக அங்கிருக்கிற இலட்சக்கணக்கான விவசாய மக்களை அடித்து விரட்ட முடியுமா? அது கலகத்தை உருவாக்குவதோடு அரசுக்கு தோல்வியையும்தானே கொடுக்கும்.

ஆகையால் மெல்லமெல்ல காய் நகர்த்தப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி நீர் பிரச்னை தீர்க்க முடியாததாக பார்த்துக் கொள்ளப்பட்டது. விவசாயம் செய்து பிழைக்க முடியாது என விவசாயிகளே வெறுத்து வெளியேறும் நிலை உருவாக்கப்படுகிறது.

இதன் அடிப்படையிலேயே கர்நாடகத்தில் நீரின் தேவையை அதிகாரிக்கும் திட்டங்கள் மத்திய அரசால் அனுமதிக்கப்படுகின்றன. பெரும்பகுதி காவிரி நீரை உள்வாங்குகிற நகர விரிவாக்கமும், தொழிற்சாலைகளும், அடுக்குமாடி குடியிருப்புகளும் அனுமதிக்கப்படுகின்றன.

காவிரி கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களின் பொது உரிமை என்பதை மறுத்தும், கடைமடை பகுதியான தமிழ்நாட்டின் நலனைப் புறக்கணித்தும் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

இதை தமிழக அரசு ஏன் தடுக்கவில்லை?

காவிரி சிக்கலில் கர்நாடகத்திலிருந்து பெற வேண்டிய உரிமைகளுக்காக தீவிரமான எந்த நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்கவில்லை. மட்டுமல்ல அது தன் பங்குக்கு காவிரியின் கிளை ஆறுகளான நொய்யல் மற்றும் அமராவதியை அழிய விட்டு விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கிறது.

நொய்யலும், அமராவதியும் வறண்டு முற்றும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

நீலகிரி, வயநாடு, குடகு மலைகளில் மாபெரும் காடுகள் அழிக்கப்பட்டு தேயிலை, காபி, ரப்பர், தேக்குத் தோட்டங்களும், சுரங்கங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. தென்னிந்தி்யாவின் தண்ணீர் தொட்டி என்று அழைக்கப்படும் கூடலூர் தாலுக்காவில் மட்டும் 60,000 ஏக்கர் காடுகளை அழித்துத் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இதனால் மழை ஆதாரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இன்று நொய்யலும், அமராவதியும் மரணத்தின் பிடியிலுள்ளன.

டாடா, பிர்லா, வாடியா போன்றவர்களுக்கு டீ, காபி, ரப்பர், தேக்குத் தோட்டங்கள் மற்றும் சுரங்கங்கள் அமைக்க அனுமதி கொடுத்தது பிரிட்டீஷ் காலத்தில்தான். ஆனால், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட 99 ஆண்டுகால குத்தகை முடிந்து காலாவதியாகிவிட்டது.

தமிழக அரசுக்கு தமிழக விவசாயிகளின் மீது அக்கரையிருந்தால் குத்தகை காலம் முடிந்த நிலையிலாவது டாடா, பிர்லா, வாடியாயாக்களிடமிருந்து பெரும் வனப்பகுதிகளை மீட்டு மழைக்கான ஆதாரங்களைப் பெருக்கலாமே! நொய்யலுக்கும், அமராவதிக்கும் உயிரூட்டலாமே!

தமிழக அரசு அதை செய்யாது. காரணம் மத்திய அரசைப் போலவும், கர்நாடக அரசைப் போலவும் தமிழக அரசும் பெருமுதலாளிகளின் அரசுதான். காவிரிப் படுகையில் மீத்தேன் மற்றும் நிலக்கரி கொள்ளையில் ஈடுபடவிருக்கும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலாளிகள் மத்திய அரசை மட்டும் சரிக்கட்ட வில்லை. கூடவே தமிழக அரசையும்தான் சரிக்கட்டியிருக்கிறார்கள்.

ஆகவேதான் தமிழக அரசு கர்நாடகாவிலிருந்து காவிரி நீரை பெறுவதில் வெற்று சவடால் அடித்துக்கொண்டிருப்பதோடு, தனது பகுதியில் உள்ள நீர் வளங்களுக்கான நொய்யலையும், அமராவதியையும் அழிப்பதன் மூலமாக காவிரிப் படுகை விவசாயிகளை நெருக்கடிக்குள்ளாக்குகிறது.

என்ன செய்ய வேண்டும்?

இது உண்மையிலேயே டெல்டா விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் தமிழக மக்கள் அனைவருக்குமான வாழ்வா? சாவா? என்ற பிரச்சினை. இதை மேலோட்டமான சட்ட அணுகுமுறைகளால் தீர்க்கவே முடியாது.

அதேபோல தேர்தல் கட்சிகள் எல்லோரும் ஒன்றாக நின்று குரல் கொடுத்தால் தீரும் என்பதும் முட்டாள்தனமே. இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் கார்ப்பரேட்டுகளின் முதல் நடவடிக்கையே தம்மால் சிக்கலுக்குள்ளாகும் மாநிலத்தில், நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளையும் சரிக்கட்டுவதேயாகும். மீத்தேனுக்காக சரிக்கட்டப்பட்ட கட்சிகள்தான் இங்கு காவிரி போராட்டத்தை ஒவ்வொரு முறையும் நீர்த்துபோகச் செய்கின்றன.

இங்கே நாம் அணையை திறந்து விடு என போராடுவோம். கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் தூண்டிவிடப்படும். உடனே இங்குள்ள கட்சிகள் "தாக்குதலை நிறுத்து" என்கிற கோரிக்கையை முன்தள்ளி படிப்படியாக போராட்டத்தை நீர்த்துப்போக செய்வார்கள். உடனே நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்படும். நாம் எங்கேயும் நகர முடியாமல் முடக்கப்படுவோம்.

இடியாப்ப சிக்கலாக தீர்க்க முடியாமல் பிரச்சினை நீளும்போது வேறு வழியில்லாமல் விவசாயிகள் வெளியேற்றம் நடக்கும்.

ஆகவே கட்சிகளையும், அரசுகளையும் நம்பி காவிரி சிக்கலை தீர்க்க முடியாது. கட்சிகளுக்கும், அரசுகளுக்கும் நெருக்கடி கொடுப்பதன் மூலமே தீர்வை நோக்கி நகர முடியும். அதற்கு டெல்டா மாவட்டங்களிலுள்ள எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-கள், உள்ளூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் அனைவரையும் மக்களின் பிடியில் கொண்டுவர வேண்டும். அவர்களை ஆயுதமாகப் பயன்படுத்த மக்களைப் பயிற்றுவிக்க வேண்டும்.

முதல்கட்டமாக தற்போது நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை டெல்டா மாவட்டங்களில் புறக்கணிக்க வேண்டும்.

- திருப்பூர் குணா