கீற்றில் தேட...

சாமானியனின் குரல்வளையை இறுக நெறித்துக் கொல்லும் கொலைக் கருவியாக மாறிப்போன நீதித்துறையைப் பார்த்து, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சாமானிய மனிதனும் நடுங்கிப்போய் கிடக்கின்றார்கள். "இரு வேறு வர்க்கங்களின் இணக்கம் காண முடியாததன் விளைவே அரசு" என்றார் மார்க்ஸ். இந்தியாவைப் பொருத்தவரை இன்று இருக்கும் அரசு என்பது வர்க்கம் என்பதையும் தாண்டி, பார்ப்பன மேலாண்மையையும், அதற்கு எதிராக இருக்கும் அனைத்தையும் அழித்தொழிக்கும் வக்கிர புத்தி கொண்டதாகவே மாறியிருக்கின்றது. இந்தியா என்ற கட்டமைப்பும், அதை வழிநடத்திக் கொண்டிருக்கும் பார்ப்பன பனியா கும்பலின் ஆட்சியும், எந்த வகையிலும் இங்கிருக்கும் தேசிய இனங்களின் சுயமான வளர்ச்சிக்கு  உதவுவதாக இல்லை. மாறாக அசமத்துவமான வளர்ச்சியால் பல்வேறு தேசிய இன மக்கள் தங்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு ஒடுக்குமுறைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றார்கள். இந்திய நீதித்துறை என்பது இந்த ஒடுக்குமுறைகள் எல்லாவற்றுக்கும்  சட்ட அங்கீகாரம் கொடுக்கும் ஒரு பார்ப்பன பனியா அடிவருடி அமைப்பாகவே செயல்பட்டு வருகின்றது. 

cauvery 331சாமானிய மனிதன் சட்டத்தை தன்னுடைய வயிற்றுப் பசிக்காக மீறினால் கூட  எந்தவித தயவு தாட்சணயமும் இன்றி அவர்களைக் கடித்துக் குதறும் அரசின் ஒடுக்குமுறை அமைப்புகள், அரசே அதை மீறும் போது அதைக் கண்டிக்கத் திராணியற்று கோழையைப் போல ஓடி ஒளிந்துகொள்கின்றன. 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்திரவிட்ட கெடு முடிந்துவிட்ட சூழ்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை மயிர் அளவிற்குக் கூட மதிக்காமல் உதாசினப்படுத்தி இருக்கின்றது மத்தியில் ஆளும் பார்ப்பன பனியா அடிவருடி ஆட்சி. உச்ச நீதிமன்ற நீதிபதிகளே 'மோடி ஆட்சியில் நீதி மிரட்டியும் விலைபேசியும் வாங்கப்படுகின்றது' என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தி இருக்கும் சூழ்நிலையில், இந்த அரசு நீதித்துறையையும், அது கொடுக்கும் தீர்ப்புகளையும் மதிக்கும் என்று யார்தான் எதிர்பார்க்க முடியும்? ஆனால் தமிழர்களை மோடி அரசு இவ்வளவு  உதாசீனப்படுத்தியதையும், அவமானப்படுத்தியதையும் ஒரு பொருட்டாகக் கூட நினைக்காமல் மாநிலத்தை ஆளும் அடிமை அரசு, 'நாங்கள் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் உண்ணா விரதம் இருப்போம்' என்கின்றார்கள். இந்த உண்ணாவிரதப் போராட்டம் இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துமாம்!.

  இவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் இருந்தால் அது எப்படி இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அதிமுக அறிஞர் பெருமக்களுக்கு மட்டுமே வெளிச்சம். உண்மையில் இவர்களுக்குக் காவிரிப் பிரச்சினையில் எந்த உணர்வுப்பூர்வமான சிந்தனையும் இல்லை என்பதைத்தான் இது போன்ற பிதற்றல்கள் காட்டுகின்றன. ஆற்று மணலைக் கடத்தி கோடி கோடியாய் கொள்ளையடித்த கும்பலுக்குக் காவிரிப் பிரச்சினையில் உணர்வுப்பூர்வமான சிந்தனை இருக்கும் என்று நாம் எதிர்பார்த்தால் நம்மைவிட அறிவிலிகள் வேறு யாரும் இருக்க முடியாது. இந்த மக்களை இன்னும் நம்ப வைத்து கழுத்தறுக்கவே இவர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டம் இருக்கின்றார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

 தமிழர்களை அழித்து அப்படி ஓர் இனம் இந்த உலகில் இருந்ததற்கான சுவடே இல்லாமல் செய்திட வேண்டும் என்பதுதான் பார்ப்பனிய பனியா கும்பலின் நீண்ட காலத் திட்டமாகும். தமிழ்நாட்டில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும், நீட்டையும் திணித்து தமிழ்நாட்டு மக்களை அழிப்பதைவிட காவிரி என்ற ஒன்றை இல்லாமல் செய்துவிட்டால் மொத்த தமிழ்நாட்டில் பாதியை அழித்துவிடலாம் என்பதுதான் தமிழின எதிரிகளின் திட்டமாக உள்ளது. மோடியின் ஆட்சி முடிவதற்குள் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சுடுகாடாக மாற்ற வேண்டும் என இந்தப் பாசிச கும்பல் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றது. தமிழ் மக்களின் மொழி, பண்பாடு, அவர்களின் நாகரிகம் என அனைத்தையும் அழித்தொழிக்க செயலாற்றிவரும் இந்தக் கும்பலுடன் தமிழ்நாட்டில் இணைந்து செயலாற்றிவரும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற பார்ப்பன பனியா கும்பலின் கைக்கூலி அமைப்புகளும், இன்னும் பிற சாதிய அமைப்புகளும் இவர்களுடன் கைக்கோர்த்து தமிழ்மக்களை அழிக்க பணி செய்து கொண்டு இருக்கின்றன.

இந்து மக்களின் நன்மைக்காக அவர்களின் ஒற்றுமைக்காக கட்சி நடத்துவதாக சொல்லி, தமிழ் மக்களை சாதியாகவும், மதமாகவும் பிரித்து அவர்கள் மத்தியில் சாதிய துவேசத்தையும், மத துவேசத்தையும் வளர்க்கும் இந்தக் கும்பல், தமிழ் மக்களை ஒருக்காலும் அப்படி தன்னுடைய சக இந்துக்களாகப் பார்த்து அவர்களின் நன்மைக்காக உழைப்பவர்கள் கிடையாது என்பது இதன் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. தமிழர்கள் வரலாற்றில் ஒருநாளும் இந்துக்களாக இருந்ததும் இல்லை, இனி இருப்பதற்கான எந்தத் தார்மீக நியாயமும் இல்லை என்பதைத்தான் மத்தியில் இருக்கும் மோடியின் பாசிச ஆட்சி திரும்பத் திரும்ப நிரூபித்துக்கொண்டு இருக்கின்றது. தமிழ்நாடு மத்திய அரசுக்கு வரி கொடுக்கவும், மற்ற மாநிலங்களில் இருந்து வாழ வழியற்று இங்கு வரும் நபர்களை இன்முகத்தோடு ஏற்று அவர்களை வாழவைக்கவும் மட்டுமே தேவைப்படுகின்றது. மற்றபடி தமிழ் மக்கள் எக்கேடு கெட்டு நாசமாய்ப் போனால்தான் நமக்கென்ன என்ற சிந்தனைதான் எப்பொழுதுமே மத்தியில் இருக்கும் பார்ப்பன பனியா கும்பலின் நலன் காக்கும் அரசுகளின் கொள்கை முடிவாக இருக்கின்றது.

  மத்தியில் இருக்கும் பார்ப்பன பாசிச அரசுதான் தமிழர்களை அழித்து அவர்களை சுடுகாட்டிற்கு அனுப்ப கங்கணம் கட்டிக்கொண்டி அலைகின்றது என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு உண்மை காவிரிப் பிரச்சினையை வைத்து அதில் அரசியல் ஆதாயம் தேட காங்கிரசும் நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அலைகின்றது என்பது. இங்கிருக்கும் திமுக அதன் பாதம் தாங்கியாக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது. கர்நாடக காங்கிரஸ் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை ஏற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்கு உரிய நீதியைக் கிடைக்க உத்திரவாதம் செய்ய வேண்டும் எனச் சொல்ல அதன் தலைமைக்கு மனமில்லை. லட்சக்கணக்கான தமிழ் மக்களை இலங்கையில் கொன்று குவிக்க உடந்தையாக இருந்த காங்கிரசுடன் திமுக இன்னமும் கூட்டணி வைத்திருப்பது திமுக தமிழ் மக்களை எந்த அளவிற்கு இழிவான  முட்டாள்கள் என்ற எண்ணத்தில் இருந்து அணுகுகின்றது என்பதைத்தான் காட்டுகின்றது.

 காவிரிப் பிரச்சினையில் தமிழ் மக்களின் தாலி அறுக்க பாஜக தன்னுடைய வரலாற்றுப் பகையை இப்போது தீர்த்துக் கொள்ளத் துடிக்கின்றது என்றால், காங்கிரசு ஓட்டுப்பொறுக்கி அரசியலுக்காக திட்டமிட்டு அதை எதிர்க்கின்றது. இரண்டுமே தமிழ்நாட்டை அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்யும் துரோகக் கும்பல் என்பதை மானமுள்ள, அறிவும் நேர்மையுள்ள தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அழிக்கும் எண்ணத்துடன் இங்கு கட்சி நடத்திக் கொண்டு இருக்கும் பாஜக கும்பலும், காங்கிரசு கும்பலும்  தமிழ்நாட்டில் இன்னும் நிம்மதியாக இருக்கின்றார்கள் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் தன்மானத்திற்கும் சுயமரியாதைக்கும் விடப்பட்ட சவாலாகும். நூற்றுக்கணக்கான தமிழக விவசாயிகள் வறட்சியின் காரணமாக கடந்த ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்டு சாக இந்தக் குற்றக் கும்பலே காரணமாகும். தமிழ் மக்களின் நல்வாழ்விற்காக உழைத்து, உழைத்து வறட்சியின் காரணமாகவும், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வறுமையின் காரணமாகவும் செத்துப்போன ஒவ்வொரு விவசாயியின் உயிருக்கும் சத்திய மூர்த்தி பவன் மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்கலும் பதில் சொல்லி ஆக வேண்டிய நிலை வரும்.

 தமிழ்நாடு எங்கள் நாடு. தமிழ் மொழி எங்கள் மொழி, தமிழ் மக்கள் எங்கள் மக்கள். இவர்களை அழிக்க எந்தத் தார்மீக உரிமையும் வடக்கத்திய பார்ப்பன பனியா கும்பலுக்கும், அவர்களை நக்கி இங்கே பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கும் கும்பலுக்கும் இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் இங்கே காங்கிரசு, பிஜேபி போன்ற தேசியக் கட்சிகள் இருக்க வேண்டுமா என்பதையும், மத்திய அரசின் அலுவலகங்கள் நிம்மதியாக  இயங்க வேண்டுமா என்பதையும் மானமுள்ள தமிழ் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அத்தனையும் புறக்கணிப்போம். மத்திய அரசு சம்மந்தப்பட்ட அனைத்தையும் புறக்கணிப்போம். ஒவ்வொரு தமிழனின் உடலிலும் ஓடுவது தன்மானமும், சுயமரியதையும் கலந்த ரத்தம்தான் என்பதை நிரூபிப்போம். இதை விட தமிழர்களை அழித்தொழிக்கும் எந்த நடவடிக்கையையும் மத்தியில் ஆளும் பார்ப்பன பனியா கும்பலால் எடுக்க முடியாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் போனால், வருங்காலங்களில் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான தமிழ்மக்கள் வாழ வழியற்று கொத்துக் கொத்தாய் சாவது உறுதி.

மானமுள்ள தமிழினமே இப்போது நீ விழித்துக்கொள்ளவில்லை என்றால் உன்னுடைய தலைமுறையே அழிந்துபோகும். உணர்வு பெற்று விழித்தெழு. தெருவுக்கு வா, போராடு. உன் தாத்தனுக்கு தாத்தனுக்கும், உன் அப்பனுக்கு அப்பனுக்கும் இருந்த உரிமையை யாரோ ஒரு கேடு கெட்ட மதவாதக் கும்பல் பறிக்க முயலுகின்றது. விட்டுவிடாதே. வரலாற்றில் இது ஒரு முக்கிய தருணம். வாழ்வா சாவா போராட்டம். மோதிப் பார்ப்போம். இந்த முறை ஆரிய ராமனைப் பழி தீர்க்க ஒரு இராவணன் இல்லை எட்டுகோடி ராவணன்கள் இருக்கின்றார்கள் என்பதைக் காட்டுவோம். நாம் மானமுள்ள தமிழர்களாக இருந்தால் காவிரியை மீட்போம், இல்லை காவிரிக்கு நம் உயிரைக் கொடுப்போம். போராடு தமிழகமே போராடு!!

- செ.கார்கி