கீற்றில் தேட...

தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய காவிரித் தண்ணீரைத் திறந்து விடாமல் கர்நாடகா செய்யும் அடாவடித்தனம் இந்த ஆண்டும் தொடர்கிறது. குறுவை பயிர்கள் காய்வதால் தஞ்சைப் பகுதி விவசாயிகள் குமுறும் நிலையில், தமிழ்நாடு அரசு எப்போதும் போல காவிரியைப் பெற உச்சநீதிமன்றத்தையே நாடும் நிலையே இப்போதும் நீடிக்கிறது. மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதில் கவனமுடன் செயல்படும் மோடி அரசு, தமிழ்நாட்டின் காவிரி உரிமையைப் பற்றி பேசாமல் கடக்கிறது.

தமிழ்நாட்டில் குறுவை சாகுபடியும் தொடர்ந்து சம்பா சாகுபடியும் நடைபெறும் நிலையில், ஆகஸ்டு மாதத்திற்கான நீரை கர்நாடகா வழங்க மறுப்பதாக தமிழ்நாடு அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை நாடியது. முதற்கட்டமாக, கர்நாடகா 5,000 கன அடி நீரைத் திறந்து விட வேண்டும் என ‘காவிரி மேலாண்மை ஆணையம்’ கூறியது. ஆனால் கர்நாடக முதல்வர், கர்நாடகாவிற்குத் தேவையான நீரில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே எங்களிடத்தில் உள்ளது என உச்சநீதிமன்றத்தில் முறையிடப் போவதாக அறிவித்தார். உச்சநீதிமன்றம், ஆணையத்தின் முடிவில் தலையிடப் போவதில்லை என தெரிவித்தது. ஜூலை மாதத்தில் கணிசமான அளவு மழைப் பெய்த போதும் கூட, நீரைத் திறந்து விட முடியாது என கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்ததை அடுத்து, தமிழ்நாட்டில் திமுக, அதிமுக தமிழ்நாட்டு கட்சிகள் அனைத்தும் சேர்ந்து காவிரிக்கான தீர்மானத்தை இயற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பியிருக்கிறது. தீர்மானத்தின் போது அதனை புறக்கணிப்பதாக பாஜக அறிவித்து சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது. பாஜக, தமிழர்களின் நலனிற்கு சம்பந்தமில்லாத வடநாட்டுக் கட்சியைச் சார்ந்தது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமானது.bjp agitation against cauvery waterஇந்நிலையில் கர்நாடகாவில் பிரபல நடிகர்கள் முதற்கொண்டு கன்னட அமைப்புகள், கட்சிகள் என அனைவரும் காவிரி நீர் கர்நாடகாவிற்கே போதவில்லை என்பதால் தங்கள் மாநில முடிவை ஆதரிப்பதாகப் பேசினர். மேலும் அங்குள்ள சில வன்முறை அமைப்புகள் தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு பிணத்திற்கு செய்யும் சடங்குகளை செய்து தங்கள் வன்மத்தை வெளிக்காட்டினர். கர்நாடகா தங்கள் விவசாய நிலப் பரப்புகளை மிதமிஞ்சிய அளவில் அதிகரித்துக் கொண்டது குறித்தோ, தமிழ்நாட்டிற்கு தரப்பட வேண்டிய 350 டி.எம்.சி தண்ணீர் அளவு 177.25 டி.எம்.சி அளவு குறைந்தது குறித்தோ எந்த ஒரு வரலாற்றுப் புரிதலும் அற்றவர்களின் கூப்பாடுகளால் தமிழ்நாடு இன்று வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

1970-ல் அமைக்கப்பட்ட ‘காவிரி உண்மை அறியும் குழு’, தமிழ்நாட்டின் காவிரி நீர்ப்பாசன பகுதி 25.80 லட்சம் ஏக்கர் என்றும், கர்நாடகத்தின் நீர்ப்பாசனப் பகுதி 6.80 லட்சம் ஏக்கர் என்றும் ஆய்ந்தறிந்து கூறியது. ‘காவிரி நடுவர் மன்றம்’ இரு மாநிலங்களும் பாசனப் பரப்புகளை அதிகரிக்கக் கூடாது என உறுதியுடன் கூறியது. நடுவர் மன்றத்தின் 2007 இறுதித் தீர்ப்பின் பொழுது கர்நாடகாவின் பாசனப் பரப்பு 11 லட்சமாக இருந்தது. ஆனால் இப்போது கர்நாடகாவின் பாசனப் பகுதி 22 லட்சம் ஏக்கராக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக உரிய காவிரி நீரைப் பெற முடியாததால் 10 லட்சம் ஏக்கர் குறைந்து 15 லட்சம் ஏக்கரே பாசனப் பரப்பாக மாறி இருக்கிறது. பாசனப் பரப்புகளில் நடைபெற்ற துரோகம் இவ்வாறிருக்க வர வேண்டிய தண்ணீரின் அளவினைக் குறைத்த துரோகமும் இதை விட அநீதியானது.

தமிழ்நாட்டிற்கு 1970க்கு முன்பு வரை 350 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்தது. அதன் பின்னர் ‘காவிரி நடுவர் மன்றத்தின்’ இடைக்காலத் தீர்ப்பின்படி, 205 டி.எம்.சி.யாக அது குறைக்கப்பட்டது. இறுதித் தீர்ப்பிலோ 192 டி.எம்.சி.யாக குறைந்தது. 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு தீர்ப்பில் 177.25 டி.எம்.சி.யாக மேலும் குறைந்தது. ஆனால், இதையும் முறையாக வழங்காமல் இப்போது வரை பல காரணங்களைக் கூறி இழுத்தடிக்கிறது கர்நாடக அரசு. இந்த துரோகத்தை பற்றிப் பேசாமல் கர்நாடகத் தரப்பு பிரபலங்களும், அமைப்புகளும், கட்சிகளும் தமிழ்நாட்டிற்கு எதிராக நிற்கின்றனர்.

கர்நாடகாவின் தண்ணீர் மறுப்புக்கான காரணங்களைத் தேடிச் சென்றால் வளர்ச்சி என்று அங்கு கட்டப்படும் புதிய அணைகள், இரசாயன நுரைகள் மிதக்கும் ஆறுகள், திட்டமிடப்படாத நகரமயமாக்கல் மற்றும் ஆக்கிரமிப்புகள், போதிய நீர் மேலாண்மையின்மை போன்ற பல காரணிகள் இருக்கிறது. 1900-களில் மிகவும் வறட்சியான பகுதியாக இருந்த கர்நாடகாவின் மாண்டியா மற்றும் மைசூரின் இன்றைய செழிப்புக்கு கிருஷ்ணசாகர் அணை கட்டப்பட்டதே காரணமாக இருக்கிறது. மாண்டியா மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் 2.5 லட்சம் ஹெக்டேர் விவசாயப் பகுதியாக மாறியிருக்கிறது. இதற்கு கிருஷ்ணசாகர் அணையும், ஹேமாவதி அணையும் முக்கிய காரணமாக இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருந்த தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொண்டு தங்கள் மாவட்டங்களை செழிப்பாக்கியதை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்ட தமிழகத்திற்கு வஞ்சகத்தையே கர்நாடகா பரிசளித்திருக்கிறது.

ஒன்றிய அரசின் நீர் மேலாண்மைக்கான ‘ஜல் சக்தி அமைச்சகத்தின்’ அறிக்கையின்படி, கர்நாடகாவில் 2021-2022-ல் மட்டும் 13,489 நீர் நிலைகள் காணாமல் போயிருக்கின்றன. பெங்களூரில் முன்பு ஏரிகளாக இருந்த இடங்கள் பலவும் குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகள், பல்கலைக்கழகங்கள், பேருந்து நிலையங்கள், மைதானங்களாக மாற்றப்பட்டுள்ளது. பெங்களூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கர் ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக 2017-ல், கர்நாடக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தங்கள் நீர் நிலைகளை நகரக் கட்டமைப்பின் வளர்ச்சிக்கு வாரிக் கொடுத்து விட்டு நமக்கு கொடுக்க வேண்டிய நீரை கர்நாடகா தடுத்து வைக்கிறது.

கர்நாடகாவின் நகர்ப்புற உள்கட்டமைப்பு நிபுணர் வி.ரவிச்சந்தர் அவர்கள், “தேர்தலின் போதும் அதற்குப் பின்னரும் அரசியல் கட்சிகள் இந்தப் பிரச்சனையை போர்க்கால அடிப்படையில் ஏற்றுக்கொள்வதற்கு தேர்தலே வலுவான காரணமாக இருக்கிறது” என்று கூறுகிறார். மேலும் அவர் “தண்ணீர் ஒரு உணர்ச்சிகரமான பொருள். பெங்களூரு வறண்டு விடுமோ என்று கன்னட மக்கள் பயப்படுகிறார்கள். இதை வைத்து அரசியல் செய்யாமல், தொலைதூர இடங்களில் இருந்து நகருக்குள் தண்ணீர் கொண்டு வருவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், ஏரிகள், கிணறுகள், மழைநீர் வடிகால் மற்றும் மழைநீர் சேகரிப்புத் திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தப் பிரச்சனையை ஒருங்கிணைந்த முறையில் கையாள வேண்டும்” என்கிறார்.

கடந்த வாரம் (அக்டோபர், 2023 முதல் வாரம்) வரை 41 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மேட்டூர் அணை வறண்டு கிடந்தது. இதனால் விவசாயிகள் பெரும் கவலைக்கு உள்ளாகினர். ஆனால் இந்த வாரத்தில் மழையினால் ஓரளவு நீர் வரத்து அதிகமாகி இருக்கிறது. இருப்பினும், அக்டோபர் 2022ல், 120 அடியாக இருந்த அணை இன்று 35 அடியாக இருக்கிறது. இதனால் விவசாயத்திற்கு திறந்து விட முடியாத நிலையே நீடிக்கிறது. காவிரி நீர் கிடைக்காததால் வாடிய பயிர்களுக்கு நிவாரணம் வேண்டும் என விவசாயிகள் போராட்டமும் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடக்கிறது. தஞ்சைப் பகுதி மட்டுமல்ல, கடைமடை வரை வர வேண்டிய காவிரியை நம்பி காரைக்கால் விவசாயிகளும் பயிர்கள் கருகுவதால் கவலையில் உள்ளனர். தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் மூன்றில் ஒருவர் காவிரி நீரையே குடிநீருக்காக நம்பியிருக்கிறோம்.

இந்நிலையில், மேகதாட்டு அணையையும் கட்டியே தீருவோம் என தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்பையும் மீறி கர்நாடகாவின் நீர்வளத்துறை அமைச்சர் இந்திய ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து இத்திட்டத்திற்கு அனுமதி கோரியிருக்கிறார். இந்த அணை கட்டப்பட்டால் 70 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க முடியும். கிருஷ்ணசாகர் அணையின் 48.95 டி.எம்.சி. அளவை விட 22 டி.எம்.சி. அதிகம். பெங்களூரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவே இந்த அணை என கர்நாடகா வாதிடுகிறது. பெங்களூருக்கு 4.75 டி.எம்.சி. அளவே போதுமானது. அதன் ஏரி, குளங்களை தனியார் ஆக்கிரமிப்பிற்கு கொடுத்து விட்டு நமக்கு கொடுக்க வேண்டிய நீரை மேலும் மறுக்கவே இந்த அணை கட்ட வேண்டும் என கர்நாடகா உறுதியாக நிற்கிறது.

காவிரியின் நூற்றாண்டு வரலாறு அறிய விரும்பாத, பெரிய நிறுவனங்களின் ஏரி ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாத ஒரு தரப்பு கன்னட மக்களின் சுயநலமே இந்த சர்ச்சைக்கு காரணமாக இருக்கிறது. 1892-ம் ஆண்டிலேயே சென்னை, மைசூர் அரசுக்கு இடையில், தமிழ்நாட்டின் கடைமடை வரை காவிரி நீர் வந்தடைய வேண்டும் என காவிரிப் பங்கீடு குறித்து ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. 1910-ம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறி 41.5 டி.எம்.சி. அளவு நீரை தேக்கி வைக்க மைசூர் அரசு கட்டிய கிருஷ்ணசாகர் அணை, 1942-ல் மேட்டூர் அணை அமைக்கும் உடன்பாடு என தொடர்ச்சியாக நடந்தேறின. காவிரி ஆற்றின் குறுக்கே ஒப்பந்தங்களை மீறி கிருஷ்ணசாகர் அணை கட்டியதோடு நில்லாமல் தொடர்ந்து கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய 4 அணைகளைக் கட்டியது கர்நாடகா. ஒப்பந்தங்களை மீறி கர்நாடகா பல ஆண்டுகளாக காவிரி நீரைத் தராமல் இழுத்தடித்ததால், இப்பிரச்சனைக்கு பல ஆண்டுகளாக தமிழ்நாடு உச்சநீதிமன்றத்தையே அணுகியது.

இந்த நிலையில், ஜூன் 2, 1990 ல் வி.பி.சிங் தலைமையிலான அரசு ‘காவிரி நடுவர் மன்றம்’ அமைத்தது. 1991-ல் 205 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று இடைக்கால உத்தரவாக நடுவர் மன்றம் தீர்ப்பு அளித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட இனவெறியர்கள் அங்கு வாழ்ந்த தமிழர்களை வேட்டையாடினர். பெருங்கலவரம் மூட்டி தமிழர்களிடம் கொள்ளையிட்டனர். இந்த தீர்ப்புக்குப் பின்னரும் கர்நாடகா தமிழகத்திற்கு உரிய நீரை திறந்து விட மறுத்தது.

காவிரி நதிநீர் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2007-ல் வெளிவந்து தமிழகத்திற்கு 192 டி.எம்.சி.யிலிருந்து குறைத்து 177.25 டி.எம்.சி. நீரை இறுதிப்படுத்தியது. அதையும் முறையாக கர்நாடகா வழங்கவில்லை. மீண்டும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் சென்றது. 2018-ம் ஆண்டு அதன் தீர்ப்பு வெளிவந்தது. அதே அளவு நீரை உச்சநீதிமன்றமும் உறுதிப்படுத்தி, காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி ஒழுங்காற்று குழுவும் அமைக்க உத்தரவிட்டது. ஆனால் அப்போதைய சூழலில் கர்நாடகா தேர்தலை மனதில் கொண்டு, உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்ட ‘ஸ்கீம்’ என்ற வார்த்தையை வைத்து காவிரி மேலாண்மை வாரியத்தை மோடி அரசு அமைக்க மறுத்தது.

தமிழ்நாட்டின் கடும் கண்டனங்களும், போராட்டங்களும் எழுந்தன. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டு 2018, ஜூன் 1 அன்று காவிரி மேலாண்மை ஆணையம் அரசிதழில் வெளியானது. அதன் பின்னர் காவிரி நடுவர் மன்றத்தை மோடி அரசு கலைத்தது. உச்சநீதிமன்றம் அமைக்கக் கூறிய காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதில் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது. காவிரி மேலாண்மை வாரியம் என்பது 4 மாநிலங்களின் பிரதிநிதிகளை கொண்ட சுதந்திரமான அமைப்பு. மாறாக, ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆணையமாக மோடி சுருக்குவதற்காக வாரியத்தை ஆணையமாக மோடி அரசு மாற்றியது. அந்த குழுவே தான் தற்போது கூடி 5000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் எனக் கூறியது.

சர்வதேச நதி நீர் சட்டத்தின்படி, நதி எங்கு உற்பத்தியானாலும் அது செல்லும் பாதையை தடுத்து உரிமை கொண்டாடுவது குற்றமாகும். சீனாவில் உற்பத்தியாகும் சிந்து நதி இந்திய, பாகிஸ்தான் பகுதிகளை வளப்படுத்துகிறது. நைல் நதி பத்து நாடுகளை வளமாக்குகிறது. இதைப் போலவே பல நதிகள் நில எல்லைகளின் வேறுபாடு பாராமல் பயணிக்கிறது. ஆனால் நில எல்லைகள் பிரிக்கப்பட்டதனால், சென்னை மாகாணத்திற்குள் இருந்த காவிரி ஆற்றின் பிறப்பிடமான குடகு மலை கர்நாடகா வசம் சென்றிருக்கிறதே தவிர, தனக்கே காவிரி ஆறு சொந்தம் என கொண்டாட கர்நாடகாவிற்கு உரிமையில்லை என்பதை சர்வதேச நதிநீர் உரிமை சட்டம் தெளிவாக விளக்குகிறது.

தமிழர்களின் வாழ்வாதார உரிமையான காவிரி நீரை கர்நாடகா மறுப்பதை மோடி அரசு வேடிக்கை பார்க்கிறது. தமிழ்நாட்டு கட்சிகள் சேர்ந்து இந்திய ஒன்றிய அரசினை வலியுறுத்த, தீர்மானம் இயற்றி அனுப்பினால் அதை தமிழ்நாட்டு பாஜக புறக்கணிக்கிறது. இந்திய ஆறுகள் அனைத்தும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என சட்டமியற்றி நதிநீர் அதிகாரப் பறிப்பை செய்த மோடி அரசு, தமிழ்நாட்டின் உரிமையைப் பெற்றுத் தருவதைத் தவிர்த்து விட்டு செல்கிறது. தமிழ்நாட்டு மக்களின் வரியைப் பிடுங்கி பாஜக ஆளும் உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு மூன்று மடங்காக அள்ளிக் கொடுக்கும் மோடி அரசு தமிழ்நாட்டின் தேவையை பேச மறுத்து தீர்வை எட்ட விடாமல் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கிறது.

காவிரி என்றாலே ‘நடந்தாய் வாழி காவேரி’ என்கிற சிலப்பதிகாரப் பாடல் தமிழர்களின் சிந்தனைக்குள் பாய்ந்து ஓடும். அந்த அளவுக்கு நில எல்லைகள் பிரிக்கப்படாத காலத்தில் தமிழர்களின் இயற்கை வளமாக, தமிழ்ப் புலவர்களின் வர்ணனைக்குள் விரிந்த காவிரி தமிழர்களின் சொத்து. இதனை இந்திய ஒன்றிய அரசும், கர்நாடகமும் மறுத்து விட்டு செல்ல முடியாது. காவிரி தமிழர்களின் உரிமை, மீட்டெடுப்பது நமது கடமை என அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம்.

- மே பதினேழு இயக்கம்