2016 புத்தாண்டுச் செய்தி
அன்புள்ள தோழர்களே,
2016 புத்தாண்டை நெருங்கும் இந்த வேளையில், நமது நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்கள் மிகவும் கோபத்தோடு இருக்கின்றனர். அவர்களுடைய கவலைகளை தீர்ப்போமென வாக்குறுதி கொடுத்து விட்டு, அதிகாரத்திற்கு வந்தவுடன் தங்களும், தங்களுக்குப் பின்னணியாக இருக்கும் முதலாளிகளும் மேலும் கொழுப்பதற்காக செயல்படும் அரசியல்வாதிகள் மீதும், கட்சிகள் மீதும், மக்கள் கோபத்தோடு இருக்கிறார்கள்.
கொள்ளையான இலஞ்சத்தைப் பெற்றுக் கொண்டு இவர்கள், மிகவும் இலாபகரமான அரசு ஒப்பந்தங்களை வாரி வழங்கியும், வரி, அந்நிய முதலீடு, நிலம் கையகப்படுத்தும் கொள்கைகளில் சீர்திருத்தங்கள் என பெரும் நிறுவனக் குடும்பங்கள் கொள்ளை இலாபமடிப்பதற்காக செய்து வருகின்றனர். இவையாவும், இன்றுள்ள அமைப்பு முழுவதும் ஒட்டுண்ணியாக, இரத்தம் உறிஞ்சுவதாக இருப்பதைக் காட்டுகின்றன.
தில்லியில் கட்சிகளும், அமைச்சர்களும் மாறி மாறி எத்தனை முறை ஆட்சிக்கு வந்தாலும், ஏறத்தாழ 150 மிகப் பெரிய தொழிற் குடும்பங்கள் தான் ஆண்டுக்கு ஆண்டு மேலும் தங்கள் செல்வத்தைப் பெருக்கி வருகிறார்கள். இன்னொரு பக்கம், கோடிக் கணக்கான தொழிலாளர்கள், நுகர் பொருட்களின் அதிகரித்துவரும் விலைகளுக்கு அவர்களுடைய ஊதியம் ஈடு கொடுக்க முடியாமல் மேலும் வறுமையடைந்து வருகிறார்கள்.
இலட்சக் கணக்கான உழவர்களும், ஆதிவாசி மக்களும் ஒவ்வொரு ஆண்டும் சீரழிக்கப்பட்டு ஓட்டாண்டிகளாக ஆகி வருகிறார்கள். தங்களுடைய கடன்களைத் திருப்பியடைக்க முடியாத பலர், தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். முதலாளித்துவம் பெரும் எண்ணிக்கையில் பெண்களை, உழைக்கும் சக்தியில் இழுத்து வருகிறது. இந்த உழைக்கும் பெண்கள், தாங்க முடியாத நிலைமைகளையும், அதிகரித்துவரும் பாலியல் தாக்குதல்களையும் சந்தித்து வருகிறார்கள்.
உலகின் முன்னணி ஏகாதிபத்திய சக்திகளுடைய உயர்மட்ட குழுவில் சேருவதற்காக, உலகப் போட்டா போட்டியில் இந்திய ஏகபோக நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. வெளிநாடுகளில் இவர்கள் தங்களுடைய கொடுக்குகளை விரிவுபடுத்தி வருகையில், இந்திய பொருளாதாரத்தின் பல்வேறு துறைகள் மென்மேலும் அன்னிய ஏகபோக நிறுவனங்கள் ஊடுறுவுவதற்காகத் திறந்து விடப்பட்டு வருகின்றன.
காங்கிரசு, பாஜக என அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள், நெருக்கடியில் சிக்கியிருக்கும் உலக ஏகாதிபத்திய அமைப்பில் நமது நாட்டை மென்மேலும் ஒருங்கிணைத்து வந்திருக்கிறார்கள். இது, பொருட்களின் விலைகளில் மிகப் பெரிய ஏற்றத் தாழ்வுகளுக்கு வழி வகுத்துள்ளது. இது, அதிக அளவில் பாதுகாப்பற்ற நிலைக்கும், பரந்துபட்ட அழிவுக்கும் கொண்டு சென்றுள்ளது. உலக முதலாளித்துவ பொருளாதாரத்தின் ஏற்றத்தாழ்வுகளால் தொழிலாளர்கள், உழவர்களுடைய தலைவிதியானது அதிக அளவில் தீர்மானிக்கப்பட்டு வருகிறது.
ஏகபோக முதலாளிகள் தீர்மானித்த திட்டத்தை, முதலாளித்துவ விளம்பர நிறுவனங்கள் உற்பத்தி செய்திருக்கும், "அனைவருக்கும் வளர்ச்சி", "இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்", "இந்தியாவே எழுந்து நில்" என்பன போன்ற கவர்ச்சியான முழக்கங்களின் கீழ் பிரதமர் மோடி கூவி விற்று வருகிறார்.
பல வெளிநாட்டு நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களை வாங்கி, அங்குள்ளத் தொழிலாளர்களை வேலையிலிருந்துத் தூக்கியெறிவதன் மூலம் இந்தியாவில் இலாபம் ஈட்டி வருகின்றன. வாகனத் துறை போன்ற புதிய வேலைகள் உருவாக்கப்படும் இடங்களில், மோசமான கடும் சுரண்டலான நிலைமைகளிலும், நிரந்தர வேலை அல்லாமல் ஒப்பந்த முறையிலும் வேலை கொடுக்கப்படுகிறது. தொழிலாளர்களுடைய உரிமைகள் தாக்கப்பட்டு வருகின்றன. அன்னிய முதலீட்டைக் கவர்வது என்ற பெயரில் தொழிலாளர் சட்டங்கள், முதலாளிகளுக்கு ஆதரவாக மாற்றப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் மிகப் பெரிய அளவில் முதலாளித்துவ இலாபம் ஈட்டப்பட்டு வருகிறது. அது போலவே இராணுவத்திற்கான ஆயுதங்களும், ஏற்றுமதிக்காக எண்ணெற்ற பொருட்களும், சேவைகளும் பெரிய அளவில் உற்பத்தியாகின்றன. ஆனால், அதிகரித்துவரும் இளமையான இந்திய தொழிலாளி வகுப்பினருக்குத் தேவைப்படும் பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், இறைச்சி, பால், முட்டை போன்றவை போதுமான அளவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. பெருமளவில் மக்கள் பயன்படுத்தும் இப்படிப்பட்ட அத்தியாவசிய பொருட்கள், உழைக்கும் மக்கள் பெரும்பாலானோருக்கு எட்டாததாக இருந்து வருகின்றன.
இந்திய மற்றும் அன்னிய முதலாளிகளுக்குச் சொந்தமான ஏகபோக நிறுவனங்கள், வேளாண்மை வணிகத்திலும், வேளாண்மை சார்ந்த தொழில் துறைகளிலும் ஊடுறுவலையும், மேலாதிக்கத்தையும் அதிகரித்து வருகிறார்கள். மத்திய மாநில அரசாங்கங்களின் உதவியோடு அவர்களுடைய இலாபகரமான நிறுவனங்களுக்காக விளை நிலங்களை அவர்கள் கையகப்படுத்தி வருகிறார்கள். அரசுக்குச் சொந்தமான சொத்துக்களையும், நாட்டின் கனிம வளங்களையும், வன வளங்களையும் கொள்ளையடிப்பதற்காக உரிமங்களையும் அவர்கள் பெற்று வருகிறார்கள். வங்கி, காப்பீடு மற்றும் பிற நிதித் துறைகளை அவர்கள் அதிக அளவில் கைப்பற்றி வருகிறார்கள்.
2008-இல் துவங்கிய மாபெரும் வீழ்ச்சியிலிருந்து உலகப் பொருளாதாரம் இன்னமும் விடுபெற வில்லை. "இஸ்லாமிய அடிப்படைவாதத்தை" எதிர்த்துப் போராடுவது என்ற பெயரில், அமெரிக்காவின் தலைமையில் இயங்கும் நேட்டோ சக்திகள் ஆசியாவில் ஆக்கிரமிப்புப் போர்களைத் தொடர்ந்து கட்டவிழ்த்து விட்டு வருகின்றன. சிஐஏ-வும், பிற ஏகாதிபத்திய உளவு நிறுவனங்களும் பயங்கரவாதச் செயல்களை ஊக்குவித்து நடத்தி வருகின்றனர்.
இவற்றை சாக்காகப் பயன்படுத்தி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்க முயற்சிகளின் குறுக்கே நிற்கும் தனிப்பட்ட நாடுகளை நிலை குலையச் செய்வதற்காக, அவர்கள் மீது வெடிகுண்டு மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை அமெரிக்கா நடத்திவருகிறது. ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்திற்கு எதிராக வளர்ந்துவரும் உலகளாவிய எதிர்ப்பைத் திசை திருப்புவதற்காக அவர்கள் ஒவ்வொரு நாளும் பொய்களைப் பரப்பி வருகிறார்கள். முக்கியமான போராட்டமானது வெவ்வேறு மத நம்பிக்கைகளுக்கு இடையிலே நடப்பதாக ஒரு மாயையை அவர்கள் பரப்புரை செய்து வருகின்றனர்.
தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் ஒரு துருவ உலகை நிறுவ வேண்டுமென்ற அமெரிக்காவின் முயற்சி, இரசியா, சீனா மற்றும் பிற நாடுகளின் நலன்களுக்கு எதிராக கடுமையான மோதலுக்கு கொண்டு செல்கிறது. இந்தியாவின் ஆட்சியாளர்கள் அமெரிக்காவோடும், இரசியா, சீனா மற்றும் பிற ஆசிய நாடுகளோடு நெருக்கிய உறவைக் கட்டுவதில் தீவிரமாக இருக்கிறார்கள். ஏகாதிபத்திய முரண்பாடுகள் தீவிரமாகி இருக்கும் இந்த நேரத்தில், பிரதமர் மோடி மேற்கொண்டுவரும் சர்வதேசப் பயணங்கள், தன்னுடைய சொந்த ஏகாதிபத்திய நலன்களை முன்னே கொண்டு செல்வதற்காக இந்திய ஆளும் வகுப்பினருடைய முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது.
தொழிலாளர்களுடைய போராட்டங்கள் உலகெங்கிலும் வலிமையடைந்து வருகின்றன. நமது நாட்டில், இரண்டு அனைத்திந்திய பொது வேலை நிறுத்தம் உட்பட 2015-இல், முன்பில்லாத எண்ணிக்கையில் வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. தொழில் துறையின் முக்கிய துறைகளிலும், போக்குவரத்து, ஆசிரியர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் இராணுவத்தினர் உள்ளிட்ட சேவைத் துறைகளிலும் இந்த வேலை நிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன.
தனியார்மயத்திற்கு எதிராகவும், மூலதனத்தை மையமாகக் கொண்ட சீர்திருத்தங்களுக்கு எதிராகவும் இரயில்வே, சுரங்கங்கள், வங்கிகள் மற்றும் பிற பொதுத் துறை நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள். வாழ்வாதாரப் பாதுகாப்பிற்காகவும், தொழிற் சட்டங்களின் கீழ் அங்கீகாரம் பெறுவதற்காகவும், ஒப்பந்தத் தொழிலாளர்களும், அமைப்பு சாரா தொழிலாளர்களும் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள். மத்திய தொழிற் சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் வேறுபாடுகளைக் கடந்த அளவில் அவற்றோடு இணைந்துள்ள தொழிலாளர்களுடைய செயல் ரீதியான ஒற்றுமை வளர்ந்து வருகிறது.
உழவர்கள், பெண்கள், இளைஞர்கள், ஒடுக்கப்பட்ட தேசங்கள், தேசிய இனங்கள், பழங்குடியினர் மற்றும் வகுப்புவாத வன்முறையாலும், அரசு பயங்கரவாதத்தாலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணெற்ற போராட்டங்களையும் கடந்த ஆண்டு கண்டது. குற்றவியலான, ஊழலான அரசியல் வழிமுறை மீது வெறுப்பு அதிகரித்து வருகிறது. இது மக்கள் அதிகாரத்திற்கான பரந்துபட்ட இயக்கத்திற்கு வழி வகுத்திருக்கிறது. நாம் எங்கு பார்த்தாலும், இந்த பழைய, அழுகிக் கொண்டிருக்கும் அமைப்பிலிருந்து புதிய ஒன்று பிறக்க இருப்பதை நாம் காண முடிகிறது.
பெரும்பான்மையான மக்கள், அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றக் கூடியதாகவும், அவர்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கக் கூடியதாகவும் இருக்கக் கூடிய ஒரு நாகரிகமான சமுதாயத்திற்காக முயற்சித்து வருகின்றனர். ஆனால் முழுவதுமாக அழுகி நாற்றமெடுக்கும் இந்தப் பழைய அமைப்பை எப்பாடு பட்டாவது காத்து வைத்துக் கொள்ள வேண்டுமென்பதில் சுரண்டும் சிறுபான்மையினர் குறியாக இருக்கிறார்கள்.
பெருகிவரும் மக்கள் இயக்கங்களை நசுக்க, ஆளும் வகுப்பினர் பாசிச முறைகளை மென்மேலும் கையாண்டு வருகின்றனர். நாட்டின் பெரும் பகுதிகள் நிரந்தரமாக இராணுவ ஆட்சியின் கீழ் இருந்து வருகின்றன. பாசிச இராணுவப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. விருப்பம்போல மக்கள் கைது செய்யப்படுவதும், தொடர்ந்து ஒடுக்கப்படுவதும், "பயங்கரவாதிகளும்", 'தீவிரவாதிகளும்" அவ்வப்போது "எதிர்மோதல்களில்" கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது மதத்தைச் சேர்ந்திருப்பதற்காக மக்கள் தாக்கப்படுகிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்களை அல்ல, குற்றவாளிகளை அரசு பாதுகாக்கிறது. அரசுக்கு எதிராக போராடும் மக்களுடைய ஒற்றுமையை இரத்த வெள்ளத்தில் ஆழ்த்தி ஒழிப்பதற்காக, வகுப்புவாத, சாதி, தேச மற்றும் பழங்குடி மக்களுடைய அடையாளங்களின் அடிப்படையில் குறுங்குழுவாத மோதல்கள் தூண்டி விடப்படுகின்றன. எல்லைக்கு அப்பாலிருந்து வரும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது மற்றும் தேச ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பது என்ற பெயரில் அரசு பயங்கரவாதம் அதிகரித்து வருகிறது.
அரசாங்கத்தையும் அல்லது எந்த அமைச்சரையும் அல்லது எந்த முதலாளித்துவ நிறுவனத்தையும் கேள்வி கேட்பவர்கள் எவரையும் தேச விரோதிகளாக நடத்தப்பட்டு, "குற்றவியலான அவமதிப்பு" அல்லது "தேச துரோகச்" சட்டங்களின் கீழ் குற்றஞ் சாட்டப்படுகிறார்கள்.
சூழ்நிலைமைகள், ஒரு முழுமையான மாற்றத்தைக் கேட்கின்றன. இந்திய சமுதாயத்திற்கு ஒரு புரட்சி தேவை. இந்தப் புரட்சி, பழைய ஒடுக்குமுறையான உறவுகளில் எஞ்சி இருப்பனவற்றைத் தூக்கியெறிந்துவிட்டு, செல்வச் செழிப்பில் மிதக்கும் ஒரு சிறுபான்மையான பணக்காரர்களுடைய நலன்களுக்காக சுரண்டலையும், கொள்ளையையும் அதிகரிக்கும் பொருளாதாரப் போக்கு உட்பட முழு காலனிய பாரம்பரியத்தையும் ஒழித்துக் கட்டும்.
இன்றுள்ள அரசானது, ஏகபோக முதலாளிகளின் தலைமையில் செயல்படும் சுரண்டும் சிறுபான்மையினர் ஆளுவதற்கான ஒரு கருவியாகும். இதை ஒரு புதிய அரசைக் கொண்டு மாற்றியமைக்க வேண்டும். அது தொழிலாளி வகுப்பினர் தலைமை தாங்கும் உழைக்கும் பெரும்பான்மையினருடைய ஆட்சிக்கான ஒரு கருவியாக இருக்கும். இன்றுள்ள கட்சி அமைப்பும், தேர்தல் வழிமுறையும் பெரு முதலாளிகளுடைய கட்டளைகளை சமுதாயத்தின் மீது திணிக்கப் பயன்படுகின்றன. நமக்கு ஒரு புதிய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு புதிய சனநாயக அமைப்பு தேவைப்படுகிறது. அது இறையாண்மையை பாராளுமன்றத்தில் அல்ல, மக்களுடைய கைகளில் கொண்டு சேர்க்கும்.
உயர்மட்டத் தீர்மானங்களை எடுக்கும் மன்றங்களுக்கு தொழிலாளர்களும் உழவர்களும் தங்களுடைய நல்ல பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்ப முடிய வேண்டும். தேர்ந்தெடுத்த இந்தப் பிரநிநிதிகளை அவர்கள் எப்போதும் தம் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கவும், ஒப்புக் கொண்ட திட்டத்தைச் செயல்படுத்த இப் பிரதிநிதிகள் தவறுவார்களேயானால் அவர்களை எந்த நேரத்திலும் திருப்பியழைக்கவும் இயல வேண்டும். கட்சிகளை மக்கள் அதிகாரத்தில் அமர்த்துவதற்கு பதிலாக, மக்கள் அதிகாரத்தைச் செயல்படுத்த வழிவகை செய்வது ஒரு அரசியல் கட்சியின் கடமையாக இருக்க வேண்டும்.
மக்களுடைய தேவைகளை நிறைவேற்றுகின்ற வகையில் சமூக உற்பத்தியும், வழங்குதலும் இருப்பதை உறுதி செய்யவும், அனைவருக்கும் வளமையைக் கொண்டு வரவும், இன்றுள்ள மூலதனத்தை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை, மக்களை மையமாகக் கொண்ட ஒரு போக்கைக் கொண்டு மாற்றியமைக்கப்பட வேண்டும்.
பெரும் அளவிலான உற்பத்தியும், வாணிகமும், நிதியும் உடனடியாக சமூக உடமையாக சமூக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டுமென இதற்குப் பொருள். இது, பெரும் முதலாளிகள், பொது மக்களைக் கொள்ளையடிப்பதற்கும், பொருளாதாரத் திட்டத்தைத் தீட்டுவதற்கும் வழிகளைத் தடுக்கும். மொத்த வாணிகத்தின் மீது சமூகக் கட்டுப்பாட்டைக் கொண்டு வருவதன் மூலம், வேளாண்மைக்கு நம்பகமான இடுபொருட்கள் கிடைப்பதற்கு உத்திரவாதத்தையும், உழவர்களின் விளை பொருட்கள் நிலையான இலாபகரமான விலைகளில் வாங்கப்படுவதற்கு உத்திரவாதத்தையும் அளிக்க அரசால் முடியும். தொழிலாளர்கள் உழவர்களுடைய புதிய அரசு, கூட்டுறவுப் பண்ணைகளை அமைப்பதற்காக உழவர்களுக்குத் தாராளமாக உதவிகளை வழங்கும்.
அதன் மூலம் வேளாண்மை உற்பத்தியின் அளவும், உற்பத்தித் திறனும் உயரும். இப்படிப்பட்ட ஒரு கொள்கையானது, வேளாண்மை நெருக்கடிக்கும், வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும், பணவீக்கத்திற்கும் ஒரு முடிவு கட்டும். வேலை செய்வதற்கான உரிமை அனைவருக்கும் கிடைக்கும். உழைப்பவர்கள் அனைவரும், அவர்களுடைய கூட்டு உழைப்பு உருவாக்கும் வளத்தின் பயன்களை அனுபவிப்பார்கள்.
இந்த மறுமலர்ச்சி திட்டத்தையொட்டி, அரசியல் ஒற்றுமையைக் கட்டும் பணியை முன்னெடுத்துச் செல்ல ஒன்றுபடுவோமென்ற தீர்மானகரமான உறுதியோடு, இந்தப் புத்தாண்டை நாம் வரவேற்போம். மக்களுடைய உரிமைகளுக்கான ஐக்கியப் போராட்ட அமைப்புக்களாக, நகரங்களிலும், கிராமங்களிலும் மக்கள் வாழும் இடங்களிலும், வேலை செய்யும் இடங்களிலும், பரந்துபட்ட முறையில் மதம், சாதி, கட்சி வேறுபாடுகளைக் கடந்த அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் குழுக்களை உறுதி செய்யும் வேலையை நாம் முன்னெடுத்துச் செல்லுவோம். நாம் அமைக்க விரும்பும் புதிய அரசின் படிக்கட்டுகளாக இக் குழுக்களைக் கட்டி நாம் வலுப்படுத்துவோம்.
தோழர்களே, இந்த நேரத்தில் உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் சிறப்பான உடல்நலத்துடன் வாழ என் வாழ்த்துக்கள்.
புரட்சிகர மாற்றுக்காகவும், மக்கள் கைகளில் அதிகாரத்தைக் கொண்டுவரும் திட்டத்திற்காகவும், அனைவருடைய தேவைகளையும் நிறைவேற்றும் வகையில் பொருளாதாரத்தைத் திருத்தி அமைக்கவும் போராடுவதன் மூலமே நமது கட்சி தன்னுடைய அணிகளை விரிவுபடுத்துவதிலும், தொழிலாளி வகுப்பு மற்றும் மக்களுடைய இயக்கங்களில் தன்னுடைய செல்வாக்கை வலுப்படுத்துவதிலும் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்தப் பாதையில் உறுதியாக நிற்பதன் மூலம், அரசியல் ரீதியாக ஒன்றுபட்ட தொழிலாளி வகுப்பு மற்றும் மக்கள் அதிகாரத்திற்கான ஒரு சக்தி வாய்ந்த பொது மக்களுடைய இயக்கத்திற்குத் தலைமையாக கம்யூனிஸ்டுகளுடைய ஐக்கியத்தைக் மீண்டும் கட்டியமைப்போமென்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இது உலக அளவிலான புரட்சிகர அலை மீண்டும் எழுவதைத் துரிதப்படுத்த உதவும். புரட்சிகர அலை அடிக்கத் துவங்கும் போது, அதில் உழவர்களோடும், எல்லா ஒடுக்கப்பட்டவர்களோடும் கூட்டாக முன்னேறுவதற்கும், இந்திய மண்ணில் சோசலிசம் மற்றும் கம்யூனிசத்தின் வெற்றியை நிலைநாட்டவும் இந்தியத் தொழிலாளி வர்க்கத்தை தயாரிப்பதை உறுதிபடுத்தும்.
புரட்சிகர வாழ்த்துக்களோடு,
லால் சிங்.
பொதுச் செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி