1892, 1924 காவிரி ஒப்பந்தங்கள், 1972 உண்மை அறியும் குழு அறிக்கை மற்றும் 1974இல் எடுக்கப்பட்ட முடிவுகள், காவிரி நடுவர் மன்ற இடைக்கால மற்றும் இறுதி தீர்ப்புகள், அதன் மீதான 2018இல் இந்தி யாவின் உச்சநீதிமன்றத் தீர்ப்பு, இந்திய அரசின் செயல்பாடுகள் ஆகியவற்றைத் தொகுத்து ஆராய்ந்தால், காவிரிச் சிக்கலில் தமிழர்களின் உரிமையைப் பாதுகாப்பதில் பிரித்தானிய அரசு ஈடுபட்டிருந்ததையும், தமிழர்களின் உரிமையைப் பறிப்பதில் இந்திய அரசு ஈடுபட்டி ருப்பதையும் அறிய முடியும். இது வியப்பளிக்கலாம். ஆனால் உண்மை தமிழர்களைப் பகை இனமாகக் கொண்டு தமிழர்களின் காவிரி உரிமையைப் பறிப்பதில் இந்திய அரசு சட்டத்தின் பெயரால் படிப்படியாக செயல் படுத்தி வருகிறது. அதே நேரத்தில் கர்நாடகாவின் சட்டப்புறம்பான நடவடிக்கைகளை இந்திய அரசு தொடர்ந்து ஆதரித்து அதற்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்து வந்துள்ளது. 1924க்கு முன்னும் பின்னும் தமிழ்நாடும், கர்நாடகமும் பெற்றிருந்த பாசனப் பரப்பை அட்டவணை 1, 2லும் தண்ணீரின் அளவை அட்டவணை 3லும் பார்த்தோமானால் காவிரியில் தமிழர்கள் தங்களது உரிமையை இழந்துள்ளதையும், கன்னடர்கள் தமிழர்களின் உரிமையைத் தட்டிப் பறித்துள்ளதையும் அறிய முடியும்.
அட்டவணை-1 மற்றும் அட்டவணை-2 புள்ளி விவரம் காட்டுவது தமிழ்நாட்டைவிட கர்நாடகம் 8,91,000 ஏக்கர் பாசனப் பரப்பை புதிதாக விரிவுபடுத்தியுள்ளது.
பாசனப் பரப்பைக் காட்டும் அட்டவணை 1 மற்றும் 2-ஐ ஒப்பிட்டோமானால் 1924க்கு முன் காவிரியில் தமிழ்நாடு 14,44,000 ஏக்கர் பாசனப் பரப்பைக் கொண்டிருந்தது. கர்நாடகம் வெறும் 1,11,000 ஏக்கர் பாசனப் பரப்பைக் கொண்டிருந்து. 1990ஆம் ஆண்டின் கணக்குப்படி தமிழ்நாடு 11,36,000 ஏக்கர் புதிதாகப் பாசனப் பரப்பை விரிவுபடுத்தி யுள்ளது. கர்நாடகம் 20,27,000 ஏக்கர் பாசனப் பரப்பைப் புதிதாக விரிவுபடுத்தியுள்ளது. தமிழ் நாட்டின் புதிதாகப் பாசனப் பரப்பு விரிவாக்கம் முதல் மற்றும் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் மூலமாகவும், மேட்டூர் திட்ட விரிவாக்கத்தின் மூலமாகவும் நடைபெற்ற சட்டப்படியான வேலைகளாகும். கர்நாடகா வில் புதிதாக பாசனப் பரப்பு விரிவாக்கம் கபினி, ஏரங்கி, ஏமாவதி, யாகச்சி, சுவர்ணவதி போன்ற சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டப்பட்ட அணை கள் மூலமும் கொண்டு வரப்பட்டதாகும். இதனை இந்திய அரசோ, நீதித்துறையோ கண்டு கொள்ளவில்லை.
தண்ணீர் அளவைக் காட்டும் அட்டவணை 3ஐ ஆராய்வோம். 1924க்கு முன் தமிழ்நாடு 391.2 ஆ.மி.க. தண்ணீரையும், கர்நாடகம் வெறும் 27.2. ஆ.மி.க. தண்ணீரையும் பயன் படுத்தி வந்துள்ளன. 2018இல் தமிழ்நாடு 177.25 ஆ.மி.க. தண்ணீரையும், கர்நாடகாம் 284.75 ஆ.மி.க. தண்ணீரையும் உரிமையாக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கீழ்ப் படுகை நாடுகளுக்கான பங்கு உலகெங்கும் குறைக்கப்பட்டதே இல்லை. ஆனால் சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டின் பங்கு படிப்படியாக சட்டத்தின் பெயரால் குறைக் கப்பட்டுள்ளது.
காவிரிக்காகத் தமிழ்நாட்டின் போராட்டம்
காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை வெட்டிக் குறைப்பதில் ஈடுபட்ட கர்நாடகா வின் சூழ்ச்சித் திட்டங்களுக்கு இந்திய அரசு தொடர்ந்து ஆதரவளித்து வந்துள்ளது. வெட்டிக் குறைக்கப்பட்ட காவிரி உரிமைக்காக தமிழ்நாடு தொடர்ந்து போராடி வந்துள்ளது. காவிரி உரிமை மீட்புக் குழுத் தலைவர் பெ. மணியரசன் கூறுவதுபோல, “தமிழ்நாட்டிற்கு எந்த உரிமையும் ஒன்றுக்குப் பத்துத் தடவை காவடி எடுத்துக் காவடி எடுத்துதான் கிடைக் கும். எதுவுமே சட்ட உரிமையின்படி கிடைப்ப தில்லை” (காவிரி நேற்று - இன்று - நாளை, இரண்டாம் பதிப்பு, பக்கம் 40). பத்து தடவை காவடி எடுத்துப் போராடி பெற்ற உரிமையைக் கூட இந்திய அரசு நடைமுறைப்படுத்துவ தில்லை.
காவிரிக்கான தமிழர்களது போராட்டம் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணைகள் கட்டத் திட்டம் போட்டதிலிருந்தே தொடங் கியது. இப்போராட்டம் எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை. 1970இல் நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு அன்றைய முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியது தொடங்கி பல்வேறு கட்டப் பேச்சு வார்த்தைகள், நீதி மன்றப் போராட்டங்களுக்குப் பிறகு 1990இல் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. காவிரி நடுவர் மன்றம் அமைக்க தமிழ்நாடு 20 ஆண்டுகள் போராட வேண் டியிருந்தது. அதே நேரத்தில் குஜராத் அரசு நடுவர் மன்றம் கோரி 1968இல் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியது. மறு ஆண்டே, 1969இல் நர்மதா நடுவர் மன்றம் அமைக்கப் பட்டது. கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆறுகளுக்கான நடுவர் மன்றங்கள் கோரி தொடர்புடைய மாநிலங்கள் 1962 முதல் கடி தங்கள் எழுதின. 1969இல் நடுவர் மன்றங்கள் அமைக்கப்பட்டன. தமிழ்நாட்டின் கோரிக் கைக்கு ஏன் 20 ஆண்டுகள் தேவைப் பட்டன? காரணம் பேச்சு வார்த்தை என்ற கர்நாடகாவின் இழுத்தடிப்புக்கு ஆதரவாக இந்திய அரசு ஒத்துப் போனது.
1990இல் நடுவர் மன்றத்திடம் தமிழ்நாடு இடைக்கால நிவாரணம் கேட்டது. நடுவர் மன்றம் மறுக்கவே உச்சநீதிமன்றம் சென்றே இடைக்கால நிவாரணமாக 205 ஆ.மி.க தண்ணீரைப் பெற்றோம். இடைக்காலத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட, நடைமுறைப் படுத்தப் போராடினோம். இடைக்கால நிவாரணமான 205 ஆ.மி.க. நீரைக் கர்நாடகம் ஒரு போதும் வழங்கியது இல்லை. காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்க 16 ஆண்டுகள் எடுத்துக் கொண்டு 2007இல் தான் வழங்கியது. இத்தீர்ப்பை அரசிதழில் வெளியிட உச்சநீதிமன்றம் செல்ல வேண்டியதாயிற்று. 6 ஆண்டுகள் கழித்து இத்தீர்ப்பு 2013இல் தான் அரசிதழில் வெளியிடப் பட்டது.
ஒரு தீர்ப்பு அரசிதழில் வெளியிட்டால் அது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு இணையாகக் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். இதுநாள் வரை அது நடைமுறைப்படுத்த வில்லை. காவிரி நடுவர் மன்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழு வேண்டும் என தமிழ் நாடு போராடிக் கொண்டிருக் கும்போதே, தமிழ்நாடு பெற்ற காவிரி உரிமையைக் குழி தோண்டிப் புதைக்க மோடி அரசு “தேசியத் தண்ணீர்ச் சட்டக வரைவு 2016” என்ற ஒற்றைத் தீர்ப்பாயத்தைக் கொண்டு வந்தது. அதற்கு எதிராகப் போராட வேண்டியி ருந்தது. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்க, தமிழ்நாடு உச்சநீதிமன்றம் சென்றது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒத்துக் கொண்ட இந்திய அரசு பிறகு மோடி அரசின் ஆலோசனைப்படி காவிரி மேலாண்மை வாரி யம் அமைக்க, ஆணையிட உச்சநீதிமன்றத் திற்கு அதிகாரம் இல்லை என வாதிட்டது. இதன் மூலம் மோடி பி.ஜே.பி. அரசு கர்நாடகாவின் சதித் திட்டங்களுக்கு ஆதரவாக செயல்படுவது வெளிச்சத்துக்கு வந்தது. பல்வேறு போராட் டங்களுக்குப் பிறகு காவிரி மேலாண்மை வாரியம் ஒரு வழியாக 2018 ஜூனில் அமைக் கப்பட்டது. இவ்வாறு தமிழ் நாடு காவிரி உரிமைக்காக நடத்திய போராட் டத்தைத் தொகுத்தால் தமிழர்களது காவிரியின் ஒவ்வொரு உரிமையையும் இந்திய அரசு தானாக முன்வந்து செய்யாததைப் புரிந்து கொள்ள இயலும். ஒவ்வொரு உரிமைக்காகவும் தமிழ்நாடு உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்ட வேண்டியிருந்தது. அதற்குக் கூட இந்திய அரசு முட்டுக்கட்டைகளைப் போட்டது.
காவிரி மேலாண்மை வாரியத்தின் அத்துமீறல்
காவிரி மேலாண்மை வாரியம் தமிழ்நாட்டி லுள்ள மேட்டூர் அணை, பவானி சாகர் அணை, அமராவதி நீர்த் தேக்கம், கர்நாடகத்தி லுள்ள கிருஷ்ணராஜ சாகர், ஏமாவதி, ஏரங்கி, கபினி அணைகள் மற்றும் கேரளாவிலுள்ள பாணாசுர சாகர் அணை ஆகியவற்றைக் கண்காணித்து உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடை முறைப்படுத்த வேண்டும். அதில் ஒரு அடிகூட முன் னேறவில்லை. மாறாக, கர்நாட காவின் சதித் திட்டங்களுக்குத் துணை போகிறது. கிருஷ்ண ராஜசாகர், கபினி அணை களிலிருந்து அதிக மழையால் மேட்டூ ருக்கு வரும் உபரி நீரைத் தடுக்க மேகே தாட்டு அணையை கட்ட கர்நாடகம் திட் டம் போட்டுச் செயல் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதனை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை நாடி யுள்ளது. இந் நிலை யில் காவிரி மேலாண்மை வாரியத்தின் தற்போ தைய தலைவர் எஸ்.கே. ஹெல்தர் வரும் கூட் டத் தொடரில் மேகே தாட்டு அணை கட் டுவது குறித்து விவா திக்கப்படும் என தமிழ் நாட்டின் மீது தாக் குதல் தொடுத்துள் ளார். மேகேதாட்டு அணைச் சிக்கல் உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் இதனை விவா திக்க காவிரி மேலாண்மை வாரியத்திற்கு அதி காரமில்லை என தமிழ்நாடு அரசு கூறுகிறது.
காவிரி நடுவர் மன்றத்தின் தலைவராக சித்ததேவ் முகர்ஜி இருந்தார். அவரின் அணுகுமுறையில் கர்நாடகத்திற்குச் சந்தேகம் எழுந்தது. இந்தப் பதவியில் சித்ததேவ் முகர்ஜி நீடிக்கக் கூடாது என்று அப்போதைய கர்நாடக முதல்வர் தேவேகவுடா கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 1996இல் முகர்ஜியே பதவியை ராஜினாமா செய்தார். அதே போல் தமிழ்நாடு அரசு எஸ்.கே. ஹெல்தர்மீது வழக்குத் தொடுக்க வேண்டும். அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.
கர்நாடகாவில் சட்டத்திற்குப் புறம்பான அணைகள் இந்திராவின் அவசர நிலைக் காலத்தில் கட்டப்பட்டவையாகும். அப்போது மத்தியிலும் கர்நாடகவிலும் காங்கிரசு ஆட்சியே இருந்தது. தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சி இருந்தது. இச் சூழலைக் கர்நாடகம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண் டது. தற்போது கர்நாடகாவிலும், மத்தியிலும் பி.ஜே.பி. ஆட்சியே இருக்கிறது. மோடி அரசு நீதித்துறை உள்பட எல்லாவற்றையும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களைக் கொண்டு பாசிசமயமாக்கி வருகிறார். இச்சூழலைக் கர்நாடக அரசு பயன்படுத்த முயற்சிக்கிறது. இந் நிலையில் மோடி அரசால் நியமிக்கப்பட்ட எஸ்.கே. ஹெல்தர் மேகேதாட்டு அணைக்கு ஆதரவாகப் பேசி வருகிறார். தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் தர முடியாது என்று, ஆளும் பிஜேபி, காங்கிரசு, இடது, வலது கம்யூனிஸ்டு கட்சிகள் உட்பட எல்லாம் ஓரணியில் திரண்டு நிற்கின்றன. மேகேதாட்டு அணைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என 150 கி.மீட்டர் நடைப்பயணத்தைக் காங் கிரசு கட்சி நடத்தியுள்ளது. எனவே தமிழ்நாடு மிகவும் எச்சரிக் கையாக இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் போராட்டத்தை மடைமாற்ற சூழ்ச்சி
உலக வரலாற்றிலேயே மிக நீண்ட தீர்க்கப் படாத சிக்கலாக காவிரிச் சிக்கல் நீடிக்கிறது. உலகில் 3,600க்கும் மேற்பட்ட ஆற்று நீர் ஒப் பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. டான்யூப் ஆற்றின் தண்ணீரை 10 ஐரோப்பிய நாடுகள் சிக்க லின்றித் தங்களிடையே பங்கிட்டுக் கொள் கின்றன. இந்தியாவும் பாகிஸ்தானுடன் 1960இல் சிந்து ஆற்று உடன்படிக்கை மூலமும், 1996இல் வங்கதேசத்துடன் பராக்கு ஆற்றுநீர் உடன்படிக்கை மூலமும் சிக்கலுக்குத் தீர்வு கண்டுள்ளது. ஆனால், காவிரிச் சிக்கலைத் தீர்க்க இந்திய அரசு தயாரில்லை. இந்தியா தயாரில்லை என்பதுடன் தமிழ்நாட்டின் காவிரி உரிமையைக் குழி தோண்டிப் புதைப்பதில் ஈடுபட்டுள்ளது.
தமிழ்நாட்டின் காவிரி உரிமைக்கான போராட்டத்தை மடைமாற்ற கங்கை - காவிரி இணைப்பு, தென்னக நதிகள் இணைப்பு மற்றும் தேசிய நதிகள் இணைப்பு போன்ற கற்பனைத் திட்டங்களை இந்திய தேசியவாதிகள் முன் வைக்கின்றனர். மோடியின் நதிகள் இணைப்புத் திட்டம் என்பது தேசிய இனங்களின் ஆற்று உரிமைகளைப் பிடுங்கி மத்திய அரசின் உரிமையாக்கிக் கொள்வதாகும், நல்ல அரசியல் தலைவர்கள் இல்லை என பெ. மணியரசன் கூறுவதுபோல தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலின் அதிமுக எடப்பாடி போன்றவர்கள் கங்கை - காவிரி இணைப்புக் குறித்து மோசடியை அறியாதவர்களாக உள்ளனர். இது காவிரியை உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்குக் கொடுக்கும் இந்திய அரசின் திட்டமாகும். இதனை எந்த மாநிலமும் ஒத்துக் கொள்ளப் போவதில்லை. மேலும் மாற்றுப் பயிர் சாகுபடி போன்ற ஆலோசனை களை முன் வைத்துத் தமிழர்களது போராட்ட உணர்வை நீர்த்துப் போகச் செய்கின்றனர்.
மேகேதாட்டு அணை கட்டினால் கர்நாடகாவிலுள்ள மாண்டியா மாவட்டத்தில் 5 கிராமங்களும் காடுகளிலுள்ள விலங்குகளும் பாதிக்கப்படும். 10,000க்கும் மேற்பட்ட பட்டியலின பழங்குடியின மக்கள் பாதிக்கப்படுவதுடன் உயிர்ச் சங்கிலத் தொடர் அறுந்து போகும். எனவே கர்நாடக மாநிலத்திலேயே மேகேதாட்டு அணைக்கு எதிராகப் போராட்டம் கிளம்பியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்த அளவில் மேகேதாட்டு அணை கட்டினால் தமிழ்நாட்டின் டெல்டா விவசாயமும், குடி நீருக்காக அதனை நம்பியுள்ள மக்களும் பெரிதும் பாதிக்கப்படுவதுடன் கடலில் மீன் வளம் அழிந்து போகும்.
எனவே, காவிரியில் தமிழர்களின் உரிமையைப் பறிப்பதில் கர்நாடகம், இந்திய ஒன்றியம், காவிரி மேலாண்மை வாரியம் எல்லாம் ஓரணியில் நிற்கின்றன. உச்சநீதிமன்றமோ பாசிச மயமாகி வருகிறது.
இந்நிலையில் சட்டமன்றத் தீர்மானம் நீதிமன்றத்தை நாடியது போன்ற சட்டவாத அணுகு முறை பயனளிக்கப் போவதில்லை. இதற்கு தமிழ்நாட்டின் போர்க்குணமிக்க மக்கள் திரள் போராட்டமே பயனளிக்கும்.
எனவே தமிழ்நாடு அரசும், தமிழக மக்களும் செய்ய வேண்டியது
காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைவர் எஸ்.கே. ஹெல்தரை நீக்கப் போராட வேண்டும்.
தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகாவிற்கு செல்லும் மின்சாரத்தைத் தடுக்க வேண்டும்.
கர்நாடகாவின்மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்.
தமிழக மக்கள் இந்திய அரசு அலுவலகங்களை முற்றுகை இட்டு இழுத்து மூட வேண்டும்.
இந்திய அரசுக்கு எதிராகத் தமிழக மக்கள் ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும்.
ஏர்க் களத்து உழவர்கள், தொழிலாளர்கள், போர்க் களத்திற்கு வர வேண்டும். வராவிட்டால் காவிரி நமக்கில்லை.
- பாரி
துணை நின்றவை:
1. காவிரி நேற்று - இன்று - நாளை - இரண் டாம் பதிப்பு - 2020 - பெ. மணியரசன்
2. காவிரியின் குறுக்கே மேகேதட்டில் அணை: பொறிஞர்கள்: முனைவர் அ. வீரப்பன் - ந. கைலாசபதி.
3. குடகு மீட்பே காவிரிக்குத் தீர்வு - அ. வியனரசு
4. காவிரி வரலாறு - ‘தி இந்து தமிழ்’ - தியாகு செப்.21, 2016
5. நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா - பேராசிரியர் த. செயராமன்
6. காவிரி காலம் நம்மை எங்கே நிறுத்தி யிருக்கிறது? - செந்தில்
7. சிந்தனையாளன் - ஜூன் - 2014
8. காவிரி எல்லோரும் ஏமாற்றுகிறார்கள்! - விவசாய சங்கம் மட்டும்...! - திருப்பூர் குணா
9. மீண்டும் உயிர் பெறும் மேகதாது அணைத் திட்டம் - சாரதாதேவி
10. காவிரிப் பிரச்சினை - மோடி அரசே முதன்மைக் குற்றவாளி - மகஇக - 2016
11. காவிரி உரிமையில் வஞ்சிக்கப்படு கிறோம் - திருமுருகன் காந்தி.