ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கென்றே இந்த உலகத்தில் பிறந்த மாதிரி பேசுகின்ற சிலரை நாம் இன்னமும் பார்க்கலாம். அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் ஓட்டுப் போட்டுத் தேர்தெடுக்கும் இந்த ஒரு முறை மட்டும் தான். அதைவிட்டால் வேறு மாற்று ஜனநாயக முறையை ஏதும் அறியாதவர்கள். அவர்களை பொறுத்தவரை இங்கே அனுமதிக்கப்பட்டிருக்கும் குறைந்த பட்ச பேச்சுரிமை,எழுத்துரிமை போன்றவையே ஜனநாயகம் என்று சொல்வதற்குப் போதுமானவை. அதை அப்படியே காக்க வேண்டும் என்றால் நாம் கண்டிப்பாக இங்கே தேர்தலில் நிற்கும் ஏதாவது ஒரு கட்சிக்கு வாக்களித்தே ஆகவேண்டும் என்கின்றனர். அப்படி வாக்களிக்காமல் போனால் அது ஜனநாயக படுகொலை. ஒரு இந்திய குடிமகனாக இருப்பதற்கே நாம் தகுதியற்றவர்கள் என்றெல்லாம் சொல்கின்றனர். இன்னும் சில அரசியல் அதிமேதாவிகள் யாரையும் பிடிக்கவில்லை என்றால் நோட்டாவுக்கு ஓட்டுப்போடச் சொல்கின்றனர். வாழ்வதற்குப் பிடிக்கவில்லை என்றால் தன்னுடைய எதிர்ப்பை காட்ட கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்வதை ஊக்குவிப்பதும் ஜனநாயகத்தை காப்பாற்ற நோட்டாவுக்கு ஓட்டுப்போடச் சொல்வதும் ஒன்றுதான் என இவர்களுக்கு தெரிவதில்லை.
இன்னமும் இங்கே ஜனநாயகம் என்ற ஒன்று இருக்கின்றது என மனப்பூர்வமாக நம்பிக் கொண்டிருந்தவர்களுக்கும், பேசிக் கொண்டிருந்தவர்களுக்கும் சரியான சம்மட்டி அடியாக விழுந்துள்ளது தினம் தினம் கட்டுக்கட்டாய் கைப்பற்றப்படும் பணம். இவர்கள் சொல்லும் ஜனநாயகத்தின் அனைத்து தூண்களையும் தாங்கிக்கொண்டிருப்பது இந்தப் பணம் தான். இந்தப் பணம் தான் ஜனநாயகத்தின் அனைத்து விழுமியங்களையும் தீர்மானிக்கின்றது. யார் ஆட்சிக்கு வரவேண்டும், யார் கண்டிப்பாக ஆட்சிக்கே வரக்கூடாது, எந்தப் பதவியில் யாரை உட்கார வைப்பது, என அனைத்துக்கும் அடிப்படையாய் இருப்பது இந்தப் பணம் தான்.
கீழ்தட்டு மக்களுக்கு எப்பொழுதுமே தெரியும் இந்த அரசியல்வாதிகள் எதையுமே செய்யமாட்டார்கள் என்று. அதனால் தான் ‘ஏன் கொடுப்பதை சும்மா விடவேண்டும் இவன் பதவிக்கு வந்துவிட்டால் நமக்குப் பத்துபைசாவுக்குக் கூட உதவமாட்டான். அதனால் அவன் கொடுக்கும் ஐநூறு ஆயிரம் என எவ்வளவு இருந்தாலும் இப்போதே வாங்கிக்கொள்ளலாம்’ என்ற கண்ணோட்டத்தில் இருந்தே அந்தப் பணத்தை வாங்கிக்கொள்கின்றார்கள். நீங்கள் அவர்களிடம் போய் பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டுப் போடுவது கேவலமான செயல் என்று சொன்னீர்கள் என்றால் உங்களை அவர்களது பிழைப்பை கெடுக்கவந்த சாத்தானாக தான் பார்ப்பார்கள். அவர்களை பொருத்தவரை அவர்கள் வாங்கும் ஐநூறு ஆயிரம் என்பது அவர்களது குடும்பத்தை ஒரு ஐந்தாறு நாட்களுக்குப் பிரச்சினை இல்லாமல் ஓட்டுவதற்கு உதவக்கூடியது. அதைத் தாண்டி அவர்கள் அரசியலையோ அரசியல் கட்சி தலைவர்களையோ பெரிய அளவில் பார்ப்பதில்லை.
பெரும்பாலும் நடுத்தரவர்க்கமும், மேல்தட்டு வர்க்கமும் தான் ஜனநாயகத்தை பற்றியெல்லாம் பேசுவது. அதிலும் பல நடுத்தர வர்க்க மக்கள் பணம் வாங்கிக்கொண்டுதான் தேர்தலில் வாக்களிக்கின்றார்கள். மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த பல பேர் ஓட்டுப் போடவே வருவதில்லை. அதனால் இவர்கள் சொல்லும் ஜனநாயகத்தின் பெரும்பகுதியைத் தீர்மானிப்பாவர்கள் அந்தப் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப் போடும் சாமானிய மக்கள் தான். யார் ஓட்டுக்கு அதிகமாக பணம் கொடுக்கின்றார்களோ அவர்களுக்குத்தான் அவர்களின் ஓட்டு கண்டிப்பாக விழும். அரசியல்வாதிகளைப்போல அவர்கள் நம்பிக்கை மோசடி எல்லாம் செய்யமாட்டார்கள். வாங்கிய பணத்திற்குக் கண்டிப்பாக விசுவாசமாக நடந்து கொள்வார்கள்.
அந்தச் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை இந்த அரசியல்வாதிகள் மேம்படுத்தி இருந்தார்கள் என்றால் நிச்சயம் ஐநூறுக்கும், ஆயிரத்துக்கும் அவர்கள் ஒருபோதும் கையேந்தி இருக்க மாட்டார்கள். அவர்களை தொடர்ச்சியாக வறுமையிலேயே, அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்த்து வாழும் நிலையிலேயே வைத்திருப்பதால் தான் அவர்கள் தங்களுடைய தன்மானத்தை விட்டுப் பணத்தை வாங்குகின்றார்கள்.
ஆனால் ஜனநாயகத்தை பற்றி பேசும் யாரும் மேற்கண்ட கோடான கோடி சாமானிய மக்களின் நிலையைக் கருத்தில் கொள்வதே கிடையாது. எப்படி கூலி உழைப்பானது முதலாளித்துவம் வாழ்வதற்கு அடிப்படையானதோ அதே போல பணமானது ஜனநாயகம் வாழ்வதற்கு அடிப்படையானது. எப்படி தவிர்க்க இயலாமல் முதலாளியமானது தனது எதிரிகளை உற்பத்தி செய்கின்றதோ அதேபோல இந்த கரன்ஸி ஜனநாயகமானது தவிக்க இயலாமல் ஒன்றுமே இல்லாத பஞ்சை பராரிகளை உற்பத்தி செய்கின்றது. இந்தக் கரன்ஸி ஜனநாயகமானது நிலைத்து நிற்பதற்கு அடிப்படையே அந்த ஒன்றுமில்லாத பஞ்சை பராரிகள் தான்.
இப்போது சொல்லுங்கள் எப்படி நீங்கள் தேர்தலில் பணம் வெள்ளமாக பாய்வதை தடுப்பீர்கள். நீங்கள் எதுமற்ற அந்தச் சாமானிய மக்களை ஒழித்தாலே ஒழிய உங்களால் வேறு எதையும் செய்யமுடியாது. இந்த கரன்ஸி ஜனநாயகத்தின் அடிப்படையே அவர்கள் தான். அவர்களால் தான் அது வாழ்ந்துகொண்டு இருக்கின்றது.
இந்தத் தேர்தலில் இதுவரை ஏறக்குறைய தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 60 கோடி ரூபாய் வரை கைப்பற்றப்பட்டு இருப்பதாய் சொல்கின்றார்கள். கரூரில் அன்புநாதன் என்ற அதிமுக அமைச்சர்களின் முக்கிய பினாமி வீட்டில் இருந்து மட்டும் ஐந்து கோடிகள் கைப்பற்றப்பட்டது. ஆனால் அங்கே உண்மையில் 500 கோடிகளுக்கு மேல் இருந்ததாக பத்திரிக்கைகள் சொல்கின்றன அது உண்மையா பொய்யா என்பது ராஜேஷ் லக்கானிக்கும், ஜெயலலிதாவுக்கு மட்டுமே வெளிச்சம்!. அதே போல சென்னை எழும்பூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த அதிமுக பிரமுகர் வீட்டில் 4 கோடியே 93 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதே போல தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து ஏறக்குறைய 60 கோடி ரூபாய் வரை கைப்பற்றப்பட்டதாய் தேர்தல் ஆணையம் கணக்குச்சொல்கின்றது. கைப்பற்றப்பட்ட பணம் என்பது உண்மையில் மிகச்சிறிய அளவு என்பது விவரம் தெரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும்.
ஒரு தொகுதியில் குறைந்த பட்சம் ஒரு லட்சம் வாக்களர்களுக்கு 1000 ரூபாய் என கணக்கிட்டால் கூட பத்து கோடிகள் வரும். அதுவே 234 தொகுதிகள் என்றால் 2340 கோடிகள் வரும். இது ஒரு சாதாரண கணக்கீடுதான். உண்மை நிலவரம் இதைவிட பலமடங்கு இருக்கலாம். ஆனால் கைப்பற்றப்பட்டது என்பதோ வெறும் 60 கோடிகள் தான். அதிலும் வியாபாரிகள், வணிகர்கள் போன்றவர்களிடம் இருந்து கைப்பற்றப்பற்றப்பட்ட பணத்தை கழித்துவிட்டுப் பார்த்தால் மிகக்குறைவாகவே இருக்கும். இது எல்லம் தேர்தல் ஆணையத்திற்குத் தெரியாத ஒன்றல்ல. அவர்களைப் பொறுத்தவரை ஒரு பிரம்மையை ஏற்படுத்தவேண்டும். தேர்தல் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்த மக்களை ஏதாவது செய்து அவர்களை வாக்குச்சாவடி முன் வாக்களிக்க கொண்டுவந்து நிறுத்தவேண்டும். அதன் மூலம் இந்த அரசு கட்டமைப்பைக் காப்பாற்ற வேண்டும். ஆளும்வர்க்கத்தின் சுரண்டலுக்கு அங்கீகாரம் பெற்றுத்தரவேண்டும் அவ்வளவுதான். அதற்காக தான் இந்த நாடகமெல்லாம்.
இந்தத் தேர்தல் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு அதை இன்னும் கர்பகிரகத்துக்குள் இருக்கும் புனித கடவுளாக பார்க்கும் ஒவ்வொருவருக்கும் நாம் சொல்லிக்கொள்வது இதைத்தான். எப்படி கர்ப்பகிரகத்துக்குள் அனைவரும் உள்ளே போக பார்ப்பனிய சாத்திரங்கள் அனுமதிப்பதில்லையோ அதே போல அனைத்து மக்களையும் ஜனநாயகத்தின் பங்கேற்பாளர்களாக ஆவதற்கு இந்த தேர்தல் முறையும் அனுமதிப்பது கிடையாது. இது பணக்காரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் கர்ப்பகிரகம் மற்ற அனைவரும் அதற்கு வெளியே தன்னுடைய தீண்டாமையை ஏற்றுக்கொண்டு சாஷ்டாங்கமாக விழுந்துவணங்கும் சூத்திர பார்வையாளர்கள் மட்டுமே. இதுதான் நவீன கரன்ஸி ஜனநாயகம் உருவாக்கி வைத்திருக்கும் மனுதர்மம்.
பணம் வாங்கிக்கொண்டுதான் சாமானிய மக்கள் ஓட்டுப்போடப் போகின்றார்கள். அவர்களை உங்களது ஜனநாயக கோட்பாடுகளைக் கொண்டு ஞானஸ்நானம் எல்லாம் செய்யமுடியாது. நீங்கள் சொல்லும் ஜனநாயக கோட்பாடுகள் அவர்களுக்குத் தேவையும் இல்லை. அவர்கள் விரும்புவதெல்லாம் ஒரு சமத்துவமான, கெளருவமான வாழ்க்கையைத்தான். அந்த வாழ்க்கையை உங்களது கரன்ஸி ஜனநாயகத்தால் ஒரு போதும் கொடுக்க முடியாது. கொடுக்க முடியும் என்று உங்களால் உறுதியாக சொல்ல முடிகின்றதா?
- செ.கார்கி