சமீபத்தில் தலைநகர் தில்லியில் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் தீ விபத்து நடைபெற்று பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளர் கூறுகையில், “இந்த அருங்காட்சியகத்தில் தீயணைப்பு உபகரணங்கள் போதுமான அளவில் இல்லை, மேலும் இருக்கின்ற உபகரணங்களும் எதுவும் சரியாக வேலை செய்யவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்றபோதும் தீயைக் கட்டுப்படுத்தக் காலதாமதம் ஆனதால் ஆறு தீயணைப்பு வீரர்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நடுவண் அரசின் உள்துறை அமைச்சகம் இந்த அருங்காட்சியகத்தின் தீயணைப்பு உபகரணங்கள் குறித்த தணிக்கைக்கு உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் கேரள மாநிலம் புட்டிங்கல் தீ விபத்தில் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்தனர். இதுபோன்ற பல்வேறு நிகழ்வுகள் மற்றும் ஆய்வுகளின்படி இன்று வளர்ச்சியற்ற துறைகளில் முதன்மையானதாக உள்ளது மக்கள் பாதுகாப்பில் பெரும்பங்கு வகிக்கும் தீயணைப்புத் துறை. சராசரியாக ஒரு நாளைக்கு 42 பெண்களும், 21 ஆண்களும் இந்த நாட்டில் தீ விபத்தில் மட்டும் உயிரிழந்து கொண்டிருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. தேசியக் குற்ற ஆவணப் பிரிவு வழங்கிய அறிக்கையின்படி ஒட்டுமொத்த உயிரிழப்புகளில் இது 5.9 சதவிகிதம் உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் 20000 முதல் 25000 உயிரிழப்புகள் வரை தீ விபத்துகள் மூலம் நடந்து கொண்டே இருக்கிறது.
2013 ஆம் ஆண்டு தேசியப் பேரழிவு மீட்புப் படை (NDRFCD-National Disaster Response Force and Civil Defence) வழங்கிய ஆய்வறிக்கையின்படி நடுவண் அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தீயணைப்பு ஆலோசனைக் குழு (Standing Fire Advisory Council) பின்வருவனவாறு பரிந்துரை செய்திருக்கிறது.
1. 3,00,000 மக்கள்தொகை கொண்ட ஊரகப் பகுதிகள் வரை 50,000 பேருக்கு ஒரு தீயணைப்பு வீரர் என்ற விகிதத்திலும் அதற்கு மேற்கொண்டு வரும் நகர்ப்புறப் பகுதிகளுக்கு கூடுதலாக 1,00,000 பேருக்கு ஒரு வீரர் என்ற விகிதத்திலும் அமைந்திருக்க வேண்டும்.
2. மக்கள் தொகையில் மூன்று இலட்சம் முதல் பத்து இலட்சம் வரை ஒரு மீட்புப் பணியாளர்.
3. ஒரு தீயணைப்பு வாகனத்திற்கு 6 பணியாளர்கள்.
4. நகர்ப்புறங்களில் 10 km சுற்றளவிற்கு ஒரு தீயணைப்பு நிலையம். புறநகர் மற்றும் கிராமப் பகுதிகளில் 50 km சுற்றளவிற்கு ஒரு நிலையம் என்று குறைந்தபட்சம் இன்றைய தேவையாக நாட்டில் மொத்தம் 8500 தீயணைப்பு நிலையங்கள் வேண்டும். (ஆனால் இருப்பதோ இந்தியா முழுவதும் சேர்த்து வெறும் 2500 தீயணைப்பு நிலையங்கள் மட்டுமே)
5. நகர்புறங்களில் அதிகபட்சம் 5 நிமிடங்களிலும் புறநகர் மற்றும் கிராமப் புறங்களில் அதிகபட்சம் 20 நிமிடங்களிலும் அருகிலுள்ள தீயணைப்பு நிலையங்கள் தேவையான நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
6. அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் சுழல் மேடை கொண்ட ஏணி, தீயணைப்பு வண்டி, நீரியல் இயக்க மேடை, உயர் அழுத்த இறைப்பி, மற்றும் பல உபகரணங்கள் உபரியாகவும், தரச் சான்றிதழ் பெற்றதாகவும் இருக்க வேண்டும்.
ஆனால் இதில் எதுவுமே நாட்டின் எந்த மாநிலத்திலும் கடைபிடிக்கப் படவில்லை. சமீபத்தில் தேசியப் பேரிடர் மீட்புக் குழு வழங்கிய ஒரு அறிக்கையில் நாடு முழுவதும் தீயணைப்பு நிலையங்கள், பணியாளர்கள், போதுமான உபகரணங்கள், நவீனத்துவம் என அனைத்திலும் 70 சதவிகிதத்திற்கும் அதிகமான பாற்றாகுறையே நிலவுவதாகத் தெரிவித்துள்ளது. இதில் பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையை உள்ளடக்கிய பெருநகரங்களும் அடக்கம் என்பதுதான் கொடுமை.
இதில் உள்ள நடைமுறைச் சிக்கல் என்னவென்றால் இந்தத்துறை மாநில அரசிற்குட்பட்ட நகராட்சி அமைப்புகளின் அதிகாரத்தின் கீழ் வருவதால் அதன் மூலமாகத்தான் நிதி ஒதுக்கீடு செய்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறது இந்திய அரசியல் சட்டப்பிரிவு 243-w, பகுதி 9, அட்டவணை பன்னிரெண்டு. எனவே மாநில அரசு நிதிப் பற்றாகுறையைக் காரணம் காட்டுவதாலும், நகராட்சி அமைப்புகளின் இயலாமையாலும் இந்தத் துறை சரியான முறையில் செயல்பட முடியாமல் தவிக்கிறது.
பெரும்பாலான தீ விபத்துகள் இயற்கைப் பேரிடர்களுக்கு நிகரான விழைவுகளை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றது. சமீபத்தில் கேரள மாநிலம் புட்டிங்கல் வெடிவிபத்தின்போது கூட முதல்வர் உம்மன்சாண்டி அந்நிகழ்வை உடனடியாக பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை நாம் மறந்துவிட முடியாது. ஏனென்றால் அப்போதுதான் இயற்கைப் பேரழிவுகள் முதல், உயிரியல், ரசாயன, அணுக் கதிரியக்கம் முதலான எல்லா வகைப் பேரழிவுகளையும் சமாளிக்கும் வழிமுறைகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உருவாக்கப்பட்ட ஆணையமான தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வாயிலாக மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் போதுமான நிதியினைப் பெற்றுத் தேவையான வசதிகளைச் செய்துகொள்ள முடியும். எனவே நடுவண் அரசு ஒவ்வொரு முறையும் தாமதமான இழப்பீடுகள் வழங்குவதற்கு பதிலாக தீ விபத்து மற்றும் இழப்புகள் குறித்து குறிப்பிட்ட அளவிலான ஒரு வரையறை நிர்ணயித்து இதையும் தேசியப் பேரிடரில் இணைக்க வேண்டும். இதிலும் ஒரு பெரும் அவலம் என்னவென்றால் 2008-ல் இந்த ஆணையம் அமைக்கப்பட்டதிலிருந்து 2012 வரை தேசிய செயற்குழு ஒரு முறைகூடக் கூடியதில்லை என்று இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் 2013இல் தனது ஆண்டறிக்கையில் குற்றம் சாட்டினார்.
தேசிய அமைப்பின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் பீகார், குஜராத், ஒடிசா உட்பட ஏழு மாநிலங்களைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் இந்த ஆணையம் கூட அமைக்கப்படவில்லை என்கிறது இவ்வறிக்கை. எல்லா மாநிலங்களிலும் பேரிடர் வந்தால் அதைச் சமாளிப்பதற்கான தனிப்படை அமைக்கப்பட வேண்டும் என்பது சட்டம். இதை ஒரு மாநிலம் கூடச் செய்யவில்லை. தணிக்கை அறிக்கை வந்து ஒரு வருடம் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், செப்டம்பர் 2013இல் உச்ச நீதிமன்றத்தில், தொண்டு நிறுவனங்களால் ஒரு பொதுநல வழக்குப் போடப்பட்டது. உடனே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு மத்திய அரசு, உத்தரகாண்ட், ஆந்திரம், குஜராத், ஒடிசா, மகாராஷ்டிரம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநில அரசுகள், தேசிய ஆணையம் ஆகியவற்றிற்கு இதுகுறித்து பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிக்கை அனுப்பியது.
1967 ஆம் ஆண்டு உருவான தமிழ்நாடு அரசு தீயணைப்புத் துறை 32 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 முதல் 16 தீயணைப்பு நிலையங்களைக் கொண்டு இயங்கி வருகிறது. ஒகேனக்கல் மற்றும் கோத்தகிரியில் உள்ள இரண்டு மீட்பு நிலையங்களோடு சேர்த்து மொத்தம் 301 தீயணைப்பு நிலையங்கள் உள்ளது. நாட்டிலேயே முதன் முறையாக 2003 ஆம் ஆண்டு மீனாட்சி விஜயகுமார் என்ற ஒரு பெண் சென்னைப் பிரிவின் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பிறகு 2013 ஆம் ஆண்டு இந்தத் துறை பெண் படை வீரர்களுக்கான தனது இரண்டாம் தொகுப்பை ஏற்படுத்தியது. ஆனால் போதுமான உபகரணங்களைக் கொண்டிருப்பதிலும், நவீனத்துவத்திலும் இன்னுமும் பின்தங்கியே இருக்கிறது.
மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, சுகாதாரம், மருத்துவம், பாதுகாப்பு இவற்றில் அரசு உபரியான நிதியை ஒதுக்கீடு செய்து தேவையான அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். மக்களின் குறைநாடி முன்னதாகவே அவர்களுக்கு முறை செய்யாமல் அலட்சியப் போக்கினைக் கடைபிடிக்கும் எந்த அரசும் நல்லரசே அல்ல. அதன்படி ‘வல்லரசு’ என்ற கனவும் அதற்கு எட்டாக் கனியாகவே இருக்கும். மிகப்பெரிய மனித வளத்தைக் கொண்ட ஒரு நாட்டில் அதன் பாதுகாப்பு உள்நாட்டிலேயே பல வகையிலும் அச்சுறுத்தலுக்கு ஆளாவதை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம். நாளுக்கு நாள் இயற்கை வளங்களைப் பறிகொடுத்துக் கொண்டிருக்கும் நாம் பல வகையிலே மனித வளங்களையும் இழந்துகொண்டிருந்தால் எஞ்சியிருக்கப் போவது என்ன?, இதை வைத்துக் கொண்டு நாம் என்ன சாதிக்கப் போகின்றோம்? என்பதை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆனால் வலுவான, தெளிவான அரசியலமைப்பைச் சரிவரப் புரிந்து கொள்ளாத அரசும், இயலாமையில் தவிக்கின்ற அதிகாரிகளும் மட்டுமே இது போன்ற அவலங்களுக்குக் காரணமில்லை. ஏனென்றால் உயிர்ப் பாதுகாப்பில் தனியார் நிறுவனங்களும் பெருமளவில் அலட்சியப் போக்கினைத்தான் கடைபிடிக்கிறது. பின்னர் இவை பாதிப்பு ஏற்படும்போது இழப்பீடுகளுக்கும் அரசையே கையேந்தி நிற்கிறது. தனியார் நிறுவனங்களும், பொது மக்களும் கூடத் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும். அரசு குறைந்தபட்சம் இதற்கான விழிப்புணர்வையாவது பல வகையிலும் ஏற்படுத்திட வேண்டும்.
கட்டிடங்களுக்கான தேசிய சட்டத்தொகுப்பு 2005 (The National Building Code of India, 2005) பகுதி 1 முதல் 5 வரை கட்டிடங்களில் ஏற்படக்கூடிய தீ விபத்துகள் பற்றியும், செய்துகொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும், அனுமதி பற்றியும், விரிவாக எடுத்துரைக்கிறது. இதை அனைத்து மாநில அரசுளின் நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளும் செயல்படுத்திவரும் நிலையிலும் பெரும்பாலான தனியார் நிறுவனங்களும், பொதுமக்களும் இதைப் பின்பற்றுவதில்லை.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய அன்புநெறியாளர்களைப் போற்றி வணங்கும் இந்த மக்கள் ஆண்டுக்குச் சராசரியாக இருபதாயிரத்துக்கும் கூடுதலான உயிரிழப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல் கடந்து போவது எப்படி, எதை ஈட்டிட? என்றெல்லாம் நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியதாக அரசு நடத்திக் காட்டப்பட்ட நாடு இது. இங்கே அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவது மன்னராட்சிக்கு மட்டுமல்ல மக்களாட்சிக்கும் பொருந்தும் என்ற நம் எதிர்பார்ப்பு எந்த அளவிற்குச் சரியானதோ அதே அளவு அதை மக்களும் கடைபிடிக்க வேண்டும் என்பதுதான் சரியாகும். எனவே அனபார்ந்த தமிழ்ப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் இந்தியத் திருநாட்டையும், இதன் அரசியலமைப்புச் சட்டத்தையும் உளமார நேசிக்கும் எனது தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் தனிமனித அறம் எல்லை மீறப்படுவதும், தவிர்க்கப்படுவதும் குறைந்தபட்சம் உயிர்ப் பாதுகாப்பு குறித்த நடைமுறைகளிலாவது தவிர்த்திடுங்கள், பொதுநலத்தை இதற்கேனும் பயன்படுத்துங்கள், விழிப்புடன் செயல்படுங்கள். மனிதவளம் பாதுகாக்கப்பட்டுச் செழிப்பாக வளரட்டும் இந்த நாடு.
வளர்க இந்தியா!
- ச.பிரபு தமிழன்